மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீரதிகாரம் - 75 - பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சித் தொடர்...

நீரதிகாரம்
பிரீமியம் ஸ்டோரி
News
நீரதிகாரம்

இன்ஜினீயர்கள் அமைதியாக நின்றார்கள். வேலையாள்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதால் பேச்சைத் தொடர விரும்பாமல் போலீசுக்காரர்களைப் பார்த்தார் பென்னி.

படகுகளில் ஏற்றப்பட்டுத் தயாராக இருந்த சுண்ணாம்பு மூட்டைகளைப் பார்த்தார் பென்னி குக். குமுளி மேஜிஸ்ட்ரேட் அனுப்பியிருந்த கோர்ட் உத்தரவையும் பார்த்தார். சற்றுமுன்பு பிரார்த்தனைகளுடன் நின்றிருந்த அத்தனை பேரின் முகங்களும் களையிழந்ததுடன், போலீசு வந்ததன் அச்சத்தில் வெளுத்துமிருந்தன.

திருவிதாங்கூர் சமஸ்தானம் அணை கட்டுவதற்கான இடம் கொடுத்து, அந்த நிலத்தின் மீதான முழு உரிமையையும் அளிப்பதாகக் குத்தகை ஒப்பந்தம் போட்டதில் இருந்தே, அந்த இடத்தினைச் சுற்றியுள்ள இடங்களின் எல்லைகளில் கவனம் குவித்தது. குறிப்பாக குமுளியருகே சுங்கச் சாவடி அமைத்தார்கள். ஒவ்வொரு முறை மேல்மலைக்குச் செல்லும்போதும் சுங்கச் சாவடியில் காவலிருக்கும் போலீசுக்காரர்கள் கேள்விகளால் குடைந்தெடுத்தார்கள். ஏலத்தோட்டங்களுக்குச் செல்பவர்களும், கஞ்சா இலை பறிப்பவர்களும் மட்டுமே ஊடுருவிக்கொண்டிருந்த காடுகளில் அணை கட்டுவதற்காக வந்த வேலையாள்களைப் பார்த்த ஏலத்தோட்டக்காரர்கள், பதறினார்கள்.

இருதேசத்திற்குள் ஏகபோக உரிமை கொண்டிருந்த பொருள்களின் ரகசிய வழி மேல்மலைதான். இடம் மாற்றவும் விற்பதற்குமான சாத்தியங்களை மேல்மலை தன் தாவரங்களின் நரம்புகளைப்போல் பரவ விட்டிருந்தது. தங்களின் ஆதிக்கத்துக்குள் நிகழும் அந்நியப் பிரவேசத்திற்கெதிராக ஒவ்வொரு ஏலத்தோட்ட முதலாளியும் எதிர்ப்பைக் காட்ட முனைந்தார். ஆங்காங்கே கனன்ற சின்னஞ்சிறு எதிர்ப்புகளைக் கூட்டிப் பெருந்தீயாக்க ஒரு கூட்டம் முயன்றது. அவர்களுக்குச் சின்னஞ்சிறு வெற்றிகளும் கிடைத்துவந்தன. சமஸ்தானம் இவர்களுக்கு நிகழும் இடையூறுகளின்மேல் கவனம்கொண்டு, குமுளியில் சோதனைச் சாவடியை நிறுவியது. அத்துடன் ஒரு காவல் நிலையத்தையும் அமைத்து, காவல் நிலையத்துடன் டெபுடி தாசில்தார் தகுதியில் மேஜிஸ்ட்ரேட் ஒருவரும் நியமிக்கப்பட்டார். ஊரென்று ஒன்றுமில்லாத இடத்தில், வேலைக்குச் செல்பவர்களை மட்டுமே கண்காணிக்க வேண்டிய கட்டாயம் போலீசுக்கு. கழுதையொன்று பாதை மாறிச் சென்றால்கூட, அதன் உரிமையாளன் திட்டமிட்டுக் கழுதையை மாற்றுப்பாதையில் அனுப்பியதாகச் சந்தேகித்தார்கள். இரண்டு போலீசுக்குச் சம்பளமும் அதிகாரமும் கொடுக்கப்பட்டது வீணாகாமல் நடந்துகொண்டார்கள்.

தொடக்கத்தில், அவர்களின் எல்லையில் அவர்கள் பாதுகாப்பு செய்துகொள்கிறார்கள் என்று பென்னி குக் பெரிதுபடுத்திக்கொள்ளாமல் இருந்தார். ஒவ்வொரு நாளும் கீழிருந்து உணவுப் பொருள் கொண்டு வருகையிலும், கட்டுமானப் பொருள்களை ஏற்றிச் செல்லும்போதும் போலீசாரின் தொந்தரவு அதிகமாகியிருந்தது. எல்லையைக் கடந்தாலே குற்றவாளிகளைப்போல் பார்ப்பதும், நடத்துவதும், வேலைக்கு வருபவர்களைத் தினம் தினம் கேள்விகளால் துளைப்பதையும் பார்த்த பிறகுதான் சிக்கலிருப்பது புரிந்தது.

நீரதிகாரம் - 75 - பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சித் தொடர்...

பென்னி குக், மேல்மலையில் தங்களுக்கிருக்கிற பிரச்சினையைப் பொதுப்பணித்துறையின் சீப் இன்ஜினீயரான தானே முடிவெடுக்கும் நிலையில் இல்லாததால், உடனே சர்க்காரின் சீப் செக்ரட்டரிக்கு எழுதினார். சீப் செக்ரட்டரி அவராக உடனே எந்தக் கருத்தையும் சொல்லிவிடவில்லை. அவர் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பிரிட்டிஷ் ரெசிடென்ட் ஹானிங்டனுக்குக் கடிதம் எழுதினார். ஹானிங்டன், பெரியாறு அணை கட்டுமிடத்தில் அமைக்கப்பட்டிருந்த போலீசு கச்சேரியைப் பற்றியும் டெபுடி தாசில்தார் அதிகாரம் கொடுத்து நியமிக்கப்பட்டுள்ள மேஜிஸ்ட்ரேட் பற்றியும் விவரம் கேட்டு, திவானுக்குக் கடிதம் எழுதினார்.

நிலத்தைக் குத்தகைக்கு விட்டிருக்கிறோம், முழுமையாக பிரசிடென்சியின் பயன்பாட்டிற்கென்று உடன்படிக்கையில் குறிப்பிட்டிருக்கிறோம், நிலத்தினைச் சுவாதீனமாய் அனுபவித்துக் கொள்ளலாம் என்றெல்லாம் குத்தகையில் குறிப்பிட்டிருக்கிற இடத்தில், திருவிதாங்கூர் சமஸ்தானம், போலீசு கச்சேரியும், மேஜிஸ்ட்ரேட் ஒருவரையும் நியமித்திருப்பது எதற்காக என்று விளக்கம் கேட்டிருந்தார்.

திவான் ராமா ராவ், ஹானிங்டனுக்கு அனுப்பிய பதிலில், ‘சமஸ்தானத்தின் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க நினைக்கிறோம். பயன்பாட்டில் இல்லாத அடர்ந்த காடு என்ற அடிப்படையில் நாங்கள் இடத்தைக் கொடுத்திருக்கிறோம். அதே சமயம் எங்களின் உரிமையையும் விட்டுக்கொடுக்க மாட்டோம். இரண்டாவது, ஏல எஸ்டேட்டுகளில் நடக்கக்கூடிய கடத்தல்கள். ஏல எஸ்டேட் முதலாளிகள் மகாராஜாவைச் சந்தித்துத் தங்கள் எஸ்டேட்டுகளுக்குப் பாதுகாப்பு வேண்டுமென்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். தங்களின் விளைச்சலில் ஐந்து முதல் பத்து சதவிகிதத்திற்குமேல் கடத்தப்படுவதாகப் புகார் கொடுத்துள்ளனர். இது நேரிடையான பாதிப்பு.

ஏல எஸ்டேட் முதலாளிகளே தாங்கள் சந்திக்கும் இன்னொரு இழப்பைப் பற்றியும் கவலையுடன் புகார் அளித்துள்ளனர். சமஸ்தானத்தில் ஏகபோக உரிமைகொண்ட புகையிலை, ஏலம் போன்ற பொருள்களுக்கு மெட்ராஸ் பிரசிடென்சியில் வரியோ, ஏகபோகமோ இல்லை. மெட்ராஸ் பிரசிடென்சிக்குப் புகையிலையும் ஏலமும் கடத்தப்பட்டு, நல்ல விலைக்கு விற்பதற்காக, எஸ்டேட்டுகளில் திருட்டு நடக்கிறது. அடர்ந்த காட்டுக்குள் விலையுயர்ந்த மரங்களை வெட்டி விற்பவர்கள் முன்பு அச்சம் கொண்டிருந்தார்கள். இப்போது ஆயிரக்கணக்கானவர்களின் நடமாட்டம் இருப்பதால் வேலையாள்களைப்போல் காட்டுக்குள் நுழைந்து மரங்களை வெட்டியெடுத்துச் செல்கிறார்கள். ஏகபோக உரிமையுள்ள பொருள்கள் கடத்தப்படுவதையும் மரங்கள் வெட்டியெடுத்துச் செல்வதையும் தடுக்க, பெரியாறு எல்லைக்குள் சமஸ்தானத்தின் போலீசு கச்சேரி ஒன்று அவசியம் தேவைப்படுவதாக ஹிஸ் எக்ஸலென்ஸி மகாராஜா நினைக்கிறார்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

திவானின் கடிதத்தைப் படித்த ஹானிங்டன், தன்னுடைய கருத்தைத் தெரிவிக்காமல், திவானின் கடிதத்தைச் சீப் செக்ரட்டரிக்கு அனுப்பி வைத்தார்.

சீப் செக்ரட்டரி, பெரியாறு புராஜெக்டின் சூப்பிரண்டெண்டிங் இன்ஜினீயர், ராயல் இன்ஜினீயர் பென்னி குக்கின் ஆலோசனை இதில் முக்கியமானது, அவர்தான் நேரடியாகப் பிரச்சினைகளைச் சந்திப்பவர் என்று அவருக்குக் கடிதத்தை அனுப்பி வைத்தார்.

சீப் செக்ரட்டரியின் கடிதம் கிடைக்கப்பெற்ற பென்னி குக், ‘இடம் அவர்களுடையதுதான். ஆனால் அதன் அணுகுசாலைகளும் கூடலூர் கணவாய்ப் பாதையும் மெட்ராஸ் பிரசிடென்சிக்குச் சொந்தமானது. பெரியாறு அணை வேலையில் இருப்பவர்கள் சிலரைத் தவிர அனைவருமே பிரிட்டிஷ் பிரஜைகள். நம்மை நம்பி வேலைக்கு வருபவர்களுக்குப் போதுமான பாதுகாப்புக் கொடுக்க வேண்டியது அதன் எஸ்.இ-ஆன என்னுடைய கடமை. புராஜெக்ட் செலவுகளுக்காக எப்போதுமே பணம் கையில் வைத்திருக்க வேண்டியுள்ளது. பெரியகுளம் டிரெஷரியில் இருந்து ஆய்வுக்கான பணம் எடுத்துக்கொண்டு சென்ற ஒரு சமயம், 400 ரூபாய் இருந்த பணப்பெட்டியையே களவாடிச் சென்றுவிட்டார்கள். இங்கு ஏறக்குறைய அரை லட்சம் ரூபாயளவிற்கு எப்போதும் பணம் கையிருப்பு வைத்துள்ளோம். எவ்வளவு பாதுகாப்பாகப் பணம் வைத்திருந்தாலும் களவு போகாது என்று உத்தரவாதம் கொடுக்க முடியாது. நாங்கள் ஹர் எக்ஸலென்ஸியின் குடிகள் என்பதைத் தங்களுக்குக் கவனப்படுத்த விரும்புகிறேன்’ என்று பதில் எழுதினார்.

பிறகு லண்டன் சென்று, ஐந்து மாதங்களுக்குப் பிறகு திரும்பிய பிறகும் பிரசிடென்சி, குமுளியில் போலீசு கச்சேரி அமைக்கவில்லை என்பது பென்னிக்கு ஏமாற்றமாக இருந்தது. பலபேர் சின்னச் சின்னக் காரணங்களைச் சொல்லி, கைது செய்யப்பட்டு, விசாரணை என்ற பெயரில் நாள்கணக்கிலே உட்கார வைக்கப்படுகிறார்கள் என்று டெய்லர் சொல்லியிருந்தார்.

லண்டனில் இருந்து வந்திறங்கியவுடன், முதலில் என்னைக் கவனி என்று ஆஜராவதுபோல் நிற்கும் எல்லைப் பிரச்சினை முகத்திலறைந்தது. காலை முதல் சுண்ணாம்புக் கல் முதன்முதலாக முள்ளியபாஞ்சன் நதிக்கரையிலிருந்து, முதல் தடுப்புச் சுவர் வரை செல்வதற்காகத் தயாராய் இருக்கும் இவ்விடத்தில் இந்த உற்சாகத்தைத் தவற விடக்கூடாது என்று முடிவெடுத்தார்.

டெய்லரையும் மெக்கன்சியையும் அழைத்தார்.

“என்ன பிரச்சினை நடந்தது டெய்லர்?”

“இப்போ ஒன்னும் நடக்கலையே?”

“உனக்கும் தெரியாதா மெக்?”

“அதான் யோசிக்கிறேன், நான் பேரணைக்குப் போனதால இங்க என்ன நடந்துச்சுன்னு முழுசாத் தெரியல?”

“லோகனுக்குத் தெரியுமா?”

“என் கூடத்தானே அவரும் வந்தார்?” மெக் பதில் சொன்னார்.

“யாருக்குமே தெரியலைன்னா என்ன அர்த்தம்?”

இன்ஜினீயர்கள் அமைதியாக நின்றார்கள். வேலையாள்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதால் பேச்சைத் தொடர விரும்பாமல் போலீசுக்காரர்களைப் பார்த்தார் பென்னி.

மாயன் கம்பூன்றியபடி மெதுவாக பென்னியை நோக்கி வந்தார். கம்பை உள்ளங்கைகளுக்குள் உயர்த்தி வைத்துக்கொண்டு, இருகை குவித்து வணங்கினார்.

“தொர… கரச்சாமி… கடல் கடந்த உங்க தேசத்துக்குப் போயிட்டு வந்துட்டீங்களா?”

“மாயன், வாங்க வாங்க. எப்டி இருக்கீங்க?”

நீரதிகாரம் - 75 - பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சித் தொடர்...

“பெரியாத்துத் தண்ணிய கூடலூர் வாய்க்காவுல ஒருவாய் அள்ளிக் குடிச்சிட்டுத்தான் இந்த உசுரு போவும் தொர…”

“அதெல்லாம் போக வேணாம். பெரியாற்றுத் தண்ணீர்ல ரெண்டு போகம் விவசாயம் செஞ்சு நல்லாச் சாப்புட்டு, நெறைய வருஷம் இருப்பீங்க.”

மாயன் தலைகுனிந்து வணங்கினார்.

``தொர… ஒரு சேதி…”

“சொல்லுங்க மாயன்…”

“எனக்குத் தெரிஞ்சத சொல்லுறேன். பாத்துக்கிடுங்க…”

“ஹ… சொல்லுங்க மாயன்.”

“ரெண்டு நாயிங்க இருக்கே தொர, நம்ம தங்கராசுவோடது…”

“எனக்குத் தெரியாது. ஆனா டெய்லர் எழுதியிருந்தாரு, எதுனா அசாதாரணமா நடக்கிற மாதிரி தெரிஞ்சா முன்கூட்டியே ரெண்டும் சமிக்ஞை காட்டுதாமே?”

“ஆமாம் தொர. அதுங்கதான் இப்போ போலீசு வந்ததுக்குக் காரணம்.”

“நாய்ங்களா?”

“ஆமாம் தொர. குளிரு பொறுக்க மாட்டேன்கிறாங்க ரத்தவோட்டம் சோர்ந்துபோன ஆளுக. குடுக்குற சாராயத்தைக் குடிச்சிட்டு சும்மா இருக்க முடியாம, கஞ்சா எலையைத் தேடிக்கிட்டு எஸ்டேட்டுங்களுக்குப் போயிடுறாங்க. அக்கம்பக்கத்துலயே ரெண்டு மூணு எஸ்டேட்டு இருக்கு. அங்க கொஞ்சம் பசங்க, இவனுங்களுக்குச் சிலும்பியப் போட்டுப் பழக்கிட்டானுங்க. மொத ரெண்டு மூணு பேரு போனவங்க, பொறவு கூட்டஞ்சேர்ந்துகிட்டுப் போவ ஆரம்பிச்சிட்டானுங்க. அவெங்ககூட சேர்ந்து இந்த நாய்ங்களும் போயிருக்குங்க. நாய்ங்கதான் நல்லா மோப்பம் புடிக்குமே? அங்க கூட இருந்த ஆளுங்கள்ல எவனோ ரெண்டு பேத்த பாத்துக் கொறச்சிருக்கு. அவனுங்களுக்குக் கொடல உருவுன மாதிரி தேகம் நடுங்கிப்போச்சாம். தெனம் இதுக கொறச்சதும், இதுகள தீத்துடறதுன்னு முடிவு கட்டி, ராவுல கூடாரத்துக்குத் தேடி வந்திருக்கானுங்க. பகல்லயே வழி புரியாது, ராவுல புரியுமா? எங்கயோ போய் நொழைஞ்சிருக்கானுங்க.

பாத்தா அங்க ஒரு கும்பலே ஒக்காந்து மொளவு சின்னச் சின்ன மூடையாப் பிரிச்சிக் கட்டி, தலைச் சொமையா வச்சி எடுத்துக்கிட்டுப் போயிருக்கானுங்க. அவெங்க யாருமே நம்மகூட வேல செய்றவங்க கெடையாது. களவாணிப் பசங்கல்லாம் துணிஞ்சிட்டானுங்க. எது செஞ்சாலும் நம்ம மேலதானே திருட்டுக் குத்தம் வரும்னு, ராவு முச்சூடும் கூட்டம் கூட்டமா மலைமேல சுத்தித் திரியறானுங்க, களவாணிங்க. அவனுங்கள புடிச்சவுடனே, அவனுங்க மூடைகள கீழ போட்டுட்டு ஓடிட்டானுங்க.

எஸ்டேட்டு ஆளுக, நாய தீக்கணும்னு வந்தவனுங்க, மூடைகள கையில எடுத்துக்கிட்டுப் போய், அவெங்க மொதலாளிமாருங்ககிட்ட குடுத்து, டேம் ஆளுங்கதான் களவாண்டுட்டாங்கன்னு சொல்லிட்டானுங்க. இதான் தொர நடந்துச்சி.

அடுத்த நாளே, எஸ்டேட்டு ஆளுக நம்ம டென்ட்கிட்ட வந்து வேவு பாத்துட்டுப் போனானுங்க. சின்னத் தொரமாருங்க அந்நேரத்துக்கு இல்ல. அப்புறம் சொல்லிக்கிடலாம்னு இருந்துக்கிட்டேன். இம்புட்டுப் பெரிசா வந்து நிக்கும்னு சுதாரிக்கல தொர நானு. நம்ம டேம் ஆளுங்களுக்கும் மொளவு களவுக்கும் எள்ளு மொனையளவுக்கும் சம்பந்தமில்ல. ஆனா போலீசு அதுக்குத்தான் வந்திருக்கு.” மாயன் சொன்னதைக் கேட்டவுடன் பென்னிக்கு மொத்த விஷயமும் புரிபட்டது.

தன்னுடைய ஆள்கள்மேல் தவறில்லையென்றவுடன் பென்னிக்கு ஒரு நிமிர்வு வந்தது.

கையில் வாங்கிய தாளை, போலீசுக்காரன் ஒருவனின் கையில் திணித்தார்.

“கடிதத்தை நான் வாங்க மறுத்ததாகச் சொல்லி, திரும்பக் கொடுங்க” என்றார்.

“வாங்க மாட்டீங்கன்னா?”

“சொன்னதை மட்டும் செய்ங்க” என்று சொல்லிவிட்டு, டெய்லரைப் பார்த்தார்.

“யெஸ் பென்னி, படகைச் செலுத்துவோம்” என்ற டெய்லர், உற்சாகமாகக் கூட்டத்தைப் பார்த்தார்.

கருமேகம் விலகிய சந்திரன்போல், கூடியிருந்தவர்களின் முகங்கள் பளிச்சிட்டன. வேகவேகமாகப் படகுகளைப் பிணைத்திருந்த கயிறுகளை அவிழ்த்தார்கள்.

மேல்மலையின் காட்டாற்றைத் தன்னிடத்திற்கு அழைத்து வரப்போகும் கம்பீரத்தில், இரும்பு வாத்துகளாக நீரை உந்தித்தள்ளி முன்னேறத் தொடங்கின படகுகள்.

கிழக்கில் கதிரவன் உதிப்பதும், அந்தியில் மேற்கில் மறைவதும் வழக்கமாக இருப்பதைப்போல் அணை கட்டுமிடத்தின் சிக்கல்கள் தோன்றுவதும் மறைவதும் என வாடிக்கை கொண்டன.

பேரியாற்றின் வலப்பக்கக் கரையோரத்தில் நுகத்தடியில் பிணைக்கப்பட்ட ஆளுயரக் காளைகள் அயராமல் சுண்ணாம்புக் கற்களை அரைத்தன. கூடலூர்க் கோட்டையிலிருந்து எடுத்து வரப்பட்ட மண்ணைச் சுட்டு, சுர்க்கியாக்கி, சுர்க்கியைச் செங்கல் உடைப்பதுபோல் பெண்கள் உடைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். காலை நேரத்தின் குளிரை விரட்ட முடியாமல் தோற்று விழும் வெயில் அவர்கள் முதுகின் பின்னால் மறைந்துகொள்வதுபோல் கண்ணாமூச்சி காட்டியது.

காத்தவராயனின் மனைவி செண்பகமும், காத்தவராயனின் அண்ணிகள் இருவரும், அவன் அம்மாவுமாகச் சேர்ந்து, கூட்டமாகச் சுர்க்கியைச் சேர்த்து உடைத்துக்கொண்டிருந்தார்கள்.

“புலி அடிச்சுச் செத்துப்போன ராமுவோட குடும்பமே வந்து நின்னு தொரைங்ககிட்ட அழுதுதாம். கொஞ்ச வயசு புள்ளைய தூக்கிக் குடுத்துட்டோம் சாமி, எங்களுக்கு நாதியில்ல சாமி, நீங்க எப்டியாவது கரையேத்தி விடுங்கன்னு.”

காத்தவராயனின் அண்ணி சுற்றுமுற்றும் பார்த்தாள்.

“ரெண்டு புலிங்க இருந்துச்சாம்…”

“ரெண்டு புலியா? ஒனக்கெப்படித் தெரியும்? ஆத்தோரத்துல நடுக்காட்டுல இருந்தாங்க. இருந்த மூணு பேருமே உசுரோட இல்ல? யார் கண்ணால பாத்துட்டு வந்து சொன்னது?” காத்தவராயனின் மனைவி குறுக்குக் கேள்வி கேட்டாள்.

“நேத்து ஒருத்தி தேனு வேணுமான்னு கேட்டு வந்தா இல்ல, காணிக்காரி? அவதான் சொன்னாடி. இவ ஏதோ நான் பொய் சொல்ற மாதிரி குறுக்குக் கேள்வி கேக்கா?”

“சந்தேகத்த கேட்டேன், சரி, நீ சொல்லு.”

“அவதான் சொன்னா… ரெண்டு புலியும் கூடுற நேரத்துல ரொம்ப ஆக்ரோஷமா இருக்குமாம். ஒன் மாமன் மாதிரி வந்ததும் தெரியாம, போனதும் தெரியாம சுவடு தெரியாம இருக்காதாம். நாலைஞ்சு நாளைக்கு ஒன்ன விட்டுப்புட்டு ஒன்னு போவாதாம். நெனச்சி நெனச்சிக் கூடிக்குமாம். ஒரு புலிகிட்ட மாட்டுனாலே உசுரு தப்புறது எம்பாடு, ஒம்பாடு இல்ல. காணிக்காரிதான் சொன்னா, ரெண்டும் ஒன்னா இருக்கிற நேரத்துல இவங்க கண்ணுல பட்டிருப்பாங்க. துடுக்குத்தனமா கல்ல கில்ல வுட்டு எறிஞ்சானுங்களோ என்னமோ, விதி, யார கொற சொல்றது? புலி வந்து தானா பழிய தம்மேல போட்டிக்கிடுச்சி, அவ்ளோதான். போற வுசுர எந்த மவராசனால நிறுத்த முடியும், சொல்லு பாப்போம்?” யாருடைய மரணமோ அவள் நினைவுக்குள் சேர்ந்துகொண்டதில் கண்ணீர் பெருகியது. மூக்கை முந்தானையில் சிந்தி, உறிஞ்சிக்கொண்டு, கண்ணைத் துடைத்துக்கொண்டாள்.

“பாவம், அந்தப் பச்ச ருசுவு. பெத்த அப்பனோட மூஞ்சியப் பாக்கல. வளந்தப்புறம் அப்பன மாதிரி இருக்கன்னு ஊர்ல எவன்னா சொன்னா, அவனக் கல்லக்கொண்டு அடிக்கணும்னு அதுக்கு வெறி வரும்.”

“அதெதுக்குக் கல்லக் கொண்டு எறியணும்?”

“பின்ன இருக்காதா? அப்பன முழுங்கிட்டவன்னு ஊரே பின்னாடி சொல்லிட்டு, அப்பன் மாதிரியே இருக்கான்னு சொன்னா என்னா அர்த்தம்?”

சுர்க்கியைத் தூளாக்கிக்கொண்டிருந்த பெண்களின் சுத்திகள், அவரவர்களின் எண்ணங்களின் அழுத்தங்களைச் சேர்த்து உடைத்ததில் அங்கே மௌனம் நிலைத்தது.

பாறைகளுக்கிடையில் இருந்த பள்ளத்தைச் சுர்க்கியும் சுண்ணாம்பும் கலந்து நிரப்பும் வேலை வேககதியில் நடந்தது. தங்கச்சிலை, கண் அசராமல், நூலிழையளவும் இடைவெளி வந்துவிடாமல் கலவையை நிரப்புகிறார்களா என்பதைக் கண்காணித்துக்கொண்டிருந்தார். நாய்களிரண்டும் அவரின் காலடியில் படுத்தபடி பள்ளத்தைப் பார்த்துக்கொண்டிருந்தன.

பென்னியும் டெய்லரும் திட்ட வரைபடத்தைப் பரப்பி வைத்து விவாதித்தனர்.

“அணை கட்டப்போற இடத்துல இருந்து, பத்தடியிலேயே தடுப்புச் சுவர் எழுப்பி, தண்ணிய திருப்பி விட்டுடலாம்னு நெனச்சிருந்தேன். இந்தப் பள்ளம் இவ்வளவு பெருசா வந்துட்டதால முப்பதடி தூரத்துக்குத் தள்ளிப் போடணும். செலவும் கூட. அவ்ளோ தண்ணிய தடுத்து நிறுத்தி, சுவரெழுப்பி, மொத்தத் தண்ணிய திருப்பி விடுறதும் பெரிய சவால்தான், பார்ப்போம்” என்ற பென்னி, வரைபடத்தை ஆராய்ந்தபடியே, “பேரணையில் வேலை எந்த அளவுக்கு முடிஞ்சிருக்கு டெய்லர்?” என்று கேட்டார்.

“பேரணையில இருக்கிற தடுப்பணையைப் பலப்படுத்துற வேலை ஆரம்பிச்சாச்சு. மொத கால்வாய் ஆரம்பிக்கலாம்னு இருந்தப்பதான், ஒரு பெட்டி நிறைய ராம்நாடு ரயத்துங்ககிட்ட இருந்து பெட்டிஷன் வந்திருக்கு. வைகையாத்துத் தண்ணி வர்ற கால்வாய்லயே பெரியாற்றுத் தண்ணியையும் கொண்டாந்தோம்னா, நாம வைகைத் தண்ணியையும் சேர்த்து எடுத்துப்போம்னு சந்தேகப்பட்டு, வைகைப் பாசனக் கால்வாய்ங்களப் பயன்படுத்தக் கூடாதுன்னு பெட்டிஷன் அனுப்பியிருக்காங்க.”

“இதெல்லாம் மதுரா கலெக்டரோட கவலை. நாம என்ன செய்யப்போறோம்?”

“டர்னர் பத்தி ஒனக்குத் தெரியாதா என்ன? வந்திருக்கிற பெட்டிஷன் பெட்டிய, அப்படியே அம்மையநாயக்கனூர் அனுப்பி, அங்க இருந்து மெஷின்ககூடச் சேர்த்து மேல்மலைக்கு நம்மகிட்ட அனுப்பினாலும் அனுப்பிடுவார். பார்த்துக்கிட்டே இரு, வந்து எறங்கப்போகுது.”

“வந்து எறங்கட்டும், பார்த்துக்கலாம்” பென்னி மெல்லச் சிரித்துவிட்டு, புகைத்துக்கொண்டிருந்த ஹூக்காவுடன் ஜன்னலுக்கு வெளியில் பார்த்தார்.

“பெரிய பெட்டி வர்ற வரைக்கும், இந்தா இந்தச் சின்னப் பெட்டியப் பார்த்துக்கிட்டு இரு…” என்று சொல்லி டெய்லர் மேசையின் மேலிருந்த பெட்டியை நகர்த்தினார்.

“ஏய்… என்ன இது டெய்லர்?”

“இந்த ரயத்துங்களுக்கு ஒன்னுமே புரிய மாட்டேங்குது ஜான்… நாம அவங்களுக்கு உபகாரம் செய்யறதுக்குத்தான் இவ்ளோ பாடுபடுறோம்னு ஒருத்தருக்குக்கூடவா தெரியாது? பெரிய புராஜெக்ட் நடக்கும்போது ஒவ்வொருத்தருக்குமே சின்னச் சின்னச் சங்கடங்கள், சிரமங்கள் வரத்தான் செய்யும். அதுக்காகப் புராஜெக்ட்டே வேணாம்னு சொல்லிடுவாங்களா?”

பென்னி யோசித்தார்.

“அவங்கவங்க அனுபவிச்சிட்டிருக்கிற வசதியில கொஞ்சம் கொறஞ்சாக்கூட பெட்டிஷன் எழுதிடுறாங்க. இங்க பாரேன், இந்தப் பெட்டிஷன் எழுதியிருக்கிறவருக்கு என்ன பிரச்சினைன்னு சொல்லு பாப்போம்?” என்று டெய்லர் ஒரு கடிதத்தை எடுத்துக் கொடுத்தார்.

‘ம- ௱- ௱-  பெரியாறு சூப்பிரண்டெண்டிங் இன்ஜினீயர் துரையவர்கள் சமூகத்துக்கு,

பெரியகுளம் தாலுகா சித்தாறு சத்திரம் கிராமத்தைச் சேர்ந்த பட்டாதார் குமாரசாமிநாயுடு வணக்கமாய்ச் சலாஞ்செய்து எழுதிக்கொண்ட மனு.

என்னவென்றால், சத்திரம் கிராமத்துக் குளத்துக்குப் போகிற காலைத் (வாய்க்காலை) திருப்பி எங்களுடைய கிராமம் நஞ்சை புஞ்சை நிலம் பனைகளுக்கு ஊடே விட புதுக்காலுக்காக முளையடித்திருக்கிறதாகத் தெரியவருகிறது. மேற்படி கால் ஆதிகால முதற்கொண்டு ஒரு மார்க்கமாய்ப் போய்க்கொண்டிருக்கிறது.

மேற்படி கால் ஆதிமுதல் அது இருக்கிற இடத்திலேயே இருந்துகொண்டிருக்கிறதில் அதைத் திருப்பி வடவாறு கிராமத்தின் நிலம் வகையறாவில் ஊடே விடவேணுமென்று இப்போது உத்தேசிப்பது நூதன ஏற்பாடு. வடவாறு கிராமத்தார் கேட்டுக்கொண்டபடி செய்வதற்கு மாத்திரம் இந்த ஏற்பாட்டை அவசரமாய் நடத்த உத்தேசிக்கிறீர்களே தவிர எங்கள் கிராமத்துக்கிருக்கிற சாதகபாதகத்தைச் சமூகத்தில் கிருபைசெய்து யோசிக்க வேண்டும்.

எங்களுடைய பட்டாநிலம் நஞ்சை புஞ்சை பனைகளுக்கு முக்கியமாய் மேற்கண்ட ஏற்பாடு கெடுதலை உண்டுபண்ணத்தக்கதாயிருக்கிறது. எங்கள் குளத்தின் கரையில் அத்திமரத்தடியில் எப்போதும் உடைப்பு விழத்தக்க இழந்த கரையாயிருக்குமிடத்தை ஒட்டிக் குளத்துக்குப் பள்ளமாயிருக்கப்பட்ட மேல்க்கண்ட காலை வடவாறு கிராமத்தாருடைய அநுகூலத்துக்கு மட்டும் திருப்பிவிட வேணுமென்று அவருடைய எண்ணமிருப்பதினாலே அந்த இடத்தில் உடைப்பு ஒரு சின்ன மழையினால்கூட விழுந்து அடிக்கடி எங்களுக்குக் கஷ்டநஷ்டத்தை உண்டு பண்ண ஏதுவாயிருக்கிறது தவிர எங்களுடைய நிலங்கள் பனைகள் எடுபட்டுப் போவதற்கும் அதனால் அதிகக் கெடுதலுண்டாவதற்கும் காரணமாயிருக்கிறது.

வடவாறு கிராமத்தாருக்கு இப்படிக் காலைத் திருப்பாவிடில் யாதொரு குறைவும் கஷ்டநஷ்டமும் உண்டாக மாட்டாது. ஆனதால் எங்கள் நஞ்சை புஞ்சை நிலம் விஸ்தாரமான பனைகள், குளத்தின் கரைக்கும் திடீரென்று கெடுதலை உண்டாக்கக்கூடிய புதுக்கால் வெட்டாமல் நிறுத்தி வைக்கும்படி சமூகத்தில் பரிபூரண கிருபை செய்ய உத்தரவாக வேணுமென்று பிரார்த்தித்துக் கேட்டுக்கொள்கிறோம்.

(ஒப்பம்) குமாரசாமி நாயுடு.

கடிதத்தைப் படித்து முடித்த பென்னி, மீண்டும் கடிதத்தைப் பெட்டியிலேயே போட்டார்.

“இந்தக் குளம், குட்டை, பனைமரம்னு விட்டுட்டுப் பெரிய பாதிப்பு வருவதாக வேறு யாரேனும் பெட்டிஷன் எழுதியிருக்காங்களா?”

“இல்லை. எல்லாமே எங்களுடைய நிலம் வகையறாவுக்குக் கெடுதலாகியும், ஆதிகால முதற்கொண்டு கடந்து வந்திருக்கிற வழக்கத்துக்கு விரோதமாயும் நூதனமான ஒரு ஏற்பாட்டை இன்ஜினீயர் ஆபிசர் தடுத்து நிறுத்திவைக்கும்படி உத்தரவாகப் பிரார்த்திக்கிறேன்… இதான் எல்லாக் கடிதத்திலும் இருக்கிற ஒரே கோரிக்கை.” டெய்லர் சொன்னவுடன், பென்னி வெளியில் வந்து நின்றார்.

மேல்மலையைச் சூழ்ந்த மேகக் கூட்டத்தைப் பார்த்த பென்னி, வாயிலிருந்து புகையை வெளியேற்றினார்.

“ஆதிகால வழக்கம்னு ஒவ்வொருத்தரும் சொல்லி, அப்படியே இருக்கணும்னு நெனைச்சோம்னா மேற்கே போகும் பெரியாறும் நான் கிழக்கே வரமாட்டேன்னு சொன்னா நம்மால் என்ன செய்ய முடியும் டெய்லர்?”

பென்னி கேட்ட கேள்வியின் பொருள் புரிந்த டெய்லரும், வாயிலிருந்த சுருட்டை ஆழமாக இழுத்துப் புகையை வெளியேற்றினார்.

- பாயும்