
கறையான்கூட மரத்தை மெல்லத்தான் அரிக்கும். கவலை, மனித தேகத்தை விரைந்து அரித்துவிடும் தம்புராட்டி
மீனாட்சி நதியினைத் தொடும் கடைசிக் கற்படியில் கால்களை அளாவ விட்டபடி துயரப் பதுமையாக அமர்ந்திருந்தாள் பாகீரதி. அவள் பாதங்களைத் தொட்டு ஓடும் மீனாட்சியின் குளுமை அவளின் சிந்தனையைத் தீண்டவில்லை என்பதை வெறுமை சுமந்திருந்த அவள் விழிகள் சொல்லின.
“தம்புராட்டி மனசுக்குள் என்ன கவலைன்னு தெரியல. உடம்பு இளைக்குதே?” அரைத்த சந்தனத்தைப் பாகீரதியின் கைகளில் தேய்த்துவிட்டுக்கொண்டே கேட்டாள் சேடிப்பெண்.
“இளைத்ததாக எனக்கொன்னும் தெரியவில்லையே?”
“யானையின் தும்பிக்கைத் தோள்வங்கி நழுவிக் கீழிறங்குகிறதே?”
“அப்படியா?” என்று தன் வங்கியை வேகமாகக் கீழே இழுத்தாள்.
“கறையான்கூட மரத்தை மெல்லத்தான் அரிக்கும். கவலை, மனித தேகத்தை விரைந்து அரித்துவிடும் தம்புராட்டி.”
பாகீரதி சோர்ந்த முகத்துடன் வெண்சந்தனமாய் ஒளிர்ந்த தன் பாதங்களை நீரில் பார்த்தாள். இதழ் குவிந்த தாமரை மொட்டொன்று நீரில் அசைந்து அசைந்து அவள் அருகில் வந்தது. நீரின் போக்குக்கு உடன்செல்ல மறுத்ததுபோல், ஒதுங்கி வந்து பாகீரதியின் பாதம் தொட்டது.
“ஓ... இதென்ன அதிசயம்? தாமரை எங்கிருந்து மீனாட்சியில் முளைத்தது?” என்று வியப்புக்காட்டி, தாமரையைக் கையில் எடுத்தாள்.
“யாரின் முகத்தில் செம்மை அதிகமென்று ஆராய்ச்சியே செய்யலாம் போலிருக்கிறதே?” பாகீரதியின் கைத்தாமரையைப் பார்த்துக் கேலி பேசினாள் சேடி.
காலில் கூடுதல் குளிர்ச்சியுணர்ந்து குனிந்தவளுக்கு அருகில் வந்த இன்னொரு தாமரை வியப்பைத் தந்தது.
விழியும் இதயமும் ஒருசேர மலர்ந்து நிற்க, மலராத செங்கமலமொன்றை அள்ளியெடுத்தாள். இதழ்கள் குவிந்திருந்த மொக்கை, கன்னத்தில் ஒத்தினாள். சமஸ்தானத்திற்குச் செல்லும்போது, வழியில் இருக்கும் நீர்நிலைகளில் நின்று தாமரையையும் அல்லியையும் வேடிக்கை பார்ப்பது கோடவர்மாவுக்கும் பாகீரதிக்கும் பிடித்த விஷயம். தாமரை மொக்கைப் பார்க்கும்போதெல்லாம் தன்னிடம் கோடவர்மா சொல்லும் அந்தரங்கமான ஒப்புமை ஒன்று நினைவுக்கு வந்து முகம் சிவந்தாள். கால்முளைத்த வாத்துகள்போல் செங்கமலங்கள் மூன்று, நான்கு என அடுத்தடுத்து பாகீரதியை நோக்கி வரத்தொடங்கின.
சந்தனம் தேய்த்துக்கொண்டிருந்த சேடிப்பெண்ணும், கூந்தலில் நறுமண எண்ணெய் தேய்த்துவிட்டுக்கொண்டிருந்தவளும் சட்டென்று எழுந்து நின்று நதியில் கைகழுவிக்கொண்டார்கள்.
“தாமரைகள் படையெடுப்பதைப் பார்த்து இன்னுமா புரியவில்லை தம்புராட்டி? நாங்கள் கிளம்புகிறோம். நீண்ட நேரம் ஜலக்கிரீடை வேண்டாம். இருவரும் விரைந்து கரையேறுங்கள்” என்று வெட்கம் காட்டி வெளியேறினார்கள்.
“தம்புரான் எங்கடீ? கதை சொல்லாதீங்க?”
“தாமரை வருதே, வருவார்...” காலின் சிலம்பொலியாகச் சொற்களை ஒலிக்கவிட்டு விரைந்தார்கள் சேடிப்பெண்கள்.
கணநேரத்தில் தாமரைகள் சூழ்ந்தன. குவிந்த தாமரை மொக்குகள் ஒன்றுதிரண்டு பாகீரதியை நோக்கி வருவதைப் பார்த்து முதலில் கொஞ்சம் அச்சம் காட்டியவள், பிறகு ஆர்வம் தூண்ட தாமரை மலர்க்கூட்டத்தையே பார்த்தாள். தாமரைக் கூட்டம் பாகீரதியை நெருங்க, அவளின் காலடியிலிருந்த நீர்விலக்கி, பூக்களுக்கு மத்தியில் குபீரென்று மேலெழுந்த கோடவர்மாவைப் பார்த்து பாகீரதி திகைத்தாள்.
‘`இதென்ன தம்புரான், சிறுபிள்ளை விளையாட்டு?”
‘`நாம் சிறுபிள்ளைகள்தானே?”
“அப்படியா?” கேட்டுக்கொண்டே நீரில் நழுவி, கோடவர்மாவின் தோளணைத்து, அவரின் மடியில் அமர்ந்தாள் பாகீரதி.
“பார், ஆயிரத்தெட்டுத் தாமரைகள், என் தம்புராட்டிக்காக...”
“ஆயிரத்தெட்டுத் தாமரைகளா?” பாகீரதி மீனாட்சியைப் பார்த்தாள். தாமரை சூடிய அழகில் மீனாட்சியின் வேகம் குறைந்திருந்தது. நதியின் சரிபாதிப் பகுதியில் இருந்த தடை, பூக்களை வெளியேறவிடாமல் தடுத்து நிறுத்தியிருக்க, நிறைந்த தாமரைக்குளமாய் நதி ததும்பியது. பாகீரதி விழி விரித்து ரசித்தாள்.
“என் மீனாட்சிக்கான காணிக்கை. அவளின் திருப்பாதங்களுக்குச் சூட இதைவிடப் பொருத்தமாக வேறெதை என்னால் கொடுத்துவிட முடியும்?”
“ஓ, அப்படியெனில் எனக்கில்லையா?”
“என் மீனாட்சி வேறு யார்?”
“இவளும் உங்கள் மீனாட்சிதானே?” என்று ஓடும் நதியைக் காட்டினாள்.
“இந்த மீனாட்சியே எனக்கு மட்டுமானவள்...” பாகீரதியின் இதழ் பற்றிய கோடவர்மா கையிலிருந்த தாமரை மொக்கினால் பாகீரதியின் கன்னத்தில் வருடினார்.
இருவரும் நீரில் ஒரே ரூபமாய்ப் பிரதிபலித்தார்கள். தாமரையின் மென்மையில் கிறங்கிய பாகீரதி, கோடவர்மாவின் பிடி தளர்த்தி, அவரின் இதழ்களைப் பற்றினாள். தவிப்பின் பேராழியில் சிக்கியிருந்த இருவரும் தாபம் தணித்து மீளவெண்ணி, மாறி மாறி இதழ் சுவைக்க, வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வீசிய மெல்லிய காற்றுக்கு ஆயிரத்தெட்டுத் தாமரைகளும் இருவரையும் சூழ்ந்து நின்றன. முத்தமிட்டுக்கொண்டது இருவர் மட்டும்தானா என்ற சந்தேகத்துடன் வெப்பம் தணிந்த கதிர்களோடு நதியைப் பார்த்தான் கதிரவன். யாருடைய சுவாசத்தை யார் நீண்ட நேரம் உள்வாங்குவதென்ற போட்டியில் ஒருவரையொருவர் வெல்லவிடாமல், மீனாட்சியும் தாமரைகளும் துணைநின்றன.
குளுமையும் வெப்பமும் சமநிலையில் தக்க வைக்க, இருவருக்குமான யுத்தம் நீண்டது. யார் முதலில் வெளியேறுவது என்ற சிந்தனை எழாமல் ஆழ ஆழ அமிழ்ந்தார்கள்.
சின்னஞ்சிறு அயிரையொன்று தயக்கத்துடன் பாகீரதியின் விரலைக் கடிக்க, சட்டென்று விலகினாள் பாகீரதி. அவளின் அதிர்ச்சி பார்த்து, ‘மன்னிக்கவும் தம்புராட்டி’ என்பதுபோல் விரைந்து விலகியது மீன்.
மடங்கியிருந்த கால்களை, கோடவர்மா நீட்டி உட்கார, பாகீரதி அவர் மார்பில் சாய்ந்தாள். ஈரத்தில் ஒளிர்ந்த அவளின் சுருள் முடியை விலக்கி, முகத்தின் அருகே முகம் வைத்துக்கொண்டார்.
“பந்தளம் போவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பிய தம்புரான், எப்போது கொட்டாரத்துக்கு வந்தீங்க?”

“நான் பந்தளம் போகவே இல்லை. வழியிலேயே திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வேலை பார்க்கும் நம்முடைய சேதிக்காரனான குதிரைக்காரனைப் பார்த்தேன். அவன் சொன்ன சேதி கேட்ட பிறகு, மனம் பயணத்திற்கு உடன்படவில்லை. உடனே திரும்பிவிட்டேன்.”
கோடவர்மாவின் முகத்தில் கொஞ்சம் முன்பிருந்த காதலின் ரசம் வடியத்தொடங்கியது.
“என்ன சேதி தம்புரான்? உங்கள் குரல் உற்சாகம் குறைகிறதே?”
உடனே பதிலளிக்க இயலா வண்ணம் கோடவர்மாவின் சிந்தனைகள் அலைபாய்ந்தன.
“என்ன சேதியென்று சொல்லுங்க. எனக்குத் தெரியக் கூடாதது இல்லைதானே?”
“அப்படியொன்று எப்போதும் நமக்குள் வராது பாகீரதி...” ஈரத்தில் ஒன்றாகத் திரண்டிருந்த அவளின் தலைமுடியைக் கோதிவிட்டவாறு பேசினார் கோடவர்மா.
“பேரியாறு அணைகட்டுமிடம் நம் பூஞ்சாறு சமஸ்தானத்திற்குரிய இடமென்று நம் உரிமையைச் சொன்னதில், இரண்டு சர்க்காரும் பகைமை காட்டுகிறார்கள்.”
“இரண்டு சர்க்காரா?”
“ஆம், திருவிதாங்கூரும் பிரிட்டிஷ் சர்க்காரும். நியாயமில்லாத நிலைப்பாட்டை எடுத்த இரண்டு சர்க்காரும் இப்போது நம் சமஸ்தானத்திற்கு எதிராக ஒன்றுசேர்ந்திருக்கிறார்கள்.”
“தம்புரான்..!” பாகீரதி அதிர்ந்தாள்.
“ஆம்; உன்னுடைய சமஸ்தானத்தின் மகாராஜா என் வம்சாவளியையே சந்தேகிக்கிறாராம்.”
“புரியவில்லை..?”
“நாங்கள் பாண்டிய அரசர்களின் வம்சவாளியில் வந்தவர்கள் இல்லை என்கிறாராம் மகாராஜா. பூஞ்சாறு சமஸ்தானத்திற்குத் தனியாக தர்பார் இருக்கிறதா? ராணுவம் இருக்கிறதா? வரிவசூல் செய்வதற்குப் பத்திருபது பேஷ்குஷ் ஏஜெண்டுகளை வைத்துக்கொண்டு ராஜா என்று அறிவித்துக்கொள்வதா? மதுரையில் இருந்து வந்த ராஜவம்சம் என்றால், எங்களுடன் போரிட்டு வெற்றிபெற்றுத்தானே நாடு பிடித்திருக்க வேண்டும்? குடிகளே இல்லாத மேல்மலையில் இடங்களை விலைக்கு வாங்கிக் கொண்டவர்களுக்கு ராஜா என்ற பட்டமா? பூஞ்சாற்றின் சமஸ்தான அந்தஸ்து உண்மைதானா என்பதை ஆய்வு செய்யச் சொல்லி மெட்ராஸ் பிரசிடென்சிக்கு எழுதச் சொல்லியிருக்கிறாராம்.”
“பகவதி... இதென்ன சோதனை? மகாராஜா சொல்லுவதன் பின்னணி என்னன்னு உங்களால் யூகிக்க முடியுதா தம்புரான்?”
“யூகிப்பதென்ன, கைப்புண்போல் பட்டவர்த்தனமாத் தெரியலையா? நம் சமஸ்தானத்திற்குரிய இடத்தைப் பிடுங்கப் பார்க்கிறார். பூஞ்சாறு என்பது சமஸ்தானம் அல்ல என்று சொல்வதன்மூலம் நானும் ராஜா இல்லை என்று அறிவிக்கலாம். சின்னஞ்சிறிய ஜமீன்போல் நமது நிலையைக் கீழிறக்கப் பார்க்கலாம்.”
“மகாராஜா நினைச்சாலும் பிரிட்டிஷ் சர்க்கார் இதுக்கு ஒத்துக்க வேணுமே?’’
“அவங்களுக்குக் கசக்குமா என்ன? அணை கட்டுற இடம் நமக்குச் சொந்தமானதுன்னு ரெசிடென்டுக்கும் தெரியும். நாமாக விரும்பி, நம் மூதாதை மண்ணான மீனாட்சி அரசாளும் மாமதுரைக்குப் பேரியாறு நதி போறதுக்குத் துணை நிப்போம்னு அணை கட்டுற இடத்தை விட்டுக்கொடுத்தோம். அவங்களைப் பொறுத்தவரை இந்த விஷயத்துல நம்முடைய அதிகாரத்தைக் குறைக்கிறதன்மூலம், ரெண்டு பிரச்சினைங்க தீரும். பேரியாறு அணை இடத்திற்கு உரிமை கொண்டாடி, எதிர்காலத்தில் பிரச்சினை எழுப்ப மாட்டோம். இன்னொன்னு, திருவிதாங்கூருக்குப் பாத்தியதைப் படாத பாளையம்னு நெனச்சி, பிரிட்டிஷ்கிட்ட சன்னத் வாங்கிக்கிட்டா அவங்களின் கட்டுப்பாட்டுக்குள்ள இருக்கும் பாளையக்காரங்க மாதிரி நம்ம மேலயும் அதிகாரம் செலுத்தலாம். இரண்டு ராஜாக்களைப் பலவீனப்படுத்தும் வாய்ப்பென்றதால் பிரிட்டிஷ் சர்க்கார் முனைப்பா இருக்கும்.”
“அதெப்படி, நாம் ராஜாவா இல்லையா என்பதை அவங்க முடிவு செய்வார்களா? நம் தேசத்துடைய இடங்கள் என்னென்னன்னு அவங்களுக்குத் தெரியாதா என்ன?”
இருவர் பேச்சின் தொனியறிந்து, மீனாட்சியும் தன் சளசளப்பைக் குறைத்துக்கொண்டாள். அந்தி விரைந்து வருவதைப் பார்த்துக் கதிரவன் கீழ்வானிற்குள் நுழைந்தான்.
“எல்லாவற்றுக்கும் பதில் தயாரித்திருப்பாங்க பாகீரதி. அடர்ந்த காட்டுக்குள்ள இருக்கும் பூஞ்சாறு சமஸ்தானத்தில் இருக்கும் குடிகளின் எண்ணிக்கை குறைவுதானே என்பார்கள். பழனி, திண்டுக்கல் முதல் கம்பம் கூடலூர்வரை இருந்த நம் சமஸ்தானத்தின் எல்லை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய, நாம் திருவிதாங்கூருக்குக் கட்டுப்பட்ட சிற்றரசர்கள்போல் நடந்துகொண்டதுதான் காரணமென்று என் அச்சன் சொல்லுவார். திருவிதாங்கூரின் மகாராஜாவும் வரட்டும், பூஞ்சாறு ராஜாவான நானும் வருகிறேன். கம்பம், கூடலூரில் யாரை மகாராஜான்னு குடிகள் கூப்பிடுறாங்கன்னு பார்ப்போம். ‘புவனேந்திர ராஜா’ன்னு அன்போடு என்னைத்தான் அழைப்பார்கள் குடிகள். திருவிதாங்கூரோட மேற்கு எல்லையில் எதிரிகள் நுழையவிடாதபடி காத்து நிற்கும் நம்மைத்தான், அவர்கள் ராஜாக்களான்னு கேக்கிறாங்க.”
கோடவர்மாவுக்குத் குரல் தழுதழுத்தது.
“இதைவிட இன்னொரு சேதியைச் சொன்னான் குதிரைக்காரன்... என் வாயால் சொல்ல முடியுமான்னு தெரியலை...”
“தம்புரான்...” பாகீரதி பதறினாள். கோடவர்மாவின் முகத்தைக் கைகளில் தாங்கி, விழிகளை நேரடியாகப் பார்த்தாள். அவ்விரு கண்களிலும் அவமானத்தின் சிவப்பு ரத்தவரிகளாக வரியோடியிருந்தது.
“எங்களை ஏதிலின்னு சொன்னாராம் மகாராஜா...”
“பத்மநாபா... இதென்ன சோதனை?” கோடவர்மாவை இறுக்கியணைத்தாள்.
“சமஸ்தானத்தின் சம்பத்துகள் நீர்வழிப் போகும்னு சபரிமலையின் போற்றி சொன்னாரே, அது உண்மையாகிவிடுமா பாகீரதி?”
“இதென்ன பேச்சு தம்புரான்? சாஸ்தாவும் மீனாட்சியும் கண்ணகியும் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டாங்க...” பாகீரதி கோடவர்மாவின் சில்லிட்டிருந்த முதுகை ஆதரவாய்த் தட்டினாள். பாகீரதியின் அணைப்பின் இதத்தில் கோடவர்மா மனக்கொந்தளிப்பைச் சமப்படுத்த முயன்றார்.
பாகீரதி, திடீரென்று நினைவுக்கு வந்தவளாய், “இத்தனை அழுத்தத்தை மனசில வச்சிக்கிட்டு, எங்கு போய் தாமரை மலர்களோடு வந்தீங்க தம்புரான்?” என்றாள்.
“என்னையும் பூஞ்சாறு சமஸ்தானத்தையும் ஒன்னுமில்லாமலாக்க முயற்சி நடக்குதுன்னு சேதி கேட்டபோது, எனக்கு யாரையும் பாக்கத் தோணலை. எங்களுக்கு உரிமையானதுதான் இந்தப் பூஞ்சாறு, திருவிதாங்கூரைப்போலவே நாங்களும் ராஜவம்சத்தவர்கள்தான்னு அந்தச் சமஸ்தானத்தின் பிரஜையான உன் வாயால் கேக்கணும்னு தோணுச்சு. இந்தத் தாமரை மலர்களைக் கையில் வாங்குற வரைக்கும் எதுக்கு வாங்கினேன்னு தெரியல. ஆனா அசரீரி மாதிரி புனிதமான இந்த மீனாட்சியில், நீ சொல்லப்போகும் வார்த்தைக்கு ஆயிரத்தெட்டுத் தாமரைக சாட்சியா இருக்கணும்னு தோணுச்சு...” என்ற கோடவர்மா ஆற்றின் நடுவே குளம்போல் தனித்து நின்ற தாமரைகளைப் பார்த்தார்.
“என் தம்புரானே... இதோ இந்த மீனாட்சிமீதும், நம்மைக் காப்பாத்துகிற மாமதுரையின் மீனாட்சியின்மீதும் ஆணையாகச் சொல்கிறேன்... பூஞ்சாறு சமஸ்தானத்தின் ராஜா நீங்க. பாண்டிய வம்சத்தின் வம்சம். மீனாட்சி தொணைன்னு ராஜ முத்திரை வைத்த செங்கோல் ஏந்தும் ராஜா...” என்று சொல்லி, மூன்று முறை மீனாட்சியின் நீரள்ளி, நதியில் விட்டாள்.
‘நதியின் சுழலில் மேலெழுந்து நிற்பதே தங்களின் இயல்பும்’ என்று மென்மை மாறாமல் இருவரின் குணம்சாற்றி நின்றன தாமரைகள்.
டெய்லர் குன்றின் உயரத்தில் நின்று வேலைகளைக் கண்காணித்துக்கொண்டிருந்தார். பிப்ரவரி மாதத்தில் தொடங்கிய வேலை, நல்ல காலநிலை ஒத்துழைத்ததால் வெகுவாக முன்னேறியிருந்தது. வலது நதிக்கரையோரம் பட்டறையின் கீழ்த்தளம் பாதி முடிந்திருந்தது. தொடர்மழை இல்லாததால் பேரியாற்றின் நீர்மட்டம் உயரவில்லை. நீரின் வரத்தும் அதிகரிக்கவில்லை. இன்னும் மூன்று மாதங்கள். பென்னி வரும்வரை எல்லாம் சரியாகச் செல்ல வேண்டுமென்று டெய்லர் தினம் பிரார்த்திக்கொண்டிருக்கிறார்.
லண்டன் கிளம்பும்முன் பென்னி, ‘வேலை செய்வதற்குச் சாதகமான காலநிலை இருந்தால் வேலையை ஏப்ரல் வரைகூட நிறுத்தாதே, சில வருஷங்களில் பருவமழை தாமதமாகத் தொடங்கலாம். பருவமழை தொடங்கப்போவதன் அறிகுறி தெரிந்தால் மட்டும் வேலையை நிறுத்து, மலையில் சாதகமாகக் கிடைக்கும் ஒவ்வொரு நாளும் நமக்கு முக்கியம், நீ முடிவு செய், சீப் இன்ஜினீயருக்குப் பிறகு விளக்கம் சொல்லிக்கொள்ளலாம்’ என்று சொல்லியிருந்தார். பென்னி சொன்னதுபோலவே இன்று மெட்ராஸிலிருந்து டெலிகிராம் வந்திருக்கிறது, இந்த வாரத்துடன் இந்த சீசனுக்கான வேலையை நிறுத்தச் சொல்லி.
‘நிறைய வேலைகள் நடந்திருந்தாலும் எதிர்பார்த்ததுபோல் நிறைவாய் அமையவில்லை. அணை கட்டுமிடத்தைச் சுற்றி போதும் போதுமென்ற அளவிற்குத் திரும்பும் பக்கமெல்லாம் மரங்கள். வீடு கட்டுவதற்கும், படகுகள், சாரம் கட்டுவதற்கும் போக மரக்கட்டைகள் மீதமிருக்கும் என்று கணக்கிட்டிருந்தார்கள். மரங்களை வெட்டியடுக்கிய பிறகுதான் ஓர் உண்மை புரிந்தது. பெரும்பாலும் உறுதியற்ற மரங்கள். காரணம், மன்னான்கள் இந்தப் பகுதியில் விவசாயம் செய்து வாழ்ந்திருக்கிறார்கள். இயல்பிலேயே அவர்கள் இரண்டு மூன்று பருவங்களுக்குப் பிறகு காட்டுக்குள் வேற்றிடம் தேடிச் சென்று, தங்கள் வசிப்பிடங்களை மாற்றிக் கொள்வது வழக்கமாம். காட்டின் குடிகள் கைவிட்டுச் சென்ற இடத்தில் ஒன்றிரண்டு பருவத்தில் புதர்கள் அடர்ந்துவிடும். புதர்களுக்கு இடைப்பட்ட மரங்கள் வளருவதற்குப் போதுமான இடமின்றி, வளர்ச்சி குன்றி, வலுவற்று நின்றிருக்கும். இடக்கரையோரம் முழுக்க வெட்டிய மரங்களின் கழிகள் வீடு கட்டுவதற்குத்தான் பயன்படுகின்றன.

கங்காணிகள் இரண்டு பேரை, குறைந்தது நூறு வேலையாள்களையாவது கூட்டிக்கொண்டு வர வேண்டுமென்று கூடலூருக்கு அனுப்பியிருக்கிறார். காட்டுக்குள் கருங்காலி, தேக்கு மரங்கள் அதிகமிருக்கும் இடங்களை அடையாளம் காட்ட மன்னான் காணியில் இருந்து ஆள்களை அழைத்து வரவும் ஆள் போயிருக்கிறது. அவர்கள் வந்தபின் காட்டுக்குள் இருந்து மரங்களை வெட்டி, அணை கட்டுமிடத்திற்குக் கொண்டுவந்து சேர்க்க வேண்டும்.
மதுரையில் கால்வாய்கள் எடுக்கும் வேலைக்கும், பேரணையில் பெரியாற்று நீரை மேலூருக்குத் திருப்பிவிடும் ரெகுலேட்டர் வைப்பதற்கும் அங்கொரு டிவிஷன் அலுவலகத்திற்கான வேலையும் நடக்கிறது. ஏற்கெனவே கட்டப்பட்டிருந்த ஒரு வீட்டை அலுவலகமாக மாற்றும் ஏற்பாடு. புதியதாக ஓர் அலுவலகம் கட்டும்வரை கூடாரம் அமைத்துத் தங்குவதில் செலவும் அதிகம். இன்ஜினீயர்களுக்கு வசதிக்குறைவும் இருந்ததால் 124 ரூபாய்க்குக் கிடைத்த ஒரு வீட்டை விலைக்கு வாங்கச் சொல்லியிருந்தார். குருவனூத்திலிருந்து சுண்ணாம்பு எடுத்து வர வேண்டும், சுரங்கம் வெட்டுவதற்கு மின்சாரம் வேண்டும், முள்ளிய பாஞ்சானில் மின்சாரம் எடுக்க டர்பன் அமைக்க நீரைத் தேக்கிச் சின்னத் தடுப்பணை வேலையைத் தொடங்க வேண்டும்...’ சிந்தனைகள் ஓடின டெய்லருக்கு.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமாகச் செல்லும் அணை வேலையில், அன்றன்று நாள் முடியும்போது ஒருவரும் காயமடையவில்லை, உயிரிழப்பு இல்லையென்று முடிவாகும்வரை மனம் திடுக்கிடலோடுதான் இருக்கிறது. பென்னி போல் எதற்கும் துணிந்த ஸ்காட்லாந்துக்காரராக இருந்தால் பரவாயில்லை. விதிகளை மீற நினைக்காத இங்கிலாந்துக்காரரான டெய்லருக்குப் படபடப்பு அதிகமாகத்தான் இருந்தது.
டெய்லர் இருந்த இடத்திற்கு, மொக்கை மாயன் வந்தார்.
“கும்பிடுறேன் சின்ன தொரை...”
“வா மாயன்...”
“கும்பிடுறேன் சின்ன தொரை...”
டெய்லர் மொக்கை மாயன் இருந்த இடத்திற்குக் கீழிறங்கினார். மாயனைத் தொட்டுத் திருப்பி, “வா...” என்றார்.
பாறைக்கு வெடி வைத்ததில் பாறைச் சில்லுகள் அடித்து, மொக்கை மாயனின் காதின் மேற்புறம் கிழிந்துவிட்டது. காதும் கேட்கும் திறனைக் குறைத்துவிட்டது.
“நீ யார்கிட்ட பேசினாலும் இனிமே, அவங்க முகத்தைப் பாக்கணும். அப்போதான் அவங்க பதில் சொல்றாங்களான்னு தெரியும், புரிஞ்சுதா?” சத்தம் போட்டுச் சொன்னார் டெய்லர். சொல்லிவிட்டு, தன் பாக்கெட்டில் இருந்து இரண்டு சுருட்டுகளையெடுத்து மாயனிடம் கொடுத்தார்.
“ஒன்னுமே கேக்கலை தொர... காதுக்குள்ள தண்ணி பூந்த மாதிரி கும்முனு இருக்கு” என்ற மாயன், சுருட்டை ஆர்வமாகப் பார்த்தார்.
“வாங்கிக்க, இனிமே நானே உனக்கும் சேர்த்துச் சுருட்டு வாங்கிடுறேன், சரியா?” என்றதற்கு, டெய்லரின் முகத்தையே கூர்ந்து பார்த்துப் புரிந்தது என்பதுபோல் தலையாட்டினார்.
“எப்டியோ பொழைச்சிட்ட, உன் அதிர்ஷ்டம்.”
வானத்தைப் பார்த்துக் கும்பிட்டார் மாயன்.
“நான் சொன்னதைக் கேட்டு எங்ககிட்ட வைத்தியம் பாத்துக்கிட்ட. உங்க ஜனங்க மாதிரி பிடிவாதம் பிடிக்கலை.”
அப்போது லோகனும் மெக்கன்சியும் அங்கு வந்தார்கள். மெக்கன்சியின் முகம் கடுமையாக இருந்தது.
“என்ன மெக்கன்சி...” என்று டெய்லர் பேச ஆரம்பிக்கும் முன்பே மெக்கன்சி படபடவென்று பேசினார்.
“எல்லாம் முட்டாளுங்க. ஒரு ஆளுக்கும் வேலை தெரியல. சொல்ற அளவு என்னன்னு புரிஞ்சிக்க மாட்டேன்றானுங்க. ஞாபகம் பூரா கூலிக் கணக்குதான். மரத்துல, பாறையிலன்னு நாள் கணக்கக் கிறுக்கி வச்சிக்கிட்டு, அதைக் கணக்குப் பாத்துக்கிட்டு உட்கார்ந்திருக்காங்க. மூடனுங்க.”
“புதுசா என்ன பிரச்னை மெக்கன்சி..?”
“டெய்லர், இந்த மேஸ்திரிகள வச்சிக்கிட்டு வேலையே செய்ய முடியாது. ஒருத்தருக்கும் எழுதப் படிக்கத் தெரியல.”
“எழுதப் படிக்கத் தெரியலைன்னா என்னப்பா, சொல்ற வேலையைச் செய்யப்போறாங்க...”
“எங்க செய்றாங்க? நாலுக்கு ஒன்னு குழி வெட்டுன்னா ஒன்னுக்கு நாலடி வெட்டி வைக்கிறான். இவங்கெல்லாம் மேஸ்திரியே இல்ல. கூலி நெறைய கிடைக்குதுன்னு கொல்லூறையும் (கொத்தனார் கரண்டி) மட்டக்கோலையும் எடுத்துக்கிட்டு வந்துட்டாங்க. என்னால இவங்கள வச்சு வேலை வாங்க முடியாதுப்பா. அடுத்து நான் சுரங்கம் வெட்டுற வேலையை ஆரம்பிக்கணும். எனக்குக் கொஞ்சமாவது வேலை தெரிஞ்சவங்கதான் வேணும். இந்த மூடனுங்களையெல்லாம் கொண்டுபோய் சுண்ணாம்பு அரைக்கிற மாட்டுக்குப் பதிலா கட்டிவிடு. மாடுங்களுக்குக் குடுக்கிற கூலியாவது மிஞ்சும்.”
“என்னாச்சு லோகன்...” டெய்லர் லோகனிடம் கேட்டார்.
“மெக்கன்சி சொல்றது சரிதான் டெய்லர். சின்ன வேலைகூட சரியா, நாம சொல்றபடி நடக்கலை. அப்புறம் அவங்க யாருக்குமே முன்னபின்ன கொத்தனார் வேலை செஞ்சு பழக்கமில்லை. கங்காணிக அவனுங்களுக்குக் கிடைக்கிற கமிஷனுக்காகக் கண்ணுல படுற ஆளுகளையெல்லாம் மலைமேல மூட்ட மாதிரி ஏத்திவிட்டுட்டானுங்க. எல்லாத்தையும்விட பெரிய பிரச்சினை, அவங்களால எந்த ஒழுங்குக்கும் கட்டுப்பட்டு இருக்க முடியலை. ஒவ்வொருத்தருமே வேலைக்கு வர்றப்ப பாதுகாப்பா பூட்ஸ், செருப்பு போட்டுக்கிட்டு, கொசுவோ அட்டைங்களோ நெறைய கடிக்காதபடி சட்டையும் போடணும்னு சொல்றோம். வெறுங்காலோடதான் வந்து நிக்குறாங்க. ரொம்பப் பெரிய கொடுமை... அவங்க பழக்கவழக்கம்தான். சுத்தித் தண்ணியிருந்தாலும் கொண்டலும் மண்டலுமா வர்ற ஆத்துத் தண்ணியக் குடிக்கக் கூடாதுன்னு நாம அங்கங்க உறைகிணறுங்கள வச்சி, தண்ணிய சுத்தப்படுத்தி அந்தத் தண்ணியத்தான் குடிக்கணும்னு சொல்றோம். இவங்க ஓடுற தண்ணியத்தான் நின்ன இடத்துல இருந்து அப்படியே அள்ளிக் குடிக்கிறாங்க. அதுலயே குளிச்சிக்கிறாங்க. எல்லாக் கொடுமையும் தண்ணிக்குள்ளதான். இன்னைக்கு நூறு பேரளவுக்கு வயித்தால போகுதாம். குடிசையில படுத்துக் கெடக்கறாங்க. கேட்டா, நேத்து ஊத்தின கஞ்சியில பல்லியோ பூச்சியோ விழுந்திருந்துச்சாம். ஒருத்தன் வயித்தை இழுத்துப் புடிச்சவுடனே அடுத்தடுத்து போய்ப் படுத்துட்டாங்க. கண்ட்ரிபுரூட்ஸ்...” லோகன் காட்டுக் கத்தல் கத்தினான்.
“அவங்களுக்குப் புரியாதுன்னு கத்தாதே. சிலநேரம் நீ சொல்லாததைக்கூட யூகமா புரிஞ்சிக்கிட்டுக் கோபப்படுவாங்க...” மெக்கன்சி.
“கோபமா, ஒருத்தன் என் முன்னாடி வரட்டும்... அவன் கொல்லூறாலேயே முகத்தைப் பிறாண்டிடுறேன்...” என்றான் லோகன்.
“அடுத்த சீசன் மோசமா இருக்கும் டெய்லர். மலேரியா காய்ச்சல் காடு முழுக்கப் பரவியிருக்கும். இப்பவே இவங்கள சரிப்படுத்தி, ஒரு ஒழுங்குக்குக் கொண்டு வந்துடணும். இல்லைனா மலேரியா, காலரான்னு நோய்ங்களோட போராடுறதுதான் நம்ம வேலையா இருக்கும். வேலை நடக்காது.”
“நீ சொல்வது சரிதான் லோகன். நான் கடுமையா சொல்லிடுறேன். ஓடுற ஆத்துத் தண்ணிய யாரும் குடிக்கக் கூடாது. உடம்பு சரியில்லைன்னா அப்போத்தகிரிகிட்ட மருந்து மாத்திரை வாங்கணும்னு சொல்றேன்.”
“சரியாப்போச்சு. அட்டை, உண்ணிக்குப் பயப்படாத காட்டுப்பயலுககூட, நம்ம அப்போத்தகிரி கொடுக்கிற மருந்து, மாத்திரை, ஊசிக்குத்தான் பயந்து ஓடுறாங்க.”
“அவங்களுக்குத் தெரியாது. அம்மைத் தடுப்பூசியை மட்டும்தான் பாத்துக்கிறாங்க. காய்ச்சலுக்கும் வயித்து வலிக்கும் மாத்திரை போடலாம்னு புரிஞ்சிக்க மாட்டேன்கிறாங்க. சொல்லித்தான் புரிய வைக்கணும். ஒரு விஷயம் புரிஞ்சிக்கோ லோகன்... இந்த மலையில வேலை செய்ய ஆளுக வர்றதே பெரும்பாடு. கூலியக் காட்டி கங்காணிக ஆளுகள இழுத்துக்கிட்டு வர்றாங்க. அதனால நாம் சின்னச் சின்னக் குறைகள பெரிசு பண்ணாம தட்டிக்கொடுத்துத் தான் வேலை வாங்கணும். ஏலக்காய், கஞ்சா, அபினின்னு திருடப் போறவனப் பிடிச்சு நல்லா கவனிச்சு, அடிச்சு விரட்டிவிடு. வேலை தெரியலைன்றத எல்லாம் பெருசு பண்ணாதே... விடு.”
“நான் பெருசு பண்றேனா? என்னையே கொறை சொல்றீயா டெய்லர்? அப்போ நீயே வந்து அவங்க செய்யிற வேலையைப் பார்...” லோகன் கோபமாகக் கீழே இறங்கினான்.
“லோகன், தப்பு. நில்லு அங்கயே. இப்போ டெய்லர் பென்னியுடைய இடத்துல இருக்கார். பென்னிக்கு என்ன மரியாதை கொடுக்கிறோமோ அதை இவருக்கும் கொடுக்கணும். நில்லு...” என்றார் மெக்கன்சி.
“பென்னியுடைய இடத்துலதான் இருக்கார். பென்னியில்லையே?” லோகன் வேகமாக இறங்கினார்.
அமைதியாக நின்ற டெய்லர், பாக்கெட்டில் இருந்து சுருட்டொன்றை எடுத்து வாயில் வைத்தார். மாயன், எழுந்து நின்று அவரின் சுருட்டை வாங்கிக்கொண்டுபோய் தூரத்தில் புகைந்துகொண்டிருந்த கல்லடுப்பின் கனலில் பற்றவைத்துக்கொண்டு வந்து தந்தார்.
சுருட்டை வாயில் வைத்து ஆழ்ந்து இழுத்த டெய்லர், அருகில் இருந்த பாறையில் உட்கார்ந்து இன்னும் ஆழப் புகைத்தார். மெக்கன்சியும் அருகில் வந்து உட்கார்ந்தார்.
“நமக்குள் சலசலப்பு வரக்கூடாதுன்னு பென்னி பலமுறை சொன்னார். கடைசியில் அதுதான் நடக்குது.”
“பரவாயில்லை. நீ ஒன்னும் நினைக்காதே. லோகனுக்கு வேகமா கோபம் குறைஞ்சிடும். நீயே பார். சீக்கிரம் அவனே திரும்ப வருவான்.”
மெக்கன்சி டெய்லரை ஆச்சரியமாகப் பார்த்தார். ‘என்ன புரிதல், அருமையான குணம் கொண்டவர்!’ என்று மனத்திற்குள் நினைத்தார்.
தூரத்தில் மாட்டுவண்டியிலும் குதிரையிலுமாகப் பத்திருபது பேர் வந்து இறங்கினார்கள். வண்டிகளிலிருந்து இறங்கியவர்களைப் பார்த்தவுடனே டெய்லர் பரபரத்தார். “வா மெக்கன்சி, கோழிக்கோட்டிலிருந்து மர ஆசாரிகள் வந்துவிட்டாங்க. இனிமே மரவேலை பத்திய கவலை குறைந்தது...” என்று எழுந்து அவசரமாகச் சுருட்டை அணைத்து, தன் சட்டை பாக்கெட்டிற்குள் வைத்துக்கொண்டு விரைந்தார். துரைகளுக்குள் என்னமோ சரியில்லை என்று அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மொக்கை மாயன் மெல்லக் கம்பூன்றி எழுந்தார்.
“மாயன்... நீ இனிமே என்கூடவே இருந்துடு. அங்கபோய் வேலை செய்ய வேணாம். புரியுதா?” என்று போய்க்கொண்டே சொன்ன டெய்லரின் வார்த்தை புரியாமல் மாயன் அப்படியே நின்றார்.
“வா பெரியவரே...” என்ற மெக்கன்சி, மாயனை முன்னுக்கு நடக்கவிட்டுப் பின்னுக்குத் தொடர்ந்தார்.
நிமிர்ந்த யானைகளைப்போல் ஏழடி உயரத்தில் இருந்த கோழிக்கோட்டிலிருந்து வந்த போர்த்துக்கீசிய தச்சர்கள் மேல்மலையைப் பார்வையால் அளந்தார்கள். காடு அவர்களுக்கு நட்பின் அணுக்கத்தைக் காட்டியது.
- பாயும்