கெட்ட வார்த்தை பேசுபவரா நீங்கள்?- இந்தப் பதிவு உங்களுக்குத்தான் #MyVikatan

மொழியை வளர்க்க வேண்டிய சில கலைத்துறையினரே இந்த வன்மொழியை டிரெண்டிங் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
கெட்ட வார்த்தை பேசுபவரா நீங்கள்.. அல்ல உங்கள் குழந்தை நன்றாக வளர வேண்டும் என்று நினைப்பவரா நீங்கள். இந்தப் பதிவு உங்களுக்குத்தான் !
அமெரிக்கா சென்று திரும்பிய நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது அவர் அங்கேயே தன் மனைவி குழந்தையுடன் தங்குவதன் ஏற்பாடுகளை விவரித்துக்கொண்டிருந்தார். நான் காரணம் வினவியபோது, ``இங்கு சிஸ்டம் சரி இல்லை'', ``போதிய EXPOSURE கிடைப்பதற்கு உண்டான சாத்தியக்கூறுகள் இல்லை'' என்று விவரித்தார். பின் இந்த அமெரிக்கா புராணக்கதைகள் Bun culture முதல் gunculture வரை பல தடவை கேட்டதுதானே என்று பேச்சை மாற்ற, என்ன படங்கள் சமீபத்தில் பார்த்தீர்கள் என்று கேட்டேன். பல படங்களை அடுக்கிக்கொண்டு ``இதெல்லாம் வேற லெவல் படம் ஜி.. இந்தக் கால பசங்க வாழ்க்கையை எப்படி கொண்டாடுகிறார்கள் சுதந்திரமாக’’ என்று பிதற்றிக்கொண்டார். ``அப்படி என்ன உங்களைக் கவர்ந்தது?’’ என்று கேட்டேன். ``இந்தக் கால பசங்க மொழியை செம்மையாகப் பதிவு செய்கிறார்கள் படங்களில்’’ என்று பீற்றிக்கொண்டார்.

ஒரு மொழியின் அழிவு ஒரு இனத்தின் அழிவுக்கு வித்திடும். அந்த மொழியை வாழ வைப்பதே அந்த மொழிசார் கலைகள்தான். இன்று தமிழகத்தில் அவ்வாறான கலைகள் அழிந்தபோதும் இன்னும் சொச்சமாய் இருப்பது சினிமாதான். ஆனால், தற்கால சினிமாவோ தாமரை வைரமுத்து வரிகளால் தளர்க்கும்போதே சில தேவை இல்லாத கதைக்கு வேண்டிய கருதான் என்று அடம்பிடித்துக்கொண்டே கொச்சை சொற்களைக் கொண்டு தமிழை புதைக்கவும் செய்யப்படுகிறது.
என் நண்பர் கூறிய அந்த மொழித் திறன் அறிவால் அடைவது அல்ல. தன் சுற்றத்தையும் நண்பர்களையும் உறவினர்களையும் தன்மொழி சார் கலைகளையும் பார்த்துக் கேட்டு, ரசித்து, படித்து மனதில் படமாய் வரைந்து உள்வாங்கிக்கொள்வதே மொழி. ஆனால், இன்று கிரிக்கெட் வீரர் சதம் அடிக்காவிட்டால், பேருந்து தாமதமாகிவிட்டால், எதிர்வரும் இரு சக்கரம் சற்று தவறிவிட்டால், தனக்குப் பிடித்த நடிகர் படம் நன்றாக ஓடிவிட்டால் இவ்வளவு ஏன் தனக்கே ஒரு நல்லது நடந்துவிட்டால்கூட இன்றைய இளைஞர்கள் பரிமாறிக்கொள்ளும் வார்த்தைகள் காதில் கேட்டமுடியாதவை.

அன்பு, கோபம், காதல் , காமம், மகிழ்ச்சி, ஏக்கம், பிரிவு, பரிவு என்று அத்துணை அதிகாரமும் ஒரு நாற்பது கெட்டவார்த்தைகளுள் பொதிந்துவிட்டது. மொழியை வளர்க்க வேண்டிய சில கலைத்துறையினரே இந்த வன்மொழியை டிரெண்டிங் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள். ஐ.நா-வில் கலாம் பேசிய யாதும் ஊரே யாவரும் கேளிர் வாக்கியமோ, ஆஸ்கர் மேடையில் எல்லாப் புகழும் இறைவனுக்கே என்றுரைத்த வரியோ இந்த மாமனிதர்களின் மொழிக்காதலை காட்டுகிறது. இதுதான் இவர்களை வெற்றிக்கு கூட்டிச்சென்றதுவாய் நான் பார்க்கிறேன்.
தமிழில் வார்த்தைகளே இல்லாத ஒரு மாயமாய் இந்த சமூகம் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாலும், ஒரு குடும்பமே நிலை குலைந்து போனாலும், ஒரு இனமே பரிதவித்துப் போனாலும் அத்துணை பேரையும் ஈவு இரக்கமின்றி தனக்குத்தான் பேசத்தெரிந்ததுபோல் பேசிக்கொள்கிறார்கள், குறிப்பாக வலைதளங்களில். ராமாயணம் இன்று அரங்கேறி இருந்தால் அந்தப் பத்துதலை ராவணனைவிட இந்த ஒருதலை இணைய ராவணர்கள் ஜானகி தேவியை ஒரு வழி செய்திருப்பார்கள். என்ன ஆச்சர்யம் என்று புரியவில்லை இவர்கள் விட்டு வைத்தது 96 ஜானுவைதான்!! அவளையும் மீண்டும் வீடு திரும்பியபோது அவள் கணவன் என்ன செய்திருக்க வேண்டும் என்பதை இயக்குநர்களாய் யூகித்த கூட்டங்களும் உண்டு.
நாம்தான் என் குழந்தைக்கு தமிழ் வராது என்று திமிர் பிடித்து அவர்கள் மொழித்திறனையும் அறிவையும் வீணடிக்கிறோம்.
தமிழின் மகத்துவம் தெரியாத சில மனிதர்கள் சில நேரங்களில் அறியாமல் கூறப்பட்ட சில சொற்றொடர்களை, மறைத்துப் பேசிய மனிதனுக்கே உண்டான கேவலமான வர்ணனை புத்தியை இன்றைய இளம் தலைமுறை நவநாகரிகம் என்று நினைத்துப் பெருமையாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் மாறுபட்டவனை பழம், தயிர் சாதம் என்று எள்ளி நகையாடிக் கொண்டிருக்கிறார்கள். உண்மை அவர்களுக்கு உரைப்பதில்லை போலும். எந்த இடத்திலும் எந்த காலநிலையிலும் எந்த வயதினரும் எந்தக் கெடுதலும் இன்றி உடம்பு ஏற்றுக்கொள்வது பழத்தையும் தயிரையும்தான்.
தமிழின் இலக்கணம் மிக அழகாக எடுத்துரைத்த இரண்டு விதி எனக்கு மிகவும் பிடித்தமானவை.
1. ஒன்று - ஓரெழுத்து ஒருமொழி - உலக மொழிகளில் வெகு சில மொழிகளே இந்த இலக்கணம் கொண்டுள்ளது. அதாவது ஆங்கிலத்தில் எந்த ஒரு தனி எழுத்தும் தனியாக பொருள் தராது. ஆனால், தமிழ் மொழியில் ஏராளமான ஓரெழுத்து ஒருமொழிசொற்கள் இருக்கின்றன மிக துல்லிய அர்த்தங்களோடு. உச்சரிக்கவே கூசும் அளவுக்கு நீங்கள் ஆக்கிவைத்துள்ள இரண்டு எழுத்துக்களை மட்டும் எடுத்துக்காட்டாக கூறுகிறேன்.
தா - என்றால் வலிமை. மனிதனின் நெஞ்சுரத்தைக் கூற பல செய்யுள்களில் இது கூறப்பட்டுள்ளது .
தா - என்றால் வலிமை. மனிதனின் நெஞ்சுரத்தைக் கூற பல செய்யுள்களில் இது கூறப்பட்டுள்ளது. மா - என்றால் பெருமை. தன் நற்குணத்தால் தேடிக்கொள்ளும் பெருமை. இனியாவது இதை உச்சரிக்கும்போது நீங்கள் சற்று கூச்சப்பட்டுக்கொள்ளுங்கள்.
2. இரண்டு - இடக்கரக்கல் இலக்கணம். அதாவது அபத்தமான விஷயங்களைக் கூறுவதற்குகூட நன்மொழியை பயன்படுத்துதல். இறந்து போனார் என்று சொல்வதை இயற்கை எய்தினார் என்று கூறுவார்கள். இதுவே இடக்கரக்கல். இன்று என்ன சொற்றொடர்கள் இருக்கிறது என்று உங்களுக்கே தெரியும்.
இனியவை கூறல் என்று தனி அதிகாரமே தந்தான் வள்ளுவன். நீங்கள் மொழியைக் கற்காவிட்டாலும் பரவாயில்லை கற்பிக்காவிட்டாலும் பரவாயில்லை. ஆனால், கொச்சைப்படுத்திவிடாதீர்கள். தமிழ் என்று பிதற்ற வந்துவிட்டாள் என்று என்னையும் கம்பர் முதல் பாரதி வரை வையாதீர்கள்.

விதவைக்கு மறுவாழ்வு வார்த்தையில் கூட வேண்டும் என்று கைம்பெண் ஆக மாற்றிய கலைஞர் முதல் அறிவியலிலும் தமிழில் பேசமுடியும் என்று ரோபோவை தமிழ்பாடச்செய்த கார்க்கி வரை இக்கால தமிழைப் போற்றுவோர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். நாம்தான் என் குழந்தைக்கு தமிழ் வராது என்று திமிர் பிடித்து அவர்கள் மொழித்திறனையும் அறிவையும் வீணடிக்கிறோம். ஒரு மனிதன் தாய்மொழியைக் கற்க முடியவில்லை எனில், அவன் எதையுமே கற்க திறமை இல்லாதவன் என்றே கூற்றுகள் உரைக்கின்றன.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஒரு ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்து கொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/
உடல் உறுப்புகள் தான் கெட்டதாக சித்திரிக்கப்படுகிறது என்று உணரவைக்காமல் நீங்கள் கற்பிக்கும் Good Touch Bad Touch பயனற்றவையே.

நீங்கள் இன்று பேசுவதைத்தான் நாளைய சமூகம் கவனித்துக்கொண்டிருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள். மொழியே சிந்தனைக்கு வித்திடும் என்பதை மனதில் வைத்து பேசுபவற்றை அழகு தமிழில் பேசுங்கள். உங்கள் சிந்தனையும் அழகாகும். செயலும் சிறப்பாகும்.
-நாகசரஸ்வதி