Published:Updated:

ஹோட்டல் தொழிலைப் பாதிக்கும் தண்ணீர்ப் பஞ்சம்! என்னதான் தீர்வு?

ஹோட்டல் தொழிலைப் பாதிக்கும்  தண்ணீர்ப் பஞ்சம்! என்னதான் தீர்வு?
ஹோட்டல் தொழிலைப் பாதிக்கும் தண்ணீர்ப் பஞ்சம்! என்னதான் தீர்வு?

ஹோட்டல்களுக்கு 1,800 ரூபாய் கொடுத்து வாங்கி வந்த லாரித் தண்ணீர், தற்போதைய சூழலில் கிட்டத்தட்ட 3,000 ரூபாய்க்கு அதிகமாகக் கொடுத்து வாங்கி வருகிறோம். இதுவும் இடத்தைப் பொறுத்து மாறுகிறது. கடந்த ஒரு மாதமாக, இந்தப் பிரச்னைதான் பெரிய அளவில் உருவெடுத்துள்ளது.

`தண்ணீர்த் தட்டுப்பாட்டின் காரணமாக இன்றுமுதல் ஹோட்டல் இயங்காது' என்ற அறிவிப்புப் பலகை, முதலில் சென்னைவாசிகளுக்குக் கொஞ்சம் அதிர்ச்சி கொடுக்கக்கூடியதாகத்தான் இருந்தது. அதைத் தொடர்ந்து திருவல்லிக்கேணியில் உள்ள பிரபலமான பல மேன்ஷன்களும் மூடப்பட்டு வரும் நிலையில், தண்ணீரைத் தேடியலைந்த சென்னைவாசிகள் இப்போது இருப்பிடத்தையும் தேடி அலையத் தொடங்கி இருக்கின்றனர். இதற்கிடையில், `தண்ணீர்ப் பஞ்சமில்லா வீட்டுமனைகளுக்கு எங்களை அணுகவும்' என்ற விளம்பரங்களும் தலைகாட்ட ஆரம்பித்துள்ளன. தற்போதைய சூழலில் தண்ணீர்ப் பஞ்சம் சென்னைவாசிகளைக் கொஞ்சம் சிக்கலில்தான் தவிக்கவைத்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நகர்ப்புற நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ``தண்ணீர் இல்லாத காரணத்தால் ஹோட்டல்களை மூடிவிட்டனர் எனத் தவறுதலான பரப்புரைகளைச் செய்துவருகின்றனர். ஐ.டி அலுவலகங்களில் பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவது வழக்கமானதுதான். அதற்கும் தண்ணீர்ப் பிரச்னைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஒருவேளை, ஐ.டி நிறுவனங்களுக்கு ஏதேனும் தண்ணீர்ப் பிரச்னை ஏற்பட்டால் அதைச் சரிசெய்வதற்கு அரசு தயாராக இருக்கிறது" என்றார். ``தண்ணீர்ப் பிரச்னை குறித்த விஷயத்தில், அமைச்சர் பொய் சொல்கிறார்" எனத் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட பலகட்சித் தலைவர்களும் அமைச்சரைக் குற்றம்சாட்டினர்.

ஹோட்டல் தொழிலைப் பாதிக்கும்  தண்ணீர்ப் பஞ்சம்! என்னதான் தீர்வு?

இந்நிலையில், நேற்று தமிழக ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தைச் சார்ந்த நிர்வாகிகள் தண்ணீர்ப் பிரச்னையால், ஹோட்டல் தொழிலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அமைச்சரை நேரில் சந்தித்து தங்களின் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் வெங்கடசுப்பு, ``தண்ணீரின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என்பது ஹோட்டல் உரிமையாளர்களுக்கு மிகப்பெரிய நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. தண்ணீரை வெகுதொலைவிலிருந்து கொண்டுவர வேண்டியுள்ளது, இந்தப் பிரச்னைகளுக்கான அடிப்படைக் காரணமாகும். அதனால், தீர்மானமான விலையில் தண்ணீரை வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம். எந்த வகைகளில் எல்லாம் தண்ணீரைச் சேமிக்க முடியுமோ, அந்த வகைகளில் எல்லாம் சேமிப்பதற்கான முயற்சிகளையும் ஹோட்டல் உரிமையாளர்கள் எடுத்துவருகிறோம்.

ஹோட்டல் தொழிலைப் பாதிக்கும்  தண்ணீர்ப் பஞ்சம்! என்னதான் தீர்வு?

இந்தப் பிரச்னை குறித்து தமிழக அமைச்சரையும்  சந்தித்துப் பேசியுள்ளோம். அரசு சார்பில் இரண்டு முன்னெடுப்புகளைச் செய்யவுள்ளதாக வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர். ஒன்று, கழிவு நீரைச் சேகரித்து அவற்றைச் சுத்திகரிப்பு செய்து அதன்மூலம் கிடைக்கக்கூடிய 90 மில்லியன் லிட்டர் தண்ணீரைத் தொழிற்சாலைகளுக்கு வழங்க ஏற்பாடு செய்துள்ளதாகவும், இந்தத் திட்டம் நிறைவேறும்பட்சத்தில் இதுவரை தொழிற்சாலைகளுக்குக் கொடுக்கப்பட்டு வந்த 90 மில்லியன் லிட்டர் தண்ணீரானது வீடுகளுக்கும் ஹோட்டல்களுக்கும் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர். அதேபோல் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டமும் சில மாதங்களில் நடைமுறைக்கு வரும் எனச் சொல்லியுள்ளனர். இது நடைமுறைப்படுத்தப்பட்டால், இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வுகிடைக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.

ஹோட்டல்கள் நடத்தும் அனைவரும், பெரும்பாலான தனியார் லாரி நிறுவனங்களின் தண்ணீரை நம்பித்தான் தொழில்செய்து வருகிறோம். அரசும் எங்களுக்கு உதவிசெய்தால் நல்லவிதமாக அமையும். `நீங்களும் கழிவு நீரைச் சுத்திகரித்து குடிநீரைத் தவிர்த்து மற்றவற்றுக்கு அவற்றைப் பயன்படுத்துங்கள்' என்கிற அறிவுரையை அரசு வழங்கியுள்ளது. ஹோட்டல்களுக்கு 1,800 ரூபாய் கொடுத்து வாங்கி வந்த லாரித் தண்ணீர், தற்போதைய சூழலில் கிட்டத்தட்ட 3,000 ரூபாய்க்கு அதிகமாகக் கொடுத்து வாங்கி வருகிறோம். இதுவும் இடத்தைப் பொறுத்து மாறுகிறது. கடந்த ஒரு மாதமாக, இந்தப் பிரச்னைதான் பெரிய அளவில் உருவெடுத்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதே மாதிரியான பிரச்னை ஒன்று உருவானது. அப்போது லாரி ஸ்டிரைக்கால் ஏற்பட்ட பிரச்னையால், அரசு அதிகாரிகளே தண்ணீர் எடுக்கக் கூடாது எனப் பிரச்னை எழுந்தது. இப்போது, சில சமூக விரோதிகள் இந்தப் பிரச்னைகளைத் தனதாக்கிக்கொண்டு பணம் பறிக்க முடியுமா என முயன்றுவருகின்றனர். இதனால்தான் தண்ணீர் லாரிகள் நீண்ட தொலைவிற்குச் செல்ல வேண்டியிருக்கின்றன” என்றார்.

'நீரின்றி அமையாது உலகு'க்கு, சென்னை மட்டும் விதிவிலக்கா என்ன?

Vikatan
அடுத்த கட்டுரைக்கு