Published:Updated:

அடுத்த தலைமுறையும் இப்படி அலைய வேண்டுமா? தண்ணீரைச் சேமிக்கவேண்டிய நேரம் இது! #WhereIsMyWater

அடுத்த தலைமுறையும் இப்படி அலைய வேண்டுமா? தண்ணீரைச் சேமிக்கவேண்டிய நேரம் இது! #WhereIsMyWater
அடுத்த தலைமுறையும் இப்படி அலைய வேண்டுமா? தண்ணீரைச் சேமிக்கவேண்டிய நேரம் இது! #WhereIsMyWater

``தண்ணீருக்காகத்தான் மூன்றாம் உலகப் போரே நடக்கப்போகிறது" என்று அறிவியலாளர்கள் சொல்ல ஆரம்பித்து பல காலமாகி விட்டது. நாமும் புலம்பிக்கொண்டே இருப்பதிலும் அர்த்தம் இல்லைதான். அப்படியென்றால் இதற்காக அரசுகள் செய்ய வேண்டியது ஒருபுறம் இருக்கட்டும். ஒரு தனிமனிதன் தன்னளவில் என்னதான் செய்துவிட முடியும்?

பொதுப்பணித்துறையில் வேலை பார்த்தார் எங்களுடைய அப்பா. ஆழியார், அமராவதி என்று அணைக்கட்டுகளுக்கு அருகிலேயே இருந்த அரசு ஊழியர் குடியிருப்புகளில்தான் எங்கள் இளம்பருவம் கழிந்தது. இருபத்து நான்கு மணிநேரமும் தடையின்றிக் குழாய்களில் வரும் சுவைமிக்க குடிநீரையே குடிக்க, குளிக்க, துவைக்க என்று அனைத்திற்குமாகப் பயன்படுத்தினோம். சமீபத்தில் மறைந்த எங்களது அப்பாவின் நினைவுகளை அசைபோடும் போதெல்லாம் மனதில் விரியும் சித்திரங்களில், குடியிருந்த வீட்டின் பின்புறம் இருந்த ஒரு பெரிய தொட்டியில், கால்தொட்டி நீரைக் காலி செய்யும் அளவுக்குக் கண்கள் சிவக்கச் சிவக்க அவர் குளிக்கும் காட்சியும் ஒன்று. ஒரு யானை ஓடும் ஆற்றில் நிதானமாகக் குளித்துக் கரையேறும் காட்சிக்கு ஒப்பானது அது.

அவரது பணி ஓய்வுக்குப் பிறகு, மதுரையில் எங்களது சொந்த வீட்டில் கோடைக்காலங்களில் நிலத்தடி நீர் வற்றிவிட, ஆழ்துளைக் குழாய் வழி நீரேற்ற முடியாமல் தண்ணீரைப் பணம் கொடுத்து வாங்கும் நிலைக்கு ஆளானோம். வாரம் ஒருமுறை தண்ணீரை இலவசமாய் விநியோகிக்கும் மாநகராட்சி லாரியின் சத்தம் கேட்டதும், வீட்டிலிருக்கும் வேலைகளைப் போட்டது போட்டபடி, தங்களது உடல் நிலையையும், வயதையும் பொருட்படுத்தாமல் அம்மாவும், அப்பாவும் காலிக் குடங்களைத் தூக்கிக்கொண்டு தெரு முனைக்கு ஓடும் சகிக்கவியலாத காட்சிகளையும், ஒரே ஒரு பக்கெட் தண்ணீரில், துளிகூட சிதறாமல் நிதானமாக அப்பா குளிப்பதையும், தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டியதை பேரப்பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுப்பவராக அவர் மாறிப்போனதையும் நான் வருத்தத்துடன் கண்டிருக்கிறேன்.

அடுத்த தலைமுறையும் இப்படி அலைய வேண்டுமா? தண்ணீரைச் சேமிக்கவேண்டிய நேரம் இது! #WhereIsMyWater

ஒரு தலைமுறையின் சாபம் இது. இன்னொரு வகையில் இது ஒரு தலைமுறை, தன் தவறுகளால், தான் செய்யத் தவறியவற்றால், தனக்கு அடுத்த தலைமுறைகளுக்குக் கையளித்து விட்டுப்போகும் சாபமும்கூட. ஆனால், அப்படி `சாபம் கையளிக்கப்பட்ட தலைமுறைதான் நாம்' என்பதை உணர்ந்திருக்கிறோமா என்கிற கேள்விக்கு `இல்லை’ என்றே பதிலளிக்க வேண்டியிருக்கிறது.

நான் சிறுவயதில் விடுமுறைக்கு வரும்போதுகூட, கிட்டத்தட்ட 70-க்கும் மேலான கண்மாய்கள் நிறைந்திருந்த ஊர் மதுரை. இப்போது அவற்றில் இருபது மட்டுமே அரைகுறை உயிருடன் இருக்கின்றன. கண்மாய்களைக் காப்பாற்றியிருக்க வேண்டிய மக்கள்தான் அவற்றை முதலில் ஆக்கிரமித்தார்கள். அவர்களைத் தடுத்திருக்க வேண்டிய அரசுகளோ அக்கண்மாய்களில் அவர்களது அலுவலகங்களைக் கட்டினார்கள். முறையிடக் காவல் நிலையங்களுக்கோ, நீதிமன்றங்களுக்கோ போக முடியாது. அந்தக் கட்டடங்களும் கண்மாய்களை அழித்து மேடாக்கி அவற்றின் மீதே கட்டப்பட்டிருக்கின்றன. மதுரையின் தீராச்சாபம் இது. கண்மாய்கள் நிறைந்து மதுரையே வெள்ளக்காடான செய்திகளெல்லாம் கால் நூற்றாண்டுக்கு முந்தைய வரலாற்றுப் பெருமிதங்களாக மட்டுமே எஞ்சிவிட்டன.

சில பத்தாண்டுகள் இடைவெளிவிட்டு மதுரைக்குத் திரும்பும் ஒருவர் எருமைகள் நிதானமாய்க் குளித்துத் திளைக்கும் கண்மாய்கள் கட்டடங்களாகவும், கண்மாய்களை ஒன்றோடொன்று இணைத்த கால்வாய்கள் வாகனங்கள் விரையும் சாலைகளாக மாறிப்போயிருப்பதையும் கண்டு அதிர்ச்சியில் உறைந்துதான் போகக்கூடும்.

அடுத்த தலைமுறையும் இப்படி அலைய வேண்டுமா? தண்ணீரைச் சேமிக்கவேண்டிய நேரம் இது! #WhereIsMyWater

இங்கே வசிப்பதால் மட்டுமே மதுரையை ஓர் உதாரணமாகச் சொல்கிறேன். கிட்டத்தட்ட தமிழகம் முழுவதுமே இதுதான் நிலைமை. சமீபத்தில் நண்பர்களைச் சந்திக்க கோவை மாவட்டத்திலுள்ள ஊர்களுக்குச் செல்லும்போதுதான் தெரிந்தது, அவர்களும் கடும் தண்ணீர்ப் பஞ்சத்தில்தான் இருக்கிறார்கள் என்பது. 400 அடி, 800 அடியெல்லாம் தாண்டிப்போய் 1500 அடிவரை பூமியைத் துளையிட்டும் தண்ணீர் இல்லை என்கிறார்கள். 

இப்படியே ஆளாளுக்குத் தோண்டிக்கொண்டிருந்தால் என்னாவது? தரைக்குக் கீழே பூமியின் குறுக்கு வெட்டுத்தோற்றம் எப்படி இருக்கும் என்று கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்... ஒவ்வொரு கட்டடத்தையும் தாங்கும் ஒற்றை ஆணிவேர் போல வெறும் குழாய்கள் மட்டுமே நிலத்தைத் துளைத்துக்கொண்டிருக்கும் பயங்கரக் காட்சி அது.

``தண்ணீருக்காகத்தான் மூன்றாம் உலகப்போரே நடக்கப்போகிறது" என்று அறிவியலாளர்கள் சொல்ல ஆரம்பித்து பல காலமாகி விட்டது. நாமும் புலம்பிக்கொண்டே இருப்பதிலும் அர்த்தம் இல்லைதான். அப்படியென்றால் இதற்காக அரசுகள் செய்ய வேண்டியது ஒருபுறமிருக்கட்டும். ஒரு தனிமனிதன் தன்னளவில் என்னதான் செய்துவிட முடியும்?

செய்யலாம். சில சின்னச் சின்ன முன்னெடுப்புகளை நம்மளவில் முயன்று பார்க்கலாம். 

முதலில் வீட்டிலுள்ள அனைவருக்கும் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை, முக்கியமாகக் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைத்துவிடுங்கள். குழாய்களைத் திறந்து வைத்துவிட்டு வருவது, நீண்ட நேரம் குளியலறையில் செலவழித்து ராகம் பாடியபடியே குளித்துக் கரையேறுவது போன்றவற்றை நிறுத்தச் சொல்லுங்கள். 

சொட்டுச் சொட்டாக தண்ணீர் வெளியேறும் `மறை கழன்ற’ குழாய்கள் ஏதேனும் வீட்டில் இருந்தால் அவற்றை உடனடியாக மாற்றலாம். அவற்றை அப்படியே வைத்துக்கொண்டு காலத்தை ஓட்டுவது என்பதும் தண்ணீரை வீணடிக்கும் `மறை கழன்ற’ செயல்தான். பிறகு, வீட்டில் எந்தெந்தப் பணிகளுக்கு அதிக அளவில் தண்ணீர் செலவாகிறது என்று பார்த்து அவற்றுக்குத் தகுந்த மாற்று ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பிக்கலாம். 

அத்தியாவசியத் தேவை உள்ளவர்கள் அதாவது வயதானவர்கள், நோயுற்றவர்களைத் தவிர மற்றவர்கள் ஒவ்வொரு முறையும் அதிக அளவு தண்ணீரைச் செலவழிக்கும் வெஸ்டர்ன் டாய்லெட்டுக்குப் பதில் இந்திய மாடல் டாய்லெட்டுகளைப் பயன்படுத்தலாம். ஒரு வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட கழிவறைகள் உள்ளவர்கள் ஒன்றைத்தவிர மீதம் அனைத்தையும் இந்திய டாய்லெட்டுகளுக்கு மாற்றலாம். 

தேவையில்லாமல் ஷவரில் குளிப்பதை நிறுத்திவிட்டு, பக்கெட்டில் தண்ணீர் பிடித்து அதில் குளிக்கலாம். `குழாயைத் திறந்து விட்டு, பக்கெட் தளும்பத் தளும்ப தண்ணீரைச் சிதறடித்தபடியேதான் நான் குளிப்பேன்' என்பவர்கள் ஷவரிலேயே குளிப்பது சாலச்சிறந்தது. 

அடுத்த தலைமுறையும் இப்படி அலைய வேண்டுமா? தண்ணீரைச் சேமிக்கவேண்டிய நேரம் இது! #WhereIsMyWater

``எதில் குளிக்க வேண்டும் என்றெல்லாமா எங்களுக்குச் சொல்லித் தருகிறாய்?” என்று அவசரப்பட்டுக் கோபப்படாதீர்கள். ``எப்படிக் குளிக்க வேண்டும” என்பதையும்தான் சொல்லப்போகிறேன். எங்கள் வீட்டுப் பிள்ளை எம்ஜிஆர், நம்பியாரைச் சாட்டையால் அடிப்பது மாதிரி `மடார், மடாரென’ சத்தம் நான்கு வீடுகளுக்குக் கேட்கும்படி தண்ணீரை அள்ளித் தலையில் ஊற்றாமல், நிறுத்தி, நிதானமாக, ரசித்து, தண்ணீர் உடலில் வழிந்து ஓடும்படி மெதுவாகக் குளித்துப் பழகுங்கள். உடலுக்கும் அதுவே நல்லது, குளிர்ச்சியடையும். ஷாம்பு போட்டு ஒருமுறை, உடலுக்குச் சோப்பு போட்டு ஒருமுறை, முகத்துக்குச் சோப்பு போட்டு ஒருமுறை என்றெல்லாம் தனித் தனியாகத் தண்ணீரை இறைத்துக் குளிக்காமல், சோப்பு நுரைக்கத் தேவையான அளவுக்கு மட்டும் உடலை ஈரப்படுத்திக்கொண்டு இவை எல்லாவற்றையும் ஒரே சமயத்தில் செய்து, பின் தண்ணீரால் அலசுங்கள். நீங்கள் சாதாரணமாகக் குளிப்பதில் மூன்றில் ஒரு பங்கு தண்ணீர்தான் செலவாகும். நானே சாட்சி.

கேன்களில் தண்ணீர் வாங்காமல், தண்ணீர் சுத்திகரிப்பு சாதனங்களை உபயோகிப்பவர்கள் ஃபில்டர் செய்தது போக மீதமாகும் அதிக அளவு தண்ணீரைச் சேமித்து செடிகளுக்கு, கழிவறை, பிற இடங்கள், வாகனங்கள் போன்றவற்றைச் சுத்தம் செய்வதற்கு, மிதியடிகள் போன்ற அதிக அழுக்குப்படும் பொருள்களைத் துவைப்பதற்குப் பயன்படுத்தலாம். 

உங்களிடம் இப்போதிருக்கும் வாஷிங் மெஷின் `டாப் லோடிங்' மாடலாக இருந்தால், அதன் ஆயுட்காலம் முடிந்ததும் அதை `ஃபிரன்ட் லோடிங்' மாடலாக மாற்றிவிடுங்கள். கண்ணுக்குத் தெரியாமல் அதிக அளவு தண்ணீரை அது சேமித்துத்தரும் என்கிறார்கள். வாஷிங் மெஷினிலிருந்து வெளியாகும் அழுக்கு சோப்பு நீரை அப்படியே பயன்படுத்த முடியாது. ஆனால் அவற்றை வடிகட்டி பூமிக்குள் அனுப்பும் வசதி உண்டு. சாதாரண கற்கள், கரியைப் பயன்படுத்தித்தான் அதைச் செய்கிறார்கள். முப்பதாயிரம் கொடுத்து வாஷிங் மெஷின் வாங்கும் நாம், கூடுதலாகக் கொஞ்சம் செலவழித்து அதையும் அவசியம் செய்யத்தான் வேண்டும்.

அப்புறம் ஆக முக்கியமான விஷயம் இதுதான். ``மழை நீர் சேகரிப்பு." ஜெயலலிதாவின் ஆட்சியில் ``கரண்ட புடுங்கிடுவேன்” என்று அந்த அம்மா சொன்ன ஒரு வார்த்தையில், பயந்து போய் மழைநீர் சேகரிப்புத் தொட்டியை ஒரு வீடு தவறாமல் குழி தோண்டி இறக்கினான் தமிழன். ஆனால் அதன் பிறகு இத்தனை வருடங்களின் அந்த உறை கிணற்றுத் தொட்டியை ஒருமுறையாவது சுத்தம் செய்து பழுது பார்த்திருப்பானா, குறைந்த பட்சம் திறந்தாவது பார்த்திருப்பானா என்பது சந்தேகமே. சந்தேகம் என்ன சந்தேகம். ஒரு பயலும் அதைச் செய்யவில்லை என்பதுதான் உண்மை.

மழைநீர் சேகரிப்புத் தொழில்நுட்பத்தை நன்கு அறிந்த மிகச்சிறந்த நிபுணர்கள் ஊர் ஊருக்கு இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் கூடத் தேடிப்போகக்கூட வேண்டியதில்லை. உங்களுக்குத் தெரிந்த கொத்தனாரைக் கூப்பிட்டாலே போதும். குறைந்த செலவில், நிறைய மழைநீரைச் சேகரிக்கும் வசதியையும், உபரிநீர் வடிகட்டப்பட்டு பூமிக்குள் இறங்கும் வசதியையும் செய்துகொடுப்பார்கள். நாம்தான் செலவுக்கு அஞ்சி அதைச் செய்வதில்லை.

அடுத்த தலைமுறையும் இப்படி அலைய வேண்டுமா? தண்ணீரைச் சேமிக்கவேண்டிய நேரம் இது! #WhereIsMyWater

கூட்டுப் பண்ணை வேளாண்மையில் பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கும்போது அருகிலுள்ள எல்லா நிலத்துக்காரர்களும் ஒரே சமயத்தில் மருந்து அடிக்கவேண்டும் என்பார்கள். இல்லையென்றால் இந்த வயலுக்கு மருந்தடிக்கும்போது, பக்கத்து வயலுக்கும், அங்கு அடிக்கும்போது இந்த வயலுக்கும் மாறி மாறி இடம்பெயர்ந்து பூச்சிகள் கெக்கலி காட்டுமாம். அது போலத்தான் வீடுகளில் நீர் மேலாண்மையும்.

முதலில் நாம் ஆரம்பிப்போம். அதே நேரத்தில் அண்டை வீட்டுக்காரர்களிடமும் மெல்ல இதன் பலன்களை எடுத்துச் சொல்லுவோம், அவர்களையும் செய்யவைப்போம். சொன்ன சொல் ஒன்றைக்கூடக் காப்பாற்றாத, நமக்குப் பிடித்தமான அரசியல் கட்சிகளுக்காக, நம்மைச் சுற்றியிருப்பவர்களிடம் எவ்வளவு ஆர்வத்தோடு ஓசியில் பிரசாரம் செய்கிறோம். அந்த முனைப்பில் இந்தப் பக்கமும் கொஞ்சம் கவனத்தைக் திருப்பினால் காலமெல்லாம் நமக்கு நன்மை கிட்டும். ``என்னளவுக்கு நான் செய்துவிட்டேன், மற்றவனைப்பற்றி எனக்கு என்ன அக்கறை?" என்று நினைத்தீர்களேயானால், நட்டம் உங்களுக்குத்தான். நீங்கள் சிரமப்பட்டுச் செலவழித்து, பூமிக்குள் இறக்கும் நீரைச் சத்தமே இல்லாமல் சப்மெர்சிபிள் மோட்டாரைப் போட்டு பக்கத்து வீட்டுக்காரர் உறிஞ்சு எடுத்துவிடக்கூடும். சும்மா இல்லை.. ஊர்கூடி தேர் இழுக்கும் விஷயம்தான் இது. 

அது மட்டுமல்ல... நிறைந்து கிடந்த கண்மாய், குளங்களில் காற்றாட காலைக்கடன்களை முடித்த ஒரு தலைமுறை, வீட்டுக் கழிப்பறைகள் வந்தபோது மூக்கைச் சுளித்தது. வீட்டுக் கழிப்பறை வெஸ்டர்ன் டாய்லெட் ஆனதற்குச் சங்கடப்பட்டது அடுத்த தலைமுறை. இனி தண்ணீர் இல்லாமல், மூக்கைப் பொத்திபடி டிஷ்யூ பேப்பரில் சுத்தம் செய்யும் தலைமுறையும் நாமாகத்தான் இருப்போம்.

சங்கடமாக இருக்கிறதா? அப்படியென்றால் ஓடுங்கள். நமக்குக் குறைந்த அளவே மழை கிடைக்கும் மழைக்காலம் ஆரம்பிக்கப்போகிறது. மேலே சொன்னவற்றில் ஒரு பாதியையாவது செய்ய முடியுமென்றால் ``பரவாயில்லையே, இவய்ங்க திருந்தறாய்ங்க போலயே?” என்று மனம் குளிர்ந்து, பூமித்தாய் இந்த வருடமாவது மழையை அள்ளித்தர வாய்ப்பிருக்கிறது.

- இளங்கோவன் முத்தையா

Vikatan
அடுத்த கட்டுரைக்கு