Published:Updated:

வெந்து தணிந்தது காடு - 23 - பட்டுக்கோட்டை பிரபாகர்

வெந்து தணிந்தது காடு
பிரீமியம் ஸ்டோரி
வெந்து தணிந்தது காடு

நகங்களில் நெயில் பாலீஷ் போட்டுக் கொண்டிருந்த அமுதா, ஒலித்த போனில் பெயர் பார்த்துவிட்டு உற்சாகத்துடன் எடுத்தாள்.

வெந்து தணிந்தது காடு - 23 - பட்டுக்கோட்டை பிரபாகர்

நகங்களில் நெயில் பாலீஷ் போட்டுக் கொண்டிருந்த அமுதா, ஒலித்த போனில் பெயர் பார்த்துவிட்டு உற்சாகத்துடன் எடுத்தாள்.

Published:Updated:
வெந்து தணிந்தது காடு
பிரீமியம் ஸ்டோரி
வெந்து தணிந்தது காடு
பட்டுக்கோட்டை பிரபாகர்
பட்டுக்கோட்டை பிரபாகர்

“இப்படி செஞ்சா...’’ என்றான் உதயகுமார்.

உத்தரவுக்குக் காத்திருக்கும் படை வீரர்கள் போல அவன் முகம் பார்த்தபடி ஒருவித தயார் நிலையில் இருந்தார்கள் வெட்டுக்கிளி யும் காடையனும்.

“ஒரு யோசனை சொல்றேன். அதுக்கு முன்னாடி ஒண்ணு தெரியணும்... உங்களுக்கு எதிர்ப்பா இருக்கறவங்க எவ்ளோ பேரு இருப்பாங்க?’’

“சகட்டுமேனிக்கு எல்லாருக்கும் தலைக்கு ஒரு லட்சம் கொடுத்திருக்காங்க தம்பி. எனக்கு ரொம்ப விஸ்வாசமா இருக்கறவங்க காசு வாங்கலைன்னு சொல்றாங்க. எத்தனை பேரை நம்பறதுன்னு புரியலை. தோத்துடு வேன்னுதான் தோணுது.’’

“தோத்துட்டா என்னாகும்?’’

“அப்பறம் அந்த பாண்டி சொல்றதுதான் சட்டம். மரம் வெட்டப் போயிடுவானுங்க.’’

“அதானே பென்சில்காரரோட திட்டம். உங்க ஊர் ஜனங்க எல்லாரையும் நான் பார்த் துப் பேசணும். அதுவும் உடனே... போலாமா?’’

“பணத்துக்கு முன்னாடி நீங்க என்ன நியாயத்தை எடுத்துச் சொன்னாலும் எடுபடாது தம்பி.’’

“நான் பேசப்போற விஷயமே வேற. நீங்க முன்னாடி போயி அவங்களை ஒரு இடத்துல கூட்டி வைங்க. ஒரு மணி நேரத்துல நான் அங்க இருப்பேன்.’’

“நாங்க சொன்னா எப்படி வருவாங்க தம்பி?’’

“ஒரு லட்சம் வாங்கினிங்களே... உதயகுமார் சார் அதுக்கு மேல தர்றாராம்னு சொன்னா வரமாட்டாங்களா?’’

“அப்படி சொன்னா விழுந்தடிச்சுக்கிட்டு வருவானுங்க. நீங்க பணம் தரப்போறிங்களா என்ன? நிஜமாவா?’’ அதிர்ச்சியுடன் கேட் டான் வெட்டுக்கிளி.

பதில் சொல்லாமல் புன்னகைத்தான் உதய குமார், ‘`என்ன செய்விங்களோ தெரியாது... நான் அங்க வர்றப்ப அங்க பாண்டி மட்டும் இல்லாமப் பார்த்துக்கங்க’’ என்றான்.

நகங்களில் நெயில் பாலீஷ் போட்டுக் கொண்டிருந்த அமுதா, ஒலித்த போனில் பெயர் பார்த்துவிட்டு உற்சாகத்துடன் எடுத்தாள்.

“ஹாய் உதய் டியர்... தூங்கப் போறிங்களா?’’

‘`இல்ல... வெளில புறப்பட்டுக்கிட்டிருக் கேன்.’’

சுவர்க் கடிகாரத்தில் நேரம் பார்த்து விட்டு, ``இந்த நேரத்துலயா?’’ என்றாள்.

“குறிஞ்சிக்காடு போகணும். முக்கியமான விஷயம் ஒண்ணு உங்கப்பாகிட்ட பேசணும். படுத்துட்டாரா?’’

“அவர் புக் படிச்சுக்கிட்டிருப் பார். தூங்க லேட் டாகும். குடுக்கட்டுமா?’’

‘`குடு. அதுக்கு முன் னாடி உன்னை ஒண்ணு கேக்கணும்.’’

‘`கேளுங்க.’’

‘`உனக்கு தங்க நகைகள்னா ரொம்ப இஷ்டமா?’’

“அவ்வளவா இல்ல. ஏதாச்சும் ஃபேமிலி ஃபங்ஷனுக்குப் போறப்ப அப்பாவும் அக்காவும் சொல்றதுக்காக நெக்லஸ் போட்டுக்குவேன். மத்தபடி சிம்பிளா ஒரு குட்டி செயின், கம்மல் மட்டும்தான் கோல்டுல போடுவேன். எதுக்கு திடீர்னு?’’

“இந்தக் கல்யாணத்துக்காக நிறைய நகைங்க வாங்கப் போறிங்களா?’’

“நான் வேணாம்னுதான் சொல்லிக்கிட்டிருக்கேன். `நமக்குன்னு ஒரு மரியாதை இருக்கும்மா'ன்னு சொல்றார் அப்பா. அக்காவுக்கு 50 பவுன் போட்டதால எனக்கும் அதே மாதிரி செய்யப்போறதா சொன்னாரு அப்பா. என்ன திடீர்னு நகையைப் பத்தியெல்லாம் கேக்கறிங்க?’’

“சொல்றேன். அப்பாகிட்ட முதல்ல பேசிட றேனே.’’

அமுதா, அப்பாவின் அறைக்குள் நுழைய... படித்துக்கொண்டிருந்த புத்தகத்தில் விரல் அடையாளம் வைத்து நிமிர்ந்தார் தமிழ்மணி.

‘`உங்க மாப்ளை ஏதோ பேசணுமாம்.’’

“சொல்லுங்க மாப்ளை’’ என்றார் போனை வாங்கி காதில் வைத்து.

“மாமா... ஸ்பீக்கர் போன்ல போட்டுப் பேசுங்க. அமுதாவும் கேக்கட்டும். ஒரு சங்கட மான விஷயம். நான் சொல்றதை தப்பா நினைச்சுக்காதிங்க’’ எதிர்முனையில் உதய குமாரின் குரலில் அதீதமான தயக்கம் இருந்தது.

வெந்து தணிந்தது காடு - 23 - பட்டுக்கோட்டை பிரபாகர்

“நான் தப்பா நினைக்கிற மாதிரி எதுவும் எப்பவும் நீங்க பேச மாட்டிங்க மாப்ளை. எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லுங்க.’’

‘`வந்து... என்ன எதிர்பார்க்கறிங்கன்னு நீங்க கேட்டப்ப எதுவும் வேணாம்னு எங்கப்பா சொன்னாரு. நினைவிருக்கா?’’

‘`ஆமாம்.’’

‘`ஆனாலும், என் மரியாதைக்கு நான் விரும் பறதை என் பொண்ணுக்கு கண்டிப்பா செய் வேன்னு நீங்க சொன்னிங்க.’’

‘`ஆமாம். அப்படித்தான் சொன்னேன்.’’

‘`இந்தக் கல்யாணத்துக்கு மொத்தமா எவ்வளவு பட்ஜெட் ஒதுக்கியிருக்கிங்க மாமா? வெளிப்படையா சொல்லுங்க.’’

‘`எதுக்கு மாப்ளை இதெல்லாம்?’’

“அட... சொல்லுங்களேன்.’’

‘`நகை, புடவை, சாப்பாடு, மண்டபம், ஹோட்டல் ரூம், டெக்கரேஷன் அது இதுன்னு மொத்தம் அம்பது வந்துடும் மாப்ளை. ஆனா... கவலைப்படாதிங்க. ஒரு பைசா கடன் வாங்கப்போறதில்லை. திட்டம் போட்டு சேமிச்ச தொகைதான்.’’

‘`எந்த செலவுல எப்படிக் குறைச்சாலும் எனக்கு சம்மதம். ரொக்கமா பத்து லட்சம் தேவைப்படுது மாமா. வாய்ப்பிருக்கா?’’

‘`அப்படியா மாப்ளை... பேங்க் அக்கவுன்ட் டீட்டெய்ல்ஸ் அனுப்புங்க. உடனே டிரான்ஸ்ஃபர் பண்றேன். இல்லை... பணமா வேணும்னாலும் ஏற்பாடு செஞ்சிடறேன்.’’

‘`இருங்க மாமா. ஒண்ணும் அவசரமில்லை. எதுக்கு இந்தப் பணம்னு காரணமே கேக் கலையே நீங்க?’’

“அவசியமில்ல மாப்ளை. நியாயமில்லாத காரணத்துக்காக நீங்க கேக்கமாட்டிங்கன்னு மட்டும் நல்லாத் தெரியும் மாப்ளை.’’

‘`ஆனா, காரணத்தை நீங்க தெரிஞ்சிக்கணும் மாமா.’’

உதயகுமார் விரிவாகக் காரணத்தைச் சொன்னதும் நெகிழ்ந்தார் தமிழ்மணி.

‘`இப்ப நீங்க என் எதிர்ல இருந்தா... கட்டித் தழுவியிருப்பேன் மாப்ளை. பத்து லட்சம் போதுமா?’’

‘`போதும் மாமா. மொத்தமா தேவைப்படறது இருபத்தி அஞ்சு லட்சம் மாமா. எங்கப்பாகிட்ட பேசுனேன். அவர் பதினஞ்சு லட்சம் ஏற்பாடு செஞ்சிருக்கார். ரொம்ப தேங்க்ஸ் மாமா.’’

‘`அதெல்லாம் சொல்ல வேணாங்க மாப்ளை. இது நம்ம சமூகத்துக்கு செய்ய வேண்டிய கடமை. உங்க மூலமா அது நடக்குதுன்றப்போ இன்னும் சந்தோஷம்தான். அப்பறம் மாப்ளை... நீங்க பெருந்தன்மையா கல்யாணச் செலவுல குறைச்சுக்கங்கன்னு சொல்லிட்டிங்க. நான் அப்படி செய்யப் போறதில்லை. திட்டம் போட்டபடி அது நடக்கும். இந்தத் தொகையை தனியா மனப்பூர்வமா தர்றேன்.’’

தமிழ்மணியின் குரல் மகிழ்ச்சியில் தடுமாறியது.

‘`இதை நான் எதிர்பார்க்கலை மாமா. ரொம்ப சந்தோஷம் மாமா.’’

“அமுதாகிட்ட குடுக்கறேன் மாப்ளை.’’

போனுடன் தன் அறைக்கு வந்த பின் அமுதா, ``உதய்… யாருக்குப்பா இப்படி ஒரு மனசு வரும்? உங்களுக்கு மனைவியாகப் போறதை நினைச்சு நெஜமா ரொம்ப பெருமையா ஃபீல் பண்றேன்.’’

‘`உங்கப்பாவை நினைச்சு நானும் பெருமைப் படறேன் டியர்.’’

‘`இப்ப நேர்ல பார்த்தா எங்கப்பா கட்டித் தழுவியிருப்பேன்னு சொன்னார். நான் அதோட நிக்க மாட்டேன் உதய்.’’

‘`என்ன செய்வியாம்?’’

“நேர்ல செயல்ல காட்றேன். குறிஞ்சிக்காட்ல ஜனங்க உங்களுக்காகக் காத்துக்கிட்டிருப் பாங்க. புறப்படுங்க. வைக்கிறேன்'’ என்று வைத்தாள் அமுதா.

மரங்களும் மேலும் மரங்களும் உடல் முழுக்க கறுப்பு அப்பிக்கொண்டு தங்கள் இருப்பை இலைகளின் சலசலப்பில் காட்டிக் கொண்டிருந்தன. பேட்டரி விளக்குக்குள் 12 இன்ச் டியூப்லைட்டுகள் இரண்டு சிறைப் பட்டு கொஞ்ச தூரத்துக்கு மங்கலான வெளிச்சம் பாய்ச்சின.

கைகளைக் கட்டிக்கொண்டு தனது பைக்கில் சாய்ந்தபடி நின்றிருந்தான் உதய குமார். இரண்டு பக்கமும் வெட்டுக்கிளியும் காடையனும் நின்றார்கள். எதிரில் இருட்டுத் தீவுகளாக முகம் மங்கிய ஊர் மக்கள் முழங் கால்களைக் கட்டிக்கொண்டு, கால்களை நீட்டிக்கொண்டு அமர்ந்திருந்தார்கள்.

‘`நான் சொல்ல நினைச்சதை சொல்லி முடிச்சிட்டேன். இதுல உங்களுக்கு என்ன சந்தேகம் இருந்தாலும் கேக்கலாம்’’ என்றான் உதயகுமார்.

அவர்கள் தங்களுக்குள் பார்த்து, சன்னக் குரலில் பேசிக் கொண்டார்கள்.

‘`நீங்க சொல்றது உண்மைதான்னு எப்படி நம்பறது?’’ என்று சன்னக் குரலில் கேட்டான் ஒருவன்.

‘`நம்பித்தான் ஆகணும்’’ என்றான் வெட்டுக்கிளி.

‘`நமக்காக மெனெக்கெட்டு எத்தனை பேரை பகைச்சிக்கிட்டு கன்னியப்பனை ஒரு கேசும் இல்லாம திருப்பதியிலேர்ந்து கூட்டிக்கிட்டு வந்தாரு... அதனால இவருக்கு என்ன லாபம்?’’ என்றான் காடையன்.

‘`இவரை சந்தன மரம் திருடற கும்பலோட தொடர்புப்படுத்தினாங்க. ஜெயில்ல தள்ளப் பார்த்தாங்க. இவர் கொஞ்சம் சாமர்த்தியமா இருந்ததால தன் மேல எந்தத் தப்பும் இல்லைன்னு நிரூபிச்சார்.’’

‘`அது மட்டுமல்ல... நம்மை கொடுமைப்படுத்தி அசிங்கப்படுத்திட்டிருந்த ரேஞ்சர் இப்ப இந்த சரகத்துல இல்ல. சிம்ம சொப்பனமா இருந்த போலீஸ்காரர் கரிகாலனும் வேலையில இல்ல. இதுக்கெல்லாம் யாரு காரணம்?’’

“நம்ம நன்மைக்காக இவர் சொல்ற விஷயத்தை ஏன் சந்தேகப்படறிங்க?’’

‘`சரி... நம்பறோம்னே வெச்சுக்கலாம். பென்சில்காரரு பாண்டி மூலமா கொடுத்த பணத்தையெல்லாம் திருப்பிக் கேட்டா?’’ என்றான் இன்னொருவன்.

வெந்து தணிந்தது காடு - 23 - பட்டுக்கோட்டை பிரபாகர்

‘`கேக்க மாட்டாரு. அது அவருக்கு அசிங்கம்’’ என்றான் உதயகுமார்.

‘`அவர் அதெல்லாம் பார்க்க மாட்டாரு. கண்டிப்பா திருப்பிக் கேப்பாரு.’’

‘`கேட்டா... குடுக்காதிங்க. கொடுக்க முடியாதுன்னு தைரியமா சொல்லுங்க. அவர் கொடுத்ததெல்லாம் பென்சில் வித்த காசா? அத்தனையும் செம்மரம் வித்த காசு. நீங்க உயிரைப் பணயம் வெச்சு வெட்டிக் கொடுத்து கொட்டிக் கொடுத்த காசு. உங்க உழைப்பால உங்க வயித்தை மட்டும் நிரப்பலை. அவரோட பீரோவையும் நிரப்புனிங்க. நீங்க செஞ்சது சட்டத்துக்குப் புறம்பான விஷயம்தான். சரியோ, தப்போ... ஒரு தப்பை செய்யச் சொல்றவனுக்கும், அதைச் செய்றவனுக்கும் லாபத்துல சம பங்கு வர வேணாமா? நீங்க வெட்டிக் கொடுக்கற செம்மரத்தால அவங்க எவ்வளவு லாபம் பார்க்கறாங்கன்னு உங்களுக் குத் தெரியுமா? சொன்னா மயக்கம் போட்ரு விங்க. அடிக்கிற யானை அளவுக்கான லாபத்துல அதோட வால் முடி அளவுக்குதான் உங்களுக்கு சம்பளமா கொடுக்கறாங்க. இப்ப சொல்லுங்க. உங்களுக்கு அவர் கொடுத்தது யார் பணம்?’’

‘`எங்க பணம்தான்!’’ என் றான் ஒருவன் உரக்க.

“கரெக்ட்டுதான்’’ என் றனர் பலர்.

“சரி தம்பி. பணத்தைத் திருப்பித் தரலைன்னா... கோபத்துல அந்தாளு ஏதாச்சும் ஒரு வகையில எங்களை பழி வாங்க மாட் டாருன்னு என்ன நிச்சயம்?’’ என்றான் இன்னொருவன்.

‘`அதுக்கு அவர் வெளில இருக்கணுமே.’’

‘`என்ன சொல்றிங்க?’’

‘`எந்த நேரத்துலயும் அவரையும், ஹைதராபாத்ல இருக்கற அவர் பையன் யோகேஷையும் அரெஸ்ட் செய்றதுக்கு வேலைகள் நடந்து கிட்டிருக்கு.’’

‘`எல்லாரையும் விலைக்கு வாங்கிடுவாரு தம்பி.’’

‘`அப்படித்தான் இத்தனை நாள் நடந்து கிட்டிருந்துச்சு. இப்ப காட்சி மாறிடுச்சு. நம்ம வனச்சரகம் ஆபீஸ்ல, போலீஸ்ல, கலெக்டர் ஆபீஸ்ல இப்படி எல்லா இடத்து லயும் நேர்மையானவங்க... மக்களுக்கு நல்லது நடக்கணும்னு நினைக்கிறவங்க எல்லாரும் ஒரு புள்ளில இணைஞ்சிருக்கோம். இப்ப நான் சொன்னது நடக்கணும்னா பாண்டியைத் தோக்கடிச்சு காடையனையே தலைவராக் கணும். அப்புறம் உங்க இஷ்டம்...’’

சில நிமிட சலசலப்புக்குப் பிறகு... ஒரு வயதான ஆசாமி எழுந்து மற்ற எல்லோரையும் பார்த்து, ``யப்பா... பாருங்கடா... நம்ம நல்லதுக் காகத்தான் தம்பி சொல்லுது. நம்ம வாழ்க்கை தான் நித்யகண்டம், பூரண ஆயுசுன்னு ஓடிக் கிட்டிருக்கு. அடுத்த தலைமுறையாச்சும் கெளரவமா, நல்லபடியா முன்னேற வேணாமா? காடையனையே மறுபடியும் தலைவராக்கிடலாம். என்ன சொல்றிங்க?’’ என்றார்.

“சரிங்க’’ என்ற எல்லோரின் குரல்களும் இணைந்து தூரத்தில் கொட்டிக்கொண்டிருந்த குயிலருவியின் சத்தத்துக்கு சவால் விட்டன.

படுக்கையறையில் ஆவேசப் புலியைப் போல உலவிக்கொண்டிருந்தார் ஜெயபால். ஒரு சின்ன யோசனைக்குப் பிறகு, மேஜை டிராயரில் ஒரு டப்பாவுக்குள்ளிருந்த ஒரு சிம் கார்டை எடுத்து பல செல்போன்களில் ஒன்றில் போட்டு யோகேஷை அழைத்தார்.

‘`ஏமாந்துட்டேண்டா. காடையன் மறுபடி தலை வனாயிட்டான்.’’

‘`எப்படிப்பா?’’

‘`ஒத்த ஆபீசர்! அந்த உதய் பயலோட வேலை. எல்லாரையும் மூளைச் சலவை செஞ்சிட்டான்.’’

‘`அவனை இன்னும் எதுக்கு விட்டு வெச் சிருக்கிங்க?’’

‘`முடிக்க சொல்லிட்டேன். அவன் செத்துட்டான்னு வரப்போற செய்திக்காகக் காத்திருக்கேன்’’ என்று அவர் சொன்னபோது...

குயிலருவிக்குப் போகும் வழியில் பைக்கில் உதயகுமார் வந்துகொண்டிருக்க... ஒரு அகல மான மரத்துக்குப் பின்னால் காத்திருந்த பாண்டியின் கையில் ஜெயபால் கொடுத் தனுப்பியிருந்த கைத்துப்பாக்கி இருந்தது.

- தொடரும்...