Published:Updated:

நகரத் திட்டமிடுதலில் எங்கே தவறு செய்கிறோம்?! தண்ணீர் மாஃபியாக்களின் கதை அத்தியாயம்- 19

வழக்கத்துக்கு மாறாகப் புதிய சிந்தனைகளைத் தோற்றுவிப்பதில்தான் தீர்வுகள் மறைந்திருக்கின்றன. கழிவுகளைப் பயனற்றதாகப் பார்க்காமல் அவற்றைப் பொருளாதார ரீதியாகவும் பயன்படுத்த முயற்சி செய்யவேண்டும். அது நீர்நிலைகளைச் சாகடித்துக் கொண்டிருக்கும் மிகப்பெரிய பிரச்னைக்குத் தீர்வாக அமையும்.

நகரத் திட்டமிடுதலில் எங்கே தவறு செய்கிறோம்?! தண்ணீர் மாஃபியாக்களின் கதை அத்தியாயம்- 19
நகரத் திட்டமிடுதலில் எங்கே தவறு செய்கிறோம்?! தண்ணீர் மாஃபியாக்களின் கதை அத்தியாயம்- 19

``தண்ணீர் தேசத்தின் சொத்து. மாநில அரசு அதன் பாதுகாவலர். எந்தக் கட்டுப்பாடுமின்றி அதைப் பயன்படுத்துவதை ஏற்கமுடியாது. அப்படிச் சட்டத்துக்கும் விதிமுறைகளுக்கும் உட்படாமல் எடுக்கப்பட்டால் அது திருட்டாகக் கருதப்படும்."

ந்த மாதம் 3ம் தேதி பாக்கெட்டுக் குடிநீர், பாட்டில் குடிநீர் உற்பத்தி செய்யும் 75 நிறுவனங்களுக்கு எதிராக வந்த மனுக்களை அடிப்படையாகக் கொண்டு நீதிபதி S M சுப்பிரமணியம் இந்த வழக்கை விசாரித்தார். அப்போது அவர் சொன்ன கருத்துதான் மேலே குறிப்பிடப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் சட்டவிரோதமாக முறையான விதிகளுக்கு உட்படாமல் உரிமம் பெறாமல் எடுக்கப்பட்டால் அதைத்  திருட்டாகக் கருதி குற்றவியல் சட்டத்தின் 378 மற்றும் 379 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்ய வேண்டுமென்று அவர் உத்தரவிட்டார். இந்த உத்தரவு நிச்சயம் வரவேற்கத்தக்கதே. இது நகர அமைப்புகள் தண்ணீர்ப் பற்றாக்குறையில் ஏற்படுத்தும் சிக்கல்களை அரசு புரிந்துகொள்வதற்கான ஒரு தொடக்கமாக இருக்கும். ஆனால், இந்த அரசு உத்தரவைத் துச்சமாக நினைத்து தன் போக்கில் எப்போதும் போல நிலத்தடி நீரைச் சுரண்டிக் கொண்டேயிருக்கவும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்குத் தீர்ப்பைப் பற்றியோ விதிமுறைகளைப் பற்றியோ கவலையில்லை. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் லாபம், லாபம் மட்டுமே. ஏனேன்றால் அவர்கள் தண்ணீரை வியாபாரச் சரக்காக நினைக்கிறார்கள். இந்த உத்தரவு அதை எதிர்கால நலன் கருதி சேமித்துவைக்க வேண்டிய அவசியத்தைப் பேசுகிறது. 

மாவட்ட ஆட்சியர்களுக்கு இந்த உத்தரவை அனுப்பியதோடு, அத்தகைய குற்றங்கள் நிகழாமல் தடுக்கவும் நடந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கவும் கண்காணிப்புக் குழு அமைக்கவேண்டுமென்று வலியுறுத்தியுள்ளது உயர்நீதிமன்றம். தனிநபர் நிலத்தடி நீர் பயன்பாடு குறித்த கட்டுப்பாடுகள் பொதுப்பணித் துறையால் விரைவில் அறிவிக்கப்படும். தண்ணீர் திருட்டு குறித்துச் சட்டபூர்வமான கட்டுப்பாடுகள் விதித்துள்ளது ஆரோக்கியமான முன்னேற்றம். அதோடு நகரங்களின் கட்டுமானத் திட்டங்களும் சிறப்பான நீர் மற்றும் கழிவு மேலாண்மையோடு அமைக்கப்பட வேண்டும். அழிந்துகொண்டிருக்கும் ஆறு, ஏரி, குளம் போன்ற அனைத்து நீர்நிலைகளையும் நீடித்த வளர்ச்சிக்குத் தகுந்தவாறு பாதுகாத்து வைப்பதற்கு நகரத் திட்டமிடல் மிக முக்கியமானது. அந்தத் திட்டமிடல் சரியில்லையென்றால் என்ன நடக்குமென்பதற்கு இந்திய நகரங்களே சிறந்த உதாரணம்.

நாம் சிந்திப்பது தண்ணீரைப் பற்றி மட்டும்தான். ஆனால், நீர் எங்கு தேவைப்படுகின்றதோ அங்கு கழிவுநீரும் உற்பத்தியாகும் என்பதை நாம் மறந்துவிடுகிறோம் அல்லது மறுத்தும் மறைத்தும் விடுகிறோம். நகர்ப்புறக் குடியிருப்புகளுக்குச் செல்லும் நீரிலிருந்து 80% கழிவுநீராக மீண்டும் வெளியேறி விடுகின்றது. வெளியேறிய கழிவுநீர் எங்கே செல்ல வேண்டுமென்ற திட்டமிடல் இல்லை. அதனால் கண்ணை மூடிக்கொண்டு ஓடைகள், குளங்கள், ஏரிகள், நதிகளில் கலந்துவிட்டு விடுகிறோம். அந்த நீர்நிலைகள் கழிவுகளை வாங்கிக்கொண்டு சாக்கடைகளாக உருமாறிக்கொண்டிருக்கின்றன. அதோடு நீரை உறிஞ்சும் போன்ற அவற்றின் மண் மூலமாக நிலத்தடி நீரிலும் கலந்து அதையும் மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் பாழ்படுத்துகின்றது. நிலத்தடி நீர் தொடர்பான ஆய்வுகள் அதில் நைட்ரிக் அமிலத்தின் கிரியையிலிருந்து கிடைக்கும் நைட்ரேட் என்ற உப்பு அதிகம் கலந்திருப்பது தெரியவந்தது. சாக்கடையாகிக் கொண்டிருக்கும் நீர்நிலைகள் நிலத்தடி நீர்த்தேக்கங்களையும் பாழ்படுத்துவதற்கு இதைவிடச் சிறந்த ஆய்வுமுடிவுகள் தேவையில்லை. நிலத்தடி நீரைப் பயன்படுத்தச் சட்டமியற்றியது போலவே அதைப் பாதுகாக்கவும் சட்டம்தான் இயற்ற வேண்டுமென்றில்லை. சொல்லப்போனால், சட்டங்களால் இந்த நிலையை மாற்றமுடியாது. அதற்கு முறையான திட்டமிடல் அவசியம்.

ஆக, இதுதான் இந்திய நகரங்களின் நிலை. நாம் விலையுயர்ந்த, அதேசமயம் ஆபத்தான வாழ்க்கைமுறைக்குள் சிக்கிச் சுழன்றுகொண்டிருக்கிறோம். மேற்பரப்பு நீர் மாசடையும்போது நிலத்தடி நீரும் சேர்ந்து சீரழிகிறது. அந்நிலையில் வேறு வழியின்றி புதிய நீராதாரங்களைத் தேடிச் செல்லத் தொடங்குகிறோம். அது அதிகத் தொலைவில் அமைந்துள்ளது. அதைக் கொண்டுவர அதிகப் பொருட்செலவும் தேவைப்படுகிறது. எங்கு மனிதர்கள் வாழ்கிறார்களோ அங்கு கழிவு உற்பத்தியும் இருக்கத்தான் செய்யும். இது இயற்கையின் அடிப்படை விதிகளில் ஒன்று. ஆனால், அதிகமாகச் சேர்ந்துகொண்டிருக்கும் அந்தக் கழிவுகள் எவ்வளவு என்று கணக்கு வைக்கப்படுவதில்லை. அதனால் எவ்வளவு கழிவு மறுசுழற்சி செய்யப்படுகிறது, எவ்வளவு அப்படியே வெளியேற்றப்படுகிறது போன்ற விவரங்களும் தெரிவதில்லை. தெளிவான தரவுகள் இல்லாதபோது பாதுகாப்பான சுகாதாரமான வாழிடத்துக்கான திட்டமிடலையும் செய்யமுடியாமல் போகின்றது. 

விநியோகிக்கும் தண்ணீரை வைத்துத் தோராயமாகவே கழிவு உற்பத்தி கணக்கிடப்படுகிறது. ஆனால், அரசு மட்டுமா நீர்விநியோகம் செய்துகொண்டிருக்கிறது, தனியார் விநியோகஸ்தர்களிடம் பெறுகிறார்கள், நிலத்தடி நீரைச் சுயமாக எடுத்துப் பயன்படுத்துகிறார்கள். இந்தத் தண்ணீரில் உற்பத்தியாகும் கழிவுகள் எவ்வளவு, அவையும் அப்படியேதான் திறந்துவிடப்படுகின்றன. அவற்றின் கணக்கு?

நகரத்தைத் திட்டமிடும்போது சாக்கடைகளை அமைக்கவேண்டும். அந்தச் சாக்கடைகள் கழிவு உற்பத்தியாகும் இடத்திலிருந்து கொண்டுசென்று அப்படியே நீர்நிலையோடு இணைவதாக இருக்கக் கூடாது. அவை கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் வடிகால் ஆலைகளோடு இணைக்கப்பட வேண்டும். அங்கு முழுமையாகச் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் நீர்நிலைகளுக்கு அனுப்பப்பட்டு மீதமாகும் கழிவுகளை முறையாக அறிவியல்பூர்வமாகவும் அப்புறப்படுத்தப்பட வேண்டும். நீர்நிலைகளுக்குத் தனிப்பண்பு ஒன்றுண்டு. குறிப்பிட்ட அளவு கழிவுகளை அவையே சுத்தம் செய்துகொள்ளும், அந்த அளவு அத்துமீறப்படும்போது சுயத்தை இழந்து இறக்கத் தொடங்குகின்றன. அப்படியொரு நிலைக்குக் கொண்டு போகாமலிருக்க இந்தச் செயல்முறை உதவிசெய்யலாம்.

இதை நாம் செய்யாததால் பல இடங்களில் கழிவுநீர்ச் சாக்கடைக் கால்வாய் அமைப்புகள் தோற்றுப்போய் பல சிக்கல்களை அனுபவிக்கிறோம். இருந்தாலும் நம் தவறுகளிலிருந்த நாம் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. கழிவுநீர் வடிகால் அமைப்புகள் மையப்படுத்தப் பட்டிருப்பதால்தான் இதைச் சாதிக்கமுடியாமல் தவிக்கிறோம். ஆங்காங்கே உற்பத்தியாகும் கழிவுகள் அங்கேயே சேகரிக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்பட வேண்டும். மையப்படுத்தப்பட்ட இணைப்பு சுத்திகரிக்கப்பட்ட நீரைக் கொண்டு செல்வதற்கானதாக மட்டுமே இருக்கவேண்டும். இது கழிவுகளைச் சுமந்துசெல்லும் குறைந்த அளவு கழிவுநீர் பெரிய நீர்நிலைகளில் கலந்து அவற்றையும் சாக்கடையாக்காமல் காப்பாற்றும். மிகப்பெரிய குழாய்வழித் தடங்கள் அமைத்து அனைத்துப் பகுதிகளையும் இணைத்து ஓரிடத்துக்குக் கழிவுநீரைக் கொண்டுசெல்வதற்கு ஆகும் செலவும் மிக அதிகம். அதனால் பயனும் கிடைப்பதில்லை. ஒரே இடத்தில் நகரத்தின் மொத்தக் கழிவுகளையும் செயற்படுத்த முடியாது. பாதிக்கும் குறைவாகவே செய்யமுடியும். மீதி அப்படியே கலந்துவிடப்படுகின்றது. இதனால் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்படும் நீரால் பயனென்ன விளைந்திடப் போகிறது. செலவு செய்து சுத்திகரித்து வெளியேற்றப்படும் அதே நீர்நிலையில்தான் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரும் வெளியேற்றப்படுகின்றது. இதனால் அந்த நீர் மீண்டும் மாசடையத்தான் போகின்றது. இப்படி வீண்செலவு செய்யும் வகையில்தான் இப்போதைய நகரக் கட்டுமானம் அமைந்துள்ளது. அதை முற்றிலுமாக மாற்றியமைக்க வேண்டும். இது எவ்வளவு மனிதத்தன்மையற்ற அடிப்படை அறிவற்ற செயல்!

கழிவு மேலாண்மை மற்றும் சுத்திகரிப்பில் அதிக முதலீடு தேவைப்படும். மிக முக்கியமாக அதைச் செயற்படுத்த, கழிவுநீரை வெளிக்கொணர, சுத்திகரிக்க நிதியுதவி வேண்டும். அதற்காகும் செலவுகளை, அதிகமான கழிவுகளை வெளியேற்றும் மேல்தட்டு மக்களே தர மறுக்கும்போது அதன் செலவைத் தாக்குப்பிடிப்பது இயலாமல் போகும். இப்போது இந்தியாவிடம் 30% கழிவுகளை சுத்திகரிக்கத் தகுந்த நிலையங்கள் இருக்கின்றன. அதாவது தோராயமாகப் போடப்பட்ட கழிவு உற்பத்திக் கணக்குப்படி. அந்தப் பதிவில்கூட குடிசைப் பகுதிகள், புறம்போக்கு நிலக் குடியிருப்புகள் போன்றவற்றிலிருந்து வெளியேறிய கழிவு அளவு பதிவுசெய்யப்படவில்லை. ஏனோ அதைப் பதிவுசெய்ய எப்போதும் மறந்துவிடுகிறார்கள். 30% கழிவுகளைச் சுத்திகரிக்க அமைக்கப்பட்ட நிலையங்களிலும் பெரும்பாலான ஆலைகள் மின் உற்பத்திக்கும் தேவைப்படும் வேதிமங்களுக்கும் அதிகச் செலவு ஆவதாகக் கூறி செயலற்றுக் கிடக்கின்றன. அப்படியே அவை செயல்பட்டாலும் அவற்றை ஆலைகளுக்குக் கொண்டுசெல்ல குழாய்வழிப் பாதைகள் அமைக்கப்படவேண்டும். அதில்லாமல் அந்த ஆலைகளைச் செயல்படுத்துவது சாத்தியமில்லை. ஆனால், நம் நகரங்களில் இருக்கும் கழிவுநீர்க் குழாய்களே உடைந்தோ சிதைந்தோ மிகப் பழையவை மட்டுமே இருக்கின்றன. முதலில் அவற்றைப் புதிப்பிக்க வேண்டும். அப்போது அவற்றின் இணைப்புகளை மையப்படுத்தப்பட்டதாக இல்லாமல் பரவலாக ஆங்காங்கேயே ஆலைகள் அமைத்து அவற்றோடு இணைக்கப்பட வேண்டும்.

முதலில்: மறுதிட்டமிடல் வேண்டும்

100 சதவிகித கழிவுநீரையும் சேகரிக்கவும் சுத்திகரிக்கவும் ஏற்றவாறு திட்டமிடாதவரை, நீர்நிலை மாசுபாடுகளும் அதனால் ஏற்படும் தண்ணீர்ப் பற்றாக்குறையையும் அதைப் பயன்படுத்திக் கொள்ளும் தனியார் தண்ணீர் விநியோக நிறுவனங்களையும், ஏழைகளின் வாழ்வைச் சிதைத்துக் கொண்டிருக்கும் தண்ணீர் மாஃபியாக்களையும் கட்டுப்படுத்தவே முடியாது. 

இரண்டாவது: சுத்திகரிப்பு நிலையங்கள் அமைவிடம்

சேகரிக்கப்படும் கழிவுநீர் செயல்முறையில் ஈடுபடுத்தப்பட்ட பின்னர் நீர்நிலைகளில் வெளியேற்றத் தகுந்தவாறும், செயல்படுத்தப்படாத கழிவுநீர் அதில் கலக்காதவாரும் அமைக்கப்பட வேண்டும். நகரின் சூழலியல் பிரச்னைகளைப் புரிந்துகொள்ள முதலில் அங்கு உற்பத்தியாகும் கழிவுகள் எங்கு செல்கின்றன என்பதைக் கவனிக்கவேண்டும். அதைக் கவனிக்காமல் இப்போது செய்துகொண்டிருப்பது போல் எங்கு நமக்கு வசதியோ அங்கு திறந்துவிடுவது ஆரோக்கியமான நடைமுறையல்ல. நாம் என்ன செய்ய வேண்டுமென்பதைப் பற்றி ஆலோசிப்பதே இல்லை. கட்டுமானங்களைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். அதன் விளைவாகச் சூழலியல் சீர்கேடுகளும் புலி வாலைப் பிடித்ததுபோல் முடிவே இல்லாமல் நம்மையே சுற்றிக்கொண்டிருக்கின்றது.

சரி இதையெல்லாம் செய்யலாம். ஆனால் அதற்கு நிதி முதலீடு வேண்டுமே. இவ்வளவையும் செய்யுமளவுக்கு அரசாங்க கஜானாவில் நிதியில்லை என்றுகூறித் தனியார் பங்கினைத் தேடுவார்கள். 

இத்தனையையும் செய்திடத் தனியார் முதலீடு இருந்தால்தான் முடியுமா?

இல்லை. தனியார் உதவியில்லாமலே இதைச் சாதிக்கமுடியும். நாளொன்றுக்கு 40,000 மில்லியன் லிட்டர் கழிவு உற்பத்தியானால், அதைச் சுத்திகரிக்கத் தேவையான உபகரணங்களோடு ஒரு ஆலை அமைக்கச் சுமார் 1,80,000 கோடி செலவாகும். ஜவஹர்லால் நேரு தேசிய நகரப் புதுப்பித்தல் திட்டத்தில் 50,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதோடு நதிகள், ஏரிகள் மற்றும் பல நீர்நிலைகளை மீட்டெடுக்கப் பல திட்டங்களின்கீழ் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அவற்றைப் பயன்படுத்தலாம். அதுபோகப் பராமரிப்புச் செலவுகளை மக்களின் தலையிலேயே கட்டக் கூடாது. பற்பல சலுகைகளோடு வந்தமர்ந்து நம் நீர்நிலைகளையே பயன்படுத்திக்கொண்டு அவற்றையே நாசமாக்கிக் கொண்டிருக்கும் பல்லாயிரம் தொழிற்சாலைகளிடம் கேட்கலாம். அவை வெளியேற்றும் கழிவுகளைப் பொறுத்து கட்டணங்களை வசூலித்தால் அதைப் பராமரிப்பு மற்றும் செயல்படுவதற்கான செலவுகளுக்குப் பயன்படுத்த முடியும். 

வழக்கத்துக்கு மாறாகப் புதிய சிந்தனைகளைத் தோற்றுவிப்பதில்தான் தீர்வுகள் மறைந்திருக்கின்றன. கழிவுகளை பயனற்றதாகப் பார்க்காமல் அவற்றைப் பொருளாதார ரீதியாகவும் பயன்படுத்த முயற்சி செய்யவேண்டும். அது நீர்நிலைகளைச் சாகடித்துக் கொண்டிருக்கும் மிகப்பெரிய பிரச்னைக்குத் தீர்வாக அமையும். கழிவு மேலாண்மைக்கு நாம் எப்போதும் குறைவாகவே செலவழிக்கிறோம். ஆனால், நீராதாரத்தைச் சீரழித்துப் பற்றாக்குறைக்கு வழிவகுத்து, தண்ணீர்த் திருட்டு வரை அனைத்துக்கும் தொடக்கப்புள்ளி இந்தக் கழிவுகளை நாம் முறையாக மேலாண்மை செய்யாததே. ஆம், நாம் அனுபவிக்கும் சிரமங்களுக்கு மாஃபியா கும்பல்களோ தனியார் நிறுவனங்களோ காலநிலை மாற்றமோ காரணமில்லை. அவையாவையும் உற்பத்திசெய்த அரசு நிர்வாகங்களின் தொலைநோக்குச் சிந்தனையற்ற திட்டமிடலே காரணம். ஆம், முக்கியமாகக் கவனிக்கவேண்டிய பெரிய பிரச்னை அதுதான். நகரங்களை மறுகட்டுமானம் செய்யுங்கள், தண்ணீரைக் காப்பாறுங்கள்.