Published:Updated:

உறிஞ்சப்படும் உப்பு நீர் என்ன ஆகிறது? - கடல்நீரைக் குடிநீராக்கும் திட்ட அபாயங்கள்

உறிஞ்சப்படும் உப்பு நீர் என்ன ஆகிறது? - கடல்நீரைக் குடிநீராக்கும் திட்ட அபாயங்கள்
உறிஞ்சப்படும் உப்பு நீர் என்ன ஆகிறது? - கடல்நீரைக் குடிநீராக்கும் திட்ட அபாயங்கள்

"சென்னையில் கடல்நீரைக் குடிநீராக்கும் மேலும் ஐந்து மையங்கள் உடனடியாக தொடங்கவிருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. உண்மையில் இந்தத் திட்டம் சரியானதா, இதனால் குடிநீர்ப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்குமா, இந்தத் திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?"

லைவிரித்தாடும் தண்ணீர்ப் பஞ்சம், எந்த மூலையில் பார்த்தாலும் பொதுமக்களின் கூக்குரல், தெருக்குழாய்கள் முன்னே அணிவகுக்கும் காலிக்குடங்கள், வற்றிய கிணற்றில் ஊசலாடும் வாளி, குடிநீர் கேட்டு சாலைமறியல், ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு தண்ணீர்ப் பிரச்னைக்காகத் தீக்குளிப்பு முயற்சி, தண்ணீருக்காகக் கத்திக்குத்து, `தண்ணீர் இல்லை' எனத் தீயணைப்பு நிலையங்கள் கைவிரிப்பு... இதுபோன்று எங்கு கேட்டாலும் `தண்ணீர் இல்லை’ என்கிற பேச்சு மட்டும்தான். இப்போது தமிழகத்தில் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது தண்ணீர்த் தட்டுப்பாடு.

தொடர் போராட்டத்தில் மக்கள்...கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சிகள்... 'கொஞ்சம் பொறுங்கள் கடல்நீரைக் குடிநீராக்கித் தருகிறோம்' என்கிறார்கள் ஆட்சியாளர்கள். தண்ணீர்ப் பிரச்னைக்குத் தீர்வாகப் பல்வேறு தரப்பினரால் ஒரு சேர முன்வைக்கப்படும் ஒரே மாற்று, கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம். சென்னையில் கடல்நீரைக் குடிநீராக்கும் மேலும் ஐந்து மையங்கள் உடனடியாக தொடங்கவிருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. உண்மையில் இந்தத் திட்டம் சரியானதா, இதனால் குடிநீர்ப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்குமா, இந்தத் திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?

கடல்நீரிலிருந்து உப்பைப் பிரித்தெடுத்து, குடிநீராக மாற்றும் முறையே கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம். பொதுவாகக் காய்ச்சி வடித்தல் (Thermal distillation) மற்றும் எதிர் சவ்வூடு பரவல் (Reverse Osmosis - RO) என்ற இரண்டு தொழில்நுட்பமுறைகள் இருப்பினும் எதிர் சவ்வூடு முறையே பெரும்பாலும் உலகநாடுகளால் பரிந்துரைக்கப்படுகிறது. சர்வதேச உப்பு நீக்கும் சங்கத்தின் (International Desalination Association) அறிக்கையில், 2015 வரையிலான கணக்கெடுப்பின்படி, உலக அளவில் சுமார் 150 நாடுகளில் 18,000 உப்பு நீக்கும் தொழிற்சாலைகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக ஐக்கிய அரபு அமீரகம், குவைத், சவுதி அரேபியா மற்றும் கத்தார் போன்ற வறட்சி மிகுந்த வளைகுடா நாடுகளில் மட்டும் 55 சதவிகிதம் கடல்நீர் பயன்பாட்டில் உள்ளது. சவுதி அரேபியாவின் செங்கடல், பெர்சியன் வளைகுடாவில் மட்டும் கடல்நீரை குடிநீராக்கக்கூடிய 27 ஆலைகள் உள்ளன.

உறிஞ்சப்படும் உப்பு நீர் என்ன ஆகிறது? - கடல்நீரைக் குடிநீராக்கும் திட்ட அபாயங்கள்

திட்டத்தின் விளைவுகள், ஆபத்தில் உலகச் சமநிலை!

அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா மாகாணத்தின் 840 மைல் கடற்கரைப்பகுதியில் 2006-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, பொசைடன் (Poseidon) உள்ளிட்ட நிறுவனங்களின் 21 கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலைகள் இருந்தன. இதன்மூலம் நவாடா (Nevada), ஆரஞ்ச் கவுண்டி (Orange county) உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. 

இந்த ஆலைகளின் தாக்கத்தால் கடல்வளம் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளானது என `பசிபிக் இன்ஸ்டிட்யூட் வாட்டர் புரோகிராம்' (Pacific Institute’s Water Program) என்ற அமைப்பு ஆய்வறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தது. `Desalination: An Ocean of Problems' என்னும் பெயரிலான அந்த ஆய்வறிக்கையில், ``கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலைகளினால், ஆண்டுதோறும் சுமார் 3.4 மில்லியன் அளவிற்கு மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழக்கின்றன. இதனால் மீனவர்கள் சுமார் 165 மில்லியன் பவுண்ட் அளவிலான மீன்களை நாள்தோறும் இழக்கின்றனர். மேலும் சுமார் 717.1 மில்லியன் பவுண்ட் அளவிற்கு எதிர்கால மீன்பிடி இருப்பை இழப்பதோடு, சுமார் $212.5 மில்லியன் டாலர் அளவு பொருளாதார இழப்பையும் சந்திக்கின்றனர்” எனக் குறிப்பிட்டிருந்தது.

இந்த அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் ஹேதர் கூலே (Heather Cooley), “கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலைகள் நீரை உறிஞ்சுவதனாலும், கரிப்பு நிறைந்த நச்சு நீரை வெளியேற்றுவதனாலும் கடலின் சுற்றுபுறச்சூழல் வெவ்வேறு முறைகளில் மாசடைகிறது. இந்தப் பகுதிகளில் கடல் உயிரினங்கள் வாழ்வதும் அரிதாகும் சூழல் ஏற்படுகிறது” என்று தெரிவிக்கிறார்.

சுத்திகரிப்பு செய்யப்பட்ட கடல்நீர் போக மீதமுள்ள வேதிகலந்த உப்புநீர் மீண்டும் கடலுக்குள்ளேயே செலுத்தப்படும். சாதாரண கடல்நீரின் உப்புத்தன்மையை விட உட்செலுத்தப்படும் எஞ்சிய நீரின் தன்மை இரண்டு மடங்கு உப்புத்தன்மை வாய்ந்தது. கடல்நீரின் உப்புத்தன்மை இயல்பாக மூன்று சதவிகிதம். ஆனால் வெளியேற்றப்படும் நீரின் உப்புத்தன்மை ஆறு சதவிகிதம். இந்த உப்புநீரோடு சுத்திகரிப்பில் பயன்படுத்தப்பட்ட வேதிப்பொருள்களும் சேர்ந்து வெளியேறுவதால் நச்சு நிறைந்த உப்பாக (Toxic Brine) மாறி கடலில் கலக்கிறது. இதனால் அந்தப் பகுதி முழுமையும் ரசாயன மண்டலமாக மாறி, உயிர்வாழத் தகுதியற்ற இடமாக மாறுகிறது. பெரும்பாலும் சிறிய உயிரினங்களே அழிவுக்குள்ளாவதனால் உணவுச்சங்கிலியின் அடிப்படையே இதனால் அறுபடுகிறது. சர்வதேசக் கடல்நீர் வல்லுநர்கள் 'அழிவுப்பகுதி' (Dead Zone or Kill Zone) என்று அழைக்கிறார்கள். சுழற்சிமுறையில் இந்த நீரே மீண்டும் குடிநீராக சுத்திகரிக்க உள்ளிழுக்கப்படுகிறது.

உறிஞ்சப்படும் உப்பு நீர் என்ன ஆகிறது? - கடல்நீரைக் குடிநீராக்கும் திட்ட அபாயங்கள்

திட்டத்தின் பின்னணி என்ன?

'ஃபுட் & வாட்டர் வாட்ச்' (Food & Water Watch) என்ற பொதுநல அமைப்பின் அறிக்கையில், ``கடல்நீரைக் குடிநீராக்கும் முறை, நம் பாரம்பார்ய முறையைவிட நான்கு மடங்கு செலவு மிகுந்த தொழில்நுட்பம். பெருமளவு மின்சார விரயமும் ஏற்படும். போரான் உள்ளிட்ட வேதிப்பொருள்கள் கடல்நீரில் உள்ளன. ஆனால் சாதாரண குடிநீரில் அவை கிடையாது. சுத்திகரிப்பின் மூலம் 50 சதவிகிதம் முதல் 70 சதவிகிதம் வரை மட்டுமே இவை நீக்கப்படும். இந்தத் தொழில்நுட்பத்தால் கடல்வாழ் உயிரினங்கள் அழியும். தண்ணீர் மாசுபடும். சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். உலக வெப்பமயமாதல் உண்டாகும்!” என எச்சரிக்கை விடுக்கிறது. 

தமிழகத்தில் தடம்பதித்த திட்டம்:

சென்னை மீஞ்சூரில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் ஆலைதான், தெற்காசியாவிலேயே மிகப்பெரியது. அதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியிலும் ரூ.5,000 கோடி செலவில் உருவாக்கப்பட்டது. அடுத்தடுத்து பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் விரிவாக்கப்பணிகளும் நடந்து வருகின்றன. சென்னை மட்டுமல்லாது ரூ.700 கோடி செலவில் தூத்துக்குடி மாவட்டத்திலும், ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூரிலும், ரூ.1000 கோடியில் விழுப்புரம் மாவட்டத்திலும், கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி எனத் தொடர்ந்து தமிழகக்  கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டங்கள் அனைத்தும் பிரான்ஸ், ஜப்பான், சிங்கப்பூர் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு பெரும் பொருள்செலவில் தயாராகி வருகின்றன.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டபோது அந்தப் பகுதி மக்கள் வரவேற்றனர். ஆனால், பாதிப்பை நேரடியாக உணர்ந்த பின்னர் அந்த ஆலைகளுக்கு எதிராக ``NO DESAL PLANT” என்ற கோஷத்துடன் குழந்தைகளும், பெண்களும், மீனவர்களும் என ஒட்டுமொத்த மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். வெளிநாட்டில் மட்டுமல்ல தமிழ்நாட்டில், சென்னை நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலையிலிருந்து விநாடிக்கு 2,000 லிட்டர் கழிவுநீர் வெளியேற்றப்படுவதால், அப்பகுதி குடிநீர், உப்புநீராக மாறியிருக்கிறது.

உறிஞ்சப்படும் உப்பு நீர் என்ன ஆகிறது? - கடல்நீரைக் குடிநீராக்கும் திட்ட அபாயங்கள்

மேலும் கடல் அரிப்பு ஏற்பட்டு மீனவக்குப்பத்தில் 200 அடிக்குக் கடல்நீர் உட்புகுந்து சமுதாயக்கூடம், வலைப்பின்னல் கூடமெல்லாம் இடிந்து விழுந்தன. கடலின் மேற்பரப்பில் வேகமாகக் கழிவுநீர் பாய்வதனால் கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் உடைந்து கடலில் அடித்துச் செல்லப்பட்டன. இதுபோன்ற தொடர் நிகழ்வால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த அப்பகுதி மக்கள் ஆலைக்கு எதிராகப் போராடி வருகின்றனர். இதேபோல் சென்னை மீஞ்சூரிலும் போராட்டம் நடந்தது. 

இயற்கையே இயங்கியல் தத்துவம்:

தென்மேற்குப் பருவமழை, வடகிழக்குப் பருவமழை என வான்மழை பார்த்து வாழ்ந்த மக்கள் இன்று கடலை நோக்கி நகர்வது காலக்கொடுமை. கடல்நீரிலிருந்து உப்பு வடித்த கூட்டம், இப்போது உப்புநீரிலிருந்த குடிநீரை வடிக்கும்வழியில் ஒதுங்குகிறது. நவீனத்தின் பெயரால் நரக வாழ்க்கை வாழ்கிறது. குடிநீர்ப் பிரச்னைகளுக்குக் கடல்நீரைக் சுத்திகரிக்கும் ஆலைகள் ஒருபோதும் நிரந்தரத் தீர்வாக இருக்கமுடியாது. அது மக்களின் தாகத்தைத் தணிப்பதற்கு மாறாக, நிறுவனங்களின் லாபத்தையே கணிக்கின்றன.  

சென்னையில் மட்டும் சுமார் 4,000 ஏரிகள்வரை பயன்பாட்டில் இருந்தன. ஆண்டுக்குச் சராசரியாக 1,350 மி.மீ மழை பொழிகிறது. குடியிருப்புகளாக மாறிவிட்ட ஏரிகளைத் தவிர்த்து விட்டு, இப்போதுள்ள சில நூற்றுக்கணக்கான ஏரிகளையாவது தூர்வாரி, சீர்செய்து பெய்யக்கூடிய மழைநீரைச் சேகரித்தாலே குடிநீர்ப் பஞ்சம் என்பது எப்போதும் இருக்காது. மேலும் காவிரி, பாலாறு, வைகை, தாமிரபரணி போன்ற தமிழக நதிகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதன் மூலம் வீணாகக் கடலில் கலக்கும் தண்ணீரைத் தேக்கிவைத்து குடிநீருக்கும், விவசாயத்திற்கும் ஆண்டுமுழுவதும் பயன்படுத்திக்கொள்ளலாம். இதுபோன்ற பணிகளைச் செய்ய, கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலை அமைப்பதற்கான செலவைக் காட்டிலும் குறைவான தொகையே ஆகும். `அறிவற்றங் காக்குங் கருவி' என எழுதியவன் தமிழன். எனவே, அறிவுத் தெளிவோடு செயல்படுவோம்!

Vikatan
அடுத்த கட்டுரைக்கு