Published:Updated:

ஊருக்கு வழிகாட்டும் உத்தரமேரூர் பேரூராட்சி!

ஊருக்கு வழிகாட்டும் உத்தரமேரூர் பேரூராட்சி!
பிரீமியம் ஸ்டோரி
News
ஊருக்கு வழிகாட்டும் உத்தரமேரூர் பேரூராட்சி!

தண்ணீர் ததும்பும் குளங்கள்... குப்பைக் கொடுக்கும் வருமானம்!முயற்சிபா.ஜெயவேல் - படங்கள்: தி.குமரகுருபரன்

ஊருக்கு வழிகாட்டும் உத்தரமேரூர் பேரூராட்சி!

ல்லவர்களும் சோழர்களும் ஆண்ட வளமான பூமி, உத்தரமேரூர். குடவோலை முறையில் தேர்தல், தங்க மேலாண்மை, நீர் மேலாண்மை உள்ளிட்ட பல விஷயங்களை உலகுக்கு உரத்துச் சொன்ன வரலாற்றுச் சிறப்புமிக்கப் பூமி, உத்தரமேரூர். இப்பகுதிக்குச் செழிப்பு சேர்ப்பது, செய்யாற்றிலிருந்து வரும் தண்ணீர்தான்.

இதற்காக, பதினோரு கிலோமீட்டர் தூரத்துக்குக் கால்வாய் வெட்டப்பட்டுள்ளது. பத்தாம் நூற்றாண்டில் ஆட்சி செய்த சோழ மன்னர்கள் நீரைச் சேமிப்பதற்காக, ஏராளமான குளங்களை இப்பகுதியில் அமைத்துள்ளனர். ‘வேலைக்கு உணவு’ என்ற முறையிலும் மக்களைக் கொண்டு ஏகப்பட்ட குளங்கள் வெட்டப்பட்டுள்ளன. இப்பகுதியில் தட்டார்குளம், பாப்பான்குளம், செட்டிகுளம், வண்ணாரகுளம் எனக் குளங்களின் பெயர்கள் மூலம், பல்வேறு சமூகங்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் உள்ளன.

ஊருக்கு வழிகாட்டும் உத்தரமேரூர் பேரூராட்சி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இவ்வளவு சிறப்புமிக்க குளங்களில் பெரும்பாலானவை பராமரிப்பில்லாமலும் ஆக்கிரமிப்பாலும் அழிந்துவருகின்றன. இவ்வாறு குளங்கள் அழிவதைத் தடுத்து அவற்றைத் தூர்வாரி பயன்பாட்டுக்குக் கொண்டு வந்திருக்கிறார், உத்தரமேரூர் பேரூராட்சியின் செயல் அலுவலர் மா.கேசவன்.
ஒரு காலைப்பொழுதில் கேசவனை அவரது அலுவலகத்தில் சந்தித்தோம். குளங்களைப் பற்றிப் பேசியதுமே உற்சாகமான அவர், தூர்வாரப்பட்ட குளங்களுக்கு நம்மை அழைத்துச் சென்று காட்டினார். முதலில் சென்றது, மணித்தோட்டம் பகுதியில் உள்ள சுப்பராயக் குளம். தூர்வாரப்பட்டு லேசான மழையின் உபயத்தால் அக்குளத்தில் தேங்கியிருந்த நீரை ஆடுகள் பருகிக் கொண்டிருந்தன. அப்பகுதியில் விவசாயப்பணியில் இருந்த சக்கரபாணியிடம் பேசினோம்.

ஊருக்கு வழிகாட்டும் உத்தரமேரூர் பேரூராட்சி!

“இந்தக்குளத்துலதான் சின்ன வயசுல குடிக்கவும், சமைக்கவும் தண்ணீர் எடுப்போம். பயணம் போறவங்க சுமையைப் பக்கத்துல இருக்குற சுமைதாங்கி கல்மேல வெச்சிட்டு, இங்க உக்காந்து சாப்பிடுவாங்க. போர்வெல் அமைக்க ஆரம்பிச்ச பிறகு குளங்களை எல்லோரும் மறந்துட்டாங்க. கிட்டத்தட்ட 25 வருஷத்துக்கு மேல இந்தக் குளத்தை யாரும் பயன்படுத்தலை. குளம் இருந்த அடையாளமே தெரியாம தூர்ந்து போயிருச்சு. இப்ப இருக்குற பசங்களுக்கு இங்க குளம் இருந்ததே தெரியாது. போன மாசம்தான் இந்தக் குளத்தைத் தூர்வாரினாங்க. அதுக்கப்புறம் லேசா பெய்த மழைக்கே தண்ணீர் தேங்க ஆரம்பிச்சுடுச்சு. இனி, ஆடு மாடுக குடிக்கத் தண்ணீர் பிரச்னை இருக்காது. குளத்துக்குப் பக்கத்துலேயே என்னோட நாலு ஏக்கர் நிலம் இருக்குது. குளத்தைத் தூர்வாரினதால இந்தப் பகுதியில நிலத்தடி நீர் உயரும். விவசாயத்துக்கும் தண்ணீர் பிரச்னை இருக்காது” என்றார்.

ஊருக்கு வழிகாட்டும் உத்தரமேரூர் பேரூராட்சி!

அதே பகுதியில் உள்ள மற்றொரு குளமான செட்டிகுளமும் தூர்வாரப் பட்டுள்ளது. அதுகுறித்துப் பேசிய, பட்டஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த சண்முகம், “ராஜாக்கள் காலத்துல இந்தக் குளத்தை வெட்டினதாகச் சொல்றாங்க. 1968-ம் வருஷம் பஞ்சம் வந்த சமயத்துல இந்தக் குளத்துல தண்ணீர் வத்திப்போச்சு. குடிக்கக்கூடத் தண்ணி இல்லாமப்போனதால, இந்தக் குளத்துக்குள்ளேயே ஒரு கிணறு வெட்டி, அதுல இருந்து தண்ணீர் எடுத்துதான் குடிக்கப் பயன்படுத்தினோம். அப்படிப்பட்ட குளம் பராமரிப்பில்லாம தூர்ந்து போயிடுச்சு. இப்போ பேரூராட்சி செயலாளர் கேசவன் முயற்சியால குளத்தைத் தூர்வாரியிருக்காங்க. ஓரளவுக்கு இந்தப்பகுதியில தண்ணீர் பிரச்னை தீர்ந்துடும்” என்றார்.

ஊருக்கு வழிகாட்டும் உத்தரமேரூர் பேரூராட்சி!

பொன்மேடு பகுதியைச் சேர்ந்த லட்சுமணன், “உத்தரமேரூரில் நாகமேடு, நாரைமேடு, பொன்மேடு, தட்டான் மேடு, பாரசீகமேடுனு மொத்தம் 22 மேடுகள் இருந்தன. மேடு என்றால் ‘மேன்மை பொருந்திய நிலம்’னு அர்த்தம். இந்தப்பகுதியில் செட்டியார்கள் செல்வந்தர்களாக வாழ்ந்த இடம். அதனால, இந்தக் குளத்துக்குச் செட்டிகுளம்னு பேர் வந்துச்சு. ஆசாரிகள், தங்கத்தைச் சேகரிச்சு, பக்கத்தில் உள்ள தட்டான் குளத்தில் சுத்தம் செஞ்சு, பக்கத்துல இருக்குற கொள்ளை மேட்டுக்குக் கொண்டு போய் ஆபரணங்கள் செய்வாங்களாம். அதனாலதான் இந்தப் பகுதிக்குப் பொன்மேடுனு பேர் வந்துச்சுனு சொல்றாங்க. தொடர்ந்து பராமரிப்பு இல்லாமபோனதால, இந்தச் செட்டிகுளம் தூர்ந்து போச்சு. இப்போதான் தூர்வாரிட்டுருக்காங்க” என்றார்.

ஊருக்கு வழிகாட்டும் உத்தரமேரூர் பேரூராட்சி!

குளங்களைத் தூர்வாரும் பணிகள் குறித்துக் கேசவனிடம் பேசினோம். “நான் இந்தப் பகுதிக்குப் பொறுப்பேற்றபோது, தண்ணீர் பிரச்னை அதிக அளவில் இருந்தது. சோழர்கள் காலத்தில் பத்தாம் நூற்றாண்டில் வெட்டப்பட்ட பல குளங்கள் காணாமல் போய் இருந்தன. இங்கிருக்கும் வயசானவர்கள் சொன்ன பிறகுதான், சில குளங்கள் இருந்ததே தெரியவந்தது. பேரூராட்சி வரைபடத்தில்கூடச் சில குளங்கள் காணாமல் போய்விட்டன. அவை கோடுகளாக அடையாளப் படுத்தப்பட்டிருந்தன.

ஊருக்கு வழிகாட்டும் உத்தரமேரூர் பேரூராட்சி!

தொடர்ந்து, கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாக ‘அ’ பதிவேடு கொண்டு குளங்களைத் தேட முயற்சி செய்தபோது, இந்தப் பேரூராட்சியில், 48 குளங்கள் இருப்பது தெரியவந்தது. கடந்த ஆண்டிலிருந்து குளங்களைத் தூர்வார ஆரம்பித்தோம். பொதுமக்களிடம் நல்ல ஒத்துழைப்பு இருந்ததால், சென்ற ஆண்டு மட்டும் 21 குளங்களைத் தூர்வாரி இருக்கிறோம். இரண்டு குளங்களைப் புதிதாக வெட்டி இருக்கிறோம். தண்ணீர் உள்ளே வருவதற்கும், வெளியேறுவதற்கும் வழி செய்துள்ளோம். இந்த ஆண்டுப் பத்துக் குளங்களைத் தூர்வாரத் திட்டமிட்டிருக்கிறோம். தற்போது, இரண்டு குளங்களுக்கு நிதியுதவி கிடைத்திருக்கிறது. இந்த ஆண்டு இதுவரை 6 குளங்களைத் தூர்வாரி இருக்கிறோம்.

ஊருக்கு வழிகாட்டும் உத்தரமேரூர் பேரூராட்சி!

சில குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் சிக்கல்கள் இருந்தன. அப்படிப்பட்ட இடங்களில் நீதிமன்றம் மூலமாக அனுமதி வாங்கியுள்ளோம். இக்குளங்களைத் தூர்வார யாருக்கும் டெண்டர் விடவில்லை. நேரடியாக நாங்களே பொக்லைன் வாகனங்கள் மூலம் தூர்வாருவதால், செலவு குறைகிறது. தூர்வாரும்போது மண்ணைக்கூட யாரையும் எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை.

ஊருக்கு வழிகாட்டும் உத்தரமேரூர் பேரூராட்சி!
ஊருக்கு வழிகாட்டும் உத்தரமேரூர் பேரூராட்சி!

அந்த மண்ணைக்கொண்டே கரைகளைப் பலப்படுத்தியிருக்கிறோம். உள்ளூரில் நல்ல மனிதர்கள், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தோர் எங்களுக்கு உதவுகிறார்கள். மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குளங்களில் பூங்காக்களும் அமைத்துள்ளோம். குளங்கள் தூர்வாரப்பட்டதால், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தண்ணீர் பஞ்சம் இல்லை” என்று மகிழ்ச்சியாகச் சொல்லி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு,
மா.கேசவன்,
செல்போன்: 95247 43526

திடக்கழிவு மேலாண்மை!

உத்தரமேரூர் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தையும் வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறார். அந்த இடத்துக்கும் நம்மை அழைத்துச் சென்றார், கேசவன்.

குப்பைகளைக் குவித்து வைக்கும் பகுதியில், மட்காத குப்பைகளைக் கொண்டு ராட்சத பொம்மைகள், நாற்காலிகள், அலங்காரப் பொருள்கள் என அமைத்து அப்பகுதியை அழகுபடுத்தியிருக்கிறார்கள். மரங்கள், செடிகொடிகள் என அந்த இடமே பசுமையாகக் காட்சி அளிக்கிறது. லவ் பேர்ட்ஸ், வாத்து, கோழி, முயல் போன்றவையும் வளர்க்கப்படுகின்றன.

“உத்தரமேரூர் பகுதியில் 150 வீடுகளுக்கு ஒரு பிரிவு என 34 பிரிவாகப் பணியாளர்களைப் பிரித்துள்ளோம். ஒரு நாளைக்குச் சராசரியாக 3 டன் மட்கும் குப்பை கிடைக்கிறது. அதில் மட்கக்கூடிய குப்பைகளை, ‘வின்ரோ’ முறையில் கொட்டி அதன்மீது சாணம் தெளிக்கிறோம். தினமும் தண்ணீர் தெளித்து 15 நாள்களுக்கு ஒருமுறை குப்பையைத் திருப்பிப்போடுவோம். அவை, மூன்று மாதங்களில் இயற்கை உரமாக மாறிவிடும். அதைச் சலித்துச் சேமித்து வைப்போம். தினமும் 500 கிலோ வரை இயற்கை உரம் தயாரிக்கிறோம்.

குப்பைகளைக் கொண்டு தினமும் 30 கிலோ அளவு மண்புழு உரம் தயாரிக்கிறோம். மண்புழு உரத்தை கிலோ 5 ரூபாய் எனவும், இயற்கை உரத்தை கிலோ 2 ரூபாய் எனவும் விற்பனை செய்கிறோம். குப்பைகளை வீட்டிலேயே உரமாக்கிக் கொள்ளவும் மக்களுக்குப் பயிற்சி கொடுத்து வருகிறோம். பூச்செடிகள், மூலிகைகள், மரக்கன்றுகள் ஆகியவை உற்பத்தி செய்வதற்கு நர்சரி வைத்துள்ளோம்” என்றார் கேசவன்.

ஐ.எஸ்.ஓ சான்றிதழ்!

கேசவன் இதற்குமுன் பணியாற்றிய திருப்போரூர், அச்சிறுப்பாக்கம், இடைக்கழிநாடு, பெருங்களத்தூர் போன்ற பேரூராட்சிகள் மற்றும் தற்போது பணியாற்றும் உத்தரமேரூர் பேரூராட்சி என அனைத்துக்கும், ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற்றுக் கொடுத்துள்ளார். உத்தரமேரூர் பகுதிக்கு 9001, 14000 என இரண்டு தரச்சான்றுகள் வழங்கப்பட்டுள்ளன. பணியைப் பாராட்டி மாவட்ட ஆட்சியரும் கேசவனுக்குப் பல்வேறு விருதுகளைக் கொடுத்துள்ளார்.