Published:Updated:

"வறண்டு வரும் உலகின் மிகப்பெரிய பாலைவன ஏரி துர்கானா!" - பிரச்னைகளும் காரணங்களும்

எத்தியோப்பியா அரசு தொடர்ந்து அணைகளைக் கட்டுவதால் பாலைவன ஏரியான துர்கானா வறண்டு அழியும் நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது. இதனை யுனெஸ்கோ(United Nations Educational, Scientific and Cultural Organisation (Unesco)) அழிந்து கொண்டிருக்கும் உலக பாரம்பர்ய இடங்களின் பட்டியலில் சேர்த்துள்ளது. சரியான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியுள்ளது. 

"வறண்டு வரும் உலகின் மிகப்பெரிய பாலைவன ஏரி துர்கானா!" - பிரச்னைகளும் காரணங்களும்
"வறண்டு வரும் உலகின் மிகப்பெரிய பாலைவன ஏரி துர்கானா!" - பிரச்னைகளும் காரணங்களும்

பாலைவனங்களில் இருக்கும் ஒட்டகங்களும் அதனைப் பராமரிக்கும் மனிதர்களும் அன்றாடத்தேவையானத் தண்ணீருக்கு என்ன செய்வார்கள். எங்குப் பார்த்தாலும் நிலையற்ற மணல் மேடுகளும்மணற்பரப்பின் பள்ளங்களும் ஆக்கிரமித்திருக்கும் பாலைவனத்தின் குடிநீர்த் தேவையை பெரும்பாலும் பூர்த்தி செய்வது பாலைவனச்சோலைகளில் இருக்கும் பாலைவன ஏரிகள்தான். வறண்ட மணற்பரப்பின்வெப்பத்தை இவற்றின் ஈரப்பதம்தான் ஈடுகட்டுகின்றன. ஆனால் அவற்றிலும் நீர் இல்லாமல் போனால் அந்தப் பாலைவனத்தின் உயிர்ச்சூழலும் சுற்றுச்சூழலும் என்னவாகும்? இந்தக் கேள்விக்கான விடையாக மாறி வருகிறது உலகின் மிகப்பெரிய பாலைவன ஏரியான துர்கானா ஏரியின்(Lake Turkana) தற்போதைய நிலைமை. ஆனால் அந்த ஏரியில் நீர் வற்றிக் குறைந்து போவதற்குக் காலநிலை மாற்றம், புவிவெப்பமயமாதல் என இயற்கை விளைவுகள் காரணமில்லை. நீரைத் தேக்கி வைத்துக்கொள்ளும் ஆசையில் மனிதர்களால் கட்டப்படும் அணைகள்தான் இங்கேயும் பிரச்னையாக இருக்கிறது. 

உலகின் மிகப்பெரிய பாலைவனமான சஹாரவின் வடகிழக்கில் உள்ள கென்யா, எத்தியோப்பியா என இருநாடுகளில் பரவி அமைந்துள்ளது இந்த துர்கானா ஏரி. கென்யாவின் வடக்குப்பகுதியின் வறண்டநிலங்களுக்கும் கென்ய பிளவு பள்ளத்தாக்குக்கும் அருகில் அமைந்துள்ளது. ஏரியின் ஒட்டுமொத்த நீர்ப்பிடிப்பு பரப்பு 1,30,860 ச.கிமீ ஏறக்குறைய 99 அடி ஆழமுடைய துர்கானா ஏரி உலக அளவில் மிகப்பெரியஏரிகளில் 24 வது இடத்தில் உள்ளது. நீண்டு விரிந்து கிடக்கும் இந்த ஏரிக்கு ஒமோ(Omo), துர்க்வெல் (Turkwel), கெரியோ (Kerio) ஆகிய மூன்று ஆறுகளில் இருந்துதான் தண்ணீர் வருகிறது. துர்கானா ஏரியின் பெரும்பகுதி கென்யாவிலும் மிகச்சிறிய பகுதி மட்டுமே எத்தியோப்பியாவிலும் அமைந்துள்ளது. ஆனால் துர்கானா ஏரியின் பெரும்பகுதி நீர்வரத்து எத்தியோப்பியாவில் பாயக்கூடிய ஒமோ நதியின் மூலமே கிடைக்கிறது. ஏரியின் 80% தண்ணீர் ஒமோ நதியின் மூலமே வருகிறது. இந்த நதியில்தான் எத்தியோப்பியா அரசு தொடர்ந்து அணைகளைக் கட்டுவதால் துர்கானா ஏரி வறண்டு அழியும் நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது. இதனை யுனெஸ்கோ(United Nations Educational, Scientific and Cultural Organisation (Unesco)) அழிந்து கொண்டிருக்கும் உலக பாரம்பர்ய இடங்களின் பட்டியலில் சேர்த்துள்ளது. சரியான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியுள்ளது. 

Photo : International Rivers

இந்த மிகப்பெரிய பாலைவன ஏரியை நம்பி கால்நடை மேய்ப்பவர்கள், மீன்பிடித் தொழிலைச்செய்பவர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் என 3,00,000 க்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் நைல் முதலைகள், நீர் யானைகள், வலசை வரும் பல்வேறு பறவைகள், பல்வேறு மீன்வகைகள் என உயிரியல் பல்வகைத் தன்மை வாய்ந்த இடமாகவும் திகழ்கிறது. இதனாலேயே 1973 ஆம்ஆண்டு ஏரியின் வடகிழக்குப் பகுதியில் சிபிலோய் தேசிய பூங்கா (Sibiloi National Park) உருவாக்கப்பட்டது. மேலும் 1983 மற்றும் 1985 ஆண்டுகளில் முறையே ஏரியில் உள்ள தெற்கு மற்றும் வடக்குத் தீவுகளில் தெற்கு தேசியப் பூங்காவும் வடக்கு தேசிய பூங்காவும் உருவாக்கப்பட்டது. முக்கியமாக இவை நைல்முதலைகளுக்காகவே உருவாக்கப்பட்டன. மூன்று தேசியப் பூங்காக்களும் 1997 ஆம் ஆண்டு உலக பாரம்பர்ய இடங்களுக்கானப் பட்டியலில் இணைக்கப்பட்டன. ஏரியின் கரைகளில் மரபுசார் படிமங்களும் புவியியல்ரீதியாகவும் இந்த இடத்தில் மனிதர்களோ பிற உயிரினங்களோ தோன்றியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 

1975 வரை ரூடால்ஃப் ஏரி (Lake Rudolf) என்று இந்த ஏரி அழைக்கப்பட்டுள்ளது. அந்த வருடம்தான் யதேச்சையாக ஏரியைச் சுற்றி வாழ ஆரம்பித்த துர்கானா பழங்குடியின மக்களால்தான் அந்த ஏரி துர்கானா ஏரி என்று அழைக்கப்பட ஆரம்பித்தது. மிகப்பெரிய நிலப்பரப்பில் பரந்து கிடக்கும் இந்த ஏரியில் நீர் இழப்பு ஏற்படும் அளவிற்கு எந்தவகையான துளைகளோ, முறையற்ற நீர் வெளியேற்றமோ இல்லை. நீர் ஆவியாதலில்மட்டுமே ஏரியின் நீர் வீணாகிறது. மேலும் காரத்தனமை அதிகம் உள்ள மிகப்பெரிய ஏரிகளில் இதுவும் ஒன்று. கடந்த மாதம் நடைபெற்ற உலக பாரம்பர்ய இடங்களுக்கான கூட்டத்தில் துர்கானா ஏரியானது அழிந்து வரும் பாரம்பர்ய இடங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. 54 க்கும் மேற்பட்ட இடங்கள் இந்தப்பட்டியலில் இருக்கின்றன. 

Photo : UNESCO

ஒமோ ஆற்றில் எத்தியோப்பிய அரசு தொடர்ந்து பல அணைகளைக் கட்டி வருகிறது. நீர்மின் மற்றும் நீர்ப்பாசனத்திற்காக இந்த அணைகளைக் கட்டுவதாக கூறுகிறது எத்தியோப்பியா. அதுமட்டுமல்லாமல் குராஸ் சுகர் (Kuraz Sugar) எனும் திட்டமும் ஒமோ ஆற்றை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. கிபே (Gibe) III மற்றும் IV அணைகள்ஒமோ ஆற்றில் கட்டப்படுவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. இவற்றில் கிபே III அணையின் வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன. கென்யாவும் இதுகுறித்து அலட்சியமான நடவடிக்கைகளைத்தான் மேற்கொண்டு வருகிறது. சுற்றுச்சுழல் தாக்கீடு அறிக்கை என ஒருதிட்டத்திற்கான அறிக்கையைக் கூட எத்தியோப்பியா அரசு சரிவர செய்யவில்லை. யுனெஸ்கோ எச்சரித்தாலும் எத்தியோப்பியா கேட்பதாக இல்லை. கென்யாவின் முதல் உலக பாரம்பர்ய இடமானதுஇப்போது அழியும் நிலையில் இருக்கிறது. ஒமோ நதியில் அணை கட்டுவதால் துர்கானா ஏரியை மட்டுமல்ல தெற்கு சூடானிலும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கென்யாவும் எத்தியோப்பியாவும் பேசி ஒரு முடிவு எடுக்க வேண்டும் பல்வேறு உயிர்களுக்காக.