மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீரதிகாரம் - 76 - பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சித் தொடர்...

நீரதிகாரம்
பிரீமியம் ஸ்டோரி
News
நீரதிகாரம்

பென்னிக்குக் கடுமையான கோபம் வந்தது. கவர்னரின் கையெழுத்தின்றி வந்திருந்த கடிதத்தைப் படித்த பென்னிக்கு, கடிதத்தில் இருந்த கையொப்பம் பார்த்து எல்லாம் புரிந்தது.

பருவம் கடந்தும் மழை தொடங்காததில், காலநிலையில் இருந்த ஏற்ற இறக்கங்கள் காட்டின் வெப்பத்தைக் கூட்டியிருந்தன. வேலையாள்கள் உடம்புச்சூட்டில் தகித்தார்கள். பகலில் குளிரில் உடம்பு நடுங்குவதும், இரவு முழுக்கக் கடும் காய்ச்சலில் சுருண்டுகொள்வதுமாகத் தத்தளித்தார்கள். பத்துப் பேரில் ஒன்றிரண்டு பேரே உடல் வலுவுடன் காட்டின் காய்ச்சலைத் தாங்கி நின்று வேலை செய்தார்கள். தீராத் தலைவலியும் உடல்வலியும் தாங்காமல் குடிசைகளில் சுருண்டிருந்தனர். பகல் முழுக்க நீரில் நின்று வேலை செய்வதால், காய்ச்சல் குறைந்தாலும் கால்குடைச்சலும் உடம்பு வலியும் குறையாமல் வேலையாள்கள் குறுகிக் கிடந்தார்கள்.

பென்னி குக் வேலையாள்களின் உடல் பாதிப்புகளைத் தீர்த்து, பாதுகாப்பான வேலைச் சூழலைப் பராமரிக்கும் பொறுப்பை அசிஸ்டென்ட் இன்ஜினீயர் லோகனிடம் கொடுத்திருந்தார். காய்ச்சலிலும் உடல்வலியிலும் முடங்கிக் கிடப்பவர்கள் எண்ணிக்கையைக் குறித்துக் கொடுக்கச் சொல்லி, ரத்தினம் பிள்ளையிடம் லோகன் சொன்னார். ரத்தினம் பிள்ளை ஒரு லஸ்கரை அழைத்து, ஒவ்வொரு குடிசையாகச் சென்று, வேலைக்குச் செல்லாமல் முடங்கிக் கிடப்பவர்கள் யார் யார் என்று பார்த்துப் பெயர்கள் எழுதிக்கொண்டு வரச் சொன்னார்.

லஸ்கர் சவரிராயன் இப்போதுதான் மேல்மலைக்கு வந்திருந்தான். மானூத்துச் சந்தனத்தேவன், அணை வேலைக்கு ஆள்கள் எடுப்பது பற்றித் தகவல் சொல்லி, ரத்தினம் பிள்ளையைப் பார்த்து, வேலை கேட்கச் சொன்னான். சவரிராயனுக்கு என்ன வேலை கொடுப்பது என்று ரத்தினம் பிள்ளைக்குப் புரியவில்லை. பெரியாறு அணைக்கான கால்வாய்கள் வெட்டும் இடங்களில் புதிதாக லஸ்கர்களை நியமித்தார்கள். அந்தந்த ஊரின் வாய்க்கால் வரப்புகளைப் பராமரிப்பதுடன், ஒவ்வொரு ஊரின் ரயத்துகளின் பிரச்சினைகளைக் கேட்டறிவதற்கும் லஸ்கர்களின் உதவி தேவைப்பட்டது. ஆனால் மேல்மலையில் லஸ்கர்களுக்குப் பெரிதாக வேலையில்லையென்பதால் பிள்ளை தயங்கினார். பென்னி மேல்மலைக்கு வந்தவுடன் இரண்டு லஸ்கர்களை நியமிக்குமாறு யதேச்சையாகச் சொன்னவுடன் பிள்ளைக்கு உற்சாகமானது. தன்னுடைய கைக்கு அடக்கமாக இருப்பான் என்று நம்பி, சவரிராயனைப் பென்னியிடம் அழைத்துச் சென்று வேலை வாங்கிக் கொடுத்தார்.

நீரதிகாரம் - 76 - பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சித் தொடர்...

மேல்மலையின் சின்னஞ்சிறிய வேலையில் இருந்து ஓவர்சீயர் வரை, உள்ளூர் ஆள்களை நியமிப்பதைத்தான் பென்னியும் விரும்பினார். ஐரோப்பியர்களை நியமித்தால், அவர்களில் பெரும்பாலோர் அவருடைய கட்டுப்பாட்டுக்குள் வராமல், நினைத்த நேரத்தில் விடுப்பு எடுத்துக்கொண்டு செல்வதையும், வேறு பணியிடங்களுக்குப் போவதாகவும் பயணத்தில் இருப்பதாகவும் எழுதி வைத்துவிட்டுச் செல்வதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்தார்கள். மேல்மலையில் அணை கட்ட அரசு உத்தரவிட்ட பிறகு, முதன்முதலில் ஒரு ஐரோப்பிய ஓவர்சீயரை நியமித்தார் பென்னி. நியமித்ததில் இருந்து பிரச்சினைதான். அவரைப்போல் நியமிக்கப்பட்டிருந்த மதுரை ஓவர்சீயருடன் தினம் சண்டை.

‘தன் முன்னால் தனக்குச் சமமாக உள்ளூர் ஓவர்சீயர் உட்காரக் கூடாது, அவராக எந்த யோசனையையும் முன்வைக்கக் கூடாது, தன் உத்தரவுகளை மட்டுமே அவர் செயல்படுத்த வேண்டும், தன் வேலைகளையெல்லாம் சேர்த்து அவர் செய்ய வேண்டும்’ என்று, ஐரோப்பிய ஓவர்சீயர் செய்த ஆர்ப்பாட்டங்களினால் எதிர்பார்த்த அளவுக்கு வேலைகள் நடக்கவில்லை. உள்ளூர் ஓவர்சீயர் தன் வேலைக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்து பென்னியிடம் தன் சிரமங்களை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. லஸ்கர் ஒருவன்தான், பென்னியிடம் ஒரு நாள் தயங்கித் தயங்கிச் சொன்னான்.

உடனே ஐரோப்பிய ஓவர்சீயரை அழைத்த பென்னி, அவன்மேல் வந்திருக்கிற குற்றச்சாட்டுகளைச் சொல்லி, அதுபற்றி விசாரித்தார். ஓவர்சீயரோ பென்னியின் கேள்வியைப் பொருட்படுத்தாததோடு, வாயில் வைத்திருந்த ஹூக்காவைப் புகைத்துப் புகையை வெளியேற்றியபடி வேடிக்கை பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். பென்னி மீண்டும் கேட்க, ‘பதில் சொல்ல அவசியமில்லை’ என்ற தொனியோடு பென்னியின் முகத்தைப் பார்த்தார். பென்னிக்குக் கோபம் வந்தது. “உங்களுடைய வேலையைச் செய்யாததுடன், உங்களுக்குச் சமமாக உள்ள நேட்டிவ் ஓவர்சீயரை அவமரியாதை செய்வது ஏன்?” என்று பென்னி கேட்டவுடன், “ப்ளடி நேட்டிவ் ஓவர்சீயர், அவனுக்கு அதைவிட என்ன வேலை?” என்றான்.

நீரதிகாரம் - 76 - பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சித் தொடர்...

“இருவருக்கும் ஒரே பதவி, அவர் செய்யும் வேலையை நீங்களும் செய்துதான் ஆக வேண்டும்.”

“பதவி ஒன்றுதான். ஆனால் எனக்குச் சம்பளம் அதிகமாச்சே?”

“அதிக சம்பளம் வாங்கிக்கொண்டும் வேலை செய்ய விருப்பமில்லையெனில்...”

“விருப்பமில்லையெனில்? என்ன செய்யட்டும் மிஸ்டர் ஜான்? நீங்கள் என்னைப் பணியில் நியமிக்கவில்லை. உங்களால் ஒன்றும் செய்யவும் முடியாது. உங்கள் இடத்திற்குப் பத்தாண்டுகளில் நானும் வந்துவிடுவேன், அவ்வளவுதானே?” என்று சொல்லிவிட்டு, புகையை ஆழமாக உள்ளிழுத்து வெளியே விட்டு, பாதியில் பேச்சை நிறுத்தி வெளியேறினார்.

பென்னி, கவர்னரின் செக்ரட்டரிக்குக் கடிதம் எழுதினார். ‘தன் உத்தரவை மதிக்காத ஐரோப்பிய ஓவர்சீயரை உடனே விசாரிக்க வேண்டும். உயரதிகாரிக்குரிய மரியாதையைத் தராமல் அவர் நடந்துகொண்ட விதம் கண்டனத்துக்குரியது’ என்று பென்னி எழுதிய கடிதத்திற்கு, ஒரு மாதம் கழித்துத்தான் பதில் கடிதம் வந்தது. அப்போது கிராண்ட் டப் கவர்னராக இருந்தார். அவரின் செயலருக்கும் பென்னிக்கும் ஏற்கெனவே கருத்து வேற்றுமை இருந்தது. கவர்னரைச் சந்திக்க அனுமதி கேட்டபோது, முன்அனுமதி பெறாமல் வந்ததால் அனுமதிக்க மறுத்த செக்ரட்டரியிடம் பென்னி கோபப்பட்டிருந்தார். அதே செக்ரட்டரிதான் பென்னியின் கடிதத்தைப் பார்த்தார். கடிதத்தைப் பார்த்தவர் கவர்னரின் கவனத்திற்குக் கடிதத்தைக் கொண்டு செல்லாமல், ‘டிபார்ட்மென்ட் பிரச்சினைகளைச் சிறு பிள்ளைகள்போல் முதிர்ச்சியில்லாமல் ஹிஸ் எக்ஸலென்ஸி கவர்னருக்கு எழுத வேண்டியதில்லை. ஹிஸ் எக்ஸலென்ஸியின் தினசரிகள் அத்தியாவசியமான வேலைகளில் நிரம்பியிருக்கும்போது, தனிநபர்மீதான புகார்களை அனுப்புவது சரியல்ல. எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நேராதவண்ணம் பார்த்துக்கொள்ள திரு.ஜான் பென்னி குக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்’ என்று பதில் அனுப்பினார்.

பென்னிக்குக் கடுமையான கோபம் வந்தது. கவர்னரின் கையெழுத்தின்றி வந்திருந்த கடிதத்தைப் படித்த பென்னிக்கு, கடிதத்தில் இருந்த கையொப்பம் பார்த்து எல்லாம் புரிந்தது. கவர்னரின் பர்சனல் செக்ரட்டரியே பதில் அனுப்பியிருந்தார். பென்னி மனம் ஆறாமல். உடனே லண்டனில் இருக்கும் செக்ரட்டரி ஆப் ஸ்டேட்ஸுக்குக் கடிதம் அனுப்பினார். அவர் மெட்ராஸ் கவர்னருக்கு உடனே ஒரு கடிதம் எழுதி, ஓவர்சீயரைச் சம்பளம் இல்லாமல் விடுப்பு கொடுத்து லண்டனுக்கு அனுப்பச் சொல்லிவிட்டார். வேலையே செய்யாமல் உருட்டல் மிரட்டல்களில் காலம் ஓட்டிக்கொண்டிருந்த ஐரோப்பிய ஓவர்சீயர் வெளியேற்றப்பட்ட பின், பென்னி பெரும்பாலும் உள்ளூர் அலுவலர்களையே பணியில் அமர்த்தினார்.

சவரிராயன் ஒவ்வொரு குடிசைக்கும் சென்று, முடங்கிக் கிடந்தவர்களைக் கணக்கெடுத்தான். அவனுக்கு எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரியும். கணக்குப் போடச் சொன்னால் எட்டிக்காயாகக் கசக்கும் என்பான். ஆள்களின் எண்ணிக்கைதானே என்பதால் தயங்காமல் வந்துவிட்டான். முதல் வரிசையில் இருந்த ஐம்பது அறுபது குடிசைகளில் ஒவ்வொரு குடிசைக்குள்ளும் நுழைந்து பார்த்தான். குடிசைக்கு ஓரிருவராவது சாக்குப் பையைத் தரையில் விரித்து முடங்கிக் கிடந்தார்கள். தலையைத் தொட்டுப் பார்த்தால் நெருப்புப்போல் சூடும், காலைத் தொட்டால் சில்லிட்டும் இருந்தது. சவரிராயன் எழுப்பி உட்கார வைத்து, அப்போதகிரிக்கு வந்து மருந்து மாத்திரை வாங்கிச் சாப்பிட்டு வரலாம் என்று சொல்லிக் கூப்பிட்டால் போதும், சவரிராயனின் கையை உதறிவிட்டு, சாக்கை இழுத்துப் போட்டுக்கொண்டு படுத்துக்கொள்வார்கள். இங்கிலீஷ் மருந்து மாத்திரைகளைப் பார்த்தாலே விஷம்போல் இருந்தது அவர்களுக்கு. வெள்ளை நிறத்தில் சுண்டு விரலில் கால்வாசி நீளத்திற்கு இருக்கும் அந்தக் கசப்பு மாத்திரை, தங்கள் உயிரை எடுத்துவிடும் என்று அஞ்சியவர்கள், மாத்திரை எடுத்து வருபவர்களை எமதர்மனே வருவதாக எண்ணி மறைந்து ஓடினார்கள்.

ஒவ்வொரு குடிசையாகப் பார்த்து முடித்த சவரி, குடிசைக்குள் முடங்கிக் கிடப்பவர்களைக் கணக்கில் வைத்துக்கொள்ள ஒவ்வொரு குச்சியாகக் கையில் சேர்த்துக்கொண்டு சென்றான். முழுதாகக் கட்டி முடிக்காத குடிசைகளையும் பார்த்த பிறகு, சேர்ந்திருந்த குச்சிகளைக் கொண்டு ரத்தினம் பிள்ளையிடம் கொடுத்தான்.

“என்னடா இது?” என்றார் பிள்ளை.

“குச்சி எசமான்.”

“காக்கா மூக்குல கொத்தித் தூக்கிட்டு வர்ற மாதிரி, எதுக்குடா இது?” பிள்ளை அப்போதுதான் பழைய வெற்றிலைச் சாற்றைத் துப்பிவிட்டு, வாயைக் கொப்பளித்துவிட்டுக் கொஞ்சம் தண்ணீர் குடித்திருந்தார். முகம் அரை வெயிலில் மின்னியது. காதிலிருந்த சிவப்புக் கடுக்கண் அவர் முகத்துக்குப் போட்டி போட்டது.

“எத்தினி பேரு வேலைக்குப் போவாம, குடிசையில படுத்துக்கெடக்கான்னு பாக்கச் சொன்னீங்களே எசமான்?”

ரத்தினம் பிள்ளை, புரியாமல் சவரியைப் பார்த்தார். பார்வை சவரியின்மேல் நிலைத்து, மூளையில் குழப்பம் படர்வதற்குள், அவருக்குச் சட்டென்று புரிபட்டது.

“முட்டாப் பய... எண்ண வராதா உனக்கு? முட்டாப் பய...” என்றவர் குச்சியை வலக்கையில் இருந்து இடக்கைக்கு மாற்றி ஒவ்வொன்றாக எண்ணத் தொடங்கினார்.

“மொத்தமே நூத்துப் பத்துக் குச்சிய தாண்டுலயேடா? வேலையில இருக்கிறவன் முந்நூத்துச் சொச்சம்னு வச்சிக்கிட்டாலும், முந்நூத்துச் சொச்சத்தோட நூத்துப் பத்த சேத்தோம்னு வை, நானுத்துச் சொச்சம்தானே வருது? மொத்தம் எண்ணூறு பேருடே, மேல்மலையில இருக்கிற கூலிங்க கணக்கு. மீதிப் பயலுவ எங்கடா?”

நீரதிகாரம் - 76 - பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சித் தொடர்...

சவரிராயன் குழம்பினான்.

“எல்லாக் குடிசக்குள்ளயும் நொழஞ்சு வந்துட்டேனே சாமி?”

“வெளங்காத பய? பாதிக்குப் பாதியாவது கணக்கு வர வேணாமாடா? வேல செஞ்சுக்கிட்டே இருக்கானுவோ, வெட்டனது வெட்டன மாதிரியே இருக்கு, மம்மட்டிய வெச்சிட்டு, காட்டுல உள்ள நொழஞ்சு அப்டியே கீழ எறங்கிடுறானுங்க. எப்பப் போறான், எப்ப வர்றான் ஒன்னும் தெரிய மாட்டேங்குது. அப்படி நாப்பது ஐம்பது பேர்ன்னாலும் மத்தவங்க எங்கடா? ஓடு, படிக்கத் தெரியாத மூதேவிங்கள வச்சிக்கிட்டு உசுரு போகுது...” ரத்தினம் பிள்ளை உடனே இலைப்பெட்டியைத் திறந்து, வெற்றிலை ஒன்றை உருவினார். வெற்றிலையின் நடுமுதுகில் இருந்த நரம்பை உருவியவர், முன்னால் செல்லும் சவரிராயனின் நரம்புகள் புடைத்திருந்த முழங்காலைப் பார்த்தார்.

சவரிக்குக் குழப்பம். ‘எந்தக் குடிசைக்குள்ள நுழையல?’ என்று தலையைச் சொறிந்துவிட்டுக்கொண்டு சின்னக் குன்றொன்றின் மேல் நின்றபடி குடிசைகளைப் பார்த்தான். மலைச்சரிவில் வரிசையாகவும் ஆங்காங்கும் இருந்தன குடிசைகள். மேல்மலைக்கு வந்து கொஞ்ச நாள்கள்தான் ஆகின்றன என்றாலும், சவரிக்கு எல்லாக் குடிசைகளும் பரிச்சயம். வீட்டு வாசலில் தக்காளி விதைகளை விசிறிவிட்டுச் செடியாக வளர்த்திருந்த குப்பையக் கவுண்டன் குடிசையிலிருந்து, கொடி அவரையைப் பந்தலிட்டு வைத்திருந்த அந்தோணிமுத்துப் பிள்ளை குடிசை வரை எண்ணிப் பார்த்தான். எந்தக் குடிசையையும் விட்டதாகத் தெரியவில்லையே?

குழம்பித் தவித்த சவரி, காலின் உந்துதலில் காட்டுக்குள் நடந்தான். கஞ்சா புகைக்கவும், வேலையில் இருந்து தப்பித்து ஓய்வெடுக்கவும், பேயத்தேவன் பார்வதிபோல் சின்னஞ்சிறுசுகள் பார்த்துப் பேசிக்கொள்ளவும் விரும்பினால் அடைக்கலம் தரும் பாறைப் பொடவுக்கு வந்தான். வெயில் உச்சந்தலையில் உறைத்தது. பாறைப்பொடவில் உட்கார்ந்தவன், மொக்கை மாயனிடமிருந்து வாங்கிய சுருட்டுத் துண்டையெடுத்துப் பார்த்தான். நெருப்பு எப்படி வைப்பது, கங்கு அங்கில்ல கெடக்கு என்று நினைத்தவன், மீண்டும் இடுப்பு வேட்டியில் வைத்து முடிந்தான். பிள்ளை கணக்குக் கேட்டுக் குடைவாரே என்று குழம்பியவன் கண்களுக்கு எதிரில் இருந்த மரத்தில் மஞ்சளாக காற்றில் அசையும் பொருளொன்று தெரிந்தது. முதலில் பறவை ஒன்று உட்கார்ந்திருப்பதாக நினைத்தவனுக்கு, சந்தேகம் வரவே, எழுந்து அருகில் சென்று பார்த்தான்.

மரத்தின் கிளையில் நான்கைந்து சுற்றுச் சுற்றப்பட்டிருப்பது மஞ்சள் துண்டு என்பதையுணர்ந்தவனுக்கு வியப்பு எழுந்தது. வேட்டியை அவிழ்த்து, தார்ப்பாய்ச்சாகக் கட்டியவன் குரங்கொன்றைப்போல் மரத்தின் உடம்பில் தாவிக்குதித்து ஏறினான். பெரிய மரம். அறுபது, எழுபதடி உயரம். இருபது, முப்பதடி உயரத்திற்கு ஏறியவனுக்கு நாசி சுருங்கியது. குடலைப் புரட்டும் நாற்றத்தை அவனின் மூளை உணரும்முன் மூக்கு உணர்ந்திருந்தது. தவ்வலை நிறுத்தி, சுற்றுமுற்றும் பார்த்தான். ஏதோ ஒரு விலங்கு செத்து, அதன் அழுகல் வாடை மூக்கைத் துளைப்பதாக எண்ணியவன், மூச்சை இழுத்துப் பிடித்து, கால் கட்டை விரலை அழுந்த ஊன்றியபடி, மரத்தின் மீதேறினான். மேலும் பத்தடி ஏறியவன், நாற்றம் அதிகம் வரவே மரத்தின் கிளைகளைப் பார்வையால் ஆராய்ந்தான்.

வலப்புறம் திரும்பியவன், பார்வை நிலைக்குத்தி நின்று, “ஐயோ...” என்று அலறினான். அதிர்ச்சியில் கையைத் தளர்த்தியவனைக் கீழே தள்ளப்பார்த்தது மரம். சறுக்கிக் கீழே விழப்பார்த்தவனின் கை அனிச்சையாக, அருகில் இருந்த கிளையொன்றைப் பற்றியது. பிஞ்சுக் கிளையது. சவரியின் எடை தாளாமல் முறிந்தது. “ஐயோ அம்மா...” என்று காட்டுக் கத்தல் போட்டுக்கொண்டே மடாரென்று கீழே விழுந்தான்.

சவரியின் கத்தல் முதலில் ரத்தினம் பிள்ளைக்குத்தான் கேட்டது. இரண்டாவது வெற்றிலையின் நடு நரம்பைக் கிழிக்கச் சென்றவர், அதிர்ச்சியில் அப்படியே நின்றார். எல்லோரும் கூச்சல் கேட்ட திசை நோக்கி ஓடினர்.

“சவரியாப்பா?”

“ஐயோ, இன்னைக்கும் சாவு விழுந்துடுச்சா?”

“யானையா, புலியான்னு தெரியலையே?”

“எல்லார் உசுரையும் எடுத்துட்டுத்தான் விடுமோ என்னமோ இந்தப் பேய்க்காடு...”

ஆளாளுக்கொரு அச்சத்தை வெளிப்படுத்திக்கொண்டே ஓடினார்கள்.

லோகனும் மெக்கன்சியும் அந்தக் கூட்டத்தில் இருந்தனர்.

இருபதடி உயரத்தில் இருந்து விழுந்தாலும் சவரிக்கு வெறும் சிராய்ப்புகள்தான் இருந்தன. மரத்தில் இருந்து தவறிவிழும் எறும்போ, சிலந்தியோ அடுத்த நொடி சுதாரித்து, மீண்டும் ஏறத்தொடங்குவதுபோல் சவரி, கைகாலை உதறிவிட்டுக் கொண்டு எழுந்து நின்றான். கூட்டம் அருகில் வந்தவுடன் அச்சத்தில் மேலே கை காட்டினான்.

ராசுமாயன், சவரி கைகாட்டிய இடத்தைக் கீழிருந்து பார்த்தான். மஞ்சள் துண்டொன்று மட்டும் தெரிந்தது. என்னவென்று பார்க்க மேலே ஏறப்போனவனைப் பார்த்து, சவரி கத்தினான். அழுகை வந்தது அவனுக்கு.

“அங்க...” என்று சொல்லி, திக்கினான்.

“என்னடா அங்க?” ராசுமாயன், சவரியை உலுக்கினான்.

“அங்க..?”

“இவன் ஒருத்தன்...” என்று அலுத்துக்கொண்ட ராசுமாயன், வேட்டியை மடித்துத் தார்ப்பாய்ச்சுக் கட்டிக்கொண்டு அணில்போல் இடைவிடாமல் மரத்தின்மீது ஊர்ந்தான். மேலே செல்லச் செல்ல அவனுக்கும் நாற்றம் குடலைப் புரட்டியது. ஒரு கையால் மூக்கைப் பொத்தியவன், வலது கைப்பக்கம் பார்த்து அதிர்ந்தான். இமைகளை மூடித் திறந்து, தான் பார்ப்பது நிஜம்தானா என்பதுபோல் பார்த்தான். பார்வையின் காட்சியை உறுதிசெய்துகொண்டவன் சத்தமில்லாமல் கீழிறங்கினான்.

மெக்கன்சியிடம் சென்றவன், “தொர, மேல ஒருத்தன் செத்துக் கெடக்கான்” என்றவன்.

“ஐயோ... யாருப்பா?” என்று ஆளாளுக்குக் கேட்டார்கள். ஒவ்வொருத்தரும் முதலில் தன் குடும்பத்தவரை நினைத்தார்கள், அவர்கள் பத்திரமாக இருக்கிறார்கள் என்று உறுதிப்படுத்திக்கொண்ட பிறகு, தனக்கு வேண்டியவர்களை நினைத்தார்கள். நொடி நேரத்தில் நினைவுகள் ஒவ்வொருவரையும் எண்ணி, சலித்துக்கொண்டு வந்து மேலே போட்டன.

“யாருன்னு தெரியுதா ராசு?” மெக்கன்சி கேட்டார்.

“தெரியல தொர. மூஞ்சி முழுக்க புழுத்துப்போயிடுச்சி. கண்ணு ரெண்டுந்தான் முழிச்சிக்கிட்டு கெடக்கு. உடம்புவாகு பாத்தா, கல்லொடைக்கிற ஒட்டன் மாதிரி இருக்கு...”

அதற்குள் ஆங்காங்கு வேலை செய்துகொண்டிருந்தவர்கள் எல்லோருமே திரண்டனர். தடுப்புச் சுவர் எழுப்ப, வலது கரையோரம் நீரை வெளியேற்ற நதிக்குக் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கும் வேலையில் இருந்த பென்னி, கவலையோடு வந்து சேர்ந்தார்.

துணிவுடன் இருந்த நான்கைந்து இளைஞர்களை மரத்தின் மேலேற்றி, இறந்த உடலைக் கீழிறக்கச் சொன்னார் பென்னி.

கையில் சாக்குப் பையுடன் மேலேறியவர்கள், கண்களை இறுக மூடிக்கொண்டனர். உடல் முழுமையாகச் சிதைந்திருந்தது. இறந்து எத்தனை நாளானது என்று கண்டறிய முடியவில்லை. புழுத்துப்போன தசையாலான உடலைக் கீழிறக்கியபோது, “ஐயோ எஞ்சாமி...” என்ற பெண்ணின் அழுகை கூட்டத்தின் கடைசியிலிருந்து எழுந்தது.

கூடியிருந்தவர்கள் முன், பென்னி கவலையுடன் நின்றிருந்தார். எங்கிருந்து பேசத் தொடங்குவது என்ற தயக்கத்தில் வார்த்தைகளைக் கலைத்துக் கலைத்துப் போட்டுக்கொண்டிருந்தார். மெக்கன்சி அருகில் வந்து, “ரொம்ப நேரமா நின்னுக்கிட்டு இருக்க பென்னி, பேசு” என்றார். “யெஸ்...” என்ற பென்னி, லேசான கனைப்புடன் ஆரம்பித்தார்.

“நம்ம எல்லாருக்குமே, என்னையும் சேர்த்துத்தான் சொல்றேன்... இது வரமா, சாபமான்னு தெரியல, இந்த மேல்மலையில இருக்கோம். ஒவ்வொரு நாள் விடியறப்பவும் யார் யார் உயிரோட இருப்போம்ங்கறதுக்கு உத்தரவாதம் இல்ல. இருந்தா அவங்க அதிர்ஷ்டம்னு நெனச்சிக்கிட வேண்டியதுதான். நாம யாருமே இதுமாதிரியான அடர்ந்த காட்டுக்குள்ள வாழ்ந்து பழக்கப்படாதவங்க. சீசன் இன்னும் ஆரம்பிக்காததால, மலேரியா காய்ச்சல் அதிகமாயிட்டே இருக்கு.

யானைங்க தொந்தரவு அதிகம். ராத்திரியில கூட்டம் கூட்டமா வர்ற யானைக, எந்தக் குடிசைய பிச்சுப் போட்டு, ஆளுகள மிதிச்சிக் கொல்லுமோன்னு பயம். இது இல்லாம விஷப்பூச்சிங்க, காட்டு மிருகங்கன்னு, நம்ம உயிருக்கு ஆபத்தான சூழல்லதான் நாம இருக்கோம். சூழலே நமக்கு ஆபத்தா இருக்கும்போது, நாமாப்போய் ஆபத்த வாங்கிக்கக் கூடாது. எப்போ மேல்மலையில நூறு, இருநூறுன்னு ஜனங்க எண்ணிக்க கூடுச்சோ அப்ப இருந்து நாங்க சொல்லிக்கிட்டேதான் இருக்கோம், சுத்தமா இருக்கணும், ஓடுற ஆத்துத் தண்ணிய அப்டியே அள்ளிக் குடிக்கக் கூடாது. சமைக்கிறதுக்கும் குடிக்கறதுக்கும் வடிகட்டிச் சுத்தப்படுத்தின தண்ணியத்தான் பயன்படுத்தணும், லேசா காய்ச்சலோ உடம்பு வலியோ கால்குடைச்சலோ இருந்தா இங்க அப்போதகிரியில குடுக்கிற மருந்து மாத்திரைகள சாப்பிடணும். பல பேர் உயிரே போனாலும் மாத்திர சாப்பிட மாட்டோம்னு பயந்துகிட்டு காட்டுக்குள்ள உக்காந்திருக்கீங்களாம்.

அப்படிப் போய் மரத்துமேல உக்காந்திருந்த ஆளோட நிலையைப் பாத்தீங்களா? ஒரு பாறையையே பத்து நிமிஷத்துல பூ மாதிரி உடைச்சுப் போடுற ஆளு, மாத்திர சாப்பிட்டுத்தான் ஆவணும்னு சொன்னதுக்காக, பயந்துபோய் ராத்திரியும் பகலும் மரத்தவிட்டுக் கீழ எறங்காம உக்காந்திருக்காரு. விஷப்பூச்சி கடிச்சுதா, என்ன நடந்துச்சின்னு நம்ம யாருக்கும் தெரியல. அவரோட உயிர் போனது, ரொம்பத் தப்பு. காரணம் இல்லாதது. நாம எதிர்பார்க்காம, நம்மால தடுத்து நிறுத்த முடியாம மரணம் வந்தா பரவாயில்ல. நாமே போய் மரணத்தை வாங்கிக்கக் கூடாது. மாத்திர சாப்பிட்டா ஒன்னும் ஆகாது. எங்களப் பாருங்க. இதுவரைக்கும் நானோ மெக்கன்சியோ லோகனோ டெய்லரோ உடம்பு முடியாமப் படுத்திருக்கோமா பாருங்க? எங்களுக்கு மட்டும் காடு, வீடு மாதிரியா இருக்கு? எங்களுக்கும் காய்ச்சல் வருது, தலைவலிக்குது, உடம்பு வலிக்குது, நாள் முழுக்க ஆத்துத் தண்ணியில நின்னா எல்லாருக்கும் கால் குடைச்சல் இருக்கத்தான் செய்யும்? ஆனா நாங்க எப்படிச் சமாளிக்கிறோம்? சுத்தமான தண்ணி குடிக்கிறோம். உடம்பை மூடுற மாதிரி கோட் போடுறோம், முட்டிக்கால் வரைக்கும் பூட்ஸ் போடுறோம்.

இங்க பல பேரு சட்டையே போட மாட்டேன்றீங்க. உடம்பு முடியாமப் போனா, மாத்திர போட மாட்டேன்றீங்க. மாத்திர ஒன்னும் செய்யாது. நோய குணமாக்குறதுக்குத் தான் மாத்திர. நீங்க கைவைத்தியம் செஞ்சுக்கிறது தப்பில்ல. ஆனா இந்தக் காட்டுல அதெல்லாம் சரியா வராது. சின்னச் சின்ன வலிகளத்தான் உங்க கைவைத்தியம் தடுத்து நிறுத்தும். அணை கட்டுறது எவ்ளோ முக்கியமோ அவ்ளோ முக்கியம், நீங்க எல்லாம் உயிரோட இருக்கிறது. நீங்க நல்லவிதமா நாங்க சொல்றத கேட்டு நடந்துக்கலைன்னா, கடுமையா நடக்க வைக்க வேண்டியிருக்கும். என்னை அந்த இடத்துக்குத் தள்ளாதீங்க...” என்று முடிக்க முடியாமல் பேச்சை முடித்தார் பென்னி குக்.

“கலைந்து செல்லலாம். நீர்வரத்துக் குறைவா இருக்கு. பருவ மழை ஆரம்பிச்சிடுச்சின்னா திடீர் வெள்ளம் வரும். நம்மால சமாளிக்க முடியாது. வேகமா தண்ணிய மடை மாத்திவிட்டுட்டோம்னா தடுப்புச் சுவர் வைக்கிற வேலையை ஆரம்பிச்சிடலாம்” என்று வேலையாள்களிடம் கூறிய பென்னி குக், லோகனைப் பார்த்தார்.

“லோகன், காலை, மதியம், சாயங்காலம் மூணுவேளையும் எல்லாரையும் ரெண்டு நிமிஷம் இங்க வரச்சொல்லு. காலையில வேலைக்கு வர்றவங்க எல்லாம் சாயங்காலமும் இருக்காங்களான்னு பாத்துக்க வேண்டியது உங்க வேலை” என்றார்.

“யெஸ் ஜான். கட்டாயமா பாத்துடுறேன். சாரி, இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்திருக்கக் கூடாது.”

“அவங்க மனைவி, அவர் ஊருக்குப் போயிட்டாருன்னு நெனச்சிக்கிட்டு என்னைக்குத் திரும்ப வருவாரோன்னு பாத்துக்கிட்டு இருந்திருக்காங்க” என்றார் டெய்லர்.

“நம் தவறொன்னும் இல்லை என்பதுதான் ஒரே ஆறுதல்” என்ற பென்னி, நதிக்கரையை நோக்கிச் சென்றார். மணல் மூட்டைகளால் தடைபட்ட நதிநீர், மூட்டைகளுக்கு இடையிலும் மூட்டைகளைச் சுற்றிக்கொண்டும் தன் பாதையிலேயே தொடர முயன்று முட்டிக்கொண்டிருந்தது. மறிக்கப்பட்ட பாதையை விட்டு, தடையில்லாமல் முன்னேறியது பெருவாரியான நீர்.

அப்போதகிரியின் உள்ளேயும் வெளியேயும் நடந்துகொண்டிருந்த எஸ்தரின் முகம் கவலையின் பழுப்பேறியிருந்தது. தலைவலி என்றாலே ஆள்களைப் பிடித்துக்கொண்டு வந்து, வாயில் மாத்திரை போட்டுத் தண்ணீர் ஊற்றி விழுங்க வைக்க வேண்டிய வேலையை எஸ்தர் எடுத்துக்கொண்டாள். அப்போதகிரி தொடங்கிய மூன்று மாதங்களாக ஐரோப்பியர்கள் மட்டுமே சிகிச்சைக்கு வந்தார்கள். உள்ளூர் ஆள்கள் பயந்து ஒளிந்துகொண்டார்கள். காத்தவராயனின் கூட்டாளி செத்துப்போன கோரத்தைப் பார்த்த பிறகுதான், கொஞ்சம் பேர் தயங்காமல் மருந்து சாப்பிட முன்வந்தார்கள்.

எஸ்தர் மீனாட்சியின் ரூபத்தில் தேவனின் கிருபையோடு, நோய்கண்டவர்களுக்கு மத்தியில் தேவதையாக நடமாடினாள். ‘ஓர் உயிரைப் பறிகொடுத்ததே போதும், மரணத்தை விரும்பி அழைக்காதீர்கள்’ என்ற பென்னியின் வார்த்தையை விதவிதமாக உச்சரித்தவண்ணம் அந்த தேவதை, நடுக்காட்டில் சிறகுகள் ஒளிர நடமாடியது.

வானம் பருவமழை தொடங்குவதற்கான சமிக்ஞையைக் காட்ட, தாவரங்கள் தங்கள் இசைவான அசைவில் பூரிப்பைக் காட்டின.

- பாயும்