Published:Updated:

இந்தியாவின் முதல் `டே ஜீரோ’ நகரமாகிறதா பெங்களூரு... ஐநா ஆய்வு சொல்வது என்ன? #WhereIsMyWater

மலையரசு
இந்தியாவின் முதல் `டே ஜீரோ’ நகரமாகிறதா பெங்களூரு... ஐநா ஆய்வு சொல்வது என்ன? #WhereIsMyWater
இந்தியாவின் முதல் `டே ஜீரோ’ நகரமாகிறதா பெங்களூரு... ஐநா ஆய்வு சொல்வது என்ன? #WhereIsMyWater

லகிலேயே முதன்முறையாக ஒரு பெருநகரம் முற்றிலும்... முற்றிலும் என்றால் எதுவுமே இல்லாமல்... கொஞ்சம் கூட இல்லாமல்... சில சொட்டுகூட இல்லாமல் முற்றிலுமாக தண்ணீரில்லா நிலைக்குப் போனது என்றால், அது தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரம்தான். இந்த நிலையை ஆங்கிலத்தில் `டே ஜீரோ’ என்பார்கள். இதையடுத்து, `ஒரு நாளைக்கு ஒரு நபர் 87 லிட்டர் தண்ணீரை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும்’ என்று விதிமுறையையே கொண்டுவந்தது தென்னாப்பிரிக்கா. இந்த நிலை, இந்தியாவில் உள்ள நகரங்களுக்கு வருமா என்றால் `ஆம்' என்கிறது ஐநா கொடுத்த சமீபத்திய அறிக்கை. அதுவும் `கார்டன் சிட்டி' எனப்படும் பெங்களூரு நகரம்தான் `டே ஜீரோ’ ஏற்படப் போகும் இந்திய நகரம் என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும் என்கிறது ஆய்வு. 

கடந்த வருடம் ஐநா எடுத்த `டே ஜீரோ’ ஆய்வில் இடம் பிடித்த மாஸ்கோ, இஸ்தான்புல், லண்டன், மெக்சிகோ போன்ற 11 நகரங்களில் இரண்டாமிடம் பெங்களூருவுக்குத்தான். மலைகள், அணைகள் என மாநிலமே பசுமையாக இருக்கிறது. பெங்களூரு மாநகரைச் சுற்றி நிறைய குளங்கள் இருக்கின்றன. அப்படி இருக்கையில் எப்படி எனக் கேட்கிறீர்களா? இந்தியாவின் `சிலிக்கான் வேலி' என அறியப்படும் பெங்களூருவில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. கடந்த வருட ரிப்போர்ட் படி பெங்களூரு நகர்ப் பகுதியில் மட்டும் 1.2 கோடி பேருக்கு மேல் வசிக்கிறார்கள்.

இந்தியாவின் முதல் `டே ஜீரோ’ நகரமாகிறதா பெங்களூரு... ஐநா ஆய்வு சொல்வது என்ன? #WhereIsMyWater

நகரத்தில் இருக்கும் மக்கள் அனைவரும் நிலத்தடி நீரையே ஆதாரமாகக் கொண்டுள்ளனர். அனைவரும் குழாய், போர்வெல் என நிலத்தடி நீரையே பயன்படுத்துகின்றனர். இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துவருகிறது. எவ்வளவு மழை பெய்தாலும் மக்களின் பயன்பாட்டின் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் குறைவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மேலும் நகரத்தைச் சுற்றியுள்ள நீர்நிலைகள் முழுவதும் மாசுவால் நிறைந்துள்ளன. மாசுவால் இந்த நீர் குடிப்பதற்கு அல்ல, ஏன் குளிப்பதற்குக் கூடப் பயன்படுத்த முடியாத நிலையை எட்டிவிடுகிறது. மேலும் அங்கு வேகமாக வளர்ந்துவரும் தொழிற்சாலைகளும் முக்கிய காரணமாக அமைந்துள்ளன. இதே நிலை தொடர்ந்தால் சரியாக இன்னும் பத்து வருடத்துக்குள் பெங்களூரு நகரின் நிலத்தடி நீர் உறியப்பட்டு`டே ஜீரோ’ நகராக மாறும். 

இதைத் தவிர்க்க கர்நாடக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வறட்சியால் ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிக்க மழைநீர் சேமிப்பு திட்டத்தைத் தீவிரமாக முன்னெடுத்துள்ளது. இதுவரை 1.20 லட்சம் மக்களின் வீடுகளில் மழைநீர் சேமிப்பு திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை ஏற்படுத்த தவறும் மக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டாலும், அரசாங்கம் இதில் மெத்தனப்போக்காகவே இருந்துவருவது நன்றாகத் தெரிகிறது. இதனால் ஐநா குறிப்பிட்ட ஆண்டுக்கு முன்பாகவே டே ஜீரோ நகராகப் பெங்களூரு மாறும் என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

இந்தியாவின் முதல் `டே ஜீரோ’ நகரமாகிறதா பெங்களூரு... ஐநா ஆய்வு சொல்வது என்ன? #WhereIsMyWater

சென்னைக்கு இந்த நிலைமை வருமா?

சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துவிட்டாலும் தற்போது சென்னைக்கு அருகில் உள்ள ஏரி போன்ற நீர் ஆதாரங்களை வைத்து தப்பித்து வருகிறோம். இதிலும் ஒரு சில ஏரிகள் வறண்டுவிட்டன. கோடைமழை என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது போன்ற நிலையும் ஏற்பட்டுவிட்டது. சென்னை மாநகராட்சிக்கு நாள் ஒன்றுக்கு 1,100 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவை. ஆனால், தற்போது 550 மில்லியன் லிட்டர் மட்டுமே விநியோகிக்கப்படுகிறது. நீர்நிலைகள் வற்றியதால் பாதி அளவு தண்ணீர் கொடுக்க முடியாத நிலைக்கு அரசு தள்ளாடி வருகிறது. 

இந்தியாவின் முதல் `டே ஜீரோ’ நகரமாகிறதா பெங்களூரு... ஐநா ஆய்வு சொல்வது என்ன? #WhereIsMyWater

இந்நிலையில் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும், தண்ணீரைச் சேமிக்க வேண்டும் எனப் பல நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஆனால் இவையெல்லாம் வெறும் கண்துடைப்பாகத்தான் இருக்கிறது. முன்கூட்டியே அரசு நீர் நிலைகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டது என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். நிலைமை இப்படியே சென்றால் சென்னையின் நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்குச் சென்றுவிடும். மழைநீரைச் சேமிக்க, நீர்நிலைகளைப் பாதுகாக்க, அரசும் மக்களும் முன்வரவில்லை என்றால் சென்னையும் ஒருநாள் ‘டே ஜீரோ’ நிலைக்குத் தள்ளப்படும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை!

Vikatan