Published:Updated:

தமிழகத்தை உறையவைக்கும் குளிர் - காரணம் இதுதான்..!

தமிழகத்தை உறையவைக்கும் குளிர் - காரணம் இதுதான்..!
தமிழகத்தை உறையவைக்கும் குளிர் - காரணம் இதுதான்..!

தமிழ்நாட்டில் நிலவும் கடும் குளிர்குறித்து வானிலை ஆய்வாளர் செல்வகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் வெயில் அதிகமாக இருப்பது ஆச்சர்யத்தைக் கொடுக்காது. ஆனால், கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் குளிர் உறையவைத்துவருகிறது. குறிப்பாக நீலகிரி, கொடைக்கானல் பகுதிகளில் உறை பனி நிலவிவருகிறது. தமிழகத்தில் நிலவும் கடும் குளிர் தொடர்பாக சமூக வலைதளங்களில் மீம்ஸ்களும் பகிரப்பட்டுவருகின்றன.

இதற்கான காரணம்குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார், “காஷ்மீர், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பகுதிகளில் நீடிக்கும் பனிப்புயல், குளிர் காற்றை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என்று கணிக்கப்பட்டது. இந்நிலையில், இந்திய மையப் பகுதியில் உருவாகிய எதிர் நிகழ்வு, இந்தியப் பெருங்கடல் நிலநடுகோட்டுப் பகுதியில், மாலத்தீவுக்கு மேற்கே நிலவும் காற்று சுழற்சியுடனும், பனிப்புயலுடனும் தொடர்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இமய மலையில் இருந்து குளிர் காற்று தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியப் பகுதி வழியாகப் பயணிப்பதால், அதிக குளிர் நிலவுகிறது.

இதன் காரணமாக, நீலகிரியில் 4 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை குறைந்து காணப்படும். இந்தக் குளிர்நிலை, ஜனவரி மாதம் முழுவதும் நீடிக்கும். பிற மாவட்டங்களிலும் வெப்பநிலை வழக்கத்தைவிட சில டிகிரிகள் குறைந்தே காணப்படும். பிப்ரவரி முதல் வாரத்துக்குப் பிறகு படிப்படியாகக் குளிர் விலகி, வெப்பம் அதிகரித்துக் காணப்படும்.

பிப்ரவரி மாதத்துக்கு மேல் வானிலை நிகழ்வுகள் சாதகமாக உள்ள காரணத்தால், வாரத்துக்கு ஒருமுறை அல்லது 10 நாள்களுக்கு ஒருமுறை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கலாம். பாபுக் புயலால் இந்தியாவுக்கு எந்தவித பாதிப்போ மழையோ இருக்காது” என்றார்.