Published:Updated:

'எல்லா தப்பையும் நாமதான் செஞ்சிருக்கோம்!' சென்னையின் தண்ணீர்ப் பஞ்சம் சொல்லும் பாடம்

'எல்லா தப்பையும் நாமதான் செஞ்சிருக்கோம்!' சென்னையின் தண்ணீர்ப் பஞ்சம் சொல்லும் பாடம்
'எல்லா தப்பையும் நாமதான் செஞ்சிருக்கோம்!' சென்னையின் தண்ணீர்ப் பஞ்சம் சொல்லும் பாடம்

மழை பொய்த்துவிட்டது, அதனால் சென்னைக்குத் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது என்று நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். உண்மையில் இப்போதைய தண்ணீர் பற்றாக்குறை சூழலியல் தவறுகளால் நடந்தவையல்ல. அது மனிதத் தவறுகளால் நடந்தது.

"எனக்குப் புரியவில்லை. அந்த வானின் நீலத்தையும் பூமியின் கதகதப்பையும் எப்படி விலைக்கு வாங்குவீர்கள். இந்தக் காற்றின் தூய்மையும் நீரின் பிரகாசமும் நமக்கு சொந்தமில்லையே! இதை எப்படி விலைக்கு வாங்குவீர்கள்?" 

இது அமெரிக்க அதிபருக்குப் பூர்வகுடி செவ்விந்தியத் தலைவர் சியாட்டில் எழுதிய கடிதத்தின் ஒரு சிறு பகுதி. இன்று தண்ணீர் பற்றாக்குறையில் வாடும் சென்னை மக்கள் அவர் எழுதிய கடிதத்தின் முழு சாராம்சத்தையும் நிச்சயம் படித்தே ஆக வேண்டும். இங்கு நீரை, நிலத்தை, காற்றை, காட்டை மனிதர்களுக்காக மட்டுமே யாரும் படைக்கவில்லை. அவை யாராலும் யாருக்காகவும் படைக்கப்பட்டவையல்ல. பல கோடி ஆண்டுகளாக இயற்கை பல்வேறு படிநிலைகளைக் கடந்து வளர்ந்து இந்த நிலையில் வந்து நிற்கிறது. அந்த இயற்கையின் வளர்ச்சியில் தற்போது நம் முன் இருக்கும் நீர், நிலம் போன்ற வளங்கள்மீது நாம் எந்த அளவுக்கு அதிகாரம் மற்றும் ஆதிக்கம் செலுத்த விரும்புகிறோமோ அந்த அளவுக்கு அதைப் பராமரிக்கவும் வேண்டும். இல்லையேல் இன்று சென்னை அனுபவிக்கும் அவலநிலைதான் ஏற்படும். 

மழை பொய்த்துவிட்டது, அதனால் சென்னைக்குத் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது என்று நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். உண்மையில் இப்போதைய தண்ணீர் பற்றாக்குறை சூழலியல் தவறுகளால் நடந்தவையல்ல. அது மனித தவறுகளால் நடந்தது என்கிறார் நீரியல் ஆய்வாளர் பேரா.ஜனகராஜன். 

'எல்லா தப்பையும் நாமதான் செஞ்சிருக்கோம்!' சென்னையின் தண்ணீர்ப் பஞ்சம் சொல்லும் பாடம்

தற்போது தமிழகம் முழுவதும் தலைப்புச் செய்தி அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது சென்னையின் தண்ணீர் பஞ்சம். அந்த மக்களின் அன்றாட தேவைக்காக, விவசாய நலன்களைப் பற்றிய அக்கறைகளைப் புறந்தள்ளிவிட்டு, தலைநகரத்தில் தண்ணீர் இல்லை என்பதால் பக்கத்துக் கிராமங்களிலிருந்து தண்ணீரை எடுத்துக்கொண்டு வருகிறார்கள். திரும்பிய திசையெங்கும் தனியார் மற்றும் மெட்ரோ லாரிகள் தண்ணீரைச் சுமந்தவண்ணம் பறந்துகொண்டிருக்கின்றன. பல ஐ.டி மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் தம் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலைசெய்ய பணித்துள்ளது. குழாய்களில் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் வேகத்தைக் குறைத்து நீரை ரேஷன் முறையில் விநியோகித்துச் சேமிக்கின்றன. உணவுத் தட்டுகளுக்குப் பதிலாக ஒற்றைப் பயன்பாட்டுப் பாக்கு மட்டைகள், இலைகள் பயன்பாட்டுக்கு மாறிக்கொண்டிருக்கின்றன உணவகங்கள். 

தலைநகரத்தின் முக்கியத் தேவையை நான்கு முக்கிய ஏரிகள் பூர்த்தி செய்கின்றன. செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம், செங்குன்றம். அவற்றில் கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பெய்த மழையில் நிரம்பிய அளவு, அதற்கு முந்தைய ஆண்டுகளில் நிரம்பிய அளவில் பாதியைக்கூட எட்டவில்லை. 

ஒவ்வோர் ஆண்டும் வறட்சி, பஞ்சம் அல்லது வெள்ளம் என்று ஏதாவதொன்றை நாம் சந்தித்துக்கொண்டேயிருக்கிறோம். நாம் இவை அனைத்தையும் ஒரே தராசில் வைத்துப் பார்ப்பதில்லை. அதிகமான வெள்ளம் வருகையில் அந்த நீரைத் திறம்பட மேலாண்மை செய்து சேமித்து வைக்க வேண்டும். அந்த நீரை வறட்சிக் காலங்களில் பயன்படுத்திப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும். இந்த அரசு அந்த மாதிரியான ஆக்கபூர்வத் திட்டங்களைப் பற்றிச் சிந்திப்பதேயில்லை. கடந்த 2018-ம் ஆண்டு நிதி ஆயோக் ஆய்வறிக்கை வெளியானது. அதை ஆய்வறிக்கை என்று கடந்துபோவதைவிட அது ஓர் எச்சரிக்கைப் பலகை என்று சொல்லலாம். சென்னை உட்பட இந்தியாவின் பல முக்கிய நகரங்கள் எதிர்கொள்ளப்போகும் நீர்ப் பற்றாக்குறை குறித்தும் அதனால் ஏற்படவிருக்கும் அபாயங்கள் குறித்தும் அந்த ஆய்வறிக்கை எச்சரித்தது. 

அதைத் தொடர்ந்து பருவமழை முழுதாகப் பெய்யாதபோதும் பல சூழலியல் மற்றும் நீரியல் ஆய்வாளர்கள் சென்னையில் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று எச்சரித்தனர். அப்போதே இதற்கான முன்னெச்சரிக்கை முயற்சிகளை நாம் எடுத்திருந்தால் ஒருவேளை இவ்வளவு தூரம் வராமல் தவிர்த்திருக்கலாம். சென்னையின் தினசரி குடிநீர்த் தேவை 85 கோடி லிட்டர். விநியோகிக்கப்படுவது 55 கோடி லிட்டர். 30 கோடி லிட்டர் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது

அரசு முன்னெடுக்கும் இப்போதைய திட்டங்கள் எதுவும் உடனடித் தீர்வையோ நிரந்தரத் தீர்வையோ தரப்போவதில்லை. தீர்க்கமான நீண்டகாலத் திட்டமிடுதல் தற்போது தேவைப்படுகிறது. இன்று சென்னை அவதிப்படுகிறது. நாளை மொத்த தமிழகமும் இதே நிலைக்கு ஆளாகலாம். அப்படியொரு நிலை வந்தால், அதற்குக் காரணம் இயற்கையாக இருக்காது. நிச்சயம் மனிதர்களே காரணம். 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு