
புத்தக விமர்சனம்
தீவிர கலை இலக்கியச் செயற்பாடுகளில் ஈடுபடும் பலருக்கும் அவர்களின் உழைப்புக்கேற்ற அங்கீகாரமோ அடையாளமோ கிடைத்துவிடுவதில்லை. கவிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்களாவது எப்படியாவது அறியப்பட்டுவிடுகிறார்கள். ஆனால் இத்தகைய செயற்பாடுகளுக்குப் பின்னிருக்கும் பலரும் வெளிச்சம் கிடைக்காமலே மறைந்துவிடுகிறார்கள். அப்படிப்பட்ட ஒருவர்தான், மாற்றுத்திரைப்படங்களைத் திரையிட்டு மதுரையில் திரைப்பட ரசனையை வளர்த்தெடுத்த யதார்த்தா ராஜன். சமீபத்தில் மறைந்த அவரைக் குறித்த ஆளுமைகளின் நினைவுப்பதிவுகளின் தொகுப்பே ‘யதார்த்தா ராஜன் சில நினைவுகள்’ என்னும் இந்நூல்.
யதார்த்தா திரைப்பட இயக்கத்தின் மூலம் தொடர்ச்சியாக இந்திய, உலக சினிமாக்களைத் திரையிட்டும் 16 ஆண்டுகளாகக் குழந்தைகள் திரைப்பட விழாவை நடத்தியும் வந்தவர் ராஜன். இப்போதெல்லாம் எல்லா மொழித் திரைப்படங்களும் இணையத்திலும் ஓ.டி.டி தளங்களிலும் இருக்கின்றன. இவை எதுவும் இல்லாத 80களில் திரைப்பட இயக்கத்தை நடத்தியவர் ராஜன். டிவிடிகள் இல்லாத காலங்களில் இத்தகைய சினிமாக்கள் புனே திரைப்பட ஆவணக் காப்பகம் மூலம் ரயில்களில் வரும். அவற்றை எடுத்து புரஜெக்டர் மூலம் திரையரங்குகளில் மிகக்குறைவான பார்வையாளர்கள் மத்தியில் திரையிட்டு உரையாடல்களை ஏற்படுத்துவது ஆகப்பெரும் சாதனை. இத்தகைய செயற்பாடுகளை மேற்கொண்ட திரைப்பட இயக்கங்களின் வரலாற்றையும், அதில் யதார்த்தா ராஜனின் பங்களிப்பையும் விரிவாகச் சொல்லும் ‘காஞ்சனை திரைப்பட இயக்கம்’ ஆர்.ஆர்.சீனிவாசனின் கட்டுரை குறிப்பிடத்தக்க ஒன்று.

கோணங்கி, சி.மோகன், அ.ராமசாமி, யவனிகா ஸ்ரீராம், அம்ஷன் குமார் எனப் பலரும் ராஜனின் உழைப்பை நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறார்கள். மு.ராமசுவாமியின் நிஜநாடக இயக்கம், முருகபூபதியின் மணல்மகுடி நாடக்குழு ஆகியவற்றிலும் பங்களித்தவர் என்ற வகையில் ராஜனின் நாடக அனுபவங்கள் குறித்த பதிவுகளும் முக்கியமானவை. மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்வி ஒளிபரப்பு நிகழ்ச்சித் தயாரிப்பாளராக நியமிக்கப்பட்டபிறகு ராஜன் ஏராளமான கல்வி ஆவணப்படங்களையும் உருவாக்கியிருக்கிறார்.
தன்னை முன்னிறுத்திக்கொள்ளாத தகைமையாளரான யதார்த்தா ராஜன் குறித்த இந்த நூல், காலத்தின் தேவைப்பதிவு.
யதார்த்தா ராஜன் - சில நினைவுகள்
தொகுப்பு : ஸ்ரீஷங்கர்
வெளியீடு : கடற்காகம், எண் 10-3-53, கணபதி நகர் முதல் தெரு, எஸ்.ஆலங்குளம், மதுரை - 625107.
பக்கங்கள் : 176
விலை : ரூ. 200