Published:Updated:

மால்கள் ஓகே; ரயில் நிலையங்கள் மோசம்... பொது இடங்களில் குடிநீர் வசதி எப்படி இருக்கிறது?

செ.கார்த்திகேயன்

பொது இடங்களில் மக்கள் பயன்பாட்டுக்குக் கட்டாயமாக குடிநீர் வைக்கவேண்டும் என்பது அரசு ஆணை. அது எந்தளவில் நடைமுறையில் இருக்கிறது? சென்னையின் பிரபல இடங்களுக்கு நேரடி விசிட் அடித்தோம்.

மால்கள் ஓகே; ரயில் நிலையங்கள் மோசம்... பொது இடங்களில் குடிநீர் வசதி எப்படி இருக்கிறது?
மால்கள் ஓகே; ரயில் நிலையங்கள் மோசம்... பொது இடங்களில் குடிநீர் வசதி எப்படி இருக்கிறது?

மிழகத்தின் மற்ற மாவட்டங்களைவிட சென்னையில் தண்ணீர்ப் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. தண்ணீர்ப் பிரச்னைகளைச் சமாளிக்க முடியாமல், சென்னையில் வசிக்கும் வெளியூர்வாசிகள் அவரவர்களின் சொந்த ஊருக்கே கிளம்பும் ஐடியாவில் அலைந்துகொண்டிருக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் தண்ணீர் பற்றிய பேச்சுகள்தான். இந்நிலையில் பொது இடங்களில், பொதுமக்களின் பயன்பாட்டுக்காக நீர் சரியான முறையில் வழங்கப்படுகிறதா என்பதைத் தெரிந்துகொள்ள, மக்கள் அதிகம் கூடும் ரயில்நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மெட்ரோ நிலையம், ஷாப்பிங் மால்கள் மற்றும் தியேட்டர்களுக்கு விசிட் அடித்தோம். 

பொது இடங்களில் மக்களின் பயன்பாட்டுக்கு இலவசமாகக் குடிநீர் வழங்கவேண்டும் என்பது அரசு ஆணை. ஆனால் அதை ஒருசில பொது இடங்களில் மட்டுமே பார்க்க முடிந்தது. உள்ளூர் ரயில் நிலையங்களில் மிகவும் மோசம். 

ஷாப்பிங் மால்கள் மற்றும் திரையரங்குகள்

மால்கள் ஓகே; ரயில் நிலையங்கள் மோசம்... பொது இடங்களில் குடிநீர் வசதி எப்படி இருக்கிறது?

சென்னை மக்கள் அதிகம் கூடும் மிக முக்கிய இடங்களுள் ஷாப்பிங் மால்களும், திரையரங்குகளும் தவிர்க்கமுடியாதவை. திரையரங்குகளில் குடிநீர் வைக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்ட பிறகும், பெரும்பாலான திரையரங்குகள் இதை ஃபாலோ செய்வதேயில்லை. தண்ணீரை இலவசமாக வழங்கிவிட்டால், தண்ணீர் பாட்டில்கள் விற்பனை குறைந்துவிடும் என்பதே அதற்குக் காரணம். பெரும்பாலான திரையரங்குகள், வீட்டிலிருந்து கொண்டுவரும் தண்ணீர் பாட்டில்களைக் கூட உள்ளே அனுமதிப்பதிலும் கெடுபிடி காட்டுகின்றன. 

நாம் விசிட் அடித்த பிரபல திரையரங்கம் ஒன்றில், குடிப்பதற்குத் தண்ணீர் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் கண்ணுக்கு தெரியாத இடத்தில், ஒரு ஓரத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதிலும் தண்ணீர் இல்லை. கேட்டதற்குப் பிறகுதான் தண்ணீர் கேனை மாற்றினார். ஊழியர்களிடம் இதைச் சுட்டிக்காட்டி, ``ஏன் கண்ணுக்குத் தெரியாத இடத்தில் குடிநீரை வைத்திருக்கிறீர்கள்?" என்று கேட்டதற்கு, சிரிப்பை மட்டுமே பதிலாக உதிர்த்துச் சென்றார். தென் சென்னையில் இருக்கும் சில திரையரங்குகளில் இலவச குடிநீருக்கான எந்த வசதியும் செய்யாமல்தான் இருந்தது. அதே போல பெரும்பாலான ஷாப்பிங் மால்களிலும் குடிநீருக்கான எந்தவொரு வசதியும் செய்திருப்பதாகத் தெரியவில்லை. சில இடங்களில் பெயருக்கென்று குடிநீர் வைத்திருந்தாலும், அவை சுகாதாரமான முறையில் இருப்பதில்லை.

மெட்ரோ ரயில் நிலையங்கள்:

உள்ளூர்ப் போக்குவரத்துக்கு மக்கள் அதிகம் பயன்படுத்தும் போக்குவரத்துகளில் ஒன்றாக சென்னை மெட்ரோ ரயில் நிலையங்கள் உருவெடுத்திருக்கின்றன. விமானநிலையம் முதல் சென்ட்ரல் வரையிலான மெட்ரோ வழித்தடத்தில் ஈக்காட்டுத்தாங்கல், அசோக்நகர் மற்றும் வடபழனி மெட்ரோ ரயில்நிலையங்களுக்குச் சென்று பார்த்தோம். இலவச குடிநீர் ஓரிரண்டு இடங்களில் வைக்கப்பட்டிருக்கிறது. அதுவும் டிக்கெட் கவுன்டர்களுக்கு வெளியில், ஒரு மூளையில் வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தண்ணீர் பாட்டில்கள் அடைக்கப்பட்ட வெண்டிங் மெஷின்கள் பார்க்கும் இடங்களிலெல்லாம் இருக்கின்றன. 

உள்ளூர் ரயில் நிலையங்கள்:

மால்கள் ஓகே; ரயில் நிலையங்கள் மோசம்... பொது இடங்களில் குடிநீர் வசதி எப்படி இருக்கிறது?

சென்ற பொது இடங்களிலேயே முகம் சுழிக்கும்படியான அனுபவம் கிடைத்தது உள்ளூர் ரயில்நிலையங்களில்தான். குறிப்பாக சைதாப்பேட்டை, கிண்டி, கோடம்பாக்கம் ரயில்நிலையங்களில் குடிதண்ணீர் குழாய்களின் நிலைமை மிகவும் மோசமாகவும் அசுத்தமாகவும் இருந்தன. கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருக்கும் ரயில்நிலைய மேலாளரைச் சந்தித்து, பயணிகள் நீர் அருந்தும் இடம் பராமரிப்பின்றி இருக்கிறதே என்கிற கேள்வியை முன்வைத்தோம். அவர் நிர்வகிக்கும் கோடம்பாக்கம் நிலையத்தின் அவலநிலையை அவருக்கே சுட்டிக் காட்டினோம். கேள்வி கேட்கிறோம் என்கிற பதற்றத்துடனேயே, யாருக்கோ போன் செய்து குடிநீர் குறித்த பிரச்னையை விவரித்துக் கொண்டிருந்தார். இங்கு இலவசமான குடிநீர் இருக்கும் இடம்தான் பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது. ஆனால், பணம் கொடுத்து தண்ணீர் வாங்கும் இடம் சுத்தமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. அரசு சார்ந்த பொது இடங்கள், அதுவும் உள்ளூர்ப் போக்குவரத்துக்கு மக்கள் பிரதானமாகப் பயன்படுத்தும் ரயில் நிலையமே இந்த நிலையில் இருந்தால் என்ன செய்வது?!

இதேபோல உங்களுடைய மாவட்டங்களிலும் பொதுஇடங்களில் குடிநீர் வசதி மோசமாக இருக்கிறதா? #WhereIsMyWater என்ற ஹேஷ்டேக்கில் சமூகவலைதளங்களில் பகிர்ந்துகொள்ளுங்கள். கேள்வி கேட்பது நம் கடமை. கேட்பது, நம் உரிமை!

Vikatan