Published:Updated:

இப்போது சரியில்லை... நம் முன்னோர்கள் நீர் மேலாண்மை எப்படியிருந்தது?

இப்போது சரியில்லை... நம் முன்னோர்கள் நீர் மேலாண்மை எப்படியிருந்தது?
இப்போது சரியில்லை... நம் முன்னோர்கள் நீர் மேலாண்மை எப்படியிருந்தது?

ற்போதைய தண்ணீர்ப் பிரச்னையைப் பற்றி விவாதிக்கும் முன் பண்டைக்கால தமிழர்களின் நீர் மேலாண்மையையும் அப்போது இருந்த உற்பத்தி முறையையும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். இது நீர் மேலாண்மையில் எந்த மாதிரியான கவனம் செலுத்த வேண்டும் என்பதை உணர்த்தும். தமிழர்கள் நிலங்களைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகைகளாகப் பிரித்து வைத்திருந்தனர். இந்த ஐந்து நிலங்களிலும் மக்களின் உணவுப் பழக்க வழக்கங்களும், வாழ்வியல் முறைகளும் ஐந்து வகைகளாக மாறுபட்டிருந்தன. அதேபோல் அங்கிருந்த மலைப்பகுதி உள்ளிட்டவற்றைப் பொறுத்து உணவு உற்பத்தி முறைகளும் இருந்தன. பண்டமாற்று முறையிலேயே உணவுத் தேவைகளை நிறைவேற்றிக்கொண்டனரே தவிர, நிலத்தின் பாங்குக்கு எதிரான எந்த ஓர் உற்பத்தி முறையையும் இவர்கள் செய்யவில்லை.

இப்போது சரியில்லை... நம் முன்னோர்கள் நீர் மேலாண்மை எப்படியிருந்தது?

ஆனால், இன்றோ நிலத்தின் பாங்குக்கு எதிரான உற்பத்தி முறைகளை மேற்கொள்கிறார்கள். முன்பு மலைப்பகுதிகளில் வாழ்ந்த தொல் தமிழர்கள் தங்களுக்குக் கிடைத்த தேன், திணை, பழங்கள் உள்ளிட்டவற்றைச் சமவெளிப்பகுதிகளில் வாழ்ந்தவர்களிடம் பண்டமாற்று முறையாகக் கொடுத்து தங்களுக்குத் தேவையான அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்களைப் பெற்று வந்தனர். பிற்காலத்தில் இந்த முறை மாறியது. மண்ணின் வளத்துக்கு ஏற்ப பயிர்களை விளைவிப்பதை விடுத்து சமவெளி பகுதிகளில் விளைந்த பயிர்களை மலைப்பகுதிகளிலும் காடுகள் நிறைந்த பகுதிகளிலும் பயிரிட்டனர். இதனால் மிகப்பெரிய சுற்றுச்சூழல் மாறுபாடு உருவாகியது. மலைப்பகுதியில் இருக்க வேண்டியது எது என்று பார்த்தால் அடர் காடுகள், மரங்கள்தான். ஆனால், இன்று கொடைக்கானல், வால்பாறை போன்ற தமிழக மலைப்பகுதியில் மரங்கள் அழிக்கப்பட்டு முழுக்க தேயிலைத் தோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான ஏக்கரில் உள்ள தேயிலைத் தோட்டங்களால் நமக்கு வர வேண்டிய பருவமழை உட்படச் சரியான அளவு பெய்ய முடியாத சூழ்நிலை உருவாகிவிட்டது.

இப்போது சரியில்லை... நம் முன்னோர்கள் நீர் மேலாண்மை எப்படியிருந்தது?

மரம் வளர்த்து மழை பெறுவோம் என்ற முழக்கம் எல்லாம் ஊர் பகுதிகளிலேயே உள்ளது. அதிக மழைநீரைப் பெற்றுத்தரக்கூடிய மலைப்பகுதிகளில் இந்த விஷயங்கள் பேசப்பட மறுப்பதால் சூழ்நிலை இன்னும் மோசமாகிக்கொண்டே செல்கிறது. மலைப்பகுதிகளிலிருந்து கிடைக்கும் நீர்தான் ஆறுகளின் வழியாக நமது தேவைகளைப் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன. மழையின் ஆதி முகமாக இருக்கக்கூடிய மலைகள் வேட்டையாடப்படுவதின் விளைவால் பருவமழை பொய்த்துப்போனது. மிருகங்களுக்குமான உணவும் இல்லாமல்போனது. நமக்கான தண்ணீரும் இல்லாமல்போனது. தண்ணீர் பிரச்னைக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். மருதநிலத்தில் நிலங்களை நஞ்சை, புஞ்சையாக இரண்டு வகைகளாகப் பிரித்தார்கள். நஞ்சையில் நெல், கரும்பு, வாழை போன்ற நீரை அதிகமாக உறிஞ்சக்கூடிய உணவுப் பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டது. புஞ்சை நிலத்தில் மானாவாரி எனப்படும் வானம் பார்த்த விவசாயம் நடைபெற்றது. சிறுதானியங்கள், பயறு வகைகள் உற்பத்தி செய்யப்பட்டன. காலப்போக்கில் பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சிகளுக்கு பிறகு, இந்தப் புஞ்சை நிலங்களிலும் ஆழ்துளைக் கிணறுகள் மூலமாக நிலத்தடி நீர் அதிகப்படியாக உறிஞ்சப்பட்டு நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்கள் விளைவிக்கப்பட்டன. விவசாயிகளுக்கே தெரியாமல், அவர்களை வஞ்சித்து சூழ்ச்சியால் இந்த உணவுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

இப்போது சரியில்லை... நம் முன்னோர்கள் நீர் மேலாண்மை எப்படியிருந்தது?

மானாவாரி விவசாயம் என்றால் வெறும் வெயிலை மட்டும் நடக்கக்கூடிய விவசாயம் கிடையாது. பருவமழை, மண்ணின் ஈரப்பதம், காற்றின் ஈரப்பதம் இந்த மூன்றின் மூலம்தான் மானாவாரி விவசாய உற்பத்தி அந்தக் காலங்களில் சிறப்பாக நடைபெற்று வந்தது. தற்போதைய காலகட்டத்தில் கோடைக்காலங்களில் மண்ணிலோ, காற்றிலோ ஈரப்பதம் என்பது சுத்தமாக இல்லை. இதனால் பயிர்கள் உற்பத்தி என்பது கோடைக்காலங்களில் மறைந்துகொண்டிருக்கின்றன. சமவெளி பகுதிகளில் முன்பெல்லாம் அதிகமான மரங்கள் இருந்தன. இதனால் காற்றில் எப்போதும் ஈரப்பதம் குறிப்பிட்ட அளவு எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். இன்றைய காலகட்டங்களில் வறண்டு காணப்படுகின்றன.

இப்போது சரியில்லை... நம் முன்னோர்கள் நீர் மேலாண்மை எப்படியிருந்தது?

ஒட்டுமொத்தத்தில் பார்த்தால் முரணான உற்பத்தி முறைகளால் நிலத்தடி நீர் அதிக வேட்டையாடப்பட்டுள்ளன. இது ஒருபுறம் என்றால் இன்னொரு புறம் தொழிற்சாலைகள். இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் தேவையில்லாத தொழிற்சாலைகளை, வெளிநாடுகளில் இருந்து அகற்றப்பட்ட தொழிற்சாலைகளை இங்கு நிறுவியதன் விளைவாக அதிகளவிலான நீர் உறிஞ்சப்பட்டு அது ரசாயனங்கள் மூலம் பூமியில் மீண்டும் கலக்கப்பட்டு, இருந்த நன்னீரும் நச்சுத் தன்மையுள்ள நீராக மாறிவிட்டது. இதற்கு நாம் கண் முன் காணும் உதாரணம் நொய்யல் ஆறு. நன்னீரும் நஞ்சாகிவிட்ட சூழல் இருக்கக்கூடிய நீரையும் பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. இப்படி இயற்கைக்கு முரணான விஷயங்களால் நம் வாழ்வை நாமே கேள்விக்குறியாக்கி வருகிறோம்.

- 'தண்ணீர்' வினோத்

Vikatan