மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீரதிகாரம் - 74 - பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சித் தொடர்...

நீரதிகாரம்
பிரீமியம் ஸ்டோரி
News
நீரதிகாரம்

‘பொறந்த உசுருக்கு ஒரு வாட்டிதானே சாவு? அது என்னைக்கா இருந்தா என்ன?’ என்று அவன் அய்யாவின் வசனத்தை எடுத்துவைத்துப் பேசுவான்

பெரியாறு அணைத் திட்டத்தின் தேக்கடி முகாம், முள்ளியபாஞ்சன் நதிக்கரை.

கூடியிருந்தவர் முகங்களில் வேண்டுதலின் தீவிரம் நிலைகொண்டிருந்தது. பெரிய பெரிய இரும்புப் படகுகளில் சுண்ணாம்புக் கல் மூட்டைகள் ஏற்றப்பட்டு, படகின் கயிறு கரையோரம் அடர்ந்திருந்த மரங்களில் கட்டப்பட்டிருந்தது. வரிசையாக ஏழெட்டுப் படகுகள். பென்னியும் இன்ஜினீயர்களும் எல்லாம் சரியாக நடக்கிறதா என்ற பதற்றத்தில் இங்குமங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள். லோகன், கையில் ஒரு தாளை வைத்து, எந்தெந்த நிமிடத்தில் என்னென்ன கட்டளைகள் கொடுக்க வேண்டுமென்று தயாராய் எழுதி வைத்திருந்தார். 

தேக்கடியில் இரும்புப்படகுகளில் ஏற்றப்படும் சுண்ணாம்புக் கல், முள்ளியபாஞ்சன் நதி வழியாக அணை கட்டுமிடத்திற்குக் கொண்டு செல்லப்பட வேண்டும். முள்ளியபாஞ்சன் நதி பெரியாற்றின் உபநதி. தேக்கடி அருகில் உற்பத்தியாகி, பெரியாற்றுடன் கலக்கும் நதி. தேக்கடியையும் அணை கட்டுமிடத்தையும் இயற்கையே இணைத்ததுபோல் அமைந்திருந்தது. முள்ளியபாஞ்சனில் படகுமூலம் பொருள்களை ஏற்றியனுப்பினால் செலவு குறைவு, குறைந்த நேரத்தில் அதிக பொருள்களை ஏற்றிச் செல்லலாம் என்பது பென்னியின் திட்டம். அவரின் திட்டத்தில் முள்ளியபாஞ்சனில் லாக் சிஸ்டம் மூலம் நீரைத் தேக்கி, அதில் படகு மூலம் பொருள்களை எளிதில் அனுப்பிவிடலாம் என்று குறிப்பிட்டு, அதற்கான செலவையும் மதிப்பிட்டிருந்தார். 

நீரதிகாரம் - 74 - பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சித் தொடர்...

தேக்கடியிலிருந்து அணை கட்டுமிடம் வரையுள்ள எட்டு மைல் தூரம் வரையும் மைலுக்கு ஒன்று வீதம் எட்டு இடங்களில் நீரைத் தேக்கிவைக்க, கற்சுவர் கட்டி, மரக்கதவுகளால் நீரைத் தடுத்து நிறுத்தும் வேலையை கடந்த பிப்ரவரியில் தொடங்கினார்கள். முதலிரண்டு இடங்களில் பெரிய கற்களால் தடுப்புச் சுவர் வைத்து, நீரைத் தேக்கவும், திறக்கவும் தோதாக மரக்கதவுகளை அமைத்தார்கள். இரண்டு இடங்களில் தடுப்புகளை அமைப்பதற்குள் பெரும் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. முள்ளியபாஞ்சன் அடர்ந்த காட்டுக்குள் செல்லும் நதி. மனிதர்கள் அணுகுவதற்கு வழியே கிடையாது. அடர்ந்த காட்டுக்குள் நதியின் குறுக்கே, கற்சுவரைக் கட்டி, நீரைத் தேக்க மரப்பலகைகள் பொருத்துவது டெய்லருக்கும் இன்ஜினீயர்களுக்கும் சவாலாய் இருந்தது. காட்டுக்குள் கூட்டமாக இருந்து வேலை செய்வதற்கே அஞ்சி நடுங்கிக்கொண்டிருப்பவர்கள், அடர்ந்த காட்டுக்குள் தனியாக ஐந்தாறு பேர் மட்டும் வேலை செய்யத் தயாராக இல்லை. 

இரண்டு லாக் சிஸ்டத்தினையும் கண்காணிக்க நடுக்காட்டுக்குள் சின்னக் குடில் அமைத்து, மழை, வெள்ளம், படகு செல்ல வேண்டிய நீர்மட்டம் முதலானவற்றைக் கண்காணிக்க, குடிலுக்கு இரண்டு உதவியாளர்களைக் காவலர்களாக நியமித்தார் டெய்லர். எந்தப் பாதுகாப்புமற்று, நடுக்காட்டில் தனித்து நின்று காவலிருப்பதற்கு அவர்கள் தயங்கினாலும், பல டன் எடையுள்ள சுண்ணாம்புக் கற்களையும் இயந்திரங்களையும் அணை கட்டுமிடத்திற்குக் கொண்டு சென்று சேர்ப்பதற்கு வேறு வழியில்லை என்று புரிந்ததால் வேலையை ஒத்துக்கொண்டார்கள். காட்டின் அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் பணியாற்றியே ஆக வேண்டுமென்பது, வேலைக்கு வந்த ஒவ்வொருவருக்கும் புரிந்திருந்தது.  

நீரதிகாரம் - 74 - பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சித் தொடர்...

முதல் தடுப்புச் சுவர் முடித்து, இரண்டாவது தடுப்புச் சுவர் எழுப்பும் வேலை கடந்த மார்ச் மாதம் நடந்துகொண்டிருந்த சமயம். ஒரு நாளுக்கான உணவை, ஒருமுறை படகில் வந்து கொடுத்துவிட்டுச் செல்வார்கள். கொடுப்பதை வைத்து முழு நாளையும் சமாளிக்க வேண்டும். காட்டுக்குள் இருட்டிவிட்டால் இரண்டாவது முறை உணவு கொண்டு செல்வது கடினமாகிவிடும். 

கடந்த சீசன் வேலையை முடிக்கும் தறுவாயில், முதல் தடுப்புச்சுவருக்குப் பாதுகாப்பாக மூன்று பேர் இருந்தார்கள். பாளையத்திலிருந்து வந்திருந்த இளவட்டப் பயல்கள் மூவரும் கூட்டுச் சேர்ந்து, ‘நாங்க கூட்டாளிங்க ஒத்த சோட்டா இருந்துக்கிறோம்’ என்று கிளம்பிப் போனார்கள். நதிவெள்ளத்தை எதிர்த்து நீந்தி, முங்கினபடியே மறுகரைக்குச் செல்லும் திறன்கொண்ட கூடலூர் கோனேரியப்பிள்ளை, மூங்கில் தெப்பத்தில் செய்த படகில் அவர்களுக்குத் தினம் சாப்பாடு கொண்டு செல்வான். கோனேரியப்பிள்ளைக்கு வயது 17 தான். திருமணமாகி, ஒரு வயதில் பிள்ளையும் இருக்கிறது. அவனுக்குத் தொப்புள் வெளித்தள்ளி, காம்புக்குள்ளேயே இருக்கும் சின்னத் தக்காளி அளவு இருந்ததில், ஊரில் அவனுக்குத் ‘தொப்பளான்’ என்று பெயர். கோனேரியப்பிள்ளை என்று முதன்முதலில் அவன் பெயரைச் சொன்ன இடம், அணை வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு, பாளையம் கிராம முன்சீப்பிடம் பெயர் கொடுத்தபோதுதான். 

கோனேரியப்பிள்ளை துடிப்பான ஆள். வயது ஒரு காரணமென்றாலும், அவனுக்கு உயிர் பயம் துளியும் கிடையாது. ‘பொறந்த உசுருக்கு ஒரு வாட்டிதானே சாவு? அது என்னைக்கா இருந்தா என்ன?’ என்று அவன் அய்யாவின் வசனத்தை எடுத்துவைத்துப் பேசுவான். ஊரே பணத்துக்காக அணை வேலைக்கு வந்தபோது, பிள்ளை மட்டும் தன் ஆயுள் எவ்வளவு என்று தெரிந்துகொள்ளும் ஆவலில் வந்திருந்தான்.

மூங்கில் தெப்பத்தில் துடுப்புப் போட்டுக் கொண்டு, முதல் தடுப்புச்சுவர் இருக்குமிடத்திற்கு அவன் வரும்போது வெயில் ஏறியிருந்தது. முதல் நாள் இதே நேரத்துக்கு அவர்களுக்குக் கஞ்சியும் சோறும் குழம்பும் இரண்டு மொந்தைகளில் சாராயமும் கொடுத்துவிட்டு வந்திருந்தான் பிள்ளை. சோறு சாப்பிட்டுச் சாராயம் சாப்பிட்டால் கொஞ்சமாவது வயிறு பொறுப்பார்கள். இரவு சோறு இல்லாமல் வெறும் சாராயத்தைக் குடித்துவிட்டு, இந்நேரம் வயிறு காந்தலோடு, பிள்ளை வரும் வழியைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். குளிரும் கொசுவும் வாட்டியெடுத்திருக்கும். நாள் முழுக்க நீரில் கிடக்கச் சொன்னாலும் கிடக்கலாம், ஆனால் நீரில் நனைந்துவிட்டு வெளியேறச் சொன்னால்தான் உயிர்போகும்.

இரண்டாவது தடுப்புச் சுவரில் வேலை நடக்கும்போது நீரைத் தடுக்க வேண்டுமென்றால் அங்கிருந்து கொட்டடிப்பார்கள். காட்டில் படார் படாரென்று தலையில் அடிப்பதுபோல் கேட்கும் கொட்டொலி. உடனே இவர்கள் தயாராகி, கற்சுவருடன் பொருத்தப்பட்ட மரக்கதவுகளை மூட வேண்டும். நீர் நின்ற பிறகு, இங்கிருந்து இவர்கள் கொட்டடிப்பார்கள். அங்கு வேலை ஆரம்பிக்கும். பகல் முழுக்க ஈரத்தில் நின்று நின்று கால் சில்லிட்டு ஊறி, விறுவிறுவென்று இழுக்கும். உடம்புச் சூட்டுக்கு கஞ்சாச் சிலும்பி இருந்தால் நன்றாக இருக்குமென்று ஏக்கம் வரும். பெரும்பாலும் கிடைப்பதில்லை. புகையிலையை அதக்கிக் கொண்டு குத்த வைத்து உட்கார்ந்திருப்பார்கள். இலைகளைக் கொளுத்திப்போட்டு, அதன் தணலில் உட்கார்ந்திருப்பதில் இரண்டு நன்மைகள் கிடைக்கும். குளிர் ஓடிப்போகும். நெருப்பின் தணல் காட்டு மிருகங்களையும் அண்ட விடாது.

அன்று பிள்ளை சோற்றுக் குண்டான்களும் சாராய மொந்தைகளும் எடுத்துக்கொண்டு சென்றான். வழக்கமாக இவனுடைய மூங்கில் தெப்பம் வருவதை எதிர்பார்த்து, கரையோரத்திலேயே காத்துக் கொண்டிருப்பார்கள். இன்று ஒருவரும் கண்ணில் படவில்லையே என்ற யோசனையுடன் துடுப்பை வலித்தான்.

தன் வருகையைத் தெரிவிக்க சீழ்க்கையொலி எழுப்பினான் பிள்ளை. பாளையம் ராமு பதிலுக்குச் சீழ்க்கை அடிப்பான். இருவருக்கும் இயைந்த இசையொன்று சீழ்க்கையில் வளரும். நேரத்துக்கும் மனநிலைக்கும் ஏற்ப பிள்ளை எழுப்பும் சீழ்க்கையொலிக்கு, ராமு உடனே ஒத்த இசையின் நாடி பிடிப்பான். அடர்ந்த கானகத்தில், வண்டுகள் துளையிட்ட மூங்கிலுக்குள் நுழைந்து வெளியேறும் காற்று எழுப்பும் இசையின் தூய்மையும் பூரணமும் பிள்ளை, ராமுவின் இசையிலும் இருக்கும். இருவருக்குமே பயிற்றுவிக்கப்பட்ட இசைக்குறிப்புகள் தெரியாது. மூங்கிலுக்குள் நுழைந்து வெளியேறும் காற்றினை மூங்கில் உள்வாங்கிப் பிரதிபலிப்பதைப்போல் வனத்தின் மூங்கிலாவார்கள் இருவரும்.

பிள்ளையின் சீழ்க்கைக்கு பதில் சீழ்க்கை வரவில்லை. கரையை நெருங்கிய பிள்ளை யோசனையுடன், குடிலைப் பார்த்தான். முதலில் பரந்து விரிந்திருந்த வெண்மருத மரத்தின் கிளைகளுக்கிடையில் சின்னக் குடில் அமைத்திருந்தார்கள். பகற்பொழுதில் கல்லணையின் கதவைத் திறக்க உத்தரவிட்டுக் கொட்டுச் சத்தம் கேட்கும்பொழுதெல்லாம் கீழிறங்கி, ஏற வேண்டியிருந்தது. அதற்காகவே மரத்திற்குக் கீழேயும் ஒரு குடில் அமைத்துக்கொண்டார்கள். நான்கு மரக்கிளைகளும், ஒரு கித்தான் துணியும் கட்டினால் குடில் தயார். இரவில் பாதுகாப்பு கிடையாது, இரவில் மரக்கிளையின் மேலே ஏறித் தங்கிக்கொள்ள வேண்டுமென்று டெய்லர் உத்தரவிட்டிருந்தார். மதியம் குடித்துவிட்டு மீதமிருக்கிற சாராயத்தைப் பொழுது சாயும்போது குடிக்கத் தொடங்குவார்கள். கொஞ்சம் குடித்தாலே பேச்சு மாறிவிடும். நினைவழியும் அளவுக்குப் போதையேறாது. போதையேறி நினைவழிகிறது என்பதில் ஒரு போதை இருப்பதாக நினைத்து, நினைவழிந்ததுபோல் நடந்துகொள்ள விரும்புவார்கள். இருள் பரவப் பரவ, மேலே பாதுகாப்பாகக் குடிலுக்குச் செல்ல வேண்டுமென்ற எண்ணமும் அழிந்ததுபோல் நடப்பார்கள். பெரும்பாலும் குடும்பத்தினரைப் பற்றிய பேச்சில் கரைவதுதான் அவர்களின் விருப்பத்திற்குரியதாய் இருந்தது. நேற்று இரவும் மரத்தின் மேலிருந்த குடிலுக்குள் செல்லாமல், கீழேயே ஒருவர்மேல் ஒருவர் சாய்ந்தபடி படுத்துறங்கியிருந்தார்கள்.

பிள்ளை, தெப்பத்தைக் கரையோரம் விட்டு, கயிற்றை இழுத்துப் பிடித்து, மரமொன்றில் கட்டுவதற்காக, காலைத் தரையில் வைத்தான். காலில் சுருக்கென்று ஏதோ குத்தியது. என்னவென்று பார்க்கக் குனிந்தவனுக்கு, உடல்நடுங்கியது. ராமுவின் உடம்பு தண்ணீரிலும் தலை கரையோரச் சேற்றிலும் மல்லாக்கக் கிடந்தது. வாய்பிளந்து கிடந்த அவனின் முகத்தின்மேல்தான் பிள்ளை காலை வைத்திருந்தான். அலறித் துடித்து, கையிலிருந்த கயிற்றைத் தவறவிட்டுத் தள்ளிப்போய் நின்றவன், ராமுவின் முகத்தைப் பார்க்க முடியாமல் நடுங்கினான். முகத்தின் தசைகள் கிழிபட்டு, முற்றிலும் சிதைந்து, கண்கள் வெளித்தள்ளி, வலக்காது கிழிபட்டுக் கிடந்தான் ராமு. வாய்விட்டுக் கத்தினால்கூட ஆபத்தென்று அஞ்சிய பிள்ளை, கையால் வாயைப் பொத்திக்கொண்டு அழுதான். வாயைப் பொத்தியவுடன் அழுகை தேமலாக வெடித்தது. மூச்சிரைக்க, தன் அச்சத்தையும் கண்முன்னால் சிதையுண்டு கிடக்கும் ராமுவின் முகத்தைப் பார்க்க முடியாத துயரமும் சேர்ந்து, தலை சுற்றியது. வாயைப் பொத்திக் கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்தவனுக்குத் திடீரென்று மற்ற இருவர் எங்கே என்ற கேள்வி எழுந்தது. 

எழுந்து ஓட நினைத்தவனுக்குக் கால்கள் வழியாகச் சிறுநீர் வெளியேறியது. அவன் கட்டுப்பாட்டில் அவன் இல்லை. குடிலுக்குள் செல்லலாமா, வேண்டாமா? கடுவாவா, கரடியா? எது ராமுவைத் தாக்கியது? இன்னும் இவ்விடத்தில் இருக்கிறதா, மறைந்திருந்து தன்னைத் தாக்குமா என்று அடுத்தடுத்து சிந்தனை ஓடியதில் அவனின் உடல் நடுங்கியது. கண்கள் காந்தின. ஆனாலும் அவர்கள் இருவரும் எங்கிருக்கிறார்கள் என்று தேடிக் கண்டுபிடித்துவிட வேண்டுமென்ற எண்ணத்தில் தன்னைத் தைரியப்படுத்திக் கொண்டான்.

நீரதிகாரம் - 74 - பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சித் தொடர்...

நின்றபடியே முழுமையாகச் சிறுநீரைக் கழித்து, உடல் பாரம் குறைத்துக்கொண்டு, ஈரமான வேட்டியை நீரில் இறங்கி நின்று அலசிப் பிழிந்தான். பார்வை மட்டும் சுழன்றபடி இருந்தது. ஈர உடையைப் பிழிந்துவிட்டுக்கொண்டு மேலேறியவன், குடிலின் கித்தானை மெல்ல விலக்கினான். இரவு குடித்துப் போட்டிருந்த சாராய மொந்தைகள் தலைகீழாகக் கிடந்தன. எரிந்து முடிந்திருந்த கட்டைகளின் சாம்பலில் மிச்சம் சில கங்குகள் கிடப்பது, கீற்றாய் வெளியேறிய புகையில் தெரிந்தது. உள்ளுக்குள் ஒருவருமில்லையென்றவுடன் வெளியில் வந்து நின்று, தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டான். 

குடிலைச் சுற்றி, காலடித் தடங்கள் கிடக்கிறதா என்று உற்றுப்பார்த்தான். குடிலிலிருந்து பத்தடி தூரத்தில் விலங்கின் காலடித்தடம் தெரிந்தது. அருகில் சென்று உற்றுப்பார்த்தான். கடுவாதான். சந்தேகமே இல்லை. மலைவேலைக்கு வந்த கொஞ்ச நாளில், மன்னான்களுடன் சேர்ந்து, காலடித்தடங்களை அடையாளம் கண்டுபிடிக்கப் பழகியிருந்தான். 

‘கடுவா குடிசைக்குள்ள வரல, அப்போ இவங்க வெளிய வர்ற நேரம் பார்த்துக் கடுவா அடிச்சிருக்கும். அப்டின்னா மத்த ரெண்டு பேரும் எங்க?’ பிள்ளையின் மனத்தில் சிந்தனை ஓடியது. 

துணிவை வரவைத்துக்கொண்டு காட்டுக்குள் தேடினான். இரண்டு மரங்களின் இடுக்கில் ஓர் உடல் இழுபட்டுச் சென்ற தடமிருந்தது. இலை, தழைகளோடு சேர்த்து, உடல் நீண்ட தூரத்திற்கு இழுபட்டிருந்தது. 

பிள்ளைக்கு மற்ற இருவரின் கதியென்னவென்று உறுதியாகத் தெரிந்துவிட்டது. கடுவாதான் இவ்வளவு கொடுமையைச் செய்திருக்க வேண்டும். ராமுவின் முகத்தை நகத்தினால் பிறாண்டியெடுத்திருக்கும். ராமுவைக் காப்பாற்ற மற்ற இருவர் வந்தவுடன் அவர்களை விரட்டிக் கவ்வியிருக்கும். இருவரையும் கொன்றிருக்குமா? அல்லது ஒருவனைக் கொல்லும்முன் ராமுவை அடித்ததுபோல் அடித்திருக்குமா என்று தெரியவில்லை. மனித ஜென்மங்கள் செய்வதையே புரிந்துகொள்ள முடியவில்லை. இதில் மிருகராசிகள் செய்வதை எப்படிப் புரிந்துகொள்ள முடியும்?

கோனேரியப் பிள்ளை சற்றும் யோசிக்காமல் நீரில் குதித்தான். மூச்சு முட்டிய நேரத்தில் காட்டுக்கோழிபோல் தலையை வெளியில் தூக்கி, சுவாசம் சீராக்கி, மீண்டும் முங்கி நீந்திக் கரை சேர்ந்தான்.

தேக்கடி முகாமில் இருந்த டெய்லர், மெக்கன்சியிடம் நடந்ததைச் சொல்லும் தெம்பின்றி மயங்கி விழுந்தான். அவனைத் தெளிய வைத்து விஷயத்தை வாங்குவதற்குள் தடுமாறிப்போனார்கள் டெய்லரும் மெக்கன்சியும். உணவும் பாதுகாப்பும் கொடுப்பது அடர்ந்த வனத்தில் தடுப்புச்சுவர் வைப்பதில் பெரிய சவாலாக நின்றது.

ஒரு வாரம் கழித்து, இரண்டாவது தடுப்புச்சுவர் எழும்பிக்கொண்டிருந்த இடத்திற்குச் சற்று முன்னாலிருந்து பிணம் அழுகிய வாடை காற்றில் வந்ததில் முகம் சுளித்த இரண்டாம் அணையின் காவலர்கள், எங்கிருந்து வாடை வருகிறதென்று பார்க்கப் போயிருக்கிறார்கள். அழுகிய மனித உடலைக் கடுவா, நிதானமாய் தன் கோரைப் பற்களால் கிழித்தெடுத்துச் சவைத்ததைப் பார்த்து அலறியடித்து, வேலைக்கே வரமாட்டோமென்று சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போனார்கள்.

ஒரு தடுப்புச் சுவர் வைப்பதற்கே நான்காயிரம் ரூபாய் அளவுக்குச் செல்வானதை டெய்லர் பென்னிக்குக் கடிதம் எழுதியிருந்தார். திட்ட மதிப்பீட்டைவிட மூன்று மடங்கு செலவு கூடுகிறது, பாதுகாப்புக்கு ஆள்கள் அமர்த்துவதும் கடினமாகிறது, முக்கியமாக உணவு கொண்டு செல்வது மிகவும் கடினமாகிறது என்றெல்லாம் முள்ளியபாஞ்சனில் லாக் சிஸ்டம் அமைப்பது குறித்து அதிருப்திகள் அதிகரித்துக்கொண்டிருந்த வேளையில் மூன்று உயிர்கள் பலியானவுடன் சர்க்கார் அதிர்ந்தது. சீப் செக்ரட்டரிக்கு டெய்லர் அறிக்கையனுப்பியவுடன், அவர் உடனடியாகச் சீப் இன்ஜினீயரை அழைத்து, முள்ளியபாஞ்சனில் நடக்கும் இந்த ஆபத்தான முயற்சியைக் கைவிடச் சொன்னார்.

டெய்லர் அதிர்ந்தார். முள்ளியபாஞ்சனை விட்டால், கனமான பொருள்களை மேலேற்றிச் செல்ல வழியே இல்லையே? மாட்டு வண்டிகளும் கழுதைகளும் இவ்வளவு கனத்துடன் மேலே ஏறுவதற்கு வழியில்லை. வயர் ரோப் மூலம் தேக்கடி வரைதான் கொண்டு வர முடியும். தேக்கடியில் இருந்து, அடர்ந்த வனத்திற்குள் வயர் ரோப் அமைப்பதற்கான பாதையையே கண்டறிய முடியாதே என்று உடனடியாகப் பென்னிக்குத் தந்தி கொடுத்தார். தந்தி கிடைத்த அடுத்த நாளே, பென்னியும் பதில் தந்தி அனுப்பினார். 

ஒரு மைலுக்கொரு லாக் சிஸ்டத்திற்குப் பதிலாக, முள்ளியபாஞ்சனின் 8 மைல் நீளத்திற்கும் மூன்று சிற்றணைகளைக் கட்டச் சொல்லி, செய்தியனுப்பினார். டெய்லரும் மற்றவர்களும் இரண்டாவது தடுப்புச் சுவர் இருந்த இடத்தில் உடனடியாக அணை கட்டினார்கள். அணை கட்டியவுடன் அங்கு தங்குகிறவர்களுக்கென்று கூரை வேய்ந்த வீடும், படகு வந்து நிற்பதற்கேற்ற வசதிகளும், உணவு சமைப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. கடந்த சீசனில் தொடங்கிய வேலை, இப்போது நிறைவடைந்து, முதல் தடுப்புச்சுவரில் இருந்து முதல் அணைக்குப் பொருள்களை ஏற்றியனுப்புவதற்குத் தயாராகி இருந்தது.

  இன்று வெள்ளோட்டம்.

மூட்டைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சுண்ணாம்புக் கற்களைப் பார்த்தார் பென்னி. கடின முயற்சிகளுக்குப் பிறகு நதியில் அணை கட்டி, பொருள்களைக் கொண்டு செல்ல ஒரு வழி கிடைத்திருக்கிறது. முதல் அணை வரை படகில் கொண்டு சென்று பார்த்த பிறகு, இன்னும் இரண்டு தடுப்பணைகளைக் கட்ட வேண்டும். ‘நீர்வழிப் போக்குவரத்துதான் செலவில்லாதது; எளிதானதும் கூட’ என்று ஆர்தர் காட்டன் பலமுறை சொல்லியிருக்கிறார். தனக்கு இந்த நடுக்காட்டில் எதிர்மறையாக நடப்பதை நினைத்துப் பார்த்தார் பென்னி. திட்டமிட்டதைவிட மூன்று மடங்கு அதிக செலவு. கூடலூரிலிருந்து தேக்கடிக்கும், தேக்கடியிலிருந்து அணை கட்டுமிடத்துக்குப் பாதையமைக்கவும் இரண்டு மடங்கு செலவானது. திருத்திய திட்ட மதிப்பீடு அனுப்பும்போது, சர்க்கார் நிதி ஒதுக்குவதில் எத்தனை கேள்வியெழுப்பி, நிதி ஒதுக்குவார்களோ? பிறகு பார்த்துக்கொள்ளலாம் அதையென்று மனத்தைத் தேற்றினார்.

டெய்லரும் மெக்கன்சியும் பென்னியின் அருகில் வந்தார்கள்.

“பென்னி, இந்தச் சுண்ணாம்பைப் பரிசோதிக்கச் சொல்லி, மாதிரி அனுப்பினோமே? அதோட ரிசல்ட் வரலைதானே?” 

“இல்ல மெக். இந்தியாவுலயே இல்லையே? பிரான்சுக்குத்தான் நம்ம வைஸ்ராய் ஆபீசில் இருந்து அனுப்பியிருக்காங்க. ரிசல்ட் எப்போ வருமோ?”

“சுண்ணாம்போட தரத்தை முடிவு செய்யாமயே மேலே ஏத்திட்டு, அப்புறம் சுண்ணாம்பு சரியில்லைன்னு கீழ இறக்க முடியாதே?”

“ஒனக்குச் சந்தேகமே வேணாம் மெக். இது தேல் சுண்ணாம்பு மாதிரிதான். சுண்ணாம்புக்கு ரெண்டே ரெண்டு விஷயம்தான் அதோட தன்மையை முடிவு செய்யறதுக்கு வேணும். ஒன்னு அதோட வலிமை. காலம் கூடக்கூட வலிமை கூடணும். ரெண்டாவது ஈரம் உலர்றதுக்கு அது எடுத்துக்கிற நேரம். குருவனூத்துச் சுண்ணாம்பைப் பத்தி, வெற்றிலை போட்ட ஜீசஸ் நமக்கு வழிகாட்டியிருக்காரே? சில விஷயங்கள்ல உள்ளூர் பண்டிதர்களோட அறிவ நாம சந்தேகிக்கலாம். ஆனா எதெதுல யார் யார் பாண்டித்தியம்னு புரிஞ்சிக்கிட்டம்னா அவங்கள உறுதியா நம்பலாம். பெரியவருக்கு ஞானம் அதிகம். உனக்கொன்னு தெரியுமா மெக், இதே சுண்ணாம்பு மாதிரிதான் சூயஸ் கால்வாய் கட்டவும் பிரான்ஸின் செயின்ட் எட்டினா நகரத்தோட கோட்டைகளைக் கட்டவும் பயன்படுத்தியிருக்காங்க. இந்தச் சுண்ணாம்பு மாதிரிய நான் இன்னும் அதிகமா எப்போ நம்பினேன் தெரியுமா?”

“எப்போ?” மெக்கன்சி.

“ரோம் நகரத்துடைய கோட்டைகள் தேல் வகைச் சுண்ணாம்பாலதான் கட்டியிருக்காங்க. இப்போ லண்டன் போனபோது, நான் கொஞ்சம் சுண்ணாம்பைக் கொண்டு போயிருந்தேன். அங்க சோதனைக்குக் குடுத்தப்ப, ரொம்ப ஆச்சரியப்பட்டாங்க. உலகத்துல இருக்கிறதுலயே வலிமையான சுண்ணாம்பாம் இது. ரோமும் மெட்ராஸ் பிரசிடென்சியும் தொடக்கத்துல ஏதோ ஒரு வகையில கொடுக்கல் வாங்கலோடு இருந்திருக்காங்க. எனக்கு ரொம்ப ஆச்சரியம். ரோம் நாட்டுல ஆயிரம் ரெண்டாயிரம் வருஷத்துக்கு முன்னால பயன்படுத்தின சுண்ணாம்புதான் இங்க மெட்ராஸ் பிரசிடென்சியிலும் பயன்படுத்தி இருக்காங்கன்றது. அதுலயும், கூடலூர்ல வயசாகி, பேச்சு குறைஞ்சு, எப்போ எமன் வந்து கூப்பிட்டுக்கிட்டுப் போகப்போறானோன்னு - இப்படித்தானே இவங்க சொல்றாங்க - சொல்லிக்கிட்டு உக்காந்திருக்கிற பெரியவர் சுண்ணாம்போட தரத்தச் சொல்றாரு. சுர்க்கி சுடுறதுக்கு ஏத்த மண்ணு எதுன்னு சொல்றாரு, இதெல்லாம் ரொம்ப ஆச்சரியமா இல்ல?”

“நீ சுண்ணாம்பு கொண்டு போனியா? சொல்லவே இல்ல?”

“ஆமாம். மெட்ராஸ்ல டெஸ்ட் பண்ண வாய்ப்பில்லை, கல்கத்தாவுக்கு அனுப்பி வைங்கன்னாங்க. கல்கத்தாவுக்கு அனுப்புனா பிரான்ஸ்க்குப் போகணும்னாங்க. சரி, அவங்க எப்பன்னா சொல்லட்டும். நாம லண்டன்ல டெஸ்ட் பண்ணிப் பார்த்துடலாம்னு எடுத்துட்டுப் போனேன். இந்தச் சுண்ணாம்பு கெடைக்கிறது ரொம்பக் கஷ்டம்னும் சொன்னாங்க. அப்போல்லாம் நான் பெரியவரை நெனச்சிக்கிட்டேன்.”

“ரொம்ப ஆச்சரியம்தான் பென்னி. வாழ்க்கையில சில சம்பவங்களுக்கு நம்மால காரணம் கண்டுபிடிக்க முடியல. காரணம் கண்டுபிடிக்க முயற்சி பண்ணாம இருக்கிறது நல்லதுதான். நமக்குத் தெரியாததுன்னு சிலது இருந்தாத்தானே சுவாரசியம்?”

பென்னியின் முகத்தில் புன்னகை ததும்பியது.

“படகுல ஏத்துறதுக்குத் தயாரா இருக்கா டெய்லர்?”

“எல்லாம் தயாரா இருக்கு பென்னி.”

“முதல் லாக்ல இருந்து முதல் டேம் வரைக்கும் போயிடுச்சுன்னா நல்லது. அடுத்து இன்னும் ரெண்டு டேம் கட்டிட்டோம்னா பெரிய பிரச்சின தீந்துடுச்சி. ஒரு நாளைக்கு எண்பது டன் சுண்ணாம்பு ஏத்தணும். வேற வழியே இல்ல.”

‘`கவலைப்படாதே, எல்லாம் சரியா நடக்கும்.”

லோகன், எல்லாம் தயாராக இருப்பதாகச் சொல்லி, அனைவரையும் அழைத்தார்.

கோனேரியப்பிள்ளை படகை இழுத்துப் பிடித்து நிறுத்த, கரையில் தயாராக நின்ற ஆள்கள் சுண்ணாம்பு மூட்டைகளைப் படகில் ஏற்றினார்கள். வரிசையாக நின்ற ஏழெட்டுப் படகுகளில் சுண்ணாம்பு மூட்டைகளை ஏற்றிவிட, படகுகளைப் பிணைத்திருந்த கயிறுகளை அவிழ்த்து படகோட்டிகளிடம் தூக்கியெறிந்தார்கள். 

படகு கிளம்பியதற்கு அடையாளமாகக் கொட்டடித்தார்கள். முதல் தடுப்புச்சுவரிருந்த இடத்தில் காத்திருந்தவர்கள் பதிலுக்குக் கொட்டடித்தார்கள். படகு கிளம்பியதும் கூடியிருந்தவர்கள் உற்சாகமாக கையொலி எழுப்ப, படகில் இருந்தவர்களும் கரையில் நின்றவர்களைப் பார்த்துக் கையசைத்தார்கள்.

கோனேரியப்பிள்ளைக்கு ராமுவின் சீழ்க்கையொலி நினைவுக்கு வர, கண்ணில் நீர் பெருகியது. 

பென்னியையும் இன்ஜினீயர்களையும் ஏற்றிச் செல்வதற்குத் தயாராக இருந்த மூங்கில் தெப்பத்தை அருகில் கொண்டு வரச் சொன்னார். நால்வரும் தெப்பத்தில் ஏறி நிற்க, ஓராள் துடுப்புச் செலுத்தினார்.

கரையை விட்டுத் தெப்பம் நகரத் தொடங்க, அரைக்கால் காக்கி நிற கால்சராயும் தொப்பியும் அணிந்த இரண்டு போலீசார் பென்னியை நோக்கி வந்தார்கள். போலீசு தங்களை நோக்கி வருவதைப் பார்த்த பென்னி, துடுப்புப் போடுபவனை நிறுத்தச் சொன்னார்.

பென்னிக்கு அவர்கள் திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்தவர்கள் என்று புரிந்தது. என்ன விஷயமென்று பார்வையாலேயே அவர்களைக் கேட்டார்.

“குமுளி மேஜிஸ்ட்ரேட் நின்னலெட்ட ஒரு வார்த்த பறையனு அவசியப்பட்டு…” என்றான் ஒரு போலீசு.

“என்ன?”

“அணக்கட்டு காரியத்துக்கு வந்திருக்க எட்டுப் பேர விசாரிக்கணும். நின்னலெட்ட பேரக் கொடுத்துட்டு வரச்சொல்லி உத்தரவு” என்று கையில் இருந்த ஒரு தாளை எடுத்துக் கொடுத்தான் இன்னொரு போலீசு.

பென்னி தாளைக் கையில் வாங்கிப் படித்தார்.

குமுளி மேஜிஸ்ட்ரேட், வேலையாள்கள் எட்டுப் பேரைக் கைது செய்ய உத்தரவிட்டிருந்தார்.

- பாயும்