
தங்கச்சிலை சொல்லச் சொல்ல உறைந்தனர் மூவரும். சிறிதாகத் தொடங்கியிருந்த ஊற்று நீர் பெருகி, அவர்களின் கால்களை நனைத்தது.
மார்ச் இறுதியில் முடியவேண்டிய இந்த சீசன் வேலை, சீதோஷ்ண நிலை அனுகூலமாக இருந்ததில் ஏப்ரல் முதல் வாரம் வந்துவிட்ட நிலையிலும் தொடர்ந்தது. ஏப்ரல் மாதம் வந்துவிட்டாலே காட்டில் மலேரியா போன்ற கடுமையான ஜுரம் பரவும் என்ற அச்சம் இருந்தது. எண்பது ஆண்டுகளுக்குமுன் மதுரா டிஸ்ட்ரிக்ட்டின் கலெக்டர் பாரீஷ், மேல்மலையின் பேரியாறு பற்றிய ஆய்வுக்கு வந்தது ஏப்ரல் மாதம்தான். காட்டுக் காய்ச்சல் பீடித்ததில் அவர் அபூர்வமாய் உயிர் பிழைத்தார். மேல்மலை, வெளிமனிதர்களையே அதிகம் பார்த்திராத காலம் அது. மேல்மலையின் ரகசியங்களை அறிந்த மிருகங்களும் காடுவாழ் மனிதர்களும் மட்டுமே அப்போது இருந்தனர்.
பருவங்களுக்கேற்ப காடு மாறுவதை வெளிமனிதர்கள் உணர்ந்துகொள்ளப் பல பத்தாண்டுகள் ஆயின. காட்டின் நரம்புகளென மண் பிணைத்துக் கிடக்கும் செடி, கொடி, புல், பூண்டு, மரங்களின் வேர்கள் காட்டின் இயல்பைத் தீர்மானிக்கின்றன. காட்டின் ஓடைகளும் ஊற்றுகளும் நதிகளும் காட்டுத் தாவரங்களின் சாறு அருந்திச் சுவை பெறுபவை. தாவரங்களுக்குள் நல்லது கெட்டது என்ற குணப்பாகுபாடு இல்லையென்றாலும், அந்த தாவரங்கள் மனிதர்களுக்கு உண்டாக்கும் விளைவுகளால் நல்லதென்றும் கெட்டதென்றும் அறியப்படுகின்றன. உயிர்தோன்றிய பிரபஞ்சத்தின் ஆதிதான் வனம். அந்த வனத்திலிருந்து விலகி விலகிச் சென்ற மனித உயிர்கள், வனத்தின் கடுமையிலிருந்து மீண்டு மென்மையாகிவிடுகின்றன காலச்சுழற்சியில்.

சின்னஞ்சிறு தீவுகளின் தேசத்திலிருந்து மாபெரும் இந்தியத் தீபகற்பத்திற்குள் நுழைந்த இங்கிலாந்துக்காரர்களுக்கு, இத்தேசம் வியப்பும் சவாலும் தந்தது. நீண்டுயர்ந்த மலை, ஆழ்ந்த பள்ளத்தாக்கு, விதவிதமான தாவர வகைகள், சவால் நிரம்பிய மலைத்தொடர்கள் என்று இங்கிலீஷ்காரர்களின் ஆர்வத்தை இந்த நிலப்பரப்பு ஈர்த்தது. அயராது இந்தத் தேசம் முழுக்க மண்புழுவைப் போல் உழுது அறிந்தார்கள் அவர்கள். அப்படித்தான் மேல்மலையில் சூரிய ஒளி விழாத காடுகளிலும் தாவரங்களின் நுண்வேர்களைப்போல் படர்ந்தார்கள்.
பேரியாறு என்று நதியின் பெயர்கூட அறிந்துகொள்ளாத காலத்திலேயே, அடர்வனத்திற்குள் ஓடும் காட்டாறு ஒன்று இருப்பதை உள்ளூர் ஆள்களின் துணையுடன் கண்டடைந்தார்கள். ராமநாதபுரத்தின் பிரதானி முத்திருளப்ப பிள்ளை, கம்பம் பகுதியின் பிரிட்டிஷ் ஏஜென்டாக நியமிக்கப்பட்டபோது, அங்குள்ள மலைக்குடிகள் மூலம் பேரியாறு நதி பற்றிக் கேட்டறிந்திருக்கலாம். அவர்தான் முதன்முதலாக, பேரியாறு நதியின் அபரிமிதமான வெள்ளத்தைப் பற்றி பிரிட்டிஷ் சர்க்காருக்குத் தகவல் தருகிறார். நிறைமாத கர்ப்பிணியைப்போல் வயிறு தளும்பத் தளும்ப நீர் சுமந்து செல்லும் நதியொன்று இருக்கிறது என்பதைத் தவிர நதியின் பூர்வீகம் அறியாத பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி, நதி பற்றிய ஆய்வுடன் ஓடி ஓடி நாடும் பிடித்துக்கொண்டிருந்தது. தங்களின் பொக்கிஷங்களைக் காப்பதற்கறியாத இனம் எப்படியும் நாடிழக்கும் என்றுணர்ந்த கம்பெனி, நாடு பிடிக்கப் போர் நடத்திக்கொண்டிருக்கும் வேளையிலேயே நாடு தங்களின் அதிகாரத்தின்கீழ் வரும் என்ற நம்பிக்கையில் நிர்வாகத்திற்கான கட்டமைப்புகளை உருவாக்கியது.

மிலிட்டரி கமாண்டெண்டுகளுடன் வரிவசூல் செய்ய பேஷ்குஷ் கலெக்டர்களும் நியமிக்கப்படுகிறார்கள். கலெக்டர்களை வழிநடத்த கவர்னர், கவர்னரை வழிநடத்த போர்டு ஆஃப் ரெவென்யூ, மாவட்டப் பிரிவினை, மாவட்டங்களை அளத்தல் என இந்தத் தேசத்தின் ஒவ்வொரு துண்டு நிலமும் அவர்களின் கண்காணிப்பிற்குள் வந்துவிட்டது. போரில் துப்பாக்கிகள் ஏந்திய வீரர்களோடு, நிலங்களை அளக்கக் கயிறு பிடித்து நின்றார்கள் ஆய்வாளர்கள். பாதைகளைக் கண்டறிந்தார்கள் வர்த்தகர்கள். மக்களைப் புரிந்துகொள்ள விழாக்களையும் சடங்குகளையும் சாதி சமய ஒழுங்குகளையும் ஆராய்ந்தார்கள் அறிஞர்கள். கல்வியறிவைக் கொடுக்க இணைக்கப்படாத துண்டுச் சாலைகளுக்குள் ஊடுருவினார்கள் பாதிரிகள். மருத்துவம் செய்யக் கப்பல்களில் கிளம்பி வந்தார்கள் கன்னியாஸ்திரீகள். எல்லாம் செய்தாலும் தேவனின் பூரண கிருபை பெற்றால்தான் நற்கதி கிடைக்குமென்று, தேவனின் சமூகத்திற்குள் சங்கமமாகச் சொல்லி வீடு வீடாகச் சென்றார்கள் ஏசுசபை பாதிரிகள். மொழியறிந்தால்தான் மக்களிடம் பேச முடியும் என உள்ளூர் மொழி கற்றார்கள் அதிகாரிகள். கோடானு கோடி மக்களிருக்கும் தேசத்தை, சில ஆயிரம் பேர் திட்டமிட்டு, திமிறவே முடியாதபடி ராட்சசக் கால்களால் நிதானமாக ஆக்கிரமித்தார்கள். ஆக்கிரமித்த இடத்தின் வர்த்தகத்தை நிலைப்படுத்தி ஊர்ஜிதப்படுத்த, அசுரர்களைப்போல் இரவு பகல் பாராது அலைந்தார்கள்.
மதுரா டிஸ்ட்ரிக்ட்டின் நிலையில்லா மழைப்பொழிவினால் ரயத்துகளின் விளைச்சல் குறைவதும், அதனை முன்னிட்டு நிலவருவாய் குறைவதுமாக இருந்ததில் மாவட்டத்திற்கான வருவாய் குறைந்தது. வருவாயைப் பெருக்க விளைச்சலைப் பெருக்க வேண்டும். விளைச்சலைப் பெருக்க நீர் வேண்டும். நீருக்குப் போதுமான மழையில்லா நிலையில், மேல்மலையில் பாயும் அபரிமிதமான நீரோட்டம் கொண்ட பேரியாற்றினைத் திசை திருப்பிக் கொண்டுவருவது என்ற கணக்கில் தொடங்கப்பட்டதுதான் பெரியாறு புராஜெக்ட். எண்பது வருஷங்களுக்குமுன் பேரியாற்று நீரை வைகைக்குக் கொண்டு வர ஆய்வு நடத்தலாம் என்று தொடர்ந்து ராமநாதபுரம் ராணிக்கு கம்பெனியின் அதிகாரிகளால் எழுதப்பட்ட கடிதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் மதுரையின் டிஸ்ட்ரிக்ட் இன்ஜினீயர் ஜேம்ஸ் கால்டுவெல். ‘இது யதார்த்தத்தில் சாத்தியமில்லாத திட்டம்’ என்று கோப்பை மூட வைத்துவிட்டார்.
ஆனாலும் மேற்கு மலையின்மேல் தீரா ஆர்வம் கொண்டிருந்தார்கள் பிரிட்டிஷ் அதிகாரிகள். மெட்ராஸ் பிரசிடென்சி என்ற நிர்வாகப் பரப்பைக் கட்டியெழுப்பிய சில வருடங்களுக்குள்ளேயே அண்டை தேசமான திருவிதாங்கூருடன் எல்லைப் பிரச்சினை. தேசங்களின் நில எல்லைகள் தீர்க்கப்படுவதைவிட, மேற்கு மலைக்குள் இருதேசங்களின் எல்லையைக் கண்டறிய சர்வே அதிகாரிகளை நியமித்தார்கள்.
மேல்மலைக்குள் செல்வதொன்றும் சகாயமான காரியமல்ல. சாதாரணர்கள் எவரும் உள்நுழைந்துவிட முடியாத சாகசம் வேண்டியிருந்தது. மரணம், தாகத்திற்கான குடிதண்ணீர்போல் மூங்கில் குருத்துகளில் தயாராக இருந்தது. பருகி உயிர் துறக்கும் நினைவழியும் தூண்டுதலைக் கணந்தோறும் தந்துகொண்டிருந்தது. மரணத்திற்கு அஞ்சாமல், உடல் மனச்சோர்வில்லாமல் அலைந்து திரிவதற்கான தயார் நிலையை விவரிக்கவே முடியாது. மேல்மலைக்குள் நுழைந்த ஒவ்வொருவருடையதும் சாகசப் பயணங்கள்தான். விருப்பமும் ஈடுபாடுமாய்ச் சென்ற பிரிட்டிஷ் அதிகாரிகள் தீரம் நிரம்பியவர்கள்.
மேல்மலையின் ரகசியம் கண்டறியச் சென்றவர்கள் தேவதூதனைச் சந்திக்கச் செல்லும் தேடலுடன் சென்றார்கள். சிதறா நோக்கமும் உடல்வலுவும் ஒருங்கே பெற்றிருந்தார்கள். அதிலொருவர் பி.எஸ். வார்ட். மெட்ராஸ் பிரசிடென்சியின் அசிஸ்டென்ட் சர்வேயராகப் பணியாற்றியவர். சாப்பிட ரொட்டியும் குடிக்கச் சாராயமும் செலவுக்குச் சில சுழி சக்கரங்களும் கொடுத்தால், கால்கள் சோராமல் மூட்டை முடிச்சுகளைத் தூக்கிக்கொண்டு பின்தொடரும் கம்பம், கூடலூர் பகுதியின் ஆள்களைக் கூலிகளாக நியமித்துக்கொண்டு, மேல்மலையின் குன்றுகளையும் பள்ளத்தாக்குகளையும் ஏறி இறங்கினார். திருவிதாங்கூருக்கும் மெட்ராஸ் பிரசிடென்சிக்கும் எல்லை வகுப்பதோடு, மேல்மலையை ஆய்வு செய்யவும் பணிக்கப்பட்டிருந்தார் பி.எஸ். வார்ட்.
1815ஆம் வருஷம், உணவுப்பொருள்கள், குடில்கள் அமைக்க கித்தான்கள், நீர்க்குடுவைகள், வழியில் நீரோட்டங்களைக் கடக்க மூங்கில் தெப்பங்கள் கட்டுவதற்கான கூலிகள், காளைகளையும் குதிரைகளையும் நீர்நிலைகளில் நீந்த வைத்து அக்கரையில் கொண்டு வந்துவிடக்கூடிய தீரர்கள், காட்டில் தொலைந்து போகாமல் இருக்கவும், கடந்து சென்ற பாதையையும் கடக்க வேண்டிய பாதையையும் சரியாகச் சொல்வதற்கும் மலைக்காணிகள் என ஐம்பது அறுபது ஆள்களோடு சென்றார். காடு தனக்குள் நுழையும் எல்லோரையும் ஒரே மாதிரியாகத்தான் நடத்தும். ஈரத்தில் ஊறிய மேலாடைகள், அட்டைகள் கடிப்பதனால் நிற்காமல் வழியும் ரத்தப்பெருக்கு, மலையேறி இறங்கி வீங்கிய கால்கள் என்று வேதனை பெருக்கும். கால்களில் குத்திய முட்களோடு பாதையற்ற புதர்கள் மண்டிய இடங்களில் எலிகளைப்போல் ஊர்ந்தும் தவழ்ந்தும் செல்ல வேண்டும். காட்டின் வழிகளை வர்த்தகர்களால் மட்டுமே திறக்க முடியும். பிரிட்டிஷ் அதிகாரிகள் கைதேர்ந்த வர்த்தகர்கள் என்பதால் எளிதில் நுழைந்து சென்றார்கள்.
திடீர் மழை, நடுக்காட்டில் தங்குமிடத்தைச் சென்றடையும்முன் பனி இறங்கி பாதை மறைந்துபோனால் நடுக்காட்டில் இருக்குமிடத்திலேயே இருந்துகொள்ள வேண்டிய கட்டாயம், மிதமான காலநிலை என்று கிளம்பி நடப்பதற்குள் பெருமழை பொழியும் காடு, கடவுளின் குணமென்பதா, மனம் பிறழ்ந்த மனிதனின் குணமென்பதா, அல்லது இரண்டும் ஒன்றின் குணம்தானே என்பதா? காடு அப்படியொரு மூர்க்கத்தின் உச்சத்தில் இருக்கும். காலநிலையைப் போலவே திடீர் திடீரென்று கண்முன் வந்து நின்று அச்சுறுத்தும் காட்டு மிருகங்கள். குழுவில் செல்பவர்களில் ஒருவருக்கொருவர் அறிமுகமிருந்தால்தான், உடன் வந்துகொண்டிருக்கிறாரா என்று சொல்வதற்காவது வேறொருவர் இருப்பார். பின்னால் நடக்கையில் யானையோ, புலியோ, சிறுத்தையோ அடித்து இழுத்துச் சென்றாலோ காணாமல்போனதும் தெரியாமல்போகும். காட்டின் சீதோஷ்ணத்திலிருந்தும், மிருகங்களிடமிருந்தும் விஷச் செடிகளில் இருந்தும் தப்பிப் பிழைத்த ஆய்வுகளால்தான் ஏலமலை என்னும் திருவிதாங்கூர் மெட்ராஸ் பிரசிடென்சிக்குச் சொந்தமான மேல்மலை அளக்கப்பட்டு எல்லை குறிக்கப்பட்டது. இரு தேசங்களின் எல்லையையும் எவ்வளவு துல்லியமாகப் பிரித்து பிரிட்டிஷார் காணிக் கல் நாட்டினார்கள் என்பதற்கு ஒரு நுட்பமான சான்று சொல்லலாம்... காணிக் கல்லுக்கு வலப்புறம் பெய்யும் மழைநீர் திருவிதாங்கூருக்குள் புரண்டோடும். இடப்புறம் பெய்யும் மழைநீர் மெட்ராஸ் பிரசிடென்சிக்குள் ஓடிவரும்.

பி.எஸ். வார்ட் போல் பல ஆய்வாளர்களும் இன்ஜினீயர்களும் உயிரை மதியாமல் ஆய்ந்ததில் பிறந்ததுதான் பெரியாறு புராஜெக்ட். வெளியேறும் தண்ணீரின் அளவை ஆய்ந்து, நதியின் போக்கறிந்து, நதிப்படுகையில் உள்ள பாறையின் தன்மையை ஆய்ந்து, அணை நீரை எங்கு தேக்கினால் அதிக நீரெடுக்க முடியுமென்று ஆய்ந்து, பல்லாண்டு காலக் கண்டறிதலில்தான் பேரியாற்றின் குறுக்கே இப்போது அணை கட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது. தன்மீது நடத்தப்பட்ட பல்லாண்டு காலப் பரிசோதனைகளைச் சொல்வதற்குப் பேரியாறு மட்டுமே சாட்சி. அல்லது மேல்மலை சாட்சி. பரிசோதித்தவர்களின் பெயர்கள்கூட நினைவுகூர முடியாத காலத்தின் முன்னிருந்து தொடங்கப்பட்ட காரியமல்லவா?
டெய்லர், வலக்கரையின் குன்றின் மேலிருந்த கூடாரத்திலிருந்து நதியின் குறுக்கில் நின்றபடி வேலை செய்துகொண்டிருக்கும் வேலையாள்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். கூடவே மேல்மலை பற்றிய சிந்தனைகளிலும் ஆழ்ந்திருந்தார்.
பத்து நாள்களாக இடைவிடாமல் வேலை நடக்கிறது. நதியோரமிருந்த மணலைப் பெரிய சாக்குப் பைகளில் அள்ளிப் போட்டுக் கட்டி, நதியின் குறுக்கே வீசி எறிந்தார்கள். முதலில் வீசப்பட்ட மூட்டைகளைப் பேரியாறு பொருட்படுத்தாமல் தன்மேல் விழுந்த சருகொன்றைப்போல் உடனழைத்துச் சென்றது. மூட்டைகள் அடுத்து, அடுத்து என நூற்றுக்கணக்கில் விழுந்தபோது, ‘இதென்ன?’ என்று முகம் சுளித்து விலகிச் சென்றது. விலகிச் சென்றாலும் விடுவதற்கில்லை என்ற உறுதியுடன் வேலையாள்கள் சின்ன இடைவெளியின்றி மணல் அள்ளிக் கொட்டிக்கொண்டிருந்தார்கள். எல்லாரும் மூட்டையில் அள்ளிக்கொட்டும்போது சாமி என்ற பனையேறி, முன்பக்கம் முறமளவிற்கு நீண்ட பலகையொன்றை மரச்சட்டத்தில் கோத்து வைத்திருந்தவன், நதியின் கரையிலிருந்த மணலை உத்வேகத்துடன் தள்ளினான். ஒரு மூட்டையில் இரண்டு பேர் மணல் அள்ளிப் போட்டு நிரப்பி, ஒருவர் கட்டி, இருவர் தூக்கிவந்து போடுவதற்குள், சாமி ஓராளாக ஒரு மூட்டையளவு மணலை நதியின் குறுக்கில் தள்ளிவிட்டிருந்தான். மனத்தின் குழப்பமின்மை அவனுக்குள் வேகத்தை அதிகரித்திருந்தது.
ஒட்டர்களின் கங்காணி, நதிப்படுகையில் பாறைகளை உடைத்துக்கொண்டிருந்தவர்களை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். பேயத்தேவன், தன் வயதையொத்த காத்தவராயனின் அருகில் நின்றான். காத்தவராயன் உடைந்த பாறைகளைத் தூக்கிப்போடுவதில் துடிப்பானவன். இரண்டாள் வேலையை ஒருவனாகச் செய்வான். நீர்வழி மறிபட, ஆள்களை வைத்து வேகமாக அங்கிருக்கும் பாறைகளை உடைத்தெடுப்பான்.
காத்தவராயனின் அம்மா, அப்பா, அண்ணன்கள் மூவர், திருமணமான இரண்டு அண்ணன்களின் குடும்பம், தம்பி, தங்கைகள் இருவர் எனச் சுமார் இருபது பேர் அணை வேலைக்கு வந்திருந்தனர். அவன் அப்பாவுக்கு வயது மூப்பு இருந்தாலும் அவர் செய்யும் வேலையை மூன்று இளவட்டப் பயல்களாலும் செய்ய முடியாது. உடைத்தெடுக்க வேண்டிய பாறையைக் கூர்ந்து நோக்குவார். பிறகு பாறையின்மேல் அமர்ந்து கைகளால் பாறை முழுவதும் துழாவுவார். தவறவிட்ட, கண்ணுக்குத் தெரியாத பொருளைக் கைகளால் துழாவியெடுப்பது போலிருக்கும் அவரின் துழாவல். துழாவலுக்குப் பார்வை தேவையில்லை என்பதுபோல் அந்நேரம் விழி மூடியிருப்பார். உற்றுநோக்கினால்தான் தெரியும், விழியிரண்டும் அவரின் ஈரைந்து விரல்களாக இருப்பது. இரண்டு மூன்று முறை துழாவிப் பார்த்துவிட்டு, எழுந்து நின்று தீர்மானித்த இடத்தில் உளியை வைத்து மெதுவாகத் தட்டுவார். பெரும்பாலும் காடு மேடு மலைகளில் கல்லுடைத்துப் பழக்கமென்பதால் அங்குள்ள உயிரிகளுக்குத் தொந்தரவு தரக்கூடாது என்ற அவரின் எண்ணம், அவர் உளியைக் கையாளுவதிலேயே தெரியும். பாறை, ஒரு ரொட்டித் துண்டம்போல் அவர்முன் கனிந்து நிற்கும். உளியின் தலையில் பெரிய சுத்தியலால் தட்டிக்கொண்டே பாறையின் நரம்பை வெட்டுவதுபோல் குறுக்கும் நெடுக்குமாக அவரின் உளி சுற்றி வரும். உளியால் கீறிவிட்டு அவர் சென்றுவிடுவார். பிள்ளை பிறப்புக்கு மருந்து கொடுத்துவிட்டுச் செல்லும் மூத்த மருத்துவச்சி போலிருக்கும் அவரின் தோரணை. பண்டுவம் செய்யும் தாதிகள் குழந்தையை வெளியில் எடுக்க வேண்டியதுதான் பாக்கியென்ற முகக்குறிப்பும் சேர்ந்தே தெரியும். அவர் கீறிவிட்டுச் சென்ற இடத்தில் கோடரியால் பாறையைச் சுற்றி நின்று ஓங்கியடித்தால் கால் நாழிகை நேரத்தில் பாறை துண்டு துண்டாகி நிற்கும்.
இவ்வாறு ஐந்தாறு அடி உயரம் ஓடிய தண்ணீரை அசுர வேகத்தில் நிறுத்தி, பாறைகளை உடைத்தெடுத்து நதிப்படுகையின் மட்டத்திற்கு மேற்பாறைகளை எடுத்துக்கொண்டிருந்தார்கள். இன்னும் இரண்டடி உயரத்திற்குப் பூப்பாறைகளை எடுத்து முடித்தால், அணை அமைய வேண்டிய நதிமட்டத்தின் உறுதியான பாறைக்கண்டம் வரும். இன்னும் இரண்டொரு நாளில் பூப்பாறைகள் முழுவதையும் உடைத்தெடுத்துவிட்டால், அடுத்த சீசனுக்கு வந்தவுடன், இடைப்பட்ட மாதங்களில் வந்து சேர்ந்த படிவுகளை அகற்றிவிட்டு, அணை அமையவுள்ள இடத்திலிருந்து பத்தடி தூரத்தில் முப்பதடி உயரத்திற்கு ஒரு தடுப்புச் சுவர் கட்டும் வேலையைத் தொடங்கிவிடலாம் என்பதுதான் டெய்லரின் திட்டம். இங்கிலாந்தில் இருக்கும் பென்னிக்குக் கடிதம் எழுதியதில், அவரும் ஒப்புதல் அளித்துக் கடிதம் அனுப்பியிருந்தார். சீப் செக்ரட்டரி, சீசன் நாள்களை அதிகரித்ததற்கு ஒப்புதல் அளித்து இன்னும் பதில் அனுப்பவில்லை. இந்தச் சீசன் பிரச்சினையின்றி முடிந்தால் ‘சரி’ என்று பதில் அனுப்பலாம், ஏதாவது பிரச்சினையானால் அவர் உத்தரவை மீறியதால் நடந்த சிக்கலென்று கோபப்பட்டு, விளக்கம் கேட்டு எழுதலாம் என்று காத்திருக்கிறாரோ என்னவோ!
பள்ளத்திற்குள் வேலை செய்துகொண்டிருந்த ஆள்களைக் கரையில் நின்றிருந்த இரண்டு நாய்கள் கீழ்குனிந்து பார்த்துக்கொண்டிருந்தன. உடைத்த பாறைகளை மேலேற்றி, நதிக்கரையோரம் கொட்டச் செல்லும் ஆள்களின் கால்களுக்குள் சிக்கி மிதிபட்டு வாள் வாளென்று கத்தின.
அங்கு வந்த மெக்கன்சி, நாய்களைப் பார்த்தவுடன் கோபப்பட்டார்.
“யாருமே பிராணிகளைக் கூட வச்சுக்கக் கூடாதுன்னு சொல்லியும், இந்த நாய்கள விரட்டாம எதுக்கு இன்னும் வச்சிருக்கீங்க?”
மெக்கன்சியின் குரல் கேட்டவுடன் வேலையை நிறுத்திவிட்டு எல்லாரும் அவரைப் பார்த்தனர்.
காத்தவராயனின் நாய்கள் அவை. ஊர் ஊராகக் கல்லுடைக்கச் செல்லும் அவன் குடும்பத்தின் உறுப்பினர்களில் இரண்டு நாய்களும் ஒரு கீரிப்பிள்ளையும் அடக்கம். மேல்மலைக்கு வேலைக்கு வந்த காத்தவராயனின் குடும்பத்துடன் இருந்த நாய்களைப் பார்த்து டெய்லர் கோபித்தார். பிராணிகளின் மாமிச வாசனைக்கு நரியும் ஓநாயும் வருமென்பதால் உடனடியாக நாய்களை வெளியேற்றச் சொன்னார். காட்டுக்குள் விரட்டிவிட்டால் ஓடிவிடுமென்று யோசனையும் சொன்னார்கள் உடனிருந்த கூலிகள். காத்தவராயனின் அப்பா தங்கச்சிலை, டெய்லரிடம் மன்றாடிக் கேட்டார்; ‘குட்டியா இருந்ததுல இருந்து காலச்சுத்திக்கிட்டு கெடக்குதுங்க தொர. அது ரெண்டுக்கும், மொத கவளம், அது கூழோ கஞ்சியோ சோறோ வச்சிட்டுத்தான் சாப்புடுறது, அதுகளால எந்தத் தொந்தரவும் வராம பாத்துக்கிறேன் தொர’ என்று சொல்லிய பிறகும் டெய்லர் லோகனிடம் சொல்லி, நாய்களைக் காட்டுக்குள் விரட்டச் சொன்னார்.
லோகன் நாய்களைக் காட்டுக்குள் விரட்ட, தங்கச்சிலை நாய்களைப் பின்தொடர்ந்து சென்றார். நாய்களின் பின்னால் போனவர் விடிந்தும் வராததில் குடும்பத்தினர் அழுது ஆர்ப்பாட்டம் செய்தார்கள். கங்காணி ஒருவனைக் காட்டுக்குள் அனுப்பி, பார்த்து வரச் சொன்னார் டெய்லர். போனவன் ஒரு மணி நேரத்திற்குள் திரும்பி வந்தான். ‘`தங்கச்செல ரெண்டு நாய்ங்களையும் பிடிச்சு வச்சிக்கிட்டு ஒரு பாறைப் பொடவுக்குள்ள ஒக்காந்திருக்காரு. கூப்ட்டா வரலை. அவரோட ரெண்டு நாயும் வராத எடத்துக்கு தானும் வர முடியாதுன்னு சொல்லுறார்’’ என்றான்.
தங்கச்சிலையின் வேலைத்திறனைப் பற்றி டெய்லரிடம் கங்காணிகள் சொல்லியிருந்தார்கள். வேறுவழியில்லாமல் நாய்களோடு தங்கச்சிலை வருவதற்கு அனுமதி கொடுத்தார் டெய்லர்.
மழை வருவதற்குமுன் நாய்கள் எச்சரிக்கை செய்யும். வெள்ளம் புரண்டோடும்போதோ, வித்தியாசமான நிகழ்வுகள் நடக்கும்முன்போ இரு நாய்களுமே குரைத்து எச்சரிக்கை தரும். ஆள்களுக்குச் சமமாக ஓடித் திரியும். ஆனாலும் உள்ளுக்குள் நாய்களால் பெரும் பிரச்சினை ஒன்று காத்திருப்பதாக அவருக்குள் தோன்றும் எண்ணத்தைக் கட்டுப்படுத்த முடிந்ததில்லை.
தங்கச்சிலை எங்கு வேலை செய்தாலும் தன்னிரு அபிமான பிராணிகளின்மீது கண்ணாக இருப்பார். அவை காட்டும் சமிக்ஞைகளைத் தங்கச்சிலையால் உணர்ந்துகொள்ள முடியும். இன்று பாறை உடைபடும் இடத்தை விட்டு நாய்கள் அகலாததில் தங்கச்சிலையும் உன்னிப்பாகச் சூழலைக் கவனித்தார்.
உச்சியில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த டெய்லர், வேலையிடத்தில் ஏதோ ஒரு பரபரப்பு எழுந்ததைப் பார்த்தார். கூலிகள் பயந்து ஒதுங்கி நிற்பது தெரிந்தது. பயத்தைப் பொருட்படுத்தாமல் சிலர் குனிந்து படுகையில் பார்ப்பதையும் பார்த்தார். சட்டென்று அருகில் வைத்திருந்த புனலையெடுத்து, சத்தமாக, “மெக், அங்கு என்ன நடக்குது? எதுவும் பிரச்சினையா?” என்றார்.
நதிப்படுகையில் இருந்த மெக்கன்சிக்கு, டெய்லர் கேட்பது காதில் விழுந்தாலும் உடனே பதில் சொல்ல முடியவில்லை. நாய்கள் இரண்டும் வான்நோக்கிக் குரைத்தன. பாறைகளை அகற்றிய மலையின் பக்கவாட்டில் நீர் பீறிட்டது. பாறையை உடைத்துக்கொண்டிருந்த ஆள், தன் முகத்தில் வேகமாக விழுந்த நீர்க்கற்றையின் வேகம் தாங்காமல் தடுமாறினார். பள்ளத்தின்மேல் நின்ற நாய்களிரண்டும் உள்ளே பார்த்துக் குரைத்துக்கொண்டே அங்குமிங்கும் ஓடின. உள்ளிருந்தவர்கள் பதறியடித்து, தொங்கிக்கொண்டிருந்த நூலேணி பிடித்து மேலேறி வந்தார்கள்.
அதற்குள் மெக்கன்சி புனலை எடுத்து, டெய்லரைக் கீழே வரச்சொல்லி அழைத்தார்.
திகிலுடன் ஒவ்வொருவரும் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, நதிப்படுகையின்மீது நீர்பெருகி வழிந்தோடியது. திடீரென்று கண் திறந்துகொண்ட பாறையை என்ன செய்வது? அதுவும் சுவரின் பக்கவாட்டில் எப்படித் தடுப்பு அமைப்பது? எதிர்பாராமல் கிளம்பிய ஊற்றைப் பார்த்துப் பல கேள்விகளோடு மெக்கன்சியும் லோகனும் திகைத்து நின்றார்கள்.
காற்றின் வேகத்தில் அங்கு வந்தார் டெய்லர். கூட்டத்தை விலக்கி, உள்ளே நுழைந்தவர் பீறிட்ட ஊற்றைப் பார்த்துத் திகைத்தார். ‘இதெப்படி?’ என்று யோசித்தார்.
“மெக், இதென்ன திடீர் ஊற்று?”
“இனிதான் பார்க்கணும் டெய்லர். பாறைகள வெட்டியெடுத்தோம் இல்ல, ஏதாவது இடுக்குல இருந்து கசியற ஊற்றா இருக்கும்...”
“நகரு, இறங்கிப் பார்க்கலாம்” என்ற டெய்லர் எல்லாரையும் விலக்கி, நூலேணி பிடித்து வேகமாக உள்ளிறங்கினார்.
நாய்களிரண்டும் உள்ளே பார்த்துக் குரைத்தன. மெக்கன்சிக்குக் கோபம் வந்தது.
“தங்கச்செல…” கூச்சலிட்டார்.
“தொர…” தங்கச்சிலை முன்னால் வந்தார்.
“வெரட்டு தூர…”
“இதோ தொர…” என்றவர் மகன் காத்தவராயனிடம் சைகை காட்டினார். காத்தவராயன் நாய்களிரண்டின் கழுத்துப் பட்டையைப் பிடித்திழுத்துக் கொண்டு பின்னால் நகர்ந்தான். வாயைக் கட்ட வழியில்லையே? ஓயாமல் எழுந்த அவற்றின் குரல், ஏதோ ஓர் அசாதாரணத்திற்கு முன்னோட்டம் சொல்லின.
கீழிறங்கிய டெய்லர், ஊற்று வந்த பாறையை உற்றுப் பார்த்தார். பெரிய ஊற்றாகத் தெரியவில்லை. இன்னும் சிறிது நேரத்திற்குள் வடிந்துவிடும் என்று தோன்றியது. கீழிருந்து டெய்லர் கையசைத்தார். மெக்கன்சி என்ன என்பது போல் பார்க்க, நான்கைந்து ஆள்களைக் கீழ் அனுப்பச் சொன்னார்.
மெக்கன்சி, தங்கச்சிலையை முதலில் இறங்கச் சொன்னார். அவருக்குப் பின்னால் நான்கைந்து ஆள்களை இறக்கிவிட்டு அவரும் இறங்கினார்.
“சின்ன ஊற்றுன்னுதான் நெனைக்கிறேன். தண்ணிய ஓரமா வெட்டி விடுங்க. தண்ணி நிக்கலைன்னா அடுத்து என்ன செய்யலாம்னு பார்க்கலாம்…” டெய்லர் சொன்னவுடன் ஆள்கள் கையில் மண்வெட்டியுடன் நீரை ஒழுங்கு செய்தார்கள். சின்னக் கோடிழுத்து நதிக்கரையோரத்திற்கு வெட்டிவிட்டார்கள். சிறு வெள்ளத்தை வெட்டிவிட்ட ஒருவன் மேட்டிலிருந்து பள்ளத்தில் கால் வைத்ததுபோல் சட்டென்று தடுமாறினான். விழப்போனவனைத் தங்கச்சிலை பிடித்தார். பிடித்தவர் அவ்விடத்தில் பாறை உள்ளிறங்கியிருப்பதைப் பார்த்தார்.
நீரோடிய பாறையின் மேலே தடவிப் பார்த்து விட்டு, தங்கச்சிலை அருகில் நின்றவனிடம் அவன் வைத்திருந்த உளியைக் கேட்டார்.
உளியினால் அவர் உட்கார்ந்திருந்த பாறையைத் தட்டினார். ஒரு கையால் தட்டிவிட்டு இன்னொரு கையைப் பாறையின்மீது வைத்திருந்தார். நான்கைந்து முறை உளியால் அடித்துப் பார்த்தவர் ஒன்றும் புரிபடாமல், மார்பழுந்த பாறையின்மீது படுத்தபடி, இன்னொருவனைக் கூப்பிட்டு உளியால் தட்டச் சொன்னார். அவன் பாறையின்மீது லேசாகத் தட்டத் தட்ட தங்கச்சிலை நகர்ந்துகொண்டே இருந்தார். தட்டுவதும் நகர்வதுமாய் இருந்ததைக் குழப்பமாகப் பார்த்துக்கொண்டே இருந்தார்கள் இன்ஜினீயர்கள்.
பத்தடி, இருபதடி, முப்பதடி என நகர்ந்து, இலக்கின்றிச் செல்லும் அம்பினையொத்த ஒழுங்கற்ற பாதை ஏறக்குறைய இருநூறு அடியளவில் செல்ல, ஓரிடத்தில் தங்கச்சிலை, உளியால் தட்டியவனைப் பார்த்துக் கையுயர்த்தினார். அவன் சட்டென்று நிறுத்தினான்.
இருவரையும் பின்தொடர்ந்திருந்த இன்ஜினீயர்களும் நின்றார்கள்.
தங்கச்சிலை எழுந்து, கொஞ்சமும் நெகிழ்ச்சியடையாமல் இருந்த தன் வேட்டியை மேலும் இழுத்துக் கட்டிக்கொண்டு டெய்லரின் அருகில் வந்தார்.
“தொர, இதுவரைக்கும் உள்வாங்கியிருக்கு.”
“என்ன?” என்றார் டெய்லர்.
“அங்கன இருந்து இங்கன வரைக்கும் பாறை உள்வாங்கியிருக்கு.”
“பள்ளமா?” மூவரும் அதிர்ந்தார்கள்.
“ஆமாம் தொர. எப்டியும் பத்துப் பதினைஞ்சு கெஜத்துக்குப் பாறையில பள்ளம் இருக்கு.”
மூவரும் வாயடைத்துப்போனார்கள். உறுதியான சமதளத்திலான பாறையும் குறுகலான ஆறும் இருக்கிற இடமென்பதால்தான் இங்கு அணை கட்ட பென்னி முடிவு செய்திருந்தார். அணை அமையவுள்ள இடத்தில் பள்ளமென்று தங்கச்சிலை சொன்னவுடன் நம்பாமல் திகைத்தனர்.
“எப்டி அவ்ளோ உறுதியாச் சொல்ற?” மெக்கன்சி கேட்டார்.
“தொர, மண்ணுக்குள்ள கெடக்கறத கண்ணால பாக்காமச் சொல்லுறேன்னு நெனைக்காதீங்க. பாறைங்க கொடி கொடியா வேர்பிடிச்சுப் போற மட்டத்த என்னால சொல்லிட முடியும்.”
தங்கச்சிலை சொல்லச் சொல்ல உறைந்தனர் மூவரும். சிறிதாகத் தொடங்கியிருந்த ஊற்று நீர் பெருகி, அவர்களின் கால்களை நனைத்தது.
- பாயும்