Published:Updated:

தென்னாப்பிரிக்கா  கிரிக்கெட்டில் மட்டுமல்ல... நீர்க் கட்டமைப்பிலும் இப்படித்தான்!

தென்னாப்பிரிக்கா  கிரிக்கெட்டில் மட்டுமல்ல... நீர்க் கட்டமைப்பிலும் இப்படித்தான்!
தென்னாப்பிரிக்கா  கிரிக்கெட்டில் மட்டுமல்ல... நீர்க் கட்டமைப்பிலும் இப்படித்தான்!

உலக மக்கள் தொகையில் பெருமளவு பங்கை இந்தியா கொண்டிருந்தாலும், உலக நீர்வள ஆதாரங்கள் இந்தியாவில் குறைவாகவே உள்ளன. தற்போதைய நிலையில் இந்தியா எதிர்கொண்டிருக்கும் சவால்கள் இதோ...

"உள்ளூர் வானொலி நிகழ்ச்சிகளில் தண்ணீர் இல்லாமல் சமைப்பது எப்படி, கழிவறைகளில் தண்ணீருக்குப் பதிலாக மரத்தூளைப் பயன்படுத்துவது எப்படி போன்றவை ஒலிபரப்பப்பட்டன. அந்நாட்டின் நகராட்சி அதிகாரிகள் தண்ணீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்களை வெளியிட்டனர். கை கழுவுவதற்குப் பதிலாக ரசாயன சுத்திகரிப்பான்களைப் பயன்படுத்தலாம் என்கிற அறிவிப்புகள் வெளியானவண்ணம் இருந்தன" - கடந்த 2018-ம் வருடத்தின் தொடக்கம் தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனுக்கு இப்படித்தான் ஆரம்பித்தது. 

இந்நகரம் அந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில், உலகிலேயே ஒரு சொட்டு நீர்கூட இல்லாத முதல் நகரமாக மாறிப்போனது. இரண்டாம் உலகப் போர் தாக்குதல்போல, இந்த எச்சரிக்கைச் செய்தி உலக நாடுகளையே கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தொடர்ந்து 3 ஆண்டுகளாக மழை இல்லாததாலும், மோசமான பருவநிலை மாற்றம் காரணமாகவும் கேப் டவுனின் அனைத்து நீர்நிலைகளும் வறண்டு போயின. தென்னாப்பிரிக்கா, கடந்த 100 ஆண்டுகளில் காணாத வறட்சியை அப்போதுதான் சந்தித்தது. இன்னமும் அந்த வறட்சியிலிருந்து அந்த நகரம் மீண்டு வரவில்லை. 

‘பிரச்னையைத் தீர்ப்பதற்கு, கையில் எந்தத் தீர்வுமே இல்லை, இனி இயற்கையின் போக்கில் ஏதாவது நல்லது நடந்தால்தான் உண்டு’ என்று அந்நகரத்தின் நீர்வள ஆதாரங்களை நிர்வகிக்கும் நிபுணர்கள் கைவிரித்துவிட்டார்கள். அதனால், இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே கேப் டவுனில் வசிக்கும் மக்களை எச்சரிக்கத் தொடங்கிவிட்டது தென்னாப்பிரிக்க அரசு. வழக்கமாக உபயோகிக்கும் தண்ணீரின் அளவைக் குறைத்துக்கொள்ளுங்கள் என்று தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தது. இந்த நிலையில், கடந்த சில நாள்களாகப் பெய்த மழையால் கேப் டவுன் நகரில் உள்ள அணைகளின் நீர்மட்டம் ஜீரோ லெவலில் இருந்து சிறிது சிறிதாக முன்னேறி 0.08 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இது மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இன்னும் முழுமையான வறட்சி தீரவில்லை எனக் குமுறுகின்றனர் கேப் டவுன் மக்கள். 

தென்னாப்பிரிக்காவின் மோசமான நீர் மேலாண்மை!

தென்னாப்பிரிக்கா  கிரிக்கெட்டில் மட்டுமல்ல... நீர்க் கட்டமைப்பிலும் இப்படித்தான்!

கேப் டவுனின் குடிநீர்ப் பற்றாக்குறைக்கு முக்கிய காரணம், தென்னாப்பிரிக்கா நாட்டின் நீர் மேலாண்மை சரியில்லாததுதான். இதன் தாக்கம் அந்நாட்டின் மற்ற நகரங்களில் குறைவாக இருந்தாலும், கேப் டவுனில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக, அந்நகரின் நீராதாரங்களாக இருக்கும் அனைத்து நீர்த்தேக்கங்களும் வறண்டுபோய்விட்டன என்பதுதான். கேப் டவுன் நகரத்தின் கிடுகிடு வளர்ச்சி, நகரத்துக்குக் குடிபெயர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது ஆகியவையே தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு அடிப்படைக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. இந்த இரண்டு காரணங்களும் சென்னைக்கும் பொருந்தக்கூடியவை. இந்தக் காரணங்களைத் தாண்டி பேசப்படாத இன்னொரு காரணமும் உண்டு. அது, தண்ணீரை உபயோகப்படுத்துவதில் அந்நாட்டு மக்களுக்கு இருந்த அலட்சியம்.

இந்தியாவுக்கும் இதே நிலைதான்!

உலக மக்கள் தொகையில் பெருமளவு பங்கை இந்தியா கொண்டிருந்தாலும், உலக நீர்வள ஆதாரங்கள் இந்தியாவில் குறைவாகவே உள்ளன. தற்போதைய நிலையில் இந்தியா எதிர்கொண்டிருக்கும் சவால்கள் இதுதான். வெள்ளத்துக்கும் வறட்சிக்கும் காரணமாக இருக்கும் எதிர்பாராத மழைப்பொழிவு, தண்ணீர்ப் பயன்பாட்டில் போதிய திறனற்ற நிலை, வரம்பில்லாத நிலத்தடி நீர் உபயோகம், நீர் மாசுபாடு, நீர்ப் பராமரிப்புச் சட்டங்கள் சரியாக நடை முறைப்படுத்தப் படாமல்விடுவது, நீரின் தரம் குறைவது என்கிற பட்டியலைப் பார்க்கும்போது, கேப் டவுனின் நிலைக்குக் காரணமான அனைத்து அம்சங்களும் நமக்கும் பொருந்தக்கூடியவைதான் என்று தெரிகிறது. 

தென்னாப்பிரிக்கா  கிரிக்கெட்டில் மட்டுமல்ல... நீர்க் கட்டமைப்பிலும் இப்படித்தான்!

கடந்த வருடம் ஐ.நா எடுத்த `டே ஜீரோ’ ஆய்வில் இடம்பிடித்த மாஸ்கோ, இஸ்தான்புல், லண்டன், மெக்சிகோ போன்ற 11 நகரங்களில் பெங்களூரு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. பெங்களூரைச் சுற்றி இருக்கும் மலைகள், அணைகள் என அனைத்துமே பசுமையாக இருக்கும்போது, `டே ஜீரோ’ நிலை அம்மாநிலத்துக்கு எப்படி வரும் என்கிறீர்களா. குறிப்பாக இந்தியாவின் `சிலிக்கான் வேலி' என அறியப்படும் பெங்களூருவில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. கடந்த வருட அறிக்கையின்படி பெங்களூரு நகர்ப் பகுதியில் மட்டும் 1.2 கோடி பேருக்கு மேல் வசிக்கிறார்கள். இதனால் பெங்களூருவின் தண்ணீர்த் தட்டுப்பாடு ஓங்கிக் காணப்படுகிறது. சரியான நீர் மேலாண்மையும் அம்மாநிலத்தில் இல்லை. அரசாங்கமும் மெத்தனமாக இருக்கிறது. இது இப்படியே தொடர்ந்தால் `டே ஜீரோ’ நிலை சீக்கிரமாகவே வந்துவிடும் என்று மக்கள் அஞ்சுகிறார்கள். 

இந்தியாவில், பாதுகாப்பான குடிநீர் வழங்கலில் கிராமங்களைக் காட்டிலும் நகர்ப்பகுதிகளே முன்னிலை வகிக்கின்றன. அதே நேரத்தில் எதிர்பாராத தண்ணீர்ப் பஞ்சங்களால் கடுமையாக பாதிப்புக்குள்ளாவதும் நகரங்கள்தான். 2020-ம் ஆண்டில் சென்னை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் உட்பட 21 இந்திய நகரங்களில் நிலத்தடிநீர் இல்லாத நிலை உருவாகும். இதனால், சுமார் 10 கோடி மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்கிற நிதி ஆயோக் அறிக்கையின் விவரம் அச்சத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. மோசமான நீர் மேலாண்மை காரணமாக இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு தண்ணீர் பிரச்னை இப்போது தலை தூக்கியுள்ளது. இது இப்படியே தொடர்ந்தால் வருகிற 2030-ம் ஆண்டில் மிக மோசமான விளைவுகள் ஏற்படும் எனவும் அந்த ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.  

இனிமேலாவது தண்ணீரின் மகத்துவத்தை நாம் கட்டாயம் உணர வேண்டும். நீர் பயன்பாட்டில் நம் அலட்சியமும், நீர் மேலாண்மையில் அரசின் அலட்சியமும் இப்படியே தொடர்ந்தால்... கேப் டவுனின் நிலையை எட்ட இந்தியாவுக்கு அதிக காலம் பிடிக்காது என்றே எண்ணத் தோன்றுகிறது.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு