Published:Updated:

``பணம் வேணாலும் கொடுக்குறோம்; மரத்தை எடுத்துக்குங்க!" - தென்னைகளால் டெல்டாவுக்கு நேரும் சோகம்

அப்புறப்படுத்த முடியாமல் கிடக்கிற மரங்களை அப்படியே விட்டுவிட முடியாது; அதில் வேறு மாதிரியான ஒரு சிக்கல் நிலவுகிறது.

``பணம் வேணாலும் கொடுக்குறோம்; மரத்தை எடுத்துக்குங்க!" - தென்னைகளால் டெல்டாவுக்கு நேரும் சோகம்
``பணம் வேணாலும் கொடுக்குறோம்; மரத்தை எடுத்துக்குங்க!" - தென்னைகளால் டெல்டாவுக்கு நேரும் சோகம்

தென்னை மரங்கள்தான் அவர்களுக்குப் பிள்ளைகள். ``பெத்த புள்ள சோறு போடலானாலும் வச்ச புள்ள சோறு போடும்” என நம்பியிருந்த மக்களை நிர்க்கதியாக நிறுத்தியிருக்கிறது காலம். கஜா புயல் பாதிப்புகளை  ஒரு கதையாகவோ, செய்தியாகவோ கடந்து போக முடியாத ஒரு நிலமாக டெல்டா மாவட்டங்கள் காட்சியளிக்கின்றன. புயல் கடந்த 27 நாள்களைத் தாண்டியும் சிரிப்பு, கனவு, வெளிச்சம், வாழ்க்கை என்று எல்லாவற்றையும் தொலைத்து நிற்கிற மக்கள் எப்படி மீள்வது எனத் தெரியாமல் கவலையில் இருக்கிறார்கள். 

களத்தில் சேகரிக்கிற செய்திகள் சில சமயம் கடுமையான மன உளைச்சலைத் தந்துவிடுகின்றன. கடந்த நவம்பர் மாதம் 20-ம் தேதி சென்று சந்தித்துவிட்டு வந்த பெண்ணை இருபது நாள்கள் கழித்து டிசம்பர் 10 அன்று சந்திக்க நேர்ந்தது. உடைந்த வீடு அப்படியே இருக்க, அதன் அருகில் உடைந்து விழுந்த தென்னை ஓலைகளைக் கொண்டு சிறுகுடிசை போட்டுத் தங்கியிருந்தார். என்னை அடையாளம் கண்டு கொண்டவர் ``இன்னமும் யாரும் வந்து பார்க்கல சார், எப்ப வீட்டை சரிபண்ணுவோம்னே தெரியல, வீட்ல இருக்க எந்தப் பொருளையும் இன்னமும் வெளியே எடுக்கல, அப்படியேதான் கிடக்கு" எனப் பொருள்களைக் கைகாட்டினார். அவரது வீட்டுக்குப் பின்பகுதியில் 30 தென்னை மரங்கள் விழுந்து கிடக்கின்றன. உதவிக்கு ஆட்கள் இல்லாததால் எல்லா மரங்களும் இன்னமும் அப்படியே கிடக்கின்றன. இவருக்கு மட்டுமல்ல டெல்டா மாவட்ட தென்னை மர விவசாயிகள்  எல்லோருக்கும் இருக்கிற ஒரே பிரச்னை விழுந்த மரங்களை எப்படி அப்புறப்படுத்துவது என்பதுதான். 

தோட்டத்தில் விழுந்து கிடக்கிற தென்னை மரத்தை அறுத்துச் எடுத்துச் செல்ல விவசாயிகளுக்கு முதலில் 200 ரூபாய் கொடுத்து மர வியாபாரிகள் அறுத்து எடுத்துச் சென்றிருக்கிறார்கள். சாலை ஓரத்தில் இருக்கிற மரங்களுக்கே மர வியாபாரிகள் முன்னுரிமை கொடுத்திருக்கிறார்கள். சாலைகளை விட்டு சற்று தள்ளி இருக்கிற விவசாயிகள் ``எங்களுக்கு 100 ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு மரத்தை எடுத்துச் செல்லுங்கள்” எனச் சொல்லியிருக்கிறார்கள். சாலைகளை விட்டு அதிக தூரத்தில் தோட்டம் வைத்திருக்கிற விவசாயிகள் ``எங்களுக்குப் பணமே கொடுக்க வேண்டாம் எங்களது தோட்டத்தில் இருக்கிற மரங்களை மட்டும் வெட்டி எடுத்துச் செல்லுங்கள்” எனச் சொல்லியிருக்கிறார்கள். நான்கு நாள்களாக வேண்டிய மரங்களைச் சிலருக்கு பணம் கொடுத்தும், சிலருக்குப் பணம் கொடுக்காமலும் மர வியாபாரிகள்  வெட்டி எடுத்துச் சென்றிருக்கிறார்கள். இப்போது யாரும் மரங்களை வாங்கத் தயாராக இல்லை என்பதால், தோட்டத்தில் விழுந்து கிடக்கிற மரங்கள் இன்னும் அப்படியே கிடக்கின்றன. 

அப்புறப்படுத்த முடியாமல் கிடக்கிற மரங்களை அப்படியே விட்டுவிட முடியாது; அதில் வேறு மாதிரியான ஒரு சிக்கல் நிலவுகிறது. விழுந்த தென்னை மரங்களில் மர வண்டுகள் உற்பத்தியாக ஆரம்பித்திருக்கின்றன. இவை, மரங்களை அரித்து ஒரு வகை நோய்த்தொற்றைப் பரப்பிவிடும். இந்த நோய்த் தொற்று, புயலில் தப்பித்து  நிற்கிற சில மரங்களையும் தாக்கி அவற்றையும் அழித்து விடும். மர வண்டுகள் தென்னை மரத்தின் கழுத்து பகுதியில் உருவாக்கக் கூடியவை என்பதால் இப்போதைக்கு விழுந்து கிடக்கிற மரங்களின் கழுத்துப் பகுதியை மட்டும் வெட்டி எடுத்து விவசாயிகள் தீ வைத்துக் கொண்டிருக்கிறார்கள். மற்ற பாகங்கள் அப்படியே கிடக்கின்றன. 

மரம் அறுக்கும் இயந்திரம் வைத்திருப்பவர்கள் ஒரு மரத்தை அறுத்து அதன் பகுதிகளை அப்புறப்படுத்த ஒரு மரத்துக்கு 1,500 ரூபாயிலிருந்து 2,000 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள். ஏற்கெனவே பொருளாதாரத்தின் வேர்களை இழந்துவிட்ட மக்கள், மரங்களை அப்புறப்படுத்த என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிப்போய் இருக்கிறார்கள். அரசு, புயலில் விழுந்த ஒரு தென்னை மரத்துக்கு 500 ரூபாயும், அதை அப்புறப்படுத்த 600 ரூபாய் என மொத்தம் ஒரு மரத்துக்கு 1100 ரூபாய் வழங்குவதாக அறிவித்திருக்கிறது. அந்தத் தொகையும் இதுவரை பேராவூரணி பகுதியில் இருக்கிற கிராம விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. தென்னை மரம் தவிர்த்து பணப்பயிர்களான தேக்கு மரம் மற்றும் சவுக்கு மரங்களை மர வியாபாரிகள் குறைந்த விலைக்கு வாங்கிச் சென்றிருக்கிறார்கள். அதுவும் அந்த மரங்களின் வயதைப் பொறுத்து விலை நிர்ணயித்து வாங்கிச் சென்றிருக்கிறார்கள். சில விவசாயிகள் வெட்டி எடுக்கிற மரங்களுக்கு 200 ரூபாய் வரை, மர வியாபாரிகளுக்குக் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள்; ஆனால், மரங்களை வெட்டி எடுத்துச் செல்ல யாரும் இப்போது தயாராக இல்லை. 

டெல்டா விவசாயிகள் எதை முன்னெடுக்க வேண்டுமானாலும் முதலில் தோட்டத்தில் இருக்கிற மரங்களை வெட்டி அப்புறப்படுத்தியாக வேண்டும். அதன் பிறகுதான் அடுத்தகட்ட யோசனைக்கே செல்ல முடியும். இப்போதைக்கு இதற்குத் தீர்வு கண்டறிய வேண்டியது அரசுடைய கடமை. ஆனால், அரசு அதற்கு முதலில் தயாராக இருக்கிறதா என்பதுதான் டெல்டா மக்கள் எல்லோருடைய கேள்வியும்!