Published:Updated:

``எழுத்தாளர் பா.செயப்பிரகாசத்தின் வெளிவராத படைப்புகளை வெளியிடவேண்டியது நம் கடமை!"- ச.தமிழ்ச்செல்வன்

பா. செயப்பிரகாசம்

சூரிய தீபன் என்ற புனைப் பெயரில் பல்வேறு கதைகள், கவிதைகள், அரசியல், நாவல்கள், கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.

``எழுத்தாளர் பா.செயப்பிரகாசத்தின் வெளிவராத படைப்புகளை வெளியிடவேண்டியது நம் கடமை!"- ச.தமிழ்ச்செல்வன்

சூரிய தீபன் என்ற புனைப் பெயரில் பல்வேறு கதைகள், கவிதைகள், அரசியல், நாவல்கள், கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.

Published:Updated:
பா. செயப்பிரகாசம்

எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் உடல்நலக் குறைவு காரணமாக தனது சொந்த ஊரான விளாத்திகுளத்தில் (23.10.2022) ஞாயிற்றுக்கிழமை காலமானார். எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர். கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் எழுதியிருக்கிறார். எழுத்து வட்டத்திற்குள் மட்டுமே தன்னை சுருக்கிக் கொள்ளாமல், போராட்டக் களத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். திராவிட மற்றும் இடதுசாரி சிந்தனையாளர். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர். எழுத்தாளர், பேச்சாளர், பேராசிரியர் உள்ளிட்ட பன்முகத் திறமை கொண்டவர். தமிழ் இலக்கிய உலகில் மிகப்பெரும் பங்காற்றியவர்.

பா. செயப்பிரகாசம்
பா. செயப்பிரகாசம்

1941-ல் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே ராமச்சந்திராபுரத்தில் பிறந்தார். இவர் மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். 1968ம் ஆண்டு முதல் 1971 ம் ஆண்டு வரை மதுரையில் கல்லூரி விரிவுரையாளராக பணியாற்றினார். 1971ம் ஆண்டு முதல் 1999ம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை இணை இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.

எழுத்தாளராக ஆற்றிய பணிகள்.!

திராவிட இயக்கச் சிந்தனை கொண்ட எழுத்தாளராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர். காடு, இரவுகள் உடையும், புதியன, இரவு மழை உள்ளிட்ட ஏராளமான சிறுகதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். பள்ளிக்கூடம், மணல் என இரண்டு நாவல்களையும் எழுதியுள்ளார். சூரிய தீபன் என்ற புனைப் பெயரில் பல்வேறு கதைகள், கவிதைகள், அரசியல், நாவல்கள், கட்டுரைகள் ஆகியவற்றையும் எழுதினார்.

இவருடைய கதைகளில் கரிசல் மக்களின் வாழ்வியலையும் பண்பாட்டையும் எடுத்துரைத்தார். கரிசல் மண் சார்ந்த கதைகளை எழுதி உள்ளார். `மன ஓசை' என்ற கலை இலக்கிய மாத இதழின் பொறுப்பாசிரியராக பணியாற்றினார். தமிழ் படைப்பாளிகள் முன்னணி என்ற அமைப்பின் செயலாளராக பொறுப்பு வகித்தார். கல்லூரி காலங்களில் இருந்து பேச்சாளராக திகழ்ந்துள்ளார். அரசியல் மேடைகளிலும் கருத்தரங்குகளிலும் பல சொற்பொழிவுகள் நடத்தியுள்ளார். தன்னுடைய மரணம் வரை, பல சிறுகதைகளையும், நாவல்களையும் எழுதி வந்துள்ளார்.

பா.செயப்பிரகாசம்
பா.செயப்பிரகாசம்

கடந்த 8 ஆண்டுகளாக தனியாகவே வாழ்ந்தார். இவரின் மனைவி மணிமேகலை. இத்தம்பதிகளுக்கு தீபன் என்ற மகனும் சாருநிலா என்ற மகளும் உள்ளனர். தீபன் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். சாரு நிலா அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

எழுத்தாளர். பா.செயப்பிரகாசம் தனது மறைவுக்குப் பின் எவ்வித சடங்கு சம்பிரதாயங்களும் மேற்கொள்ளாமல் தன்னுடைய உடலை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆய்வுக்காக ஒப்படைக்க வேண்டும் என எழுதி வைத்துள்ளார்.

இன்று நண்பகல் 12 மணியளவில் விளாத்திகுளம் அம்பாள் நகரில் உள்ள இவரது வீட்டில் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டு அதன் பின்பு பா.செயப்பிரகாசத்தின் உடல் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி வசம் ஒப்படைக்கப்பட்டது.

இவரது மறைவு குறித்து பேசிய எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், ``எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் அவர்களது மறைவு, தமிழ் இலக்கிய உலகில் மிகப்பெரிய இழப்பு. சக எழுத்தாளர்களை மதிக்கக் கூடியவர், அவர்களுக்காக உழைக்கக் கூடியவர். இவரது படைப்புகளில் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியலை எடுத்துரைத்தார். முற்போக்கு சிந்தனை கொண்ட எழுத்தாளர். போராட்ட உணர்வு உள்ளவர். மார்க்சிய கொள்கையோடு எழுதக்கூடிய எழுத்தாளர். கரிசல் எழுத்தாளர்களின் மீது அதிக அன்பும் பாசமும் கொண்டவர்.

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்
எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்

நான் ஆசிரியராக உள்ள `செம்மலர்' இதழுக்கு பல சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரது புகழ் தமிழ் இலக்கிய உலகில் நிலைத்து நிற்கும். அனைவரிடமும் எளிமையாகவும் அன்பாகவும் பழகுவார். தமிழ்நாடு செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையில் பணியாற்றியபோதும், எந்தவித கர்வமும் இன்றி செயல்பட்டவர். கவிஞர் கிரா (கி.ராஜநாராயணன்) அவர்களுடன் நெருங்கிய பழக்கம் கொண்டவர். அவர் மீது கொண்ட பற்றால் ஒரு புத்தகத்தையும் எழுதி உள்ளார். இவருடைய படைப்புகள் பல இன்னும் வெளிவராமல் உள்ளது. அவற்றை விரைவில் வெளியிட உள்ளோம். 'உச்சி வெயில்' என்ற நாவலை எழுதி முடித்துள்ளார். அதை வெளியிட வேண்டிய பொறுப்பு நம்மிடம் உள்ளது." எனக் கூறினார்.