Published:Updated:

`கருத்திலிருந்து பின்வாங்க மாட்டேன்', `கருத்தின் எதிர்வினையே இந்த வழக்கு' அம்பேத்கர் குறித்து சர்ச்சை!

 எழுத்தாளர் வசுமித்ர
எழுத்தாளர் வசுமித்ர

அம்பேத்கர் குறித்து எழுத்தாளார் வசுமித்ர கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இலக்கியம் மற்றும் தத்துவ உரையாடல்களில் எப்போதுமே சச்சரவுகள் வருவதுண்டு. விமர்சனங்கள் அதையொட்டிய தொடர்ச்சியான விவாதங்கள் அறிவு வளர்ச்சிக்கும், தத்துவத்தை தெளிவுபடுத்துவதற்கும், புதிய படைப்புகள் மற்றும் செயல்பாடுகளுக்கும் இட்டுச்செல்லும். அப்படியான நீண்ட விமர்சன மரபு தமிழ் இலக்கியத்துக்கு உண்டு. சமீபத்தில் அப்படி ஒரு விவாதம் முகநூலில் நடந்து வழக்கு தொடுப்பதுவரை சென்றுள்ளது.

எழுத்தாளர் ஷோபா சக்தி யாவரும்.காமிற்கு அளித்த நேர்காணல் ஒன்றில்,

``ரங்கநாயகம்மாவின், `சாதியப் பிரச்னைக்குத் தீர்வு: புத்தரும் போதாது அம்பேத்கரும் போதாது மார்க்ஸ் அவசியத் தேவை’ என்ற நூல் தமிழில் மொழிபெயர்ப்பாகி வந்திருக்கிறதல்லவா... அந்த நூலை நீங்கள் படிக்கத் தொடங்கினால், இரண்டாவது பக்கத்திலேயே உங்களுடைய இதயம் `மொண்ணை மார்க்ஸியர்’ என முணுமுணுக்கும்' என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு எதிர்வினையாக எழுத்தாளர் வசுமித்ர அம்பேத்கர் குறித்து தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருந்த கருத்து பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளர் சாமுவேல் ராஜ், எழுத்தாளர் வசுமித்ரவின் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல்துறையிடம் புகார் செய்துள்ளார்.

அண்ணல் அம்பேத்கர்
அண்ணல் அம்பேத்கர்

சாமுவேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில், ``தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளராக செயல்பட்டு வருகிறேன். எமது இயக்கம் மதுரை உத்தபுரம், திருச்சி எடமலைப்பட்டி, கோயம்புத்தூர் நாகராஜபுரம் ஆகிய இடங்களில் தீண்டாமைச் சுவர்களை அகற்றியது. 25-க்கும் மேற்பட்ட ஆலயங்களில் சமத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி வன்கொடுமைகளுக்கு எதிரான எங்கள் வழக்கில்தான் ரூ.7.50 கோடி நிவாரணம் வழங்கப்பட்டது. நாங்கள் நடத்தி வருகிற டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலை வாய்ப்பு இலவச மையத்தின் வழியாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அரசுத் துறைகளில் பணியாற்றுகின்றனர். எங்களுக்குப் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தும் விதமாக, தேனி மாவட்டம் கோடங்கிப்பட்டியைச் சேர்ந்த வசுமித்ர என்பவர், தனது முகநூலில் இந்திய அரசியல் அமைப்பின் தந்தை பாபா சாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களை இழிவுபடுத்தி பதிவிட்டுள்ளார்.

ஒடுக்கப்பட்டோர் நலனில் அக்கறை செலுத்திக்கொண்டே இந்தியாவின் ஒட்டுமொத்த நலன்களுக்கான அரசியல் சாசன சட்டத்தை உருவாக்கித் தந்தவர் டாக்டர் பி. ஆர்.அம்பேத்கர். இந்த நிலையில் மேற்படி வசுமித்ர, சாதி மேலாதிக்க உணர்வுடன் `புத்தரின் ஆண்குறியில் அறிவைக் கண்டுபிடிக்கும் அம்பேத்கர்' என டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களை மிகக் கீழ்த்தரமாக இழிவுபடுத்தியுள்ளார். மார்க்சிய மற்றும் அம்பேத்கரிய இயக்கத்தினர் ஒருங்கிணைந்து செயல்பட்டு வரும் நிலையில் அதை சீர்குலைப்பதும் மேற்படி வசுமித்ரவின் நோக்கம்.

எனவே, டாக்டர் பி. ஆர். அம்பேத்கரை இழிவுபடுத்தி முகநூலில் பதிவுசெய்த வசுமித்ர மீது SC/ST வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டம் 2018-ன் பிரிவுகள் 3(1) (t), 3(1) (u), 3(1) (v) ஆகியவற்றில் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

சாமுவேல்
சாமுவேல்

இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளர் சாமுவேல் ராஜிடம் பேசினோம். ``கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் வசுமித்ர தவறான, அநாகரிகமான வார்த்தையை அம்பேத்கர் மீது பயன்படுத்தியிருக்கிறார். அம்பேத்கர் தவிர வேறு எந்தத் தலைவரையாவது அவர் இப்படி சொல்ல முடியுமா? அவருடைய செயல்பாட்டைப் பொறுத்துதான் எங்களது அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும். லட்சக்கணக்கான மக்களைப் புண்படுத்தக்கூடிய செயல் இது. அந்தச் செயலுக்கு வழக்கு பதிவுசெய்ய சட்டப்பிரிவுகளும் உள்ளன. செய்த செயலுக்கு எதிர்வினைதான் இந்த வழக்கு. மேற்கொண்டு சம்பந்தப்பட்டவரின் நடவடிக்கையொட்டி நாங்களும் நடவடிக்கை மேற்கொள்வோம். வன்கொடுமை சட்டம் பற்றி மோசமான கருத்துதான் வசுமித்ரவுக்கு உள்ளது. தேசமெங்கும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை இன்றும் மோசமாக உள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவரான அம்பேத்கரை கொச்சைப்படுத்துவது கண்டிக்கத்தக்க செயல். தீண்டாமையின் கொடுமையை உணராமல் வசுமித்ர கூறிய கருத்துக்கு சட்டத்தின்முன் அவர் பதில் சொல்ல வேண்டும்" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எழுத்தாளர் வசுமித்ர மீதான வழக்கைத் திரும்பப்பெறக் கோரி சில எழுத்தாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

எழுத்தாளர், பேராசிரியர் அ.மார்க்ஸின் முகநூல் பதிவின் ஒரு பகுதி:

`வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் நீண்ட காலம் போராடிப் பெற்ற ஒன்று. அதை எப்படியாவது ஒழித்துக் கட்ட வேண்டும் என ஆதிக்க சாதியினர் வெறிகொண்டு செயல்பட்டு வரும் நிலையில் இப்படியான செயற்பாடுகள் ஏற்புடையதல்ல.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி கடந்த ஆண்டுகளில் மிக முக்கியமான பல சாதனைகளைத் தமிழகத்தில் செய்துள்ளது. அது தொடங்கிய காலம் முதல் அதனுடன் தோளோடு தோள் நின்று செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களில் நானும் ஒருவன். அது மேலும் வளர வேண்டும் என்பதில் தீராத அக்கறை உள்ளவன் என்னும் வகையில் இந்த வேண்டுகோளை உங்கள் முன் வைக்கிறேன்.

எழுத்தாளர்களுக்குள் நடக்கும் இந்தச் சர்ச்சையில் வசுமித்ர பயன்படுத்தியுள்ள அர்த்தமற்ற வசைச் சொற்கள் கண்டிக்கத்தக்கவை. அது குறித்து நான் தனியே எழுதுவேன். இந்தப் புகாரை தீண்டாமை ஒழிப்பு முன்னணி திரும்பப் பெறவேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

அ.மார்க்ஸின் கேட்டுக்கொண்டிருப்பதைப் போல இன்னும் சிலரும் வசுமித்ர மீதான வழக்கை வாபஸ் பெறவேண்டும் எனப் பதிவு செய்துள்ளனர்.

 அண்ணல் அம்பேத்கர்
அண்ணல் அம்பேத்கர்

அதேநேரம், வசுமித்ரவின் கருத்துக்கு எதிராகவும் சில எழுத்தாளர்கள், செயற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்:

எழுத்தாளர் அழகிய பெரியவனின் முகநூல் பதிவின் ஒரு பகுதி `அம்பேத்கரை விமர்சனம் செய்வதற்காக முற்போக்கு அறிவுஜீவி வேடமிட்டு வருகிற காந்திய, மார்க்சிய, திராவிட தமிழ் தேசியவாதிகள் சிலரும், அந்த அமைப்புகளில் இல்லாமல் உதிரிகளாக பேசித்திரிகிற சிலரும் தங்கள் சாதிய கொண்டைகளை மறைப்பதற்கு மறந்துவிட்டு வந்துவிடுகிறார்கள். வசுமித்ர என்ற உலகமகா அறிவுஜீவியும் அப்படிதான் சாதிக் கொண்டையை மறைக்காமலேயே பேசித் திரிகிறார். ``புத்தரின் ஆண்குறியில் அறிவைக் கண்டுபிடிக்கும் அம்பேத்கரின் அறிவுசார்ந்த பௌத்தத்தை" என்று எழுதுவதற்கு மூளை முழுவதும் சாதிய சனாதன கொழுப்பு ஏறியிருக்க வேண்டும். மார்க்சியத்தை ஒழுங்காகப் படிக்காத அரைகுறை அறிவோடு இருப்பவாராலேயே கூட இப்படி எழுதமுடியாது!' என்றிருக்கிறது.

இப்பிரச்னை குறித்து எழுத்தாளர் வசுமித்ரவிடம் பேசினோம். ``இதுபற்றி இப்போதைக்கு கருத்து எதுவும் கூற விரும்பவில்லை. என் மீதான வழக்கை எதிர்கொள்வேன். காவல் துறை வழக்கை ஏற்று நடத்துமாயின் அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்திலேயே சமர்ப்பிக்கிறேன். அதோடு `சாதி மேலாதிக்க உணர்வோடு' என்கிற ஒரு வார்த்தையும் இணைத்திருக்கிறார். அதற்கான ஆதாரங்களையும் சாமுவேல் ராஜிடம் கேட்டுப்பெற காத்திருக்கிறேன்.

 எழுத்தாளர் வசுமித்ர
எழுத்தாளர் வசுமித்ர

எல்லாவற்றுக்கும் மேலாக, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்கிற பாடத்திட்டத்தையும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (CPIM) பொதுவெளியில் அனைவருக்கும் கற்றுக்கொடுத்திருக்கிறது. அனைவருக்கும் நன்றி. நான் கூறிய கருத்திலிருந்து பின்வாங்க மாட்டேன். வழக்கு நடக்குமாயின் எதிர்கொள்வேன்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு