Published:Updated:

அதலபாதாளத்துக்குச் சென்ற நிலத்தடி நீர்! - வட இந்தியாவுக்கு நெருங்கும் ஆபத்து

நிதி ஆயோக் ( NITI Aayog) வெளியிட்ட அறிக்கையில் நீர் தர குறியீட்டின்படி (water quality index) இந்தியாவானது 122 நாடுகளில் 120 வது இடத்தைப் பெற்றுள்ளது. 

அதலபாதாளத்துக்குச் சென்ற நிலத்தடி நீர்! - வட இந்தியாவுக்கு நெருங்கும் ஆபத்து
அதலபாதாளத்துக்குச் சென்ற நிலத்தடி நீர்! - வட இந்தியாவுக்கு நெருங்கும் ஆபத்து

உலகிலேயே மிகப்பெரிய நிலத்தடி நீர் வீழ்ச்சி வட இந்தியாவில்தான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது எனக் கூறுகிறது ஓர் புதிய ஆய்வு. வேகமாக வளர்ந்து வரும் இந்தப் பிரச்னையின் மையப்புள்ளியாக இருக்கிறது நாட்டின் தலைநகரமான டெல்லி. இந்த நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருவதையும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிலையத்தின் (National Geophysical Research Institute (NGRI)) சார்பில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கணக்கிட்டதைவிட 70% வேகமாக நிலத்தடி நீரை உறிஞ்சுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் விரேந்திர எம் திவாரி ( Virendra M Tiwari) குறிப்பிடும்போது, ``டெல்லி, ஹரியானா, மேற்கு உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய இடங்களில் 32 கன கிமீ (32 cubic km) நிலத்தடி நீரானது ஒவ்வொரு வருடமும் எடுக்கப்படுகிறது. இந்த அளவும்கூட வழக்கமாக எடுக்கப்படும் அளவைவிட அதிகமானதுதான். இவ்வாறு எடுக்கப்படும் நிலத்தடி நீரில் பாதியாவது பருவமழைகளின் மூலம் திரும்பக் கிடைத்து விடுகிறது. கோடைக்காலங்களில் இதைவிட அதிகமான நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது. வறட்சிக் காலங்களில் இரண்டு, மூன்று மடங்கு அதிகமாக 100 க. கிமீ (100 cubic km) நிலத்தடி நீர் வரை உறிஞ்சப்படும்’’ என அவர் கூறுகிறார்.

தற்போதைய நிலையில் எவ்வளவு நிலத்தடி நீர் மிஞ்சியிருக்கிறது என்பது ஆய்வாளர்களுக்கே தெரியவில்லை. ஆனால், நிலைமை கடுமையாகிக் கொண்டிருப்பது மட்டும் நிதர்சனம் என்கின்றனர். தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிலையத்தின் ஆய்வின்படி குடிநீர், தொழிற்சாலை, அன்றாடத் தேவைகள் என டெல்லியின் ஓர் ஆண்டுக்கான ஒட்டுமொத்த நீர்த் தேவை 1 கன கி.மீ மட்டுமே. சுமார் 2,000 கி.மீ. நிலத்தை உள்ளடக்கிய இந்திய - கங்கைக் கரையோரத்தைத் தொடர்ந்து நிலத்தடி நீரை உறிஞ்சுவதன் மூலம் வறட்சியாக்குவது என்பது மிதமான பூகம்பங்களைத் தூண்டுவதற்கு வாய்ப்பிருப்பதாகத் தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிலையத்தின் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நிதி ஆயோக் (NITI Aayog) வெளியிட்ட அறிக்கையில் நீர் தர குறியீட்டின்படி (water quality index) இந்தியாவானது 122 நாடுகளில் 120-வது இடத்தைப் பெற்றுள்ளது.