
இங்குன கிடக்கவன்லாம் அவன் காச எடுத்துட்டு பம்பாய்க்கு ஓடிட்டான்னு சொல்லிட்டு திரியுறானுவோ. எனக்கு அதுல ஒத்தப்பொட்டு நம்பிக்க இல்ல தாயி...
கடாபாண்டி இறந்து மாதம் ஒன்றாகிவிட்டது. பொழுது விடிந்து, பொழுது அடையுமட்டும் சமுத்திரம் தினமும் ‘அவனைப் பற்றி ஏதாவது தாக்கல் உண்டா..?’ என்று தன் கூட்டாளிகளிடம் கேட்காத நாளில்லை. சீட்டுக்காசு, ரசிகர் மன்றத்துக் காசையெல்லாம் எடுத்துக்கொண்டு பம்பாய் ஹார்பர் வேலைக்கு அவன் ஓடிப்போய்விட்டதாக யாரோ பரப்பிவிட்டார்கள். சமுத்திரத்தின் காதுக்கும் அதுவே செய்தியாக வந்து விழுந்தது. சின்ன வயதில் வீட்டைவிட்டு ஓடிப்போன அவன் அண்ணன் செல்வராசு அங்குதான் இருப்பதாகப் பேச்சு இருந்தது. ஆனால், பாண்டி பம்பாய்க்குப் போயிருப்பான் என்பதை மேரியக்காள் மகள் ஜெசிந்தாவும், கடாபாண்டியின் அப்பா மாடசாமியும் நம்ப மறுத்தார்கள்.
ஊரிலுள்ள கடாபாண்டியின் நண்பர்கள் எல்லோரிடமும் மாடசாமி, தன் மகன் குறித்து விசாரித்தபடியே இருந்தார். கடாபாண்டிக்கு அம்மா இல்லை. மாடசாமிதான் எல்லாமும். வீட்டு வேலை, கருவாட்டு வியாபாரம் எல்லாமே பார்ப்பார். மகனுக்குச் சேர்த்து சமைத்துவைத்துக் காத்திருப்பார். இப்போதெல்லாம் அவர் சமைப்பதில்லை. அக்கம் பக்க கிராமங்களுக்குக் கருவாடு விற்கவும் போவதில்லை. உயிர் வாழணுமே என்று மூணு நாளைக்கு ஒரு முறை கொஞ்சம்போல அரிசியை உலையில் வைத்து அதில் ரெண்டு உப்புக்கல் போட்டு கொதிக்கவைத்து இறக்குவார். சில நேரம் அது வெந்தும் வேகாமலிருக்கும். பல நேரம் சோறு குழைந்து கஞ்சிபோலாகிவிடும். அதையே மூன்று நாள்களுக்கு வைத்துக்கொள்வார். தொடுகறி, துவையல் எதுவும் கிடையாது.

ஜெசிந்தா, பாண்டியும் தானும் ரகசியமாகச் சந்தித்துக்கொண்ட உப்பளப் பாதை, முயல்தீவு, ஆற்றங்கரை என எல்லாப் பக்கமும் நாள் தவறாமல் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தாள். “மேரியக்கா மக ஜெசிந்தாளுக்குப் பேய் பிடிச்சிருச்சு... கோட்டி பிடிச்சிருச்சு... புளியம்பட்டி அந்தோணியார் கோயில்ல அவள சங்கிலில கட்டிப்போடச் சொல்லணும்’’ என்று லூர்தம்மாள்புரம் முழுக்கப் பேச்சாயிருந்தது. அதற்கு ஏற்றதுபோல அவளும் ஆளும் தோற்றமும் மாறிப்போயிருந்தாள். சட்டியில் கொதிக்கும் கறியில் கைவிட்டு அள்ளிய நாளையிலிருந்து அவள் வீட்டாட்களால் அவளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தீபாவளிக்குப் போட்ட உடுப்பைக்கூட அவர்களால் களையவைக்க முடியவில்லை. அந்த உடையை அவளுக்குப் பாண்டிதான் எடுத்துக்கொடுத்திருந்தான்.
தீபாவளிக்கு மறுநாள் கையில் பிடித்திருந்த தீப்பெட்டியுடன் நேரே பாண்டியின் வீட்டுக்கே போயிருந்தாள் ஜெசிந்தா. பிறகு தினம் தினம் அவன் வீட்டு வாசலில் வந்து நின்றாள். “ஏன்... பொழுதன்னைக்கும் இந்தப் பிள்ள இங்கன வருது” என்று அக்கம் பக்கத்தினரிடம் பேச்சு உண்டானது. ஆனால் இத்தனை நாள்களில் கடாபாண்டியின் அப்பா மாடசாமி அவளை ‘நீ யாரும்மா?’ என்றோ, `ஏன் தெனமும் இங்கன வார...’ என்றோ ஒரு வார்த்தைகூடக் கேட்கவில்லை. அவருக்கு ஏதோ புரிந்திருந்தது. ஜெசிந்தா அங்கு வந்தால் சொம்பிலிருக்கும் நீச்சத்தண்ணியை நீட்டுவார். சிலநேரம் அதை வாங்கிக் குடிப்பாள். மற்றபடி இருவருக்கும் ஒரு வரிகூடப் பேச்சு இல்லை. ஒருநாள் சோர்வும் மயக்கமுமாயிருந்த அவளின் முகத்தைப் பார்த்தவர், சந்தேகத்தோடு அவள் நாடியைப் பிடித்துப் பார்த்தார். பெரிய நாடியின் தொடக்கத்திலும் முடிவிலும் ஒரு சிறு துடிப்பலை ஒன்று தனித்து எழுந்து இரண்டாம் நாடியைக் காட்டிக்கொடுத்தது.
அன்றைக்குத்தான் அவளிடம் முதன்முதலாகப் பேசினார். “உன் வயித்துல இருக்கது என் புள்ள உசுரா...” என்றார். அவள் அமைதியாக நின்றாள். “அவன் எங்கயாச்சும் பொழச்சுக் கெடப்பான்னு நீ நம்புதியா?” என்றார். அவள் எதுவும் பேச முடியாமல் கண்கலங்கினாள்.
“இங்குன கிடக்கவன்லாம் அவன் காச எடுத்துட்டு பம்பாய்க்கு ஓடிட்டான்னு சொல்லிட்டு திரியுறானுவோ. எனக்கு அதுல ஒத்தப்பொட்டு நம்பிக்க இல்ல தாயி...” கொஞ்சம் ஆசுவாசமானவர், அவளைக் கண்ணுக்குக் கண் பார்த்துக் கேட்டார். “கஷாயம் போட்டுக் குடுத்துரவா. உசிரு கரைஞ்சு போயிடும்.” அவள் பதறிப்போய் மறுத்து, தலையாட்டினாள்.
ஒரு நீண்ட பெருமூச்சுக்குப் பிறகு, அவள் ஒரேயொரு வார்த்தையைத் தீர்மானமாகச் சொன்னாள். “பாண்டி உசுரோட இல்லன்னு எனக்குத் தெரியும். அவன் வாசனை இங்க இருக்கு. அதோட பலத்துல எங்க பிள்ளைய இங்கவெச்சு பெத்து எடுத்துக்கிட்டு அப்புறம் கண்காணாம நான் போயிடுதேன்.’’ அப்போது அவளிடம் ஒரு சொட்டுக் கண்ணீரில்லை. சின்ன அலுக்கம்கூட இல்லை. பாண்டியைப் பற்றி அவள் சொன்ன சொற்கள் மாடசாமியின் நெஞ்சுக்குழியை அடைத்துக்கொண்டன. சற்று தடுமாறி, சுவரைப் பிடித்துக்கொண்டார். ஆனால், அவளிடமிருந்து வெளிப்பட்ட தீர்க்கம் மெல்ல அவரையும் தொற்றிக்கொண்டது.
அடுத்த நாள் விடிந்து விடியாத அதிகாலை.
வெள்ளென எழுந்து வீட்டின் பின்னால் பெரிய சட்டியில் ஆவிபறக்க வெந்நீர் போட்டுக்கொண்டிருந்தார் மாடசாமி. அடுப்புத் தீ மளமளவென்று கொழுந்துவிட்டு எரிந்தது. புளிமார்க் சீயக்காயைச் சிரட்டையில் கரைத்து வைத்திருந்தார். தூங்கி எழுந்து கோரைப்பாயில் அமர்ந்திருந்தவளை எழுப்பி, ஓலை மறைப்பில், குளித்துவிட்டு வரச் சொன்னார். நெடுநாள்களுக்குப் பிறகு ஜெசிந்தா தன் உடலிலிருந்து பாண்டி வாங்கிக்கொடுத்த அந்த உடையைக் கழற்றினாள். தட்டியின்மீது ரேஷன் சேலையில் மடித்து தைத்த பாவாடை ஒன்றும், பாண்டியின் சட்டையும் தொங்கிக்கொண்டிருந்தன.
உடையை மாற்றிக்கொண்டு ஈரம் சொட்டச் சொட்ட பின்கட்டு வழியாக அவள் வீட்டுக்குள் நுழைந்தபோது, பிஞ்சுக் கத்திரிக்காய் போட்ட புளிக்குழம்பும், ஆவிபறக்கச் சுடுசோறும் வட்டில் போட்டு மூடி, கிண்ணத்தில் இரண்டு துண்டு கருவாடும் பொரித்துவைக்கப்பட்டிருந்தது. ஏதோ சத்தம் கேட்டு ஜெசிந்தா முன்வாசலை நோக்கித் திரும்பிப் பார்த்தாள். வெளியே, தன் கருவாட்டு வியாபாரத்துக்கான ஓலைப்பெட்டி, தராசு, எடைக்கல் எல்லாவற்றையும் எடுத்து வைத்துக்கொண்டு மாடசாமி வியாபாரத்துக்காகத் தெருவில் இறங்கி நடந்துபோனார்.

டிசம்பர் மாதம் நல்ல குளிர்காலம் தொடங்கியது. கிறிஸ்துமஸ் மாதமென்பதால் திரேஸ்புரம் முழுக்க மூங்கில் தப்பைகளை வளைத்து, கலர் பேப்பர்களைச் சுற்றிலும் ஒட்டி ஸ்டார் கட்டித் தொங்கவிட்டிருந்தார்கள். ரோசம்மா வீட்டிலும் பெரிய ஸ்டார் தொங்கியது. இவ்வளவு நாளும் சாராய பாட்டிலில் மண்ணெண்ணெய் ஊற்றி திரிபோட்ட விளக்குதான் ரோசம்மா வீட்டுக்கு வெளிச்சம் தந்துகொண்டிருந்தது. சமுத்திரம் இந்த வருஷம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னால் கரன்ட் இழுத்துக் கொடுப்பதாகச் சொல்லியிருந்தான். சொன்னது மாதிரியே வயர்கட்டை இழுத்து, புத்தம் புதிய மஞ்சள் நிற குண்டு பல்ப் வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் மாட்டிக் கொடுத்திருந்தான்.
அதுவரைக்கும் திரேஸ்புரத்தில் எண்ணி இருபது வீட்டில்கூட கரன்ட் கிடையாது. தெருவிளக்கு வெளிச்சம் மட்டும்தான். எல்லோரும் வந்து வந்து குண்டு பல்பை எட்டிப்பார்த்து ஆச்சர்யப்பட்டார்கள். சிலர், “மக வளந்து கல்யாணத்துக்கு நிக்கிறா... அம்மக்காரி இந்த வயசுல எவனையோ வளைச்சுப்போட்டு காரியம் சாதிச்சிக்கிறா’’ என்று புரணி பேசிக்கொண்டார்கள்.
ராமும் ஜானும் பஸ் ஸ்டாண்டில் கோவில்பட்டி பஸ்ஸுக்காகக் காத்திருந்தார்கள். வாரக்கடைசி லீவுக்கு பனிமலர் வீட்டுக்கு வரும்போது, அவளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்று தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். பனிமலர் வந்து இறங்கியதுதான் தாமசம். இருவர் முகத்திலும் ஏதோவொரு ரகசியமும் குறுகுறுப்பும் தெரிவதைப் பார்த்துவிட்டாள் பனிமலர். “என்னடா ரெண்டு பெரும் திருதிருன்னு முழிக்கிறீங்க... என்கிட்ட எதை மறைக்கிறீங்க... ஒழுங்கு மரியாதையா சொல்லிருங்க...’’ என்று பொய்யாக மிரட்டினாள்.
“சேச்சே... அதெல்லாம் ஒண்ணுமில்ல” என்று ரெண்டு பேரும் சாதித்தார்கள்.
ஜான்தான் பைக்கை ஓட்டினான். ராமிடம் சைகையால் அவள் கேட்டுக்கொண்டே வந்தாள். அவன் எதையும் சொல்லாததால், ராமின் தொடையில் அழுந்தக் கிள்ளிவைத்தாள். அவன் வலியால் துடிக்க, ஜான் வண்டியை நிறுத்தி “என்னாச்சு?” என்று கேட்டான். “ஒண்ணுமில்ல நீ வண்டிய ஒழுங்கா ஓட்டு...” என்று பனிமலர் அவனைச் சமாளித்தாள்.
தெருவுக்குள் பைக் நுழையும்போது, தன் வீட்டின் முன் அவ்வளவு பெரிய வெளிச்சமாக ஸ்டார் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து பனிமலருக்கு சந்தோஷத்தில் பேச்சே வரவில்லை. இப்போது ராம் தொடையில் மீண்டும் கிள்ளினாள்.
ஜானின் வீட்டு வாசலில் நான்கைந்து பெண்கள் நின்று பேசிக்கொண்டிருந் தார்கள். “வா மலரு... வீடே எவ்ளோ வெளிச்சமா இருக்கு பாத்தியா...” என்று பக்கத்து வீட்டு அக்கா சிரித்தபடி அவளை வரவேற்றது. தன் மகளின் முகத்தில் தெரியும் மலர்ச்சியைப் பார்க்கப் பார்க்க ரோசம்மாவுக்கும் அவ்வளவு சந்தோஷமாயிருந்தது.
இரவு 12 மணிக்கு மேல் இருக்கும். ஏதோ சப்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தாள் ரோசம்மா. வாசலில் மரியதாஸ் குடித்துவிட்டு வந்து கத்திக்கொண்டிருந்தார். “ஏண்டா... நான் என்ன வக்கத்த தாயலின்னு நினைச்சியா... என் வீட்டுக்கு நீ என்ன மயித்துக்குடா கரன்ட் இழுத்துக் குடுக்குற...” பேசும்போதே விக்கல் முட்டியது. “ஆமண்டா... நான் வக்கத்தவனா இருக்கப்போயிதான என் பொண்டாட்டிய நீ புடுங்கிட்ட... இப்போ எம்புள்ளைங்களையும் புடுங்கலாம்னு பாக்குறியாடா அநாத நாயே... ஆனா ஒண்ணு... என்னைக்கா இருந்தாலும் என் கையாலதான்டா உனக்கு சாவு...’’
மடக் மடக்கென கையிலிருந்த பிராந்தியை வாயில் சரித்தார். “நாயே... என்னைக்கா இருந்தாலும் என் கையாலதான்டா உனக்கு சாவு... அநாத நாயே...” கத்தியபடியே மரியதாஸ் போதையில் கீழே விழுந்தார். பனிமலர் கண்ணீரோடு பெரிய சொம்பில் நீர் எடுக்க ஓடினாள்.
(பகை வளரும்...)