Published:Updated:

சென்னையில் கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விகடன் விமர்சனக்குழு

சென்னை, நவ.5,2011

சென்னையில் இன்று காலை தொடங்கி பெய்து வந்த கனமழையால் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்தது.

முக்கிய சாலைகள் அனைத்திலும் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர்.

போதுமான வடிகால் வசதி இல்லாததால், பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் தேங்கி நிற்கின்றன. இதனால், அலுவலகத்தில் இருந்து வீடு திரும்புவோர் பெரும் பாதிப்புக்குள்ளாகினர்.

சென்னை அண்ணா சாலை, கோயம்பேடு, வடபழனி, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் இரவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வியாசர்பாடி, பெரம்பூர், திருவொற்றியூர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குடிசைப் பகுதிகளில் தண்ணீர் வீட்டுக்குள் புகுந்ததால் மக்கள் தத்தளித்தனர்.

ஆசிரியை பலி...

சென்னை - தி.நகரில் கால்வாயில் விழுந்த ஆசிரியர் ஒருவர் நீரில் மூழ்கி பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மழை நீடிக்கும்...

அரபிக் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, தொடர்ந்து அதே இடத்தில் நீடிப்பதால் அடுத்த 24 மணி நேரத்துக்கும் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

குறிப்பாக, சென்னை உள்பட வட தமிழகத்தில் பலத்த மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.