மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீரதிகாரம் - 7

நீரதிகாரம்
பிரீமியம் ஸ்டோரி
News
நீரதிகாரம்

அன்று அக்காளின் இறுதி ஊர்வலத்தில் நெருக்கியடித்த கூட்டம் இடித்து வெளித்தள்ளியபோது, பயந்து நின்ற தன்னை, தலையைத் தொட்டு ஆசீர்வதித்து அழைத்து வந்த கைகள்.

தேவாலயத்தின் மணியோசை பசுமலையெங்கும் ஒலித்து அடங்கியது. எஸ்தரின் காதுகளில் சலங்கை ஒலி மேலெழுந்தது.

கோயில்களைப் போலவே தேவாலயங்களுக்கும் வெண்கல மணியைப் பொருத்தியிருக்கிறார்கள் பாதிரிகள். இரண்டுமே மணியோசைதான். தேவாலயத்தின் வெண்கல மணியோசையைக் கேட்கும் போதெல்லாம் எஸ்தருக்கு, மீனாட்சி கோயில் மணியோசைதான் உள்ளத்தில் நிறையும்.

எஸ்தருக்குக் காலம் குழம்புவது வழக்கமாகிவிட்டது. அந்தியில் கிழக்குப் பார்த்து நின்று சூரியனைக் காணவில்லையே என்று அச்சப்படுகிறாள். எல்லோரும் உறங்கும் நள்ளிரவில், விடிந்துவிட்டது என்றெண்ணி எழுந்து உட்கார்ந்து ஜெபம் செய்கிறாள். அழுகையும் கூச்சலும் கலந்த பேரொலி சதா அவள் காதில் ஒலிக்கிறது. வாசலில் ‘அம்மா...’ என்றழைக்கிறார்களே என ஓடோடிப் பார்ப்பாள். ஒருவரும் அங்கிருக்க மாட்டார்கள்.

அவளுடைய நாசியில் அழுகிய உடல்களின் நெடி நிரந்தரமாய் இருக்கிறது. தேவாலயத்தில் பெண்கள் அலங்காரம் செய்யக்கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தாலும் அந்த நெடியை மறக்க எஸ்தர் தலைநிறைய மல்லிகையை வைக்கிறாள். நீண்ட பூச்சரத்தை இழுத்து முன்னால் விட்டுக்கொண்டு சுவாசித்தாலும், மல்லிகையின் மணம் அவளுக்கு வருவதே இல்லை. ஈவ்லின் அக்கா, ‘எப்படித்தான் இவ்ளோ வாசனையோடு இருக்கியோ? எனக்கு மூச்சடைக்குது’ என்பாள். அப்போதும் நம்பாமல் மல்லிகையை மூக்கில் வைத்து முகர்வாள் எஸ்தர். செத்த எலியைக் காக்கை தன் அலகினால் பிரித்துக் கிளறும்போது வரும் உமட்டும் நெடிதான் அவளுக்கு வரும்.

``ஆசீர்வாதம் எஸ்தர். கண்மூடி வழியில் நின்று ஜபிக்கிறாய்? திருச்சபைக்குள் சென்று ஆண்டவரிடம் மண்டியிடு மகளே.”

ரெவரெண்ட் பாதர் டேனியல், நீண்ட வெள்ளையங்கி தரையில் புரள, எஸ்தரின் தலையைத் தொட்டு ஆசீர்வதித்து, கடந்து சென்றார். எஸ்தர், பாதர் டேனியலின் கைகளைப் பார்த்தாள்.

அன்று அக்காளின் இறுதி ஊர்வலத்தில் நெருக்கியடித்த கூட்டம் இடித்து வெளித்தள்ளியபோது, பயந்து நின்ற தன்னை, தலையைத் தொட்டு ஆசீர்வதித்து அழைத்து வந்த கைகள்.

நீரதிகாரம் - 7

வடக்கு ஆவணி மூல வீதி. வெறும் எலும்புக்கூடான அக்காளின் உடம்பை அலங்கரித்திருந்தார்கள். ஊருக்கே கஞ்சி ஊற்றி, பசித்துக் கிடந்த அக்காளின் வயிறு தண்ணீரைத் தவிர வேறொன்றையும் ஏற்கவில்லை. கடைசி நாள்களில் ஒரு செம்புத் தண்ணீரைக் குடித்தே ஒரு வாரம் படுக்கையில் கிடந்த அக்காள், அன்று காலைதான் தன் இறுதி மூச்சை நிறுத்தினாள்.

‘கஞ்சி, கஞ்சி’ என்ற சொல் மட்டுமே மதுரையில் உயிரோடு இருந்தது. எண்திசையும் பசியின் அந்த வலுத்த குரலைத் தாங்கிக் காற்று அலைபாய்ந்தது.

தொடர்ந்து மூன்றாண்டுகள் மழை பொய்த்தது. ‘வர்ற வருஷமாவது மழ பெய்யாதா?’ என்ற ஏக்கத்துடன் மக்கள் ஒவ்வொரு ஆண்டையும் கடத்திக்கொண்டிருந்த வேளையில் தாது வருடம் பிறந்தது. கணியனோ, ‘இந்த ஆண்டு மழை பொய்க்காது’ என்று பஞ்சாங்கம் பார்த்துச் சொன்னான். கடவுளின் வார்த்தையை நம்பாதவர்கள்கூட, கணியன் வார்த்தையை நம்பினார்கள். ஆடு மாடுகள் நாவைத் தொங்கப்போட்டுக் கொண்டு கட்டாந்தரையை முகர்ந்துகொண்டிருந்தன.

பிள்ளைகள் பசிக்கு அழுதபோதும், புல், பூண்டுகளைக் கொடுத்துப் பசியாற்றியவர்கள், அவரவர் விதை தானியங்களைக் கருமியின் செல்வம்போல் காத்தனர். ஒரு மழை வந்தால்போதும், விதைகள் பயிராகி தானியமாகிவிடும் கனவில் இருந்தார்கள். ஒரு தானியத்திற்குள் எத்தனை உயிர்கள் என்று முதன்முறையாக மதுரை மக்கள் கணக்கிட்டார்கள்.

‘நான் வந்தால்தான் நீங்கள் உயிர்ப் பிழைக்க முடியும்’ என்று வானத்தில் கெக்கலித்தபடியே இருந்தன மழைமேகங்கள்.

‘இதோ வந்துவிட்டேன், வந்துவிட்டேன்’ என்று போக்குக் காட்டிக்கொண்டிருந்த கருமேகமொன்று, ஒருநாள் அதிகாலையில் மழையாய் இறங்கியது. கொட்டு கொட்டென்று மழைத் துளிகள் பூமியில் விழுந்தவுடன் ஊரே உறக்கத்திலிருந்து நற்கனவு கண்ட பூரிப்பில் விழித்தெழுந்தது.

விதைகளோடு வயலுக்கு ஓடினார்கள். காயசண்டிகையின் பசியைப் போல் வறண்டு கிடந்த மண், கொசுறுத் தூறலை, விழுந்த அடையாளம் தெரியாமல் சிறுமிடறுபோல் பருகியிருந்தது. நிமிர்ந்து பார்த்தவர்கள், வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கருமேகத்தைப் பார்த்து, நம்பிக்கையோடு கையிலிருந்த தானியங்களை விதைத்தார்கள். வானம் விரும்பாத கர்ப்பம்போல் மேகம் கலைந்தது. விதைகளை விதைத்துவிட்டுக் காத்திருந்தவர்களின் துக்கத்தைச் சொல்ல ஒரு வார்த்தையும் இல்லை. விதைதானியம் இருக்கிறது என்றிருந்தவர்களின் நம்பிக்கையைத் தகர்த்தெறிந்து சென்றிருந்தது சிறு மழை. விதைத்தவையெல்லாம் பூமியின் வெப்பத்தில் கருகின. கையிருப்பும் கரைந்ததில் ஊரே சோகத்தில் மூழ்கியது. உடலில் தெம்பிருந்தவர்கள் கணியனைத் தேடியலைந்தார்கள் கொலைவெறியுடன். வியாபாரிகள் இருப்பைப் பதுக்கினார்கள். பசி பசியென்று ஊரே தீப்பற்றியெறிந்தது.

நீரதிகாரம் - 7

பாலுக்கு முலையைத் துழாவிய குழந்தையை, பிடுங்கியெடுத்துத் தூர எறிந்தாள், குழந்தையின் பசிபொறாத தாய். கணவன், மனைவியை விற்றான். தாய் தந்தையர் பிள்ளைகளை விற்றார்கள். பசி, பசி. பசியென்னும் புராதன நெருப்பு, நகரத்தின் ஓருயிரையும் விட்டு வைக்கவில்லை. பச்சையாகத் தெரிந்த எல்லாவற்றையும் தின்றார்கள். கண்ணில்பட்ட நீரள்ளிக் குடித்தார்கள். ஓடத் தெம்பில்லாமல் கானல் நீரைப் பிடிக்க நகர்ந்து சென்றார்கள். கொத்துக் கொத்தாகச் செத்து விழுந்தவர்களுக்குக் காரணம் தேட யாருமில்லை. பஞ்ச காலத்திற்கு முன்பு தங்களின் கன்றுகாலிகள் செத்து விழுந்தால்கூட அழுதவர்கள், பஞ்ச காலத்தில் குடும்பத்தார் செத்து விழுந்தபோதும் அழவில்லை. கண்களில் பெருகும் நீரைக்கூட நாவால் துழாவி தாகம் தணித்துக்கொண்டு, உயிர்பிழைக்க அலைந்தது எலும்பாய்ப்போன மக்கள் கூட்டம். மதுரையின் நீண்ட வீதிகளில் மரணம் காலார நடந்துபோனது.

மதுரையைக் காக்கும் மீனாட்சிக்குத் தீபாராதனை இல்லை. பலி இல்லை. ஐவகைத் தீர்த்தங்கள் கொண்ட அவளின் தாகம் தணிக்க ஒரு மிடறு நீரில்லை. அவளின் பச்சைப் பட்டாடையை விற்று, கால்படி அரிசி வாங்கி, கஞ்சி குடித்த ஒரு குடும்பம் ஒரு வாரத்திற்குத் தன் மரணத்தை ஒத்திப் போட்டது. சொக்கநாதர் ஊரில் இருக்கிறாரா என்றே தெரியவில்லை. அம்மையின் ஆட்சி நடக்கும் ஊர், அவளே நிர்வாகம் செய்யட்டும் என்று அம்மையின் மேலான பொறாமையில் கைலாயம் சென்றுவிட்டாரோ என்று பூசாரிகள் புலம்பினர்.

தன் மக்களின் துயர காலத்தில் அவர்களைக் கைவிட்டு மீனாட்சி எங்கு போவாள்? அவள் என்று, யாரிடம் தோற்றிருக்கிறாள்? அம்மை அக்காளின் வீட்டுக்கு வந்தாள். அக்காளின் வீட்டுப் பானையில் கஞ்சியானாள். ஒரு வேளைக்குக் கஞ்சி வாங்கிப் போனவர்கள் பசியாறி மயக்கத்தில் கிடந்தனர். அக்காள் வீட்டில் விறகாக எரிந்தவளும், கஞ்சியாகக் கொதித்தவளும் அம்மைதானே?

அக்காளே இதை என்னிடம் சொல்லியிருக்கிறாள்.

“மீனாட்சி, தாசி நான். ஆடிப் பிழைத்ததைவிட, அடங்கிப் பிழைத்ததுதான் அதிகம். நான் சம்பாதித்த இந்த வீடு, நகை, பணம், தானியம் எல்லாம் ஒரு வாரத்திற்குத் தாங்கியிருக்குமா? பசி, பசி என்று நின்றிருந்தவர்கள் வரிசை மூன்று மாதமாகக் குறையவே இல்லையே? வந்தவர்கள் அத்தனை பேருக்கும் கஞ்சி ஊற்ற முடிந்தது என்றால் அது மனுஷக் காரியமல்ல. அம்மைதான் இந்தச் செல்வத்தையெல்லாம் விற்க விற்க வளரச் செய்கிறாள்.”

அக்காள் சொன்னதைப் புரிந்து கொள்ளும் வயது எனக்கில்லை. அவள் கருணை ததும்பும் முகத்தைப் பார்த்தபடி நின்றிருந்தேன்.

என்னை இழுத்து அணைத்துக்கொண்ட அக்காள் நெற்றியில் முத்தமிட்டாள்.

“போட்ட விதை முளைக்கவில்லைன்னு உன் அம்மாவும் அப்பாவும் புத்தி பேதலிச்சாங்க. வெதைச்ச விதை தானியமாவது கிடைக்காதான்னு வயல் முழுக்க ரெண்டு கையால மண்ணைத் தோண்டிப் போட்டாங்க. நாள், பொழுது ஒண்ணும் தெரியாமல் வயலை எலி மாதிரி தோண்டினாங்க. வெயில், பசி, தாகம் தாங்காம மயங்கிக் கிடந்தவங்களை, பெருச்சாளிங்க கூட்டமாய்க் கூடி கடிச்சிப் போட்டுடுச்சி. அவங்க வயலுக்கு உரமாயிட்டாங்க.”

அக்காள் சொல்லச் சொல்ல அழுகை வரவில்லை. பெருச் சாளிகளால் குதறப்பட்டு, புழுத்துப்போய்க் கிடந்த அம்மா, அப்பாவைப் பார்த்தது நினைவில் இருந்தது.

புழுத்துக் கிடந்த இருவரையும் பார்க்கப் பொறுக்காமல், அழுது கொண்டே வந்தவள்தான், அக்காள் வீட்டுமுன் கஞ்சிக்கு நின்ற கூட்டத்தோடு கூட்டமாக நின்றேன். நெரிசலில் கீழே தள்ளிவிட்டார்கள். கத்தியழுதாலும் குரல் வெளி வரவில்லை. பசியினால் காதடைத்த வர்களுக்கு என் குரலும் கேட்டிருக்காது.

நெஞ்சிலும் வயிற்றிலும் மிதித்தபடி முன்னேறியது கூட்டம். கால்களில் உதைபட்டு, காலியான திருவோடுபோல் முன்னேறி அக்காள் வீட்டு வாசலில் கிடந்தேன். கஞ்சி ஊற்றிக் கொண்டிருந்த அக்காள் என் கிழிந்த பச்சைப் பாவாடையைப் பார்த்து, கூட்டத்தை விலக்கி என்னைத் தூக்கினாள்.

நீரதிகாரம் - 7

“உன் ரூபத்தில் வந்துட்டாளே மீனாட்சி. அடையாளத்துக்கு அவளுக்குப் பிடிச்ச பச்சையைக் காட்டிட்டா.”

அக்காள் என் தாடையைப் பிடித்துக் கொஞ்சினாள்.

“அதுவும் மீனாட்சின்னே பேரு. சந்தேகமே இல்லை.”

அக்காள் பஞ்ச காலம் முழுக்கக் கஞ்சி ஊற்றினாள். இனி வீட்டில் குன்றிமணி தானியம் இல்லையென்றவுடன் அக்காவின் மூச்சு நின்றுவிட்டது.

அன்று, ஊரே அக்காளுக்கு வாய்க்கரிசி போட்டு வழியனுப்பியது. அக்காளின் மனசு, ‘வாய்க்கரிசியில் ஒரு பானைக் கஞ்சி காய்ச்சலாமே’ என்றுதான் நினைத்திருக்கும்.

அக்காளின் வீட்டை நோக்கி உந்தித் தள்ளிய கூட்டம், அன்று அக்காளின் வீட்டிலிருந்து என்னை வெளித்தள்ளியது.

‘இனி போவதெங்கே?’ என்று எதுவும் புரியாத நிலையில், அக்காளின் இறுதி ஊர்வலத்தின் கூட்டம் என்னை அதன் திசையில் இழுத்துச் சென்றது.

மயானத்தை நோக்கி அக்காள் விடைபெற்றவுடன் வேகம் குறைந்த வெள்ளம்போல் கிளை பிரிந்தது கூட்டம். வழியறியாமல் அழுது நின்ற என் கைப்பற்றியது இன்னொரு கரம்.

பாதர் டேனியல். வெள்ளை அங்கியில் அவரின் கறுத்த தேகம் மேலும் கறுப்பாகத் தெரிந்தது.

“உன் பேர் என்னம்மா?”

“மீனாட்சி.”

“யாருமில்லையா உன்கூட?”

அக்காளைத் தூக்கிச் சென்ற வழியைப் பார்த்தேன்.

புரிந்துகொண்டவர், “என்கூட வா” என்றார்.

“மதுரை மீனாட்சிக்குக் கர்த்தரின் ஆசீர்வாதம் பரிபூரணமாகக் கிடைக்கும்.”

என்னை ஆசீர்வதித்து, கைபிடித்து அழைத்து வந்தார். அன்றுதான் பசுமலையின் மிஷனரிக்கு வந்தேன்.

மூன்று வேளையும் சாப்பாடு. பசிக்கும் முன்பே சோறு போடுகிறார்கள். பள்ளிக்கூடத்திலும் சேர்த்துவிட்டார் பாதர்.

என்னைப்போல் ஐம்பது பெண்கள். கைக்குழந்தையில் இருந்து கர்ப்பிணிகள், முதியவர்கள் வரை எல்லா வயதிலும் பெண்கள் இருந்தார்கள். பஞ்ச காலத்தையும் வென்று, உயிர் பிழைத்த எமகாதகர்கள் நாங்கள். சொக்கநாதரே மக்களைக் காப்பாற்ற முடியாது என்று கைவிட்ட பிறகும், உயிர் பிழைத்திருக்கிறோம் என்றால் நாங்கள் கடவுளின் பிள்ளைகள் அல்லர்; சாத்தானின் பிள்ளைகள்.

பாதர் டேனியல் பசுமலையின் திருச்சபைக்கு என்னை அழைத்து வந்த அன்று உயிர் உருக்கும் பிரார்த்தனை செய்தார்.

“ஆண்டவரே, உம்முடைய திருநாமத்தை, உம்முடைய கிருபையை, ஒருமுறைகூட கேட்டிராத இவர்கள் நித்திய நரகத்தில் உழல்கிறார்கள். இந்த இருண்ட தேசத்தில் தேவனுடைய பிரதிநிதியாக ஆண்டவருடைய வார்த்தைகளைச் சுமந்து செல்ல ஒவ்வொருவராக நான் அழைத்து வந்திருக்கிறேன். இவர் களுக்குள்ளும் ஆத்துமா உண்டு என்பதை நானறிவேன். அவர்களும் தேவனுடைய பார்வையில் விலையேறப் பெற்றவர்கள் என்பதை நினைவில் கொண்டேன். அவர்களும் தேவனுடைய ராஜ்ஜியத்தைச் சுதந்தரிக்க வேண்டுமல்லவா? பிரசங்கிக்கிறவனாகிய நான், ஆண்டவனை அடையும் ஜீவ வழியை அவர்கள் அறிந்துகொள்ளச் செய்கிறேன். பாடுகளையும் துன்பங்களையும் சகித்து, தேவனுக்காய் அவர்களை அர்ப்பணிக்க ஆசீர்வதிப்பீராக ஆண்டவரே. ஏசுவே உம் நாமம் மகிமைபடுவதாக.”

குடும்பத்தினரையும் உறவினர்களையும் பிரிந்தவர்களின் அழுகுரல்கள் அறையெங்கும் எதிரொலித்தன.

பாதர் டேனியல் தன் இதமான குரலில் அழுகுரல்களைச் சாந்தப்படுத்தினார்.

தந்தையும் தாயுமாய் ஏசுநாதர் அனைவரையும் ரட்சிக்க இருப்பதாக உற்சாகக் குரலில் சொன்னார்.

பிறிதொரு நாள், நல்முகூர்த்தத்தில் திருச்சபையில் எங்களுக்கு ஞானஸ்நானம் செய்தார்கள்.

“உன் பெயர் எஸ்தர்” என்றார்கள் அப்பத்தைக் கொடுத்து.

“மீனாட்சி… அக்காள் என்னை மதுரை மீனாட்சி என்பாளே?”

“ஆண்டவரின் திருநாமத்தை அறிய, நீ பிறந்த குழந்தைபோல் பழைய அடையாளங்களற்று மாற வேண்டும். தூய்மையான இதயத்தில்தான் ஆண்டவர் குடியேறுவார்.”

தேவாலயத்தின் மணியடித்தது.

தூரத்தில் பொலிவிழந்து நின்ற மீனாட்சி கோயில் கோபுரம் தெரிந்தது. இரு கை குவித்து வணங்கிய எஸ்தரின் கையைப் பிடித்து, நெற்றியில் சிலுவை போட்டு ஆசீர்வதித்தார் ரெவரெண்ட் பாதர் டேனியல்.

மீனாட்சி எஸ்தராகி ஏழாண்டுகள் கடந்திருந்தன. இரண்டு வாழ்க்கை வாழ மீனாட்சியின் மனம் பழகியிருந்தது.

தேவாலயத்தின் மணியோசை கேட்கும்போது, சிறுமியாகி, மீனாட்சி ஆலயத்தின் கருவறை முன்பு கண்மூடி நிற்கப் பழகியிருந்தாள்.

பாதிரியார் பிரசங்கத்தை ஆரம்பிக்கும் போது கண் மூடி அமர்வாள். ஆழ்ந்த தியானத்தில் ஆண்டவனின் திருக்கரத்தில் தன்னை ஒப்படைத்து மறந்திருக்கிறாள் என்ற தோற்றம் இருக்கும்.

மீனாட்சி, அக்காளின் நடுக்கூடத்தில் சலங்கை அணிந்து தயாராக நின்றிருப்பாள். நட்டுவனார் நட்டுவாங்கம் ஆரம்பித்தவுடன், கால்கள் ஆடத் தொடங்கிவிடும். உமையாகவும் ஈசனாகவும் அக்காளும் மீனாட்சியும் ஆடத் தொடங்கிவிடுவார்கள்.

திருச்சபையின் சகோதரியாக அமெரிக்காவில் இருந்து சேவை செய்ய வந்திருந்த ஈவ்லின், மிஷனரியில் இருந்த ஒவ்வொருவரின் தோற்றத்தையும் மாற்றினார்.

மீனாட்சி காது வளர்த்தி ருந்தாள். ‘எப்போ வேணும் னாலும் கடுக்கன் வாங்கிப் போட்டுக்கலாம். காது முத்தினா வளக்க முடியாது. சின்னப் புள்ளையா இருக்கை யிலேயே வளர்த்துடணும்’ என அவள் அப்பத்தா காது வளர்த்து விட்டிருந்தாள். ஈவ்லின் மீனாட்சியின் காதுத் துளைகளை அடைத்துவிடப் பிரயத்தனப் பட்டாள்.

ரெவரெண்ட் பாதர் டேனி யல் பிரசங்கத்தை ஆரம்பித்தார்.

``திருச்சபையின் சகோதர, சகோதரிகளுக்கு,

என் இளமையின் அறியாமையில் நானும் ஆண்ட வரின் கிருபையைச் சந்தேகித்து, எதிர்நிலையில் நின்றிருக்கிறேன். ஆண்டவரைச் சந்தேகித் திருக்கிறேன். உண்மையான ஆண்டவரை அறிந்துகொள்ளும் தாகத்துடன் கிடந்தலைந் திருக்கிறேன். ஆண்டவர் ஏசு கிறிஸ்துவிடம், ‘கடவுளே, உண்மையான கடவுள் ஒருவர் உண்டு என்றால் உம்மை எமக்குக் காண்பியும். ரட்சிப்பிற்கு உரிய வழியையும் சாந்தியையும் நீர் எமக்குத் தர வேண்டும்’ என்று சொல்லி நாளும் பொழுதும் ஜபிக்க ஆரம்பித்தேன்.

ஒருநாள் விடியலில், என் சின்னஞ்சிறு குடிலில் ஒரு பேரொளி எழுந்தது. நான் தேடித் தவித்திருந்த கிறிஸ்துவின் உருவம் தோன்றியது. ரத்தம் உறைந்து ஆணிகள் பாய்ந்திருந்த கரத்தினால் அந்தப் பேரொளி என்னை ஆசீர்வதித்தது. `உன்னை நீ வருத்திக்கொள்வது, என்னைத் துன்பப்படுத்து வதாகும். நீ தேடியலையும் உன் ரட்சகன் நானே’ என்றது அவ்வொளி. என் மனம் விம்மியது. அந்தப் பேரொளி எனக்குள் சாந்தியை உண்டாக்கியது.

`இருண்ட தேசத்தில் ஆண்டவருடைய குரலைச் சுமந்து செல்ல நீ முன்வருவாயா? அத்தேசத்தின் மக்களுக்குள்ளும் ஆத்துமா உண்டு என்பதை அறிவாயா? அவர்களும் தேவனுடைய ராஜ்ஜியத்தைச் சுதந்தரிக்க வேண்டுமல்லவா? ஆனால் பிரசங்கிக்கிறவன் இல்லையென்றால் எப்படி ஜீவ வழியை அவர்கள் அறிந்துகொள்வார்கள். பாடுகளையும் துன்பங்களையும் சகித்து தேவனுக்காய் உன்னை அர்ப்பணிக்க நீ வர மாட்டாயா?’ என்று அந்தப் பேரொளி கேட்டது.

நீரதிகாரம் - 7

ஏசு கிறிஸ்துவின் சாம்ராஜ்ஜியத்திற்குள் நான் சென்றடைந்தது முக்கியமல்ல. ஆண்டவரின் திருநாமத்தை அறியாத மக்கள் கூட்டம் கீழைத் தேயத்தில் இருப்பதையறிந்து, அந்த மக்கள் கூட்டத்தை ஆண்டவரின் அருளாசிக்கு உகந்தவர்களாக, ஆண்டவரின் கருணையைப் பெற்றவர்களாக்குவதற்கு என்னைப்போல் ஏராளமா னவர்கள் சொந்த நாட்டை விட்டுக் கிளம்பி வந்திருக்கிறோம்.

இங்கிருக்கும் மக்களுக்கு ஏசுவைக் குறித்து அறிவித்து, அவர்களை நேராய்ப் பரலோகத்திற்கு நடத்த வேண்டும். அதற்கு நான் உதவ வேண்டும். அழிந்துபோகும் ஆத்துமாக்களை ஆண்டவர் ஏசுவிடம் சேர்க்கும் பணியை ஆண்டவர் அடியவனிடம் தந்துள்ளார். ஆண்டவனின் கட்டளை கிடைக்கப்பெற்ற பாக்கியவான் நான்.

கப்பலில் ஏழு மாதகாலப் பயணம். கரை இறங்குவோமா என்பதே உறுதியில்லாத கடினமான பயணம். ஆண்டவர் எங்களை இந்த மண்ணில் பத்திரமாய்க் கொண்டு சேர்த்தார். பிரசங்கிக்கிறவன் இல்லை யென்றால் எப்படி ஜீவ வழியை இந்தத் தேசத்து மக்கள் அறிவார்கள் என்பதற்காகவே ஆண்டவர் எங்களைப் பத்திரமாய்க் கொண்டுசேர்த்தார். ஜீவ வழியைக் காட்டும் ஆண்டவனின் தூதர்கள் நாங்கள்.

வெயிலும் நோயும் நெரிசலும்தான் இந்தத் தேசம். சுவாசக் குழல் முழுக்கத் தூசி. ஆனாலும் ஆண்டவர் பணித்த ஊழியத்தை நாங்கள் செய்து வருகிறோம். இந்தத் தேசத்தில் நாங்கள் ஊழியம் செய்ய, எங்கள் தேசத்தின் குழந்தைகள்கூட பணம் அனுப்பி உதவுகிறார்கள். சின்னஞ்சிறிய குழந்தைகள் சாக்லேட் வாங்கிச் சாப்பிடும் பணத்தை மிச்சப்படுத்தி அனுப்புகிறார்கள். படிப்பு வேளை போக மீதி நேரங்களில், பைகள் தைத்து அதில் கிடைக்கும் பணத்தை, மிஷனரியின் ஊழியத்திற்கு அனுப்புகிறார்கள்.

இந்த மதுரை மாகாணமே கடந்த பத்தாண்டுகளாக மரணத்தின் பிடியில் சிக்கித் தவித்தது. பஞ்சத்திலும் நோயிலும் கொத்துக் கொத்தாகச் செத்து வீழ்ந் தார்கள். இறந்தவர் களுக்கான நல்லடக்கம் இல்லை. நாய்களுக்கும் நரிகளுக்கும் உணவானார்கள். வீதியெங்கும் வெறிச்சோடிக் கிடந்தது. நடமாடும் மனிதர்களே இல்லை. கால்கள் முடங்கி, ஜந்துகளைப்போல் அங்கங்கே வீழ்ந்து கிடக்கிறார்கள்.

இப்போதும் மதுரை மாகாணத்து மக்கள் தண்ணீரின்றிச் செத்துக் கிடக்கிறார்கள். திருவிதாங்கூர் வெள்ளத்தில் அழிகிறது. மலைக்கு ஒரு பக்கம் வெள்ளம். மறுபக்கம் வறட்சி. வெள்ளத்தைத் திருப்பி, வறட்சியைப் போக்க பிரிட்டிஷ் அரசாங்கம் பெரியாற்றில் அணை கட்ட ஏற்பாடு செய்கிறது. இரண்டு லட்சம் ஏக்கருக்கு விவசாயம் செய்யத் தண்ணீர் கிடைக்கும் என்கிறார்கள். எத்தனையோ பிரச்சினைகள். இன்று தண்ணீர் வந்தால்கூட, இரண்டு போகம் விளைந்த பிறகுதான் இந்த மண் தெளிச்சியாகும். மரணத்தின் ரேகை இந்த மண்ணெங்கும் பரவி நிற்கிறது. பெரியாற்றின் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வந்தால்தான், மரணத்தின் ரேகை அழியும். ஆண்டவரின் திருநாமத்தை உச்சரிக்காததால் தண்டிக்கப்பட்டார்கள், மழை இல்லாத பஞ்ச காலத்தில். திருநாமத்தை அறிந்தபிறகு ஆண்டவரின் ஆசீர்வாதமாய்ப் பெரியாறு மதுரைக்கு வர இருக்கிறது. ஆண்டவரின் ரத்தம்தான் பெரியாற்றின் நீராய்ப் பெருக்கெடுக்கிறது. இருபதாண்டுகளாய் முயற்சி செய்து, பத்தாண்டுகளாய்க் காத்திருந்து, திட்டம் கனிந்து வரும் நேரம்.’’

கைகுவித்து, தலைகுனிந்து கேட்டுக் கொண்டிருந்தவர்கள் பாதிரியாரின் குரலில் தெரிந்த மகிழ்ச்சியை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தார்கள். மாலை ஜெபத்திற்கான தேவாலய மணி ஒலித்தது.

“அணை கட்டுமிடம் அடர்ந்த காடு. மனுஷங்க இதுவரைக்கும் அங்க தங்கினதே இல்லை. வனமிருகங்கள் ஒரு பக்கம். பூச்சிகள் ஒரு பக்கம். அங்க இருக்கிற சீதோஷ்ணமும் சமாளிப்பது சிரமம். மலைமேல மூவாயிரம் அடி உயரத்துல இருக்கு. அணை கட்டுறதுக்கு முன்னால நாம் அங்க போகணும். ஆண்டவரின் கிருபை அவ்விடத்திலே பூரணமாக நின்றால்தான் காரியம் சரியாக நடக்கும்.”

என்ன சொல்ல வருகின்றார் என்பதுபோல் ஒவ்வொருவரின் பார்வையும் அவர்மேல் நிலைத்தது.

“காட்டை வெட்டிச் சீராக்கி, வழி உண்டாக்கியவுடன் நம் மிஷனரியில் உள்ளவர்கள் அங்கு செல்ல வேண்டும். முதல் குடில் நாம் கட்ட வேண்டும். அப்போதுதான் இருண்ட தேசத்தின் மக்கள் நம்மை நம்பி அங்கு வருவார்கள். உங்களில் விருப்பமானவர்கள் முன்வரலாம்.”

ரெவரெண்ட் பாதர் டேனியல் நீண்ட பிரசங்கத்தை முடித்து நாற்காலியில் உட்கார்ந்தார். அமெரிக்காவில் இருந்து அவர் புறப்பட்டு வந்ததில் இருந்து இன்று வரையிலான சுமையை இறக்கி வைத்ததில் அவருக்கு வியர்த்திருந்தது.

திருச்சபைக்கு மெட்ராஸில் இருந்து பாதிரிகள் யார் வந்தாலும், அவர்கள் பேச்சில் பெரியாறு பற்றிய கவலை இருக்கும். இன்னும் ஏன் தாமதமாகிறது என்று அயர்ச்சியுடன் பேசிக் கொள்வார்கள்.

எஸ்தருக்கு மேல்மலையின் காடு பற்றி ஒன்றும் தெரியாது. மனிதர்களே வசிக்காத அடர்ந்த காடென்கிறார்கள். அவளுக்கு பயமில்லை. மூச்சடைக்கும் இந்தத் திருச்சபையில் இருந்து வெளியேறினால் போதுமென்றிருந்தது.

“நான் போகிறேன் பாதர்.”

எஸ்தர் கையுயர்த்தினாள்.

டேனியல் ஆச்சர்யமாகத் திரும்பிப் பார்த்தார்.

நோஞ்சான்போல் ஒடுங்கிய உடம்புடன் இருக்கும் எஸ்தர்தானே என்று உறுதிப்படுத்தினார்.

“நல்லா யோசிச்சிக்கணும். மலைக்கு மேல போன பிறகு, அடுத்த நாளே கீழே வரணும்னு கேக்கக் கூடாது. வருஷக்கணக்காவும் திரும்ப வர. இங்க ஆண்டவரின் தோத்திரம் சொல்லிக்கிட்டு, சாப்பிட்டு உக்காந்திருக்கிற மாதிரி இல்ல, அங்க தேகம் தேய வேலை செய்யணும்.”

“நான் போறேன் பாதர்.”

எஸ்தரின் குரல் வெண்கல மணியைப்போல் ஒலித்தது.

“அங்கு என்ன வேலைன்னு தெரியுமா உனக்கு?”

“தெரியும் பாதர்.”

“என்ன வேலை?”

“தண்ணீராய்ப் புரண்டோடும் ஆண்டவரின் ரத்தத்தை, பாவப்பட்ட இந்த மக்களுக்குக் கொண்டு வந்து சேர்க்கணும். ஆண்டவரின் ரத்தம் பாதர். ஆண்டவரின் ரத்தம்.”

எஸ்தரின் குரலில் உன்மத்தம் கூடியிருந்தது.

“ஆண்டவர் ஏசு கிறிஸ்துவின் பரிபூரண ஆசீர்வாதம் உனக்கு உண்டாகட்டும் மகளே.”

எஸ்தரின் நெற்றியில் டேனியல் சிலுவை வரைந்தார்.

எஸ்தரின் மனசெங்கும், மலர்ந்த புன்னகையுடன் பச்சைப் பட்டுடுத்தி, சிவந்த இதழ்களுடன், தோளில் கிளியமர்ந்திருக்க மீனாட்சி அம்மை நிறைந்தாள். அம்மையின் ஒரு கை, “வா குழந்தை” என்று சுகாசன அட்டணத்தில் மடங்கியிருந்த இடக்காலின் தொடைமேல் மீனாட்சியை இழுத்து அமர வைத்தது.

‘ஏறிய சிவிகை இறங்காத எம்பெருமாட்டி’ எஸ்தரை எங்கு அழைத்துச் செல்கிறாளோ?

எஸ்தருக்குள் பேரியாறு பெருக்கெடுத்தது.