
நீ சொல்றதிலும் உண்மை இருக்கு. ஆனா எப்பவுமே ஒரு சீசன் முடிஞ்சு இன்னொரு சீசனுக்கு வர்றவங்க எத்தனை பேருன்னு நம்மால உறுதியா சொல்ல முடியாது.
“இவர்தான் ஆனவெரட்டியாம் தொர. இவர் மந்திரம் போட்டா ஆன நின்ன எடத்துல நிக்குமாம்.” பேயத்தேவன் மன்னான்காணியில் இருந்து அழைத்து வந்திருந்த ஐந்தாறு பேரில் ஒருவரை முன்னால் நிறுத்தி அறிமுகப்படுத்தினான்.
டெய்லர் காணியை நிமிர்ந்து பார்த்தார். அடர்ந்த பரட்டைத் தலையும், புகையிலையால் கறுத்த உதடும், மேல்சட்டையே பார்த்திராத பரந்த மார்பும், இடுப்பில் இருந்த ஒரேயொரு துண்டுக் கோவணமுமாக தன் எதிரில் நின்ற காணியைப் பார்த்ததும் அவருக்கு நம்பிக்கை வறண்டது.
“தொர, நானும் பாத்தவுடனே அப்டித்தான் நெனைச்சேன். ஆனா ஆளு ரொம்பக் கெட்டிக்காரராம். இவரு ஒருத்தரு இருந்தாப் போதுமாம், வெளஞ்ச காட்டுக்குள்ள ஒரு ஆன எறங்காதாம். ஒரு மைலுக்கு முன்னாலயே ஆன வர்றத மோப்பம் பிடிச்சுடுவாராம்... காணிங்க இவரச் சாமி மாதிரி கும்பிடுதுங்க... வாங்க குட்டியப் பாக்கலாம்” என்று மூச்சிரைக்கப் பேசினான் பேயத்தேவன். ஒப்பிலியும் பேயனும் நேற்று பொழுது சாயக் கிளம்பியவர்கள், அங்கங்கே ஓடை நீரை வயிறுமுட்ட அள்ளிக்குடித்துவிட்டு, ஓரிடத்திலும் நிற்காமல், ஓடிப்போய்த் திரும்பியிருந்தார்கள்.
“தொர... நாங்க போய் நின்னவுடனே அவங்க என்ன கேட்டாங்க தெரியுமா?”
“சொல்லு, கதை மாதிரி நீட்டாதே.” மெக்கன்சி சலிப்புக் காட்டினார். திரும்பிப் பார்த்த பேயத்தேவன், அவரைப் பொருட்படுத்தவில்லை.

“குழியில பெரியவுக விழுந்துட்டாங்களான்னுதான் கேட்டாங்க. இங்கதான் இவங்க காணி இருந்துச்சாம். பத்து வருஷத்துக்கு முன்னதான் மண்ணுக்குச் சத்துப்போச்சுன்னு இப்போ இருக்கற எடத்துக்கு இவங்க காணியாளுங்க போயிட்டாங்களாம். யாரு, பென்னி தொரையா வந்திருக்காங்கன்னு நல்லாத் தெரிஞ்ச மாதிரி கேட்டாங்க தொர. எனக்கு ரொம்ப ஆச்சரியமாப்போச்சு.”
“அப்படியா, ஒனக்குப் பென்னியத் தெரியுமா?”
“நம்மட்ட நாட்டுல இருக்க சகலரும் தொரையை அறியும். என்ட மூணாமது குட்டி கைக்குழந்தையா இருந்தப்பத்தான் அணை கட்டுறதுக்குப் பாறைக வலுவா இருக்கான்னு குழிதோண்டிப் பார்த்தாரு. நூறடிக்கு ஒரு குழி போட்டோம். கூடலூரில் நின்னும், கம்பத்துல நின்னும் மனுஷ்யக வந்துன்னு. வனத்துல ஜீவிக்கிற கொசுவுக்கும் அட்டைக்கும் பயந்து ஓடியே போயி. பனி (ஜுரம்) வந்து பத்துப் பேருகிட்ட மரிச்சுப் போயி.”
“டெய்லர், இவன் ஏதோ போன நூற்றாண்டுக் கதையைச் சொல்றானே?”
“போன நூற்றாண்டுக் கதையில்ல லோகன். 72-ல் (1872) பென்னியும் ஸ்மித்தும் பெரியாறு புராஜெக்டை சரிபார்த்துத் தர ஆய்வுக்கு மேல்மலைக்கு வந்திருந்தாங்க. ஸ்மித் அப்போ நெல்லூர்ல இன்ஜினீயரா இருந்தார். பென்னி நார்த் ஆற்காடு டிஸ்ட்ரிக்ட் இன்ஜினீயர். ஸ்பெஷல் டியூட்டியில் இரண்டு பேரையுமே திண்டுக்கல் ரேஞ்சுக்கு மாத்தினாங்க. அவங்க வந்தபிறகுதான் இந்த புராஜெக்ட் ஒரு வடிவத்துக்கே வந்தது. தடுப்பணை கட்டி, சுரங்கம் வெட்டிப் பெரியாறு நதியைக் கிழக்கே திருப்பி விட்டு, மலையிலிருந்து வைரவனாத்துடன் சேர்த்து விட்டுவிட்டால் வைகையுடன் சேர்ந்து ராமநாதபுரம் வரை பெரியாறு போயிடும்னு ரைவ்ஸ் கொடுத்த பிளானை இவங்க ரெண்டு பேரும் ஆய்வு செய்தாங்க. ஸ்மித்தும் இந்த புராஜெக்டுக்காகப் பல வருஷங்கள் இந்த மேல்காட்டில் ஆய்வு செய்தார். அவரின் அகால மரணமும் இந்த புராஜெக்ட் தாமதமாக ஒரு காரணம். பெரியாற்றுத் தண்ணீரை மேலூருக்குக் கொண்டுபோனால் மட்டுமே பிரசிடென்சிக்கு நில வருவாய் அதிகரிக்கும் என்று பென்னி வந்த பிறகுதான் புராஜெக்ட் ஒரு முழுமைக்கு வந்தது. பென்னியும் ஸ்மித்தும் கொடுத்த அறிக்கையை வைத்துக்கொண்டுதான், கிளாக்ஸ்டனை நியமித்தார்கள். மேலூருக்குப் பெரியாற்றுத் தண்ணீர் சென்றால் எத்தனை ஆயிரம் ஏக்கர் பலனடையும்? எவ்வளவு நிலவரி வசூலாகும்? அணை கட்டுவதற்குச் சர்க்கார் செய்யும் முதலீட்டில் 7.5% அளவுக்கு வருஷத்திற்கு வருவாய் வரும் என்று பென்னி சொல்லியிருப்பது துல்லியம்தானா என சர்வே செய்து கிளாக்ஸ்டன் 76-ல் ஒரு ரிப்போர்ட் கொடுத்தார். அப்புறம்தான் வந்ததே, தக்காணத்தையே புரட்டிப்போட்ட தாது வருஷப் பஞ்சம், திட்டத்த தூக்கிக் கெடப்புல போட்டுடுச்சு சர்க்கார். மறுபடியும் ரெண்டு வருஷம் கழிச்சுதான் இந்தப் பாறைகளைச் சோதிக்கிற சர்வே. பென்னி வருஷக்கணக்கா இங்கேதான் இருந்தார். அங்கங்கே இருபதடி, முப்பதடி ஆழத்துக்கு ஒரு குழியெடுத்து, கடினமான பாறை எத்தனை அடியில் ஆரம்பிக்குதுன்னு சோதனை. அதனால் பென்னியை இவங்க தெரிஞ்சிருக்கலாம்.”
“எத்தனை வருஷமாத்தான் இந்த வேலை நடக்குதோ?”
“உன் தாத்தாவுக்குத் தாத்தா காலத்துல பேச ஆரம்பிச்சு, இப்போதான் கட்ட ஆரம்பிச்சிருக்கோம். நம்ம காலத்துலயே கட்டி முடிச்சிடணும்னு கிறிஸ்துகிட்ட பிரார்த்தனை பண்ணிக்கங்க மிஸ்டர் லோகன்.”
யானைக்கன்றின் பிளிறல் கேட்டது.
“பெரியவக குரல் ஈனமாயிடுச்சே?” காணி வேகமாகக் குழியருகில் ஓடினான். அருகில் சென்று குழியைக் குனிந்து பார்த்த காணிக்குக் கவலையாகிவிட்டது. “ஆன நெஞ்சழுந்தப் படுத்திருச்சு... சாஸ்தாவே, ஓடிச்சென்னு வாங்க. பொரட்டிப் போடலைன்னா ஜீவிதம் காணாது...” என்று கூச்சலிட்டான்.
அலறியடித்து எல்லோரும் குழியருகில் சென்றனர்.
“தம்புரானே, குட்டியோட நெஞ்சு கீழ அழுந்தக்கூடாது. க்ஷண நேரத்தில மரிக்கும்... உடன் கயறு கெண்டு வரிக்க...” என்று பதறினான்.
பேயத்தேவன் பாய்ந்தோடினான். தேங்காய் நாரினால் பின்னிய தாம்புக் கயிறுகள் ஆங்காங்கு கிடந்தன. மரம் வெட்டுவதற்காக இடுப்பில் கட்டிக்கொள்ள வாகாக இருபதடி, முப்பதடி நீளத்திற்கு இருந்ததை, பேயனும் ராசுமாயனும் எடுத்துக்கொண்டு ஓடினார்கள்.
“கட்டி எறங்கு மோனே...” காணி அவசரப்படுத்தினான்.
“நல்லப்பூ... ஓடி வா. கயித்தை நல்ல மரமாப் பாத்துக் கட்டிட்டுக் கையில பிடிச்சுக்கோ. ராசு... உனக்கும் ஒரு மரத்துல கட்டச் சொல்லுடா” என்றான் பேயன்.
ஆளாளுக்கு ஓடி, மரத்தில் கயிற்றைக் கட்டினார்கள். இறுக்கிப் பிடிக்க ஒவ்வொரு கயிற்றுக்கும் இரண்டு மூன்று பேர் நின்றனர். பேயனும் ராசுவும் ஒப்பிலியும் இடுப்பில் கயிற்றைக் கட்டிக்கொண்டு சரசரவென்று குழிக்குள் இறங்கினர். கீழே போகப் போக கன்று குழிக்குள் இறங்குபவர் சத்தம் கேட்டுத் தடுமாறி எழுந்துகொள்ள முயன்றது. இரவு பெய்த மழையின் ஈரம் வழுக்கிவிட, மடாரென்று கீழே விழுந்ததில் தும்பிக்கை சுவரில் அடித்தது. மேலிருந்த காணி அலறினான். “சாஸ்தாவே, தும்பிக்கை அடிபடக்கூடாதே, மோனே உடன் இறங்கணும்” என்றார்.
டெய்லர், “பேயன், குட்டியை நீங்க மூணு பேரும் சேர்ந்து தூக்கிட முடியுமான்னு பாருங்க” என்றார்.
“கயிறு தாங்குனா தூக்கிடலாம் தொர. மூணு, நாலாள் எடை இருக்குமா?”
“ஆங்... இருக்கும், இருக்கும்... கனத்த கயிறான்னு பரிசிச்சு அறியும்...”
பேயன் முதலில் குட்டியின் அருகில் இறங்கினான். உள்ளே குதிக்கலாமா வேண்டாமா என்றொரு தயக்கம். குட்டியென்றாலும் யானையாச்சே? தன்னை ஒரு மிதி மிதித்தால்?
“ராசு, குதிக்கவா மாப்ள?”
“குதிடா... யோசிக்காதே?”
“ஆனடா. மிதிச்சுதுன்னா?”
“கொழந்தைக் குட்டிடா அது. ஒன்னும் ஆவாது, குதி” சொல்லிவிட்டுப் பேயத்தேவன் குதிக்கும்முன், ராசுமாயன் குதித்தான். பேயத்தேவனுக்கு அடுத்து ஒப்பிலியும் குதித்தான்.
“எப்பா, சத்தம் குடுத்தா ஜரூரா தூக்கிடுங்க. எங்க ஜோலிய முடிச்சிடாதீங்க. சரியா?”
“நீ பயப்படாதே சாமி. நான் இருக்கே உன் குலசாமி...” என்று குனிந்து பார்த்துச் சொன்னார் முங்கிலி.
“அவர் ஒருத்தர எறக்கிவிட்டுருந்தா போதும். அனுமாரு சஞ்சீவி மலையைத் தூக்கிட்டு வந்தமாதிரி ஒத்தக் கையில தூக்கிட்டு வந்திருப்பாரு” ஒப்பிலி சொன்னான்.
கன்று மூவரையும் பார்த்து பயந்து ஒடுங்கியது. குழிக்குள் விழுந்த ஒரு நாளுக்குள் பயத்தில் உடல் குன்றியிருந்தது. பேயத்தேவன் அன்பாய் அதன் முதுகில் தடவினான். “பயப்படாதே, ஒன்னை எப்படியும் வெளிய எடுத்துடுவோம்”னு சொல்லிக்கொண்டு, ஏதேனும் காயம் பட்டிருக்கிறதா என்று யானையின் தும்பிக்கையை ஆராய்ந்தான்.
“சீக்கிரம், மழை வர்ற மாதிரி இருக்கு. குட்டிய மேல ஏத்துங்க” என்று டெய்லர் குரல் கொடுத்தார்.
குட்டியை எப்படி மேலே ஏற்றுவது, கயிறு கொண்டு வரவில்லையே என்று அப்போதுதான் மூவருக்குமே யோசனை வந்தது.
“ஒன்னும் யோசிக்க வேணாம். நம்ம மூணுபேத்தோட கயித்தையும் அவுத்து குட்டிக்குக் கட்டி மேல ஏத்துவோம். அப்புறம் நாம ஏறலாம்” என்ற பேயத்தேவன் தன் இடுப்புக் கயிற்றை வேகமாக அவிழ்த்தான். “நடுவில் ஆத்தா ஆன வந்துட்டா... நம்ம கதி அதோகதிதான்” என்ற ராசுமாயனும், பரவாயில்லை என்பதுபோல் தயங்காமல் இடுப்புக் கயிற்றை அவிழ்த்தான். மூவருக்கும் இருந்த பதற்றத்தைவிட, தாய் யானை திரும்ப வருவதற்குள் குட்டியை மேலேற்றிவிட வேண்டுமென்ற வேகம் எழுந்தது.
குட்டியின் முதுகுப் பகுதியிலேயே பத்தங்குல இடைவெளியில், அடுத்தடுத்த கயிற்றைக் கட்டிவிட்டார்கள். மனசுக்குள் கரைச்சாமியைக் கும்பிட்டுவிட்டு, குரல் கொடுத்தார்கள்.
“மூணு கயித்தையும் ஒன்னாச் சேத்துத் தூக்குங்க...” காட்டின் ஆழத்திலிருந்து கிளம்பியதுபோல் குரலெழுந்தது.
“தூக்கு...” ஒப்பிலி அடிவயிற்றிலிருந்து குரலெழுப்பினான்.
உத்தரவுக்குக் கட்டுப்பட்டதுபோல் மூன்று கயிறும் ஒரே நேரத்தில் மேலெழும்பியது. அந்தரத்தில் எழும்பிய யானைக்கன்று ஹீனமாய்ப் பிளிறியது.
மழை வலுத்தது. நிமிஷத்தில் பளாரென்று தாரைகள் மண்ணை அறைந்து கீழிறங்கின.
“விட்டுடாதீங்க...” மூவரும் சேர்ந்து கத்தினார்கள்.
குட்டி பயத்தில் உதைக்க, சுமை தாங்காமல் கயிறு முன்னும் பின்னும் அலைந்தது.
“நெருக்கிப் பிடிங்கப்பா... விட்றப்போறீங்க. குட்டி விழுந்தா எங்க மூணு பேர் கதியும் அதோகதிதான்” ராசுமாயன் பயந்தான்.
இருநூறு கிலோ எடையைச் சுமக்கக் கயிறு திணறியது. மழை வலுக்க வலுக்க கயிறு இழுப்பவர்களின் கைகள் நடுங்கின. பாதிக் குழியைத் தாண்டும்போது யானைகளின் பிளிறல் சத்தம் தூரத்தில் கேட்டது. யானைகள் திரும்ப வந்துவிட்டனவோ என்று கூட்டம் நடுங்கியது. வேகமாகக் கயிறுகளைப் பிடித்து இழுத்தார்கள். காதைப் பிளக்கும் இடிச் சத்தம் கேட்டதில் அச்சத்தில் கயிற்றை நெகிழ விட்டார் ஒருவர். ஒருபக்கம் கயிறு கீழிறங்க, கீழிறங்க விடாமல் இரண்டு கயிறும் இழுத்து நிறுத்த, கன்றின் நிலையைப் பார்த்து, உள்ளே இருந்த மூவரும் கத்தினார்கள். முங்கிலித்தேவன், “என்னப்பு காரியம் பண்ற, கயித்த இழுத்துப் புடி. உள்ள இருக்கிறது யாருன்னு தெரியுமில்ல?” என்று சத்தம் போட்டான். முங்கிலி இழுத்து நிறுத்தியதில் கன்று அந்தரத்தில் ஆடி நின்றது.

“மழ வலுக்குது. குழிக்குள்ள தண்ணி எறங்குது. குட்டிய இழுங்க வேகமா” பேயத்தேவன் கத்தினான்.
வேகமாகக் கயிறு இழுக்கும் மூவரின் அருகில் வந்து நின்ற டெய்லர், வலுவாகப் பிடித்திழுக்கச் சொன்னார். ஆள்களை அருகருகே நிற்க வைத்து, கயிறு நெகிழாமல் பிடிக்கச் சொல்லி, குழிக்குள் எட்டிப் பார்த்தார். இன்னும் இரண்டாள் உயரம்தான் இருக்கும். தூக்கிவிடலாம் என்ற நம்பிக்கை வந்தது.
“எல்லாம் ஒரே நேரத்துல பிடிச்சு இழுங்க...” குரல் கொடுத்தார் டெய்லர்.
“இழுங்க நல்லா” மொக்கைமாயன் குரல் கொடுக்க, எல்லாரும் சேர்ந்து இழுத்தார்கள். கயிறு சரசரவென்று மேலே வந்தவுடன் பாகன்கள் ஓடிவந்தார்கள்.
கயிற்றைப் பிடித்து கன்றை பத்திரமாக இறக்கி, அவசர அவசரமாகக் கயிற்றின் முடிச்சை அவிழ்த்தார்கள். மழை ஈரத்திலும் மேலே இழுத்த அழுத்தத்திலும் கயிறு இறுகியிருந்தது. முங்கிலித்தேவன் கையில் இருந்த அரிவாளால் கயிற்றை அறுத்தெடுக்கவும், பின்னால் ‘ம்மா...’ என்ற பிளிறல் கேட்கவும் சரியாக இருந்தது. தாய் யானை உடம்பு அதிர முன்னால் வந்து நின்று கன்றைப் புரட்டியது. பாதி மயக்கத்திலிருந்த கன்று, தாயின் வருடலில் மெல்ல அசைந்தது. கன்றின் தாய் உறவு யானைகள் திரண்டு நின்று கன்றைத் தும்பிக்கையால் காதைப் பிடித்து இழுப்பதும், முட்டித் தள்ளி எழுந்துகொள்ளத் தூண்டுவதுமாக இருந்தன. தூக்கத்தில் இருந்து எழுவதுபோல் சட்டென்று எழுந்த கன்று, ஒருமுறை தடுமாறி, பின் எழுந்து தாயின் கால்களுக்குள் நுழைந்து நின்றது. காலடிக்குள் கன்று வந்தவுடன் யானைகள் ஈரம் கோத்த கண்களோடு மழைக் குள் நகரும் கரிய மலைகளைப் போல் காட்டுக்குள் நுழைந்தன. மரத்தின் மேல் அமர்ந்திருந்த தேவந்தி, காட்டுக்குள் செல்லும் யானை களைக் கையெடுத்துக் கும்பிட்டாள்.
“முட்டிக்கால் அளவுக்குத் தண்ணி வந்துடுச்சே...” பேயத்தேவன் குரல் கேட்டவுடன் முங்கிலித் தேவன் பதறினார். “என்னா காரியம் பண்ணிட்டேன். மன்னிச்சிடு நாட்டாமை” என்று கத்திக்கொண்டு, “டேய், கயித்தைப் போடுங் கடா” என்று குழிக்குள் கயிற்றை வீசினார். ஆளுக்கொரு கயிற்றை எடுத்துப்போட, மூவரும் சேறும் சகதியுமாக மேலேறி வந்தார்கள்.
மழையைப் பொருட்படுத்தாமல், ஒரு நாள் முழுக்கப் போராடி, ஒரு காட்டுயிரைக் காப்பாற்றிய நிறைவில் ஒவ்வொருவரும் குடிசைக்குள் சென்றனர்.
“நல்லவேளை... குட்டியை உயிரோட காப்பாத்திட்டோம்.” ஈர உடையை மாற்றாமல் டெய்லர் தன் சக இன்ஜினீயர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.
“அந்தப் பூசாரிப்பெண் எப்டி தைரியமா யானைமேல ஏறிட்டாங்க? யானைகளும் மந்திரம் போட்ட மாதிரி அவங்க பின்னாலேயே போயிடுச்சுங்க?”
“அவங்க இந்தக் காட்டுக்குள்ளயேதானே இருக்காங்க? தங்களுக்குக் கெடுதல் பண்ண மாட்டாங்க, உதவி செய்யத்தான் வந்திருக்காங்கன்னு யானைகளால புரிஞ்சிக்க முடியும்னு நெனைக்கிறேன்.”
“மிருகங்களுக்கு இப்படியெல்லாம் உணர்வு இருக்குமா?” லோகன் கேட்டார்.
“ஏன் இருக்காது... நம்மைவிட மிருகங்களால தான் மனசோட உண்மையான உணர்வுகளைப் புரிஞ்சிக்க முடியும். அப்புறம் எப்படி, இந்த ஆன விரட்டி, புலி விரட்டியெல்லாம் இருக்காங்க? அவங்க அந்தந்த மிருகங்கள சரியாப் புரிஞ்சிக்கிட்டவங்கதான்.”
“என்னமோ... சீக்கிரம் அணையைக் கட்டி முடிச்சிட்டு உயிரோட ஊர் போய்ச் சேரணும். திக் திக்குனு இருக்கு” லோகன் சொன்னவுடன், டெய்லரும் மெக்கன்சியும் தங்களின் கூடாரத்திற்குள் இருந்து வெளியில் பார்த்தார்கள்.
டெய்லர் சிறிது யோசனைக்குப் பிறகு பேசத் தொடங்கினார்.
“இந்தத் தளத்துல நாம சில கட்டுப்பாடுகளையும் ஒழுங்கையும் கொண்டு வரணும். இல்லைன்னா யார் என்ன வேலை செய்றாங்க, யாருக்குக் கீழ வேலை செய்றாங்க, ஒவ்வொரு நாளும் என்ன வேலை செஞ்சிருக்காங்கன்னு நாம கணக்கிட முடியாம போயிடும். அவங்கவங்க ஒவ்வொரு நேரத்துக்கு ஒவ்வொரு இடத்துக்குப் போய் கையில கிடைச்ச வேலையைச் செய்றாங்க. இப்படி வேலை நடந்தா, இன்னும் பத்து வருஷம்கூட ஆகலாம், நாம அணை கட்டி முடிக்கிறதுக்கு. அப்புறம் வரப்போற பருவம் கடுமையா இருக்கும். மழையும் இருக்கும். காய்ச்சலும் அதிகமா பரவும். அதையெல்லாம் நாம சமாளிக்கணும்னா இந்த உள்ளூர் கூலிங்களுக்குக் கொஞ்சம் சுத்தத்தையும் பழக்கணும். செய்ய வேண்டிய வேலைகளைப் பிரிச்சு இப்பவே நாம ஒரு திட்டம் தயார் செய்தாத்தான் வேலை கணிசமா நடக்கும். இல்லை, கங்காணிக சொல்றதக் கேட்டுக்கிட்டு நாம ரிப்போர்ட் எழுதிக்கிட்டு இருக்க வேண்டியதுதான். நீங்க ரெண்டு பேரும் ஒங்களோட கருத்தச் சொல்லுங்க. எனக்கு என்னவோ நாம திசையைத் தீர்மானிக்காமப் பறந்துகிட்டே இருக்க மாதிரி இருக்கு.”
மெக்கன்சியும் லோகனும் டெய்லரைத் தீவிர சிந்தனையுடன் பார்த்தார்கள்.
“நீங்கதான் இப்போ சூப்பிரண்டெண்ட். என்ன உத்தரவு கொடுக்கிறீங்களோ அதைச் செய்றோம்...” லோகன்.
“லோகன், நான் விளையாட்டாகச் சொல்லவில்லை.”
“நானும் விளையாட்டாக எடுத்துக்கொள்ளவில்லையே? நான் உங்களுக்குக் கீழிருக்கும் அசிஸ்டென்ட் இன்ஜினீயர். என்ன செய்ய வேண்டுமென்று சொன்னால் மீறாமல் செய்வேன்.”
“லோகன், ப்ளீஸ்” என்ற மெக்கன்சி, டெய்லரிடம் திரும்பி, “நீ சொல்லு, எப்படிச் செய்யலான்னு” என்றார்.
“இன்னும் பத்து நாளோ ஒரு வாரமோ இந்தப் பருவத்துக்கான வேலை போகும்னு நினைக்கிறேன். சீசன் நல்லா இருந்தா கூடுதலா வேலை செய்வோம். சீப் இன்ஜினீயர் தபால் அனுப்பியிருக்கார். இருந்தாலும் சீசன் அனுமதிச்சா நாம தொடர்ந்து வேலை செய்யலாம். இந்தப் பருவத்துக்கு இப்படியே போகட்டும். ஆனா வர்ற பருவத்துல இருந்து வேலைக்கு வரும்போது எப்படி நடந்துக்கணும், எப்படி வேலை செய்யணும்னு எல்லாம் நாம் கடைசி இரண்டு மூன்று நாள் நல்லாச் சொல்லியனுப்பணும்.”
“போன சீசனுக்கு வேலைக்கு வந்ததுல இருபது சதவிகிதம் ஆளுகதான் திரும்ப வந்திருக்காங்க. மத்தபடி எல்லாம் புது ஆளுக. இந்தச் சீசன் முடிஞ்சு போறவங்களிலும் எத்தனை பேர் திரும்பி வருவாங்கன்னு உறுதியா சொல்ல முடியாது. புதுசா வர்றவங்களுக்குப் புதுசாத்தான் சொல்லித் தரணும். அதனால் அடுத்த சீசன்லயே பார்த்துக்கலாம். இப்போ போகிற மாதிரியே போகட்டுமா?” மெக்கன்சி கேட்டார்.
டெய்லர் யோசித்தார்.
“நீ சொல்றதிலும் உண்மை இருக்கு. ஆனா எப்பவுமே ஒரு சீசன் முடிஞ்சு இன்னொரு சீசனுக்கு வர்றவங்க எத்தனை பேருன்னு நம்மால உறுதியா சொல்ல முடியாது. ஆனா திரும்பி வரப்போற பத்து, இருபது சதவிகித கூலிங்க நாம சொன்னது தெரிஞ்சவங்களாத்தானே திரும்ப வருவாங்க. அவங்க வந்தவுடனே புது ஆளுகள தயார் பண்ற வேலையையும் செய்வாங்க. நமக்கு ஒவ்வொரு சீசன்லயும் இருக்கப் போற சவால்தான் இது. அதனால இந்தச் சீசன்லயே ஆரம்பிச்சிடலாம்னு நெனைக்கிறேன்” என்றார் டெய்லர்.
“சரிதான். நீயும் நானுமேகூட அடுத்தடுத்த சீசன்ல வருவோமான்னு தெரியாதே?”
“லோகன், இதென்ன குதர்க்கமாவே பேசிக்கிட்டு இருக்க?” டெய்லருக்குக் கோபம் வந்தது.
“யதார்த்தத்தைச் சொன்னேன். இதிலென்ன குதர்க்கம்?”
“டெய்லர், நீ இருக்கிற வேலையைச் சொல். யார் யார் பொறுப்பேத்துக்கலாம்னு பிரிச்சிடலாம்.”
டெய்லர் எண்ணங்களைக் கோத்துக்கொண்டு பேசத் தொடங்கினார்.
“ஒன்னு, கூலிங்களோட வேலைகளைத் திட்டமிட்டு, முறையா கண்காணிச்சு வேலை வாங்கணும். இரண்டாவது, கால்வாய் வேலையைக் கண்காணிக்க தனியா ஒரு குமாஸ்தாவோ, ஓவர்சீயரோ கட்டாயம் தேவை. அடுத்து, தேக்கடியில வயர் ரோப் போடுற வேலை ஆரம்பிச்சாச்சு. அதுக்கு ஒரு சூப்பிரண்டெண்ட் போடச் சொல்லி, பென்னியே தபால் அனுப்பிட்டுதான் போனார். பென்னியுடைய திட்டத்தில் இல்லையே, திடீர்னு புதுசா ஒரு சூப்பிரண்டெண்ட் கேட்டா எப்படி அனுமதிக்கிறதுன்னு சீப் இன்ஜினீயர் தபால் வரைஞ்சிட்டார். மதுரையில் ஒரு டிவிஷனே போடணும். அதுக்கு ஒரு ஆபீஸ், ஒரு எக்ஸிக்யூட்டிவ் இன்ஜினீயர், ஒரு அசிஸ்டென்ட் இன்ஜினீயர், இரண்டு ஓவர்சீயர், நான்கு டிராப்ட்ஸ்மேன், கிளார்க்குன்னு ஒரு பட்டியல் அனுப்பி, எப்படியோ அனுமதி வாங்கியாச்சு. சீசன் முடிச்சுக் கீழ போனவுடனே ஆள்களைத் தேர்வு செய்யற வேலைதான். ஆளுங்களை என்னையே போடச் சொல்லி அனுமதி கொடுத்திருக்காங்க. மதுரா டிஸ்ட்ரிக்ட் இன்ஜினீயரை வரச்சொல்லி, அதை இரண்டு நாள்ல நான் போட்டுடுவேன். சுரங்கம் வேலைக்கு எக்ஸிக்யூட்டிவ் இன்ஜினீயர் கீலிங்கை, சீப் இன்ஜினீயரே நியமிக்கப்போறதா சேதி.”
“முக்கியமான ஒரு வேலை இருக்கே டெய்லர்? நாம அடுத்த சீசனுக்கு வேலைக்கு வர்றதுக்குள்ள, தூத்துக்குடியில இருந்து மெஷின்ஸ் வந்துடும். தூத்துக்குடியில் இருந்து அம்மையநாயக்கனூர் வரைக்கும் ரயில்ல கொண்டு வந்து, அங்கிருந்து டிராக்ஷன் இன்ஜின் வண்டிக மூலமா எப்படியாவது கூடலூருக்குக் கொண்டு வந்திடலாம். ஆனா அங்க இருந்து மலைமேல எப்படிக் கொண்டு வர்றது? பென்னி, மொத்த மெஷினரியும் கப்பல்ல ஏறின பிறகுதானே லண்டன்ல இருந்து கிளம்புவார்?”
“ஆமாம். பெரிய தலைவலி அதுதான். இதுக்குத்தான் பென்னி, தன்னுடைய பிளான்ல ரயில்பாதை கட்டாயம் தேவைன்னு கொடுத்தார். குறைந்தது ஒரு லட்சம் ரூபாய் செலவாகும்னு தெரிஞ்சவுடனே பென்னிக்கும் தயக்கம் வந்திடுச்சு. சர்க்காரும் வேறு வழி என்ன இருக்குன்னு பார்க்கச் சொல்லிட்டாங்க.”
“இப்போ என்ன வழி இருக்கு?”
“இங்க கவனிங்க...” என்று டெய்லர் ஒரு தாளையெடுத்துப் பென்சிலால் வரைந்தார்.
“குருவனூத்து வரைக்குமே நாம் மெஷின்களை டிராக்ஷன் இன்ஜின் மூலமா கொண்டாந்திடலாம். குருவனூத்துல இருந்துதான் நாம சுண்ணாம்பும் ஏத்திக்கிட்டு வரணும். குருவனூத்துல இருந்து தேக்கடிக்கு வயர் ரோப்... இப்படி மலைக்குக் குறுக்காவே கொண்டு வந்திடலாம்...” டெய்லர் தாளில் மலைமேல் ஒரு குறுக்குப் பாதையைக் காட்டினார். எல்லாமே காட்டுக்குள்ளதான். பென்னி வயர் ரோப் போக வேண்டிய லைனை ஏற்கெனவே போட்டுக் கொடுத்ததால நமக்குக் குழப்பம் இல்லை. இப்போ அந்த லைன்லதான் பெரிய பெரிய மரக்கம்பங்களை நடச்சொல்லியிருக்கேன். இடையில் சில இடத்தில் மட்டும் இரும்புக் கம்பம் தேவை. அதுவும் தனியா நடணும். தேக்கடி வரைக்கும் வந்த பிறகுதான் சிக்கலே...”
“இங்க எல்லாமே சிக்கல்தான்” லோகன் சொன்னவுடன் டெய்லர் முறைத்தார்.
“சீனியர்ன்ற மரியாதையாவது கொடுடா...” மெக்கன்சி கோபமாகச் சொன்னவுடன், “சீனியர்ன்றதுக்காகத்தானே நம்ம டிபார்ட்மென்ட் தனி அலவன்சு கொடுக்குதே?” என்றார் லோகன்.
“உன் மரியாதையும் வேணாம், மண்ணும் வேணாம். குறுக்க பேசாம கவனி இங்க” என்ற டெய்லர் தொடர்ந்தார்.
“தேக்கடியிலிருந்து சுண்ணாம்பும் மெஷினரியும் கொண்டுபோக, நம் முன்னால் மூன்று வழி இருக்கு. ஒரு வழி திட்டத்தோடவே நின்னுபோயிடுச்சு, ரயில் பாதை போடுவது. இரண்டாவது, வண்டிகள் மூலமா கட்டுமானத்துக்குத் தேவையான சாமான்களை மேலே கொண்டு போவது. இப்போ நமக்கு நாம் போட்ட ஒத்தையடிப் பாதை வழியா, மாட்டு வண்டிக மூலம்தான் அரிசி, பருப்புல இருந்து சாராயம் வரைக்கும் வருது. அரிசி, பருப்பெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகூட மாட்டுவண்டிகள்ல பிரிச்சுப் பிரிச்சு ஏத்திக்கிட்டுப் போகலாம். ஆனா சுண்ணாம்பையும் மெஷினரிகளையும் அப்படிக் கொண்டுபோக முடியாது. மெஷினரியை மாட்டுவண்டியில ஏத்தவே முடியாது. ஒவ்வொன்னும் அரை டன், கால் டன் கனம் இருக்கும். சுண்ணாம்பு, நாள் முழுக்க வண்டிக ஏத்திக்கிட்டு வந்தாலும் ஒரு குழிக்குக் காணாது...”
“அப்போ?”
“ஒரே வழிதான் இருக்கு மெக்கன்சி. மேல்மலையில் நம்முடைய ஜீசஸ்...”
“ஜீசஸ்?”
“ஆம், முள்ளிய பாஞ்சன். குமுளியிலிருந்து பெரியாறு வழியா ஓடுற நதி. ரொம்பச் சின்ன நதி. பெரியாறுடைய கிளை நதி. முள்ளிய பாஞ்சன் வழியா படகுல கனமான மெஷின்களையும் சுண்ணாம்பையும் கொண்டு போகலாம். இப்போதைக்கு நம் கண்முன்னால் உள்ள கடவுள் இந்தச் சிற்றாறுதான்.”
“படகுவழி பொருள்களைக் கொண்டு போனா செலவும் குறையும்தானே?”
“ஆமாம் லோகன். ஆனா முள்ளிய பாஞ்சன்ல வருஷம் முழுக்கத் தண்ணி இருக்காது. கோடையில் இரண்டு மூணு மாசம் மொத்தமா தண்ணி இருக்காது, இல்லை, படகு போகிற அளவுக்கு ஆழம் இருக்காது. அதுவும் இல்லைன்னா குமுளியில இருந்து பெரியாறு வரைக்கும் ஒரே மாதிரியாவும் தண்ணி ஓடாது. குமுளியில் படகு போகும் அளவுக்குத் தண்ணி இருக்கேன்னு சாமான்களை ஏத்தி அனுப்பவும் முடியாது. பெரியாறு போய்ச் சேர்றதுக்கு மொத்தம் எட்டு மைல் தூரம். அதுக்கு இடையில் எங்கியாவது தண்ணி இல்லாமல்போனால் படகு கரைதட்டி உக்காந்திடும். கோடைக்காலத்துல மாட்டு வண்டிதான் ஒரே வழி. கழுதைகளையும் கூடப் பயன்படுத்திக்கலாம். அத்துடன், சின்ன நதின்றதால ஒரே மாதிரியா வெள்ளம் இருக்காது. அதனால் அங்கங்கே லாக் கேட் போட்டு தண்ணியோட அளவையும் ஓட்டத்தையும் சீரா மாத்தணும். லாக் கேட் போடுற வேலை பென்னி வந்த பிறகுதான் ஆரம்பிக்கணும். அந்த மெஷினரியெல்லாம் இங்கிலாந்துல இருந்து வரணும். எல்லா வேலையையும் கேட்டு மலைக்க வேண்டியதில்லை. ஒரே நாளில் நடக்கப்போற வேலையில்லை இதெல்லாம். லோகன், உனக்குத்தான் கூலிக பயப்படுறாங்க. நீ எல்லாக் கங்காணிக்கும் கொத்தனார்களுக்கும் ஆசாரிகளுக்கும் வேலைங்கள பிரிச்சிக் கொடுத்து, கூலிகள ஒழுங்குல வைக்க வேண்டியதும் உன் பொறுப்பு, சரியா?”
“உத்தரவு தொர.”
“அடி வாங்கப்போகிறாய்...” என்று மெக்கன்சி லோகனை மிரட்டினார்.
விடிவதற்கு அரைமணி நேரம் முன்பாகவே வேலையாள்களும் கங்காணிகளும் மேஸ்திரிகளும் வரிசையில் நிற்க வைக்கப்பட்டிருந்தனர்.
- பாயும்