Published:Updated:

ஹாய் மிஸ்டர்.வேலுமணி... உங்க அமைச்சர்களே எப்படியெல்லாம் வதந்தி பரப்புறாங்க பாருங்களேன்!

ஹாய் மிஸ்டர்.வேலுமணி... உங்க அமைச்சர்களே எப்படியெல்லாம் வதந்தி பரப்புறாங்க பாருங்களேன்!
ஹாய் மிஸ்டர்.வேலுமணி... உங்க அமைச்சர்களே எப்படியெல்லாம் வதந்தி பரப்புறாங்க பாருங்களேன்!

நீங்க தண்ணீர் பற்றாக்குறை என்பது ஒரு வதந்தின்னு சொல்றீங்க. ஆனா, அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வேற மாதிரி சொல்றாரே. நாகை மாவட்டத்துல சரியான மின்சார விநியோகம் இல்லாத காரணத்தால நாகை மக்களுக்குக் குடிநீர் சரியா விநியோகிக்க முடியலைன்னு சொல்றாரு.

மைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்களுக்கு, 

வணக்கமுங்க அமைச்சரே! நீங்க செய்தியாளர்கள் கிட்ட பேசுனத கேட்டேனுங்க. தமிழ்நாட்டுல தண்ணீர் பற்றாக்குறை ஒண்ணும் பெரிய அளவுக்கு இல்லீன்னு சொல்லிருந்தீங்க. நீங்க சொன்னது நெசமா இருந்திருக்கக் கூடாதான்னுதான் நாங்களும் ஆசைப்படுறோம். ஆனா, என்னங்க பண்றது. நிலவரம் அப்படியில்லையே! 

சென்னை மக்கள், அங்க வேலை செய்யப்போன ஊர்க்காரப் பசங்க இப்படி அந்த நகரத்த நம்பியிருக்குற ஒவ்வொருத்தரும் படுற பாடு கொஞ்சமா நஞ்சமா. அதெல்லாம் தெரிஞ்சுக்க நேரமிருக்கா உங்களுக்கு. சென்னை மக்களோட நெலம இப்ப எப்படி இருக்குன்னு தெரியுமாங்க வேலுமணி அவர்களே!

போட்டு வெச்ச போருல நல்ல தண்ணி வந்தாலும் சரி, உப்பு தண்ணி வந்தாலும் சரி. ஆக மொத்தத்துல தண்ணி வந்தா போதுங்குற மனநிலையிலதானே உக்காந்துருக்காங்க. நீங்க பாட்டுக்குத் தண்ணி பஞ்சமெல்லா இல்லப்பான்னு சொல்லிட்டுப் போய்ட்டீங்க. தண்ணியத் தேடிச் சுத்துற மக்களுக்குத் தெரியுமே தண்ணீர் பிரச்னை வதந்தியா இல்ல 'அமைச்சர்' வேலுமணியான நீங்க சொன்னது வதந்தியானு. நேத்து உயர் நீதிமன்ற நீதிபதிங்க சொன்னதைக் கேட்டீங்களா? 

ஹாய் மிஸ்டர்.வேலுமணி... உங்க அமைச்சர்களே எப்படியெல்லாம் வதந்தி பரப்புறாங்க பாருங்களேன்!

தமிழகத்துல இப்படியொரு தண்ணீர் பிரச்னை வந்ததுக்குக் காரணம் மாநில அரசுதானாம். அதான் அமைச்சரே உங்களோட அரசு. இந்திய தணிக்கைக் குழு போன வருஷமே தண்ணீர் பிரச்னை வருமுன்னு எச்சரிச்சுட்டாங்க. ஆனா, அதைக் கொஞ்சம்கூடக் கண்டுக்காம இப்படிக் கோட்டை விட்டுட்டு டெல்லியில போய் மத்திய நீர்வள அமைச்சர சந்தித்து இப்ப உதவி கேட்டு என்ன பண்றது. முன்னமே ஏரி, குளங்கள பாதுகாத்திருந்தா இந்தப் பிரச்னை வந்திருக்குமா. உங்களுக்கு என்ன, அழிஞ்ச கொல்லையில குதிரை மேய்ஞ்சா என்ன கழுத மேய்ஞ்சா என்னங்குற கணக்கா காய்ஞ்சு கெடந்த நீர்நிலைகளை எல்லாம் பயன்பாட்டுக்குக் கொடுத்து ஆக்கிரமிக்க வெச்சாச்சு. இப்ப நாங்கதான தண்ணீருக்காக அவதிப்படுறோம். 

இட்டதெல்லாம் பயிரா... பெத்ததெல்லாம் பிள்ளையாங்குற மாதிரி, மக்களுடைய தேவையைக்கூடக் கவனிக்காம செஞ்சதெல்லாம் ஆட்சியான்னு மக்கள் கேக்குறாங்களே! அதுக்குத் தகுந்த மாதிரிதானே நீங்களும் பேசிருக்கீங்க. சென்னையோட நிலைமையப் பத்தி அமைச்சர் வேலுமணி அவர்களுக்குத் தெரிந்ததுபோல் பெரியளவுக்கு விவரம் தெரியலன்னாலும் ஏதோ ஓரளவுக்குத் தெரிஞ்சுக்கிட்டத சொல்றேனே. 

போன வாரம் உயர் நீதிமன்றம் தமிழக அரசு தண்ணீர் பிரச்னைய சமாளிக்க என்னென்ன முயற்சிகள் எடுத்துருக்குன்னு அறிக்கை தாக்கல் செய்யச் சொன்னாங்க. அந்த அறிக்கைய தயாரிச்ச சென்னை மெட்ரோ வாரியம் அதுல என்ன சொல்லியிருக்குன்னு தெரியுங்களா? இந்த வருசத்தோட வடகிழக்குப் பருவ மழை பொய்த்துப் போச்சு. அதனால, சென்னைக்குத் தண்ணீர் கொடுக்குற ஏரிகளும் வறண்டு போச்சு. அங்க தண்ணீர் வர்றதுல முக்கியமான பங்கு போரூர் ஏரியோடதுதான். அதோட நிலைமை என்ன தெரியுங்களா. முழுசா வறண்டு கிடக்கு. அதுல இருந்தாத்தானே அதை நம்பியிருக்குற மக்களுக்குத் தண்ணி கெடைக்கும். இல்லையே, இப்ப பாடாப்படுறாங்க. 

ஹாய் மிஸ்டர்.வேலுமணி... உங்க அமைச்சர்களே எப்படியெல்லாம் வதந்தி பரப்புறாங்க பாருங்களேன்!

அட சென்னைய விடுங்க, குற்றால அருவியில குளிச்சதுபோல் இருந்துச்சான்னு சொல்லுவாங்களே. அந்தக் குற்றாலத்துலயே குடிக்கத் தண்ணியில்லாம தவிச்ச கரடி ஒண்ணு செத்துருக்கு. அங்கயே அந்த நிலைமைன்னா சென்னையில எப்படியிருக்கும். சென்னை நம்பியிருக்கிறதே பருவ மழையில நிரம்புற ஏரிகளத்தானே. சென்னைக்குள்ள மூணு ஆறு ஓடுது. கூவம், அடையாறு, கொற்றலை. இந்த மூணுல முதல் இரண்டும் இப்ப இருக்குற நிலைமை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்ல. அந்தப் பக்கமா போனா உங்க மூக்கு சொல்லும் அதுங்களோட சோகக் கதைய. சென்னை மக்கள் தண்ணீருக்கு நம்பியிருக்குற முக்கியமான பெரிய ஏரிகளான சோழவரம், செம்பரம்பாக்கம், ரெட் ஹில்ஸ் மூணுமே தண்ணியில்லாம வாடிக் கெடக்க, அந்த மக்கள் எங்க போவாங்க தண்ணீருக்கு. வேற வழியில்லாம வீதியில இறங்கிப் போராடிட்டிருக்காங்க. 

இதுல நம்ம முதலமைச்சர் வேற, தண்ணீர் பற்றாக்குறை இருக்குறது நெசம்தான். ஆனா, ஊடகங்கள்தான் அதைப் பூதாகரமா காட்டுறாங்கன்னு சொல்லிருக்காரு. மென்பொருள் நிறுவனங்கள், ஐ.டி நிறுவனங்கள், மால்கள், மேன்சன்கள், சில பெரிய உணவகங்கள்-ன்னு எத்தனை பக்கம் தண்ணியில்லாம ஆளுங்கள வீட்டுக்குப் போங்கப்பா, அங்கிருந்தே உங்க வேலையச் செய்யுங்கன்னு அனுப்பிட்டிருக்காங்க. அவ்வளவு ஏனுங்க, ஸ்கூல் குழந்தைங்களுக்குச் சொல்லுற மாதிரி நெறைய அலுவலகங்கள் அவங்க ஊழியர்கள்கிட்ட வீட்டுல இருந்தே ரெண்டு மூணு குவளைகளுக்குத் தண்ணிய கொண்டு வந்துருங்கன்னு சொல்லிகிட்டு இருக்காங்க. 

இப்படியொரு நிலைமைக்கு வர்ற வரைக்கும் சும்மா இருந்தாச்சு, சரி. வந்த நிலைமைய நெனச்சு அடப் பாவமேன்னு வருத்தப்படல, அட அதுவும் சரி. ஆனா தண்ணீர் பஞ்சமே இல்லன்னு அடிச்சு விட்டீங்க பாருங்க, அதைத்தாங்க ஏத்துக்க முடியல. கிட்டத்தட்ட தலைநகரமே தண்ணியத் தேடி அல்லோலகல்லோலப் பட்டுட்டிருக்கு. அதுகூடவா உங்க கண்ணுக்குத் தெரியல. இருக்கு ஆனா இல்லைங்குற மாதிரி இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டுப் போய்ட்டீங்களே! 

ஹாய் மிஸ்டர்.வேலுமணி... உங்க அமைச்சர்களே எப்படியெல்லாம் வதந்தி பரப்புறாங்க பாருங்களேன்!

நீங்க தண்ணீர் பற்றாக்குறை என்பது ஒரு வதந்தின்னு சொல்றீங்க. ஆனா, அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வேற மாதிரி சொல்றாரே. நாகை மாவட்டத்துல சரியான மின்சார விநியோகம் இல்லாத காரணத்தால நாகை மக்களுக்குக் குடிநீர் சரியா விநியோகிக்க முடியலைன்னு சொல்றாரு. பாவம், உங்களுக்குத் தெரிஞ்ச 'உண்மை' அவருக்குத் தெரியலபோல. எப்படியெல்லாம் வதந்தி பரப்புறாரு பாருங்க. குடியிருப்புங்க, உணவகங்க, விடுதிங்க, நிறுவனங்க இவையெல்லாத்தையும் விடுங்க. எப்பப் பாரும் நீங்க அனுப்புற லாரித் தண்ணிய மட்டுமே நம்பி இருக்குற நகர்ப்புறக் குடிசைவாழ் மக்களை ஞாபகம் இருக்குங்களா! இல்ல இந்த அலப்பறையில அவங்கள மறந்துட்டீங்களா! நல்ல நாள்லயே உங்க மாநகராட்சி லாரிங்க கொண்டு வர தண்ணியத்தான் அவங்க நம்பியிருந்தாங்க. இப்ப நகரம் முழுக்க விநியோகிக்கப்போன லாரிங்கள்ல பாதி இவங்கள மறந்துட்டாங்க. அந்த மக்கள் எத்தனை பக்கம், தண்ணீ கெடைக்காம அலைஞ்சுட்டு இருக்காங்க. அவற்றையெல்லாம் கவனிக்காம, தண்ணீர் பஞ்சங்குறது புரளின்னு அசால்ட்டா அடிச்சு விட்டுட்டீங்களே.  

ஓ.எம்.ஆர் சாலையில குடியிருக்குற மக்கள் தண்ணீர் லாரிக்காகக் காத்திருந்து காத்திருந்து கடைசியில ஒரு லாரித் தண்ணிக்கு மூவாயிரத்துல இருந்து 5,000 வரை காசு கொடுத்து வாங்குறாங்க. அமைச்சர் ஐயா, சென்னையோட ஒரு சில இடத்துல எல்லாம் குளிக்க ஒரு பக்கெட் தண்ணிய செலவழிக்குறதே ஆடம்பரம் ஆயிடுச்சு தெரியுங்களா! இதுக்கெல்லாம் முழுமையான தீர்வு காண முழுவீச்சுல முயற்சி எடுக்கச் சொன்னா, பக்கத்துக் கிராமங்கள்ல இருந்து நிலத்தடி நீரை முழுசா உறிஞ்சிக் கொண்டுவந்து இங்க இறக்கிட்டு இருக்கீங்க. சென்னை முழுக்க 900 லாரிங்க தினமும் கிட்டத்த 9,000 தடவ தண்ணீயச் சுமந்துட்டு ஓடுறாங்க. தண்ணியே இல்லாம தவிக்குற சென்னைக்கு இந்தத் தண்ணியெல்லாம் எங்கிருந்து கெடைக்குது. சென்னைக்குத் தண்ணி வேணும்தான். அதுக்குப் பக்கத்துல இருக்குற ஊருங்க அதுக்காகத் தண்ணியில்லாம தவிக்க முடியுமா? 

ஹாய் மிஸ்டர்.வேலுமணி... உங்க அமைச்சர்களே எப்படியெல்லாம் வதந்தி பரப்புறாங்க பாருங்களேன்!

இதுதானா முழுமையான தீர்வு? அப்ப அந்தக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தண்ணீருக்கு எங்கீங்க போவாங்க? இதையெல்லாம் முன்னமே யோசிச்சுருந்தா, கொஞ்சமாவது தெளிவாத் திட்டமிட்டு யாருக்கும் பாதகமில்லாம பிரச்னைய சமாளிச்சுருக்கலாம். கெடக்குறதெல்லாம் கெடக்கட்டும் கிழவியத் தூக்கி மனையில வைன்னு சொல்லுவாங்க. அந்த மாதிரி, முக்கியமில்லாத விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துட்டு, மக்களோட முக்கியமான பிரச்னையில கோட்டை விட்டுட்டீங்களே! அதை மறைக்கத்தானா, இது ஒரு வதந்தின்னு நீங்க ஒரு புது வதந்தியப் பரப்பிட்டு இருக்கீங்க. என்னதான் சொன்னாலும், அமைச்சர் வேலுமணியே சொல்லிட்டாருன்னு மக்களும் தண்ணீர் இருக்குன்னு நம்பிக்கிட்டு உக்கார முடியுமா! நாங்க முயற்சி பண்ணுனாதானே அடுத்த நாளுக்குத் தண்ணீர் கிடைக்கும்.

பூண்டி ஏரியோட கொள்திறன் 3,231 மில்லியன் கன அடிங்க. ஆனா, அதுல இப்ப இருக்குறது வெறும் 26 மில்லியன் கன அடி மட்டும்தான். அதுவும் இன்னும் எத்தனை நாள் தாங்குமோ தெரியல. வீராணம் ஏரியில இருந்து வழக்கமா கெடைக்குற தண்ணியில பாதிகூட இப்பக் கெடைக்கல. இப்ப இருக்குற தண்ணீர் பிரச்னையச் சமாளிக்க இதுவரைக்கும் மட்டும் 212 கோடி செலவு பண்ணிருக்கு சென்னை மெட்ரோ வாரியம். இன்னமும் செலவு பண்ண வேண்டியிருக்கும். ஒவ்வொரு வருசமும் வடகிழக்குப் பருவமழை சென்னைக்கு 132.5 சென்டிமீட்டர் தண்ணீர் கொடுக்கும். போன வருசம் அது கொடுத்த நீர் எவ்ளோ தெரியுங்களா! வெறும் 35.2 சென்டிமீட்டர். அப்பவே இப்படியொரு பிரச்னைல போய் நிப்போமுன்னு பல ஆய்வாளர்களும் தன்னார்வலர்களும் எச்சரிச்சாங்களே. அதை காது கொடுத்துக் கேட்டு நடவடிக்கை எடுத்திருந்தீங்கன்னா இப்படியொரு பிரச்னைல மாட்டிருப்போமா? 

ஹாய் மிஸ்டர்.வேலுமணி... உங்க அமைச்சர்களே எப்படியெல்லாம் வதந்தி பரப்புறாங்க பாருங்களேன்!

எங்க ஊர்ப்பக்கம், உழுற நாளுல ஊருக்குப் போன அறுக்குற நாளுல ஆள் தேவையில்லைன்னு சொல்லுவாங்க. தேவைப்படுற நேரத்துல செய்ய வேண்டியதைச் செய்யாம இப்ப வந்து வதந்தி பரப்புர உங்களுக்கு அது நல்லாவே பொருந்துமுங்க. இனியாவது, கொஞ்சம் உள்ள நிலைமையச் சிந்தித்து, செய்ய வேண்டியதையெல்லாம் சரியான சமயத்துல செய்யுங்க. மக்கள வாட விடாதீங்க. தவிச்ச வாய்க்குத் தண்ணியில்லாம வாட விடுற அளவுக்குக் கொண்டு போகாதீங்க. அப்பத்தான் இந்த மாதிரி வதந்திகளைப் பரப்ப வேண்டிய தேவையும் இல்லாம இருக்கும். ஆளாளுக்கு இப்படி அடிச்சுவிட, இதென்ன அந்த மீன் புடிக்கற கவுண்டமணி காமெடியா?! ம்ம். சொல்லுங்க.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு