Election bannerElection banner
Published:Updated:

``சக மனிதனாகவே என் கேள்விகளை முன்வைக்கிறேன்!” - கல்விக்கொள்கை குறித்து சூர்யா நீண்ட விளக்கம்

சூர்யா
சூர்யா

பெற்றோரை இழந்த நிலையில், கல்வி ஒன்றையே தன் வாழ்க்கையாகக் கருதி நல்ல மதிப்பெண் எடுத்த ஒரு மாணவி, விண்ணப்பம் வாங்கக்கூட முடியாமல் தவித்தார். இன்று அவர் மருத்துவம் முடித்து இந்திய ராணுவத்தில் மருத்துவராகப் பணியாற்றுகிறார்.

நடிகர் சிவகுமார் கல்வி அறக்கட்டளை மற்றும் அகரம் ஃபவுண்டேஷன் இணைந்து, தமிழகம் முழுவதும் இருந்து 12-ம் வகுப்பு தேர்வில் சாதித்த ஏழைப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையினை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா, `` 30 கோடி மாணவர்களின் எதிர்காலத்திற்கானது இந்த புதிய கல்விக்கொள்கை. ஆனால், அதைப் பற்றி பரந்துபட்ட அளவில் விவாதங்கள் எழுப்பப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்வு!
கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்வு!

கிராமப்புற, பழங்குடி மாணவர்கள், இதனால் பெரிதும் பாதிக்கப்படப்போகின்றனர். மூன்று வயதிலிருந்தே மும்மொழிகளைக் கற்க வேண்டும் என அவர்கள்மீது திணிப்பது ஆபத்தானது.

நீட் தேர்வினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நாம் கண்கூடாகப் பார்த்துவருகிறோம். பள்ளிப் பருவம் முழுவதும் தேர்வுகள் எழுதி, பின்னர், அதற்கு எந்தப் பயனும் இல்லையென உயர்கல்விக்கு தனியாக தேசிய அளவில் பொதுவான நுழைவுத் தேர்வு எனக் கொண்டுவருவது சமமின்மையை அதிகரிக்கவே செய்யும். இதே அணுகுமுறை நீடித்தால், பயிற்சி மையங்கள் காளான்கள் போல மிகப்பெரிய வர்த்தகமாக உருவெடுக்கும்” என விமர்சனம் செய்தார்.

இதுவரை அகரம் ஃப்வுண்டேஷன் மூலமாக சுமார் 3,000 மாணவர்கள் உயர்கல்வி படிக்கிற வாய்ப்பைப் பெற்றி ருக்கிறார்கள்!
சூர்யா

சூர்யாவின் இந்த விமர்சனத்துக்கு தமிழகம் முழுவதும் ஆதரவான கருத்தும், எதிர்ப்புகளும் வந்தன. கடந்த சில நாள்களாக சூர்யாவின் கருத்து குறித்துதான் பல்வேறு இடங்களில் விவாதிக்கப்பட்டன. நடிகர் சூர்யாவின் கருத்துக்கு பலர் தங்களின் கருத்துகளைத் தெரிவித்துவந்த நிலையில், சூர்யா அறிக்கை மூலம் தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

`அனைவரின் பேரன்புக்கும் பேராதரவுக்கும் நெஞ்சார்ந்த நன்றி!’ எனத் தொடங்கும் அந்த அறிக்கையில், ``கல்வி என்பது ஒரு சமூக அறம். பணம் இருந்தால் விளையாடு என்று சொல்கிற சூதாட்டமாக அது மாறக்கூடாது. நம் நாட்டில் கல்வியானது ஏழைகளுக்கு ஒன்றாகவும் வசதி படைத்தவர்களுக்கு ஒன்றாகவும் இருக்கிறது என்பதை உணர, புள்ளி விவரங்கள் தேவையில்லை. மனசாட்சியே போதுமானது. அப்படிப்பட்ட மனசாட்சிதான், `அனைவருக்கும் சமமான தேர்வு வைப்பதைவிட, ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்துக் குழந்தைகளுக்கும் சமமான, தரமான இலவசக் கல்வியை உறுதி செய்வது அரசாங்கத்தில் பொறுப்பு’ என்று வலியுறுத்துகிறது.

சூர்யா
சூர்யா

இதுவரை அகரம் ஃப்வுண்டேஷன் மூலமாக சுமார் 3,000 மாணவர்கள் உயர்கல்வி படிக்கிற வாய்ப்பைப் பெற்றி ருக்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள், கிராமங்களுக்குச் சென்று மாணவர்களின் குடும்பச் சூழலையும் கல்விச் சூழலையும் ஆய்வுசெய்து பகிரும் அனுபவங்களைக் கேட்டு கண்கள் கலங்கிப்போகும்.

பெற்றோரை இழந்த நிலையில், கல்வி ஒன்றையே தன் வாழ்க்கையாகக் கருதி நல்ல மதிப்பெண் எடுத்த ஒரு மாணவி, விண்ணப்பம் வாங்கக்கூட முடியாமல் தவித்தார். இன்று அவர், மருத்துவம் முடித்து இந்திய ராணுவத்தில் மருத்துவராகப் பணியாற்றுகிறார். ஆடு மேய்க்கிற பெற்றோரின் மகன் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பு படித்து டாக்டராகி, விருப்பத்துடன் கிராமப்புறங்களில் பணியாற்றுகிறார். நீட் தேர்வு இருந்திருந்தால் இவர்கள் யாரும் மருத்துவர் ஆகியிருக்க முடியாது.

அரசுப் பள்ளிகளில் படித்து, மருத்துவர்களான மாணவர்கள், தகுதியிலும் தரத்திலும் சிறந்தே விளங்குகின்றனர். நீட் அறிமுகமான பிறகு, அகரம் மூலமாக அரசுப் பள்ளியில் படித்த ஒரேஒரு மாணவரைக்கூட மருத்துவக் கல்லூரியில் சேர்க்க முடியவில்லை. புதிய கல்விக்கொள்கையில், எல்லாவிதமான பட்டப் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வுக்கான பரிந்துரை இருப்பது அச்சமூட்டுகிறது. உயர்கல்வியில் இருந்து கிராமப்புற மாணவர்களை நுழைவுத் தேர்வுகள் துடைத்து எறிந்துவிடும்.

பெருநகரங்களில், கண்கள் கூடும் வெளிச்சத்தில் நிழல்கூட படியாத மின்சாரமற்ற வீடுகளில் வாழ்ந்து, தெருவிளக்கின் வெளிச்சத்தில் படிக்கிற மாணவர்களின் தடைகளையும் வலிகளையும் கள அனுபவம் மூலமாக அறிந்திருக்கிறோம். இத்தகைய மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிற தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கைமீது நாம் போதிய கவனம் செலுத்தாமல் இருப்பதை எண்ணிக் கவலையாக இருந்தது. இம்மாணவர்களை மனதில் நிறுத்தி, இந்த கல்விக் கொள்கையை அணுகவேண்டிய தேவை அனைவருக்கும் இருக்கிறது. ஏழை கிராமப்புற மானவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிற கல்விக்கொள்கையில் சமூகத்தின் அனைத்து தரப்பினரின் பங்கேற்பையும் உறுதிசெய்யவே கல்வியாளர்களுடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்து வேண்டுகோள் வைத்தோம். அதற்குக் கிடைத்த வரவேற்பு எங்களை நெகிழச்செய்தது.

``சக மனிதனாகவே என் கேள்விகளை முன்வைக்கிறேன்!” - கல்விக்கொள்கை குறித்து சூர்யா நீண்ட விளக்கம்

'கல்வியைப் பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது' என்று எதிர் கருத்துகள் வந்தபோது, ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் கல்வி நலன் மீது அக்கறைகொண்டு என் கருத்துகளை ஆதரித்த அனைவருக்கும் நன்றி. உங்கள் ஆதரவு கல்விப் பணியில் தொடர்ந்து இயங்கும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கிறது. அரசியல் கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள், கல்விக்கொள்கை பற்றிய விவாதத்தை முன்னெடுத்த பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், சமூக ஊடக நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

சமமான வாய்ப்பும் தரமான கல்வியும் மறுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மாணவர்களின் நிலையை உணர்ந்த ஒரு குடிமகனாக, சக மனிதனாகவே என்னுடைய கேள்விகளை முன்வைக்கிறேன். தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கை குறித்து நாட்டின் வளர்ச்சியிலும் மாணவர்களின் நலனிலும் அக்கறைகொண்ட கல்வியாளர்களுடன் உரையாடி தெளிவைப் பெறுவோம். ஏழை மாணவர்களுக்கு கல்வியே உயரப் பறப்பதற்கான சிறகு. அது முறிந்துபோகாமல் இருக்க அனைவரும் துணை நிற்போம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வரைவு மீதான ஆக்கப்பூர்வமான கருத்துகளை கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர் அமைப்புகள், பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரும் உரிய இணையதளத்தில் இம்மாத இறுதிக்குள் பதிவு செய்யும்படி வேண்டிக்கொள்கிறேன்.
நடிகர் சூர்யா

மத்திய அரசும் அனைத்துத் தரப்பின் கருத்துகளையும் கேட்டறிந்து, தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுகோள் வைக்கிறேன் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார் சூர்யா.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு