Published:Updated:

`தண்ணி பிடிக்கும்போது ட்ரெயின் வந்துட்டா அவ்ளோதான்!' நடைபாதைவாசிகளின் தண்ணீர்ப் போராட்டம்

`தண்ணி பிடிக்கும்போது ட்ரெயின் வந்துட்டா அவ்ளோதான்!' நடைபாதைவாசிகளின் தண்ணீர்ப் போராட்டம்
`தண்ணி பிடிக்கும்போது ட்ரெயின் வந்துட்டா அவ்ளோதான்!' நடைபாதைவாசிகளின் தண்ணீர்ப் போராட்டம்

எழும்பூர் பகுதி நடைபாதைவாசிப் பெண்களிடம் கேட்டோம். காதுகளைச் செவிடாக்கும் வண்டிச் சத்தங்களுக்குப் பழகிப்போனவர்கள், நமக்குக் கேட்க வேண்டுமென்பதற்காகக் கத்திப் பேசுகிறார்கள். நடைபாதையில் உட்காரப் போன நம்மை, `இங்க உட்காரும்மா' என்று தங்களுடைய பிள்ளைகள் தூங்குவதற்காக வைத்திருக்கிற பழைய மெத்தை மீது உட்கார வைக்கிறார்கள்.

முட்டிமோதி லாரித் தண்ணீர் பிடித்து வாழ்கிற மக்கள் ஒருபுறம், ஆழ்துளைக் கிணறு வற்றிப்போனால் தண்ணீரை பணம் கொடுத்து வாங்கிப் பயன்படுத்துகிற மக்கள் இன்னொருபுறம். இதில், வாழ்வதற்கு இடமே இல்லாமல், தெருக்களிலே சமைத்து, குளித்து, துணி துவைத்து என்று வாழ்ந்துகொண்டிருக்கிற மக்கள், தண்ணீர்ப் பஞ்ச காலத்தில், தங்களுடைய தண்ணீர்த் தேவைகளுக்கு என்ன செய்கிறார்கள்? எழும்பூர் பகுதி நடைபாதைவாசிப் பெண்களிடம் கேட்டோம். காதுகளைச் செவிடாக்கும் வண்டிச் சத்தங்களுக்குப் பழகிப்போனவர்கள், நமக்குக் கேட்க வேண்டுமென்பதற்காக கத்திப்பேசுகிறார்கள். நடைபாதையில் உட்காரப் போன நம்மை, `இங்க உட்காரும்மா' என்று தங்களுடைய பிள்ளைகள் தூங்குவதற்காக வைத்திருக்கிற பழைய மெத்தை மீது உட்கார வைக்கிறார்கள். வியர்வை  பிசுபிசுப்புடன் சிணுங்கிக் கொண்டிருக்கிற குழந்தைகளைச் சமாதானப்படுத்தியபடி பேசினார்கள். 

``இங்கே தண்ணி டேங்க் இருக்கும்மா. ஆனா, ஒரு குடம் தண்ணி அஞ்சு ரூவா. ஐம்பதுக்கும் நூறுக்கும் கூலி வேலை பார்த்துக்கிட்டிருக்கிற நாங்க, சாப்பிடுவோமா, இல்ல அவ்ளோ காசு கொடுத்து தண்ணி வாங்குவோமா? அதனால, எழும்பூர் ரயில் தண்டவாளுக்கு நடுவுல இருக்கிற குழாய்கள்ல தண்ணி பிடிப்போம். தப்புதான்... ஆனா, எங்களுக்கு வேற வழி தெரியலீங்க. தண்ணி பிடிக்கிறப்போ அங்கேயிருக்கிற போலீஸ்காரங்க கண்ணுல மாட்டிக்கிட்டோம்னா, ஃபைன் போட்டுருவாங்க. கட்ட முடியலைன்னா ஜெயில்ல தூக்கிப் போட்டிருவாங்க. தண்ணி பிடிக்கப்போய், வயசுப் பொம்பளை பசங்ககூட திட்டு வாங்கி அசிங்கப்பட்டுக்கிட்டுதான் வரும். 

சில ஆபீஸருங்க நல்லவங்களா இருந்தா, எங்களைக் கொஞ்ச நேரத்துக்கு கண்டுக்காம விட்டுருவாங்க. சிலர், பிடிச்ச தண்ணியைப் பிடுங்கிட்டு அனுப்பிடுவாங்க. இன்னும் சிலர், அந்தத் தண்ணில துணி துவைச்சுட்டு வந்தா, துவைச்ச துணியைப் பிடுங்கி காவாயில  கொட்டிடுவாங்க, இல்லன்னா தண்டவாளத்துல போட்டுடுவாங்க. அவ்ளோ நேரம் கஷ்டப்பட்டதெல்லாம் வீணாப் போயிடும். தண்ணி  புடிக்கிற இடத்துல கொச கொசன்னு ஒரே தண்டவாளமா இருக்கும். அதனால, தண்ணி பிடிச்சுக்கிட்டு இருக்கிறப்போ ட்ரெயின் வந்துடுச்சுன்னா, எந்தத் தண்டவாளத்துல ட்ரெயின் வருதுன்னு தெரியாம இங்கியும் அங்கியும் ஓடிக்கிட்டு இருப்போம். 

`தண்ணி பிடிக்கும்போது ட்ரெயின் வந்துட்டா அவ்ளோதான்!' நடைபாதைவாசிகளின் தண்ணீர்ப் போராட்டம்

வர்ற அரசியல்வாதிங்க எல்லாம் இதோ உங்க பிரச்னையைத் தீர்த்துடுறோம்; அதோ உன் பிரச்னையைத் தீர்த்துடுறோம்னு சொல்றாங்களே தவிர, ஒண்ணும் செய்யறதில்லை. எந்தக் கட்சி வந்தாலும் எங்களுக்கு பிரயோஜனம் இல்ல. காக்கா, குருவிக்குக்கூட இருக்கிறதுக்கு ஒரு கூடு இருக்கு, குடிக்கிறதுக்கு தண்ணி வைக்கிறீங்க. மனுஷங்களா பொறந்த எங்களுக்கு இரக்கம் காட்டத்தான் யாருக்கும் மனசு இல்லைங்க'' என்றவரிடம் உங்க பேரு என்னக்கா என்றவுடன், பெயர் சொல்ல மனதில்லாமல் மடியில் கிடக்கிற குழந்தைக்கு பாலையும் பிஸ்கெட்டையும் குழைத்து ஊட்ட ஆரம்பித்தார்.

இரவு 8 மணிக்கு துணி துவைத்துக்கொண்டிருந்த இன்னொரு பெண், ``தண்ணி கிடைக்கிறப்போதானே துணிதுவைக்க முடியும். ஏற்கெனவே, படுக்கிறதுக்கு, துணி மாத்துறதுக்குக் கூட மறைவில்லாம கஷ்டப்பட்டுக் கிடக்கிறோம். இந்த மாதிரி தண்ணீர்ப் பஞ்ச காலத்துல, ஒண்ணுக்கு, ரெண்டுக்குப் போறதுக்கே கஷ்டம். இதுல குளிக்கிறதுக்கு தண்ணிக்கு எங்க போறது. புள்ளைங்களைக்கூட நல்ல தண்ணி கிடைச்சா குளிக்க வைப்போம். எங்களுக்கு எப்ப விடியும்னே தெரியலை'' என்றவரின் வேதனைக் குரல் இன்னமும் நம் காதுகளில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. 

இவர்களுக்குமான `வளர்ச்சி', இந்தச் சமுதாயத்தில் எப்போதுதான் சாத்தியமாகும்?

Vikatan
அடுத்த கட்டுரைக்கு