Published:Updated:

இன்னும் கஜா புயல் நிவாரணங்கள் வந்துசேராத கீழ்வெண்மணி!

இன்னும் கஜா புயல் நிவாரணங்கள் வந்துசேராத கீழ்வெண்மணி!

"இது அறுவடைக்கான நேரம். இந்தப் பகுதியில் பெரும்பாலும் நெற்பயிர்தான் விளைவிப்போம். அடிச்ச காத்துல நெற்பயிர்கள் எல்லாம் சரிந்துவிட்டன. கடன் வாங்கிப் போட்ட காசு கூடத் திரும்பக் கிடைக்குமா எனத் தெரியலை."

இன்னும் கஜா புயல் நிவாரணங்கள் வந்துசேராத கீழ்வெண்மணி!

"இது அறுவடைக்கான நேரம். இந்தப் பகுதியில் பெரும்பாலும் நெற்பயிர்தான் விளைவிப்போம். அடிச்ச காத்துல நெற்பயிர்கள் எல்லாம் சரிந்துவிட்டன. கடன் வாங்கிப் போட்ட காசு கூடத் திரும்பக் கிடைக்குமா எனத் தெரியலை."

Published:Updated:
இன்னும் கஜா புயல் நிவாரணங்கள் வந்துசேராத கீழ்வெண்மணி!

ஜா புயல் கரையைக் கடந்து ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில், அந்தப் புயல் ஏற்படுத்திவிட்டுச் சென்றுள்ள சேதாரங்களிலிருந்து டெல்டா மாவட்ட மக்கள் இன்னும் மீண்டெழவில்லை. அரசின் நிவாரண உதவிகளும் அந்த மக்களை முழுமையாகச் சென்றடையவில்லை. டெல்டா பகுதியில் பெருவாரியான மக்கள் சிறு, குறு விவசாயிகள் மற்றும் நிலங்களற்ற விவசாயக் கூலிகள். அவர்களின் வாழ்வு விவசாயத்தை நம்பிய ஒன்றாகத்தான் உள்ளது. ஏற்கெனவே, காவிரிப் பிரச்னை, ஹைட்ரோ கார்பன் போன்ற வாழ்வாதாரப் பிரச்னைகளால் விவசாயம் பொய்த்துப் போன நிலையில், சமீபத்திய கஜா புயலுக்குப் பின்னர் அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் கேள்விக்குள்ளாகியுள்ளது.

கீழ்வெண்மணி என்பது பழைய தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த கிராமம். அங்கு வசிக்கும் பெருவாரியான மக்கள் சிறு விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலிகள். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், இரிஞ்சூர் கோபால்கிருஷ்ண நாயுடு என்ற பண்ணையாரிடம் விவசாயக் கூலிகளாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். செய்யும் வேlலைக்குத் தகுந்த ஊதியம் வேண்டி, அரைபடி நெல் ஊதிய உயர்வாகக் கேட்டு போராட்டங்கள் நடத்தினர். 1968 டிசம்பர் 25-ம்  தேதி ஒரே குடிசையில் வைத்து 44 விவசாயத் தொழிலாளர்கள் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் நடந்து ஐம்பது ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், தற்போது கஜா புயல் டெல்டா பகுதிகளை நாசப்படுத்தியிருக்கும் சூழலில், கீழ்வெண்மணி கிராமமும் அதனால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கிராமத்தில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் நெல் மற்றும் பயிர் வகைகளை விளைவிக்கும் விவசாயிகள்தாம். பல ஆண்டுகளாக அவர்கள் வளர்த்த தென்னை மரங்களின் மூலம் கிடைக்கும் வருவாய்தான், அவர்களின் குடும்பத்  தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டிருந்தது. ஏற்கெனவே சாதியக் கொடுமைத் தீயில் எரிந்த மக்கள், புயலுக்குப் பின்னர் வறுமைத் தீயில் எரிந்து வருகின்றனர். தமிழகத்தின் பெருவாரியான பகுதிகளிலிருந்து வரும் நிவாரணப் பொருள்கள் அனைத்தும் பெரும்பாலும் நகரப்பகுதிகளை மட்டுமே சென்றடைகின்றன, கீழ்வெண்மணி போன்ற குக்கிராமங்களை நிவாரண உதவிகள் சென்றடைவதில்லை.

கீழ்வெண்மணியைச் சேர்ந்த ராமலிங்கம் பேசுகையில், ``இந்த நேரத்தில் ஐயா வீரய்யன் இல்லாதது எங்களுக்கு மிகப்பெரிய இழப்பாக உள்ளது. நாகை மாவட்டத்தின் மற்ற பகுதிகளின் அளவுக்குப் பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லை என்றாலும், கீழ்வெண்மணியில் 60-க்கும் மேற்பட்ட கூரை வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே அரசு இலவசமாகக் கட்டித்தந்த  காங்கிரீட் வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இது அறுவடைக்கான நேரம். இந்தப் பகுதியில் பெரும்பாலும் நெற்பயிர்தான் விளைவிப்போம். அடிச்ச காத்துல நெற்பயிர்கள் எல்லாம் சரிந்துவிட்டன. கடன் வாங்கிப் போட்ட காசு கூடத் திரும்பக் கிடைக்குமா எனத் தெரியலை. விதை நெல்லாவது மிச்சமாகுமா என்றுதான் எதிர்பார்த்து உட்கார்ந்திருக்கிறோம். எங்களுக்கு எந்த அரசாங்க உதவிகளும் இதுவரை வந்து சேரவில்லை” என்றார் ஆதங்கத்துடன்.

மார்க்ஸிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ்வேளுர் ஒன்றியக் குழுவைச் சார்ந்த அண்ணாதுரை பேசுகையில், ``கஜா புயல் முடிந்து ஒரு மாதம் ஆன பிறகும், பாதிக்கப்பட்ட பகுதிகளை கணக்கிட எந்த அரசு அதிகாரிகளும் இதுவரை இந்த கிராமத்துக்கு வந்து பார்க்கவில்லை. இந்தக் குளிர்காலத்தில் நிறைய மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். அதேவேளையில் விவசாயிகளுக்கு அரசு  அறிவித்திருக்கும் இழப்பீட்டுத் தொகையும் போதுமானதாக இல்லை. விவசாய மக்களின் நிலையைக் கவனத்தில்கொண்டு, இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்க வேண்டும்” என்றார்.

தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ``டிசம்பர் 2-ம் தேதி முதல் நாகை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்படும். அதற்காக 392 கோடி ரூபாய் தயாராக உள்ளது. மூன்று கட்டங்களாகக் கணக்கிடப்பட்டு, உடனுக்குடன் சேதாரங்கள் பற்றிய தகவல்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டு இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகள் துரிதமாக்கப்படும்" என்று சொல்லியிருந்தார்.

ஆனால், நாகை மாவட்டத்திலிருந்து 28 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள, அரசியல்களத்திலும்  விவாதிக்கப்படுகின்ற கீழ்வெண்மணி கிராமத்துக்கே இன்னமும் நிவாரணத்தொகை சென்று சேராததுதான் உண்மை நிலை. இதே நிலைதான் அந்தக் கிராமத்தைச் சுற்றியுள்ள பல கிராமங்களிலும் நீடிக்கிறது. அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா...?