Published:Updated:

திசை மாறிய மாமல்லபுரம் கடல் நீரோட்டம்; வெளிவந்தது மகிஷாசுரமர்த்தினி!

திசை மாறிய மாமல்லபுரம் கடல் நீரோட்டம்; வெளிவந்தது மகிஷாசுரமர்த்தினி!
திசை மாறிய மாமல்லபுரம் கடல் நீரோட்டம்; வெளிவந்தது மகிஷாசுரமர்த்தினி!

மாமல்லபுரத்தில் கடல் நீரோட்ட திசை மாற்றத்தால் கடற்கரை பகுதியில் கடல் உள்வாங்கி இருக்கிறது. இதனால் மாமல்லபுரம் கடல் நீரில் மூழ்கியிருந்த மகிஷாசுரமர்த்தினி குடவரை கடல்நீரின்றி மணல்பரப்புடன் காட்சியளிக்கிறது.

உலகப் புகழ்பெற்ற பாரம்பர்ய சுற்றுலாத்தலம் மாமல்லபுரம். இங்குள்ள பல்லவர்கள் காலத்துச் சிலைகளைக் காண ஏராளமான வெளிநாட்டுப் பயணிகள் வருவது வழக்கம். பல்லவர்காலத்தில் செய்யப்பட்ட குடவரை கோயில்கள், ஒரே பாறையில் செய்யப்பட்ட சிற்பங்கள் என ஏராளமான புராதான சின்னங்கள் மாமல்லபுரத்தில் உள்ளன. மாமல்லபுரம் கடற்கரை கோயில் அருகே சிறிய பாறை ஒன்றில் குடவரை அமைத்து அதில் மகிஷாசுரமர்த்தினி சிற்பத்தை பல்லவர்கள் வடித்திருக்கிறார்கள். ஒருகாலத்தில் வழிபாட்டில் இந்தச் சின்னங்கள் இருந்திருக்கலாம். கடல் மட்டம் உயர்ந்ததன் காரணமாக அவை நீரில் மூழ்கி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

ஜனவரி மாதத்திலிருந்து ஜூன் மாதம் வரை தெற்கிலிருந்து வடக்காகவும், ஜூலையிலிருந்து டிசம்பர் வரை வடக்கிலிருந்து தெற்காகவும் ஆண்டுதோறும் நீரோட்ட திசை மாறுபடுவது வழக்கம். வடக்கு நோக்கி நீரோட்டம் இருக்கும்போது மணற்பரப்பு அரிக்கப்பட்டு கடல்நீர் நிலப்பரப்பு பகுதியில் வரத்தொடங்கும். அதுபோல் தெற்கு நோக்கி நீரோட்டம் செல்லும்போது கடல் உள்வாங்கி மணல்பரப்பு அதிகரிக்கத் தொடங்கும். ஆண்டுதோறும் இந்தப் பருவ மாற்றம் இருக்கும் என்றாலும் இந்த வருடம் அதிக அளவு கடல் உள்வாங்கி இருக்கிறது. இதனால் மகிஷாசுரமர்த்தினி குடவரையைச் சுற்றிலும் மணல் பரப்பு அதிகரித்துள்ளது. மாமல்லபுரம் வரும் சுற்றுலாப் பயணிகள் மகிஷாசுரமர்த்தினியை வெளிவந்துள்ளதை அறிந்து அந்த இடத்தைப் பார்வையிட்டு வருகின்றனர்.