மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீரதிகாரம் - 69 - பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சித் தொடர்...

நீரதிகாரம்
பிரீமியம் ஸ்டோரி
News
நீரதிகாரம்

அணை கட்டுமிடத்தை மாற்றுவது இயலாத காரியம். பள்ளத்தைச் சமப்படுத்தி மீண்டும் வேலையைத் தொடங்க, இந்தச் சீசனில் முடியாது. என்ன செய்ய வேண்டுமென்று முடிவெடுக்க ஜான் பென்னி குக் வர வேண்டும்.

டெய்லர் சுருட்டுப் பிடித்துக்கொண்டிருந்தார். கொஞ்சம் தள்ளி உட்கார்ந்திருந்த மொக்கைமாயத் தேவனின்மேல் நேர்க்கோடுபோல் டெய்லரின் நிழல் விழுந்தது. பின்னிருந்து விழுந்த காலைநேரப் பிஞ்சுவெயிலின் மஞ்சள் ஒளியில் டெய்லரின் அடர்ந்து, கழுத்துவரை இறங்கியிருந்த பொன்னிறத் தலைமுடி, மேலும் ஒளிர்ந்தது. அவரின் உதட்டில் கனன்ற சுருட்டின் நுனிக் கங்கையே பார்த்துக்கொண்டிருந்தார் மொக்கைமாயன்.

இருவருக்கும் அடுத்திருந்த சிறிய பாறையில் தங்கச்சிலை குத்தவைத்து உட்கார்ந்திருந்தார். அவரின் இருபக்கங்களிலும் இரண்டு நாய்களும் தலையை முன்னால் நீட்டி, கழுத்து அழுந்த ஒருக்களித்துப் படுத்திருந்தன. ஆழ்ந்த உறக்கம்போல் காட்டிக்கொண்டாலும், அவ்வப்போது அரைக்கண் திறந்து தங்கச்சிலையைப் பார்த்து, அவரின் இருப்பை உறுதிசெய்துகொண்டு மீண்டும் கண்மூடின. நேற்று முழுவதும் மண்ணில் கால் தரிக்காமல் ஓடித் தவித்த அலுப்பு தெரிந்தது இரண்டிடமும்.

நீரதிகாரம் - 69 - பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சித் தொடர்...

டெய்லரின் முகத்தில் கூடியிருந்த இறுக்கம் பார்த்து மெக்கன்சியும் லோகனும் கவலைகொண்டார்கள். ‘அடுத்து என்ன?’ என்ற கேள்விக்குப் பதிலின்றி வேலை நின்றிருந்தது.

அணை கட்ட வேண்டிய இடத்தின் பாறையில் பள்ளம் இருப்பது தெரிந்தவுடன் வேலையை நிறுத்தச் சொன்னார் டெய்லர். நதிப்படுகையின் கீழே அணை அமையவிருக்கிற 150 அடி அகலத்திற்கும் பூப்பாறையை வெட்டியெடுத்தால்தான் தெரியும், உண்மையில் என்ன நிலவரம் என்று. சமதளமான உறுதியான பாறையின்மீதுதான் தடுப்பணையைக் கட்ட முடியும். எத்தனையோ ஆய்வுகள் செய்து, தேர்ந் தெடுக் கப்பட்ட இடம். வழக்கமாக நூறடிக்கு ஓரிடத்தில் முப்பது நாற்பதடி ஆழத்திற்கு ஒரு குழியென்ற அளவில் பாறைகளைச் சோதித்துப் பார்ப்பார்கள். பென்னி, இருபது வருஷங்களாகவே மேல்மலையின் மண், பாறை, மழையளவு, பருவகாலங்களில் வெள்ளத்தின் அளவு என அத்தனை ஆய்வுகளைச் செய்தும், சரியாக அணை அமைய இருக்கிற இடத்தில் பள்ளம் இருந்தது இப்போது கடும் நெருக்கடியைத் தந்திருக்கிறது. ‘ஆய்வு செய்ததும், இடத்தைப் பெறுவதற்காகத் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இருபது வருஷங்கள் பேச்சு வார்த்தை நடத்தியதும், அணை கட்ட இடம் வாங்கியதும் ஒன்றுமே இல்லை, இனி நான் தரும் இடர்களைச் சமாளித்து அணை கட்டுவதுதான் பெரிய சவால்’ என்று மேல்மலை அறைகூவிச் சொல்வதுபோல் டெய்லருக்குத் தோன்றியது. சிறிய பள்ளமாக இருந்தாலும் பரவாயில்லை, உடனடியாகச் சரிசெய்து வேலையைத் தொடங்கிவிடலாம். அணை கட்டுமிடத்தைக் கடந்தும் ஐந்தடி, பத்தடி தூரத்திற்குப் பள்ளமிருக்கும் என்று தங்கச்சிலை உறுதியாகச் சொல்கிறார். நீர்மட்டம் பார்ப்பதைப் போலவே பாறைக்கண்டத்தையும் எப்படியோ கண்டுபிடிக்கிறார்கள். உள்ளூர்க் கூலிகளில் பலரின் திறமை வியக்க வைப்பதாக இருக்கிறது.

அணை கட்டுமிடத்தை மாற்றுவது இயலாத காரியம். பள்ளத்தைச் சமப்படுத்தி மீண்டும் வேலையைத் தொடங்க, இந்தச் சீசனில் முடியாது. என்ன செய்ய வேண்டுமென்று முடிவெடுக்க ஜான் பென்னி குக் வர வேண்டும். பென்னிக்கும் சீப் இன்ஜினீயருக்கும் நேற்றே டெலிகிராம் கொடுத்தாகிவிட்டது. அவர்கள் ஆலோசனைக்குப் பிறகு, வேலையைத் தொடரலாமென்று நேற்றுடன் சீசனை முடிக்கச் சொல்லி உத்தரவிட்டிருந்தார் டெய்லர்.

ரத்தினம் பிள்ளையும் ஓவர்சீயரும் கூலிக்கணக்கை நேற்று இரவுவரை சரிபார்த்து கூலிகளுக்குக் கொடுத்து முடித்திருந்தார்கள். கூலிகள் தங்களின் உடைமைகளைத் துணியில் போட்டுக் கட்டியெடுத்து, சிறு மூட்டைகளாக்கி முதுகில் சுமந்து, பொழுது விடியத் தொடங்குவதற்குள் மலையிறங்கத் தொடங்கினார்கள். பறவைகள் கூடியிருந்த மரத்தில் கல்லெறிந்தால், விருட்டென்று பறவைகள் பறந்து ஓடும். மரம் வெறிச்சென்று நிற்கும். வேலைத்தளமும் விடிந்தவுடன் வெறிச்சோடிப்போனது. அடுத்த சீசனைத் தொடங்குவதற்குள், பள்ளத்தை நிரப்புவதற்கான வழிமுறையோடு திரும்ப வேண்டியிருக்கும். கல்கத்தாவில் இருந்தும், லண்டனின் இந்தியா ஆபீசில் இருந்தும், மெட்ராஸ் பிரசிடென்சியின் கவர்னர் ஆபீசில் இருந்தும் என்னென்ன கடிதங்கள் பறந்து வரவிருக்கின்றனவோ? டெய்லருக்கு இப்போதே படபடவென்று இருந்தது. பென்னி சீக்கிரம் வந்துவிட்டால் நல்லதென்ற அவரின் பிரார்த்தனை தீவிரப்பட்டது.

நீரதிகாரம் - 69 - பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சித் தொடர்...

அடுத்திருந்த குன்றிலிருந்து தேவாலயத்தின் மணியோசை கேட்டது. காலை, மாலை பிரார்த்தனையை ராபர்ட் ஒருநாளும் தவறவிட மாட்டார். மேல்மலையிலிருந்து கீழிறங்கிச் செல்லும் நாள்களிலும் பிரார்த்தனை தடையின்றி நடக்க தக்க ஏற்பாடு செய்வார். அமைதியான காலைப்பொழுதுக்குள் மணியோசை மெல்லிய கோடிழுத்து அமைந்தது. பாதிரியார் ராபர்ட் வெளியில் வந்துநின்று, டெய்லரும் பிறரும் இருக்கும் குன்றினைப் பார்த்தார். நேற்று முதல் நடப்பவற்றை ராபர்ட் அறிவார்.

ராபர்ட்டைக் கவனித்த டெய்லர், ‘தோத்திரம் பாதர்’ என்றபடி நெற்றியிலும் மார்பிலும் கைவைத்தெடுத்தார். ‘இறைவன் உம்மை ஆசீர்வதிக்கட்டும்’ என்று ராபர்ட் சொல்வதை டெய்லரால் உணர முடிந்தது. ‘நான் அங்கு வருகிறேன்’ என்பதுபோல் சைகை காண்பித்த ராபர்ட், சரிந்து இறங்கிய பாறையின்மீது நிதானமாகப் பாதமூன்றி இறங்கினார். பாறையையொட்டியே மெல்ல இறங்கிய ராபர்ட், எதிர்க் கரையிலிருந்த காத்தவராயனை அழைத்தார். ராபர்ட் அழைப்பதன் நோக்கம் உணர்ந்த காத்தவராயன், மரத்தில் கட்டியிருந்த தாம்புக் கயிற்றை அவிழ்த்தான். கயிறு நெகிழ்ந்ததில் மூங்கில் தெப்பம் ஓடும் நீரில் மிதந்து முன்சென்றது. இழுத்து நிறுத்திய காத்தவராயன், தெப்பத்தில் ஏறி நின்று, ராபர்ட் இருக்கும் இடத்திற்குச் செலுத்தினான்.

காற்று எந்தத் திசையிலும் வலுப்பெறாமல் இருந்ததில் வலிய துடுப்புப் போட வேண்டிய தேவையின்றி, தெப்பம் நகர்ந்தது. ராபர்ட் இருந்த கரைக்கு வந்தவுடன், காத்தவராயனின் கைபிடித்துத் தெப்பத்தில் ஏறி நின்றார். இன்ஜினீயர்கள் வீடிருக்கும் குன்று நோக்கித் தெப்பம் திரும்பியது.

“உன்னோட கைபிடிச்சு நான் தெப்பத்துல ஏறிட்டேன். இதுவே ரத்தினம் பிள்ளையோ உங்க ஊர் பிராமணாளோ உன் கையைப் பிடிச்சு ஏறுவாங்களா மகனே?”

“ஏற மாட்டாங்க. என்ன எறக்கிவிட்டிருப்பாங்க.”

“சரியாச் சொன்ன மகனே. இப்போ கிருஷ்ணா நதியில பெரும் பிரச்சினையாம். கிருஷ்ணா கால்வாயில போற போட்ல இன்ஜினீயருங்களும் மத்த பிரிட்டிஷ் ஆபீசர்களும் போகும்போது, அவங்களோட அசிஸ்டென்ட்டுங்க, அவங்க தாழ்த்தப்பட்டவங்களாவோ, கிறிஸ்தவங்களாவோ இருந்தா ஏத்த மாட்டோம்னு போட் வச்சிருக்கிற பிராமணர்கள் சொல்றாங்களாம். அவங்க தூக்கிட்டு வர்ற பல்லக்குல ஆபீசருங்க வந்து எறங்குனாலும் ஒரே கேலியும் சிரிப்பும்தானாம். ஆபீசரும் இன்ஜினீயருமா அவங்க பொட்டியத் தூக்கிக்கிட்டு இறங்குவாங்க? இல்ல, இந்தப் பிராமணர்கள் எறக்கித் தருவாங்களா? ரொம்ப நாளா போயிக்கிட்டு இருந்தது இந்தப் பிரச்சின. இப்போ என்ன ஆச்சு தெரியுமா?”

“சொல்லுங்க தொர…”

“என்ன பாதர்னு சொல்லுன்னு எத்தன முறை சொல்லுறேன்?”

“சரி, சொல்லுங்க பாதர்.”

“எந்தப் பிராமணர்கள், கீழ்ச்சாதின்னு சொல்லி அசிஸ்டென்ட்டுகள படகுல ஏத்தலையோ, அவங்க போட்டோட லைசென்ச ரத்து செய்யச் சொல்லி, கவர்னர் ஆர்டர் போட்டுட்டாராம், தெரியுமா?”

“நல்ல தொரயா இருக்காரு, கவர்னரு தொர.”

“கவர்னர் தொர அவரா போடுவாரா உத்தரவு?”

“அப்டின்னா?”

“அதெல்லாம் உனக்கு வேணாம். அதுக்குத்தான் சொல்றேன், நான் உசத்தி, நீ தாழ்த்தின்னு பேதம் காட்டாத ஏசுவோட திருப்பாதத்தைச் சரணடைஞ்சுட்டா, இந்த உலகமே ஒன்னாயிடும்.”

காத்தவராயன் அமைதியாக இருந்தான்.

“நான் உன் கையைப் பிடிச்சு ஏறுனதா நெனைக்கிற… தேவன்தான் உன் கையைப் பிடிச்சு என் கையோட சேர்த்துவிட்டார்…” ராபர்ட் மீண்டும் சொன்னார்.

வலுக்கூடிய காற்றொன்று கடந்தது. பின்னுக்கு நகரப் பார்த்த தெப்பத்தைத் துடுப்புப் போட்டு முன்செலுத்தினான் காத்தவராயன். இறங்க வேண்டிய இடம் வந்ததும் நதியின் ஓரம் செலுத்தி, துடுப்பை நீரில் ஊன்றினான். குறைவான வெள்ளமிருந்ததில் இறங்குவதில் கடினமில்லை.

“எப்போ கேட்டாலும் பதில் சொல்ல மாட்டேன்ற. ஏசு உன்னையும் பேச வைப்பாரு, சீக்கிரம்” என்று சொல்லிய ராபர்ட், காத்தவராயனின் நெற்றியில் சிலுவை வரைந்து, தெப்பத்திலிருந்து இறங்கி ஈரக்கால்கள் பாறையில் பதிய மேலேறினார்.

பாதிரியாரைப் பார்த்து, அனைவரும் எழுந்து நின்றார்கள். மொக்கைமாயனும் தங்கச்சிலையும் கும்பிட்டபடி இருந்தார்கள். திடீர் சலசலப்புக்கு என்ன காரணமென்று கண் திறந்து பார்த்த நாய்களிரண்டும், பாதிரியைப் பார்த்துவிட்டு கண்களை மூடிக்கொண்டன.

“சீசன் முடிச்சு கூலிங்க கெளம்பிட்டாங்களா டெய்லர்?”

“கெளம்பிக்கிட்டே இருக்காங்க பாதர்.”

“இதுக்கு ஏன் இடிஞ்சுபோய் உக்காந்திருக்க? தேவனுடைய கிருபையில் எல்லாம் சரியாகும். அடுத்து என்னன்னு யோசி.”

“இடத்தை மாத்துறதா, பாறைகளைச் சமப்படுத்துறதா? இன்னும் கீழே எப்படி இருக்குன்னு பத்தடி ஆழத்துக்குப் பாறைகள உடைச்சுப் பாக்குறதா, சீப் இன்ஜினீயரும் பென்னியும் சொல்ற வரைக்கும் காத்திருக்கிறதான்னு மனசு முழுக்கக் கேள்விகள்... கேள்விகளுக்குப் பின்னால் குழப்பம்…” டெய்லரின் குரலில் கசப்பின் சிகிடு மண்டிக் கிடந்தது.

“சீசன் முடிச்சாச்சுல்ல? அடுத்த சீசனுக்குள்ள கீழ கால்வாய் வேலையை வேகப்படுத்துங்க. கூடலூர் கணவாய்ல இருந்து பேரணை வரைக்கும் இப்போ என்ன வேலை நடக்குது?”

“மெக்கன்சிதான் கால்வாய் வேலைக்குப் பொறுப்பு, மெக், என்ன போகுதுன்னு சொல்லு.”

“இப்போ பெரியகுளத்துல இருந்து கூடலூர் கணவாய் வரைக்கும் மெட்டல் ரோடு போடுற வேலை நடக்குது பாதர். இதுவரைக்கும் இந்தப் பாதை வெறும் மண் ரோடுதான். ஆனா நாம தூத்துக்குடியில இருந்து ரயில்ல எடுத்துக்கிட்டு வரப்போற இருப்புச் சாமானுங்கள, அம்மையநாயக்கனூர்ல இருந்து இழுவ வண்டி மூலம்தான் கூடலூருக்கு எடுத்துக்கிட்டு வரப்போறோம். இழுவ வண்டியில டன் கணக்குல சுமை ஏத்தணும். அதுக்கு மெட்டல் ரோடு அவசியம் வேணும். பெரியகுளத்துல இருந்து பாளையம் வரைக்கும் ரோடு வேலை முடிஞ்சிருக்கு. இந்த ரோடு வேல பெரியாறு புராஜெக்ட் கணக்குல இல்ல. டிஸ்ட்ரிக் பி.டபுள்யூவோட வேலை. கலெக்டர் லோக்கல் பண்டுல இருந்து செய்யுறது. இந்த வருஷத்துக்கான லோக்கல் பண்டுல பாளையம் வரைக்கும்தான் ரோடு போட முடியும், மீதி அடுத்த வருஷம்தான் போட முடியும்னு கலெக்டர் சொல்லிட்டாராம். கலெக்டர் டர்னர் முதல்ல இருந்தே திட்டத்துக்கு ஒத்துழைக்க யோசிக்கிறார். அவர்கூட போராடித்தான் ஒவ்வொரு காரியமும் செய்ய வேண்டியிருக்கு. பென்னி இங்கில்லாதது ரொம்ப முடக்கமா இருக்கு. வேலை செய்யற உரிமைய சீப் இன்ஜினீயர் எனக்குக் கொடுத்திருக்கார். ஆனா முடிவெடுக்கிற அதிகாரம் இல்லையே?”

“ஜான் உன்னை முழுசா நம்பித்தான் இந்தப் பொறுப்பக் கொடுத்திருக்கார் டெய்லர். அவசியமான முடிவெடுக்கலாம். வேலை தடைபடக்கூடாது. அதுக்குத் தேவையான முடிவெடு. என்னோட உதவி முழுசா இருக்கும். கவலைப்படாதே” பாதிரியார் நம்பிக்கையான குரலில் சொன்னார்.

“இன்னைக்குச் சாயந்திரம், நான் மதுரா போறேன் பாதர். புராஜெக்ட்டுக்கு இன்னொரு டிவிஷனுக்கு ஆளெடுக்கிற வேலை இருக்கு. கால்வாய்க்கான நிலங்கள் எடுக்கிறதுக்குத் தனியாவே ஒரு சப் கலெக்டர் போடச்சொல்லிக் கேட்டிருந்தோம். புராஜெக்ட் ஸ்பெஷல் ஆபீசர்னு தாசில்தார் ரேஞ்சுல ஒருத்தர போட்டிருக்காங்க. அவரையும் சந்திக்கணும்.”

“மனசக் குழப்பிக்காம கிளம்புங்க. ஏசு நம்மோட எல்லாக் காரியங்களிலும் பின்தொடர்வார்” ராபர்ட் மூவரின் நெற்றியிலும் சிலுவை வரைந்து ஆசீர்வதித்தார்.

“இந்த நெலத்துக்கு யார் பேர்ல பட்டா இருக்கு?”

“என் பேர்லதான் சாமி.”

“நெலம் எப்படி உனக்குப் பாத்தியதை ஆச்சு?”

“என் அப்பா காலத்துல கெரயம் வாங்குனது எசமான்.”

“என் தகப்பனார் காலத்தில் கிரயம் வாங்கியதுன்னு பூர்த்தி பண்ணு.” பெரியாறு புராஜெக்ட் வாய்க் காலுக்காக நிலங்கள் எடுக்க தாசில்தார் அந்தஸ்தில் நியமிக்கப் பட்டிருந்த கந்தவேல் முதலியார், அருகில் எழுதிக் கொண்டிருந்த குமாஸ்தா முத்து வீரனிடம் சொன்னார்.

“எல்லாம் நல்லாக் கேட்டுக்கங்க. இது வாக்குமூலம் பாரம். இதுல என்னா விவரம் எழுதுறமோ அதுதான் பதிவாகும். தப்புந்தாறுமா எதுனா சொல்லி வச்சிட்டு, நாள பின்ன வந்து, எசமான், பேரத் தப்பாச் சொல்லிட்டேன், ஊரத் தப்பாச் சொல்லிட்டேன், சர்வே நெம்பரத் தப்பாச் சொல்லிட்டேன்னு சொன்னா ஒன்னும் பண்ண முடியாது. ஒன்னுக்கு ரெண்டு முற பாரத்தை வாசிக்கச் சொல்றேன். வாயத் தொறக்காம, காதத் தொறந்து நல்லாக் கேட்டுக்கங்க. அப்புறம் எந்த வில்லங்கமும் வரக்கூடாது. அவெவன் ஸ்தலத்ததான் சொல்லணும். அக்கம்பக்கத்து ஸ்தலத்தையும் சேத்துச் சொல்லக்கூடாது. பாரத்த எழுதிக்குடுத்துட்டு நாளைக்கே வந்து துட்டுக்கு நிக்கக் கூடாது. வாய்க்கா வெட்டும்போதுதான், யார் யார் ஸ்தலத்த எடுக்கணும், எவ்ளோ எடுக்கணும்னு கணக்காத் தெரியும். அப்புறம்தான் குழிக்கு இவ்ளோன்னோ, ஏக்கரு கணக்கோ பண்ணி சர்க்கார் பணம் குடுக்கும். இன்னொன்னு சொல்றேன், உள்ளூர்க்காரன்தானே இருக்கான்னு நெனச்ச நேரத்துக்கு என் வீட்டு முன்னால வந்து கும்பல் சேத்துக்கிட்டு நிக்கக்கூடாது, புரியுதா?”

நீரதிகாரம் - 69 - பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சித் தொடர்...

கந்தவேல் முதலியாரின் உயர்ந்த ஆகிருதி பார்ப்பவரை அச்சுறுத்தும். லஸ்கராகத்தான் பி.டபுள்யூவில் வேலைக்குச் சேர்ந்தார். அடுத்தடுத்து இருந்த இரண்டு ஊர்களின் கண்மாய்களையும் குளங்களையும் வயக்காடுகளின் கால்வாய் வரப்புகளையும் கண்காணிக்கும் பொறுப்பு. முதுகில் மண்வெட்டியைப் போட்டுக்கொண்டு, பொழுது மசங்கலாக இருக்கும்போதே கிளம்பிச் சென்றால், கஞ்சி குடிக்கவே சூரியன் உச்சிக்கு வந்துவிடும். இளவட்டமென்றாலும் ஊரில் இருக்கிற ஒவ்வொரு வயக்காட்டிலும் வரப்புச் சண்டை போடுகிறவனும் லஸ்கரைக் கூப்பிட்டு விட்டு, தகராறு தீர்க்கச் சொல்லிக் கேட்பார்கள். கந்தவேலுக்குத் தான் பார்ப்பது சர்க்கார் உத்தியோகம் என்ற பெருமிதமிருந்தாலும், நாளுக்குப் பத்துத் தாவா கேட்க முடியவில்லை.

பாளையம் வேலுச்சாமி நாடார் மகன் சிவசுப்பிரமணிய நாடாரின் நிலங்கள் இருந்த பாளையத்திற்கும் கந்தவேல்தான் லஸ்கர். இருபது ஏக்கர் நிலம் பாளையம் கண்மாய்க்கு நேர்கீழே கடைசியில் இருந்தது. ஒரு வருஷம் இன்னும் ஒரே ஒரு தண்ணீர்விட்டால் போதும், நெல் அறுவடை ஆகிவிடும் நிலையில், மழையில்லை. கண்மாயில் கிடந்த தண்ணீரோ கடைக்கோடிக்கு வர வாய்ப்பில்லை. சிவசுப்பிரமணிய நாடாருக்குத் தண்ணீர்விடச் சொல்ல, மதுரா டிஸ்ட்ரிக்ட் போலீசு சூப்பிரண்டெண்ட் தேவசகாயம் நாடார் கந்தவேலுவைக் கூப்பிட்டுவிட்டார். இரவோடு இரவாகக் கந்தவேல், வழியில் இருந்த வாய்க்கால் வரப்புகளை அடைத்துவிட்டு, நாடாரின் நிலத்துக்குத் தண்ணீர் விட்டுவிட்டுத்தான் அடுத்த நாள் காலை தேவசகாயத்தைப் பார்க்கப் போனார். ஒரு தானியம் வீணாகாமல் அறுவடை நடந்தது நாடாருக்கு. கந்தவேல் அடுத்த வருஷமே பெரியகுளம் தாலுக்கா கச்சேரியில் குமாஸ்தாவானார். பெரிய அதிகாரிகளுக்கு அத்தியாவசியமான நேரத்தில் அவசியமான உதவிகளைச் செய்யும் வாய்ப்பை அவர் கும்பிடும் திருச்செந்தூர் முருகன் வழங்கிவிடுவதாகப் பெருமிதம் அவருக்கு. இப்போதும் அப்படியான ஓர் உதவியின்மூலம்தான் சப் கலெக்டர் வர வேண்டிய இடத்திற்கு, கந்தவேல் முதலியார் வந்திருக்கிறார்.

“எல்லாருக்கும் புரிஞ்சுதா? மூடங்க மாதிரி தலையாட்டாம கேக்குற வெவரத்தச் சொல்லுங்க, புரிஞ்சுதா?” அதிகம் பேசிவிட்ட அசதியில் நாற்காலியில் உட்கார்ந்தார் கந்தவேல்.

“இவனுங்களுக்கு எங்க புரியப்போது? வெவரத்தை எடுத்துச் சொல்லிக் கையெழுத்த வாங்குனீங்களான்னு கேட்டுத் தொலைப்பாரு… இன்னொரு முறை மணியத்தைப் படிக்கச் சொல்றேன் எசமான். நல்லாக் கேட்டுக்கிடச் சொல்லுங்க…” என்றான் குமாஸ்தா முத்துவீரன். இவனும் கந்தவேல் முதலியைப்போல் பெரிய அதிகாரியாக வருவதற்கான எல்லாச் சாத்தியங்களும் அவனின் ஆளுக்கேற்ற சுதாரிப்பான நடவடிக்கையில் வெளிப்பட்டது.

“ஒரு எளநிய வெட்டச் சொல்லிட்டு முன்சீப்ப படிக்கச் சொல்லு. எனக்கு அசந்து வருது” என்ற முதலியார் நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தார்.

முத்துவீரன் கூடியிருந்த கூட்டத்தைக் கூர்ந்து பார்த்தவுடன் கூட்டம் அமைதியானது. ஊர் முன்சீப்பைப் படிக்கச் சொன்னான் முத்துவீரன்.

அருகில் இருந்த சுமைதாங்கிக் கல்லின்மீது ஏறிநின்ற முன்சீப் லேசாகக் கனைத்து, தொண்டையைச் சரிசெய்தார். கையில் இருந்த தாளை உயர்த்திப் பிடித்து வாசித்தார்.

“மதுரை ஜில்லா, பெரியகுளம் தாலுக்கா, பாளையம் கிராமத்தில், ... அடுத்து யார் பேர்ல இருக்கிற நெலம்னு போடணும், பேரால் பட்டாவாகி இருக்கிற வாக்குமூலம் பாரத்தில் கண்ட நிலத்தைப் பெரியாறு வாய்க்காலுக்காக சர்க்காரில் எடுத்துக்கொள்ளப்படும். அதிலுமக்குள்ள பாத்தியதை அல்லது சம்பந்தத்தை விவரமாகத் தெரிவித்துக்கொள்ள வேண்டியது. மேலும் அந்த நிலத்தில் யாருக்காவது உமக்குச் சமமான பாத்தியமாவது ஒத்தி, ஈடு, குடிவாரபாத்தியமாவது, வேறே எவ்விதப் பாத்தியமாவது இருந்தாலதையும் மேற்படி நிலத்திலுமக்குக் கிடைக்கும் தீர்வை அல்லது வரும்படியையும் கண்டு மேற்படி தேதியில் நம்மிடம் முன்பாக எழுத்துமூலமாய்த் தெரிவிக்க வேண்டியுள்ளது. அதனுடைய கிரயம் காட்டக்கூடிய ஆதரவு இருந்தாலதையும் கொண்டு வர வேண்டியது.

ஸ்தல நிர்ணயம், நிலத்தின் விவரம், விஸ்தீரணம் ஆகிய விவரங்களைத் தப்பில்லாமல் சொல்ல வேண்டியது.”

முன்சீப் படித்து முடித்தவுடன் குமாஸ்தா எழுந்து நின்று, “குடுக்கிற வெவரம் சரியா இருக்கணும். இதெல்லாம் சர்க்கார் வெவகாரம். முன்னபின்ன மாத்த முடியாது, புரியுதா?” என்று சொல்லிவிட்டு, முன்பு விட்ட இடத்திலிருந்து வாக்குமூலம் பாரத்தைப் பூர்த்தி செய்யத் தொடங்கினான்.

“நெலத்துல வேறு யாருக்காவது எவ்விதத்திலாவது பாத்தியமுண்டா?”

“இல்லைங்க சாமி.”

``நெலத்துல ஏதாவது ஒத்தி, ஈடு முதலான பந்தகங்களிருக்கா? அப்படி இருந்தா என்ன வெவரம்னு தெளிவாச் சொல்லு…”

விவரம் கொடுத்துக்கொண்டிருந்த சம்சாரி தயங்கினார். குமாஸ்தா நிமிர்ந்து பார்த்தான்.

“என்னன்னு சொல்லு, முழிக்கிற?”

“இருக்கு சாமி.”

“என்ன பந்தகம்?”

“எங்க அய்யா ஒரு பொம்பளையச் சேத்துக்கிட்டாரு. அதுக்கு உசுரு இருக்கிற வரைக்கும், என்னோட சோளக் குண்ட அதுதான் பயிர் வச்சு வயிற குளுர வச்சுக்கணும்னு அய்யா உயிலெழுதி வச்சிருக்காரு. அது உசுரோட இருக்கற வரைக்கும் சோளக் குண்டு அதுக்குப் பாத்தியத சாமி…”

“இப்போ பெரியாத்து வாய்க்கா சோளக் குண்டுல விழுந்தா, உனக்கு கிரயத் தொகையக் கொடுக்கணுமா? உன் சின்ன அப்பத்தாவுக்குக் கொடுக்கணுமா?”

“அது சோளக் குண்ட விட்டுக்குடுக்காது சாமி. அங்கதான் அய்யாவ அடக்கம் பண்ணியிருக்கு. அது உசுரு போனாலும் அய்யா பக்கத்துலதான் அடக்கம் பண்ணணும்னு வம்படியா நிக்கும்.”

“அதுசரி, வாய்க்கா விழுந்தா எடுத்துத்தானே ஆவணும்?”

“அதுதான் எப்டின்னு புரியல சாமி. வாய்க்காவ கொஞ்சம் ஒதுங்க வச்சிப் போட முடியாதா?”

“இதென்ன காடு மேட்டுல நீ வெட்டிக்கிட்டுப் போற வரப்பு வாய்க்கான்னு நெனச்சிக்கிட்டியா? ஒதுங்கவும் வைக்க முடியாது. வளைக்கவும் முடியாது. சர்க்கார் வாய்க்கா வர்றதுக்குத் தோதா எந்தக் காடு கரம்பு வந்தாலும் எடுத்துக்கிடும். போனாப் போதேன்னு கிரயம் கொடுக்குது. மேல்மலைக்குக் கூலி வேலைக்குப் போறவனுக்கும், பெரியாத்து வாய்க்காவுக்கு நெலத்தைக் கொடுக்கிறவனுக்கும் பணம் கொழிக்குதே. இத்தநாள் காச என்னைக்குக் கையில பாத்திருக்கீங்க? சரி, சொல்லு? பாத்தியத இருக்குன்னு எழுதிக்கிடட்டா? ஒன் சின்ன அப்பத்தா பேரென்ன சொல்லு?”

“அது பேரு தெரியாதே சாமி? சின்னமனூர் அப்பத்தான்னு சொல்லுவோம்.”

“ஒன் அய்யா என்னன்னு கூப்டுவார்?”

சம்சாரி யோசித்தார்.

“அய்யா, `என்னா’ன்னுதான் கூப்டுவார் சாமி.”

“என்னான்னா?”

“டேய் வீரா, இந்த நாட்டுல எவென்டா பொண்டுவளுக்குப் பேர் சொல்லிக் கூப்புடுறா? புதுசா கேக்குற? ஆம்படையாளுகளுக்கே பேர் கெடையாதுன்னா வப்பாட்டிக்குப் பேர் கேக்குறான்…” கந்தவேல் கண்விழிக்காமலேயே வயிறு குலுங்கச் சிரித்தார்.

முத்துவீரன் சங்கடமாகச் சிரித்தான்.

“அப்போ பாத்தியதை உள்ள ஆளுக்கு நேரா, சின்ன அப்பத்தான்னு போட்டுடவா?”

“மொத்த நெலமும் இல்ல. சோளக் குண்டு மட்டுந்தான்.”

“சோளக் குண்டுக்கு என்ன சர்வே நெம்பரு?”

“சர்வே நெம்பரு தெரியாது சாமி. ஆனா காக்குழி இருக்கும் ஸ்தலம்.”

“என்ன எழுதட்டும் எசமான்?” முத்துவீரன் கந்தவேலிடம் கேட்டான்.

“இவனோட சர்வே நெம்பரு என்னடா?”

“907 எ…” என்றான் விரித்து வைக்கப்பட்டிருந்த தஸ்தாவேஜைப் பார்த்து.

“907ல காக்குழி சோளக் குண்டு போக மீதி ஸ்தலத்துக்குப் பாத்தியதன்னு எழுது. சோளக் குண்டுக்கு நேரா சின்னம்மாவுக்குப் பாத்தியதைன்னு போடு.”

“பாத்தியதைன்னா, ஒத்தியா, ஈடா, கெரயமான்னு போடணுமே?”

“டேய், என் வாயக் கெளராத, சொன்னத எழுது.”

முத்துவீரன் நக்கலான சிரிப்புடன் சின்னம்மாவுக்குச் சன்மானத்தின் மூலம் பாத்தியதை என்று எழுதினான்.

“மேற்படி நெலத்துக்கு ஏக்கர் ஒன்னுக்கு… இந்த எடத்துல எவ்ளோ பணம்னு சர்க்கார் சொல்லும்போது போட்டுக்குவோம், அதைக் கெரயமா வாங்கிக்கச் சம்மதமா?” குமாஸ்தா கேட்க, “சம்மதம்” என்றார் சம்சாரி.

“கெரயத் தொகைய யார்கிட்ட கொடுக்கணும்?”

“என்கிட்ட.”

“உன் சின்ன அப்பத்தா?”

“அதுக்கு எண்ணி வாங்கக்கூடத் தெரியாது சாமி, நானே குடுத்துடுவேன்.”

“அவ்ளோதான், ஒனக்கு முடிஞ்சது” என்ற குமாஸ்தா, “சாட்சிகள் கையெழுத்துப் போடுங்க” என்றார்.

ஊர்க் கணக்கனும், கிராம முன்சீப்பும் கையெழுத்திடத் தெரிந்த குடிகள் நான்கைந்து பேரும் ஒப்பமிட்டனர். கடைசியில் சம்சாரியிடம் பாரத்தை நீட்டியவன், “கையெழுத்துப் போடுவீயா?” என்று கேட்டான்.

“படிப்பில்ல சாமி…” என்றார் சம்சாரி.

“நாகன ஆசாரிக்காகன்னு எழுதி, உன் கையெழுத்தப் போடுப்பா” என்று முன்சீப்பிடம் சொன்னான் முத்துவீரன்.

பெரிய அரசமரத்தின் நிழலில் மேல்துண்டும் இல்லாமல், எலும்பு துருத்தியிருந்த இடையில் கோவணத்துண்டுடன் உட்கார்ந்திருந்த சம்சாரிகள், தங்களின் முறை எப்போது வருமோ என்று குமாஸ்தாவையும் முன்சீப்பையும் கவலையோடு பார்த்துக்கொண்டிருந்தனர். காலையில் குடித்துவிட்டு வந்திருந்த கஞ்சி, போன இடம் தெரியவில்லை. வயிறு காந்தியது. கார்த்திகை மாதத்தைய பகல்பொழுதின் நிழல்போல் வரிசை மெல்ல ஊர்ந்தது.

கவலையோடு இருந்த கூட்டம் குளம்பொலி நெருங்கிவரும் சத்தம் கேட்டு, திரும்பிப் பார்த்தது. மதுரை கலெக்டர் அலுவலகத்தின் குதிரைகள் என்பது பார்க்கும்போதே தெரிந்துவிட்டது. முன்னால் வந்த குதிரையில் இன்ஜினீயர் தாம்ஸன் இருந்தார். பின்னால் இருந்த குதிரையில் பெரிய மரப் பெட்டியொன்று கட்டப்பட்டிருந்தது. இரண்டு வீரர்கள் இன்ஜினீயருடன் வந்திருந்தார்கள்.

கந்தவேல் முதலியார் பரபரப்பானார். வருவது டிஸ்ட்ரிக்ட் இன்ஜினீயர் தாம்ஸன் என்றவுடன் ஆசுவாசமானார்.

பி.டபுள்யூ செய்ய வேண்டிய வேலைகளுக்குள் கலெக்டர் ஆபீசு தலையிடுவதில் இரண்டு ஆபீசின் அதிகாரிகளிடையே கசப்பு உருவாகியிருந்தது. கலெக்டரின் உத்தரவை இன்ஜினீயர் பொறுமையாகத்தான் ஏற்பார். இன்ஜினீயரின் கோரிக்கைகளை கலெக்டர் பிரித்துப் பார்க்கவே மாதக்கணக்கானது. பெரியாறு புராஜெக்டை முன்னிட்டுப் புரிதலின்மை கூடி, சண்டையாக மாறி, துவந்த யுத்தம் நடைபெற்றுவருகிறது.

கந்தவேல் எழுந்து நின்றார். தாம்ஸன் யாரிடமும் பேசவில்லை. வணக்கங்களை ஏற்கவில்லை. கந்தவேல் முன்னால் வந்து நின்று, உடன்வந்தவர்களிடம் தலையசைத்தார்.

இருவரும் வேகமாக குதிரையின் மேலிருந்த மரப்பெட்டியை அவிழ்த்துக் கீழிறக்கினார்கள். இரண்டாள் தூக்க முடியாத பெட்டியின் கனமென்பது, அவர்கள் முகத்தில் கூடிய அழுத்தத்தில் தெரிந்தது.

கந்தவேலின் முன்னால் பெட்டியை வைக்கச் சொன்னார்.

“பெரியாறு வாய்க்கால் சம்பந்தமா வந்த புகார்களும், தாவாக்களும், நிலக் கிரயம் பத்தி பெரியகுளம் தாலுக்காவுக்குச் சம்பந்தமா வந்த தபால்ங்க மொத்தம் இந்தப் பெட்டியில இருக்கு. டிஸ்ட்ரிக்ட் இன்ஜினீயருக்குத் தெரியாம எழுதியிருக்காங்க. எனக்கும் இந்த புராஜெக்ட்டுக்கும் சம்பந்தமில்லை. நீங்களா பாத்துத் தீத்துக்கிடுங்க…” என்று சொல்லிவிட்டு, மின்னலெனக் குதிரையில் பாய்ந்து ஏறினார்.

தன் இடுப்புயரம் இருந்த பெட்டியைப் பார்த்த கந்தவேலுக்குத் தலை சுற்றியது.

- பாயும்