மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீரதிகாரம் - 9

நீரதிகாரம்
பிரீமியம் ஸ்டோரி
News
நீரதிகாரம்

அரசாங்க இயந்திரத்துக்குப் பொழுது விடிந்தால் அன்றன்று வரும் தலைவலிகளைப் பார்க்கவே நேரம் போய்விடும் பென்னி

“மதுரை மாவட்ட கலெக்டர் பாரீஷைத் தூளி கட்டிக் கீழே தூக்கி வந்தார்கள். எண்பது வருடங்களுக்கு*(1807ஆம் ஆண்டு) முன்பு இன்றுள்ள அளவிற்குக்கூட வாகன வசதி கிடையாது. மலையின் கொசுக்கடியில் சிக்கியவருக்கு நிற்காத காய்ச்சல். மூச்சு நின்றுவிட்டது, மதுரைக்குப் பிரேதத்தைத்தான் கொண்டு செல்லப் போகிறோம் என்று கலெக்டருடன் வந்திருந்த சிப்பாய்களும் பியூன்களும் பயத்தில் நடுங்கினார்கள். கலெக்டரின் உடல்நிலை குறித்து மெட்ராஸ் பிரசிடென்சியின் கவர்னருக்கு எப்படித் தந்தி அனுப்புவது என்று, சர்வே செய்ய உடன் சென்ற ராயல் இன்ஜினீயர்கள் குழம்பினார்கள். இவையெல்லாம் இன்னும் நம் ஆவணத்திலிருந்து மறைந்துவிடவில்லை யுவர் எக்ஸலென்ஸி. முக்கால் நூற்றாண்டாக அந்தப் போராட்டச் சரித்திரம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.”

பென்னி குக் கனலும் கோபத்தின் சுவாலையை வார்த்தைகளாகக் கொட்டித் தீர்த்தார்.

“அன்று தப்பித்தது, கலெக்டர் பாரீஷின் அதிர்ஷ்டம். அவர் பிழைத்ததால்தான் திட்டம் பிழைத்தது. வேறொருத்தராக இருந்தால், தப்பிச்சோம் தம்புரானே என்று ஓடிப்போயிருப்பார்கள். நம் சர்க்காரும் சிவப்புக் கயிறு கட்டி, கோப்பைத் தூக்கிப் போட்டிருக்கும். உங்களைப் போல்தான் பாரீஷும் யுவர் எக்ஸலென்ஸி.”

‘எப்படி?’ என்பதுபோல் பார்த்தார் ஹானிங்டன்.

“நினைத்ததை முடிக்கும்வரை ஓயாதவர். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் இரும்புக் கரங்களின்மேல் படர்ந்துள்ள உயிர்த்தாவரங்கள் நீங்கள் எல்லாம். யுவர் எக்ஸலென்ஸி, உங்களைப் போன்றவர் களால்தான் இந்த ராஜ்ஜிய அதிகாரத்தின் கடுமை மொத்தமாக வெளித்தெரியாமல் இருக்கிறது.”

“ஏய் யங்மேன், என்ன சொல்ல வருகிறாய்?”

“யுவர் எக்ஸலென்ஸி, ஏறக்குறைய எண்பது வருஷமாய் ஒரு திட்டம் முடக்கப்படுவதும் உயிர்பெறுவதும், கிடப்பில் போடப்படுவதும், மீண்டும் உயிர்பெறுவதுமாக ஒரு விளையாட்டு நடந்துகொண்டே இருக்கிறதே... இதிலிருந்து என்ன தெரிகிறது?”

“நான் டிஸ்ட்ரிக்ட் மேஜிஸ்ட்ரேட்டாக இருந்தவன் பென்னி. தீர்ப்பெழுதுகிறவன். என்னிடமே குறுக்கு விசாரணை செய்கிறாயே?”

“மன்னிக்க வேண்டும் யுவர் எக்ஸலென்ஸி. உங்களின் நகைச்சுவையாக இதை எடுத்துக்கொள்கிறேன்.” சின்னப் புன்னகையுடன் தொடர்ந்தார் பென்னி.

“அந்தத் திட்டம் உருவானதற்கான மூலகாரணம் இன்னும் தீர்ந்தபாடில்லை என்பதைத்தான் காட்டுகிறது யுவர் எக்ஸலென்ஸி. பிரச்சினை உடம்பில் இருக்கிற கொப்புளம்போல், எப்போதெல்லாம் வெடித்துச் சீழ் வடிக்கிறதோ அப்போது போய் மருந்தைத் தேடுகிறார்கள். கையில் கிடப்பதை அள்ளி அதன்மேல் பூசி, கொப்புளம் உள்ளே அமுங்கியவுடன், மீண்டும் அது வெளிக்கிளம்பும் வரை மறந்துபோகிறார்கள். அணை விஷயத்தில் இதுதான் நடக்கிறது.”

“அரசாங்க இயந்திரத்துக்குப் பொழுது விடிந்தால் அன்றன்று வரும் தலைவலிகளைப் பார்க்கவே நேரம் போய்விடும் பென்னி.”

“உண்மைதான் யுவர் எக்ஸலென்ஸி, மதுரையில் ஒரு வருஷம் மழை பெய்தால் இரண்டு வருஷம் ஏமாற்றுகிறது. அல்லது பருவம் தப்பிப் பெய்து, விளைச்சலை வீணாக்குகிறது. பஞ்சமும் வெள்ளமும் வறட்சியும் மாறி மாறி மக்களை அலைக்கழித்துக்கொண்டிருக்கிறது. குடும்பத்தில் ஆண்களே இல்லை. பஞ்சம் பிழைக்க பர்மா, சிலோன், மலாயாவுக்குத் திருட்டுக் கப்பலேறிப் போகிறார்கள்.”

நீரதிகாரம் - 9

“பஞ்சத்தால் குறைந்த மக்கள் தொகை கடந்த இரண்டாண்டுகளாக இருபத்திரண்டு சதவிகிதம் கூடிவிட்டதாக நம் சர்வே சொல்லுதே, யங்மேன்?”

பென்னியின் முகத்தில் கோபம் தெரிந்தது.

“ஜஸ்ட் அ பன். குறைவாகப் பேசும் நீ, இவ்வளவு பேசுவதை என்னால் ஏற்க முடியவில்லை. பஞ்சத்திலும் நோயிலும் ஜனத்தொகை குறைந்தால், இயற்கையே அதிக பிள்ளைப்பேற்றைக் கொடுத்துச் சரிசெய்துவிடும்.”

“பதினைந்து வருஷமாக இந்தத் திட்ட அறிக்கையைத் தூக்கிக்கொண்டு அலைகிறேன் யுவர் எக்ஸலென்ஸி. அதுவும் கடந்த நான்கு வருஷமாக மெட்ராஸுக்கும் திருவிதாங்கூருக்கும் நான் ஓடிய ஓட்டம், மேல்மலையில் ஓடியிருந்தால்கூட இந்நேரம் நல்ல தடமாகவாவது வந்திருக்கும்.”

“குட் பாய்... உன் மனம் பெரியாற்றுத் திட்டத்தினைத் தவிர்த்து வேறொன்றைச் சிந்திக்க மறுக்கிறது.”

“வழக்கமாக ரயில் தண்டவாளம் போடுகிறோம், பேக்டரி கட்டுகிறோம் என்பது மாதிரி இது இல்லை யுவர் எக்ஸலென்ஸி. வாழ்வதைவிட சாவது பெரும் தண்டனையாகச் சபிக்கப்பட்ட அம்பது லட்சம் மக்களுடைய வாழ்க்கை சம்பந்தப்பட்டது. அந்தக் காட்டில், உதவிக்கு வந்தவர்களெல்லாம் தாக்குப்பிடிக்க முடியாமல் பாதியில் விட்டு ஓடியபோதும் நானும் ராயல் இன்ஜினீயர் ஸ்மித்தும் சர்வே செய்திருக்கிறோம்.”

“பென்னி... நீண்ட வாக்கியம் பேசாதே. அயர்ச்சியாக இருக்கிறது.”

ஹானிங்டன் சலிப்பு காட்டினார். தன்னைவிட உயரதிகாரியிடம் கோபத்தைக் காட்ட முடியாத, அரசாங்க நடைமுறை பென்னியின் கோபத்தீயை மேலும் வளர்த்தது.

லண்டனில் ராணி ஒருவருக்குத்தான் இந்த நடைமுறைகளெல்லாம். அவர் கருத்தை அவர் முன்பு யாரும் மறுத்துப் பேசக்கூடாதென்பது மரபு. பிரிட்டிஷார் ஆட்சி செய்யும் காலனிகளில் உயர்பதவியை அலங்கரிக்கும் அதிகாரிகளும் இங்கிலாந்து தேசத்தின் ராணி போலவே நடக்க நினைக்கிறார்கள். ‘யார்தான் உருவாக்கினார்களோ இந்தச் சட்டதிட்டங்களை? பதவியொரு பாம்புப் புற்றுபோலிருக்கிறது. நிரந்தர அச்சுறுத்தல் மட்டுமல்ல, அருகில் வருவதற்கே பிறரை அனுமதிப்பதில்லை.’

“பென்னி...” ஹானிங்டன் அழைத்தார்.

“யெஸ் யுவர் எக்ஸலென்ஸி...”

“தீவிர யோசனையா?”

“வருத்தம் யுவர் எக்ஸலென்ஸி.”

“இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது? பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் பணியாளர்கள் நாம். வெறும் கருவிகள். கூர்மையற்ற ஆயுதங்கள். நம்முடைய கூர்மை நம் சாம்ராஜ்ஜியத்தின் தேர்வு.”

“நான் ஒன்றை வெளிப்படையாகச் சொல்லலாமா யுவர் எக்ஸலென்ஸி?”

“தாரளமாக. யு ஆர் மை யங் பாய்.”

“உங்களுடைய சின்னஞ்சிறிய வாக்கியங்கள் அர்த்தமற்று உள்ளன.”

ஹானிங்டன் நிமிர்ந்து பென்னியைப் பார்த்தார். பின், சட்டென்று வெடித்துச் சிரித்தார். “நீ சொல்வது சரிதான். அர்த்தமற்ற வார்த்தைகள். அவை என் மனசின் வார்த்தைகள் அல்ல என்பது உனக்குப் புரிந்திருக்கிறது.”

“யெஸ் யுவர் எக்ஸலென்ஸி. நீங்களா என்று நம்ப முடியாமல் உட்கார்ந்திருக்கிறேன்.”

இருவரும் அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள்.

“காட்டிற்குள் முதல் நாள் போகும்போது காட்டைப் பார்க்க மலைப்பாக இருக்கும். நாம் பார்க்காத மரம், செடி, கொடி, விலங்கு, பூ, புழு என்று பார்க்கப் பார்க்க ஆச்சர்யமாக இருக்கும். இரண்டு நாள்தான். காடு நமக்கு வெறுத்துவிடும். காட்டின் அமைதி, மனுஷங்க இல்லாத, கட்டடங்கள் இல்லாத இடத்தில் நம்மால் இருக்கவே முடியாது. மூச்சடைக்கும். எங்கேயாவது பேச்சுச் சத்தம் கேட்குதான்னு சுத்திப் பார்ப்போம். அதேசமயம் நம்மகூட இருக்கிறவங்க பேசினாலே எரிச்சல் வரும். ராத்திரியானால் எலும்பைத் துளைக்கும் குளிர். பகல் முழுக்க விலங்குகளிடம் இருந்து தப்பிக்க வேண்டிய பயம். அந்த இடத்தில் நான்கு வருஷம் இருந்திருக்கேன் யுவர் எக்ஸலென்ஸி. கல்யாணமாகி ஆறு வருஷம்தான் ஆகிறது. அதில் நான்கு வருஷம் காட்டில். ஜார்ஜியானாவை நான் ஆறுமாசத்துக்கு ஒருமுறைதான் பார்க்க வருவேன். என் இரண்டு மகள்கள் பிறந்தபோதுகூட நான் ஜார்ஜியானாவின் அருகில் இல்லை.”

“நூறு வருஷக் கதையை ஒரே நாளில் சொல்லி, எனக்குத் தலை சுற்ற வைக்காதே. இப்போ என்ன செய்ய வேண்டும் சொல்?’’

“ஹிஸ் எக்ஸலென்ஸி மெட்ராஸ் கவர்னருக்குத் திவான் கடிதம் எழுதியுள்ளாராமே? அதை ஏற்று நீங்களும் கவர்னருக்குப் பரிந்துரைத்த தகவல் எனக்குள் சோர்வை உண்டாக்கிவிட்டது.”

“சூழல் தெரியாமல் பேசாதே பென்னி. உன்னைவிடப் பலமடங்கு நான் இவ்விஷயத்தில் குழப்பமடைந்திருக்கிறேன்.”

“யுவர் எக்ஸலென்ஸி, நீங்கள் குமுளி மேல் காட்டைப் பார்த்திருக்கிறீர்களா?”

எதிர்பாராத கேள்வியினால் தடுமாறினார் ஹானிங்டன்.

“கலெக்டர் பாரீஷ் அரைகுறை உயிரோடு திரும்பி வந்தபிறகும் ஆய்வைக் கைவிடவில்லை. மேஜர் கால்டுவெல்லை அனுப்பினார். அவர்தான் முதல் முட்டுக்கட்டையைப் போட்டவர். மேல்மலைக்குச் சென்று பார்த்துவிட்டு வந்து, ‘இது முட்டாள்தனமான திட்டம்’ என்றார். முட்டாள்தனம் என்று அவர் சொன்னதை உடனே ஏற்று, அந்தக் கோப்பையே மூடிவைத்துவிட்டது அன்றிருந்த கம்பெனி சர்க்கார். ஆனால், இந்தத் திட்டம் சாத்தியம் என்று சொல்லும் இன்ஜினீயர்களின் கோப்புகள் பந்தாடப்படுகின்றன. அறுபது வருஷம் கழித்து வந்த மேஜர் ரீவ்ஸ் திட்டத்தில் இருந்த சிக்கல்களைச் சரிசெய்து கொடுத்தால், ஜெனரல் வாக்கர் ஏளனம் செய்தார். நதியைத் திசை திருப்புவதா? ‘பிரெஞ்சு இன்ஜினீயர்கள்தான் சிறந்தவர்கள் என்ற ஐரோப்பியர்களின் நம்பிக்கையை உங்களைப்போன்ற முட்டாள்கள் நிரூபித்துவிடுவீர்கள் போலிருக்கிறதே’ என்று கேலி பேசினார். கோப்பை அவர் திருப்பியனுப்பக்கூட இல்லை. தூக்கியே போட்டுவிட்டார். மேஜர் ரீவ்ஸ் மனம் தளரவில்லை. முதலில் இருந்து சர்வே தொடங்கி, திட்டத்தை இன்னும் தெளிவாக்கி அனுப்பினார். இந்தத் திட்டத்தின் ஒவ்வொரு கட்டத்தின் மாற்றங்களையும் கவனித்து, சரிசெய்து, நான் பதினைந்தாண்டுகளைச் செலவிட்டிருக்கிறேன். இதற்குமேல் இந்தத் திட்டத்தைப் பற்றி இந்தச் சமஸ்தானத்து இன்ஜினீயர்கள் என்ன ஆய்வு நடத்தப் போகிறார்களாம்? முதலில் அணை கட்டப்போகும் காடு எங்கிருக்கிறது? காட்டுக்குள் அந்த இடம் எங்கிருக்கிறது? அங்கு போக முடியுமா? இதெல்லாமாவது திருவிதாங்கூர் சமஸ்தானத்து ஆட்களுக்குத் தெரியுமா?”

“இதைத்தான் அவர்கள் சொல்கிறார்கள். எங்களுக்கு அந்த இடமே தெரியாது. நாங்கள் சென்று பார்த்து வருகிறோம் என்று.”

“அப்படியெனில் அவர்களை யானைமேல் உட்கார வைத்து நானே அழைத்துச் சென்று வேடிக்கை காட்டுகிறேன். அதற்கு எதற்கு ஆய்வு என்று சொல்ல வேண்டும்?”

“ஆய்வு என்றால்தானே அரசாங்கச் செலவில், அரசாங்க மரியாதையோடு போகலாம்” ஹானிங்டன் சிரித்தார்.

பென்னிக்குக் கோபம் குறையவில்லை.

“திருவிதாங்கூர் சமஸ்தானத்துக் காரர்களுக்குத் தண்ணீரின் அருமை தெரியவில்லை. நீண்ட உயரிய இந்த மலைதான் நமக்கும் அவர்களுக்கும் இடையில். மலைக்கு அந்தப் பக்கம் மாமழை. இந்தப் பக்கம் வறட்சி.”

“குருவாயியும் சொன்னாள். போய்ப் பார்க்கட்டுமே, நம்முடைய திட்டத்தில் அவர்களால் என்ன குறை கண்டுபிடிக்க முடியுமென்று.”

“மன்னிக்க வேண்டும் யுவர் எக்ஸலென்ஸி. இதில் குறை கண்டுபிடிக்க முடியுமா என்பதே கேள்வி இல்லை. திட்டத்தைத் தள்ளிப்போட, திருவிதாங்கூர் சமஸ்தானம் காரணம் தேடிக்கொண்டிருக்கிறது. நான் 72ஆம் வருஷம் திட்டத்தினைத் திருத்தி, நம் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்குக் கொடுத்திருந்தேன். ஒருவேளை அப்போதே நமக்கு அனுமதி கிடைத்து, பெரியாற்றில் அணை கட்டியிருந்தால், தாது வருஷம் மதுரையிலும் ராமநாதபுரத்திலும் உயிர்களை வாரி எடுத்துச் சென்றிருக்குமா என நினைத்துப் பாருங்கள் யுவர் எக்ஸலென்ஸி. பர்மாவிலிருந்து அரிசி ஏற்றிவந்து தூத்துக்குடியில் இறக்கிச் செல்லும் கப்பல்கள் எல்லாம் பஞ்சம் பிழைக்க ஆட்களை வெளிதேசங்களுக்கு ஏற்றிச் சென்றிருக்குமா? மதுரைக்குப் போய்ப் பாருங்கள். ஒருவர்கூட உயிர்பிழைக்காமல் வம்சமற்றுப்போன குடும்பங்கள் எத்தனையோ இருக்கின்றன.”

ஹானிங்டன் முகத்திலும் துயரத்தின் நிழல் கவ்வியது.

அருகில் இருந்த வெண்கலமணியின் கயிற்றைப் பிடித்து இழுத்தார்.

உதவியாளன் உள்ளே எட்டிப் பார்த்தான். வந்த வேகத்தில் வெளியேறினான். அவரின் முகக்குறியா, விரலசைவா, புருவ நெறிப்பா, அவனுக்கான உத்தரவை எதிலிருந்து பெற்றான் என்று தெரியவில்லை. உதவியாளர்களின் நுட்பம், பழக்கத்தால் மட்டும் வருவதில்லை. மனத்திற்குள் அவனை வியந்து முடிப்பதற்குமுன் மதுபாட்டிலும் கோப்பைகளும் இருவர் முன்னாலும் இருந்தன.

ஹானிங்டன் மதுவைக் கோப்பையில் ஊற்ற முனைந்தார்.

“யுவர் எக்ஸலென்ஸி, எனக்கொரு அனுமதி கொடுக்க வேண்டும்.”

குனிந்தவாக்கிலேயே முகத்தை மட்டும் நிமிர்த்தி ‘என்ன’ என்பதுபோல் பார்த்தார் ஹானிங்டன்.

“ஹிஸ் எக்ஸலென்ஸி, மெட்ராஸ் கவர்னருக்கு நான் ஒரு கடிதம் எழுத அனுமதி தர வேண்டும். உங்கள் பரிந்துரையை ஒட்டிய கடிதம் என்பதால் உங்கள் அனுமதி வேண்டுகிறேன்.”

“என்ன எழுதப்போகிறாய் பென்னி?”

“திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆய்வுக்கு அனுமதிக்கக் கூடாது என்று.”

“உனக்கென்ன பைத்தியம் பிடித்திருக்கிறதா?”

“பின்னால் நடக்கப்போகும் பைத்தியக் காரத்தனங்களைத் தடுக்கத்தான்.”

“நாம் அனுமதிக்கவில்லையென்றால் இன்னும் பத்தாண்டுகளாகும் இந்தத் திட்டம்.”

“அனுமதித்தால் இந்தத் திட்டமே நடக்காது.”

“என்ன சொல்கிறாய் பென்னி?”

“அவர்கள் எதிர்பார்க்கும் குத்தகைப் பணத்தையும் பேக்டரிகளையும் கொடுக்கவில்லை என்பதற்காகத்தான் இதுவரை மறுத்து வந்திருக்கிறார்கள். பெரியாற்றின் பிரவாகத்தை மலையில் போய்ப் பார்த்தால், அதை நமக்குக் கொடுக்க மனம் வருமென்று நினைக்கிறீர்களா? மனம் வந்தால் இன்னும் கூடுதலாகக் குத்தகைப் பணம் கேட்பார்கள். கவர்னர் இதுதான் சாக்கென்று கோப்பைக் கட்டி வைத்துவிடுவார்.”

ஹானிங்டன் யோசித்தார்.

“பென்னி...” திடீரென்று அவர் குரலில் தெரிந்த நிதானத்தை வியப்போடு கவனித்தார் பென்னி.

“சவுக்குக்குக் கட்டுப்படும் வரைதான் குதிரைக்கு மரியாதை.”

“யுவர் எக்ஸலென்ஸி...?”

“ரெசிடெண்ட் என்ற பதவியை உருவாக்கி, ஒவ்வொரு சமஸ்தானத்திலும் என்னைப் போன்ற அதிகாரிகளை பிரிட்டிஷ் அரசாங்கம் உட்கார வைத்திருக்கிறது என்றால் சும்மாவா? திருவிதாங்கூர் குதிரைக்கு நான்தான் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் சவுக்கு. சரி சரி என்று போனால் இந்த ரெசிடெண்ட் சும்மா இருப்பார். இல்லையென்றோ முடியாதென்றோ சொன்னால் ரெசிடெண்ட் விஸ்வரூபமெடுப்பார்.”

“சுற்று வழியைத் தேர்ந்தெடுக்க வேண்டுமா யுவர் எக்ஸலென்ஸி?”

“நம் எதிரிருப்பவர்தான் அதைத் தீர்மானிக்கிறார்.”

“வருந்துகிறேன் யுவர் எக்ஸலென்ஸி, விடைகொடுங்கள். நான் உங்களைமீறிச் செயல்பட்டுவிட்டதாக நீங்கள் வருந்தக்கூடாது என்பதற்காகவே நேரில் சொல்லிவிட்டுப் போக வந்தேன்.”

பென்னி எழுந்து நின்றார்.

“உன் வருத்தம் நான் அறிவேன். இவர்களை நீ அறிய மாட்டாய். நான் இவர்களுடன் இருக்கிறவன். இவர்களின் ஒவ்வொரு அசைவுக்கும் பொருள் அறிவேன். நீ வருத்தப்படாதே. விரைவில் பணிகள் தொடங்கும்.”

நம்பிக்கையற்ற பார்வை பார்த்தார் பென்னி.

“என் வார்த்தையை நம்பலாம்.”

பென்னி முழுமையாகச் சமாதானமாகாமல் ஹானிங்டனைப் பார்த்தார்.

“ஹிஸ் எக்ஸலென்ஸி மெட்ராஸ் கவர்னருக்கு நீயும் கடிதம் எழுது பென்னி. உன் கடிதத்திற்கு கவர்னரின் பதில் வரட்டும். அதிலிருந்து நம் அரசாங்கம் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறது என்பதையும் நான் அறிந்துகொள்ளலாம்.”

நீரதிகாரம் - 9

பென்னியின் முகத்தில் சிறு தெளிவு.

“யுவர் எக்ஸலென்ஸி, இன்னொரு சகாயம் செய்ய முயலுங்கள்.”

“சொல், என்ன செய்யட்டும்?”

“அவர்கள் ஆய்வுக்குச் செல்ல கவர்னரின் அனுமதி வரட்டும், வராமல் போகட்டும். திவானுக்கும் மகாராஜாவுக்கும் நெருக்கமான அதிகாரிகளை யுவர் எக்ஸலென்ஸி அழைக்க வேண்டும். நான் அவர்களுக்குப் புரிய வைக்கிறேன். அவர்கள் நான் சொல்வதை முழுமையாகக் கேட்கட்டும். பிறகு அவர்கள் முடிவு. எனக்கு நம்பிக்கை இருக்கிறது யுவர் எக்ஸலென்ஸி, அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்று.”

ஹானிங்டன் பென்னியை ஆழ்ந்து பார்த்தார்.

பென்னிக்குத் தெரிந்துவிட்டது, ஹானிங்டன் என்ன சொல்லப்போகிறார் என்று.

“மகிழ்கிறேன் யுவர் எக்ஸலென்ஸி. என் மனப்பாரம் கொஞ்சம் குறைந்தது. விடை கொடுங்கள் எனக்கு” என்றார் எழுந்து நின்று வணங்கியபடி.

“மீரட்டில் சிப்பாய்க் கலகம் வெடித்து, நான்கு மாதங்கள் ஆகியிருந்தன. வாரிசு இல்லாத இந்திய சமஸ்தானங்களை, பிரிட்டிஷ் சர்க்காரே எடுத்துக்கொள்ளும் என்று ஹிஸ் எக்ஸலென்ஸி, கவர்னர் ஜெனரல் ஆப் இண்டியா டல்ஹௌசி பிரபு அறிவித்து, இந்திய சமஸ்தானங்கள் அச்சத்தில் இருந்த காலம். பிரிட்டிஷ் பேரரசியின் நேரடி ஆட்சியின்கீழ் இந்தியா வருவதற்கான முன்னோட்டம் தொடங்கிவிட்டிருந்தது. திருவிதாங்கூரின் வடபகுதி வெள்ளத்தில் அழிந்து, தென்பகுதி வறட்சியில் சிக்கி, விதைப்பதற்குக்கூட தானியமின்றி விவசாயிகள் ஏங்கித் துன்புற்றிருந்த வேளை. திருவிதாங்கூர் சமஸ்தானத் திடமிருந்த ஏகோபித்த புகையிலை விற்பனை உரிமையையும் பிரிட்டிஷ் அரசாங்கம் ரத்துசெய்திருந்தது. திருவிதாங்கூர் கருவூலத்தின் இருப்பு கரைந்துகொண்டிருந்த நெருக்கடித் தருணம். மேன்மை தாங்கிய அரசர், முந்தைய இரண்டு அரசர்களின் மாமா, உத்திரம் திருநாள் அவர்களின் பிரியமான மருமகள், ராணி லெட்சுமி பாய்க்கு மகனாகப் பிறந்தேன்.”

மகாராஜா ஸ்ரீமூலம் திருநாள் திருவிதாங்கூர் அரண்மனையின் தர்பார் அரங்கத்தில், பத்மநாபதாசனாகப் பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்பட்டார். மதிப்புமிக்கவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்த அந்த அவையில் பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்பட்ட, மூலம் திருநாள் தன் உரையை நிகழ்த்தத் தொடங்கியிருந்தார்.

பிரிட்டிஷ் ரெசிடெண்ட் ஹானிங்டன், திவான் ராமய்யங்கார், கொல்லம் பலியத்து அச்சன், நகரத்தின் முக்கியஸ்தர்கள், ஐரோப்பியர்கள் வீற்றிருக்க, சமஸ்தானத்தின் அரச குடும்பத்துப் பெண்கள் தனிவரிசையில் இருக்க, மூலம் திருநாள் பதவிப் பிரமாண உரை நிகழ்த்திக்கொண்டிருந்தார். சிந்தனைகளும் கவலைகளும் மண்டிக்கிடந்த அவர் முகத்திற்கு, கடந்த காலத்தின் சம்பவங்களை அவர் இழுத்து வந்து சேர்த்துக்கொண்டிருந்த பின்னணி இன்னும் துயரத்தைக் கூட்டியது. பிறப்பிலிருந்து பேச்சைத் தொடங்குகிறாரே என்பதுபோல் பார்த்துக்கொண்டிருந்தார் ஹானிங்டன். அவருக்கருகில் குருவாயி அமர்ந்திருந்தாள்.

“பதினொரு நாள்தான், வெறும் பதினொரு நாள்தான். ராணி லெட்சுமி பாய் என்னை, இந்தப் பூமிக்குக் கொடையாகக் கொடுத்து, ஸ்ரீபத்மநாபரின் திருப்பாதம் அடைந்தார்.”

மூலம் திருநாளை ஹானிங்டன் துயரத்துடன் பார்த்தார்.

“திருவிதாங்கூருக்கே அதென்ன சாபமென்று தெரியவில்லை. ராணிகள், தங்களின் வாரிசுகளைப் பெற்றுக்கொடுத்துவிட்டு விடைபெற்றுவிடுகிறார்கள். நான் மட்டுமல்ல, முந்தைய ராஜாக்கள், என் அன்பிற்குரிய மாமாக்கள் விசாகம் திருநாள், ஆயில்யம் திருநாள், என்னுடைய தாத்தா உத்திரம் திருநாள் எல்லோருமே பிறந்த சில நாள்களில், மாதங்களில், தாயை இழந்தவர்கள்தாம். அந்த வரிசையில் ராணி லெட்சுமி பாயின் முகம் அறியாமல் நான் வளர்ந்தேன். என் தந்தை செங்கணச்சேரி ராஜராஜ வர்மா கோயில் தம்புரானும் நான் பிறந்த ஓராண்டிற்குள் இவ்வுலக வாழ்வை நீத்தார்.”

திவான் ராமய்யங்கார் நெளிந்தார். மகாராஜா சுபதருணத்தில் ஏன் இதையெல்லாம் நினைவுகூர்கிறார் என்ற யோசனை.

“நான் பிறக்கும்போதே இவ்வளவு அசாதாரணமான சூழல். சுமுகமற்ற அரசியல் நிலைமை, சமஸ்தானத்தில் மகாராஜாவின் திடீர் சீர்குலைவு, குடிகளின் வாழ்க்கையில் அமைதியின்மை, சமஸ்தான அதிகாரிகளின் சம்பள நிலுவை எனப் பல ஏற்றத்தாழ்வுகள். மகாராஜா விசாகம் திருநாளின் திடீர் மறைவை என்னால் இன்னும் ஏற்க முடியவில்லை. தாயின் மறைவில், எனக்கெந்தக் குறையும் வராமல், என்னைத் தன்னிரு தோள்களில் ஏற்றி உட்கார வைத்திருந்த ராஜா உத்திரம் திருநாள் இப்போதும் என் கண்முன் நிற்கிறார். விஸ்வரூப கோலத்தில், நான் வாளேந்தி ஸ்ரீபத்மநாபரின் முன்னால் நின்றிருந்த தருணத்தில், ராஜா உத்திரம் திருநாளின் தோளில் கிடந்த குழந்தையாக என்னை நினைத்துக்கொண்டேன். தினம் என்னைத் தூக்கிக்கொண்டுதான் சுவாமி தரிசனத்திற்குச் செல்வாராம் ராஜா உத்திரம் திருநாள். என்னுடனேயே பொழுதைக் கழித்து, என்னைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்ட என்னிரு மாமாக்களை ஸ்ரீபத்மநாபர் ஏன் இவ்வளவு சீக்கிரம் அழைத்துக்கொண்டார் என்று தெரியவில்லை. இந்த அரண்மனையின் தோட்டத்தில், ராஜா உத்திரம் திருநாள் கட்டிக்கொடுத்த சின்னஞ்சிறிய மரக்குடில் இன்னும் அப்படியே இருக்கிறது. நானும் என்னுடைய சகோதரர் அஸ்தம் திருநாளும் நல்ல சூழலில் படிப்பதற்காகவே அந்தக் குடிலைக் கட்டிக்கொடுத்தார் ராஜா. ராமன், லெட்சுமணன்போல் நாங்களிருவரும் இருக்க வேண்டுமென்பது அவர் விருப்பம். சின்னஞ்சிறிய குடிலுக்குள் மகிழ்ந்திருந்த காலம் எவ்வளவு இனிமையானது? சிறுவனாக என் மனம் இன்னும் அங்குதான் துள்ளி விளையாடிக் கொண்டிருக்கிறது. கல்வியில் அதிக ஈடுபாடு கொண்ட அண்ணன், அரியணை ஏற முடியாமல்போனது விதியின் செயல்தான். இருபத்தைந்து லட்சம் குடிகளைக் கொண்ட, இந்தச் சமஸ்தானத்திற்கு மகாராஜாவாகும் வயது வந்துவிட்டதா என்ற வியப்பு எனக்குள் இன்னும் இருக்கிறது.”

பேசுவதை நிறுத்திவிட்டு மகாராஜா ஸ்ரீமூலம் திருநாள் ராமவர்மா, தர்பாரில் இருந்த அனைவரையும் ஒருமுறை சுற்றிப் பார்த்தார்.

சமஸ்தானத்தின் அரசர் அரியணை ஏறும் நாளுக்கான கொண்டாட்டங்கள் குறைவு என்பதோடு, முகங்களில் பூரிப்பு குறைவாக இருப்பதைப் பார்த்தார். அதற்குத் தன்னுடைய பேச்சும் ஒரு காரணம் என்பதை உணர்ந்த மகாராஜா பேச்சைத் தொடர்ந்தார்.

“வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த அரியணையை, இளவயதில் அலங்கரிக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்திருக்கிறது. அரசாட்சி செய்வதற்கு இருபத்தெட்டு வயது, இளவயதுதான் என்னைப் பொறுத்தவரைக்கும்.”

தர்பார் ஹாலில் லேசான சிரிப்பொலி எழுந்து, இறுக்கம் குறைந்தது.

“இந்தச் சர்க்காரைப் பரிபாலனம் செய்யும் திறமை என்னுடையதல்ல. இந்த அரியணையை அலங்கரித்த மூதாதையர் கொடுத்துச் சென்றிருக்கிற துணிவு. அவர்களின் எல்லையற்ற பேராற்றலின் துணையிருக்கிறது என்ற நம்பிக்கையிலேயே நான் உங்கள்முன், மகுடம் சுமந்து நிற்கிறேன். என்னை நானே ஆறுதல்படுத்திக் கொள்ள இதைச் சொல்லவில்லை. அவர்களின் ராஜபாதையில் என் சின்னஞ்சிறு பாதங்களும் நடக்கும் என்பதை உறுதிப்படுத்தவே இதைச் சொல்கிறேன். இன்னொரு மாபெரும் சக்தியும் எனக்குத் துணையிருக்கிறது.”

யாரைச் சொல்லப்போகிறார் என்ற ஆர்வம் அவையில் எழுந்தது.

“இங்கிலாந்து தேசத்தின் பேரரசி, பிரிட்டிஷ் இந்தியாவினை ஆளும் ஹர் மெஜஸ்டி...”

தர்பார் அரங்கில் பேரரசியின் பெயரைச் சொன்னவுடன் ஆரவாரம் உண்டானது.

“இந்தியாவின் வைஸ்ராய் ஹிஸ் எக்ஸலென்ஸி, ஹிஸ் எக்ஸலென்ஸி மெட்ராஸ் கவர்னர், நம்முடைய சமஸ்தானத்தின் பேராளர் ஹிஸ் எக்ஸலென்ஸி ஹானிங்டன், இவர்களுடனான நல்லுறவும் ஒத்துழைப்பும் இருப்பதில், இந்தச் சர்க்காருக்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும். எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தச் சமஸ்தானத்தின் மேலாதிக்கமான ஸ்ரீபத்மநாபரின் திருப்பாதங்களைச் சரணடைகிறேன். இருள் நிறைந்த என் அகத்தில் அவர் ஒளியேற்றுவாராக. என் பலவீனங்களைப் பலமாக்குவாராக. பழைமையான இந்தச் சமஸ்தானத்தின் பெருமைமிகு அரசர்களின் வரிசையில் நானும் நடைபோட சக்தியும் ஆற்றலும் தருவாராக. எதிர்பாராமல் என்னிடம் வந்தடைந்திருக்கிற இரண்டரை மில்லியன் மக்களுக்கு அமைதியும் வளமும் நிரம்பிய நல்வாழ்க்கையைத் தர, இறைவன் என்னை ஆசீர்வதிப்பாராக. கொல்லம் வருஷம் ஆயிரத்து அறுபத்தொன்றின் முதல் மாதமான சிங்கம் மாதத்தைய ஐந்தாம் நாள் புதன் திவசத்தில்* (19 ஆகஸ்ட், 1885), நீண்ட பெருமைமிகு வரலாறு கொண்ட இந்தச் சமஸ்தானத்தின் மகாராஜாவாகப் பதவியேற்பதில் பெருமைகொள்கிறேன்.”

அரசர் மூலம் திருநாள் விண்பார்த்து இருகை குவித்து வணங்கி நின்றார். தர்பாரில் நிறைந்திருந்த மக்கள் நெகிழ்ந்து அரசரை வாழ்த்தினார்கள்.

சாளரத்தையொட்டி அமர்ந்திருந்த லெட்சுமி கொச்சம்மை, ஹானிங்டனைப் பார்த்து வணங்கினாள். ஹானிங்டன் தலையசைத்து அவளின் வணக்கத்தை ஏற்க, அருகில் இருந்த குருவாயி எழுந்து நின்று தம்புராட்டியை வணங்கினாள்.

முக்கியஸ்தர்கள் அறியாமல், சட்டென்று பார்ப்பவர் அடையாளம் கண்டறிய முடியாத எளிமையான தோற்றத்தில் தனித்து உட்கார்ந்திருந்த வடசேரி கார்த்தியாயினி, மகாராஜா பதவியேற்றவுடன் தர்பாரிலிருந்து கிளம்பிச் சென்றாள். அவள் கிளம்பிச் செல்வதை லெட்சுமி கொச்சம்மை பார்த்துக் கொண்டிருந்தார்.

- பாயும்...