Published:Updated:

ஆக்கிரமிப்பு, அசுத்தம், அட்டூழியம்... புழல் ஏரியின் தற்போதைய நிலை! #SpotVisit

``இந்த சுற்றுவட்டார கழிவுநீரெல்லாம் இந்த ஏரியிலதான் கலக்குது. அசுத்தமாகுது. அதைக் கேட்க ஆளில்லை. காலையில வாக்கிங் போறவங்க, குளிக்க வர்றவங்க, மீன் பிடிக்கிறவங்கன்னு மக்கள் நடமாட்டம் இருந்துக்கிட்டே இருக்கிறதால ஓரளவுக்குப் பாதுகாப்பு இருக்கு. அதுக்கப்புறம் இந்தப்பகுதியில நடமாடவே முடியாது."

ஆக்கிரமிப்பு, அசுத்தம், அட்டூழியம்... புழல் ஏரியின் தற்போதைய நிலை! #SpotVisit
ஆக்கிரமிப்பு, அசுத்தம், அட்டூழியம்... புழல் ஏரியின் தற்போதைய நிலை! #SpotVisit

சென்னையின் தாகம் தீர்க்கும் நீராதாரங்களில் ஒன்று, புழல் ஏரி. சுமார் 4,500 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி 3,300 மில்லியன் கனஅடி தண்ணீரைச் சுமக்கக்கூடியது. ஏறக்குறைய மூன்றரை மாதங்கள் சென்னைக்குத் தேவையான குடிநீரைப் புழல்தான் தந்துகொண்டிருந்தது. 

ஆக்கிரமிப்பு, அசுத்தம், அட்டூழியம்... புழல் ஏரியின் தற்போதைய நிலை! #SpotVisit

நாடே வறட்சியில் தத்தளிக்கும் இந்தச் சூழலில் புழல் ஏரி எப்படியிருக்கிறது..? ஒரு நேரடி விசிட் அடித்தோம். 

திருவள்ளூர் மாவட்டம். பொன்னேரி வட்டத்தில் செங்குன்றத்தில் விரிந்துகிடக்கிறது புழல் ஏரி. ஒரு பக்கம் அம்பத்தூர்,  இன்னொரு பக்கம் சூரப்பேட்டை என அகன்று விரிந்த புழல் ஏரி பெருமளவு ஆக்கிரமிப்புகளால் சுருங்கிவிட்டது. 

ஆக்கிரமிப்பு, அசுத்தம், அட்டூழியம்... புழல் ஏரியின் தற்போதைய நிலை! #SpotVisit

நாம் சென்றது அதிகாலை நேரம் என்பதால், பொதுமக்கள் பலரும் நடைப்பயிற்சி செய்துகொண்டிருந்தார்கள். ஆங்காங்கே சில இடங்களில் குளம்போல தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது. அவற்றில் சிலர் குளித்துக்கொண்டிருக்கிறார்கள். இன்னொருபுறம் சிறுவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்தார்கள். பிற பகுதிகள் காய்ந்து வறண்டு பொழிவிழந்து கிடக்கின்றன. 

ஆக்கிரமிப்பு, அசுத்தம், அட்டூழியம்... புழல் ஏரியின் தற்போதைய நிலை! #SpotVisit

மீன் பிடித்துக்கொண்டிருந்த அசோக் என்பவரிடம் பேச்சுக்கொடுத்தோம். ``எனக்குப் பூர்வீகமே புழல்தான். பத்து வருஷத்துக்கு முன்னாடி இப்படியொரு வறட்சி வந்துச்சு. அதுக்கப்புறம் இப்போதான். இதோ மீன் பிடிக்கிறேனே... இந்த இடத்துக்கெல்லாம் வரவேமுடியாது. கரையில நின்னுதான் பாக்கணும். போன வருஷம்கூட நிறைய தண்ணீர் இருந்துச்சு. இப்போ மொத்தமா வறண்டுபோய் கெடக்கு. மழை குறைஞ்சு போச்சு. இவங்க ஏரியையும் தூர்வார்றதில்லை. இந்த சுத்துவட்டார கழிவுநீரெல்லாம் இந்த ஏரியிலதான் கலக்குது. அசுத்தமாகுது. அதைக் கேட்க ஆளில்லை. காலையில வாக்கிங் போறவங்க, குளிக்க வர்றவங்க, மீன் பிடிக்கிறவங்கன்னு மக்கள் நடமாட்டம் இருந்துக்கிட்டே இருக்கிறதால ஓரளவுக்குப் பாதுகாப்பு இருக்கு. அதுக்கப்புறம் இந்தப்பகுதியில நடமாடவே முடியாது. சமூக விரோதிகள் வந்து அடைஞ்சிடுறானுங்க. ஏரிக்குள்ள என்ன நடந்தாலும் கேட்குறதுக்கு ஆளில்லை. உள்ளேயிருக்கிற கருவேல மரங்களோட நிழல் மறைவுல உட்கார்ந்து தண்ணி அடிக்கிறாங்க. பாட்டிலையும் அப்படியே உடைச்சு அங்கேயே போட்டு போயிடுறாங்க" என்று வருத்தமாகப் பேசுகிறார் அசோக்.

ஆக்கிரமிப்பு, அசுத்தம், அட்டூழியம்... புழல் ஏரியின் தற்போதைய நிலை! #SpotVisit

வழக்கமாக, ஏரிக்குள் தண்ணீர் தேங்கியிருக்கும் பகுதிகளில் வாய்க்கால் வெட்டி, ஓரிடத்துக்கு நீர் கொண்டுவரப்படுகிறது. அங்கிருந்து மின்மோட்டார்கள் மூலம் தண்ணீர் எடுக்கும் பகுதிக்கு கொண்டு வந்து பம்பிங் செய்து பிறபகுதிகளுக்கு அனுப்புவார்கள். தற்போது நீர்வரத்து குறைந்துவிட்டதால் எல்லாப் பணிகளும் நிறுத்தப்பட்டுவிட்டன. 

ஆக்கிரமிப்பு, அசுத்தம், அட்டூழியம்... புழல் ஏரியின் தற்போதைய நிலை! #SpotVisit

``புழல் ஏரியைச் சுற்றி செங்குன்றம், திருமுல்லைவாயில், ஒரகடம், பம்மதுகுளம், நாரவாரிக்குப்பம், கள்ளிக்குப்பம், பம்மதுகுளம் ஏரி, லட்சுமிபுரம், எரான்குப்பம்,  பொத்தூர் சூரப்பட்டு உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்குள்ள அரசியல்வாதிகள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏரிக்குள் நிறைய ஆக்கிரமிப்பு செய்துவிட்டார்கள். ஏரிக்கு நீர் வரும் பாதைகள் அடைபட்டுப்போனதால் மழைபெய்தாலும்கூட ஏரி நிரம்புவது சந்தேகம்தான்" என்கிறார்கள் வாக்கிங் செல்பவர்கள். 

புழல் ஏரியின் பராமரிப்பை பொதுப்பணித்துறையும், தண்ணீர் விநியோகத்தைச் சென்னைக் குடிநீர் வாரியமும் கவனிக்கின்றன. ஏரியில் தண்ணீரைச் சேமித்து வைக்க யாரும் ஏற்பாடு செய்வதில்லை. அதனால் நிறைய நீர் வீணாகிவிடுகிறது..." என்று வேதனையோடு சொல்கிறார்கள் அந்தப்பகுதி மக்கள். 

ஆக்கிரமிப்பு, அசுத்தம், அட்டூழியம்... புழல் ஏரியின் தற்போதைய நிலை! #SpotVisit

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவரிடம் பேசினேன். ``பருவமழை பெய்யவில்லை. வெயிலும் அதிகமாக இருக்கிறது. புழல் ஏரிக்கு நீர்தரும் சோழவரம், பூண்டி ஏரிகளிலும் நீர் இருப்பு வெகுவாக குறைந்துவிட்டது. அதனால், புழல் ஏரிக்கு வரவேண்டிய நீர்வரத்து முற்றிலும் நின்றுவிட்டது. மற்றபடி, ஏரியில் தண்ணீரைச் சேமித்துவைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதெல்லாம் தவறு. ஏரியில் கரைகள் பலப்படுத்தும் பணி இப்போதுதான் நிறைவடைந்திருக்கிறது.  தற்போது, மதகுகளைச் சீரமைக்கும் பணியும், தூர்வாரும் பணியும் நடந்து வருகிறது. இந்த மாதத்துக்குள் முடித்துவிடுவோம்..." என்று முடித்துக்கொண்டார்.

சென்னையைச் சுற்றி புழல் ஏரியைப் போல பல நீர்நிலைகள் உள்ளன. அவற்றை முறையாகத் தூர்வாரி பராமரித்தாலே சென்னையின் தேவைக்கு மேல் குடிநீர் கிடைக்கும். அதிகாரிகளின் அலட்சியம், மக்களின் பொறுப்பின்மை, அரசியல்வாதிகளின் ஆக்கிரமிப்பு காரணமாக ஏரிகள் சுருங்கி வருகின்றன. இதே வேகத்தில் சென்றால்  அடுத்த தலைமுறைக்கு எதுவும் மிஞ்சப்போவதில்லை. என்னதான் செய்யப்போகிறது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு?

Vikatan