Published:Updated:

`குடிநீர் சேகரிக்கவே பாதிநாள் போய்விடும்!' மதுரை கிராமங்களின் வறட்சியும் வேதனையும்

குடிநீருக்காக காலை 4 மணிக்கே எழுந்து, பல கிலோ மீட்டர்கள் நடந்தும், சைக்கிளிலும், பைக்கிலும் வந்து தண்ணீர் சேகரிக்கத் தொடங்கி நாள் முழுவதும் தண்ணீர் எடுத்துக்கொண்டிருந்தனர் அப்பகுதி கிராம மக்கள். இரவுகளில்கூட செல்போன் வெளிச்சத்தில் இளைஞர்கள் தண்ணீர் எடுக்க கிளம்பிவிடுகின்றனர்.

`குடிநீர் சேகரிக்கவே பாதிநாள் போய்விடும்!' மதுரை கிராமங்களின் வறட்சியும் வேதனையும்
`குடிநீர் சேகரிக்கவே பாதிநாள் போய்விடும்!' மதுரை கிராமங்களின் வறட்சியும் வேதனையும்

``இந்தக் குழியில் ஊறிவிட்டது, தூக்கு உள்ளே நுழையும் அளவுக்கு ஊறவில்லை, இப்ப சற்று கலங்கலா வருது, கொட்டாச்சிய எடுங்க” என்று கடும் வெயிலிலும் கிராமத்தினர் அருவிமலை அடிவார ஊற்றில், ஈசல்கள் போல் காத்துக்கிடந்தனர், குடிநீர் சேகரிக்க. காலை 4 மணிக்கே எழுந்து பல கிலோ மீட்டர் நடந்தும், சைக்கிளிலும், பைக்கிலும் வந்து தண்ணீர் சேகரிக்கத்தொடங்கி நாள்முழுவதும் தண்ணீர் எடுத்துக்கொண்டிருந்தனர் அப்பகுதி கிராம மக்கள். இரவுகளில்கூட செல்போன் வெளிச்சத்தில் இளைஞர்கள் தண்ணீர் எடுக்க கிளம்பிவிடுகின்றனர்.

`குடிநீர் சேகரிக்கவே பாதிநாள் போய்விடும்!' மதுரை கிராமங்களின் வறட்சியும் வேதனையும்

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த கருங்காலகுடி, அய்வுத்தான்பட்டி, பட்டூர், மேட்டுப்பட்டி, பால்குடி, புதூர், உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்ததால் கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக அப்பகுதிமக்கள் குடிநீர் பிரச்னையை சந்தித்துவருகின்றனர். அப்பகுதியில் உள்ள மலைகளைச் சுற்றிய அடிவாரங்களில் ஒரு சில இடங்களில் மட்டும் ஊற்றில் தண்ணீர் வருவதனால் அதைப் பானைகளில் சேகரித்துக் குடித்து வாழ்ந்துவருகின்றனர். அருவிமலை அடிவார ஊற்றில் தண்ணீர் சேகரித்துக்கொண்டிருந்த அம்மாசி என்பவரிடம் பேசினோம், ``நான் கச்சிராயன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசித்துவருகிறேன். கூலிவேலை செய்கிறேன். என் வீட்டுக்குத் தண்ணீர் எடுப்பதே பகுதி நேர வேலையாக உள்ளது. எங்கள் குடியிருப்புப்  பகுதியில் வறட்சியால் தண்ணீர் இல்லாத காரணத்தால் இவ்வளவு தூரம் சைக்கிளில் வந்துள்ளேன். தற்போது காலை 11 மணி. இந்த சமயத்தில் கூட்டம் குறைவாக இருக்கும். அதனால்தான் தற்போது தண்ணீர்க் குடத்துடன் வந்துள்ளேன். நாங்கள் எல்லா மாதமும் கோடையைத்தான் அனுபவிக்கிறோம், கோடைக்காலத்தில் இன்னும் சற்று கடுமையாக உணர்கிறோம். எங்கள் ஊரைச் சுற்றி எங்கேயும் தண்ணீர் இல்லை. இந்த ஊத்த நம்பித்தான் பிழைப்பு ஓடுகிறது. இதுவும் இல்லையென்றால் நாங்கள் அனைவரும் சாகவேண்டியதுதான். பஸ் வசதிகூட இல்லாமல்தான் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். அதுகூட எங்களுக்குப் பெரிதாக வலிக்கவில்லை. ஆனால், இந்தத் தண்ணீர் தாகம் எங்களைக் கொடுமையாக வாட்டுகிறது. எங்கள் தாக்கத்தை என்ன செய்யமுடியும்? ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்" என்கிறார்.

`குடிநீர் சேகரிக்கவே பாதிநாள் போய்விடும்!' மதுரை கிராமங்களின் வறட்சியும் வேதனையும்

தூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கூறுகையில், ``எங்க ஊர்ப் பக்கம் சுத்தமா விவசாயம் இல்லைன்னுதான் வெளிநாடு போய் வேலை பார்த்துட்டுருக்கேன். இப்போ 2 மாதம் லீவுக்கு ஊருக்கு வந்துருக்கேன். இங்க வந்து வீட்டுக்குத் தண்ணீர் தூக்குறதுதான் வேலையா இருக்கு. வீட்டில் யாராவது ஒரு ஆள் தண்ணி எடுக்க வந்தாதான் குடும்பத்த ஓட்ட முடியும். எல்லாரும் வேலைக்கு போயாச்சுனா வீட்டில குடிக்க தண்ணி இருக்காது. விக்கிகிட்டுதான் சாகணும். அந்த நிலைமையிலதான் எங்க ஊரும் சுத்தி உள்ள ஊரும் இருக்கு. தேர்தல் சமயம் வரும்போது அடிப்படை வசதிகளைச் செய்து தருவதாக அரசியல் கட்சிகள் தெரிவிக்கிறார்கள். ஆனா அதுக்கு அப்புறம் அவுங்கள மாதிரியே அவங்க வாக்குறுதியும் காணாமல் போய்ருது. 7 வருடம் சரியா மழை இல்ல. இதனால் கடுமையான வறட்சி நிலவுகிறது. அப்ப அப்ப பெய்கிற ஏமாற்று மழையால்தான் இந்த ஊற்றுகளில்கூட தண்ணீர் வருகிறது. தொடர்ந்து இதே நிலை நீடித்தால் எதுவும் செய்ய முடியாது. அரசாங்கம் நேரில் வந்து பார்வையிட்டு எதாச்சும் செய்தால்தான் உண்டு” என்றார்.

`குடிநீர் சேகரிக்கவே பாதிநாள் போய்விடும்!' மதுரை கிராமங்களின் வறட்சியும் வேதனையும்

சமூக ஆர்வலர் செல்வராஜ் நம்மிடம் பேசுகையில், ``எங்கள் ஊரைச் சுற்றிய 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வறட்சி கடுமையாக உள்ளது. கொட்டாம்பட்டி, கருங்காலகுடியைச் சுற்றிய பல கிராமங்களில் நிலத்தடி நீர் என்பதே இல்லாமல் போய்விட்டது. அதற்கு முக்கிய காரணம், நீர்ப்பாசனங்கள் இல்லாததே. பெரியாறு கால்வாய் பாசனத் திட்டம் வரவிருந்தது. ஆனால், அந்த சமயத்தில் அவசியம் இல்லை என்பதால் அந்தத் திட்டம் அரசாங்கத்தால் கைவிடப்பட்டது. நாளடைவில் போதுமான மழைப்பொழிவு இல்லை என்பதால் வறட்சி துவங்க ஆரம்பித்துவிட்டது. கடந்த 5 ஆண்டுகளில் வறட்சி உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அவ்வப்போது பொழியும் மழைநீரைக் கூட நிலத்தடி நீராக சேகரிக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு இல்லை. இதனால் ஊற்று நீரை மக்கள் தேடி அலைகின்றனர். சேர், மண் என்று கலந்த நீரைக்கூட மக்கள் சேகரித்துப் பயன்படுத்திவருகின்றனர். எனவே, இப்பகுதியில் நிலத்தடி நீரை வளப்படுத்த வேண்டும். பெரியாறு கால்வாய் உபரி நீர்களையாவது இப்பகுதிகளுக்குக் கொண்டுவர அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். அரசு சார்பாக போடப்படும் போர்வெல்களில் பல மோசடிகள் நடைபெறுகின்றன. தண்ணீர் இல்லாத இடங்களாகப் பார்த்து போர்வெல்களை ஒப்பந்தக்காரர்கள் அமைத்து சுயநன்மைக்காக தொடர்ந்து புதிய போர்வெல் அமைக்கின்றனர். இதனால் அரசின் பணமும் விரயமாகிறது. பொதுமக்கள் குடிநீர் இல்லாமல் சிரமமும் படுகின்றனர். எனவே, அரசு உடனடியாக நடவடிக்கைகள் எடுத்து இப்பகுதி மக்களைப் பாதுகாக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

`குடிநீர் சேகரிக்கவே பாதிநாள் போய்விடும்!' மதுரை கிராமங்களின் வறட்சியும் வேதனையும்

கடும் வறட்சியில் வாழ்ந்துவரும் இப்பகுதி கிராம மக்களின் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் பாதிநாள் குடிநீர் சேகரிப்பதற்கே செலவாகிவிடுகிறது. இந்தக் குடிநீர் பிரச்னையை சமாளிக்கமுடியாமல் பலரும் திருப்பூர், கோவை என்று இடம் மாறிக்கொண்டிருப்பதாக தங்களது வேதனையைத் தெரிவிக்கின்றனர் கிராம மக்கள்.

Vikatan