மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீரதிகாரம் - 71 - பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சித் தொடர்...

நீரதிகாரம்
பிரீமியம் ஸ்டோரி
News
நீரதிகாரம்

ஒங்கள மாதிரி ஒரு தொரதானே சாமி கலெக்டரு? ஆனா ஆளு ரொம்ப முசுடாம். கேள்விதான். படிக்காத ஜனங்க சாமி நாங்க. எங்களுக்கு கலெக்டர எப்படித் தெரியும்

அம்மையநாயக்கனூர் ரயில்வே ஜங்ஷனின் கருங்கல் பாவிய நடைபாதை முழுக்க, தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து வந்திறங்கிய மூட்டைகள் இறக்கி வைக்கப்பட்டிருந்தன. மூட்டைகளை ஏற்றிச் செல்வதற்காக மாட்டு வண்டிகளும், டிராக்‌ஷன் இன்ஜின் வண்டிகளும் ஜங்ஷனுக்கு வெளியில் கூட்டமாக நிறுத்தப்பட்டிருந்தன. பெரியாறு அணை கட்டுமானத்துக்காக லண்டனில் இருந்து பென்னி குக் வாங்கியனுப்பிய பொருள்கள் அனைத்தும் முதல் கப்பலில் தூத்துக்குடிக்கு வந்திறங்கியிருந்தன. கூடலூர் வரை கொண்டு செல்லும் வண்டிகளில் ஏற்றியனுப்ப கலெக்டரும் ஹெட் அசிஸ்டென்டும் நாளைய தினம் வருகைதர இருப்பதால், அவர்களை வரவேற்க ஏற்பாடுகள் தீவிரமாக இருந்தன.

வைகை, சுருளியாறு ஆயக்கட்டில் இருக்கும் ஜமீன்கள் குழப்பத்தில் இருந்தன. பேரியாற்றுத் தண்ணீரைப் பெறுவதற்கான வழியை ஆராய்வதா? இல்லை வைகை வழியாகப் பேரியாறு வரக்கூடாதென்று சொல்வதா? என்று ஒவ்வொருவரும் குழம்பினார்கள். ஜமீன்களின் ஒரே கவலையாகப் பேரியாறு இருந்தது. இரவு நேர சபைகளில் ஜமீன்களின் ஒரே பேச்சு, பேரியாறு நமக்கு உதவியா, உபத்திரவமா என்பதுதான்.

நீரதிகாரம் - 71 - பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சித் தொடர்...

அம்மையநாயக்கனூர் ஜமீன் ராமசாமி நாயக்கர் இரண்டு நாளாகவே தூக்கமின்றி அலைந்து திரிந்து கொண்டிருந்தார். நாயக்கருக்குப் பேரியாற்றுத் தண்ணீர் பற்றிக் கவலையில்லை. கவலையிருந்தாலும், அவர் பிரிட்டிஷ் சர்க்காருக்கு எதிராக யோசிப்பதற்கும் அவகாசமில்லாமல் இருந்தார். கொடைக்கானல் போவதற்காக வரும் பிரிட்டிஷ் ஆபீசர்கள் அத்தனை பேரும் அம்மையநாயக்கனூர்தான் வந்திறங்க வேண்டும். ஆபீசர்கள் வருமுன், தகவல் வந்துவிடும். தினம் ஜங்ஷனுக்குச் சென்று வருகிறவர்களை வரவேற்பதும், அவர்களுக்குக் குதிரை வண்டியோ, பல்லக்கோ, தூளியோ, நாற்காலிப் பல்லக்கோ அவரவர் வயது, உடல்நிலையைக் கணக்கில் கொண்டு ஏற்பாடு செய்து அனுப்ப வேண்டும். பலனாக, எத்தனையோ பிரிட்டிஷ் ஆபீசர்களின் நட்பு நாயக்கருக்கு அமைந்தது. வேட்டைக்காக வந்து தங்குகிறவர்கள், வாரக்கணக்கில் மாதக்கணக்கில் காட்டிலிருந்துவிட்டு, கீழிறங்கி வரும்போது மறக்காமல் நாயக்கருக்குப் பரிசுப்பொருள்கள் கொண்டு வருவார்கள். புலிப் பல்லும், தோலும் கொடுத்தால் போதும், நாயக்கருக்குக் கொண்டாட்டம்தான். தானே வேட்டையாடி தன் தர்பாரை அலங்கரித்ததுபோல் பெருமிதப்படுவார். ஒவ்வொரு புலித் தோலுக்கும் வேட்டையாடிய ஆபீசர் பெயரைச் சூட்டியிருந்தார்.

ஒருமுறை, காட்டுக்குச் சென்றிருந்த மிலிட்டரி ஆபீசர் ஒருவர், மலைப்பாம்பொன்றைப் பிடித்து வந்தார். பரிசாக வேண்டுமா என்று மூட்டையை அவிழ்த்தார். சீறி வெளியேறிய மலைப்பாம்பு, நிமிஷத்திற்குள் ஜங்ஷனில் நுழைந்தது. ஜனங்கள் அலறியோட, சரளைக் கல்லின்மீது நகர முடியாமல் தடுமாறியதில், கோபத்தில் சுட்டுக் கொன்றார் ஆபீசர். நாயக்கருக்குப் பெருத்த அதிர்ச்சி. அந்தத் துப்பாக்கியைத் தன்மேல் திருப்ப எவ்வளவு நேரமாகும் என்று வியர்வை பொங்க நின்றார்.

தூத்துக்குடியிலிருந்து பெரியாறு அணைக் கட்டுமானத்திற்கு ரயிலில் வந்திறங்கும் பொருள்கள், வண்டிகளில் பாதுகாப்பாகக் கூடலூர் செல்லும் வரை, காவலிருந்து அனுப்பிவைக்க வேண்டியது நாயக்கரின் பொறுப்பென்று தாசில்தார் உத்தரவிட்டிருந்தார். ஒவ்வொன்றும் யானை கனம் இருந்தது. இதை யார் என்ன செய்ய முடியும்? வண்டிகளில் ஏற்றினால் போய் இறங்கப் போகிறது என்று நாயக்கர் நினைத்தாலும், தாசில்தாரின் உத்தரவை மீறி ஒன்றும் செய்துவிட முடியாது என்று உணர்ந்ததால், தன் பண்ணை ஆள்களைக் காவலுக்குப் பணித்திருந்தார். இரவும் பகலும் காவலுக்கு இருந்தார்கள்.

நீரதிகாரம் - 71 - பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சித் தொடர்...

நாளை விடிந்தவுடன் கலெக்டரும் இன்ஜினீயர்களும் வந்திருந்து பொருள்களை ஏற்றியனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கலெக்டர் வருகிறார் என்ற தகவல் வந்ததிலிருந்து நாயக்கர், அவர் வில்வண்டியின் சக்கரம்போல் உருண்டோடினார். கலெக்டர் தங்குமிடத்தில் பங்கா வீசுபவனிலிருந்து குசினிக்காரன்வரை ஆஜராகி, வேலையை ஆரம்பித்து விட்டார்களா என்று பார்த்தார். தாலுக்காபீசு ஆள்கள் இருந்தாலும், ‘கலெக்டருக்குப் பதநீ வேணுமாம்” என்று பொத்தாம் பொதுவாகக் கூவிவிட்டு, மரநிழலில் நின்றுகொள்வான் குமாஸ்தா. ‘பதநீ’யை ஜமீன் ஆள்கள் கொண்டு செல்ல வேண்டுமென்பது மறைமுக உத்தரவு. அம்மைய நாயக்கனூருக்கு ரயில் வந்தது தன் வாழ்வில் வந்த வரமா, தண்டனையா என அடிக்கடி நினைப்பார் நாயக்கர். மெட்ராஸ் பிரசிடென்சியின் கவர்னர் கன்னிமாரா, பெரியாறு அணை வேலையைத் தொடங்கி வைக்க வந்த நான்கு நாளும் அவருடன் இருக்கக் கிடைத்த வாய்ப்பை நினைக்கும்போது, அவர் பட்ட கஷ்டங்களெல்லாம் பறந்துபோய்விடும். மதுரை கலெக்டர் டர்னர் அப்படியல்ல, குடுகுடுப்பைக் காரனின் மேல்சட்டை போல், பலவண்ண இயல்போடு இருப்பார்.

அலங்கரிக்கப்பட்ட ஐந்து கோச் வண்டிகள் கலெக்டர் ஆபீசில் எப்போதும் நிறுத்தப்பட்டிருந்தாலும், கலெக்டர் டர்னர் கோச் வண்டியில் ஏறி அலங்காரமாக வர விரும்ப மாட்டார். பளபளப்பான அடர்பழுப்பு நிற அரேபியக் குதிரையொன்றே அவரின் விருப்பத்திற்குரியது. நினைத்த நேரத்தில் குதிரையின் மீதேறி ஆரோகணிப்பதில் அலாதியான விருப்பம் கொண்டவர். அவருடன் பயணிக்க வேண்டிய கட்டாயம் கொண்ட உதவியாளர்கள், அடுத்த நிலை ஆபீசர்கள் சிரமங் களோடுதான் பின்தொடர்வார்கள்.

டர்னர் தனிக் குதிரையில் வர விரும்புவதற்குப் பிரத்யேக காரணம், அகன்ற பாதைகளில் பயணிப்பதோடு, பாதையற்ற பாதைகளிலும் நுழைந்து வெளியேறும் வாய்ப்புகளுக்காகத்தான். மதுரையின் அகன்ற வீதிகளின் ஆரவாரமும் கொண்டாட்டமும் குதூகலமும் மறைந்து, முள்புதர்களுக்குப் பின்னாலும், சின்னஞ்சிறிய குன்றுகளிலும் ஆங்காங்கே வசிக்கும் குடும்பங்களின் திரள்களைப் பார்த்திருக்கிறார்.

இரு வாரங்களுக்கு முன், திருப்பாலையைக் கடந்து, நத்தம் போகும் பாதையின் அடர்ந்த காட்டுக்குள் பயணித்தார். பொழுதிறங்குவதற்குள் அழகர்மலை செல்ல நினைத்து, குதிரையைச் சொடுக்கினார். அடர்ந்த காட்டுப் பகுதி. கள்ளர்கள் தாக்குதலும் அச்சுறுத்தலும் நிறைந்த பகுதியில் துணிந்து தனியாகப் பயணித்தார்.

காட்டுக்குள் பாதைகளே இல்லை. மேடும் பள்ளமுமாக ஏறியிறங்கிய வழிகளில் விரைந்து கொண்டிருந்தவருக்கு, இரையெடுத்துக் கொண்டிருந்த கோழியொன்று கண்ணில்பட்டது. காட்டுக்கோழி அல்ல, வீடுகளில் வளரும் நாட்டுக்கோழியென்று பார்த்ததும் அறிந்தார். காட்டுக்குள் எப்படி நாட்டுக்கோழியென்று சிந்தனையோட, கடிவாளத்தைப் பிடித்து நிறுத்தினார். நின்ற குதிரையில் இருந்து இறங்கியவரைப் பார்த்து கோழி, தன் பின்புறம் சிக் சிக்கென்று அசைய, பயப்பார்வையோடு, புதருக்குள் நுழைந்து வெளியேறியது. டர்னரும் கோழியோடிய திசையில் ஓட, கோழி வேகம் கூட்டியது. ஓரிடத்தில் நின்று திரும்பிய கோழி, டர்னர் பின்னால் வருவதையறிந்து, சிவந்த சிறுமணி விழி உருள, புழுக்கள் தின்று பருத்துத் தொங்கிய தாடையுடன் பின்புறம் காட்டி சிக் சிக்கென்று விரைந்தது. கோழியின் அழகே பின்புறம் தெரியும் அதன் நடைதான். ‘பொட்டியாட்டம் நடக்குதே?’ என்று கோழியின் நடையைச் சொல்வதுதான் பொருத்தம். பணிவும் அமுங்குதலுமான நடை.

கோழி நடக்க, டர்னர் நடக்க, புதர்களைக் கடந்தவுடன் திரைச்சீலையை இழுத்துவிட்டதுபோல், இருபது, முப்பது குடிசைகள் எங்களுக்குள் உறவொன்று மில்லை என்பதுபோல் திசைக்கொன்றாக இருந்தன. ஒழுங்கற்ற நீள்வட்டத்தை மேலும் நீட்டிவிட்டது போலிருந்த குடியிருப்பைப் பார்த்துத் திகைத்தார் டர்னர். வேகமாக ஓடி முன்னாலிருந்த குடிசையொன்றுக்குள் நுழைந்தது கோழி. டர்னர் வீடுகளை நோட்டம் விட்டுக்கொண்டிருக்கையில் உள்ளே சென்ற கோழி, பளபளவென்று கறுப்பும் சிவப்புமாக, பருத்திருந்த சேவலொன்றுடன் வெளியில் வந்தது. சேவலின் உச்சிக்கொண்டை ஆட்டின் இறைச்சித் துண்டைப்போல் சிவந்து தனித்துத் தொங்கியது. ‘என்ன?’ என்பதுபோல், முறைத்து, மேலே தலையை உயர்த்தி, ‘க்கோ, கொக்கரக்கோ’ என்று கூவியது. உள்ளிருந்து ஐந்தாறு கோழிக் குஞ்சுகள் ‘கீச் கீச்’சென்று ஓடிவந்தன.

டர்னருக்குக் கோழியையும் சேவலையும் பார்த்துச் சிரிப்பு வந்தது. தன்னால் ஏதோ ஆபத்தென்று எண்ணித்தான் கோழி, உதவிக்குச் சேவலை அழைத்து வந்திருக்கிறது என்றுணர்ந்து தனக்குள் புன்னகைத்துக் கொண்டவர், அங்கிருந்த குடிசைகளைப் பார்த்துப் புன்னகைத்தார். பொழுது மேலேறி, நண்பகலைத் தொட இருக்கும் நேரத்தில் குடிசையில் ஒருவரையும் காணவில்லையே என்று எண்ணி, கையிலிருந்த துப்பாக்கியை எடுத்து, வானத்தை நோக்கிச் சுட்டார்.

மரத்தடியில் விழுந்து கிடந்த நிழல் திடுக்கிட்டது. வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்து எழுந்து, கையில் கிடைத்த கம்பு, கத்தி, அரிவாள் என ஆளுக்கொரு ஆயுதங்களுடன் ஓடி வந்தார்கள். காட்டுக்குள் சென்று விறகு, முள் வெட்டியெடுத்துத் திரும்பிக்கொண்டிருந்த பெண்கள், துப்பாக்கிச் சத்தம் கேட்டதில் அலறியடித்துக்கொண்டு ஊரை நோக்கி ஓடிவந்தார்கள். வீட்டுக்குள் இருந்து ஓடிவந்த ஆண்களும், காட்டிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த பெண்களும் கூடி நின்று, குதிரையில் அமர்ந்தபடி கையில் துப்பாக்கியுடன் அமர்ந்திருந்த துரையைப் பார்த்து பயந்தார்கள். ‘யார் இந்த துரை? எதற்குத் துப்பாக்கியால் சுட்டார்?’ என்ற அச்சம் ஒவ்வொருவர் கண்ணிலும் துளிர்த்தது. சேவல் அருகில் நிற்க, கோழி, தன் குஞ்சுகளனைத்தையும், ‘கெக் கெக்’ என்றழைத்து, விரிந்த இரு சிறகுகளிலும் குஞ்சுகளை அணைத்துக்கொண்டது. தாயின் எச்சரிக்கைக்குப் பணிந்து சிறகுகளுக்குள் அடைக்கலம் புகுந்த குஞ்சுகள், எதற்கான எச்சரிக்கை எனச் சிறகின் இறகுகளுக்குள் தலையை நீட்டி, விழியுருட்டி வேடிக்கை பார்த்தன.

“யார் நீங்க? எதுக்கு இந்தக் காட்டுக்குள்ள இருக்கீங்க?”

கோழியின் ‘குக் குக்’ குரலை ரசித்தபடியே மிரட்டலாகக் கேட்ட டர்னர், துப்பாக்கியால் வானம் பார்த்துச் சுட்டு, நாராசமாக ஊரை எழுப்பினார். டர்னரின் இயல்பே இப்படித்தான். முரண்பாடுகளால் நிறைந்த குண இயல்பால், அவர் நடத்தையை அவராலேயே கட்டுப்படுத்த முடியாதவராகியிருந்தார்.

“மொத்த ஆம்பளையும் பகல்ல படுத்துத் தூங்குறீங்க?”

“பகல்லதானே தொர தூக்கமே?” என்று ஓர் இளந்தாரி சொல்ல, ஊரின் பெரியாம்பிளை, கையில் இருந்த ஊன்றுகோலால் அவன் பாதத்தில் குத்தினார். காலில் விஷஜந்து கடிக்கிறதென்றெண்ணி, ‘ஐயோ’ என்றவன், பெரியாம்பிளையின் கோலைப் பார்த்துச் சுதாரித்தான்.

பெரியாம்பிளை கூட்டத்திலிருந்து முன்னால் வந்தார்.

“தொர யாருன்னு தெரிஞ்சிக்கலாமா?”

“மொதல்ல நீங்கல்லாம் யாரு? ஏன் இந்தக் காட்டுக்குள்ள வந்து குடிச போட்டிருக்கீங்கன்னு சொல்லுங்க. இல்ல, ஒவ்வொருத்தனையும் நெத்திப் பொட்டுல சுட்டுத் தள்ளுவேன்.”

டர்னர் துப்பாக்கியை உயர்த்திப் பிடித்தார். பெரியாம்பிளை வேகமாக, மறுப்பதுபோல் தலையாட்டினார்.

நீரதிகாரம் - 71 - பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சித் தொடர்...

“பொறுங்க தொர, நாங்க ஆனையூரு கள்ளருங்க. ஊர்ல பொழப்பு நடத்த முடியல தொர. மருத ஜில்லா கலெக்டரு ரொம்பப் பொல்லாதவரு. கள்ள ஜனங்க இருக்கிற ஊருன்னா போதும், நாலு போலீசுக்காரங்கள அனுப்பி ரா முச்சூடும் ஊருக்குள்ள நடக்க வுடுறாரு. ஒரு வா கஞ்சி குடிக்க முடியல. அதான், நாங்க காட்டுல நிம்மதியா வந்துட்டோம்.”

“கலெக்டரு யாருன்னு தெரியுமா?”

“ஒங்கள மாதிரி ஒரு தொரதானே சாமி கலெக்டரு? ஆனா ஆளு ரொம்ப முசுடாம். கேள்விதான். படிக்காத ஜனங்க சாமி நாங்க. எங்களுக்கு கலெக்டர எப்படித் தெரியும்?”

“முசுடுன்னா?”

“முசுடுன்னா...” பெரியாம்பிளை இழுத்தார்.

“ஏறக்குறைய ஒங்கள மாதிரிதான் தொர.” காலில் குத்து வாங்கிய இளந்தாரி மீண்டும் பேசினான்.

டர்னரின் முகம் சிவந்தது.

“பகல்ல தூங்குற வயசா ஒனக்கு?”

“பகல்ல தூங்காம ராத்திரியிலா தூங்குவாங்க? தொழிலுக்கு எப்ப போறது?” இளந்தாரியின் கிழிந்த வேட்டியைப் பிடித்திழுத்தாள் ஒருத்தி. கிழிசல் அகன்று, கையோடு போனது வேட்டியின் ஒரு பாதி. வேட்டி கிழிந்த சத்தத்திற்குக் கூட்டம் சிரித்தது.

“ஓ, ஆனையூர் கள்ளக்கூட்டம்னு சொன்னீங்க இல்ல? ராப் பூரா களவாண்டுட்டு இப்போதான் தூங்கறீங்களா? சரி, முசுடுன்னா? பதில சொல்லுங்க” என்றார் டர்னர்.

“தொர நாங்க காவக்காரங்க... களவுக்குப் போறவங்க இல்ல” பெரியாம்பிளை விளக்க முனைந்தார்.

“களவு, காவலு... நேரத்துக்குத் தகுந்த மாதிரி மாறிடும். முசுடுன்னா?”

“பேச்சுல சொல்றது தொர. நாங்க எங்க படிச்சோம்?” பெரியாம்பிளை சமாளித்தார்.

“சரி, சொல்ல வேணாம். பாராட்டுற வார்த்தையில்லைன்னு எனக்குத் தெரிஞ்சுடுச்சு. ஆனா கலெக்டர பாக்கலைன்னு சொன்னீங்களே, அந்தக் கலெக்டரு நான்தான்...” என்று டர்னர் சொன்னவுடன், நின்றிருந்தவர்கள் நின்ற நிலையில் சமைந்தார்கள். இறகு விலக்கிப் பார்த்துக்கொண்டிருந்த கோழிக்குஞ்சின் சிறுவிழி நின்று அசைந்தது.

குதிரையின் மேலிருந்து குதித்திறங்கிய டர்னர், பெயருக்குப் போடப்பட்டிருந்த கூரைப் புற்களையும், உட்கார்ந்தால் மட்டுமே உள்நுழையக் கூடிய வாசலையும் கொண்ட குடிசைகளைப் பார்த்தார். சுருங்கிக் கருத்த தேகமும், வறண்ட தலைமுடியும் பெருத்த வயிறும் சூம்பிய உடம்புமாக இருந்த மக்களைப் பார்த்தார். மெட்ராஸ் பிரசிடென்சியின் கவர்னர்களும் கலெக்டர்களும் கள்ளர்கள்மேல் கொண்ட அச்சம் அடக்குமுறையாக ரூபமெடுத்தது. கள்ளர்கள்மேல் சர்க்கார் வளர்த்த விரோதம், குரோதமாகப் பல இடங்களில் மாறி, சர்க்கார் உத்தியோகஸ்தர்களைப் பார்த்தாலே வெறுப்புகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார்கள் கள்ளர்கள். கள்ளர்கள் அதிகம் வசிக்கும் மேலூருக்குப் பெரியாற்றுத் தண்ணீரைக் கொண்டுசென்றால் அதிக லாபம் என்று அறிக்கை கொடுத்த கிளாக்ஸ்டன், சர்க்காரின் குரோதத்தை மட்டுப்படுத்த உதவினார். சர்க்காரின் உதவிக்கரம் எவ்விதத்திலும் கள்ளர்களுக்குக் கிடைத்துவிடக் கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்த உத்தியோகஸ் தர்களுக்கு மத்தியில், பெரியாற்றுத் திட்டத்தினால் மதுரை அடையவிருக்கும் லாபம் குறித்து அறிக்கை கொடுத்த கிளாக்ஸ்டன், சர்க்காரின் புரையோடிக் கிடந்த வெறுப்பை நீர்மப்படுத்தினார்.

டர்னரின் மனம் இளகியது.

“மொத்தம் எத்தன பேர் இருக்கீங்க? எத்தன குடும்பம் இருக்கு?”

“முப்பது, நாப்பது குடும்பம் இருப்போம் தொர. ஜனக்கட்டு ஏறக்குறைய எறநூறு, முந்நூறு இருக்கும்போல. ரெண்டு மூட அரிசிய கொட்டிக் கஞ்சி காச்சுனா, முன்னலாம் ரெண்டு வேளைக்குக் காணும். இப்போ, மூணு மூட ஆவுது. புள்ளகுட்டி பெருத்துப்போச்சு போல.”

“ஒன்னு சொல்றேன். ஒருத்தரும் மறுத்துப் பேசக்கூடாது” என்று பாய்ந்து குதிரையில் ஏறிய டர்னர், “கையில கெடைக்கிறத சுருட்டிக்கிட்டு எல்லாரும் என் பின்னாடியே அம்மையநாயக்கனூர் வர்றீங்க, சரியா?” என்று மீண்டும் ஒருமுறை வானத்தைப் பார்த்துத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு, குதிரையின் சேணத்தைப் பற்றினார்.

புழுதி பறக்க வெளியேறிய குதிரையை மிரளப் பார்த்த மக்கள், திகைத்து நின்றனர்.

“எப்படி உடனே போவ முடியும்?”

“அம்மையநாயக்கனூரா? அங்க எதுக்கு?”

“நம்ம காலச் சுத்திக்கிட்டு கெடக்கிற சீவாத்துகள எங்க வுடுறது?”

“நெசமாவே மருத கலிக்டரா?”

ஆங்காங்கு கேள்விகள் முளைத்தன. முன்னால் சென்ற குதிரையிலிருந்து இன்னொரு முறை துப்பாக்கியின் குண்டுச் சத்தம் கேட்டவுடன், குடிசைக்குள் வேகமாக ஓடி கையில் கிடைத்ததை எடுத்து மூட்டை கட்டத் தொடங்கினர்.

டர்னர், உதவி செய்வதாகவும் உதவி பெறுவதாகவும் நினைத்து அழைத்து வந்த கள்ளர் குடும்பங்களை, அம்மையநாயக்கனூர் ரயில் நிலையத்துக்கு வெளியில் குடி வைத்திருந்தார். அம்மை யநாயக்கனூரிலிருந்து எண்பது மைல் தொலைவில் உள்ள கூடலூர் வரைக்கும் செல்லும் பொருள்களுக்குக் காவலுக்குச் சென்று, மலைமேல் பொருள் ஏறும்வரை உடனிருக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்குத்தான் என்று சொல்லி, குடி வைத்திருந்தார். ஆண்கள் காவலுக்குப் போகும்போது, வீட்டிலிருக்கும் பெண்களெல்லாம் சிறுமலை ஏலத்தோட்டத்துக்கோ, பெரியகுளம் கால்வாய் வெட்டும் வேலைக்கோ போகலாம், ஆனால் ஒரு குடும்பத்துக்கு ஒரு நாளுக்கு நாலணா கூலி என்று உத்தரவு போட்டிருந்தார்.

விடிந்ததும் ரயில்வே ஜங்ஷன் திருவிழா போல் களைகட்டியிருந்தது. தலைப்பாகை கட்டிய சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் எல்லாம் வெள்ளை உடையில் தனித்துத் தெரிந்தனர். வாயில் வெற்றிலைச்சாறு தளும்பினால் துப்புவதற்கு கும்பாவுடன் உதவியாளர்களை நிற்க வைத்திருந்த ராமசாமி நாயக்கரின் காது, கலெக்டரின் குதிரைக் குளம்போசை கேட்கிறதா என்று கூர்மையாகக் கவனித்தபடி இருந்தது. ஒரு நாழிகை நேரத்தில் காதில் விழுந்த ஒலியில் நாயக்கருக்கு முகம் மலர்ந்தது.

“கலெக்டர் துரை வந்துட்டார்...” என்று எழுந்து நின்றார்.

கூடியிருந்த டெய்லர், மெக்கன்சி, லோகன் உள்ளிட்டவர்கள் கலெக்டரின் குதிரை வருகிறதா என்று பார்த்தனர்.

‘‘இவர் குதிரைக்குக்கூட ஒரு உத்தியோகம் வாங்கிக் குடுத்துடலாமா? கலெக்டர் வர்றதவிட, அவர் குதிரைக்கு பயந்துபோய் நிக்குறவங்கதான் அதிகமா இருக்காங்களே?”

“இப்போ குதிரை சர்க்கார் உத்தியோகம் பாக்கலையா என்ன? குதிரைக்குப் படி குடுக்குதே சர்க்கார், அப்போ அதுவும் சர்க்கார் உத்தியோகஸ்தர்தானே?”

“கலெக்டர் குதிரைக்குப் படி அதிகம். பென்னி இதுக்குக்கூட, இருவது வருஷம் முன்ன ஒரு பிரச்சினை பண்ணிருக்காரு, தெரியுந்தானே?” என்றார் டெய்லர்.

“அவர் பிரச்சினை பண்ணலன்னா தான் விசேஷம்...” மெக்கன்சி.

“மலைமேல ஆய்வு பண்ணப் போகும்போது, குதிரைங்களுக்கு ரொம்பக் கஷ்டம், அதனால குதிரைப் படியும் மலை வேலைக்குன்னு தனி அலவன்ஸும் தரணும்னு கவர்னருக்கு எழுதிட்டாரு. பென்னியோட குதிரை, ஸ்பெஷல் அலவன்ஸ் வாங்கிக் கிட்டுத்தான் மலைமேல ஏறுச்சு.”

“பென்னிய வம்பிழுக்கலைன்னா உங்க ரெண்டு பேருக்குமே பொழுது போகாதே?” லோகன்.

“இப்போ பிரச்சினை, பென்னிய வம்பிழுக்கிறது இல்ல. வரப்போற டர்னர்கிட்ட தப்பிக்கிறது எப்படின்றதுதான். இப்பவே கிடுகிடுன்னு சுத்துது தலை...” டெய்லர்.

“என்ன மிஸ்டர் டெய்லர், உங்க சூப்பிரண்டெண்டிங் இன்ஜினீயர் பர்லோவுல (லண்டனுக்குச் செல்ல சம்பளத்துடன் கூடிய விடுப்பு) இருந்து வந்துட்டாரா?”

டெய்லர் திகைத்தார். நேரடியாக வம்பிற்குள் குதிக்கும் டர்னருக்கு என்ன பதில் சொல்வதென்று தடுமாறினார்.

“மிஸ்டர் டர்னர், பென்னி பர்லோவில் போகலையே? புராஜெக்ட்டுக்கான மெஷனரிஸ் வாங்கத்தானே போனார்?” லோகன் பதில் சொன்னார்.

“மெஷனரியே வந்துடுச்சு, அவர் வரலையே?”

“அவர் இரண்டு மாசம் சொந்த லீவு எடுத்திருக்கார்.”

“சரி, லீவு கொடுக்கிறது கவர்னர் பிரச்சினை. நாம நம்ம வேலையைப் பார்ப்போம். உடனே எந்தெந்தப் பொருள்களை ஏத்தணும்னு சொல்லுங்க. முதலில் அதை அனுப்பலாம்.”

“டிரில்லர் மெஷின்ஸ், வயர் ரோப் போடுறதுக்கான மொத்த மெஷினரி, இதெல்லாம் மொதல்ல அனுப்பிடலாம். அடுத்த சீசன் வேலைக்குத் தேவை.”

அருகில் நின்ற ஹெட் அஸிஸ் டென்டைப் பார்த்தார் டர்னர்.

“மாட்டு வண்டிக, டிராக்‌ஷன் வண்டிக எல்லாம் தயாரா இருக்குங்க தொர.”

“ஏத்தச் சொல்லுங்க, ஒவ்வொரு மூட்டையா.” டர்னர் உத்தரவிட்டார்.

இரண்டு நாளாய் ஓடியாடி வேலை செய்துகொண்டிருந்த நாயக்கரை டர்னர் திரும்பிப் பார்க்கவில்லை. அடுத்தடுத்த உத்தரவுகளைப் பிறப்பித்துக்கொண்டே ஹூக்காவைப் பற்ற வைத்துப் புகைத்தார்.

வரிசையாக மாட்டு வண்டிகளும், டிராக்‌ஷன் இன்ஜின் வண்டிகளும் நிறுத்தப்பட்டன. குறைவான எடைகொண்ட மூட்டைகள் மாட்டு வண்டியிலும் எடைகூடிய பொருள்கள் டிராக்‌ஷன் இன்ஜின்களிலும் ஏற்றப்பட்டன. டர்னர் அழகர்மலைக் காட்டுக்குள்ளிருந்து அழைத்து வந்திருந்த கள்ளர்கள், ஆண்களும் குழந்தைகளுமாக மூட்டைகளை வண்டியில் ஏற்றினார்கள்.

முதல் வண்டியில் மூட்டைகள் ஏற்றி, அசைந்து விழாமல் இருக்க, சுற்றிக் கயிறு கட்டிக்கொண்டு, ஏறி உட்கார்ந்த வண்டியோட்டி, ‘ட்ட்ரு, ட்ட்ரு’ என மாட்டை விரட்ட, சுமைக்குத் தடுமாறி, சுமையின் அளவுணர்ந்து, சுதாரித்து, பின் நடையை நிதானித்தன காளைகள். முதல் வண்டிக்குக் காவலாக இரண்டு கள்ளர்கள் தொடர்ந்தனர்.

லோகனுக்கு ஆச்சரியமாக இருந்தது. எப்படி இத்தனை ஜோடி காளை மாட்டு வண்டிகள் என்று சுற்றுமுற்றும் பார்த்தார். மாட்டு வண்டிகளை வரிசைப்படுத்தியபடி ஒவ்வொரு வண்டியாகத் தகவல் சொல்லிக்கொண்டு பின்னால் சென்றுகொண்டிருந்த மேஸ்திரி ஆளுடைய பிள்ளையைப் பார்த்தார். கொடைக்கானலில் தானும் பென்னியும் கூடலூருக்கு மாட்டு வண்டியை அனுப்பச் சொல்லிக் கேட்டதற்கு, முடியவே முடியாதென்று விலகிக்கொண்ட ஆளுடைய பிள்ளை, இப்படி ஜரூராக வேலை செய்துகொண்டிருக்கிறாரே என்று அவரை அழைத்து வரச்சொல்லி ஆளனுப்பினார்.

லோகனைத் திரும்பிப் பார்த்த ஆளுடைய பிள்ளை, உடனடியாக எதிரில் வந்து பணிந்து நின்றார்.

“துரை சமூகத்துக்கு ஆளுடைய பிள்ளையின் பணிவான வணக்கம்.”

டர்னர் திரும்பி பிள்ளையைப் பார்த்தவர், ஒன்றும் சொல்லாமல் லோகனைப் பார்த்தார்.

“என்ன பிள்ளை, கள்ளநாட்டுப் பக்கம் எங்க வண்டியோ மாடுகளோ வராதுன்னு சொல்லி, கும்பிட்டுட்டுப் போனீங்க, இப்போ எப்படி வந்திருக்கீங்க?”

ஆளுடைய பிள்ளை கக்கத்தில் வைத்திருந்த தாளையெடுத்துப் படித்துப் பார்த்துவிட்டு, மீண்டும் கக்கத்தில் வைத்துக்கொண்டவர், டர்னரைக் கும்பிட்டுவிட்டு, லோகனைப் பார்த்தார்.

“கலெக்டர் தொரையை என்னன்னு நெனைச்சீங்க? அந்தா போற வண்டிகள பாருங்க...” என்றார்

“போற வண்டியில என்ன?”

“கூட யாரு போறா தொர? ஒவ்வொரு வண்டிக்கும் ரெண்டு கள்ளன தொணைக்குப் போட்டுட்டாரு இல்ல? இனிமே கள்ளநாட்டுப் பக்கம் போனாலும் எங்களுக்கு மாட்டப் பத்தி என்னா கவலை? நாலு மொதலாளிக மாட்டையும் மொத்தமா அணை வேலைக்கு எடுத்துக்கிட்டேன் இல்ல? இப்போ பெரிய மேஸ்திரியாயிட்டேனே! நூத்தம்பது ஜோடி மாடுக கைவசமிருக்கு. கள்ளந்திரியில கள்ளனுங்க வெரலையெல்லாம் சேத்து வச்சிக் கட்டிவிட்டு, முழு வசூலோட போற அழகர்சாமி, தன்னோட உண்டிய தொறந்துவிட்டுட்டு, ‘எடுக்க முடியறத எடுத்துக்கோ’ன்னு சொல்லிட்டு, கள்ளனுங்க முன்னாடி கள்ளச்சிரிப்பு சிரிச்சிக்கிட்டு ஒக்காந்திருப்பாரே, அப்படித்தான் இப்போ நானிருக்கேன். கூட்டிக்கிட்டுப் போற வண்டி மாடுகள பொறுப்பா திரும்பக் கூட்டிக்கிட்டு வந்து சேர்க்க வேண்டியது இந்த ஆனையூர் கள்ளனுங்க பொறுப்பு. கீழ்நாட்டுக் கள்ளனுங்கள பத்தி இனிமே எனக்கென்ன தொர கவல?” என்று தொப்பை குலுங்கச் சிரித்தார் ஆளுடைய பிள்ளை.

நீரதிகாரம் - 71 - பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சித் தொடர்...

மூன்று இன்ஜினீயர்களுக்கும் டர்னரை எப்படிப் புரிந்துகொள்வது என்று குழப்பமாக இருந்தது. பெரும் பிரச்சினையாக இருக்கப் போகிறது என்று நினைத்த மாட்டு வண்டிகளுக்கு எளிதாக ஒரு தீர்வைக் கண்டுபிடித்துவிட்டாரே என்று மகிழ்ந்தார்கள். தகவல் அனுப்பினால் பென்னிக்குக் கவலை குறையுமென்று டெய்லருக்கு எண்ணம் ஓடியது. இருபதாயிரம் மைல் தூரத்திலிருந்து, தூத்துக்குடி வரை கப்பலில் வந்து, அம்மையநாயக்கனூர் வரை ரயிலில் வந்து, கூடலூர் செல்லும் பொருள்களின் மதிப்பு பல ஆயிரங்கள். ஆனால் சில பத்து ரூபாய் மதிப்புள்ள மாடுகளுக்குக் காவல் போடும் நிலையிருப்பதை நினைத்துச் சிரித்தார் டெய்லர்.

“உங்களின் முயற்சி அபாரமானது மிஸ்டர் டர்னர். புராஜெக்ட்டுக்குப் பேருதவி.”

“மிஸ்டர் டெய்லர், பி.டபுள்யூ இன்ஜினீயர்களும் கலெக்டர்களும் என்று ஒத்துப் போயிருக்கிறோம்? எனக்கு உங்களின் பாராட்டு தேவையில்லை.”

“நாம் ஒத்துப்போவதும் போகாததும் இப்போதைய பிரச்சினையில்லை. மிகச் சிரமமான ஒரு காரியத்தை எங்களுக்கு எளிதாக்கியிருக்கிறீர்கள். அதற்காக உங்களுக்கு நன்றி சொல்வது என் கடமை.”

“நான் உங்களுக்கு உதவவில்லை. காட்டில் அடைக்கலமாகியிருந்த ஜனங்களுக்குத்தான் உதவினேன்.”

மெக்கன்சி, டெய்லரைப் பார்த்த பார்வையை டெய்லர் புரிந்துகொண்டு அமைதியானார்.

பாறைகளைத் துளையிடும் இயந்திரங்களையும் மலைமீது டிராம் போடுவதற்கான இயந்திரங்களையும் டிராக்‌ஷன் இன்ஜின் வண்டியில் ஏற்றினார்கள்.

நின்றிருந்தவர்களின் முகத்தில் கரிப்புகை படிய, சரளைக்கல் பரப்பப்பட்டிருந்த புத்தம் புதிய பாதையில் மூச்சிரைத்தபடி நகர்ந்தது வண்டி.

ஜங்ஷனின் பரந்த வாயிலில் குஞ்சுகள் பின்தொடர, காட்டிலிருந்து இடம்பெயர்ந்த ஆனையூர்க் கோழி, சத்தங்களைப் பொருட்படுத்தாமல் மண்ணைக் கீறி, இரை தேடியபடி முன்னேறிக்கொண்டிருந்தது.

- பாயும்