
ஒவ்வோர் இனமும் தனக்கான தனித்துவமான நம்பிக்கைகளைக் கொண்டிருந்தாலும் காலப்போக்கில் கலாசார இணைப்புகளுக்கு ஏற்ப புதிய நம்பிக்கைகளை ஏற்கும் நெகிழ்ச்சித் தன்மையோடே இருந்துவந்திருக்கிறது.
மதங்களின் வரலாற்றை ஆராய்தல் என்பது ஒரு சமூகத்தின் கலாசாரப் பண்பாட்டு வரலாற்றை ஆய்வு செய்வது. ஒவ்வோர் இனமும் தனக்கான தனித்துவமான நம்பிக்கைகளைக் கொண்டிருந்தாலும் காலப்போக்கில் கலாசார இணைப்புகளுக்கு ஏற்ப புதிய நம்பிக்கைகளை ஏற்கும் நெகிழ்ச்சித் தன்மையோடே இருந்துவந்திருக்கிறது. இதில் அரசியல் மற்றும் மொழியின் செல்வாக்கின் தாக்கமும் முக்கியமானது. ஓர் இனத்தின் மதம் சார்ந்த ஆய்வென்பது இந்தக் காரணிகளையெல்லாம் மனதில் கொண்டு காய்தல் உவத்தல் இன்றிச் செய்ய வேண்டியது. அப்படி ஒரு சிறந்த ஆய்வு நூலாக அருணனின், ‘தமிழரின் மதங்கள்’ நூலினைக் குறிப்பிடலாம்.
ஆவணப்படுத்தப்பட்ட கல்வெட்டு ஆதாரங்களையும், அவை இல்லாத காலகட்டத்தை ஆய்வு செய்யும்போது இலக்கிய ஆதாரங்களையும் கைக்கொண்டு இந்த ஆய்வை அருணன் மேற்கொண்டிருக்கிறார். இலக்கிய ஆதாரங்களைக் கையாள்கிறபோது, இதற்கு முன்பாக யாரெல்லாம் அந்த ஆதாரங்களை வெவ்வேறு காலகட்டங்களில் சுட்டிக்காட்டிப் பேசியிருக்கிறார்கள் என்னும் தரவுகளை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியது அவசியம். அருணன் ஆய்வு நெடுகிலும் அதை மிகச் சரியாகச் செய்திருக்கிறார். சங்க இலக்கியங்களை மேற்கோள் காட்டும்போது உரையாசிரியர்களையும் நவீன ஆய்வுகளைச் சுட்டும்போது மறைமலையடிகள், மயிலை சீனி வேங்கடசாமி ஆகியோரையும் தவறாமல் சுட்டிக்காட்டுவதோடு அவர்களிடம் தான் இசைந்தும் விலகியும் போகும் கருத்துகளையும் எந்தவித ஒளிவும் மறைவும் இன்றி முன்வைக்கிறார். இந்த நூலில் இரண்டு கட்டுரைகள் மிகவும் முக்கியமானவை. ஒன்று களப்பிரர்கள் காலம் பற்றியது. மற்றொன்று சாம்ராஜ்ஜிய காலம் பற்றியது.

இந்த நூலின் குறிப்பிடத் தகுந்த அம்சம் அதன் மொழி. ஓர் ஆய்வுநூலைப் படிக்கிறோம் என்கிற சோர்வு எழாதபடி ஒரு புனைவின் சுவாரஸ்ய மொழியோடும் முறையான தர்க்கத்தோடும் அருணன் இந்த நூலைப் படைத்திருக்கிறார். மதம், மக்கள் அரசியலின் மையமாகிக்கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில் இந்த நூலின் முக்கியத்துவம் இன்னும் அதிகப்படுகிறது. யார் தமிழர், எது அவர் மதம் என்ற கேள்விகளை முன்வைக்கும் மதவாத சக்திகளின் கேள்விகளுக்கான பதிலை ஒவ்வொரு தமிழரும் அறிந்துகொள்ள இந்த நூல் உதவும் என்று உறுதியாகச் சொல்லலாம்.
தமிழரின் மதங்கள்
சங்க காலம் முதல் சாம்ராஜ்ஜிய காலம் வரை
அருணன்
வெளியீடு:
விகடன் பிரசுரம்
பக்கங்கள்: 224
விலை: ரூ.200
போன்: 044 - 4263 4283