Published:Updated:

தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 4 - பாலாற்றை மீட்போம்!

தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 4 - பாலாற்றை மீட்போம்!
பிரீமியம் ஸ்டோரி
தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 4 - பாலாற்றை மீட்போம்!

தண்ணீர்’பொறிஞர்’ அ.வீரப்பன் - தொகுப்பு: த.ஜெயகுமார் - படங்கள்: தே.சிலம்பரசன்

தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 4 - பாலாற்றை மீட்போம்!

தண்ணீர்’பொறிஞர்’ அ.வீரப்பன் - தொகுப்பு: த.ஜெயகுமார் - படங்கள்: தே.சிலம்பரசன்

Published:Updated:
தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 4 - பாலாற்றை மீட்போம்!
பிரீமியம் ஸ்டோரி
தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 4 - பாலாற்றை மீட்போம்!
தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 4 - பாலாற்றை மீட்போம்!

மிழக நீர்வளங்களின் முக்கியத்துவமும், அவற்றின் அழிவும், மீட்டுருவாக்கமும், அதைச் சார்ந்த அரசியல் பிரச்னைகளைப் பற்றியும் பேச இருக்கிறது இத்தொடர். நீர்வளங்களைப் பாதுகாக்கவும் அதை மீட்டெடுக்கவும் தூண்டுகோலாக இந்தப் பகுதி அமையும்.

பூமியின் நரம்புகள்தான் ஆறுகள் என்று சொல்வதைக் கேட்டிருப்போம். இயற்கையாகவே உருவானவை ஆறுகள். மற்ற நீர்நிலைகளுக்குத் தோற்ற வரலாற்றை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். ஆறுகளின் தோற்ற வரலாற்றை அனுமானிப்பது கடினம். ஒரு நதியின் பெருமை, அதன் நீளத்தில் இல்லை. அதில் ஓடும் நீரின் அளவில்தான் இருக்கிறது.

அப்படிப் பார்த்தால் உலகிலேயே பெரிய நதி அமேசான். அடுத்தது நைல் நதி. இந்தியாவில் சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா ஆகிய நதிகள் பெரிய நதிகளாக உள்ளன. ஒப்பீட்டளவில் பார்த்தால், வட இந்தியாவில் ஒடும் நதிகளைவிடத் தென்னிந்தியாவில் ஓடும் நதிகளால்தான் பாசனம் அதிகளவில் நடைபெறுகிறது. அதனால்தான் நம் கலாசாரத்தில் ஆறுகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. சொல்லப்போனால் வேளாண்மையை முறைப்படுத்தியதில் ஆறுகளுக்கு முக்கியப்பங்கு உண்டு.

தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 4 - பாலாற்றை மீட்போம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை (ஜூன் முதல் செப்டம்பர் வரை), வடகிழக்குப் பருவமழை (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) இரண்டும் முக்கியம் வாய்ந்தவை. இந்தியாவின் சராசரி மழையளவு 1,170 மில்லி மீட்டர். ஆனால் தமிழ்நாட்டின் மழையளவு, 979 மில்லி மீட்டர் அளவுதான். இதனால், ஆறுகளில் தண்ணீர் வரத்துக்கு நாம் அண்டை மாநிலங்களையே சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. காவிரி,  முல்லை-பெரியாறு, பாலாறு, தென்பண்ணையாறு, சிறுவாணி, அமராவதி போன்ற ஆறுகள் அண்டை மாநிலங்களின் நிலப்பரப்பில் பெய்யும் மழைநீரை நம்பித்தான் இருக்கின்றன. தற்போது ஏற்பட்டிருக்கும் மாநிலங்களினின் அரசியல் சார்ந்த சுயநலப் போக்குகளால் தமிழக விவசாயிகளின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. இவ்வளவுக்கும் ஆற்றின் குறுக்கே அணைகள், தடுப்பணைகள், ஆற்றிலிருந்து பாசனத்துக்குச் செல்லும் கால்வாய்கள், வாய்க்கால்கள் என்று வியத்தகு பாசன கட்டமைப்புகளை உருவாக்கி இருப்பதில் முன்னோடிகள் நம் தமிழர்களே. ஆனால், இப்போது அவற்றில் போதிய தண்ணீர் வராமல் இருப்பதுதான் வேதனை.

தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 4 - பாலாற்றை மீட்போம்!1950-ம் ஆண்டில் 19,62,000 ஏக்கர் அளவாக இருந்த ஆற்றுப்பாசனப் பரப்பு 2006-ம் ஆண்டில் 14,80,000 ஏக்கராகக்க குறைந்திருக்கிறது. இதேபோல, 1,23,000 ஏக்கராக இருந்த நிலத்தடி நீர்ப் பயன்பாடு 14 லட்சம் ஏக்கராக அளவாக அதிகரித்திருக்கிறது. ஆறுகள் மற்றும் ஏரிகளில் தண்ணீர் குறைந்ததால் நிலத்தடி நீரின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. ஆனால், நிலத்தடி நீரும் தொடர்ந்து கிடைக்க வேண்டுமென்றால், இந்த ஆறுகள், ஏரிகளில் தண்ணீர் வர வேண்டும். ஆற்று நீரை அண்டை மாநிலங்கள் தடுப்பது ஒருபுறம் என்றால்... இன்னொரு புறம் ஆறுகளில் மணல் எடுப்பது, குப்பை கூளங்களைக் கொட்டி நாசப்படுத்துவது, ஆக்கிரமிப்பது என்று தமிழக ஆறுகளின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது.

இவற்றில் முன்னணியில் இருக்கும் ஆறுகளில் ஒன்று பாலாறு. இதன் கண்ணீர் வரலாற்றைப் பார்ப்போம்.

சங்ககால இலக்கியங்கள் முதல் தற்கால இலக்கியங்கள் வரை பாலாற்றின் வளம் குறித்துப் பேசப்பட்டு வருகின்றன. சேர, சோழ, பாண்டிய அரசுகளின் வரிசையில் ‘தொண்டை நாடு சான்றோருடைத்து’ என வலியுறுத்தும் வடபெண்ணை, தென்பெண்ணை ஆறுகளுக்கு இடையில் உள்ள நிலப்பகுதி தான் பாலாற்றுப் பகுதி. தொண்டை மண்டல நாட்டை வளம் கொழிக்க வைத்த பிரதான ஆறு பாலாறு ஆகும். மொத்த பாலாறு படுகை 18,300 சதுர கிலோ மீட்டர். தமிழ்நாட்டில் 11,000 சதுர கிலோமீட்டர் அளவு உள்ளது. ஆற்றின் அகலம், ஆயிரம் மீட்டர் முதல் இரண்டாயிரம் மீட்டர் வரை உள்ளது.

தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 4 - பாலாற்றை மீட்போம்!

பாலாறு, கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான நந்திதுர்க்கம் மலையில் தொடங்கி, கோலார் மாவட்டம் வழியாக 96 கிலோமீட்டர் தூரம் பயணிக்கிறது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், குப்பம் வட்டத்தில் 48 கிலோ மீட்டர் பயணித்து, தமிழகத்தில் வேலூர் மாவட்டத்திலிருந்து தன்னுடைய பயணத்தைத் தொடங்குகிறது. தமிழகத்தில் 224 கிலோமீட்டர் தூரம் பயணித்துக் காஞ்சிபுரம் மாவட்டம், வாயலூர் கிராமத்தின் அருகில் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.

 1858-ம் ஆண்டு வாலாஜாபேட்டை அருகில் தடுப்பணை கட்டி, 317 ஏரிகளுக்குக் கால்வாய்கள் மூலமாகத் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. பாலாறு நெடுகிலும் 606 ஆற்றுக் கால்வாய்கள் இருப்பதாக அரசு ஆவணம் கூறுகிறது. பாலாற்றில் கர்நாடக மாநிலத்திலிருந்து வரும் தண்ணீர் மட்டும் இல்லை. வேலூர் மாவட்டம், வாணியம்பாடிக்கு அருகில் நாராயணபுரம் ஆறு, கல்லாறு, கொட்டாறு, மாதனூர் அருகில் கோவில்மலை ஆறு, அகரம் ஆறு, ஆம்பூர் அருகில் பேர்ணாம்பட்டு ஆறு, பள்ளிகொண்டா அருகில் கௌண்டன்னிய நாகநதி போன்ற பல துணை ஆறுகளும், காட்டாறுகளும் பாலாற்றில் கலக்கின்றன.

இருப்பினும், வேலூர் மாவட்டம் தொடர்ந்து வறட்சியால் பாதிக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியின் வளம், பாலாற்றையே சார்ந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் பாலாற்றின் மூலம் நேரடியாகக் கால்வாய்கள் அமைத்து சுமார் 300 ஏரிகள், குளங்களுக்கான பாசன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தென்மேற்குப் பருவமழைதான் பாலாற்றுக்கு ஓரளவு தண்ணீர் வழங்கி வருகிறது. வடகிழக்குப் பருவமழை போதுமான தண்ணீரைக் கொடுப்பதில்லை. ஜவ்வாது மலை, ஏலகிரி மலை, திருவண்ணாமலை போன்ற மலைகள் பருவ மழைகளைத் தடுத்து விடுவதால் மழைநீர் கிடைப்பது போதுமானதாக இல்லை. இதனால்தான் இப்பகுதி, ‘மழை மறைவுப் பிரதேசம்’ எனக் குறிப்பிடப்படுகிறது.

பாலாற்றங்கரையில் நெல், கரும்பு, வாழை, தென்னை ஆகிய உணவுப்பயிர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மொத்த நிலங்களில் 40 சதவிகிதம் மட்டுமே பாசன வசதி பெற்றுள்ளது. அதாவது 4,20,000 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகிறது. தற்போது ஆற்றுப்பாசனம் முற்றிலுமாக இல்லை என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.

தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 4 - பாலாற்றை மீட்போம்!

பாலாற்றின் கரைகளில் நிலத்தடி நீர் வளத்தை ஆதாரமாகக் கொண்டு விவசாயம் நடைபெற்று வருகிறது. நிலத்தடி நீர் மட்டத்தில் 90 சதவிகித அளவு தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. பாலாற்றில் போதுமான நீர்வரத்து இல்லாததால் 50 சதவிகித அளவு விவசாயம் குறைந்துவிட்டது. இந்நிலையிலும் வேலூர் மாவட்டம் 90 சதவிகித குடிநீர்த் தேவைக்குப் பாலாற்றைத்தான் நம்பியுள்ளது.

1892-ம் ஆண்டுப் போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறி, பாலாற்றுத் தண்ணீரைத் தடுத்து நிறுத்தி ஆயிரம் ஏரிகளுக்குக் கொண்டு சென்றுவிட்டது கர்நாடக அரசு. அந்த ஒப்பந்தத்தின் 2, 3 மற்றும் 4-ம் ஷரத்துக்களின்படி ‘சென்னை-மைசூர் அரசுக்கு இடையில் தகராறு ஏற்பட்டால் நியமிக்கப்பட்ட மத்தியஸ்தர்களின் மூலமோ, மத்திய அரசாங்கத்தின் மூலமோ தீர்த்துக்கொள்ள வேண்டும்’ என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் 26.12.1954-ம் தேதியன்று காவேரிப்பாக்கத்தில் வட ஆற்காடு, செங்கல்பட்டு விவசாயிகள் பாலாற்றில் தண்ணீர் திறந்துவிடுவது சம்பந்தமாக மாநாடு நடத்தியுள்ளனர். தொடர்ந்து ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. அந்தக் குழு, தமிழ்நாட்டுக்குக் கடந்த 20 ஆண்டுகளாகப் போதுமான அளவு பாலாற்று நீரை கர்நாடகா வழங்குவதில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

நாளுக்கு நாள் மழைப்பொழிவு குறைந்து வருகிற இந்த நேரத்தில் கர்நாடக, ஆந்திர அரசுகள் தொடர்ந்து புதிய ஏரிகளையும், பாசனப்பரப்புகளையும் அதிகரித்ததன் மூலம் பாலாற்றின் நீர்வளம் முழுவதையும் அம்மாநிலங்கள் அபகரித்துவிட்டன. ஒரு விதத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பும், மறுபுறத்தில் மழை அளவும் குறைந்து, நிலத்தடி நீர் வளம் நாளுக்குநாள் கீழ்நோக்கி சென்று கொண்டிருப்பதால் வேலூர், காஞ்சிபுரம் மாவட்ட மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இதைத்தவிர திருவண்ணாமலை வடக்குப்பகுதி, திருவள்ளூர், சென்னைப் புறநகர் பகுதிகள், கல்பாக்கம் அணுமின் நிலையம் என இருபதுக்கும் மேற்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள் குடிநீருக்காகக் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை உருவாகும்.

1892-ம் ஆண்டுப் போடப்பட்ட ஒப்பந்தம், 1924-ம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது. அதற்குப்பிறகு போடப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் அனைத்திலும் காவிரி ஆற்றுக்கு மட்டுமே தமிழக அரசு முன்னுரிமை கொடுத்துள்ளது. ஆனால், மேற்கண்ட இரு ஒப்பந்தங்களிலும் முக்கிய ஆறுகள் பட்டியலில் பதினைந்து ஆறுகளை இணைத்துதான் மொத்தமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதை வைத்தே பாலாற்றில் உற்பத்தியாகும் 80 டிஎம்சி நீரில் தமிழ்நாடு 40 டிஎம்சி நீரைப் பெற பாரம்பர்ய உரிமை உண்டு.

தமிழக அரசு காவிரி போன்றே பாலாற்றுக்கும் தண்ணீரை முறைப்படுத்தும் ஒழுகலாற்றுக் குழுவை அமைத்துத் தண்ணீரைத் தடுத்து நிறுத்தும் கர்நாடக, ஆந்திர அரசுகளின் மனிதாபிமானமற்ற செயலைத் தடுத்திடும் வகையில் நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். இதுபற்றி கர்நாடகா - ஆந்திரா அரசுகளோடு தமிழக அரசு தொடர்ந்து கலந்துரையாடல் செய்ய வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம்.

-பாயும் 

பாலாற்றில் மேற்கொள்ள வேண்டிய பணிகள்

 பாலாற்றங்கரையில் அமைந்துள்ள தோல் தொழிற்சாலைகள், ரசாயனத் தொழிற்சாலைகளின் கழிவுகளை ஆற்றில் விடுவதை அல்லது தேக்கி வைப்பதைத் தடை செய்ய வேண்டும்.

 சுத்திகரிக்க முடியாத நச்சுப்பொருள்களான ரசாயனங்களை உபயோகிப்பதை தடை செய்ய வேண்டும்.

 காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள், கண்மாய்கள், ஊரணிகள், ஏந்தல்கள், கால்வாய்கள் போன்ற நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழைக்காலங்களில் நீரைச் சேமிப்பதோடு உபரியாகும் நீரை பாலாற்றுக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

 ஆற்றின் குறுகலான பகுதிகளை அகலப்படுத்த வேண்டும். நீர்நிலைகளை வேறு பயன்பாட்டுக்கு உட்படுத்துவதைத் தடை செய்யத் தனிச்சட்டம் இயற்ற வேண்டும். அதை, மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 பாலாற்றுக் கரையைச் சார்ந்துள்ள பகுதிகளில் வணிக முறையிலான தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அகற்றி நிலத்தடி நீரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

 குடிநீரை வேறு பயன்பாட்டுக்கு உட்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும்.

 பாலாற்றில் 50 கி.மீ தொலைவிற்கொன்றாக தடுப்பணைகளும் (குறிப்பாக திருமுக்கூடல், வாயலூர்), 10 கி.மீ. தொலைவிற்கொன்றாக தரை கீழ் தடுப்புச் சுவர்களும் (Subsurface Barrier/Dykes) கட்டி நிலத்தடி நீர் இருப்பை உறுதிசெய்திட வேண்டும்.

 மணல் எடுக்கத் தடை விதிக்க வேண்டும்.

ஆந்திராவின் அத்துமீறல்

ஆந்திர அரசு, குப்பம் தாலூகாவில் உள்ள கணேசபுரத்தில் பெரிய அணை கட்ட திட்டம் தீட்டி... 20 அடி உயரமுடைய 22 தடுப்பணைகளைக் கட்டியுள்ளது. இதனால், ஆண்டுதோறும் தமிழகத்துக்கு வரவேண்டிய தண்ணீர் வராமல், பாலாறு வறண்டு போய்விட்டது.

பாலாற்றில் தமிழகத்தின் உரிமை

1892-ம் ஆண்டு ஒப்பந்தபடி பாலாற்றுப் நீரில் பங்கீடு:

கர்நாடகா    -    25% நீர் - 20 டிஎம்சி அளவு
ஆந்திரா    -    14% முதல் 25% நீர் - 20 டிஎம்சி அளவு
தமிழ்நாடு    -    50% நீர் - 40 டிஎம்சி அளவு
பாலாறு மூலம் கிடைக்கும் 80 டிஎம்சி நீரில் 40 டிஎம்சி நீரைப்பெற, தமிழ்நாட்டுக்குப் பரம்பரை உரிமை உண்டு.

தடுப்புச் சுவர் கட்டினோம்!

பொதுப்பணித்துறையில் சிறப்புத் தலைமைப் பொறியாளராக நான் பணியாற்றிய 2001-02-ம் ஆண்டுகளில் வாயலூர்க்கு மேற்கே 1 கி.மீ தொலைவில் பாலாற்றின் குறுக்கே 1.50 கி.மீ நீளமுள்ள தரைகீழ் தடுப்புச் சுவரை 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டினோம். இதன்மூலம் அந்தப் பகுதிகளில் கூடுதலாக 3 மில்லியன் கனஅடி நிலத்தடி நீர் இன்றும் கிடைத்துக் கொண்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism