Published:Updated:

`உங்கள் மாவட்டத்தில் நிலத்தடி நீர் எந்தளவு குறைந்துள்ளது?' இங்கே பார்க்கலாம் #VikatanInfographics

`உங்கள் மாவட்டத்தில் நிலத்தடி நீர் எந்தளவு குறைந்துள்ளது?' இங்கே பார்க்கலாம் #VikatanInfographics
`உங்கள் மாவட்டத்தில் நிலத்தடி நீர் எந்தளவு குறைந்துள்ளது?' இங்கே பார்க்கலாம் #VikatanInfographics

கடந்த ஆண்டு மே மாதத்தைவிட இந்த ஆண்டு மே மாதம் தமிழகத்தில் உள்ள 22 மாவட்டங்களில் நிலத்தடி நீர் அதிகளவில் குறைந்துள்ளது.

ல்வேறு நாள்களாகத் தமிழகம் மட்டுமன்றி, இந்தியா முழுவதும் பேசுபொருளாக இருப்பது தண்ணீர்ப் பிரச்னைதான். இந்த வருடம் எதிர்பார்த்த அளவுக்குப் பருவமழை பெய்யாததால், தமிழகம் முழுவதும் அதிகளவு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் அணையின் நீர்மட்டமும் குறைந்துள்ளதால் பொதுமக்களுக்குக் குடிநீர் விநியோகிப்பதிலும் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் நிலத்தடி நீரும் மிக வேகமாகக் குறைந்து வருகிறது. ஆழ்துளைக் கிணறுகளும் வேகமாக வறண்டு வருகின்றன. 

குடிநீர் மற்றும் அன்றாடத் தேவைக்காக மட்டுமன்றி வணிக தேவைகளுக்காகவும் நிலத்தடி நீரையே பயன்படுத்துவதால் அதன் அளவு மிக வேகமாகக் குறைந்துள்ளது. சமீபத்தில் பொதுப்பணித்துறை சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டமானது 300 முதல் 500 அடிக்குக் கீழ் வரை சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. 

`உங்கள் மாவட்டத்தில் நிலத்தடி நீர் எந்தளவு குறைந்துள்ளது?' இங்கே பார்க்கலாம் #VikatanInfographics

ஆய்வின்படி, கடந்த ஆண்டு மே மாதத்தைவிட இந்த ஆண்டு மே மாதம் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர், சேலம், நாமக்கல், நீலகிரி, சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் தர்மபுரி ஆகிய 22 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டமானது அதிகளவில் குறைந்துள்ளது. அதிலும் முக்கியமாகப் பெரம்பலூரில் 4.65 மீட்டரும் திருவண்ணாமலையில் 4.17 மீட்டரும் குறைந்துள்ளது. அதேபோல், நாகப்பட்டினம், திருச்சி, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் நிலத்தடி நீரானது கடந்த வருடத்தைக் காட்டிலும் இந்த வருடம் அதிகரித்துள்ளது. 

சென்னையில் பருவமழை பெய்யாததால் 200 அடியில் கிடைத்த தண்ணீர், தற்போது 400 முதல் 700 அடிக்குச் சென்று விட்டதாக மெட்ரோ குடிநீர் அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர். சென்னையைப் பொறுத்தவரை மேற்கு மாம்பலம், நுங்கம்பாக்கம், தி.நகர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, அம்பத்தூர், ஆவடி, தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர், மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், 150 முதல் 200 அடியிலிருந்த நிலத்தடி நீர் 400 முதல் 700 அடிக்குச் சென்றுள்ளது. சென்னை போன்ற பல்வேறு கடலோர மாவட்டங்களில் நிலத்தடி நீர் கிடைக்க வேண்டும் என ஆழமாகத் தோண்டுவதால், அங்கெல்லாம் கடல்நீர் ஊடுருவி உப்புத்தன்மையும் அதிகரித்துவிட்டது என சுற்றுச்சூழல் வாதிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

மத்திய - மாநில அரசுகள் கொண்டுவந்த பல்வேறு நீர் மேலாண்மைத் திட்டங்கள் எல்லாம் மக்களுக்குப் பயன்பட்டதாகத் தெரியவில்லை. பாசனத் திட்டங்களை விரிவுபடுத்துவது, நதிகளை இணைப்பது, நீர் மின்சக்தித் திட்டங்களை அதிகரிப்பது என்று தரைப்பரப்பில் உள்ள நீரைப் பயன்படுத்திக்கொள்வதிலேயே கவனம்செலுத்தி வந்திருக்கிறது. நிலத்தடி நீர் மட்டத்தைப் பாதுகாக்கும் நீர்வழிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை. 

`உங்கள் மாவட்டத்தில் நிலத்தடி நீர் எந்தளவு குறைந்துள்ளது?' இங்கே பார்க்கலாம் #VikatanInfographics

டெல்லி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட 21 இந்திய நகரங்களின் நிலத்தடி நீர் 2020-ல் தீர்ந்துபோய்விடும் என்று நிதி ஆயோக் அறிக்கையானது 2018-ல் தெரிவித்தது. அது விரைவில் நடந்தாலும் வியப்பில்லை. பார்க்கும் இடமெங்கும் குடிநீருக்குக்கூட வழியில்லாமல் பொதுமக்கள் குடங்களோடுதான் இருக்கின்றனர். நீரைச் சேமிக்க வேண்டிய கடமையும் கட்டாயமும் தற்போது அரசைத் தாண்டி, ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்க வேண்டும். 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு