மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீரதிகாரம் - 73 - பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சித் தொடர்...

நீரதிகாரம்
பிரீமியம் ஸ்டோரி
News
நீரதிகாரம்

சமஸ்தானத்திலிருந்து வெளியேறிய இந்த ஐந்தாறு மாதமாய் அய்யங்கார், எதிலும் பிடிப்பின்றி இருந்தார். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் திவானாக இருந்தவரும் அய்யங்காருடன் உடன்படித்தவருமான மாதவ ராவ், அய்யங்காரைச் சந்தித்தார்.

கதிரவன் உக்கிரம் கொண்டிருந்த கடுங்கோடை கொஞ்சம் தணியத் தொடங்கியது. நீர்த்தேடிக் கால்கடுக்க நடந்த ஆவினங்களுக்கு, கோடை மழை கருணை காட்டியது. காய்ந்த புற்களின்மேல் விழுந்த மழைத்துளியைப் புற்கள் கிரகித்துக்கொள்வதற்குமுன், கன்றுகள் நுனிநாவினால் துழாவியெடுத்தன. இலைகளை உதிர்த்தும், சுருட்டியும் வெப்பத்தின் தாக்கம் தணித்த தாவரங்கள் மீதமிருந்த இலைகளோடு ஸ்தம்பித்தன. கடுங்கோடையில் மலை கிரகித்த வெம்மையை, மாலைத் தென்றல் கனலாய் விசிறியது. சர்வ ஜீவராசிகளும் கதிரவனின் சன்னதம் பொறுக்க முடியாமல் மண்புழுக்களைப்போல் அவரவருக்குத் தோதான இடங்களில் அடைக்கலம் புகுந்தார்கள்.

குளிர்த் தேசத்திலிருந்து வெயில் தேசத்திற்குக் கப்பலில் வந்திறங்கிய பென்னியை, வெயில் சுட்டது. தூத்துக்குடியில் இருந்து அம்மையநாயக்கனூருக்கு ரயிலில் வருவதற்குள் உடல் வியர்த்து, கடும் வெப்பம் சோர்வைத் தந்தது. நா வறட்சியும் உடலெரிச்சலும் ஒருசேர பென்னியைச் சோர்வடையச் செய்தன. நேராகக் கொடைக்கானல் சென்றால் உடல் சமநிலைகொள்ளும். ஒன்றிரண்டு நாள் ஓய்வுக்குப் பிறகு, ஏலமலைக்குத் திரும்பலாம் என்று மனம் விரும்பியது. ஜார்ஜியையும் குழந்தைகளையும் பார்க்க மனம் பரபரத்தது. வீட்டிலேயே இல்லாததால், எடித்துக்குத் தன்னைப் பார்த்து பயம் வருவதாகவும், தன்னை அடையாளம் கண்டுபிடிக்க எடித் சிரமப்படுவதாகவும் டோரா சொன்னது நினைவுக்கு வந்தது. லண்டன் சென்று ஐந்து மாதங்கள் ஓடிவிட்டன. இந்நேரம் எடித் நடக்கத் தொடங்கியிருக்கும். ஜார்ஜி, இரண்டு மாதத்திற்கு முன்பெழுதிய கடிதத்தில் எடித், ஜார்ஜியின் விரலை அழுந்தப் பிடித்துக்கொண்டு எழுவதற்கு முயல்வதாக எழுதியிருந்தாள். பென்னி, மே மாத இறுதியிலேயே லண்டனிலிருந்து புறப்படத் திட்டம் வைத்திருந்தார். வயர் ரோப் அமைப்பதற்கான கருவிகளும், சுரங்கம் அமைப்பதற்குத் தேவையான இயந்திரங்கள் சிலவும் அவசியம் வாங்க வேண்டியிருந்தது, மதர் ரோஸைச் சந்திக்கவும் திட்டமிட்டிருந்ததால் மே மாதப் பயணத்தை ஒத்தி வைத்திருந்தார். இப்போது எடித் நடக்கத் தொடங்கியிருக்கும். உயரம் கூடி, முகத்தில் பெற்றோரின் சாயல் தெள்ளத்தெளிவாய்த் தெரியத் தொடங்கியிருக்கும் குழந்தைகளைப் பார்ப்பது பேரின்பம். வேலையைக் கட்டிக்கொண்டு அழும் சாதாரணர்களுக்கு வாய்க்கப்பெறாத இன்பம்.

நீரதிகாரம் - 73 - பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சித் தொடர்...

பென்னி, குழந்தைகளையும் ஜார்ஜியையும் அம்மையநாயக்கனூர் வரச்சொல்லியிருந்தார். அவர்களையும் அழைத்துக்கொண்டு தேக்கடியில் தங்க வைத்துக்கொள்ளலாம் என்று திட்டம். மேல்மலையில் தென்மேற்குப் பருவமழை தொடங்கிவிட்டதால் தேக்கடியில் தங்குவதில் சிரமமிருக்காது என்றெண்ணினார்.

உடல் முழுவதும் படிந்திருந்த கரித்துகள்களும் காற்றின் வெம்மையும் பென்னிக்கு உடல்சோர்வைத் தந்திருந்தன. ரயில் எப்போது அம்மையநாயக்கனூர் செல்லுமென்று பரபரத்தார். அவரை மேலும் சோதிக்க விரும்பாத ரயில், மெல்ல அம்மையநாயக்கனூர் ரயில் நிலையத்திற்குள் நுழைந்தது. ரயிலின் வேகம் குறைந்தவுடன், ஜன்னல் வழியாக கரியை அள்ளிக்கொட்டிய காற்றின் வேகமும் குறைந்தது. பென்னி எழுந்து கதவோரம் வந்து நின்றார்.

ரயில் நிலையத்திற்கு வெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த குன்றுகள் போன்ற மூட்டைகள் கண்ணில்பட்டன. பென்னிக்கு இதுவரை இருந்த உடல் அசௌகரியங்கள் எப்படி நீங்கின என்பது தெரியாமல் மறைந்தன. ஜார்ஜியும் குழந்தைகளும் வந்திருப்பார்களே என்ற எண்ணமெழாமல், பெரியாறு அணை கட்டுமானப் பொருள்களின்மேல் பரவசம் கொண்டிருந்தார். ‘இதெல்லாம் சேர்ந்து அந்த மாய அணையை எழுப்பிவிட வேண்டும்’ என்று மனத்திற்குள் வேண்டினார். எத்தனை உழைப்பு, ஒரே ஒரு காரியத்தைச் செய்வதற்கு? பென்னியின் மனம் வியப்பில் ஆழ்ந்தது. இயற்கையைத் தங்கள் வசப்படுத்த, வழிக்குக் கொண்டு வர, எத்தனை முயற்சி தேவைப்படுகிறது? அதில் வெற்றி பெறுவதற்கு, இயற்கையிடமே உதவி வேண்டி நிற்பது நகைமுரண்தான்.

ரயிலின் சக்கரங்கள் தண்டவாளத்தில் உரசியபடியே தேய்ந்து நின்றன. நடைமேடையில் டெய்லரும் லோகனும் கடக்கும் பெட்டிகளைப் பார்த்தபடி நிற்பது தெரிந்தது. எதிர்பார்ப்பு நிரம்பிய இருவரின் முகமும், பென்னிக்குச் சந்தோஷம் தந்தது.

“ஹலோ டெய்லர்... ஹலோ லோகன்...” இருவருக்கும் முகமன் கூறும்விதமாகச் சத்தமாகச் சொன்னார்.

பென்னியின் குரல் கேட்டு, பின்னால் திரும்பிய இருவரும் அடுத்துவரும் பெட்டியில் இருந்த பென்னியைப் பார்த்துக் கையசைத்தார்கள். பென்னி பாய்ந்தோடி இறங்கினார். இரண்டு கூலிகள் பென்னியிருந்த பெட்டிக்குள் ஏறி அவரின் சாமான்களை இறக்கச் சென்றார்கள். பென்னி, டெய்லரையும் லோகனையும் கைகுலுக்கி அணைத்தார். பென்னியின் மேலிருந்த கரித்துகள்கள் அவர்கள் மேலும் ஒட்டிக்கொண்டன. மூவருமே கறையைப் பொருட்படுத்தவில்லை.

“சொந்தத் தேசத்திற்குச் சென்றுவந்த பொலிவு தெரிகிறதே மிஸ்டர் பென்னி?”

“இருப்பது நியாயம்தானே?” பென்னி சிரித்தார்.

“நல்லவேளை, பென்னிக்குச் சிரிப்பு மறந்துபோகலை” லோகன் சொன்னவுடன், பென்னி லோகனின் கைபிடித்துக் குலுக்கினார்.

“உங்களை, உங்கள் கடிதம்தான் முந்திக்கொண்டது பென்னி.” டெய்லர் சொன்னவுடன் பென்னி சிரித்தார்.

“நல்லதுதானே? பென்னி கடிதத்தில் பேசிய அளவு நேரில் பேசியிருக்க மாட்டாரே?” லோகன் மீண்டும் வம்பிழுக்கப் பார்க்க, “லோகன்...” என்றார் டெய்லர்.

“பேசட்டும். லோகனின் கேலியில்லாமல் என்னுடைய நாள்கள் வறட்சியாக இருந்தன” என்றார் பென்னி.

“கூடலூரில் வேலை ஆரம்பிச்சாச்சா டெய்லர்?”

“வயர் ரோப் தயார் பென்னி. நீங்கள் வந்தவுடன் ஏற்றியனுப்ப பொருள்கள் தயாராக இருக்கின்றன.”

டெய்லர் சொன்னவுடன் பென்னிக்கு உற்சாகம் பிறந்தது.

“உடனே புறப்படுவோமே...”

நீரதிகாரம் - 73 - பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சித் தொடர்...

“எங்கள் நினைவே இல்லையா ஜான்?” ஜார்ஜியின் குரல் கேட்டுத் திரும்பிய பென்னி குழந்தைகளைப் பார்த்ததும் அருகில் சென்றார். பனித்துளியின் தூய்மை ஒளிரும் கண்களோடு பென்னியைப் பார்த்துக்கொண்டிருந்த டோராவின் அருகில் சென்று மண்டியிட்டு அமர்ந்தார்.

“மை டியர் டோரா...”

டோராவை இழுத்தணைத்தார். குழந்தை உடலின் பவித்திரத்தால், பென்னியின் உடலில் சிறு நடுக்கம் வந்தது.

“பப்பா...” டோரா, பென்னியின் கழுத்தில் முத்தமிட்டாள்.

டோராவை இன்னும் அழுந்த அணைத்துக்கொண்ட பென்னி, அவளை அப்படியே தூக்கிக்கொண்டு எழுந்தார். ஜார்ஜியையும் எடித்தையும் லூசியையும் ஒவ்வொருவராக அணைத்தவர், ஜார்ஜியின் முகம் பார்த்து நின்றார்.

“நேற்று இரவிலிருந்து இங்கு வந்து காத்திருக்கிறோம். நீ எங்களை விசாரிக்கக்கூட இல்லை. உடனே கூடலூர் கிளம்பலாமா என்று கிளம்புகிறாய்?” ஜார்ஜி பொய்க்கோபம் காட்டினாள்.

பென்னி என்ன பதில் சொல்வதென்று புரியாமல் எடித்தின் தலையை வருடினார்.

“பப்பா, எடித் நடக்கிறா தெரியுமா?” என்று தன்னை அணைத்திருந்த பென்னியின் கைகளை உதறிவிட்டு, இறங்கினாள். ஜார்ஜி அணைத்திருந்த எடித்தைப் பிடித்திழுத்தாள்.

“பப்பாவுக்கு நடந்து காட்டு பேபி...” என்று எடித்திடம் சொன்னாள்.

“வேகமாக இழுக்கக் கூடாது டோரா. கீழே விழுந்திடப்போறாள்...” ஜார்ஜி எச்சரித்தாள்.

எடித் பென்னியைப் புது ஆளாகப் பார்த்து, மிரண்டது. டோரா அருகில் இருக்கும் துணிவில், அவளின் கைபிடித்து மெல்ல அடியெடுத்து வைத்தது. எடித் ஓரடி எடுத்து வைத்ததும் நின்றிருந்தவர்கள் எல்லோரும் கைதட்டினார்கள். எடித் மிரண்டு எல்லோரையும் பார்த்தது. அவர்கள் முகத்தில் தெரிந்த புன்னகை எடித்தை உற்சாகப்படுத்தவே, எடித் இன்னொரு அடியை எடுத்து வைத்தது.

“வெரி குட் பேபி... வா, வா” என்று டோரா உற்சாகப்படுத்தவே எடித் அடியெடுத்து வைத்து, பென்னியை நோக்கி முன்னேறியது. பென்னி, பாய்ந்து சென்று எடித்தைத் தூக்கிக் கட்டியணைத்து முத்தமிட்டார்.

நிலையத்திலிருந்து ரயில் புறப்படத் தயாராவது தெரிந்தது. புறப்படும்போது வெளியாகும் கரிப்புகை, ஆளையே கறுப்பாக்கிவிடும் என்பதால், குழந்தைகளுடன் எல்லோரும் நிலையத்தை விட்டு வெளியேறினார்கள்.

பொழுதிறங்குவதற்குள் கூடலூர் சென்று சேரும் வகையில் திட்டமிட்டு, குழந்தைகளுக்கும் ஜார்ஜிக்கும் சாரட்டொன்றை ஏற்பாடு செய்து அனுப்பினார் பென்னி. மூவரும் அவரவர் குதிரையில் கிளம்பினர்.

“இப்போதான் எனக்கு மூச்சு வருது...” டெய்லரின் குரலில் சுமையிறங்கிய ஆசுவாசம்.

“அணையைக் கட்டி முடிக்கிற வரைக்கும் ஆசுவாசமான சுவாசம் நம்ம யாருக்குமே கிடையாது, டெய்லர்.”

“இருந்தாலும் நீ பொறுப்பேத்துக்கிட்டா, நீ சொல்ற வேலையை மட்டும் பார்ப்பேன். சீப் இன்ஜினீயருக்குத் தபால் எழுதுவது, செக்ரட்டரிக்குத் தபால் எழுதுவது, ஒவ்வொன்னுக்கும் அவங்ககிட்ட அனுமதி கேட்டு நிக்கிறது, இதெல்லாம் எனக்கு ஒத்துவராது. என்னால சமாளிக்கவே முடியல. நீ எப்போ வருவேன்னு பார்த்துக்கிட்டு இருந்தேன்...”

“உனக்குக் கஷ்டமா இருந்த எதுவுமே மாறல. அதைச் செய்யறதுக்கு நான் வந்துட்டேன், அதானே?”

“என்மேல சுமை இல்லை. அதான் எனக்கு வேண்டியது.”

பென்னி சிரித்தார்.

“பெரிய பிரச்சினைக்கு கலெக்டர் டர்னர் அவரா ஒரு தீர்வ கண்டுபிடிச்சுட்டார் பென்னி, தெரியும்தானே?”

“தூத்துக்குடியில சொன்னாங்க. ஆச்சரியம். டர்னரிடம் இருந்த சாத்தானை எந்த தேவதை விரட்டியதோ?”

“மாட்டு வண்டிப் பிரச்சினையும் முடிஞ்சது, பாதுகாப்புப் பிரச்சினையும் முடிஞ்சது, கள்ளர்களைக் காவலுக்குப் போட்டவுடனே, மாட்டு வண்டி மேஸ்திரி மொத்த வண்டி மாட்டையும் கொண்டாந்து இறக்கிட்டான்.”

“நான் பயப்பட்டதே இதுக்குத்தான், அடிவாரத்துல இருக்கிற சுண்ணாம்பையும் மெஷினையும் எப்படி மூவாயிரம் அடி கொண்டு போறதுன்றதுதான். நல்லவேளை, இயற்கையாவே அதுக்கு ஒரு வழி பொறந்துடுச்சி.”

“ஆமாம் பென்னி, இதுவரைக்கும் ஒரு வழிக்கு முப்பது வண்டின்னு, மூணு குழு போயிடுச்சி. போனவங்க திரும்ப வர்ற வரைக்கும் காத்திருக்க வேண்டியதில்ல. அடுத்த குழு, இன்னிக்குச் சாயங்காலமோ, நாளைக்கோ கெளம்பிடும்.”

“டர்னர் தீர்த்துவைக்க வேண்டிய தாவா இன்னும் நிறைய இருக்கு. இருந்தாலும், இப்போதைக்குப் பெரிய தாவா முடிந்தது.” பென்னி பெருமூச்சு விட்டார்.

“பென்னி, உனக்கொரு அதிசயமான சம்பவம் சொல்றேன். டேம் சைட்ல பள்ளம் இருக்குன்னு தெரிஞ்சவுடனே எனக்கு மூச்சே நின்னுடுச்சி. நீ வந்த பிறகுதான் அதுக்கு வழி கிடைக்கும்னு நெனைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா பாரு, ஆச்சரியமா ஒரு சம்பவம்.”

“என்ன நடந்துச்சி டெய்லர்?”

“தேவனின் அந்த அற்புதத்தைப் பார்க்க எங்க யாரையுமே டெய்லர் கூட்டிக்கிட்டுப் போகலை.”

“அற்புதத்தையே காட்டினாலும் அற்புதம்னு ஏத்துப்பியான்னு தெரியலையே? அதனால நீ குறுக்க பேசாம வா லோகன்.” டெய்லர் சொன்னவுடன், லோகன் தன் குதிரையைச் சொடுக்கினார். குதிரை வேகமெடுத்தது.

“சாத்தான்கள்தான் அற்புதங்களில் இருந்து விலகிப்போவார்கள் லோகன்” டெய்லர் சத்தமாகச் சொன்னார்.

“சாத்தான்கள் இருந்தால்தான் உங்கள் அற்புதங்களுக்கு வேலை இருக்கும் டெய்லர்... என்னை ஒதுக்காதே.” லோகனின் குதிரை பாய்ந்தது.

“லோகனை மாற்றவே முடியாது, நீ சொல்லு.”

“சிறு வயதல்லவா, இளமை தரும் துடிப்பு... லவ்லி யங் பாய்” லோகனைப் பாராட்டிய டெய்லர், கூடலூர் பெரியவரைப் பற்றிச் சொன்னார்.

“நடக்கவே முடியாமல் இருந்த பெரியவர், என்னைப் பார்த்தவுடன் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, எழுந்துநின்று வேகமாக நடக்க ஆரம்பித்தார். வயசானவங்களோட நடவடிக்கையைப் புரிஞ்சிக்க முடியாதில்லையா? பயந்துக்கிட்டுத்தான் கூடப் போனேன். சுண்ணாம்புக் கல் ஏற்றுவதற்காக அங்க போனேன். ஆனா, அவர் என்னை எங்க கூட்டிக்கிட்டுப் போய் நிறுத்தினார் தெரியுமா பென்னி?”

“எங்கு நிறுத்தினார்?”

“செங்கல் சுடுறதுக்குத் தோதான மண் குன்று. கூடலூர், கம்பம் கோட்டையெல்லாம் அந்த மண்ணெடுத்துச் செய்த செங்கல்லால கட்டுனதுதானாம். இந்தச் சுற்றுவட்டாரத்துலயே சுர்க்கி சுடுறதுக்குத் தோதான மண் அங்கதான் இருக்காம். இந்த மண்ணுல சுடுற சுர்க்கியும் சுண்ணாம்பும் சேர்ந்துட்டா காலம் போகப் போக வலிமையாகுமாம். நம்முடைய நல்ல நேரம் மட்டுமல்ல பென்னி, நடுக்காட்டுல காட்டாத்துக்குக் குறுக்கே அணையக் கட்டுறோம், அதோட ஆயுளும் முக்கியமாச்சே? வழக்கம்போல பூப்பாறைகளை நீக்கிட்டு கடினப்பாறை மேல அடித்தளம் போடுவோம். இப்போ பாரு, கடினப் பாறைக்கும் கீழே, சுர்க்கி, சுண்ணாம்பெல்லாம் சேர்த்து, என்னைக்குமே நிலைகுலையாத அடித்தளம் போடுறதுக்கு வாய்ப்பு வந்துடுச்சே? அந்தப் பெரியவர் அவரோட குடும்பத்துக் கதையெல்லாம் சொன்னார். எனக்கு ஒன்னும் புரியல. ஆனா ஏதோ ஒரு பாவம் சேந்திருக்காம். இந்த நல்ல காரியத்தைச் செஞ்சதால பாவம் தீர்ந்ததுன்னு நெனைக்கிறார். இதுக்குத்தான் காத்திருந்த மாதிரி இருந்தது அவரோட நடவடிக்கை. இந்த மாதிரி அமானுஷ்யங்களை நம்புறயா பென்னி?”

நீரதிகாரம் - 73 - பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சித் தொடர்...

‘எவ்வளவு பெரிய வழிகாட்டல்? பெரியவருக்குப் பாறையில் பள்ளம் விழுந்த விஷயமே தெரியாது. ஏற்கெனவே குருவனூத்துச் சுண்ணாம்பையும் பரிசோதிக்கவே அவசியமில்லைன்னு சொன்னார். இப்போது சுர்க்கி சுடுவதற்கான செம்மண் குன்றையும் காட்டியுள்ளார். வெற்றிலை போட்ட ஜீசஸ் என்று அவரை முதன்முதலில் பார்த்தபோது தோன்றிய உவமையை நினைத்தார். உண்மைதான் போலும்.’ டெய்லர் சொன்ன செய்திகேட்டு பென்னிக்குச் சிந்தனை ஓடியது.

“நம்ப முடியாத சம்பவங்கள் இருந்தால்தான் நாம கடவுளையும் நம்புவோம், வாழ்க்கையும் சுவாரசியமா இருக்கும். போனவுடனே அந்தப் பெரியவர பார்ப்போம் டெய்லர்.”

அடுத்த நாள் விடியலில், கூடலூரின் மலையடிவாரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வயர் ரோப்பில் இரும்புக் கூடைகளில் சுண்ணாம்புக் கற்களும், செம்மண் மூட்டைகளும் ஏற்றப்பட்டன. மரக் கம்பங்களுக்கிடையே காற்றின் விசையுடன், மெல்ல நகர்ந்த கூடைகளைப் பார்த்துப் பரவசத்துடன் நின்று கொண்டிருந்தார் பென்னி.

புரசைவாக்கம் திவான் ராமய்யங்காரின் பங்களா.

தூக்கமின்றிப் படுக்கையில் நள்ளிரவுவரை புரண்டபடி இருந்தார் ராமய்யங்கார். கடும்கோடையின் தாக்கம் பொழுது தாழ்ந்து கடைசி சாமம் வரை தணியாமல் இருந்தது. கோடையின் வெப்பத்தை ராமய்யங்காரின் உடல் தாங்கமுடியாமல் சோர்ந்தது. பங்கா இழுப்பவன் தூங்கிவிட்டிருப்பான், விசிறி அசையாமல் நின்றிருந்தது. திருவிதாங்கூரின் தண்மையான காலநிலைக்குப் பழகிவிட்ட உடல், மெட்ராஸின் வெயிலுக்குத் தகித்தது. அதுவும் இந்தக் கோடை, மழைபெய்வதைப் போல் வெயிலைப் பொழிந்தது. இரவு ஏழு மணி வரை பொழுது மறைவதில்லை.

இயற்கை உபாதையழைக்க, சிறுநீர் கழித்துவிட்டுப் படுக்கைக்குத் திரும்பினார். மீண்டும் படுக்கைக்குச் செல்லும்முன், தன் அறையில் இருந்த ரவிவர்மாவின் ஓவியத்தின் அருகில் சென்றார். பெயரன் பத்மநாபனும் தானும் இருக்கும் ஓவியத்தின் அருகில் நின்றார். பத்மநாபனின் ஒளிரும் கண்களும், ஈரம் கோத்துத் தாமரை இதழ்போல் குளிர்ந்திருந்த உதடுகளும் பார்க்கப் பார்க்கப் பரவசம் நிறைந்தது. ஓவியத்தைக் கையில் எடுத்தார். சுவரில் ஓவியத்தைப் பொருத்த வேண்டுமென்று குடும்பத்தினர் சொன்னபோது, ராமய்யங்கார் மறுத்துவிட்டார். நினைக்கும்போது ஓவியத்தைக் கையருகில் எடுத்து வைத்துப் பார்க்கும் பேரவா அவருக்குள் இருந்தது. இப்போதும் முயன்று, ஓவியத்தைத் தூக்கிக்கொண்டு, தன் குவிந்த வயிற்றின்மேல் வைத்துக்கொண்டு, படுக்கையில் சாய்ந்தார்.

ஓவியத்தின்மேல் விரல் வைத்துத் துழாவினார். இத்தனை மாதங்களாகத் தன்மேல் சாய்த்துக்கொள்ளும்போது கனக்கும் ஓவியம் இன்று பூமாலைபோல் மேல் விழுந்தது. வண்ணங்களின்மேல் கைபடும்போது ரவிவர்மாவின் நினைவு வந்தது.

திருவனந்தபுரத்தில் இருந்து திரும்பியபின், மெட்ராஸ் பிரசிடென்சியில் இருக்கும் நண்பர்கள் ஒவ்வொருவராக வந்து பார்த்துச் சென்றார்கள். ரவிவர்மாவின்மேல் ஆழமான நட்பு பாராட்டும் எட்கர் தர்ஸ்டன் ஒரு நாள் மாலை வந்திருந்தார். அவருக்கு ஓய்வென்பதே கிடையாது. காலையில் மருத்துவக் கல்லூரியில் பாடமெடுப்பார். பிற்பகலுக்குமேல் மியூசியத்தில் வேலை செய்வார். மாலை நேரம் முழுக்க கீழைச் சுவடிகள் நூலகத்தில் ஓலைச்சுவடிகளைப் படித்துப் பார்த்துப் படியெடுப்பார். சேகரித்த குறிப்புகளை இரவு ஒழுங்கு செய்து தனியாக எடுத்து எழுதிவைப்பார். அவருடைய நாளொன்று, நான்கு மனிதர்களின் வாழ்வுக்கு நிகரானது. அத்தனை அரிய காரியங்கள் செய்துகொண்டிருக்கும் தர்ஸ்டன் ஒருநாள், ராமய்யங்காரைச் சந்திக்க வந்ததற்குப் பிரதான காரணம், ரவிவர்மாவின் ஓவியம். ராமய்யங்காரை ரவிவர்மா வரைந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டவுடன், ராமய்யங்காரின் பங்களாவுக்கே வருகைதந்து, ஓவியத்தை வாங்கிப் பார்த்தார். ஓவியத்தின் நிறங்களை வருடியபோது அவர் முகத்தின் பொலிவு விவரிக்க இயலாதது. தர்ஸ்டனின் வருகைக்குப் பிறகு, ராமய்யங்காருக்குத் தன் ஓவியத்தின்மீதான பெருமிதம் அதிகமானது.

பிறர் முன்னால் மேலோங்கும் ஓவியத்தின் பெருமிதம், தனிமையிலிருக்கும்போது பெரும் சுமையாகித் தன்னை அழுத்துவதைத் தாங்க முடியாமல் தத்தளித்திருக்கிறார் அய்யங்கார். ஓவியம் வரையப்பட்ட இறுதிநாள், பெரும் களங்கத்துடன் நின்ற நாள். சர்க்கார் உத்தியோகத்தின் 40 வருஷ அனுபவத்தையும் முழுமையாகப் பயன்படுத்திச் சமஸ்தானத்தின் உயர்வுக்கு நாளும் பகலும் வேலை செய்து, கடைசியில் ஓர் அவப்பெயருடன் வெளியேற நேர்ந்த துர்பாக்கியம், ஓவியத்தின் வண்ணத்திற்குள் கலந்திருப்பதாக ராமய்யங்காருக்குத் தோன்றும். தனிமையில் ஓவியத்தைப் பார்க்கும்போதெல்லாம் ரவிவர்மாவை அழைத்து மீண்டும் வரையச் சொல்ல வேண்டுமென்று நினைப்பார். தன்னுடைய அவப்பெயரின் கசப்பு கலக்காத வண்ணமொன்றால் தன்னுடைய ஓவியம் வரையப்பட வேண்டுமென்பதுதான் ராமய்யங்காரின் விருப்பம்.

சமஸ்தானத்திலிருந்து வெளியேறிய இந்த ஐந்தாறு மாதமாய் அய்யங்கார், எதிலும் பிடிப்பின்றி இருந்தார். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் திவானாக இருந்தவரும் அய்யங்காருடன் உடன்படித்தவருமான மாதவ ராவ், அய்யங்காரைச் சந்தித்தார். மெட்ராஸில் இந்திய தேசிய காங்கிரஸின் மூன்றாவது கூட்டத்திற்கான ஏற்பாட்டுக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்று இருப்பதாகவும், கூட்டத்தைச் சிறப்பாக நடத்த, அய்யங்காரும் உடன் பணியாற்ற வேண்டுமென்றும் அழைத்தார். காங்கிரஸின்மேல் அய்யங்காருக்கு அதிக நாட்டமில்லை. லெஜிஸ்லேட்டிவ் கவுன்சிலின் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டுமென்ற ஒரு கோரிக்கைக்காக, சிரமப்பட்டுக் கூட்டம் நடத்த வேண்டுமா? கவர்னரிடமும் வைஸ்ராயிடமும் கோரிக்கை வைத்தாலே நடக்கப்போகிறது என்றெண்ணினார். நண்பரின் கோரிக்கையை நிராகரிக்க விரும்பாதது ஒரு பக்கமென்றாலும், மனவுளைச்சலில் இருந்து வெளியேற ஏதாவது ஒரு காரியத்தில் ஆழ்ந்திருக்க எண்ணினார். உடனே மாதவ ராவுடன் இணைந்து காங்கிரஸ் கூட்டத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வதில் தீவிரமாக இருந்தார்.

எந்த வேலை செய்தாலும், அணைத்துவிட்ட அடுப்பின் ஓரத்தில் தண்ணீருக்குத் தப்பிய சிறு கங்கொன்று காற்றின் உதவிகொண்டு தன் தணல் பெருக்குவதுபோல், அய்யங்காருக்குத் தன் மீதான அவப்பெயர் உடற்றிக்கொண்டிருந்தது. புற்றுப்போல் துயரம் அவருக்குள் பெருகிப் படர்ந்தது. கனத்த சரீரத்தைத் தூக்க முடியாமல் தூக்கி நிற்கும் அய்யங்காரின் பரந்த தோளும், தொந்தியும் சென்ற இடம் தெரியாமல் கரைந்துபோயின. கழுத்துக்குக் கீழே சதை தளர்ந்து தொங்கியது. சட்டென்று மூப்பு அவரை அணைந்தது. மீளவே முடியாமல் துயரச் சாகரத்தில் அய்யங்கார் மூழ்கித் தத்தளித்துக்கொண்டிருந்த வெந்தணல் நாள்கள் கடக்க, இன்றுதான் ரெசிடென்ட் ஹானிங்டனிடமிருந்து கடிதமொன்று வந்தது.

`டியர் மிஸ்டர் அய்யங்கார்,

உங்கள் அர்ப்பணிப்பான சேவையினால் சமஸ்தானம் பெரிதும் வளர்ச்சி கண்டிருக்கிறது. நீங்கள் சமஸ்தானத்தில் பணியாற்றிய கடந்த ஏழாண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் முந்தைய வருஷத்தினைவிட வருவாய்கூடி, வளர்ச்சி கண்டிருக்கிறது சமஸ்தானம். முறையான நில அளவையை நீங்கள்தான் சாத்தியப்படுத்தி யிருக்கிறீர்கள்.

என்னுடைய இந்தக் கடிதம் உங்களின் மனத்துயரை அகற்றக்கூடும். இன்னும் முழுமையான விவரங்கள் வெளிப்படாத நிலையில், உங்கள்மேல் இருந்த சந்தேகங்களுக்கு முகாந்திரமே இல்லையென்று தெரிய வந்துவிட்டது. மேல்மலையில் ஏலம், காப்பி, தேயிலை எஸ்டேட்டுகளுக்காக, வாங்கிய இடங்களைவிட அதிக இடங்களைப் பிடித்து வைத்திருக்கிறவர்களுக்குப் பெரியாறு அணை பெரிய தடையென்று எண்ணியிருக்கிறார்கள். தாமஸ் மன்றோவின் பெயரன் ஜான் மன்றோவின் ஏஜென்ட் ஒருத்தனின் பொறுப்பில்தான் இப்போது கண்ணன் தேவன் தேயிலைத் தோட்டம் இருக்கிறது. அவனுடன் ஏலமலையில் எஸ்டேட் வாங்கியிருக்கிறவர்கள் கூட்டு வைத்திருக்கிறார்கள். பெரியாறு அணை வரவிடாமல் தடுத்து நிறுத்தியதில், இத்தனை வருஷங்கள் இவர்களுக்கும் பங்கிருந்திருக்கிறது. சமஸ்தானத்திலேயே இவர்களுக்கு உதவ ஆள்களைப் பிடித்து வைத்திருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. தொடர்புடைய ஏஜென்ட் ஒருவன் கைதாகியிருக்கிறான். அவனிடமிருந்து பெறப்பட்ட முதற்கட்ட உண்மைகள் இவை. மகாராஜா அவனைச் சிறையிலடைத்து முழுமையாக விசாரிக்கச் சொல்லியிருக்கிறார். வெடிபொருள்கள் வந்திறங்கும் ஆலவாய்த் துறைமுகத்தில் உங்கள் உறவினரின் முகவரியைக் கொடுத்தவன் இவன்தான் என்ற உண்மை தெரியவந்தவுடன் மகாராஜா மிகவும் மனம் கலங்கினார். தன் மாமா, மறைந்த மகாராஜா விசாகம் திருநாளின் நம்பிக்கைக்குரிய திவானை, நான் சிறிதும் சந்தேகத்திற்கிடமில்லாமல் அணுகியிருக்க வேண்டும். மாபெரும் தவறிழைத்துவிட்டேன். ஒரு நல்ல மனிதரின் ஆன்மாவைக் காயப்படுத்திவிட்டேன் என்று மனம் உடைந்து பேசினார்.

அய்யங்கார், உங்கள் வருத்தம் கலைக்கத்தான் இந்த அவசரக் கடிதம். உண்மைகள் துலங்கியவுடன் விரிவாக எழுதுகிறேன். ஆழ்ந்த மனவருத்தத்திலிருந்து மீண்டு வாருங்கள். உங்கள் பெயரனுடன் ஓய்வுக் காலத்தை அனுபவியுங்கள். படிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர் நீங்கள். நிறைய எழுதுங்கள்.

பச்சையப்பன் கல்லூரியின் டிரஸ்டியாகிக் கல்விச் சேவையில் ஈடுபட்டிருப்பதாக அறிந்தேன். வேங்கடகிரி மகாராஜா சென்ற வாரம் சமஸ்தானத்திற்கு வந்திருந்தபோது என்னை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். அவரே மேற்சொன்ன தகவலைச் சொன்னார்.

என் வாழ்த்துகள்.

அன்புடன், ஜே.சி.ஹானிங்டன்’

நீரதிகாரம் - 73 - பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சித் தொடர்...

அய்யங்காருக்குக் கடிதம் கையில் வந்ததில் இருந்து, தனக்குள் அழுத்தமாக உட்கார்ந்துகொண்டிருந்த சுமையொன்று வடிந்து, லேசானது போலிருந்தது.

இன்று இரவுதான் நன்றாகத் தூங்க முடியுமென்று நினைத்தார் அய்யங்கார்.

ஓவியத்தை எடுத்துப் பார்த்தவருக்கு, மீண்டும் இன்று இரவு ரவிவர்மா தன்னைத் தனியாக ஓர் ஓவியமாக வரைந்தால் எவ்வளவு நன்றாக இருக்குமென்ற எண்ணமெழுந்தது. கண்களில் தெரிகிற குழப்பமும் கவலையும் இல்லாமல் பத்மநாபனின் கண்கள்போல் ஒளிரலாம்.

ஓவியத்தை மெல்ல அணைத்துக்கொண்டே உறங்கச் சென்றார் அய்யங்கார்.

`சொர்க்கம் எங்கள் நம்பிக்கை’ என்ற வாக்கியம் தாங்கிய திவான் பங்களாவின் முகப்புப் பலகை, ராமய்யங்காருக்குச் சொர்க்கத்தை உறுதிப்படுத்தியது.

அவப்பெயர் நீங்கிய மகிழ்வில் அய்யங்கார் நெடுந்துயில் (மீளாத்துயில்) கொண்டார்.

- பாயும்