Published:Updated:

`திருக்குறள் தமிழர்களின் தன்னிகரில்லா சொத்து' - மருதாசல அடிகளார்

இரா.செந்தில் குமார்

``திருக்குறள் என்னும் பொய்யாவிளக்கைக் கையில் ஏந்தினால் நம்மைச் சூழ்ந்திருக்கும் இருள் விலகிவிடும்'' எனச் சென்னையில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் உரையாற்றினார்.

மருதாசல அடிகளார்
மருதாசல அடிகளார்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பால் ஒருநாள் திருக்குறள் மாநாடு இன்று நடைபெற்றது. மொத்தம் நான்கு அமர்வாக நடைபெற்ற இந்த மாநாட்டில், முதல் அமர்வில் பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார், இறைநெறி இமயவன், பேராசிரியர் நல்லூர் சரவணன் என சைவ சமய அறிஞர்கள், ஆன்மிகப் பெரியவர்கள் பலர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

மாநாடு
மாநாடு

பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் பேசுகையில், ``திருவள்ளுவரின் தாக்கம்தான் எங்களின் ஆதிகுருநாதர் சாந்தலிங்கனார் நான்கு நூல்கள் செய்வதற்கு அடிப்படையாக அமைந்தது. கொல்லாமை, புலால் மறுத்தல் என்னும் அதிகாரங்களின் வெளிப்பாடுதான் `கொலை மறுத்தல்' என்னும் நூல் , `மெய்யோடுதல்' எனும் அதிகாரத்தின் வெளிப்பாடுதான் `வைராக்கிய சதகம்', `வைராக்கிய தீபம்' எனும் இரண்டு நூல்கள். `பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்', `யான்எனது என்னும் செருக்குஅறுப்பான்' எனும் இரண்டு குறள்கள் தரும் செய்திதான் `அவிரோதவுந்தியார், எனும் நூல்.

எங்களின் குருநாதர் மட்டுமல்ல, தமிழகத்தில் இருக்கக்கூடிய சான்றோர்கள் பலருக்கும், அவர்கள் படைத்த இலக்கியங்களில் திருக்குறளுக்கும் திருவள்ளுவருக்கும் முக்கிய இடமுண்டு. திருமறைகளாக இருந்தாலும் பாசுரங்களாக இருந்தாலும் காப்பியங்களாக இருந்தாலும் சரி அவற்றிலே திருக்குறளின் தாக்கம் நிறைந்திருக்கும்.

பறையிசை நிகழ்ச்சி
பறையிசை நிகழ்ச்சி

அந்தவகையில் திருக்குறள் தமிழர்களின் தன்னிகரில்லாத சொத்து. ஆனால், அது நமக்கான சொத்து மட்டும் அல்ல உலகத்துக்கானது. திருக்குறளின் செய்திகள் அனைத்தும் வாழையடி வாழையாக நம் முன்னோர்களின் வழிவந்தவை. வேறு எந்த மொழியில் இருந்தும் சமயத்தில் இருந்தும் வரவில்லை. திருக்குறள் என்னும் பொய்யாவிளக்கைக் கையில் ஏந்தினால் நம்மைச் சூழ்ந்திருக்கும் இருள் விலகிவிடும் '' என்றார் அவர்