ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

உயிர்ப்பரிசு - க்ரைம் ஸ்டோரி

உயிர்ப்பரிசு - க்ரைம் ஸ்டோரி
பிரீமியம் ஸ்டோரி
News
உயிர்ப்பரிசு - க்ரைம் ஸ்டோரி

அவள் இப்ப உசுரோட இல்ல. இது அவளோட அஸ்தி” என்ற அவரின் உதட்டுத் துடிப்பு அவன் வரையில் காதில் நுழைந்த மின்சாரமாய்தான் இருந்தது

மதுரை விமான நிலையம். வாடகை காரில் இருந்து உதிர்ந்தபடி இருந்தார் கனகசபாபதி. தோளில் ஒரு ஜோல்னா பை. கையில் ஒரு சிறு மூட்டை. டிரை வருக்கு 310 ரூபாய் தர வேண்டும். அதற்காக 500 ரூபாய் தாளைத் தரவும், டிரைவர் ``சில்லறை இல்லையே சார்’’ என்றார்.

``பரவாயில்ல வெச்சுக்கப்பா’’ என்று சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடந்தார்.

சாதாரண நூல் வேட்டி, காலர் இல்லாத கதர் ஜிப்பா, கழுத்தில் ஒரு ஒற்றை ருத்ராட்சம் மட்டும் இருக்கிற கறுப்புக் கயிறாலான மாலை, நெற்றி யில் பரபரவென்று தேய்த்துக் கொண் டது போன்ற திருநீறு, காலுக்கு சாதாரண செப்பல் - இதுதான் கனகசபாபதி.

இந்திரா சௌந்தர்ராஜன்
இந்திரா சௌந்தர்ராஜன்

அப்படி ஒரு தோற்றமுடன் தோள் பையும், கை மூட்டையுமாய் அவர் செக்யூரிட்டி முன்னால் நின்று தனது ஆதார் கார்டையும், பேத்தி ரோகிணி, பிரின்ட் எடுத்து தந்திருந்த போர்டிங் பாஸையும் காட்டவும் செக்யூரிட்டி துருவும் பார்வை பார்த்து முடித்து, ``லக்கேஜ் எதுவும் இல்லையா’’ என்று கேட்டார்.

``இந்தப் பையும், இந்த மூட்டையும் மட்டும்தான்’’ என்றபடி அவர் உள் நுழையவும் விமான நிலைய செயற்கை குளிர் அவரின் 80 வயதுக்கு மேலான சுருக்கம் விழுந்துவிட்ட உடம்பில் ஒரு சன்னமான உதறலை உண்டாக்கியது. சமாளித்து நடந்து எக்ஸ லேட்டர் அருகே சென்றபோது அதில் கால் பதித்து மேலேறுவதில் ஒரு தயக்கம் ஏற்பட்டு லிஃப்ட் இருக்கும் பக்கம் பார்த்து நடந்தார். லிஃப்ட் முன்னால் அவரைப் போலவே தயக்கமான வயதானவர்கள் பலர். அவர்களில் ஒரு பெண்மணி மங்கலகரமாய் பெரிய குங்குமம், தலை நிறைய மல்லிகைப்பூ என்று லட்சணமாய் தென்படவும் கனகசபாபதிக்குள் தன் மனைவி ஜெயலட்சுமி ஞாபகம் மின்னல் வேகத்தில் உருவாகி கண்கள் இரண்டும்கூட குளமாக மாற ஆரம்பித்துவிட்டன. சுதாரித்து லிஃப்ட் டில் ஏறி மேலேறும்போது கலங்கிய கண்களோடுதான் அந்தப் பெண்ம ணியை பார்த்தபடியே இருந்தார். அந்தப் பெண்ணுக்குப் பக்கத்தில் இருந்த அவரின் மகன், கனக சபாபதியைக் கவனித்தான். லிஃப்டை விட்டு வெளியே வரவும் தயங்கியபடியே கேட்டான்.

``சார், எதுக்கு என் அம்மாவைப் பார்த்து கலங்கினீங்க'' என்றான்.

``சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டியே?’’ - கனகசபாபதி கண் களைத் துடைத்தபடி கேட்டார்.

``எதுவாக இருந்தாலும் சொல் லுங்க...’’

``என் மனைவி ஜெயலட்சுமி, உங்க அம்மா மாதிரியே இருக் காங்க. அதான் அவள் ஞாபகம் வந்துடுச்சு.’’

``ஓ... அப்ப அவங்க..’’

``அவளா... இதோ என் கைல இந்த மூட்டைக் குள்ளதான் இருக்கா...’’ - அவர் சொன்னது புரியாமல் வியப்போடு மூட்டையைப் பார்த்தான் அவன்.

“அவள் இப்ப உசுரோட இல்ல. இது அவளோட அஸ்தி” என்ற அவரின் உதட்டுத் துடிப்பு அவன் வரையில் காதில் நுழைந்த மின்சாரமாய்தான் இருந்தது. விழிகள் அகன்று, ஒரு மாதிரி ஆகிவிட்டது அவன் முகம்.

``இதைக் காசில கங்கையில போய் கரைக் கணும். அவள் உசுரோட இருந்து ஆசைப் பட்டது, காசிக்குப் போயிட்டு வரணும்ங் கிறதுதான். கடைசி வரை என்னால் அதை நிறைவேற்ற முடியல. அட்லீஸ்ட் அவள் உடம்புக்குக் கிடைக்காத அந்த பாக்கியம் அஸ்திக்காவது கிடைக்கட்டும் என்றுதான் இப்படி கிளம்பிட்டேன்...’’ சொல்லிக் கொண்டே நடந்த அவரை கும்பிடலாம் என்றுகூட தோன்றியது அவனுக்கு. அதற்குள் மெயின் செக்யூரிட்டி செக்கப் பகுதி வந்து விட்டது. அங்கே போர்டிங் பாஸ், ஆதார் கார்டு இரண்டையும் காட்ட வேண்டி வந்த போதுகூட அஸ்தி மூட்டையை கீழே எங்கும் வைக்காமல் அக்குளில் வைத்துக்கொண்டு நடுங்கும் கைகளில் இரண்டையும் காட்டினார்.

செக்யூரிட்டி மூட்டையை கீழே வைக்கச் சொன்னபோதுகூட அதை லட்சியமே செய்ய வில்லை. கன்வேயரில் கேமரா பரிசோதனைக் காக எல்லாவற்றையும் வைக்கச் சொன்ன போதுகூட, ``மாட்டேன்... இது என் கைலதான் இருக்கும்’’ என்று அடம்பிடித்தார்.

கூடவே வந்த இளைஞன், ``சார் இங்க இது தான் புரசிஜர்... பிரதமரே வந்தாலும் லக்கேஜை இங்க வெச்சுடணும். அந்தப் பக்கமாய் போய் நீங்க திரும்ப எடுத்துக்கலாம்’’ என்றான்.

அவன் அப்படி சொன்னதற்காக அந்த மூட் டையை தன் ஜோல்னா பையோடு பெல்ட் மேல் வைத்தார். பார்வையை விலக்க அவரால் முடியவில்லை.

உயிர்ப்பரிசு - க்ரைம் ஸ்டோரி

மறுபக்க செக்யூரிட்டி, ``ஏ ஜல்தி ஆவ்...’’ என்று ஹிந்தியில் அவரைக் கூவி அழைத்தான். தடுமாற்றமுடன் போய் நின்றவரை கையை தூக்கச் சொன்னான். அவன் சொன்னபடி யெல்லாம் கேட்டார். அவனைப் பார்க்கும் போது கண்களிலே கண்ணீர்.

``சலோ... சலோ...’’ என்றான். அவரும் போனார். மறுபுறம் அவர் ஜோல்னாப்பை மட்டும்தான் வந்தது. அஸ்தி மூட்டையை ஒரு போலீஸ்காரர் தன் கையில் வைத்துக்கொண்டு தனியே அழைத்து திறந்த காட்டச் சொன்னார்.

``அஸ்திய்யா... அவ்வளவும் சாம்பல்... என் ஜெயாவோட சாம்பல்...’’ என்று அவர் தமிழில் பேசியது அவருக்குப் புரியவில்லை. கூடவே பின் தொடர்ந்து வந்த இளைஞன், அந்த போலீஸ்காரரிடம் ஆங்கிலத்தில் ``இது இவர் மனைவியின் அஸ்தி - காசிக்கு எடுத்துப் போகிறார்’’ என்று சொன்ன மறுநொடி அவர் வேகமாய் அதைக் கனகசபாபதியின் கையில் திணித்துவிட்டு தொடக்கூடாததை தொட்டு விட்ட பாவனைகளை முகத்தில் காட்டினார்.

கனகசபாபதியோ மார்போடு அணைத்துக் கொண்டார் அந்த மூட்டையை. கண்ணீரும் மூட்டை மேல் சிந்தியது. அந்த இளைஞனுக்கு அவரின் மனைவி மேலான பாசம் பளிச்சென்று புரிந்தது. விமானம் புறப்பட ஒரு மணி நேரம் இருந்தது. அதுவரை நாற்காலியில் காத்துக் கிடக்க வேண்டும். முன்பெல்லாம் இப்படிக் காத்து கிடக்கும் நேரம் பொறுமைக்கு பெரிய சவாலாக இருக்கும். இப்போதோ எல் லோருமே கைபேசிக்குள் புதைந்து போயிருந் தனர். கனகசபாபதியிடம் கைபேசி இல்லா ததை அந்த இளைஞன் கவனித்தான்.

``சார், நீங்கள் செல் வெச்சுக்கலயா’’ என்று கேட்டபடியே அவர் அமர்ந்த இருக்கைக்கு அருகில் அமர்ந்தான்.

``இருக்கு... ஆனா, இனி அது தேவை யில்லைங்கிறதால் என் பேத்திக்கு கொடுத்துட் டேன்’’ என்றார்.

``ஆமா, நீங்க மட்டுமா காசிக்குப் போறீங்க...’’

பதிலுக்கு அவர் தலை ஆமோதிப்பாய் ஆடிற்று.

``இந்த வயசுல இப்படி தனியா போவது கஷ்டமாச்சே... ஏன் யாரும் உங்க கூட வரலை?’’

``நான்தான் யாரும் வரக்கூடாதுன்னுட் டேன்.’’

``வந்தா உங்களுக்குத்தானே துணை?’’

``இருந்த ஒரே துணை என் மனைவிதான். அவளே போயிட்டப்ப வேற துணைக்கு நான் எங்க போவேன்?’’

``ஏன் உங்க மகனோ, மகளோ..?’’

பதிலுக்கு அவர் முதல் தடவையாக கொஞ் சம் சிரித்தார். அந்த சிரிப்பில் பலவித அர்த் தங்கள் இருப்பதும் அதற்குப் பின்னால் சொல்ல முடியாத கதை ஒன்று புதைந்திருப்ப தும் அவனுக்குத் தெரிய வாய்ப்பில்லை.

அந்த அறைக்குள் இருந்து வெளியே வந்த டாக்டரை கனகசபாபதி உட்பட அவரின் மகன், மருமகள், பேத்தி என்று சகலரும் மிகக் கூர்மையாகப் பார்த்தனர்.

``ஐ ஆம் சாரி... நௌ ஷி ஈஸ் வெஜிடபுள்! வியாதி என்று பர்டிகுலரா எதையும் சொல்ல முடியாது. பாடி மெட்டபாலிசம் டெட் எண்டுல இருக்கு. எப்ப வேணா உயிர் போக லாம். அவ்வளவுதான் சொல்ல முடியும்’’ என்றார் டாக்டர். அவர் அப்படி கூறவும் அத்தனை பேர் பார்வையும் உட்புறமாய் கட்டிலில் வாய் பிளந்த நிலையில் கிடக்கும் ஜெயலட்சுமியைத்தான் பார்த்தது.

கனகசபாபதி மட்டும் அவர்களிடமிருந்து விலகி மனைவி அருகே போய் அமர்ந்து கொண்டு நெற்றி மேல் கைவைத்து வருடிக் கொடுக்கலானார். அறைக்கு வெளியே தொடர்ச்சியாக கேள்விகள் பதில்கள்...

``டாக்டர், எப்ப வேணா உயிர் போகும்னு டென்டேடிவா சொல்றீங்களே... எப்பன்னு கொஞ்சம் கான்கிரீட்டா சொல்ல முடியாதா?’’

``இவங்க விஷயத்துல சொல்ல முடியாது. இது கோமாவும் இல்ல. பிரெய்ன் டெத்தும் இல்ல. கொஞ்சம் பெக்கூலியர்.’’

``பிழைக்க வைக்கவும் வழி இல்லையா?’’

``எந்த உறுப்பும் ரெஸ்பாண்டே பண்ணா தப்ப... என்ன பண்ண முடியும்?’’

``அப்ப என்னதான் வழி?’’

``கடவுளை வேண்டிக்கங்க.. எங்க கையில இனி எதுவும் இல்லை.’’

``அஃப் கோர்ஸ்... என் டாட்டருக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆகியிருக்கு. நூற்றுக்கணக்கான வரன் களைப் பார்த்ததுல ஒரே ஒரு வரன்தான் எங்களுக்கு பொருத்தமா அமைஞ்சது. மாப் பிள்ளை யுஎஸ்ல இன்ஜினீயரா இருக்கார். இப்ப இந்தியாவில் இருக்கார். கல்யாணம் முடிஞ்சு என் பெண்ணோட கிளம்பணும்.’’

``நல்ல விஷயம்... அதுக்கென்ன?’’

``இல்ல கல்யாணத்துக்கு இன்னும் சரியா ஒரு மாசம்தான் இருக்கு. போற உயிர் இப்பவே போயிட்டா தேவல. கல்யாண சமயத்துலன்னா யோசிச்சுப் பாருங்க...’’

கனகசபாபதியின் மகன் விஸ்வநாதன் சொன்னது டாக்டருக்கும் புரிந்தது.

``கல்யாணம் முடிஞ்சு அப்புறம்னாலும் ஓகே தான். ஆனா, கல்யாண சமயத்துலன்னா நான் எந்தக் காரியத்தை செய்வேன்?’’ - கேள்வி யின் கனம் டாக்டருக்கும் புரிந்தது.

``என் கையில எதுவுமே இல்லை...’’

``ஹாஸ்பிடல ஒரு மாசமோ இல்ல ரெண்டு மாசமோ ஆக்சிஜன் மாஸ்கோட மெயின் டெயின் பண்ண முடியாதா?’’

``கணிசமா செலவாகும்... உயிர் போகா துன்னு உறுதியும் தர முடியாது.’’

``கணிசமான்னா..?’’

அடுத்து டாக்டர் சொன்ன தொகை விஸ்வ நாதனுக்கு மயக்கத்தையே வரவழைத்து விட்டது. உள்ளே கேட்டுக்கொண்டே மனைவி யின் தலையை தடவிக்கொண்டிருந்தார் கனகசபாபதி.

``டாக்டர் இப்படியே ஆகாரமே இல்லாம எப்படி டாக்டர் மாசக்கணக்குல உயிரோட இருக்க முடியும். ஆகாரம் கட்டாயிட்டா உயிர் போய்டாதா?’’ - இந்தக் கேள்வியை விஸ்வநாதன் மனைவி ஷைலஜா கேட்டாள்.

மொத்தத்தில் ஜெயலட்சுமி உயிரோடு இனி இருக்க வேண்டும் என்கிற விருப்பமோ, நோக்கமோ துளியும் இல்லாமலே அவர்கள் இருப்பதும், அவர்கள் மனசெல்லாம் மகள் கல்யாணம் நல்லபடி நடந்து முடிய வேண்டுமே என்பதிலும்தான் இருந்தது. அது டாக்டருக்கும் புரிந்தது.

``நான் ஒண்ணு சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே’’ - டாக்டர்தான் கேட்டார்.

``சொல்லுங்க டாக்டர்.’’

``என் அனுபவத்துல சொல்றேன். அந்த சிவனோ, இல்ல பெருமாளோகூட நாம கதறி அழுத உடனே வந்துடுவாங்க. ஆனா, எமன் மட்டும் அப்படியில்லை. அவனா வந்தாதான் உண்டு. எங்களுக்கு இந்த மாதிரி பேஷன்ட்ஸ் ஒரு பெரிய சவால். ஒரு பாய்சன் இன்ஜெக்‌ ஷன்ல இவங்கள அனுப்பிடலாம். ஆனா, அப்புறம் அந்த பாவத்தை எங்க போய் தொலைக்கிறது?’ - டாக்டர் கேட்ட விதமே, ஒரு ஊசிக் குத்தாகத்தான் இருந்தது. டாக்டர் அதற்கு மேல் நிற்கவில்லை கிளம்பிவிட்டார்.

அவர் விலகவும் அழ ஆரம்பித்துவிட்டாள் விஸ்வநாதன் மனைவி ஷைலஜா.

விஸ்வநாதன் குறுக்கும் நெடுக்கும் நடந்தான். அருகே டேபிள் மேல் அச்சடிக்கப்பட்டு வைத் திருந்த கல்யாண பத்திரிகை. அவர்களின் நிலையைப் பார்த்தபடியே வந்த கனக சபாபதி, ``விச்சா தைரியமா இருடா... ஜெயாவுக்கு எதுவும் ஆகாதுடா’’ என்றார்

``ஆமாம், நீ பெரிய டாக்டர் பாரு...’’ என்றான் விஸ்வநாதன் எரிச்சலுடன்.

``இதோ பார்... நான் டாக்டரில்லை. டி.வி.எஸ்ல சாதாரண குமாஸ்தாவாய் இருந்து ரிடையர் ஆனவன்தான். ஆனால், எனக்கு ஒண்ணு மட்டும் நல்லாத் தெரியும். ஜெயா, பேத்தி கல்யாணம் நல்லபடி நடக்கணும்னு ஆசைப்பட்டவ, அவளால தடையே வராது. இதை நான் சத்தியம் பண்ணி சொல்வேன்’’ என்கிற அவரது ஆறுதல் அப்போது எடுபட வில்லை.

உயிர்ப்பரிசு - க்ரைம் ஸ்டோரி

``போதும் நீங்களும் உங்க நம்பிக்கையும். ஒரு மாசமா இந்த டென்ஷனோடயே எல்லா ருக்கும் பத்திரிகை கொடுக்க முடியுமா? காப்பாற்றவும் வழியில்லை, சாகவும் முடியலன்னா... அது என்ன உடம்பு?’’

``நீங்க சொன்ன மாதிரி பேத்தி கல்யாணம் நல்லபடி நடக்கணும்னு அவங்களுக்கு நெஞ்சார ஆசை இருந்தா... அவங்க உயிர் இன் னிக்கோ நாளைக்கோ போயிடணும். பத்து நாள் தாண்டினாலும் சிக்கல்தான்!’’

``இதுக்காக கல்யாணத்தை தள்ளிவைக்க லாம்னா மாப்பிள்ளைக்கு லீவு, விசான்னு பல பிரச்னைகள். ஒரு பெண்ணை பெத்துட்டு அவளுக்கு ஒரு நல்லது நடக்க நான் படுற பாடு இருக்கே... இந்த கஷ்டம் என் எதிரிக்குக்கூட வரக்கூடாதுப்பா...’’ - மருமகள் சைலஜாவின் உக்ரமான புலம்பல் அப்போதைக்கு கனக சபாபதியை அப்படியே கட்டிப்போட்டு விட்டது. பேத்தி ரோகிணி மட்டும் பாட்டியின் படுக்கை அருகே போய் வெறித்துப் பார்த்த படியே நின்றபடி இருந்தாள். மெள்ள அவள் அருகில் வந்தார் கனகசபாபதி.

``என்னம்மா, பாட்டிக்கிட்ட பேசாம பேசிக் கிட்டு இருக்கியா?’’

``ஆமாம் தாத்தா... என் கல்யாணத்தைப் பார்க்க பாட்டி ரொம்ப ஆசைப்பட்டாங்க. ஆனா, இப்ப இப்படி கிடக்கறாங்க. சாகறது கூட ஒரு அசாதாரண விஷயம்னு சொல்லாம சொல்லிக்கிட்டு கிடக்கறாங்க. எனக்கு என்ன பண்றதுனே தெரியல. அம்மாவும் அப்பாவும் பாட்டியை இப்படி பாரமா நினைச்சு பேசுற தும் பிடிக்கல... பாட்டி ரொம்ப நல்ல பாட்டி. ஈ எறும்புக்குக்கூட கெடுதல் செய்யாதவ... அவளுக்கே இப்படி ஒரு நிலையா’’ - ரோகிணி மனதாரப் பேசினாள்.

``ஜெயலட்சுமி... உன் பேத்தி பேசியது காதில் விழுந்ததா... முதல்ல கிளம்பு நீ. அது தான் நீ இவளுக்கு கொடுக்கற கல்யாண மெய்...’’ என்று வெடித்து அழத்தொடங்கி விட்டார் கனகசபாபதி.

மறுநாள் காலை. சலைன் பாட்டிலை மாற்ற வந்தபோது ஜெயலட்சுமி கிடந்த விதமே அவள் உயிர் போய்விட்டதை சொல்லிவிட்டது. எல்லோரும் ஓடி வந்தனர். `அப்பாடா...’ என்று நிம்மதியானாள் ஷைலஜா.

``பாட்டி எனக்கு வழி விட்டுட்டியா’’ என்று காலைக் கட்டிக்கொண்டு அழுதாள் ரோகிணி. கனகசபாபதி மட்டும் சிலையாக நின்றிருந்தார்.

விமானத்தில் ஏற வேண்டிய நேரம் வந்து விட பக்கத்தில் இருந்த அந்த இளைஞன், ``சார் எழுந்திரிங்க புறப்படற நேரம் வந்துடுச்சு’’ என்றான். அவரும் அஸ்தி கலசத்தை மார் போடு அணைத்துக்கொண்டே நடந்தார்.

``தனியா போயிடுவீங்களா...’’ திரும்ப கேட் டான்.

``என்கூட ஜெயா இருக்காப்பா...’’ என்று அவர் சொல்லவும் அவனுக்குச் சற்று சிலிர்த்துப் போனது.

துலக்கின தங்கப் பாத்திரம் போல் இருந்தது வாரணாசி நகரம். திரும்புகிற பக்கம் எல்லாம் ஜனக்கூட்டம். `ஜெய் போலோ... பம்பம் போலோ...’ என்கிற முழக்கங்கள். எல்லாம் கேட்டபடி கங்கைக் கரை பக்கம் படித்துறை மேல் நின்றபடி இருந்தார் கனகசபாபதி.

வயிற்றின்முன் கைகளால் பற்றியபடி அந்த அஸ்தி கலசம். அந்தி சந்தி வேளை... எனவே, இருட்டு கவிந்தபடி இருக்க... கங்கை கரையில் அத்தனை கூட்டமில்லை. அதிலும் அவர் நின்றிருந்த படித்துறையில் யாருமே இல்லை.

அவர் கண்களில் ஜலத்திரை. மனதுக்குள் உக்கிரமாய் ஒரு பிரார்த்தனைக் குரல்.

``ஜெயா என்ன மன்னிச்சுடுடி... நம்ம உயிர்தான் நம்ம பேத்திக்கு நாம கொடுக்க முடிஞ்ச பரிசு...’’ என்று முணுமுணுத்தபடியே தண்ணீரில் இறங்கியவர் அப்படியே கலசத் துடன் நடந்து மெள்ள மூழ்கலானார். கங்கை யும் மறுப்பின்றி அவரை அழைத்துக்கொண்டு ஓடத் தொடங்கினாள்.