
டெய்லர் சொல்லும் வேலைகள் பெரும்பாலும் புரிவதில்லை, இங்கு வெட்டு, அங்கு பள்ளம் தோண்டு, நான்கடி குழி வெட்டு என்று சொல்கிற வேலையில் மட்டுமே சுவாரசியம் கொண்ட வேலையாள்கள் அசுவாரசியமாய் நின்றார்கள்.
“ஒவ்வொரு நாளும் என்ன வேலை செய்றீங்க, எந்த மேஸ்திரியோட இருந்து வேலை செய்றீங்க, காலையில எத்தனை மணிக்கு வேலை நடக்கிற இடத்துக்கு வந்தீங்க, எத்தனை மணிக்கு வேலையை முடிச்சிட்டுப் போறீங்கன்னு எல்லாத் தகவலும் ஓவர்சீயர்கிட்ட சொல்லியாகணும். உங்களைக் கூட்டிக்கிட்ட வந்த கங்காணிகிட்டவும் முறையா தகவல் சொல்லணும். மேஸ்திரிகிட்ட தகவல் சொல்லி, தினம் உங்க பேர் பதிஞ்சிருந்தா மட்டும்தான் கூலிக்கணக்குல சேக்கச் சொல்லுவேன். நான் பாறை உடைச்சேன், பல்லக்கைக் கட்டினேன்னு கூலி வாங்கும்போது சொன்னா கணக்குல வராது, சரியா?”

கூடியிருந்த வேலையாள்களிடம் டெய்லர் உரத்த குரலில் சொல்லிக்கொண்டிருந்தார். அவரின் இங்கிலீஷ் தமிழைப் புரிந்தும் புரியாமலும் கேட்டுக்கொண்டிருந்த கூலிகள் முகத்தில் அச்சமில்லை. என்ன சேதியென்றாலும் தங்களுக்குப் பொறுப்பான மேஸ்திரியும் கங்காணியும் சொல்லப்போகிறார்கள், அவர்கள் புரிந்துகொண்டால் போதுமென்ற அசிரத்தை அவர்கள் முகத்தில் வெளிப்படையாகத் தெரிந்தது.
“ஓடுற ஆத்துத் தண்ணிய யாராவது மொண்டு குடிச்சாலோ, ஆத்துத் தண்ணிய சமைக்கிறதுக்கு எடுத்துட்டுப் போனாலோ கூலியில ஓரணாவைத் தண்டத் தொகையா பிடிக்கச் சொல்லியிருக்கேன்...”
“தொரைக்கு என்னாச்சு, உப்புக் கல்லாட்டம் மின்னுற தண்ணிய குடிச்சா என்னவாம்?” வேலையாள்களின் பின்னால் நின்று நமச்சிவாயம் முணுமுணுத்தான்.
நமச்சிவாயம் சொல்லி முடிப்பதற்குள், “எந்தக் கூலியாவது ஆத்துத் தண்ணிய அப்படியே அள்ளிக் குடிச்சா, கூலியக் கூட்டிக்கிட்டு வந்திருக்கிற கங்காணிக்குக் கொடுக்கிற கமிஷன் ஓரணா கெடைக்காது, அடுத்து அவன் கூட்டிக்கிட்டு வர்ற கூலிங்கள வேலைக்கு எடுத்துக்கிடவும் மாட்டோம்” என்று சொன்னார் டெய்லர். நமச்சிவாயத்தின் முகம் சுருங்கியது.
“இப்போ வரப்போற ஏப்ரல் மாசத்துல இருந்து ஜூன் மாசம் வரைக்கும் காட்டுல மலேரியா மாதிரி ஒரு காட்டு ஜுரம் வரும். ஜுரம் வர்றதுக்கு முன்னால நாம இந்த சீசன் வேலையை முடிச்சிட்டுப் போகணும். முடிச்சிட்டு அப்படியப்படியே கிளம்பிப் போயிட்டம்னா, ஜூலை மாசம் வந்து பாக்கும்போது இப்போ செஞ்ச ஒரு வேலையும் மிச்சம் இருக்காது. முதல்ல இருந்து தொடங்கணும். அதனால் செஞ்ச வேலை குலைஞ்சுபோகாமப் பாதுகாப்பு செஞ்சுட்டுப் போகணும். மேல்பாறையை உடைச்சுக் கரையில போட்டிருக்கிறதையெல்லாம் எடுத்துக் கரையை விட்டுத் தள்ளிப் பாதுகாப்பா குவிச்சு வைக்கணும். மரக்கட்டைகளை ஒன்னு சேர்க்கணும். இன்னும் நாம தடுப்பணை கட்ட ஆரம்பிக்காததால பாதுகாக்கிற வேலை குறைவு. கட்ட ஆரம்பிச்ச பிறகுதான் ஒவ்வொரு சீசனையும் எப்போ ஆரம்பிச்சு, எந்த வேலையில நிறுத்தணும்னு சரியாத் தெரிய வரும். இந்தச் சீசன் முடிய இன்னும் ஒரு வாரம் இருக்கு. அதுக்குள்ள சுத்தி நடக்கிற வேலையெல்லாம் நிறுத்திட்டு, அணையோட அஸ்திவாரம் அமைய இருக்கிற இடத்தில் உள்ள பாறைகளை நதிமட்டம் வரைக்கும் சுத்தமா வெட்டியெடுக்கணும். இங்க இருக்க எல்லாருமே மரம் வெட்டவோ, கல்லுடைக்கவோ போகாதீங்க. மணலை மூட்டை கட்டி, ஐம்பது, நூறுன்னு மூட்டைகளைத் தண்ணிக்குக் குறுக்க போட்டுக்கிட்டே இருங்க, தண்ணியோட ஓட்டம் குறையக் குறைய பாறைங்கள வெட்டியெடுக்கிறது சுலபம். நாள் முழுக்கத் தண்ணியில நின்னுதான் ஆகணும். வேற வழியில்ல. இந்தச் சீசன் முடியறதுக்குள்ள நதிப்படுகையில் இருக்க பாறைகள வெட்டியெடுத்துட்டோம்னா டேம் சைட்டுக்குத் தண்ணி வராம இருக்கும், அடுத்த சீசனுக்கு வந்தவுடனே தடுப்புச் சுவர் கட்டிடலாம்...” டெய்லர் பேசிக்கொண்டே சென்றார்.
டெய்லர் சொல்லும் வேலைகள் பெரும்பாலும் புரிவதில்லை, இங்கு வெட்டு, அங்கு பள்ளம் தோண்டு, நான்கடி குழி வெட்டு என்று சொல்கிற வேலையில் மட்டுமே சுவாரசியம் கொண்ட வேலையாள்கள் அசுவாரசியமாய் நின்றார்கள். பெரும்பாலும் எல்லார் மனசிலும் ஓடிய கேள்வி, ‘ஓடுற ஆத்துத் தண்ணிய குடிக்காதேன்னு எதுக்கு இந்த தொர சொல்லுறாரு? ஆத்துல தளும்பத் தளும்ப ஓடுற தண்ணில குளிக்கறதும் குடிக்கறதுமா எவ்ளோ கொண்டாட்டமா இருக்கும்... தண்ணிய பிடிச்சு வச்சா குடிக்க முடியும்? இவ்ளோ படிச்ச தொரைக்கு இது தெரியாமப்போச்சே?’
பேசி முடித்த டெய்லர், “உங்களுக்கும் என்கிட்ட எதுனா சொல்லணும், எதுனா சந்தேகம் இருக்குன்னா கேக்கலாம்” என்றார்.
சலசலப்பு குறைந்து கூட்டம் அமைதியாக நின்றது. யாரும் முன்வருகிறார்களா என்று லோகனும் மெக்கன்சியும் கூட்டத்தை உற்றுப் பார்த்தார்கள். ஒருவர் முகத்திலும் அதற்கான எத்தனிப்பு இல்லாததைப் பார்த்த லோகன், டெய்லரிடம் ஒன்றுமில்லை என்பதாகத் தலையசைத்தார்.
டெய்லர், “கங்காணிகள், மேஸ்திரிகளுக்கு எதுனா குறை இருந்தாலும் சொல்லுங்க” என்றார்.
கங்காணிகள் முகத்தில் சலனம் தெரிந்தது. “தயங்காமச் சொல்லலாம். நீங்க எல்லாரும் நல்லா இருந்தாத்தான் இந்தக் காட்டுக்குள்ள நம்மால் வேலை செய்ய முடியும். என்ன சங்கடம், குறைபாடு இருந்தாலும் சொல்லலாம்.” டெய்லர் கங்காணிகளுக்கு நம்பிக்கை கொடுத்தார்.
நமச்சிவாயம் வேலையாள்களின் பின்னால் இருந்து, நகர்ந்து தனியாகத் தெரியும்படி வந்து நின்றான்.
“நமச்சிவாயம்... ஏதும் சொல்லணுமா?”
நமச்சிவாயம் சுற்றி நிற்பவர்களை நிதானமாகப் பார்த்துவிட்டுப் பேசுவதற்குத் தயக்கமாய்க் கைகட்டி நின்றான்.
“சொல்லு நமச்சிவாயம்...” டெய்லர் மீண்டும் கேட்டார்.
“தொர, நான் இந்தச் சீசனுக்குத்தான் ஆளுகள கூட்டிக்கிட்டு வந்தேன். என்கூட வந்த கூலிங்களுக்கு இன்னும் குடிசை குடுக்கல...” நமச்சிவாயம் முடிப்பதற்குள் டெய்லர் குறுக்கிட்டார்.
“தெரியும்... தெரியும்... இன்னும் ஒரு வரிசை குடிசைங்க கட்டி முடிக்கல. காலிகட்ல இருந்து ஃபெர்னாண்டஸ் ஆளுகளோட வந்திருக்காரே, இனி வேகமா கட்டி முடிச்சிடுவாங்க. அதுவரைக்கும் புதுசா வந்த கூலிங்க, மத்தவங்களோட சேர்ந்து தங்கிக்கலாம். கொஞ்ச நாளைக்குத்தான். அடுத்த சீசனுக்குள்ள குடிசைக வேலை முடிஞ்சிடும்.”
“அதான் தொர பிரச்சின. எல்லார் கூடவும் சேர்ந்து இருக்க முடியாது இவங்களால...”
“சேர்ந்திருக்க முடியாதுன்னா, புரியல?”
நமச்சிவாயம் சுற்றிப் பார்த்துவிட்டுத் தயக்கமாய் டெய்லரைப் பார்த்தான்.
“புரியற மாதிரி சொல்லு...” லோகன் மிரட்டினான்.
“அரைமணி நேரம் ஓடிப்போச்சு டெய்லர். பார்த்துக்கிட்டிருக்கும்போதே மழை வந்துடும். இவனுங்களுக்கு என்ன பாடம் சொன்னாலும் நாளைக்கும் புதுசா கேக்கற மாதிரி கேப்பாங்க...” மெக்கன்சி வானத்தைப் பார்த்துக் கவலையோடு சொன்னார்.
நமச்சிவாயத்தின் தயக்கம் அதிகமானது.
“சரி, நீ நிதானமா சொல்லு, இப்போ வேலையை ஆரம்பிப்போம்” என்ற டெய்லர் கூட்டத்தைக் கலைக்க முயன்றார்.
“தொர...”
“முட்டாள்...” லோகன் போட்ட கூச்சலுக்கு நமச்சிவாயம் பதறித் திரும்பினான்.
“லோகன், இரு, கோபப்படாதே” என்ற டெய்லர் நமச்சிவாயத்தைப் பார்த்தார்.
“தொர... எங்காளுங்களுக்கு தனியா வடகரையில குடிசைக போட்டுக்கொடுத்துட்டா நல்லது. கண்ட சாதிக்கார பசங்ககூட கஞ்சித் தண்ணி பொழங்க முடியாது...” நமச்சிவாயம் சொன்னவுடன் ரத்தினம் பிள்ளைக்கு அதிர்ச்சியாக இருந்தது. எல்லாச் சாதிகளோடும் இருப்பது சங்கடமாகத்தான் இருக்கிறது என்றாலும், நமச்சிவாயம் தன் சாதிக்காரன் என்பதால் தனக்கும் அவன் கோரிக்கையில் பங்கிருக்கிறது என்று நினைத்துவிடுவார்களோ என்று அவருக்குப் பயம் வந்தது.
‘என்ன சொல்கிறான்’ என்பதுபோல் டெய்லர் ரத்தினம் பிள்ளையைப் பார்த்தார். பிள்ளைக்குத் தொண்டைக் குழி எழுந்து அடங்கியது. வாயில் இருந்த வெற்றிலைச்சாற்றைத் துப்புவதற்கு அவகாசமின்றி விழுங்கினார். கோழி தன்னால் விழுங்க முடியாத அளவு பெருத்த இரையை விழுங்கிவிட்டு, அலகை முன்னும்பின்னும் கீறி, வான் பார்த்து வாய்பிளந்து நின்று தொண்டையை ‘கக்… கக்…’ என்று சத்தமெழும்பச் சரிசெய்துகொள்வதுபோல் பிள்ளை தடுமாறி தொண்டையைச் சரிசெய்தார்.
“தொர, எங்க சனங்களுக்குள்ள சாதி வித்தியாசம் இருக்கிறது தொரைக்குத் தெரியும்னு நெனைக்கிறேன். சாம்பானுங்க கூடவும், பள்ளு, பறை, சக்கிலிங்க கூடவும் கிறிசாத்துக்குப் போனவங்க கூடவும் தண்ணிகூடப் பொழங்க மாட்டாங்க தொர. இங்க வந்ததுல இருந்தே இந்தப் பிரச்சினை பொகைஞ்சிகிட்டுத்தான் இருக்கு. நான் ஓவர்சீயர் கிட்ட சொல்லி, அவங்களுக்குத் தனி வரிசையிலதான் குடிசை போடச் சொன்னேன். ஆனாலும் முன்ன பின்ன ஒன்னாத்தானே பொழங்கணும் தொர. அதுக்குத்தான் சங்கடப்படுறாங்க.”
மூன்று இன்ஜினீயர்களும் பிள்ளை சொன்னதைப் புரிந்துகொள்ளும் முயற்சியில் ஒருவரையொருவர் பார்த்தார்கள்.
“ஊர்ல நீங்க என்ன சாதியாவும் இருக்கலாம். இங்க ஒரே சாதிதான். கூலி. எல்லாரும் கூலிதான். எல்லாருக்கும் ஒரே கூலிதான். எங்க முன்னாடி எந்த வித்தியாசமும் கெடையாது” டெய்லர் சொன்னவுடன், கூட்டத்தில் இருந்து இரண்டு மூன்று மத்திம வயது ஆள்கள் வெளியில் வந்தார்கள்.
டெய்லர் முன்னால் முதுகு வளைந்து இரு கைகளைக் குவித்து, வணங்கினார்கள். மூவரில் வயதுகூடிய ஒருவர் கூப்பிய கையைக் கீழிறக்காமல் டெய்லரைப் பார்த்து பயத்துடன் பேசினார்.
“அய்யா எசமான், கூலியக் கூட காலணா, அரையணா கொறச்சிக்கங்க. ஆனா கீழ்ச்சாதி பயலுவள எங்ககூட சேக்காதீங்க. அவென் பல்ல வெளக்கித் துப்புன தண்ணில எனக்கு வாயள்ளி வைக்க ஒப்பாது. தொர பெரிய மனசு பண்ணணும்.”
“பெரிய மனசுன்னா, இங்க எத்தன சாதிக்காரங்க இருக்கீங்க, ஒவ்வொரு சாதிக்காரங்களுக்கும் தனித்தனி வரிசை போடணும்னா எடத்துக்கு எங்க போறது? உங்க தாவாவையே பாத்துக்கிட்டு இருந்தா, அணையைக் கட்டி முடிக்கிறது எப்போ?”
மூன்று பேரும் வாயடைத்து நின்றார்கள்.
“தனியா இருக்கணும்னு கேக்கிறவங்கள மரத்துமேல ஏத்திடலாமா தொர?” சாமி கூட்டத்தில் இருந்து துள்ளிக்குதித்துக் கொண்டு முன்னால் வந்து டெய்லரின் முகத்தருகே வந்து கேட்டான்.
“டேய் தூரப் போ...” டெய்லர் கூச்சலிட்டார்.
“பயப்படாதே டெய்லர், பைத்தியம் அவன்.”
“பைத்தியத்தை ஏன் வேலைக்குச் சேர்த்திருக்க?” லோகன்மேல் கோபித்தார் டெய்லர்.
“சொல்ற வேலையை நல்லாச் செய்வான் டெய்லர். காலையில் ஒரு பானை கஞ்சிய வாங்கிக் குடிச்சு, கோடாரியோ, கத்தியோ எடுத்தா, மழை வந்தாலும் வேலையை நிறுத்தமாட்டான். கூலி வேணும்னு இன்னும் வாய் தெறந்து கேட்டதில்லை. ஏமாத்தாம வேலை செய்வான்...”
“தள்ளி நின்னு பேசு...” டெய்லர் குரலில் சமாதானம் தெரிந்தது.
“இந்தா பெரிய மரத்துல ஆளுக்கு ஒரு குடிசை போட்டுக் குடுத்துடலாம் தொர... மரத்துல ஏத்திவிட்டுட்டா ஒசந்த ஆளாயிடுவாங்களே?” சாமி கன்னத்தில் மண்டியிருந்த தாடியை இழுத்துவிட்டுக்கொண்டு ஈயென்று இளித்தான்.
“கீழ்ச்சாதி பொம்பளக புழங்கின தண்ணிய நான் புழங்க மாட்டன்... ஊர்ல மரியாதை போயிடும். அங்க வந்தும் முன்வாசல் திண்ணையில குந்துவாளுங்க. ஒன்னு அவெனுங்க இருக்கட்டும். இல்ல நாம இருப்போம். ஆம்பளையாளுக சட்டுபுட்டுனு சொல்லி முடிவெடுங்க. நீச சாதிப் பசங்ககிட்ட என்ன சொல்லணும், போடான்னா போப்போறாங்க..?” வரிசைக்குள்ளிருந்து ஒரு பெண்குரல் மட்டும் கேட்டது.
ரத்தினம் பிள்ளைக்குப் புரிந்துவிட்டது. அக்கம்பக்கத்துக் கிராமங்களில் இருந்து ஆள்கள் வர வர, சூழல் புரிபடாதவரை அமைதியாக இருந்தார்கள். குடிசையைப் போட்டுக் குடி வைத்தவுடன், முதல் கேள்வியே சாதி பற்றித்தான். சாதி ஒவ்வாமையை ஒவ்வொருவரும் மனத்திற்குள் கூர்தீட்டிக்கொண்டே இருந்தார்கள். எந்த வேலைக்குப் போனாலும் அவரவர் சாதி ஆள்களைத் துணைக்குச் சேர்த்துக் கொண்டார்கள். சாம்பான், பள்ளர், பறையர், சக்கிலியர், கிறிஸ்தவர்களை ஓரங்கட்டுவதில் மட்டும் மீதமுள்ள அனைத்துச் சாதியினரும் ஒன்றுசேர்ந்தார்கள். எப்போது முடிவெடுத்தார்கள் என்று ஆச்சரியப்பட்ட பிள்ளை, அடுத்து என்னவென்று வியந்து நின்றார். தனக்கும் சாதிப்பிடிப்பு உண்டென்றாலும் சர்க்கார் உத்தியோகத்திற்கு பயந்து வெளிக்காட்டிக்கொள்வதில்லை.
டெய்லர், தான் பெரிய இக்கட்டில் மாட்டிக்கொண்ட தத்தளிப்பை உணர்ந்தார். காற்றில் அசைந்த கிளையொன்று மீண்டும் இயல்புக்குத் திரும்பி நின்ற இடைவெளிக்குள் ஒரு முடிவுக்கு வந்தார்.
“பிரிட்டிஷ் சர்க்கார் மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கு உள்ளூர் மக்கள் காட்டும் பாரபட்சங்களையே முழுமையாக அகற்ற நினைக்கிறது. உங்க கிராமத்தில், உங்க வீட்டில், உங்க தனிப்பட்ட நடவடிக்கையில் நீங்க எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இது சர்க்கார் இடம். சர்க்கார் வேலை. எங்களுக்கு நீங்க எல்லாருமே கூலிங்க. செய்யற வேலைக்கு எல்லாரும் ஒரே கூலிதான் வாங்குறீங்க. எங்க விதிக்குக் கட்டுப்பட்டு இருக்கிறவங்க இருக்கலாம். போறவங்கள நாங்க தடுக்க மாட்டோம். மதுரா டிஸ்ட்ரிக்ட்ல இல்லைன்னாலும், கோயம்புத்தூர், திருநெல்வேலின்னு பக்கத்து டிஸ்ட்ரிக்ட் கூலிகள கூட்டிக்கிட்டு வருவோம். இனிமே உங்க முடிவு... நேரமாச்சு. எல்லாரும் அவங்கவங்களுக்குப் பிரிச்சுக் கொடுத்திருக்கிற வேலைக்குப் போகலாம்” சொல்லிவிட்டு, டெய்லர் கிளம்பினார். டெய்லரின் பின்னால் மெக்கன்சியும் லோகனும் சென்றார்கள்.
டெய்லரின் முடிவை எதிர்பார்த்திராத நமச்சிவாயமும் வேலையாள்களும் அதிர்ந்தார்கள். ரத்தினம் பிள்ளைக்கு மூச்சு சீரானது.
“போங்க போங்க...” பிள்ளை அதட்டினார்.
டெய்லரின் முடிவினால் தங்களின் வேலையும் குடிசையும் காப்பாற்றப்பட்டதாக நினைத்தவர்கள் வேலைத்தளத்திற்கு விரைந்தார்கள். டெய்லரின் முடிவை ஏற்பதா, மறுப்பதா என்ற குழப்பத்தில் இருந்தவர்கள் தயங்கி நின்றார்கள். சிலர் நமச்சிவாயத்தைச் சூழ்ந்து நின்றார்கள்.
“குளுரே தெரியாது, இங்க யார் யார் வர்றீங்க?” என்ற குரலைத் தொடர்ந்து நிமிர்ந்து பார்த்தார்கள். சாமி, கருங்காலி மரமொன்றின் கொப்பில் உட்கார்ந்து இரண்டு பக்கமும் கால்களைத் தொங்கவிட்டிருந்தான். அவன் தலைக்கு மேலிருந்த விரிந்த இரண்டு கிளைகளுக்கு இடையில் மரச்சட்டங்கள் அடித்து, சுற்றி சாக்குப் பை கட்டி, சிறு குடிலாக்கியிருந்தான்.
“சண்டையே வராது இங்க வந்துட்டா...” கால்களால் காற்றை எம்பித் தள்ளுவதுபோல் உற்சாகமாக ஆடிக்கொண்டிருந்தான் சாமி.
“கிறுக்குப்பயலே... விழுந்து கைகால் எலும்பு ஒடையப்போது, பத்திரம்” என்று கூட்டத்தில் இருந்து ஒரு பெண் குரல் கொடுத்தாள்.
“எனக்கு ஒடையாது...” சாமி சொல்ல,
“ஒடம்புல எலும்புதானே இருக்கு, ஒடையாம எங்க போவும்? அப்புறம் ஒன்ன எவ கட்டிக்குவா?”
“நீ கட்டிக்கிறீயா?” என்று சாமி கேட்டவுடன், அருகில் இருந்த அப்பெண்ணின் கணவன், கல்லெடுத்து மரத்தின் மீதெறிந்தான்.
“எல்லாம் வேலைக்குக் கெளம்பு...” என்று நமச்சிவாயம் கத்தியவுடன் கூட்டம் கலைந்தது.
பூஞ்சாறு அரசர் நாற்பத்திரண்டு காணிகளின் தானாவதிகளையும் மூப்பன்களையும் மன்னான்காணிக்கு வரச் சொல்லியிருக்கிறார் என்று உடையான் சேதி அனுப்பியவுடன், கைவேலைகளை அப்படியப்படியே விட்டுவிட்டு மலைச்சரிவுகளில் இறங்கினார்கள். உடையான் கூப்பிட்டாலே பறவைபோல் வேகமெடுப்பவர்கள், பூஞ்சாறு அரசர் வரச்சொல்லியிருக்கிறார் என்றவுடன் காற்றின் வேகமெடுத்தார்கள்.
உடையான் குடிசைக்குள்ளிருந்த கோயிமாக் கட்டிலின் முன் (கடவுளின் இருக்கை) காலையில் இருந்து தனியாக அமர்ந்திருந்தார். ஒருவரையும் உள்ளே வரவேண்டாமென்று சொன்னதில், உடையானின் உத்தரவைமீறி யாரும் உள்ளே செல்லவில்லை. குடிசைக்குள் எழும் உடையானின் மூச்சுக்காற்று கேட்கும் வகையில் சுவரோடு சுவராகக் குத்த வைத்து உட்கார்ந்திருந்தார்கள் காணிகள்.
கோயிமாக் கட்டிலின்முன் கஞ்சி வைப்பு நாளன்று மாலையில் நாற்பத்திரண்டு மன்னான்காணிகளின் தானாவதிகளும் மூப்பன்களும் ஒன்று கூடுவார்கள். முத்தியம்மை, சாஸ்தா உள்ளிட்ட ஒன்பது தேசத்தின் கடவுள்களின் கோயிமாக் கட்டிலின் முன்னாலும் வழிபடுவார் உடையான். தங்களை வாழ வைக்கும் வனராஜனான சாஸ்தாவுக்கு ஒரு தொட்டில், மதுரையில் இருந்து ஏதிலியாய்ச் சுற்றித் திரிந்த காலத்திலும் தங்களைக் கைவிடாமல் வழிகாட்டியாய் இருந்து, மூதாதை மண்ணின் அம்சமாய் இருக்கும் முத்தியம்மைக்கு ஒரு தொட்டில், இறந்துபோய் கடவுளாய் நின்று தங்களைக் காக்கும் மூதாதையர்களுக்கு ஒரு தொட்டில் என ஒவ்வொரு தொட்டிலின் முன்னாலும் மண்டியிட்டு உடையான் மனமுருக வேண்டுவார். எண்ணிச் சொல்லிவிட முடியாத தலைமுறைகளாய் சொந்த மண்ணைவிட்டு வெளியேறிய பூர்வகுடிகள் ஒவ்வொன்றின் மனத்திற்குள்ளும் இருக்கும் பிரிவின் துயரத்தைப் பாடி அழுவார். வார்த்தைகள் கூடி வரத் தத்தளிக்கும் நேரத்தில் கண்ணீரால் தெய்வங்களிடம் முறையிடுவார். கண்ணீரும் வற்றும் நேரத்தில் உடல் மண்ணோடு மண்ணாக அழுந்த, தெய்வங்களிடம் தன்னையே சரணாகதியாகத் தருவார். மூப்பனுக்கு மூப்பன், மூப்பனுக்கு மூப்பன் வளர்த்த துயரம் வளர்ந்து வளர்ந்து கஞ்சி வைப்பன்று கரைந்துருகுவார்கள். உடையானின் அன்றைய கண்ணீர் தலைமுறையின் கண்ணீர். பல்லாயிரம் கண்களின் சுடுநீர். நூறு நூறு இதயங்களின் துயரக் கனல். கூடி நிற்கும் ஊரே துயரத்தில் வெந்து தணியும். சூழ்ந்து நிற்கும் பாதங்கள் ஒவ்வொன்றும் அன்றுதான் தங்களின் குலதெய்வம் மீனாட்சியைத் தோளில் சுமந்துகொண்டு, போரும் தேசமும் தேவையில்லை என்று நாடோடியாய்க் கிளம்பிய பாண்டிய அரசனைப் பின்தொடரும் வலியில் மருகும். பாதங்கள் முன்பின்னாக வலியில் திருகி, நாடற்ற துயரில் தகிக்கும். கஞ்சி வைப்புப் பண்டிகை நாளில் உடையான் முழுப்பட்டினி கிடப்பார். பல நூறாண்டுகளின் துயரத்தைத் தெய்வத்திடம் இறக்கி வைத்து, வருகிற வருஷத்தில் காணிகளைப் பட்டினி போடாமல் செழிப்பாய் வைத்திருக்க வேண்டி, உடையான் மனமும் வயிறும் குழைந்து அன்றெல்லாம் பட்டினி கிடப்பார்.
பூஞ்சாறு அரசரின் சேதி வந்ததிலிருந்து உடையான் கோயிமாக் கட்டில்கள் இருக்கும் அறைக்குள் சென்றவர், பிரித்தறிய முடியாத துயரத்தில் ஆழ்ந்திருந்தார். அவ்வப்போது உள்ளிருந்து எழும் பெருமூச்சுகள், அழுகையை அடக்கும்போது எழும் கனமான தேம்பல்கள், சின்னச் சின்ன உறுமல்கள் என்று உள்ளிருக்கும் உடையானின் உணர்வுகளை வெளியில் சுவரின் மேல்பூச்சுப்போல் ஒன்றியிருந்த காணிகள் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
ஆறேழு மாதங்களாக மலையில் மக்களின் நடமாட்டம் அதிகமாகிவிட்டது. வெடிச்சத்தமும் மரங்களை வெட்டி வீழ்த்தும் சத்தங்களும் கேட்டுக்கொண்டிருக்கின்றன. வெள்ளைக்கார துரைகள் பேரியாற்றுக்குக் குறுக்கே தடுப்பு கட்டும் வேலையை ஆரம்பித்துவிட்டதால் காடு அமைதி குலைந்தது. பேரியாற்றைத் தடுத்து நிறுத்தினால் தேங்கப்போகும் நீரில் எத்தனை காணிகள் மூழ்குமோ, கண்ணகி கோவிலுக்குச் செல்லும் வழி முழுக்க நீரில் நின்றால் அம்மையை வழிபட ஒருவரும் செல்ல முடியாதே என்று காணிகள் அவர்களுக்குள் பேசிப் புழுங்கிக்கொண்டிருந்தார்கள். பூஞ்சாற்றுத் தம்புரான் வருகிற சேதி வந்ததில் இருந்து மன்னான்காணியின் காற்றும் சுழன்று சுற்றியது.
பூஞ்சாறு அரசரின் குதிரை வருவதற்கு முகமன் சொல்லுவதுபோல் தூரத்தில் தூசி மண்டலம் மேலெழும்பியது. முன்னும் பின்னும் விரைந்த குதிரைகளின் கனைப்பொலி கேட்டு மன்னான்கள் எழுந்து நின்றனர். காணிகளின் தானாவதிகள் ஒன்றுதிரண்டு காணியின் எல்லைக்குச் சென்றனர்.
உடையானிடம் வெளியில் நின்று மெல்லிய குரலில் அரசரின் வருகையைச் சொன்னான் குப்பான். சிறு அமைதிக்குப் பிறகு, கம்பூன்றியபடி உடையான் வெளியில் வந்தார். மன்னான் காணிகள் ஒன்றுதிரளும்போதும், கஞ்சி வைப்புப் பண்டிகையன்றும் உடையானுக்கென்று தனித்த அலங்காரம் உண்டு. பச்சைப் பட்டுத்துணியில், அலங்கரிக்கப்பட்ட தலைப்பாகை, கையில் செங்கோலுடன்தான் காட்சி தருவார். பூஞ்சாறு அரசர் வருகையில் மட்டும் உடையான், தான் காணிகளின் ராஜா என்றில்லாமல், வெற்றுடம்போடு இடுப்பில் துண்டு கட்டி, தெய்வத்தின்முன் நிற்பதுபோல் நிற்பார். பூஞ்சாறு அரசர்தான் தங்களுக்கான அரச பதவியைக் கொடுத்தவர் என்பதால் அவர்முன் ஒருபோதும் அரச தோற்றத்தைக் காட்டிக்கொள்வதில்லை. மூதாதையர்கள் பாண்டிய அரசனிடம் பணிந்து நின்ற வழக்கம் மாறாமல் இன்றுவரை தொடர்கிறது.
உடையான் இடுப்பில் துண்டணிந்து தெய்வங்களின் குடியிருப்பு அறையிலிருந்து வெளியில் வருவதற்கும், கோட வர்மாவின் குதிரை வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது. குழந்தை குட்டிகள், ஆண்கள் பெண்கள் எல்லாரும் அரசரின் காலில் விழுந்து வணங்கினார்கள். உடையான் மட்டும் தலை, முட்டியைத் தொடும் அளவுக்குப் பணிந்து வணங்கினார்.
உடையான் அமரும் கயிற்றுக் கட்டிலின்மேல் இலைதழைகள் பரப்பி, அதன்மேல் பட்டாடையை விரித்து வைத்திருந்தார்கள். கோட வர்மா கட்டிலின்மேல் உட்கார, உடையான் எதிரில் நின்றபடியிருந்தார்.
“உட்காரு உடையான்...”
“தம்புரான் முன்னாடி என்னைக்கு காணிங்க ஒக்காந்திருக்கோம்?”
“நீயும் ராஜாதானே, ஒக்காரு.”
“ராஜான்னு பட்டம் கட்டிக்கிறது நீங்க சாசனம் கொடுத்ததாலதானே தம்புரான்? அரசாள ராஜ்ஜியமா இருக்கு?”
உடையான் கேட்டவுடன் கோட வர்மாவுக்குப் பேரதிர்ச்சி.
“என்ன சொன்ன உடையான்?”

“தம்புரான்...?”
“என்ன சொன்ன?”
“நீங்க கொடுத்த சாசனம்தானேன்னு...”
“அதுக்கப்புறம்?”
‘தான் என்ன தவறாகச் சொன்னோம், தம்புரான் இப்படிப் பதறுகிறாரே?’ என்று உடையானுக்குள் அச்சம் பரவியது.
“கடைசியா? கடைசியா சொன்னியே?”
“அரசாள ராஜ்ஜியமா இருக்குன்னு கேட்டீங்களே உடையான்?” குப்பான் காணி எடுத்துக்கொடுத்தான்.
“இதே கேள்விதான், இதே கேள்விதான் என்னையும் திருவிதாங்கூர் சமஸ்தானம் கேக்குது. பூஞ்சாற்றுக்கு என்ன ராஜ்ஜியமா இருக்கு அரசாள? அவருக்கு அரசர் பட்டம் தேவையான்னு ஆராய்ந்து சொல்லச் சொல்லி, இருக்கிற பிரச்சினைகளையெல்லாம் விட்டுட்டு பிரிட்டிஷ் சர்க்காருக்குத் தபால் அனுப்பியிருக்காங்களாம்.”
கோட வர்மாவின் பதற்றமும் வேகமும் பார்த்துக் காணிகள் நிலைகுலைந்து நின்றிருந்தனர்.
“உடையான், உனக்குத் தெரியுமே சொல்லு... பூஞ்சாறு சமஸ்தானம் எத்தனை சண்டை போட்டிருக்கு? திப்பு சுல்தான் திருவிதாங்கூரை நெருங்க விடாமல் பூஞ்சாற்று எல்லையிலேயே விரட்டியது நம்முடைய சமஸ்தானம்தானே? பழனி, திண்டுக்கல்லுல இருந்து கம்பம், கூடலூர் வரையும் இந்த மேல்மலையுடைய பெரும்பகுதியும் நமக்குச் சொந்தமானதுதானே? என் மாமா, மாமனுக்கு மாமா எல்லாரும் உருவாக்கிய தர்பாரும் தர்பார் அரங்கமும் இன்னும் நடந்துகிட்டுதானே இருக்கு?”
“தம்புரான், பொதுவா பூஞ்சாறுடைய தம்புரான்கள் போருக்குப் போறதில்ல.”
சூழல் புரியாமல் உடையான் பதில் சொல்கிறாரோ என்று காணிகள் பதற, உடையான் நிதானமாகப் பதில் சொன்னார்.
“என் மாமனுக்கு மாமன் உடையானா இருந்தப்ப இருந்து நடந்ததெல்லாம் எனக்கு நெனவுல இருக்கு தம்புரான். பாண்டி நாட்டு அரியணை மொத்தம் ரத்தம். ரத்தக்கறை காயவே காயாத அளவுக்குப் பங்காளிகளுக்குள்ள சூழ்ச்சியும் பகையும். குலக்கொழுந்தை அழிக்கிற பகைமை தாங்காமத்தான் பாண்டியன் மானவர்மன் தேசத்தை விட்டுக் கிளம்பினார். உடலெங்கும் கமழ்ந்த ரத்தவாடையைத் தாங்க முடியாமத்தான் தேசாந்திரியாக அலைஞ்சார். மேல்மலையின் தூய காற்றும் பசுமையும் அமைதியும் பிடித்துப்போனதால்தான் அவர் இந்தச் சயாத்திரி மலையிலேயே தங்கிட்டார். அவர் கையால ஆயுதத்தைத் தொட மாட்டேன்னு உறுதியாத்தான் இருந்திருக்கார். மன்னான்களுக்குக் காணி பிரிச்சுக் கொடுக்கும்போது பாண்டி நாட்டு ராஜா சொன்னது, எதுக்காகவும் வாளெடுக்காதீங்க, இந்தப் பசுங்காட்டுல ரத்தவாடையே வரக்கூடாதுன்னு. இந்த மலையையே பூர்வீகமா கொண்ட குடிக எல்லாம் ரத்தப்பலி குடுத்துத்தான் அவங்களோட மூதாதைய கும்பிடுவாங்க. இன்னைக்கு வரைக்கும் மன்னான்ககிட்ட அந்த வழக்கமே கெடையாதே... என்ன காரணம்னு நெனைக்கிறீங்க? எங்க ராஜா சொன்னத மீறாமத்தான் இத்தனை தலைமுறையா நாங்க இருக்கோம் ராஜா. பாண்டிய ராஜா பூஞ்சாற்றுத் தம்புரானா மாறுன பொறவும் அவர் தேவையில்லாம ரத்தத்தைப் பாத்ததில்ல. இந்த நூறு வருசமாத்தான் சயாத்திரி மலை முழுக்க என்னென்னவோ நடக்குது. சண்டை போடலைன்னா என்ன தம்புரான்? நீங்க குடுத்த இடம்தான் இந்தக் குடிங்களுக்கு. நீங்க உருவாக்குனதுதான் கம்பம், கூடலூர் எல்லாம். ஆதரவு குடுத்து அணைச்சிக்கிட்டதுதான் பூஞ்சாறு சமஸ்தானம். உங்களக் கேட்ட ஆளச் சொல்லுங்க தம்புரான். நான் சொல்றேன், தம்புரானோட வம்சக் கதையை...”
உடையான் சொன்னதைக் கூர்ந்து கவனித்த கோட வர்மாவுக்குப் பதற்றம் குறைந்தது. தன் மாமாவைவிடக் கூடுதல் வயதுள்ள உடையானுக்கு அதிகம் தெரிந்திருப்பதில் வியப்பில்லை என்று எண்ணினார்.
“உடையான்... எனக்கொரு உபகாரம் செய்யணும்.”
“உபகாரமா? தம்புரான் உத்தரவு போடுங்க சாமி.”
“பூஞ்சாறு சமஸ்தானம்னா என்னன்னு திருவிதாங்கூருக்குக் காமிக்கணும்.”
உடையானும் காணிகளும் அதிர்ந்து கோட வர்மாவைப் பார்த்தார்கள்.
பெரியாறு அணை கட்டுமிடத்தில் வெடி வைக்கப்பட்ட பாறையொன்று வெடித்துச் சிதறும் சத்தம் கேட்டது.
- பாயும்