மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீரதிகாரம் - 78 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

நீரதிகாரம்
பிரீமியம் ஸ்டோரி
News
நீரதிகாரம்

“ஜான், உன்ன மாதிரி என்னால ஓடி ரன் எடுக்க முடியாது, என்ன ஆள விடு. இல்லைனா உன்னைத் தோக்கடிச்சிடுவேன்.”

ஜான் பென்னி குக்கை ஆரத் தழுவினார், ஜான் சைல்ட் ஹானிங்டன்.குருவாயி இருவரின் அருகில் முகம் மலர நின்றிருந்தாள். இன்ஜினீயர்களும் உற்சாகமாகப் பார்த்துக்கொண்டிருந்தனர். திருவனந்தபுரத்தில் இருந்து ரெசிடென்ட் ஹானிங்டன் வருவதாகத் தகவல் வரவில்லை. நாயர் படை வீரர்கள், பிரிட்டிஷ் சோல்ஜர்கள் ரெசிடென்ட் வருகை தரும் இடங்களை முன்கூட்டியே பார்வையிடுவார்கள். ரெசிடென்ட் வருவதற்காக நடக்கும் ஜபர்தஸ்துகள் ஏதுமின்றி, இரண்டே இரண்டு வீரர்களை மட்டும் அழைத்துக்கொண்டு ஹானிங்டனும் குருவாயியும் கோச் வண்டியில் குமுளிக்கு வந்து, குமுளியில் இருந்து குதிரையில் அணை கட்டுமிடத்திற்கு வந்திருக்கிறார்கள்.

நீரதிகாரம் - 78 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

மேல்மலையின் வானம் மழை வருவதற்கான அறிகுறிகளைக் காட்டுவதில்லை. வெயில் கோலோச்சுவதைப் பொருட்படுத்தாது மழை இறங்கும். இன்றும் அப்படித்தான். மாலைக்குள் ஓரடிச் சுவரையெழுப்பிவிட வேண்டுமென்ற ஓர்மையில் எல்லாரும் வேலை செய்துகொண்டிருக்கும்போது, மழை சடசடவென்று இறங்கியது. அப்போது பூசிய கலவை கரைந்தோட, முட்டியளவு தேங்கிய நீரிலிருந்து வெளியேறி குடிசைகளை நோக்கி ஓடினார்கள் வேலையாள்கள். சுண்ணாம்பு அரைத்துக்கொண்டிருந்தவர்களும் சுர்க்கி உடைத்துக்கொண்டிருந்தவர்களும் எழுந்து நின்று மழையை வேடிக்கை பார்த்தார்கள். ஊரில் வயக்காடுகளில் வீட்டு முன்வாசலில் காடுமேடுகளில் பார்க்கும் மழையல்ல மேல்மலையின் மழை என்பதை அவர்கள் வேலைக்கு வந்த இரண்டு வாரங்களுக்குள் புரிந்துகொண்டார்கள். ஒவ்வொருமுறை மழை வரும் வேகமும், யூகிக்கவே முடியாத காலமும், மழைத் தாரைகளின் பருமனும் கூலிகளை வியக்க வைத்தன. யாரோ ஒரு மாந்த்ரீகன் ஏவிவிட்டு வருவதைப்போல் வரும் மழையைப் பார்த்து அச்சப் பட்டார்கள். மழை வந்தாலே வேடிக்கை பார்ப்பது இப்போது வாடிக்கையாகிவிட்டது. மழை பெய்யும்போது வெள்ளம் பெருகுவதும், மழை நின்ற கணத்தில் பெரும்வெள்ளம், புதருக்குள் மறைந்துகொள்ளும் நாகத்தைப்போல் அடர்ந்த காட்டுக்குள் மறைந்து கொள்வதும் அவர்களால் நம்ப முடியாத அதிசயங்கள். இன்றும் மழையைப் பார்த்துக் கொண்டி ருக்கும்போதுதான் ஹானிங்டனும் குருவாயியும் மேல்மலைக்கு வந்தார்கள்.

பென்னி, ஹானிங்டனைப் பார்த்தவுடன் ஓடோடிச் சென்று கைகுலுக்கினார். ஹானிங்டன் பென்னியை மார்போடு இறுக்கியணைத்தார். ‘மை பாய்’ என்று பெருமிதக் குரலில் அவர் கிசுகிசுத்தது, பென்னியின் இதயத்தை நெகிழ்த்தியது. சில விநாடிகள் ஆயின ஹானிங்டன் பென்னியை விடுவிப்பதற்கு.

“யுவர் எக்ஸலென்ஸிக்கு வணக்கம்” என்று குருவாயியைப் பார்த்துச் சொன்னார் பென்னி. “யாராச்சும் இப்படி நனைஞ்சுக் கிட்டே வருவாங்களா? மேல்காட்டின் மழை கடுமையான காய்ச்சலைத் தருமே?”

“மாசக்கணக்கா நீங்கெல்லாம் இந்த மழையிலதானே கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கீங்க? ஒரு நாள்ல எங்களுக்கு ஒன்னும் ஆயிடாது மை டியர் ஜான்.” ஹானிங்டன் சிரித்துக்கொண்டே, தன் அங்கியின் ஈரத்தைத் தட்டினார்.

குருவாயி அருகில் நின்ற வீரனொருவனுக்குச் சாடை காட்ட, அவன் ஹூக்காவைக் கொடுத்தான்.

மேல்மலையின் காட்டுக்குள் சிறு மலரொன்று மலர்வதுபோல், இருவரின் வருகை சில்லிப்பைப் பரப்பியது.

நீரதிகாரம் - 78 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

ஹானிங்டனுக்கு மூச்சிரைத்தது.

“ஜான், உன்ன மாதிரி என்னால ஓடி ரன் எடுக்க முடியாது, என்ன ஆள விடு. இல்லைனா உன்னைத் தோக்கடிச்சிடுவேன்.”

“பரவாயில்ல யுவர் எக்ஸலென்ஸி. நீங்க ஓட வேணாம். பந்த அடிச்சு ரன் எடுத்தா மட்டும் போதும். இங்க பிட்ச் ரொம்ப நல்லாருக்கும்” என்றார் பென்னி.

வெள்ளைக்காரத் துரைகள் கிரிக்கெட் விளையாடுவதை ஆர்வமாய் வேடிக்கை பார்த்தபடி நின்றனர் வேலையாள்கள். ஆட்டத்தின் விதியும், ஆட்டமென்ன என்பதும் அவர்களுக்குச் சுத்தமாகப் புரிந்துகொள்ள முடிந்ததில்லை. பென்னி துரையும் மற்ற இன்ஜினீயர் துரைகளும் வேலை செய்ய முடியாத நேரங்களில் மூன்று குச்சிகளை நட்டு உடனே இந்த விளையாட்டு விளையாடுவதைப் பார்த்திருக்கிறார்கள். பந்து மேலே எழும்பினால் அவர்களின் முகங்களில் தெரியும் உணர்வுகளுக்குப் பொருள் அறிவதற்கு முயன்று, தோற்றிருக்கிறார்கள். பந்தை யாராவது ஒருவர் பிடித்துவிட்டால், பிடித்தவர் எழுப்பும் உற்சாகமும், பந்தை உயர்த்தி அடித்தவரின் முகம் சோகத்தில் ஆழ்வதும் எதற்கு என்று கேட்டுப் பார்த்து, அவர்கள் விளக்கம் சொன்ன பிறகும் நிறைய சந்தேகம் இருந்தது. பந்தைப் பிடிக்காமல் விட்டால்தானே வருத்தப்பட வேண்டும்? சரியாகப் பிடித்ததற்கு எதற்கு வருத்தப்படுகிறார்கள் என்று வேலையாள்கள் ஒருவருக்குள் ஒருவர் பேசிக்கொள்வார்கள்.

பென்னி, கிரிக்கெட் பிரியர். கிரிக்கெட் விளையாடுவதற்காகவே மெட்ராஸ் சேப்பாக்கத்தில் ஒரு மைதானத்தை அமைத்தார். பொதுப்பணித் துறையின் மூலம் மிக விருப்பத்துடன் சேப்பாக்கம் மைதானத்தை லண்டனின் ‘லார்ட்ஸ் மைதானம்’ போல் கட்டமைத்தார். கிரிக்கெட் விளையாடு வதற்காகவே பெங்களூர் செல்வார். பெங்களூரில் வேலையில் இருந்தபோது, அந்தக் காலநிலை லண்டனைப்போல் கிரிக்கெட் விளையாடுவதற்கு உகந்ததாக இருந்தது. பெங்களூர் அவருக்கு மிகவும் பிடித்த இடம். ஆனால் அங்கு பணியாற்றிய காலம் மிகவும் குறைவு. சீப் இன்ஜினீயருடனும் உடன் வேலை செய்தவர்களுடனும் ஒத்துவராததால் விரைவிலேயே பணியிடம் மாற்றப்பட்டார்.

கொடைக்கானல் கொடை கிளப்பில் உறுப்பினர். கொடை கிளப்பில் இருக்கும் ஐரோப்பியர்களில் பெரும்பாலானோர் ஹாக்கி விளையாடும்போது பென்னி மட்டும் சின்னஞ்சிறு நண்பர்கள் குழுவைத் திரட்டி கிரிக்கெட் விளையாடுவார். கிரிக்கெட் விளையாடுவதனால்தான் தன் சமநிலை குலையாமல் இருக்கிறது என்பது பென்னியின் நம்பிக்கை. எப்போதுமே தன் உயரதிகாரிகளுடன் கருத்து மோதல்களுடன் இருக்க நேர்கிற தனக்கு, விளையாட்டு மட்டுமே ஆறுதலான நேரம் என்பதைப் பென்னி உணர்ந்திருந்தார். பொதுப்பணித் துறையின் சீப் இன்ஜினீயராக இப்போது இருந்தாலும், பெரியாறு அணை கட்டுமானப் பொறுப்பில் இருக்கும் இந்த வேளையில் சீப் இன்ஜினீயராக முழு நேரமும் செயல்பட முடியாத கடுமையான நேரப் பற்றாக்குறை. தனக்குப் பதவி உயர்வு எப்போதோ வந்திருக்க வேண்டும். இருப்பினும், பெரியாறு அணையின் சூப்பிரண்டெண்டிங் இன்ஜினீயராக இருக்கின்ற நேரத்தில் சீப் இன்ஜினீயராக்கியதும் தன்னுடைய நெருக்கடியை அதிகரிக்கவே என்று பென்னி வருந்தினார்.

“ஒரே ஒரு ஃபோர் அடிங்க ஹனி, ஜெயிச்சிடலாம். ரெண்டே பந்துதான் இருக்கு” குருவாயி உற்சாகப்படுத்தினாள்.

“என்ன ஓடவிட்டு, கீழ விழ வைக்கப் பாக்குறீயா? நடக்காது.” ஹானிங்டன் கிரிக்கெட் மட்டையை அலட்சியமாகக் கையில் பிடித்துக்கொண்டு பந்தை எதிர்கொண்டார்.

டெய்லர் பந்துவீச்சுக்குத் தயாராக நின்றார்.

“டெய்லர், அவர் ரன் எடுக்கலைன்னாலும் பரவாயில்ல, அவுட் ஆக்கிடாதே. பிரிட்டிஷ் ரெசிடென்ட் அவுட்டானார் என்ற அவப்பெயர் வேண்டாம்” என்றாள் குருவாயி.

“ஓ, ஹர் எக்ஸலென்ஸி விளையாட்டில்கூட நீங்கள் தோற்பதை ஏற்க மாட்டேன்கிறார்களே?” பென்னி.

நீரதிகாரம் - 78 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

“சிலருடைய தோற்றம் அப்படி பென்னி. அவர் முகத்தைப் பார். கம்பீரம் காட்டும் அதே நிமிஷம், இனிப்பு கேட்கும் குழந்தைபோல் மாறுவதை?”

குருவாயி சொன்னவுடன், “நான் பந்தே போடலை யுவர் எக்ஸலென்ஸி” என்று டெய்லர் வந்து உட்கார்ந்துவிட்டார்.

“அப்படின்னா யார் ஜெயிச்சதுன்னு அர்த்தம்?” ஹானிங்டன் கேட்க, “சந்தேகமே இல்லாமல் நீங்கதான்” என்றார் டெய்லர்.

கையுறையைக் கழற்றிக்கொண்டே மட்டையுடன் விளையாட்டிடத்திலேயே ஒன்று கூடினார்கள்.

“குருவாயி, நீதான் ஆட்டத்தைக் கலைச்சிட்ட.”

“கலைக்கலைன்னா, இன்னும் ஒரு வாரத்துக்கு உங்க புலம்பலை நான்தானே கேட்டாகணும், ஐயோ... தோத்துட்டேனே தோத்துட்டேனேன்னு? பட்லரும் செத்தான். உங்களுக்கு விதவிதமா மதுவைக் கொடுக்க முடியாம திணறியிருப்பான். ஒரு விளையாட்டு வெற்றி தோல்வியில்லாம முடிஞ்சா, தப்பு ஒன்னுமில்லே.” குருவாயி தன் அனுபவத்தைச் சொன்னாள்.

பேசி முடிக்கும் முன்பே, மழை மீண்டும் ஆக்ரோஷமாகத் தரையிறங்கியது.

மலைச்சரிவுகளின் ஊடாக, வீடிருக்கும் குன்றை நோக்கி நடந்தார்கள். வேடிக்கை பார்த்த வேலையாள்கள் குடிசைகளுக்குள் அடைக்கலம் புகுந்தார்கள்.

பென்னியின் வீட்டிற்குள் நின்றெரிந்த மெழுகுவத்தியின் குறைந்த வெளிச்சத்தில் ஹானிங்டனும் குருவாயியும் மற்ற இன்ஜினீயர்களும் பேசிக்கொண்டிருந்தனர். ஒரு மிடறு மதுவை ஒவ்வொரு துளியாகச் சுவைத்து, பேச்சுக்கு ஊடாக அவ்வப்போது ருசித்தார்கள். பிரிட்டிஷாருக்குப் போதைக்காக மட்டுமல்ல மது. அது பேச்சின் தரத்தை உயர்த்துவதற்கான பானம்.

மதுவுடன் தொடங்கும் பேச்சின் ரசத்திற்குள்ளும் மதுவின் மதுரம் கலக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு. மதுக்கோப்பைகள் நிரம்பித் ததும்புவதை ஒருபோதும் பிரிட்டிஷார் விரும்புவதில்லை. “நீங்க சிரமமெடுத்து, எங்களைப் பார்க்க வந்தது உற்சாகமா இருக்கு யுவர் எக்ஸலென்ஸி.”

“எக்ஸலென்ஸியை விடு. ரொம்ப நாளுக்குப் பிறகு நான் சர்க்காருடைய கிரீடத்தையெல்லாம் விட்டுட்டு, ஒரு பிரிட்டிஷ்காரனா இந்த இடத்துல இருக்கேன். நீயும் அப்படியே இரு பென்னி. இந்தியாவை விட்டுக் கப்பலேறினா நீயும் நானும் ஒன்னுதானே?” ஹானிங்டன் ஒரு மிடறு மதுவைப் பருகினார்.

“உண்மைதான் மிஸ்டர் ஹானிங்டன்.”

“ஏய் ஜான்...” குருவாயி மகிழ்ச்சியில் கூச்சலிட்டாள். “ரொம்பத் தேறிட்ட” குருவாயி சொல்ல, பென்னிக்கும் சிரிப்பு வந்தது. “இந்த நாட்டோட ஜனங்களுக்கு நாம இன்னும் நல்லது பண்ணணும் யங் மென்... பாவப்பட்ட ஜனங்க. படிப்பில்ல, வயித்துக்குச் சாப்பாடு இல்ல, செய்ய வேலையில்ல. ஒவ்வொரு கவர்னர், கலெக்டர் வீட்லயும், பிரிட்டிஷ் அதிகாரிக வீட்லயும் ஆகுற செலவுல ஒரு நகரத்துக்கே சாப்பாடு போடலாம்.நம்முடைய ஹைனெஸ் விக்டோரியா ராணியின் சர்க்கார்னு சொல்லிக்கிறோம். அவங்க ராணியா பதவியேத்து ஐம்பது வருஷமாச்சு, வெள்ளி விழான்னு கொண்டாட எவ்ளோ செலவு செய்திருக்காங்க தெரியுமா?

இங்கிலாந்து தேசத்துக்கு ராணியானா, இங்கிலாந்துலதானே கொண்டாட்டம் இருக்கணும், இந்தியாவுல எதுக்குக் கொண்டாட்டம்? டெல்லியில நடந்த பொன்விழாக் கொண்டாட்டத்துக்குச் சுதேசி ராஜாக்கள் வந்தே ஆகணும்னு உத்தரவு அனுப்பி, ஆயிரம், ஐந்நூறு மைலுக்கு ஒவ்வொரு ராஜாவும் அவங்கவங்க பரிவாரங்களோடு போனாங்க. என்னோட சமஸ்தானத்துல மட்டும் எவ்ளோ செலவு தெரியுமா? இதுக்கே மகாராஜா பயணம் போகல. கடைசி நேரத்துல ரத்து பண்ணிட்டாரு. அவரு பயணத்துக்காக அனந்தபுரத்தில இருந்து, டெல்லி வரைக்கும் எத்தனை பேருக்குத் தகவல்? மகாராஜாவை வரவேற்கவும் தங்க வைக்கவும் ஏற்பாடு செஞ்சாச்சு. மொத்தப் பரிவாரத்துக்கு வேண்டிய பொருளெல்லாம் வாங்கியாச்சு. கடைசியில மகாராஜா போகலை. அத்தனையும் வீண். போனவருஷம் வரவு செலவுல சமஸ்தானத்து அரண்மனையோட செலவு ரெண்டு மடங்கு. அதேசமயம், சமஸ்தானத்து ஜனங்களுக்குக் கையில ஒரு சக்கரம் கெடையாது.” ஹானிங்டன் பேசி முடித்தவுடன் ஒரு மிடறு மதுவைப் பருகினார்.

“இனியும் நாம் இந்த தேசத்து மக்களுக்கு நல்லது செய்யலைன்னா, நிச்சயம் தேவன் நம்மை மன்னிக்க மாட்டார்” என்றார் மெக்கன்சி.

“நல்லது செஞ்சாலும் நம்மை எதிர்ப்பாங்க. இப்பவே அங்கங்க எதிர்ப்பு வருது. சீக்கிரம் பெருசா வெடிக்கலாம். இந்திய தேசிய காங்கிரஸோட தொடக்கம் அந்த எழுச்சிக்குப் பின்னால நிச்சயம் இருக்கும்.”

“யெஸ் யுவர் எக்ஸலென்ஸி...” டெய்லர்.

“ஆனா நீங்க எல்லாரும் இப்போ செஞ்சிட்டிருக்கிற வேலை, எத்தன வருஷமானாலும் நம்முடைய ராணிக்கு நல்ல பெயர் வாங்கித்தரும்.”

“நல்லவிதமா கட்டி முடிக்கணுமே? நீங்களே பாக்கிறீங்களே, இந்த வெர்ஜின் பாரஸ்டுக்குள்ள தங்கி வேலை செய்யறதெல்லாம் ரொம்பக் கஷ்டம். நமக்கு ஒரு விருப்பம் இருக்கு, விடாப்பிடியா நின்னு செய்யுறோம். ஆனா, ஜனங்களுக்கு? பாதி நாள் கூலிய வாங்கினவுடனே ஊருக்கு ஓடிப் போயிடுறாங்க. இங்க வந்தா கைநெறைய கூலி கெடைக்குதுன்னு வந்துடுறாங்க. ஆனா நடுக்குற குளிர்லயும் எரிக்கிற வெயில்லயும் விடாம பெய்யுற மழையிலயும் ஜனங்களால தாக்குப் பிடிக்க முடியல.

பெரும்பாலானவங்களுக்குப் படிப்பறிவு கிடையாது. ரொம்பப் பழைமையான நம்பிக்கைங்களோடு வாழுறவங்க. காய்ச்சல் வந்தா மாத்திர போடுறதுக்குக்கூட ஆள் வச்சு மிரட்டுறோம். கூலி கிடையாதுன்னு சொல்லிவைக்கிறோம். கொத்தனார் வேலைக்கும் ஆசாரி வேலைக்கும் ஆளுக பெரிய தட்டுப்பாடு. கோயம்புத்தூர்ல இருந்து இன்னைக்குத்தான் நூறு கூலிங்கள ஒரு கான்ட்ராக்டர் கூட்டிக்கிட்டு வந்திருக்காரு. இங்க வந்த பிறகு கத்துக்கொடுத்துதான் பலபேர் கொத்தனார் வேலையைக் கத்துக்கிறாங்க. ராபர்ட் சீஷோம் (பிரிட்டிஷ் கட்டடக்கலை நிபுணர், இந்தோ – சாரசனிக் கட்டடக்கலையின் முன்னோடி) மாதிரியா நாம அழகான கட்டடங்கள் கட்டுறோம்?”

“நோ ஜான். அழகான கட்டடங்கள், திறமையான கலைஞனுடைய அடையாளம். நீ செய்யுறதுதான் அசலான கலை. பல்லாயிரம் ஜனங்களுக்கு உயிர் குடுக்கிற வேலை. பசி போக்குற கலை. உலகத்துல என்னைக்குமே பாதிக்கப்படுற ஜனங்களோட கண்ணீரைப் போக்க முயல்வதுதான் உண்மையான அழகு.”

“ஹனி... ஒரே ஒரு மிடறுதான் குடிச்சிருக்கீங்க, அதுக்குள்ளயே தத்துவமா பேச ஆரம்பிச்சிட்டீங்க...” குருவாயி சொல்ல, “குருவாயி, கேலி பேசுறீயா?” என்றார் ஹானிங்டன்.

“நெவர் ஹனி... சும்மா தெரிஞ்சுக்கக் கேட்டேன்.”

“ஹிஸ் எக்ஸலென்ஸி சொல்றது உண்மைதான். நான் இந்த மதுரா டிஸ்ட்ரிக்ட்ல பதினைந்து வருஷமா பெரியாறு புராஜெக்ட் பத்தியே வேலை செய்றேன். அவங்க கஷ்டப்படுறத கண்முன்னால பார்த்துக்கிட்டே இருக்கேன்.”

“தொடக்கத்துல கூலிக்கு ஆளுக கெடைக்கிறதுல சிரமம் இருந்துச்சே, இப்போ பரவாயில்லையா?”

“கெடைக்கிறாங்க. ஆனா பொறுப்பா வேலை செய்யுற ஆளுக ரொம்பக் குறைச்சல். செய்யுற வேலையை அப்படியப்படியே விட்டுட்டுக் கிளம்பிடுறாங்க. நேத்துக்கூட பெரிய கஷ்டம். ஊர்ல திருவிழா, வீட்டுல விசேஷம்னு கொத்துக் கொத்தா கெளம்பிட்டாங்க. கூலியும் வாங்கிக்கிட்டு வேலையும் செய்யாம போயிடுறாங்க. நேத்துப் புதுசா ஒரு ரூல் போட்டுருக்கோம். செய்யுற வேலைக்குக் கூலி. மூணுக்கு மூணு ஒரு குழியெடுத்தா இவ்வளவு கூலி, பாறையை உடைச்சா ஓரடிக்கு இவ்வளவு கூலி, மரத்த வெட்டுறதுக்கு இவ்ளோன்னு சொல்லிட்டோம். தெறமை இருக்கிறவங்க, ஒரு நாளைக்கே முடியற அளவுக்கு வேலை செஞ்சு அதிகமா கூலி வாங்கிக்கலாம். வேலை செய்யறவங்க, செய்யாதவங்க எல்லாருக்கும் ஒரே கூலி இனிமே கெடையாதுன்னு சொல்லியிருக்கோம். இது சரியா வரும்னு நெனைக்கிறேன்.”

“ஆமாம், ஏமாத்த முடியாதில்ல?”

“யெஸ் யுவர் எக்ஸலென்ஸி. காட்டுல யார் எந்தப் பக்கம் போறாங்க, எப்போ திரும்பி வர்றாங்க, எதுவும் கட்டுப்படுத்த முடியல. அதுக்குத்தான் இந்த யோசனை” என்ற பென்னி, “எங்களுக்கொரு சகாயம் செய்யணும்” என்றார்.

“உங்களுக்கில்லாததா? என்னன்னு சொல்லு” என்றார் ஹானிங்டன்.

“திருவிதாங்கூர், சுதேசி சர்க்காருன்னாலும் மெட்ராஸ் பிரசிடென்சியுடைய மேலாண்மையில் உள்ள உள்ளூர் சமஸ்தானம். மெட்ராஸ் கவர்னரோ, பிரிட்டிஷ் இந்தியாவின் வைஸ்ராயோ நினைத்தால், அணை கட்டுகிற இந்த எட்டாயிரம் ஏக்கர் நிலத்தை எப்போதோ விலைக்கு எழுதி வாங்கியிருக்கலாம். ஆனா அவங்களோட இடத்தைக் குத்தகைக்கு வாங்கும் நாம, அவங்களுடைய உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, அவங்க விரும்புற மாதிரி அவங்களுக்கு லாபகரமான ஒரு தொகையை வருஷக் குத்தகையாகக் கொடுத்து வாங்கியிருக்கிறோம். அணை கட்டுற இடத்துக்குப் போற வழி அவங்களுக்குச் சொந்தமானதுதான். அணை கட்டுமிடத்திற்குக் கூலிங்க தினம் போய் வர வேணும்தானே? மேல்மலையில் மட்டும் மூணு இடத்துல வேலை நடக்குது. மூணு இடத்துக்கும் சாப்பாடு போகணும்.

வேலை செய்யறதுக்குச் சாமான்களைக் கொண்டு போகணும். தினம் ஆயிரம் பேராவது இங்கேயும் அங்கேயும் போக வேண்டியிருக்கு. மாட்டுவண்டியும் கழுதைகளும் தினம் பொருள்களை ஏத்திக்கிட்டு வரணும். நான் எழுதுற தபாலுக்குப் போடுற சின்னக் குண்டூசி கூட சமவெளியில் இருந்துதான் மேல்மலைக்கு எடுத்துக்கிட்டு வரணும். குத்தகைக்கு இடத்தையும் கொடுத்துட்டு, எங்க எல்லை வழியாப் போவக்கூடாது, இந்தத் தோட்டத்துவழியா நடக்கக்கூடாதுன்னு தினம் தலைவலி கொடுக்குது திருவிதாங்கூர் சமஸ்தானம். அங்கங்க செக் போஸ்ட், போலீசு கச்சேரி. இதில்லாம நாயர் படை காடு முழுக்க கூலிங்கள வேவு பாக்குது. இப்போ மேஜிஸ்ட்ரேட் ஒருத்தர நீங்க நியமிச்சிருக்கீங்க. ஏற்கெனவே மலைமேல் வேலை செய்யுறது பெரும்பாடா இருக்கு. இதுல இவங்க கொடுக்கிற தொந்தரவு ரொம்ப அதிகம். தினம் பத்துப் பேரையாவது பிடிச்சு உக்கார வச்சிட்டு, விசாரணைன்னு சொல்றாங்க. ஓவர்சீயர் ரத்தினம் பிள்ளைக்குப் போலீசு கச்சேரியே கதின்னு போச்சு...” பென்னி ஆழ்ந்த வருத்தத்துடன் பேசினார்.

அறையின் மூலைக்கொன்றாக எரிந்துகொண்டிருந்த மெழுகுவத்தியில் இரண்டு, உருகி அணையும் நிலையில் இருந்தன. “மெழுகுவத்தி கொண்டு வா” என்றாள் குருவாயி, வெளியில் உட்கார்ந்திருந்த உதவியாளனிடம்.

இன்ஜினீயர்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள், உடைகள், மருந்து, மாத்திரைகள் எல்லாம் எதிரிலிருந்த பென்னியின் ஆபீசில் இருந்தன.

உதவியாளன் பீட்டர், மெழுகுவத்தி எடுப்பதற்காக வெளியில் வந்தான். காடு கருமை போர்த்தியிருந்தது. மழை மேகங்கள் கலையாததால் இரவில் வானத்திற்கென்று இருக்கும் வெண்ணிற ஒளி காணாமல் போயிருந்தது. பழகிய இடமென்ற நம்பிக்கையில் விளக்கின்றி முன்னேறினான் பீட்டர். பென்னியின் வீட்டிற்கு எதிரில் இருந்த சின்னக் குன்றின் மேலேறினான். உள்ளே சென்று மெழுகுவத்திகளையெடுத்துக் கொண்டு திரும்பிக் கதவைச் சாத்தினான்.

கதவைச் சாத்திவிட்டுத் திரும்பியவன், மடாரென்று கனமான ஒன்றின்மேல் மோதினான். வலத்தோள், மோதிய வலியில் கீழிறங்கியது. எதில் மோதினோம் என்று யோசித்துச் சுதாரிப்பதற்குள் அவனது இடுப்பைச் சுற்றி வளைப்பது என்னவென்று பார்க்கக் குனிந்தான். மலைப்பாம்பு தன்னை விழுங்கப்போகிறதோ என்ற பயத்தில் காலெடுத்து வைத்து ஓடுவதற்கு எத்தனித்தவனை, பெரிய யானையொன்று தும்பிக்கையினால் முழுமையாக வளைத்துப்பிடித்து நுனியில் நிறுத்தியது. அந்தரத்தில் மல்லாக்கத் தொங்கியவனுக்கு இருட்டில் கரிய குன்றுகளைப்போல் ஒன்றுடன் ஒன்று உரசிக்கொண்டு நின்றிருக்கும் யானைகள் கண்ணில் பட்டன.

“ஐயோ... காப்பாத்துங்க” என்று அலறினான். “ஆன உள்ள எறங்கிடுச்சி...” காட்டின் அமைதியில் அவன் குரல் அருவிச் சத்தம்போல் தெளிவாகக் கேட்டது.

உள்ளே பேசிக்கொண்டிருந்தவர்கள், பீட்டரின் கூச்சல் கேட்டு ஓடிவந்தார்கள்.

எங்கிருந்து கத்துகிறான் என்ற திசை தெரிந்தாலும், ஆளைப் பார்க்க முடியவில்லை. மெக்கன்சி ஓடிப்போய் உள்ளே எரிந்துகொண்டிருந்த மெழுகுவத்தியை எடுத்துக்கொண்டு வந்தார். லோகன், சிம்னி விளக்கையெடுத்து, மெழுகுவத்திக்கு அருகில் கொண்டுவந்து சிம்னியின் திரியைப் பற்ற வைத்தார்.

“ஐயோ... காப்பாத்துங்க” என்ற கூக்குரல் தொடர்ந்தது.

விளக்கையேற்றிக்கொண்டு பென்னியின் ஆபீஸ் நோக்கி மெல்ல அடியெடுத்து வைத்தார்கள். “தொர... ஆனக் கூட்டமே இருக்கு...” பீட்டர் தன் உயிர் பயத்திலும் எச்சரிக்கை செய்ய மறக்கவில்லை.

“யுவர் எக்ஸலென்ஸி, நீங்க இங்கயே இருங்க” என்று சொல்லி, கையில் விளக்குகளுடன் முன்னேறினர்.

டெய்லரும் லோகனும் அதற்குள் தீப்பந்தங்களைக் கொளுத்தினர். டெய்லர் ஒரு நீண்ட விசில் சத்தத்தை எழுப்பினார். நீண்ட விசில் சத்தம் முடிந்தவுடன், சரியான இடைவெளியுடன் மூன்று முறை விசில் சத்தம் எழுப்பினார்.

தூரத்தில் குடிசைகளில் ஆள்கள் விழிக்கும் அரவம் மேலிருக்கும் குன்றில் கேட்கவில்லை. அதனால் பென்னியும் இன்ஜினீயர்களும் அடுத்து எழும்பப் போகும் பறையின் ‘டாம் டாம்’ சத்தத்திற்காகக் காத்திருந்தார்கள்.

“ஐயா தொர...” அலறல் கேட்டது. அப்போது நதியின் வலக்கரையில் இருந்து ‘டாம் டாம்’ சத்தம் எழுந்தது.

“கூலிங்க எழுந்துட்டாங்க. தீப்பந்தத்தக் காட்டுங்க. யானைக ஓடிடும்...” பென்னி பரபரத்தார்.

தீப்பந்தத்துடன் அனைவரும் முன்னேற, குன்றின் மேலே இருந்த யானைக் கூட்டம் பிளிறியது. வெளிச்சம் வரும் திசையைப் பார்த்தது.

யானைகளின்மேல் விழுந்த வெளிச்சத்தில் பீட்டரை இடுப்பில் பிடித்துத் தும்பிக்கையால் வளைத்துத் தூக்கி நின்றிருக்கும் யானை தெரிந்தது. தலையும் கால்களும் இருபக்கமும் துவள, சூலத்தில் குத்தி நிறுத்தப் பட்டவனைப்போல் மல்லாக்கக் கிடந்தான். இரண்டு கைகளாலும் யானையின் துதிக்கையை இறுகப் பிடித்துக்கொண்டிருந்தான்.

இரவு நேரங்களில் முகாம்களுக்குள் வருவதும், குடிசைகளின் முன்னால் போடப்பட்டிருக்கும் கட்டைகளைத் தூக்கியெறிவதும், கூரைகளைப் பிய்த்தெறிவதும், பொருள்களை உருட்டித் தள்ளுவதுமாக யானைகளின் தொந்தரவுகள் அதிகரித்துவிட்டன. பகலில் ஆள்கள் நடமாட்டமும் சத்தமும் இருப்பதால் யானைகள் பெரும்பாலும் வருவதில்லை. இரவு நேரத்தின் அமைதியில் யானைகள் சத்தமின்றி குடிசைகளிருக்கும் பகுதியில் நுழைவது வாடிக்கையாகிவிட்டது. கையில் தீப்பந்தங்களுடன் குன்றின்மேல் இரவு முழுக்க காவலுக்கு ஆள் போட்டுப் பார்த்தார்கள். ஒரே நாள்தான். காட்டின் குளிருக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் காய்ச்சலில் விழுந்தார்கள் ஆள்கள். ‘டாம் டாம்’ அடிப்பதற்கு மாட்டின் தோலை இழுத்துக் கட்டிய பறையைத் தயாராக வைத்திருந்தார்கள். இரவில் யாருக்குச் சத்தம் கேட்டாலும் உடனே அவரவரிடம் இருக்கும் பறையை எடுத்து அடிக்க வேண்டும்.

பென்னி மற்றும் இன்ஜினீயர்களின் வீடுகள் உயரமான குன்றின் மேலிருப்பதால் யானை வராது என்று இத்தனை நாள்களாக அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லை. இன்றுதான் முதன்முறையாக, யானைகள் குன்றின் மேலேயும் இறங்கியிருக்கின்றன. நதியின் வலப்பக்கத்தில் உள்ள காட்டிலிருந்து பெருங்கூட்டமே இறங்கியிருந்தது.

பறைச் சத்தம் எழும்ப, யானைகள் மிரண்டன. பென்னி, தீப்பந்தங்களைக் கீழிறக்கச் சொன்னார்.

சத்தம் அதிகரிக்க, பீட்டரைத் தூக்கியிருந்த யானை, தும்பிக்கையை மேலே உயர்த்தியது.

“ஐயோ... அம்மா...” கத்தினான்.

டெய்லர் அவசரமாக இருமுறை நீண்ட விசில் சப்தம் எழுப்பினார்.

பறையிசை நின்றது.

“இப்போ போலாம். சத்தம் கேட்டுப் பயந்துடப்போது யானைக” என்ற பென்னி, பந்தத்தை இறக்கச்சொல்லிவிட்டு முன்னேறினார்.

ஒருவர் பின்னாக ஒருவர் முன்னேற, சத்தத்தையும் வெளிச்சத்தையும் பார்த்த யானைக்கூட்டம் எந்தப் பக்கம் கீழிறங்கலாம் என்று திகைத்து நின்றது.

“மெல்லப் போய், ஆளப் பிடிச்சிடலாம். சத்தமில்லாம வாங்க” என்ற பென்னி கையில் துப்பாக்கியிருக்கிறதா என்பதைச் சோதித்துக்கொண்டு முன்னேறினார்.

“ஐயோ...” மீண்டும் அவன் அலற, அலறலுக்குப் பதில்போல் கீழிருந்து வேகமாகப் பறையிசை ஒலித்தது.

பறைச் சத்தம் கேட்ட யானைக்கூட்டம் பிளிறியது. வயதில் மூத்த யானை அருகில் இருந்த பள்ளத்திற்கு விரைய, பீட்டரைத் தூக்கிப் பிடித்திருந்த யானை, அவனை ஆழ்பள்ளத்தில் விசிறியடித்துவிட்டுப் பின்தொடர்ந்தது.

“அம்மாஆஆ...” பீட்டரின் குரல் குன்றின்மேலிருந்து ஆழத்தை நோக்கிச் சென்றது.

- பாயும்