
குழந்தைகள் தங்களுக்காகத் தாங்களே எழுதிக்கொண்டால், படைத்துக்கொண்டால் எப்படியிருக்கும் என்பதற்கான விடைதான் `ஆகாயக் கதவு’
குழந்தை எழுத்தாளர் என்று இலக்கிய உலகில் சொல்லப் பெற்றாலும் எழுதுபவர் பெரியவராகத்தான் இருக்கிறார். கதை கேட்கும் வழக்கத்தில்கூட கதை சொல்லியாகப் பெரியவர்களும் கேட்பவர்களாகக் குழந்தை களுமே இருக்கிறார்கள். குழந்தைகளுக்கு பெரிய வர்களாகிய நாம் எந்தக் கலைவடிவத்தைக் கொடுத் தாலும் அதில் நம் வரை யறைகளையும் மதிப்பீடு களையும் சேர்த்தே கொடுக்கிறோம்.
ஆனால், குழந்தைகள் தங்களுக்காகத் தாங்களே எழுதிக்கொண்டால், படைத்துக்கொண்டால் எப்படியிருக்கும் என்பதற்கான விடைதான் `ஆகாயக் கதவு’ - மூன்றாம் வகுப்பிலிருந்து நான்காம் வகுப்புக்குச் செல்லும் சிறுமி ஏ.இளமதி எழுதிய, வரைந்த படைப்பு களின் தொகுப்பு நூல். அனைத்தும் பத்து வரிகளுக்குள் ஆன கதைகள். குழந்தைகளின் மழலையை எப்படிப் பிழைபொறுத்து ரசிக்கிறோமோ அதுபோல இக்கதைகளையும் படித்து ரசிக்கமுடிகிறது. நூலாக்கம் செய்தவர்கள் இந்நூல் பற்றி இப்படிக் குறிப்பு கொடுத்திருக்கிறார்கள்: ‘குழந்தைமை குழந்தைகளுக்காக எழுதியதை... கீழே... தவறாக தட்டச்சு செய்யப்பட்டுள்ளது அவ்வளவே... இப்படித்தான் எழுதவேண்டும் என்று திருத்திக் காட்டவில்லை...’
வளர்ந்த எழுத்தாளர்களின் எழுத்துகளிலேயே இலக்கணப் பிழைகள் மலிந்துள்ள இக்காலத்தில் ஒரு குழந்தை குழந்தைமை மாறாமல் எழுதும் கதைகளில் பிழைகள் பொறுத்துக் கொள்ள வேண்டியவைதான் என்றாலும், வாசகர் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அவற்றைத் திருத்துகையில் ஓரிரு வரி சேர்ப்பது என்பது அக்குழந்தையின் அகவெளிப் படிமங்களைச் சிதைத்து விடுகிறது.

எழுத்துப்பிழையோ, காரியப்பிழையோ நேரும்போது குழந்தைகளின் தலையில் நங்கென்று குட்டுவதை விடுத்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதை இந்நூல் வலுவாக உணர்த்துகிறது. இக்கதைகளில் நட்பும் அன்பும் குழந்தைமையோடு சேர்த்து வழங்கப்பட்டிருக்கின்றன. குழந்தைகளின் உலகம் எப்போதும் வாஞ்சை யுடனேயே நம்மை அரவணைக்கிறது என்பதற்கு இந்தப் புத்தகம் ஒரு நற்சான்று.
ஆகாயக் கதவு
- ஏ.இளமதி
வெளியீடு: குறி
117, குறிஞ்சித் தெரு,
நேருஜி நகர்,
வேடசந்தூர் - 624710
திண்டுக்கல் மாவட்டம்.
கைப்பேசி எண்: 9976122445 / 9443827346
பக்கங்கள்: 64
விலை: ரூ. 100