Published:Updated:

தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 9 - பாசனத்துக்கு மேட்டூர் அணை... பாரம்பர்யத்துக்குக் கல்லணை...

தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 9 - பாசனத்துக்கு மேட்டூர் அணை... பாரம்பர்யத்துக்குக் கல்லணை...
பிரீமியம் ஸ்டோரி
News
தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 9 - பாசனத்துக்கு மேட்டூர் அணை... பாரம்பர்யத்துக்குக் கல்லணை...

தண்ணீர்‘பொறிஞர்’ அ.வீரப்பன் - தொகுப்பு: த.ஜெயகுமார் - படங்கள்: க.தனசேகரன், தே.தீட்ஷித்

தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 9 - பாசனத்துக்கு மேட்டூர் அணை... பாரம்பர்யத்துக்குக் கல்லணை...

மிழக நீர்வளங்களின் முக்கியத்துவமும், அவற்றின் அழிவும், மீட்டுருவாக்கமும், அதைச் சார்ந்த அரசியல் பிரச்னைகளைப் பற்றியும் பேச இருக்கிறது, இத்தொடர். நீர்வளங்களைப் பாதுகாக்கவும் அதை மீட்டெடுக்கவும் தூண்டுகோலாக இந்தப் பகுதி அமையும்.  

தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 9 - பாசனத்துக்கு மேட்டூர் அணை... பாரம்பர்யத்துக்குக் கல்லணை...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தமிழகத்தின் வரலாற்றோடும் பாரம்பர்யத்தோடும் வாழ்வியலோடும் இரண்டறக் கலந்தது, காவிரி ஆறு. தமிழகத்தில் ஓடும் பெரிய ஆறுகளில் பரந்து விரிந்தது காவிரி. இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணைகள்தான் இன்று தமிழகத்தின் நீர் மேலாண்மையையும், பாசனத்தையும் பறைசாற்றுகின்றன. அந்த அணைகளில் ஒன்றுதான், சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணை.

இந்த அணை உருவான பின்னணி குறித்துப் பார்ப்போம்.  ‘தம்முடைய தலைமுறைக்கு உதவாது’ என்று தெரிந்தும், தமிழகம் செழிப்பதற்காக ஆங்கிலேயர் ஒருவரால் பிரமாண்டமாகக் கட்டப்பட்டதுதான், ‘ஸ்டான்லி நீர்த்தேக்கம்’ என்று அழைக்கப்படும் மேட்டூர் அணை. இதைக் கட்டியவர், ‘ராயல் இன்ஜீனியர்’ கர்னல் டபுள்யூ.எம்.எல்லிஸ். இன்றைக்கு 48 ஆயிரம் கோடி ரூபாய் கொட்டினால்கூடக் கட்ட முடியாத பிரமாண்டத்தை, அன்றைக்கு 4,80,00,000 (4.80 கோடி) ரூபாயில் கட்டி முடித்திருக்கிறார், எல்லிஸ். 

தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 9 - பாசனத்துக்கு மேட்டூர் அணை... பாரம்பர்யத்துக்குக் கல்லணை...

மேட்டூர் அணையை இதுவரை இரண்டு முறை மின்னல் தாக்கியும், அணைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. இதிலிருந்தே, அணையின் கட்டட வலிமையை நாம் புரிந்துகொள்ள முடியும். காவிரியாற்றின் செழிப்பை உணர்ந்த அன்றைய ஆங்கிலேய அரசு, காவிரியின் குறுக்கே அணை கட்ட முடிவு செய்தது. 1834-ம் ஆண்டிலேயே இதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், 1925-ம் ஆண்டு ஜூன் மாதம்தான் அணை கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. மைசூர் சமஸ்தானத்திடம் போட்டுக்கொண்ட ஒப்பந்தபடி... கர்நாடக மாநிலத்தில் மைசூருக்கு அருகே கிருஷ்ணராஜ சாகர் அணையையும், தமிழகத்தில் மேட்டூர் அணையையும் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. மேட்டூர் அணை கட்டும் பணி, 1925-ம் ஆண்டில் தொடங்கப்பட்டு 1934-ம் ஆண்டில் முடிக்கப்பட்டது. கிருஷ்ணராஜ சாகர் அணை கட்டும் பணி, 1911-ம் ஆண்டில் தொடங்கப்பட்டு 1931-ம் ஆண்டு முடிக்கப்பட்டது.

மேட்டூர் அணை கட்டுவதற்கு உத்தரவிட்ட அப்போதைய ஆங்கிலேய அரசின் சென்னை மாகாண கவர்னர் ஸ்டான்லி முக்கியமானவர். அவரின் பெயரால்தான் இந்த அணை, ஸ்டான்லி நீர்த்தேக்கம் என்று அழைக்கப்படுகிறது. வடக்கு தெற்காகச் சீதாமலை, நாகமலைக்கு இடையே கடல்போலக் காட்சியளிக்கும் மேட்டூர் அணையைக் கட்டிய பொறியாளர் எல்லிஸ், ‘மேட்டூர் அணையின் சிற்பி’ என்று இன்றும் புகழப்படுகிறார்.  

தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 9 - பாசனத்துக்கு மேட்டூர் அணை... பாரம்பர்யத்துக்குக் கல்லணை...

இந்திய அளவிலான பெரிய அணைகளில் ஒன்றான இதன் உயரம் 214 அடி. இதில் 120 அடி வரை அதாவது 93 டி.எம்.சி தண்ணீரைத் தேக்கலாம். தண்ணீர் தேங்கும் பகுதியின் பரப்பளவு 94 சதுர கிலோமீட்டர். சுண்ணாம்பு, சிமென்ட், கற்கள் ஆகியவற்றைக் கொண்டு இந்த அணை கட்டப்பட்டுள்ளது. நேர்கோட்டில் பார்க்கும்போது, இந்த அணையின் சுற்றுச்சுவர்கள் அதிகபட்ச உயரத்தைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றன. அணைக்கு வரும் உபரி நீர், தானாகவே வெளியேறிச் செல்லும்வகையில் அற்புதமான கட்டுமானப்பணியைக் கொண்டது, இந்த அணை. எந்தக் காலத்திலும் அணைக்கோ, அணை சார்ந்த கட்டுமான அமைப்புகளுக்கோ பாதிப்பு ஏற்படாத வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த அணையின் மூலம் சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. குறுவைச் சாகுபடிப் பருவத்தில், 4 லட்சம் ஏக்கர் பரப்பும், சம்பாச் சாகுபடிப் பருவத்தில் 12 லட்சம் ஏக்கர் பரப்பும் பயன்பெறுகின்றன. மேலும், பல்வேறு கூட்டுக் குடிநீர்த் திட்டங்களும் அமைக்கப்பட்டுள்ளன. 240 மெகாவாட் மின்சார உற்பத்தியும் நடைபெறுகிறது.

கல்லணை 

காவிரி என்றால் கல்லணைதான் பலருக்கும் ஞாபகத்துக்கு வரும். உலக அளவில் முதன்முதலில் கட்டப்பட்ட அணை என்ற பெயர் பெற்றது. இந்த அணை, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கட்டப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதேபோன்று கல்லணையைக் கரிகாலன் என்ற மன்னர்தான் கட்டினாரா என்பதும் இன்றுவரை விவாதத்துக்குரியதாகவே உள்ளது. ஏனென்றால் பண்டைய இலக்கியங்களில் கரிகாலன்தான் கட்டினார் என்பதற்கு ஆதாரமாக எந்தத் தகவலும் இல்லை. பிற்கால இலக்கியங்களில் கரிகாலன் காவிரிக்குக் கரை அமைத்தார் என்பதற்கான குறிப்புகள் உண்டு. கரந்தை செப்பேடுகள், ‘கரிகாலன் காவிரியின் கரையை உயர்த்திப் பலப்படுத்தினான்’ என்று சொல்கின்றன. கல்லணை என்பது தற்போது உள்ள படுக்கை அணைகளைப்போல, ஆற்றின் குறுக்காகக் கட்டப்பட்ட தனி அணை அல்ல. அது காவிரியின் இடது கரையின் மண் அணைத் தொடர்ச்சியாகக் கற்களால் அமைக்கப்பட்ட கரையாகும். இதற்குக் கல்லணை என்ற பெயர் பிற்காலத்தில் ஏற்பட்டிருக்கலாம்.

பொதுவாக ஆற்றின் குறுக்கே கட்டப்படுகிற அணைகள், கற்களை ஒன்றுக்குப் பக்கத்தில் ஒன்றாகப் பரப்பியும் ஒன்றின்மேல் ஒன்றாக வைத்து உயர்த்தியும் அவற்றுக்கிடையில் சுண்ணாம்பு அல்லது சிமென்ட் போன்ற ஒட்டும் பொருள்களைப் பயன்படுத்தியும் கட்டப்படுகின்றன. ஆனால், கல்லணையானது தற்போதுள்ள அணைகளைப் போன்று அமைக்கப் பட்டதல்ல. பல அளவுகளில் பல வடிவமுள்ள கற்களைத் தொடர்ந்து குவியல் குவியலாகக் கொட்டி அமைக்கப்பட்டதாகும். இதை, ‘ஒன்றன்மீது ஒன்றாக குவிக்கப்பட்ட கற்கள்’ (Dumping of rock fill stones) என்று அழைப்பர். இப்படிக் கற்களைக் கொட்டி அணைகள் கட்டுவதை அமெரிக்காவில், கலிஃபோர்னியா மாகாணத்தில் 19-ம் நூற்றாண்டின் மத்தியில்தான் செயல்படுத்தியுள்ளனர். இந்த உத்தியை ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் பயன்படுத்தினர் என்பது பெருமைக்குரிய செயல். 

தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 9 - பாசனத்துக்கு மேட்டூர் அணை... பாரம்பர்யத்துக்குக் கல்லணை...

கற்களைக் குவியல்குவியலாகக் கொட்டும் பணியும் ஒரே தடவையில் தொடர்ந்து செய்து முடிக்கப் படவில்லை. பல ஆண்டுகள், பல வெள்ளக் காலங்களின் முடிவில் தேவைக்கேற்ப வெவ்வேறு காலக் கட்டங்களில் கற்கள் கொட்டப் பட்டிருக்கின்றன. அணையின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைப் பார்க்கும்போது கற்களால் ஆன படுக்கையின்மேல் மண் அல்லது மணல் படுக்கைகளும், மீண்டும் அந்த மணல் படுக்கைகளின் மேல் கற்களால் ஆன படுக்கைகளும் மாறி மாறிக் காணப்படுகின்றன.

கற்களைக் குவியலாகக் கொட்டும் பணி தொடர்ந்து செய்யப்படவில்லை என்பதும் பல பருவங்களில் பல ஆண்டுகளில் விட்டுவிட்டுத் தேவைக்கேற்ப செய்யப்பட்டுள்ளன (இந்த விவரங்களைத் தற்போதுதான் ஆய்வுத் துறைகள் கண்டறிந்துள்ளன).
 
தொழில்நுட்பம் வெகுவாக வளர்ந்துவிட்ட இந்தக் காலகட்டத்தில் நவீனத் தொழில்நுட்ப அறிவின் பின்னணியில், கல்லணையைப் பார்க்கும்போது பெரும் வியப்பு ஏற்படுகிறது. அது கட்டப்பட்ட காலத்தின்போது கரையின் தொடர்ச்சியாகவே இதைக் கருதியிருக்கக் கூடும். அதனால்தான் அப்போது இந்த அணையைப்பற்றிய தொழில்நுட்பக் குறிப்புகள் பதிவு செய்யப்படவில்லை.

கல்லணையின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பின்னாளில் ஆங்கிலேயர்களால் கோதாவரி ஆற்றின் குறுக்கே தவளேஸ்வரம் என்ற இடத்தில் 6.4 கிலோமீட்டர் (4 மைல்) நீளத்தில் அணை கட்டப்பட்டது. இந்த அணை கட்டப்பட்ட பின்னணி சுவாரஸ்யமானது.  

தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 9 - பாசனத்துக்கு மேட்டூர் அணை... பாரம்பர்யத்துக்குக் கல்லணை...

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 1833-ம் ஆண்டு மிகப்பெரிய பஞ்சம் வந்தது. இதைப் ‘பெரும் பஞ்சம்’ (Great Famine) என்று அரசு அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. இந்தப் பஞ்சத்தால் பலர் உயிரிழந்தனர். பெரும்பான்மையான மக்கள் இடம் பெயர்ந்தனர். இதுகுறித்து ஆய்வு செய்யுமாறு சென்னை மாகாண அரசாங்கம், அப்போது ஆங்கிலேய அரசில் தலைமைப் பொறியாளராக இருந்த ‘சர் ஆர்தர் காட்டன்’ என்பவரை அனுப்பியது. அவர் மிகக் குறுகிய காலத்தில் ஆய்வு செய்து... ‘வளம் நிறைந்த கோதாவரி ஆற்று நீர், வீணாகக் கடலுக்குச் சென்று விடுகிறது. அந்தத் தண்ணீரைத் தவளேஸ்வரம் என்ற இடத்தில் தடுத்து நிறுத்தி 12 அடி உயரத்துக்கு அணையைக் கட்டி சேமித்தால், அந்தப் பகுதியில் விவசாயம் செழிக்கும். எதிர்காலத்தில் பஞ்சமும் வராது’ என்று அறிக்கை கொடுத்தார். இந்த அணையை அன்றைய நவீன முறைப்படி கற்களை அளவாக வெட்டிச் சரி செய்து சுண்ணாம்புக் காரை வைத்து, ஒரு ஓவர் ஃபால் அணையாகத்தான் கட்ட முடிவு செய்து அறிக்கை அனுப்பினார்.

ஆனால், இந்த முறையில் அணையைக் கட்டவேண்டும் என்றால், கற்களின் முனையை வெட்டிச் சரி செய்ய இரண்டாயிரம் கல் தச்சர்கள், இரண்டு ஆண்டுகள் வேலை செய்ய வேண்டி வரும் என்று உணர்ந்தார். அப்போது அவருக்குத் தோன்றியதுதான் கல்லணையின் உள்தோற்றம். நீண்ட நெடுங்காலம் வெள்ளத்தைத் தாங்கி நிலைத்து நிற்கும் கல்லணையைக் கட்ட பயன்படுத்தப்பட்ட டம்பிங் ஆஃப் ராக் ஃபில் என்ற தொழில்நுட்பத்தையே பயன்படுத்தி அணை கட்ட முடிவு செய்தார். இந்த முறையில் கற்களின் முனையை உடைக்காமல், அந்தந்த கற்களின் வடிவங்களிலேயே பயன்படுத்த திட்டமிட்டு, அந்த விவரங்களை அறிக்கையாகத் தயாரித்து அரசின் அனுமதிக்காக அனுப்பினார்.

அப்போதைய சென்னை மாகாண அரசும் கல்லணையை முன்மாதிரியாகக் கொண்டு செயல்படுத்தும் அணைத்திட்டதுக்கு அனுமதியளித்தது. அணையைக் கட்டி முடிக்கப்பட்ட பிறகு, அந்தப் பகுதியில் நெல், வாழை என்று விவசாயம் செழித்தது. அரசுக்கும் வருவாய் உயர்ந்தது. இன்றுவரை கோதாவரி பகுதியில் பஞ்சம் இல்லை. இதற்கு ஆர்தர் காட்டன் கட்டிய தவளேஸ்வரம் அணைக்கட்டே (Sir Arthur Cotton Barriage) காரணம். அதற்கு முன்மாதிரியாக இருந்தது, தமிழர்கள் கட்டிய கல்லணை.

- பாயும்  

தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 9 - பாசனத்துக்கு மேட்டூர் அணை... பாரம்பர்யத்துக்குக் கல்லணை...

மேட்டூர் அணை விவரம்

*மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்ட நாள்- 21.8.1934

*அணைகட்ட ஆன செலவு - 4.80 கோடி.

*அணையின் நீளம் - 5,300 அடி

*அணையின் கொள்ளளவு - 93.50 டிஎம்சி.

*அணையின் உயரம் - 214 அடி

*அணையின் அகலம் - 171 அடி

*அணையின் நீர் சேமிப்பு உயரம் - 120 அடி

*அணையின் நீர்ப்பிடிப்புப் பரப்பளவு - 94 சதுர கிலோமீட்டர்.

*பாசனப் பரப்பு - 16 லட்சம் ஏக்கர்

*பயன்பெறும் மீனவக்குடும்பங்கள் - 4,000

*மேட்டூர் அணையிலிருந்து வெளியே வரும் காவிரி, அதே பெயரில் 106 கிலோமீட்டர் தூரம் ஓடுகிறது.

*கிளை ஆறுகள் கொள்ளிடம், பொன்னியாறு, கல்லணை, கால்வாய், வெட்டாறு, வெண்ணாறு, குடமுருட்டி என்ற பெயரில் பல ஆறுகளாக 694 கிலோமீட்டர் தூரம் ஓடுகின்றன.

*வாய்க்கால் பாசனம் - 1,904 கிலோமீட்டர் 

சிக்கனமாகப் பாசனம் செய்வது எப்படி?

இந்தியாவில் அதிகத் தண்ணீர் வளமுள்ள மாநிலம் எது?


பஞ்சாப் மாநிலம். ஐந்து நதிகள் ஆண்டு முழுவதும் செவ்வனே தண்ணீர் வழங்கி வருகிறது. ஆற்றுத் தண்ணீரை முறையாகப் பாசனக் கால்வாய்கள் மூலம் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் கிடைக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குழாய் பதித்து வயல்களில் தண்ணீர் பாய்ச்சுகிறோம். இதை முறையாகப் பராமரிப்பது எப்படி? எவ்வளவு நாள்களுக்கு இந்தக் குழாய்கள் தாங்கும்?

பி.வி.சி குழாய்கள் பதித்து வயல்களுக்குப் பாசனம் செய்வது சிறந்த நீர் சேமிப்புக்கான சிக்கனமான முறை. கால்வாய் (வாய்க்கால் என்றும் அழைப்பர்) அமைத்துத் தண்ணீர் பாய்ச்சும்போது தண்ணீர் ஆவியாகும். மண்ணிலும் உறிஞ்சப்படும். குழாய் மூலம் பாசனம் செய்யும்போது நீர் ஆவியாதல் பெரிதும் தடுக்கப்படுகிறது. நீர் மேலாண்மைக்கு மிகச் சிறந்த வழிமுறை இது. இந்தக் குழாய்களில் மண்ணோ, கற்களோ, இலை தழைகளோ அடைத்துக் கொள்ளாமல் பராமரிக்க வேண்டும். சரியாகப் பராமரித்தால், குறைந்தபட்சம் 50 ஆண்டுகளுக்கு இந்தக் குழாய்கள் உழைக்கும்.

தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 9 - பாசனத்துக்கு மேட்டூர் அணை... பாரம்பர்யத்துக்குக் கல்லணை...

கேள்விகள் கேட்கலாம்! 

ண்ணீர் வளம், பாசன நுட்பங்கள்... குறித்த உங்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கவுள்ளார், மூத்த பொறியாளர் அ.வீரப்பன். கேள்விகளை,  தண்ணீர்-கேள்வி பதில் பகுதி, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமும், pasumaivikatan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்.