
எழுத்தாளர் சுஜாதாவின் நினைவு நாளான இன்று அவரைப் பற்றிய சிறு துளிகளை பிரபலங்கள் சிலர் பகிர்ந்து கொண்டனர்.
சுஜாதா தமிழ் வாசிப்புப் பரப்பில் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர்களில் ஒன்று. தன் சுவாரஸ்யமான மொழிநடை, வியப்பூட்டும் அறிவியல் தகவல்கள், அனைத்துத் துறைகள் குறித்துமான அலசல் என்ற இவரது பாணி பல வாசகர்களை இவர் வசப்படுத்தியது. சினிமா, பத்திரிகை, சிறுபத்திரிகை, அறிவியல் எனப் பல துறைகளிலும் தனது பங்களிப்பைச் செலுத்திய சுஜாதாவின் நினைவுதினம் இன்று. சுஜாதாவைப் பற்றி எழுத்தாளர்கள் சொன்ன வார்த்தைகள் இவை.

சந்தோஷ் நாராயணன்:
"சுஜாதாவின் இழப்பை இன்றளவும் தமிழ் எழுத்தாளர்களால் ஈடுகட்ட இயலவில்லை என்பதே நிதர்சனம். அவருடைய வெகுஜன இடத்தை இட்டு நிரப்ப இன்னும் யாராலும் முடியவில்லை. சுஜாதாவின் அறிவியல் புனைகதைகள் ஒரு சாதாரண தமிழ் வாசகனுக்கு அறிவியலை எளிமையாகப் புரிய வைக்கும் வல்லமை படைத்தவை. விஞ்ஞான சிறுகதைகள் தொகுப்பு படித்து வியந்து போனவர்களில் நானும் ஒருவன். பல்வேறு பத்திரிகைகளில் அவர் எழுதிய தொடர்கள் வியக்க வைக்கின்றன.
தற்பொழுது உள்ள இந்த டிஜிட்டல் உலகில் சுஜாதா இருந்திருந்தால், டெக்னாலஜி குறித்து மிகவும் எளிமையாக எழுதி இருப்பார் என்பது உறுதி. சுஜாதா ஓர் இலக்கியவாதியா? இல்லையா என்ற கேள்வியைத் தாண்டி பல புதுக்கவிஞர்களை தமிழ் சமூகத்திற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். இலக்கியச் சண்டைகளில் அதிகம் ஈடுபடாதவர். தமிழ் வாசகர்களுக்கு சுஜாதாவின் இழப்பு மிகப்பெரியது"

கவிஞர் சாம்ராஜ்:
தமிழ் உரைநடைகளில் புரட்சி செய்தவர் சுஜாதா. ஒரு சூழலை அல்லது குறிப்பிட்ட இடத்தை வருணனை செய்துக் கொண்டிருந்த காலத்தில் மிகவும் கூர்மையாகத் தெளிவாக ஓர் இடத்தைப் பற்றி எழுதியவர் இவர். ஒரு கதையில் மதுரையில் உள்ள சுவரைப் பற்றி அப்படியே அச்சு பிசகாமல் எழுதியிருப்பார். மதுரை வீதியில் இருக்கும் ஜவுளிக்கடைகள் சுவர்கள், அங்கிருக்கும் போலீஸ்காரர்கள், பேருந்துகள் என எல்லாவற்றையும் பற்றி கூர்மையாக, தெளிவாக எழுதியிருப்பார். சுஜாதா குறித்து வண்ணதாசன் இவ்வாறு கூறியிருப்பார்,
' பெரிய தோட்டக்கத்தியை எடுத்து மீசையை செதுக்கிக் கொண்டிருந்தபொழுது சின்னக் கத்தியை எடுத்து செல்லமாய் மீசையை செதுக்கியவர்'
வளவள என்று அதிகம் எழுதாமல் கச்சிதமாக சிறுகதைகளை எழுதுவதில் சுஜாதா வல்லவர். எனக்கு மிகவும் பிடித்த சுஜாதாவின் சிறுகதைகள் என இவற்றை சொல்வேன், நகரம் , பார்வை, ஒரேயொரு மாலை, மகாபலி, எல்டோராடா.

வண்ணதாசன், கலாப்ரியா, நா. முத்துக்குமார் இப்படி பல்வேறு கவிஞர்களை அறிமுகப்படுத்தியதும் இவர்தான். இவரின் இழப்பு மிகப்பெரியதாக கருதப்படுகின்றது ஏனென்றால் இவர் ஒரு பரந்துபட்ட வாசிப்பாளர். இந்த சிறு கதை நன்றாக இருக்கிறது, இந்த தொகுப்பு நன்றாக இருக்கிறது என்று இவர் பரிந்துரைக்கும் அனைத்தும் சிறப்பாக இருக்கும். பல்வேறு எழுத்தாளர்களின் படைப்புகளை வெகுஜன மக்களிடையே கொண்டு சேர்ப்பதில் முக்கியமானவர். தமிழ் உரைநடைக்கு மிகப்பெரிய இழப்பு சுஜாதாவின் மரணம்."