
இயற்கையைத் தெய்வமாய் காணக் கிடைத்த வாய்ப்பு.
விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!
தமிழ்ப் பேச்சு மேடைகளில் அரை நூற்றாண்டுக்கு மேலாக அசைக்க முடியாத மாபெரும் ஆளுமை. அடுத்த தலைமுறைக்கு தித்திக்கும் தமிழை எடுத்துச்செல்லும் ஆசான். பட்டிதொட்டியெங்கும் `பட்டிமன்றம்' என்ற கலையைக் கொண்டு சேர்த்த தமிழின் மூத்த மகன் சாலமன் பாப்பையா... அவரிடம் ஒரே ஒரு சொல் கொடுத்தோம்... அதை மந்திர வாக்கியங்களாக மாற்றிவிட்டார்.
நடுவர்: விவேகத்தை மன வயலில் விதைப்பவர்.
அம்மா: பொங்கும் பாசத்தின் சங்கம ஒலி.
அப்பா: தடுமாறும்போது தாங்கி உயர்த்துபவர்.
மனைவி: விலங்கு மனத்திலும் வெளிச்சம் ஏற்றும் விளக்கு.
குழந்தை: மனதைப் பிசைந்து மயக்கும் அழகு.
மதம்: மானுடத்தைப் பிளக்கும் கோடரி.
புரட்சி: இருட்டில் வழிகாட்டும் தீபம்.
அரசியல்: பொதுநலம் பேசும்; சுயநலச் சேற்றில் விழும்.
திருக்குறள்: உலகை அணைக்கும் ஒப்பற்ற தமிழ்ச் சித்தாந்தம்.
தொல்காப்பியம்: தொல் தமிழர்களின் பல்துறைப் பள்ளிக்கூடம்.
கல்வி: அறிவும் அடக்கமும் அளிக்கும் அருமருந்து.
நட்பு: ஒத்த உணர்ச்சிச் சோலையில் பூக்கும் மலர்.
காதல்: ஏதோ ஒரு கவர்ச்சியில் முளைவிட்டு, அக அழகால் வளர்வது.

மன்னிப்பு: மனிதனை தெய்வமாக்கும் மந்திரம்.
துரோகம்: துன்பப்படுத்த எண்ணி, துன்பத்தினுள் சிக்குவது.
முதுமை: முந்தைய தவறுகளைத் திருத்தக் கிடைத்த வரம்.
இளமை: பேதமையும் கற்பனையும் பின்தொடரச் செய்யும் பயணம்.
முயற்சி: அறிவர்களின் போர்வாள்.
ஆசை: தன்னல வயலில் வளரும் களை.
சினிமா: பல்துறைக் கலைஞர்களின் பல்கலைக்கழகம்.
புத்தகம்: கல்வியாளர்களின் தங்கச்சுரங்கம்.
பயணம்: இயற்கையைத் தெய்வமாய் காணக் கிடைத்த வாய்ப்பு.
தானம்: மனிதம் பயிராகும் மனம்.
ஆசிரியர்: அறியாமை இருட்டை அகற்றும் அடிவானத்து இளம்பரிதி.
அடக்கம்: மனிதனை உயர்த்திக்காட்டும்.
பேச்சு: மானுடத்தைப் பிணைக்கும் மாயச் சங்கிலி.
பட்டிமன்றம்: `கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும்' கலை.
'பட்டிமன்றம்' ராஜா: ஏழைக்கு இரங்கும் இதயம்.
பாரதி பாஸ்கர்: ஞானத்தை நாடிச் செல்லும் நல்ல மகள்.
இசை: இரும்பு மனிதனையும் இளகச் செய்யும் இறை ஒலி.
அருவி: மலையின் தனிமையைப் போக்கும் மத்தள ஓசை.
நாடகம்: கலைகளின் காட்சிக் கூடாரம்.
விழுது: பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லும் ஆசிரியர்.
நினைவுகள்: கடந்த வாழ்க்கை, கண்ட காட்சிகளின் பதிவுகள்.
பணம்: பாச வேர்களைக் கல்லி எறியும் மோசமான ஆயுதம்.
மனிதம்: இறைவனை நோக்கி நகர்த்தும் உந்து சக்தி.
சிரிப்பு: உடல்நலத் தோட்டத்தில் உதிரும் மலர்கள்.
அறம்: தவறாதபடி எச்சரிக்கும் மணி ஒலி.
நாவல்கள்: வாழ்க்கையின் படப்பிடிப்பு.
கவிதை: சொற்களின் அழகுக் கோலம்.
சிறுகதை: சில்லுக் கண்ணாடியில் ஒரு சொல் ஓவியம்.
பேனா: நிலவின் குளிரும், நெருப்பின் தகிப்பும் நிறைந்து நெஞ்சங் கவர் தூரிகை.

நேரம்: அறிஞர்களின் சேமிப்பு; மூடர்களின் வீண் செலவு.
விகடன்: சிரிக்கவும் சிந்திக்கவும் செய்யும் சித்திரப் புத்தகம்.
கோபம்: மனநோயின் அறிகுறி.
பொறுமை: அறிவாளிகளின் அணிகலன்.
பொறாமை: மூடர்களின் சறுக்கல்.
செல்போன்: வீட்டு விலங்கைக் காட்டு விலங்காக்கும் விசித்திரம்.
கண்ணீர்: பாசப் புதையலைப் பளிச்செனக் காட்டும் ஒரு துளி.
மது: மகிழ்ச்சி தருவதுபோல் மறைந்து கொல்லும் எதிரி.
நேர்மை: ஒளியின் வழியில் நடப்பது.
எதிரி: நம் இதயத்தோடு ஒட்டப் பசையற்ற பொருள்.
கடவுள்: நாட்டுக்கு ஒரு பெயரில் நம்மை ஆட்கொள்ளும் நம்பிக்கை.
வாழ்க்கை: அடித்தல், திருத்தல் நிறைந்த சொந்தக் கட்டுரை.
புகழ்: செருக்கை வளர்த்து விழச் செய்யும் சறுக்கு மரம்.